பதினான்காம் அதிகாரம்
இரக்கத்தைக் கற்றுக்கொண்டார்
1. யோனா எப்படிப்பட்ட பயணம் செய்ய வேண்டியிருந்தது, அடைய வேண்டிய இடத்தைப் பற்றி எப்படி உணர்ந்தார்?
யோசித்துப் பார்க்க யோனாவுக்கு நிறைய நேரம் இருக்கும். அவருடைய பயணம் 800-க்கும் அதிக கிலோமீட்டர் நீளும் பயணம் ஆயிற்றே. போய்ச்சேர ஒரு மாதமோ அதற்கும் அதிகமோகூட எடுக்கலாம். ஆபத்தான குறுக்குப் பாதையில் போவதா... பாதுகாப்பான சுற்றுப் பாதையில் போவதா... என்பதையெல்லாம் யோசித்துச் செய்ய வேண்டிய பயணம். வழியில் ஒருவேளை பற்பல பள்ளத்தாக்குகளையும் கணக்குவழக்கில்லாத கணவாய்களையும் அவர் சந்திக்கலாம். பரந்துவிரிந்த சீரியா பாலைவனத்தைக் கடக்கலாம். மிகப் பெரிய ஐப்பிராத்து நதியையும் இன்னும் பல நதிகளையும் தாண்டிச் செல்லலாம். அந்நியர்கள் குடியிருக்கிற சீரிய, மெசொப்பொத்தாமிய, அசீரிய பட்டணங்களில்... கிராமங்களில்... இராத்தங்க வேண்டியிருக்கலாம். நாட்கள் நகர்கின்றன. செல்ல வேண்டிய இடத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வைக்க... நினிவே நகரம் மனதில் காட்சியாய் விரிய விரிய... யோனாவின் அடிமனதை அச்சம் அதிகமதிகமாய் ஆக்கிரமிக்கிறது.
2. யெகோவா தந்த பொறுப்பை விட்டுவிட்டு ஓடிப்போக முடியாது என்பதை யோனா எப்படி அறிந்துகொண்டார்?
2 ஆனால், கடவுள் தந்த பொறுப்பை விட்டுவிட்டு ஓடிப்போக முடியாது என்பது மட்டும் யோனாவின் நெஞ்சில் அச்சாகப் பதிந்திருக்கிறது. முன்பு அப்படித்தானே ஓடிப்போனார்! ஆனால், யெகோவா ஒரு பலத்த புயல்காற்றை வீசச் செய்து... யோனாவை அற்புதமாகக் காப்பாற்ற ஒரு பெரிய மீனை அனுப்பி வைத்து... அவருக்குப் பொறுமையாகப் பாடம் புகட்டினாரே. அந்த மீன் மூன்று நாட்களுக்குப்பின் யோனாவைக் கரையில் உயிரோடு கக்கியது. பிரமிப்பூட்டும் இந்த அனுபவம் யோனாவுக்குக் கீழ்ப்படிதலைக் கற்றுத் தந்தது.—யோனா, அதி. 1, 2.
3. யோனாவிடம் யெகோவா என்ன பண்பைக் காண்பித்தார், இருந்தாலும் என்ன கேள்வி எழுகிறது?
3 நினிவேக்குப் போகச் சொல்லி யோனாவுக்கு யெகோவா இரண்டாம் முறை கட்டளையிட்டபோது, அவர் உடனே கீழ்ப்படிந்தார்; கிழக்கு திசை நோக்கி அந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டார். (யோனா 3:1-3-ஐ வாசியுங்கள்.) அப்படியானால், யெகோவா கொடுத்த கண்டிப்பை யோனா ஏற்றுக்கொண்டாரா? தன்னை அடியோடு மாற்றிக்கொண்டாரா? இதைச் சிந்தித்துப் பாருங்கள்: யெகோவா அவருக்கு இரக்கம் காட்டியிருந்தார்; ஆம், ஆழ்கடலில் அமிழ்ந்துபோகாமல் காப்பாற்றியிருந்தார்... கீழ்ப்படியாமைக்குத் தண்டனை வழங்காமல் விட்டுவிட்டிருந்தார்... பொறுப்பை நிறைவேற்ற இன்னொரு வாய்ப்பும் நீட்டியிருந்தார். இப்படியெல்லாம் செய்த பிறகாவது யோனா இரக்கம் காட்டக் கற்றுக்கொண்டாரா? இரக்கம் காட்டுவது அபூரண மானிடருக்குப் போராட்டம்தான். யோனாவுக்கு ஏற்பட்ட போராட்டத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம் என்று இப்போது சிந்திப்போம்.
தீர்ப்பும் திருப்பமும்
4, 5. எதற்காக நினிவே நகரத்தை ‘மகா நகரம்’ என யெகோவா குறிப்பிட்டார், அவரைப் பற்றி இது நமக்கு என்ன கற்பிக்கிறது?
4 நினிவேயைப் பற்றிய யெகோவாவின் கண்ணோட்டமும் யோனாவின் கண்ணோட்டமும் வேறு வேறு. ‘நினிவே நகரம் கடவுளுடைய பார்வையில் மகா நகரம்’ என்று பைபிள் சொல்கிறது. (யோனா 3:3, NW) “மகா நகரமாகிய நினிவே” என்று யெகோவாவே மூன்று இடங்களில் சொல்லியிருக்கிறார். (யோனா 1:2; 3:2; 4:11) யெகோவா ஏன் அந்நகரை மகா நகரமாக, அதாவது முக்கிய நகரமாக, கருதினார்?
5 பெருவெள்ளத்திற்குப்பின் நிம்ரோது முதலில் கட்டிய நகரங்களில் ஒரு நகரம்தான் நினிவே. அது, பல ஊர்களைக் கொண்ட பெருநகரமாகப் பரந்து விரிந்திருந்தது; அதன் ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு நடந்து செல்ல மூன்று நாட்கள் எடுத்தன. (ஆதி. 10:11, 12; யோனா 3:3) அங்கே பிரமாண்டமான கோவில்களும் மாபெரும் மதில்சுவர்களும் கலைநயமிக்க கட்டிடங்களும் இருந்தன. ஆனால் இவற்றை வைத்து அல்ல, அங்கிருந்த மக்களை வைத்துத்தான் யெகோவா அந்த நகரத்தை முக்கிய நகரமாகக் கருதினார். அந்தக் கால நகரங்களில், நினிவேயில்தான் மக்கள்தொகை மிக அதிகம். அந்த மக்கள் மோசமானவர்களாய் இருந்தாலும் யெகோவா அவர்கள்மீது அக்கறை காட்டினார். ஏனென்றால், மனித உயிரை அவர் உயர்வாக மதிக்கிறார்; மனிதர் ஒவ்வொருவரும் மனந்திரும்பி நல்லது செய்ய முடியுமென நம்புகிறார்.
6. (அ) நினிவே நகரத்தைக் கண்டு ஏன் யோனா மிரண்டுபோயிருக்கலாம்? (அடிக்குறிப்பையும் காண்க.) (ஆ) யோனாவைப் பற்றி அவருடைய பிரசங்க வேலையிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?
6 கடைசியில், யோனா நினிவே நகரை அடைகிறார்; அங்கு 1,20,000-க்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள், அதனால் அவர் இன்னும் அதிகமாய் மிரண்டுபோயிருக்கலாம்.a அந்தப் பெருநகரில் ஒருநாள் முழுவதும் நடந்து, செய்தியை அறிவிப்பதற்குப் பொருத்தமான ஓர் இடத்தைத் தேடுகிறார், மக்கள்வெள்ளம் அலைமோதுகிற பகுதியைத் தேடுகிறார். மக்களிடம் எந்த மொழியில் பேசுகிறார்? அவர் அசீரிய மொழியைக் கற்றிருந்தாரா? அல்லது, அந்த மொழியில் பேசும் அற்புதத் திறமையை யெகோவா அளித்திருந்தாரா? நமக்குத் தெரியாது. ஒருவேளை தாய்மொழியாகிய எபிரெய மொழியில் அவர் பேச, இன்னொருவர் அதை மொழிபெயர்த்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி, அவர் சொல்லும் செய்தி சுருக்கமான செய்தி, ஆனால் கசப்பான செய்தி. “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” என்பதே அந்தச் செய்தி. (யோனா 3:4, பொ.மொ.) அதைத் துணிச்சலுடன் திரும்பத் திரும்ப அறிவிக்கிறார். அவரிடம் அபார தைரியமும் விசுவாசமும் பளிச்சிடுகின்றன; இன்றைய கிறிஸ்தவர்களுக்கு இவை அத்தியாவசியமான குணங்கள்.
யோனா சொன்ன செய்தி சுருக்கமான செய்தி, மக்களுக்குக் கசப்பான செய்தி
7, 8. (அ) யோனா சொன்ன செய்தியைக் கேட்டு நினிவே மக்கள் என்ன செய்தார்கள்? (ஆ) யோனாவின் அறிவிப்பைக் கேட்டு நினிவே அரசன் என்ன செய்தான்?
7 யோனா சொல்கிற செய்தி நினிவே மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. மக்கள் கோபத்தில் கொதித்தெழுவார்கள்... கொடூரமாய்த் தாக்குவார்கள்... என்றெல்லாம் அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், ஆச்சரியத்திலும் ஆச்சரியம் நிகழ்கிறது. மக்கள் காதுகொடுத்துக் கேட்கிறார்கள்! அவருடைய செய்தி காட்டுத்தீ போல் பரவுகிறது. விரைவிலேயே, அழிவைப் பற்றிய அந்தச் செய்திதான் ஊரெங்கும் அடிபடுகிறது. (யோனா 3:5-ஐ வாசியுங்கள்.) பணக்காரர்கள் ஏழைகள், பலம்படைத்தவர்கள் பலவீனர்கள், பெரியவர்கள் சிறியவர்கள் என எல்லோருமே மனந்திரும்புகிறார்கள். விரதம் இருக்கிறார்கள். இந்தப் பரபரப்பான செய்தி சீக்கிரத்தில் அரசனின் காதுக்கு எட்டுகிறது.
8 யோனாவின் செய்தியைக் கேட்டு அரசனும் மனம் மாறுகிறான். தெய்வ பயம் அவனை ஆட்கொள்கிறது... அரியணையைவிட்டு எழுந்துகொள்கிறான்... ராஜ உடையைக் களைந்துவிட்டு, மக்களைப் போலவே துக்க உடையை அணிந்துகொள்கிறான்... அதுமட்டுமல்ல, ‘சாம்பலில் உட்காருகிறான்.’ பின்பு, ‘அரச அவையினருடன்’ கூடிப் பேசி, மக்கள் மேற்கொள்ளும் விரதத்தை அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கிறான். எல்லா மனிதர்களும், சொல்லப்போனால் வீட்டு மிருகங்களும்கூட, துக்க உடையைப் போட வேண்டுமெனக் கட்டளையிடுகிறான்.b தன்னுடைய குடிமக்கள் தீய செயல்களிலும் வன்முறை செயல்களிலும் ஈடுபட்டிருப்பதை மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்கிறான். மனந்திரும்பினால் உண்மைக் கடவுள் இரக்கம் காட்டுவார் என்ற நம்பிக்கையுடன், ‘கடவுள் ஒருவேளை தம் மனதை மாற்றிக்கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது’ என்று சொல்கிறான்.—யோனா 3:6-9, பொ.மொ.
9. நினிவே மக்களைக் குறித்து விமர்சகர்கள் எழுப்பும் சந்தேகம் என்ன, ஆனால் அவர்களுடைய கருத்து தவறென நமக்கு எப்படித் தெரியும்?
9 நினிவே மக்கள் அவ்வளவு சீக்கிரம் மனம் மாறியதைக் குறித்து விமர்சகர்கள் சிலர் சந்தேகக் குரல் எழுப்புகிறார்கள். ஆனால், பண்டையக் கலாச்சாரங்களில் வாழ்ந்த மக்கள் பொதுவாக மூடநம்பிக்கைகளில் ஊறிப்போயிருந்ததால்... சலன புத்தியுள்ளவர்களாய் இருந்ததால்... இந்த மாற்றம் சாத்தியமே என பைபிள் அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். விமர்சகர்களுடைய கருத்து தவறு என்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது: நினிவே மக்கள் மனந்திரும்பியதாக இயேசு கிறிஸ்துவே பிற்பாடு குறிப்பிட்டார். (மத்தேயு 12:41-ஐ வாசியுங்கள்.) அந்தச் சம்பவம் நடந்தபோது அவரே பரலோகத்திலிருந்து அதைக் கண்கூடாகப் பார்த்திருந்தார். (யோவா. 8:57, 58) நாம் மனதில் வைக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், மக்கள் எந்தளவு கொடூரமானவர்களாய்த் தோன்றினாலும் சரி, அவர்களால் மனம் மாறவே முடியாதென்ற முடிவுக்கு ஒருபோதும் வரக்கூடாது. மனித இதயத்தில் இருப்பதை அறியும் சக்தி யெகோவாவுக்கு மாத்திரமே இருக்கிறது.
இரக்கமுள்ள கடவுள், கறாரான மனிதர்
10, 11. (அ) நினிவே மக்கள் மனந்திரும்பியபோது யெகோவா எப்படிப் பிரதிபலித்தார்? (ஆ) யெகோவாவின் தீர்ப்பில் தவறில்லை என எப்படி உறுதியாய்ச் சொல்லலாம்?
10 நினிவே மக்கள் மனந்திரும்பியபோது யெகோவா எப்படிப் பிரதிபலித்தார்? ‘கடவுள் அவர்கள் செய்த அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனதை மாற்றிக்கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை’ என்று யோனா பிற்பாடு எழுதினார்.—யோனா 3:10, பொ.மொ.
11 அப்படியென்றால், நினிவேக்குத் தவறான தீர்ப்பு அளித்துவிட்டதாக யெகோவா நினைத்தார் என்று அர்த்தமா? இல்லை. யெகோவாவின் நீதி பரிபூரண நீதி என பைபிள் சொல்கிறது. (உபாகமம் 32:4-ஐ வாசியுங்கள்.) ஆகவே, நினிவே மக்கள்மீது யெகோவாவுக்கு இருந்த நியாயமான கோபம் தணிந்துவிட்டது என்றுதான் அர்த்தம். அந்த மக்கள் மனம் மாறியதை யெகோவா பார்த்தார்; தாம் முன்பு தீர்மானித்திருந்தபடி அவர்களைத் தண்டிக்க வேண்டியதில்லை என முடிவு செய்தார். இதுவே அவர்களுக்கு இரக்கம் காட்டுவதற்கான தருணம் என நினைத்தார்.
12, 13. (அ) நியாயமானவர், வளைந்துகொடுப்பவர், இரக்கமுள்ளவர் என்பதை யெகோவா எப்படிக் காட்டினார்? (ஆ) யோனா முன்னறிவித்த செய்தி பொய்யாகிவிடவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?
12 கடவுள் கறாரானவர்... ஈவிரக்கமற்றவர்... கொடூரமானவர்... என்பதுபோல் மதத் தலைவர்கள் பெரும்பாலும் அவரைச் சித்தரிக்கிறார்கள், ஆனால் யெகோவா அப்படிப்பட்டவர் அல்ல. அவர் நியாயமானவர், வளைந்துகொடுப்பவர், இரக்கமுள்ளவர். பொல்லாதவர்களைத் தண்டிக்கத் தீர்மானித்தால், பூமியிலுள்ள தம் ஊழியர்கள் மூலம் முதலில் எச்சரிப்பு விடுக்கிறார்; ஏனென்றால், பொல்லாதவர்கள் நினிவே மக்களைப் போல் மனந்திரும்பி தங்கள் வழியை மாற்றிக்கொள்ள வேண்டுமென ஆவலாக இருக்கிறார். (எசே. 33:11) யெகோவா தமது தீர்க்கதரிசி எரேமியாவிடம், “பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்ன மாத்திரத்தில், நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்” என்று சொன்னார்.—எரே. 18:7, 8.
நினிவே மக்களைப்போல், பொல்லாதவர்கள் மனந்திரும்பி தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமெனக் கடவுள் ஆவலாக இருக்கிறார்
13 யோனா முன்னறிவித்த செய்தி பொய்யாகிவிட்டதா? இல்லை; நினிவே மக்களை எச்சரிக்க வேண்டுமென்ற யெகோவாவின் நோக்கத்தை அது நிறைவேற்றியது. பொல்லாத செயல்களைச் செய்ததால்தான் அவர்களுக்கு அந்த எச்சரிப்பே கொடுக்கப்பட்டது, அதைக் கேட்டு அவர்கள் மாறினார்கள். ஆனால் மறுபடியும் பொல்லாத செயல்களில் ஈடுபட்டால், கடவுள் சொன்ன அதே தண்டனையைப் பெறுவார்கள். அதுதான் பிற்பாடு நடந்தது.—செப். 2:13-15.
14. நினிவே மக்களுக்கு யெகோவா இரக்கம் காட்டியபோது யோனா எப்படி உணர்ந்தார்?
14 எதிர்பார்த்த சமயத்தில் அழிவு வராததைக் கண்டு யோனா எப்படி உணருகிறார்? ‘யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருக்கிறது; அவர் கடுங்கோபம் கொள்கிறார்.’ (யோனா 4:1) சர்வவல்லமையுள்ள கடவுளுக்கே நியாயம் சொல்வதுபோல் பேசுகிறார்! தன்னுடைய சொந்த ஊரைவிட்டு இங்கு வந்தது தப்பு என்பதுபோல் சொல்கிறார். ‘நினிவேயை நீங்கள் அழிக்க மாட்டீர்கள் என்பது எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும்... அதனால்தான் முதலில் தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்’ எனச் சாக்குப்போக்கு கூறுகிறார். பின்பு, வாழ்வதைவிட சாவதே மேல் என்று சொல்லி, தன் உயிரை எடுத்துக்கொள்ளும்படி கேட்கிறார்.—யோனா 4:2, 3-ஐ வாசியுங்கள்.
15. (அ) மனக்கசப்பு, சுயபச்சாதாபம், அவமானம் என்ற புதைமணலுக்குள் யோனா சிக்க எது காரணமாய் இருந்திருக்கலாம்? (ஆ) தவித்துக் கொண்டிருந்த தமது தீர்க்கதரிசியை யெகோவா எப்படி நடத்தினார்?
15 யோனாவுக்கு என்ன பிரச்சினை, ஏன் இப்படிப் புலம்பிக்கொண்டிருக்கிறார்? அவருடைய மனதில் என்ன ஓடியதென நமக்கு முழுமையாகத் தெரியாது; ஆனால், நமக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான்: நினிவே மக்கள் எல்லோருக்கும் அழிவின் செய்தியை அறிவித்திருந்தார்; அவர்களும் அதை நம்பியிருந்தார்கள்; ஆனால் இப்போது எந்த அழிவும் வரவில்லை. ஆகவே, அவர்கள் தன்னைக் கேலி கிண்டல் செய்வார்கள் என்றோ பொய்த் தீர்க்கதரிசி என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்றோ பயந்தாரா? எதுவாக இருந்தாலும் சரி, மக்கள் மனந்திரும்பியதைக் குறித்தோ யெகோவா இரக்கம் காட்டியதைக் குறித்தோ அவர் சந்தோஷப்படவில்லை. மாறாக, மனக்கசப்பு, சுயபச்சாதாபம், அவமானம் என்ற புதைமணலுக்குள் சிக்கிக்கொண்டதாகத் தெரிகிறது. இருந்தாலும், இரக்கமுள்ள கடவுளான யெகோவா... தவித்துக் கொண்டிருக்கிற யோனாவிடம் இன்னும் நல்லதையே பார்க்கிறார். அவமரியாதையாகப் பேசியதற்காக யோனாவைத் தண்டிக்காமல், “நீ என்னிடம் கோபம்கொள்வது சரியென்று நினைக்கிறாயா?” எனக் கனிவான ஒரு கேள்வியை... சிந்தையைத் தூண்டும் ஒரு கேள்வியை... கேட்கிறார். (யோனா 4:4, ERV) யோனா அதற்குப் பதில் சொல்கிறாரா? அதைப் பற்றி பைபிளில் எதுவும் இல்லை.
16. சிலர் என்னென்ன விஷயங்களில் கடவுளோடு முரண்படலாம், யோனாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
16 யோனா நடந்துகொண்ட விதம் கொஞ்சம்கூட சரியில்லை என்று நாம் ஒருவேளை அவரைக் கண்டனம் செய்யலாம். ஆனால், அபூரண மனிதர்களின் கருத்துகள் கடவுளுடைய கருத்துகளோடு முரண்படுவது இயல்புதான். இன்று சிலர் இப்படி நினைக்கலாம்: அசம்பாவிதங்களைக் கடவுள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்... கெட்ட ஆட்களுக்கு உடனடியாகத் தண்டனை கொடுத்திருக்க வேண்டும்... இந்த உலகத்துக்கு எப்போதோ முடிவு கொண்டுவந்திருக்க வேண்டும். இப்படி நம் எண்ணங்கள் கடவுளுடைய எண்ணங்களோடு ஒத்துப்போகாதபோது, நாம்தான் நம் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும், கடவுள் அல்ல என்பதை யோனாவின் உதாரணம் நினைப்பூட்டுகிறது.
யோனாவுக்கு யெகோவா புகட்டும் பாடம்
17, 18. (அ) நினிவே நகரத்தைவிட்டு வந்தபின் யோனா என்ன செய்தார்? (ஆ) சுரைக்காய் கொடி சம்பந்தமாக யெகோவா நிகழ்த்திய அற்புதங்கள் யோனாவை எப்படிப் பாதித்தன?
17 வெறுத்துப்போன அந்தத் தீர்க்கதரிசி நினிவேயைவிட்டுப் புறப்படுகிறார்; ஆனால் நேராகத் தன்னுடைய ஊருக்குப் போகாமல், கிழக்கே நினிவேயைப் பார்த்தபடி அமைந்திருக்கிற மலைப்பகுதிக்குச் செல்கிறார். அங்கே சிறு பந்தல் போட்டுக்கொண்டு காத்திருக்கிறார், நினிவேக்கு என்ன நடக்குமெனப் பார்ப்பதற்காகவே காத்திருக்கிறார். ஒருவேளை, அந்த நகரம் அழியுமென்று அப்போதுகூட அவர் எதிர்பார்த்திருக்கலாம். இப்படிப்பட்ட பிடிவாதக்காரருக்கு யெகோவா எப்படி இரக்கத்தைக் கற்றுத் தருகிறார்?
18 இரவோடு இரவாக ஒரு சுரைக்காய் கொடியை யெகோவா வளரச் செய்கிறார். யோனா கண்விழிக்கும்போது, அகன்ற இலைகளுடன் தளதளவென வளர்ந்திருக்கிற கொடியைப் பார்க்கிறார்; தான் போட்ட பந்தலைவிட இந்தக் கொடி அதிக நிழல் தருவதைக் கவனிக்கிறார். அவருக்கு உற்சாகம் உச்சிவரை பரவுகிறது. அந்தக் கொடியைக் குறித்து ‘யோனா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்.’ தனக்குக் கடவுளுடைய ஆசீர்வாதமும் அங்கீகாரமும் இருப்பதால்தான் அது அற்புதமாக வளர்ந்திருக்கிறதென யோனா நினைத்திருக்கலாம். என்றாலும், யோனாவுக்கு வெறுமனே நிழல் தருவதற்காகவோ அவருடைய முன்கோபத்தைத் தணிப்பதற்காகவோ மட்டும் யெகோவா அந்தக் கொடியை வளர வைக்கவில்லை. அவர் யோனாவின் மனதைத் தூண்ட விரும்புகிறார். அதற்காக இன்னும் சில அற்புதங்களைச் செய்கிறார். ஒரு புழுவை அனுப்புகிறார், அது அந்தக் கொடியைக் கபளீகரம் செய்கிறது. பின்பு, ‘கிழக்கிலிருந்து அனல் காற்றை’ வீசச் செய்கிறார்; அந்தச் சூட்டினால் யோனாவுக்கு ‘மயக்கமே’ வருகிறது. அவர் மீண்டும் மனம் நொந்துபோகிறார், தன் உயிரை எடுக்கச் சொல்லி மறுபடியும் கடவுளிடம் கேட்கிறார்.—யோனா 4:6-8, பொ.மொ.
19, 20. சுரைக்காய் கொடியைக் குறித்து யோனாவிடம் யெகோவா எப்படி நியாயத்தை எடுத்துச்சொன்னார்?
19 இந்த முறை சுரைக்காய் கொடி பட்டுப்போனதைக் குறித்து யோனா கோபப்பட்டதால், இப்படிக் கோபப்படுவது சரியா என்று யெகோவா அவரிடம் மறுபடியும் கேட்கிறார். யோனா மனந்திருந்துவதற்குப் பதிலாக, “ஆம், நான் கோபப்படுவது சரிதான், நான் சாகிற அளவிற்குக் கோபமாக இருக்கிறேன்!” என்று சொல்லி தன்னையே நியாயப்படுத்திக்கொள்கிறார். யெகோவா அவருக்குப் பாடம் புகட்ட சரியான சந்தர்ப்பம் வந்துவிட்டது!—யோனா 4:9, ERV.
20 யோனாவிடம் கடவுள் நியாயத்தை எடுத்துச் சொல்கிறார்; இரவோடு இரவாக வளர்ந்த ஒரு சாதாரண கொடி பட்டுப்போனதற்காக, அதுவும் யோனா நட்டு வளர்க்காத ஒரு கொடி பட்டுப்போனதற்காக, அவர் வருந்தியதைச் சுட்டிக்காட்டுகிறார். கடைசியாக, “வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ” என்று சொல்கிறார்.—யோனா 4:10, 11. c
21. (அ) யோனாவுக்கு யெகோவா புகட்டிய பாடம் என்ன? (ஆ) நம்மை நேர்மையுடன் எடைபோடுவதற்கு யோனாவின் பதிவு எப்படித் துணைபுரிகிறது?
21 சுரைக்காய் கொடியைக் கொண்டு யெகோவா புகட்டிய பாடத்தை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? யோனா அந்தக் கொடிக்காக ஒன்றுமே செய்யவில்லை. யெகோவாவோ அந்த நினிவே மக்களுக்கு உயிர் கொடுத்தவர்... வாழ்வாதாரம் தந்தவர். அப்படியிருக்கும்போது, 1,20,000 மனிதர்களைவிட... அவர்களுடைய கால்நடைகளைவிட... ஏன் ஒரேவொரு கொடி யோனாவுக்குப் பெரிதாகத் தெரிகிறது? அவர் தன்னைப் பற்றியே யோசிக்க ஆரம்பித்ததால்தான், அல்லவா? அவருக்கு அந்தக் கொடி நிழல் தந்ததால்தானே அது பட்டுப்போனபோது வருத்தப்பட்டார்? அதேபோல், நினிவே அழிக்கப்படாதபோது அவர் கோபப்பட்டதற்குக் காரணம் சுயநலம்தானே—தனக்கு அவமானம் வரக் கூடாது, தான் சொன்னது பொய்யாகக் கூடாது என்ற தன்னல ஆசைதானே? நம்மை நேர்மையாக எடைபோட்டுப் பார்ப்பதற்கு யோனாவின் கதை துணைபுரிகிறது. நம் எல்லோரிடமும் சுயநலம் எட்டிப்பார்க்கிறது இல்லையா? யெகோவாவைப் போல் நாமும் அதிக இரக்கத்தோடும் அனுதாபத்தோடும் சுயநலமற்ற குணத்தோடும் நடந்துகொள்ள அவர் பொறுமையுடன் பாடம் புகட்டுகிறார்; அதற்கு நாம் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டும்!
22. (அ) இரக்கத்தைப் பற்றி யெகோவா கொடுத்த ஞானம் பொதிந்த அறிவுரை யோனாமீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது? (ஆ) நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?
22 ஆனால், யோனா பாடம் கற்றுக்கொண்டாரா? அவருடைய பெயர் தாங்கிய புத்தகத்தின் முடிவில், யெகோவா கேட்ட கேள்வி தொக்கி நிற்கிறது; அந்தக் கேள்வி இன்றுவரை எதிரொலிக்கிறது. யோனா பதில் சொல்லவே இல்லையெனச் சில விமர்சகர்கள் குறைகூறலாம். ஆனால் பதில் இருக்கிறது. யோனா புத்தகமே அந்தப் பதில். யோனா என்ற பெயர் தாங்கிய அந்தப் புத்தகத்தை யோனாதான் எழுதினார் என அத்தாட்சி காட்டுகிறது. இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: இப்போது யோனா தனது தாய்நாட்டில் இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கிறார். அவருக்கு நரை தட்டியிருக்கிறது, ஞானம் பெருகியிருக்கிறது, பணிவு அதிகமாகியிருக்கிறது. தான் தவறுகள் இழைத்ததை... கீழ்ப்படியாமல் போனதை... இரக்கம் காட்டப் பிடிவாதமாக மறுத்ததை... பற்றியெல்லாம் எழுத எழுத மனவருத்தம் அவர் முகத்தில் தெரிகிறது. யெகோவாவின் ஞானம் பொதிந்த அறிவுரையிலிருந்து யோனா முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஆம், இரக்கம் காட்டக் கற்றுக்கொண்டார். நாமும் அதைக் கற்றுக்கொள்வோமா?—மத்தேயு 5:7-ஐ வாசியுங்கள்.
a யோனாவின் நாட்களில், சமாரியாவில் (பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தின் தலைநகரில்) சுமார் 20,000 முதல் 30,000 பேர் வரை வசித்திருக்கலாம் என ஒரு கணக்கு காட்டுகிறது; இது, நினிவேயின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பாகத்திற்கும் குறைவு. நினிவே செழித்தோங்கிய காலத்தில், அது உலகிலேயே மிகப் பெரிய நகரமாக இருந்திருக்கலாம்.
b இந்த விவரம் சற்று விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் பூர்வ காலங்களில் இப்படி நடந்ததுண்டு. பண்டையக் கால பெர்சியர்கள் தங்களுடைய பிரபல படைத்தளபதி இறந்தபோது அவருக்காகத் துக்கம் அனுசரிக்கையில் தங்களுடைய கால்நடைகளையும் சடங்குகளில் ஈடுபடுத்தியதாகக் கிரேக்க சரித்திராசிரியர் ஹிராடட்டஸ் குறிப்பிட்டார்.
c வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத மக்கள் எனக் கடவுள் குறிப்பிட்டபோது, ஒன்றும் அறியாத குழந்தைகளைப்போல் தம்முடைய நெறிமுறைகளை அவர்கள் அறியாதிருந்தார்கள் என்பதையே அர்த்தப்படுத்தினார்.