உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• மீகா புத்தகத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன, அது எப்போது எழுதப்பட்டது, அந்த சமயத்தில் சூழ்நிலை எப்படி இருந்தது?
மீகா புத்தகத்தில் ஏழு அதிகாரங்கள் உள்ளன. மீகா தீர்க்கதரிசி பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் இந்தப் புத்தகத்தை எழுதினார்; அந்த சமயத்தில் கடவுளுடைய உடன்படிக்கையின் கீழிருந்த ஜனங்கள் இஸ்ரவேல், யூதா என இரண்டு தேசங்களாக பிரிந்திருந்தார்கள்.—8/15, பக்கம் 9.
• மீகா 6:8-ன்படி கடவுள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்?
நாம் ‘நியாயம் செய்ய’ வேண்டும். கடவுள் செயல்படும் விதமே நியாயத்திற்கான தராதரமாக அமைகிறது. எனவே நேர்மையையும் உத்தமத்தையும் குறித்த அவருடைய நியமங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். ‘தயவை சிநேகிக்கும்படி’ அவர் நம்மிடம் சொல்கிறார். பேரழிவுகள் போன்ற சமயங்களில் மற்றவர்களின் தேவைக்கு கவனம் செலுத்துவதன் மூலம் கிறிஸ்தவர்கள் அன்புள்ள தயவை காட்டியிருக்கிறார்கள். யெகோவாவுக்கு ‘முன்பாக அடக்கமாய் நடப்பதற்கு’ நம் வரம்புகளை உணர்ந்து, கடவுளின்மீது சார்ந்திருக்க வேண்டும்.—8/15, பக்கங்கள் 20-2.
• ஒரு கிறிஸ்தவர் வேலையை இழக்கையில் என்ன செய்ய விரும்பலாம்?
அவர் தன் வாழ்க்கைப் பாணியை மீண்டும் ஆராய்ந்து பார்ப்பது நல்லது. ஒரு சிறிய வீட்டிற்கு குடிமாறுவதன் மூலம் அல்லது தேவையற்ற பொருளுடைமைகளை கழித்துவிடுவதன் மூலம் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்ளலாம். நம்முடைய அன்றாட தேவைகளை கடவுள் கவனித்துக் கொள்வார் என்ற நம்பிக்கையோடு இருந்து, அவற்றிற்காக கவலைப்படாமல் இருப்பது முக்கியம். (மத்தேயு 6:33, 34)—9/1, பக்கங்கள் 14-15.
• கல்யாணப் பரிசுகளை கொடுக்கும்போதோ வாங்கும்போதோ எதை நாம் மனதில் வைக்க வேண்டும்?
விலையுயர்ந்த அன்பளிப்புகள் தேவையில்லை, அவற்றை எதிர்பார்க்கவும் கூடாது. மிகவும் விலையேறப் பெற்றது பொருட்களல்ல, ஆனால் கொடுப்பவருடைய மனப்பான்மையே. (லூக்கா 21:1-4) அன்பளிப்பு கொடுத்தவருடைய பெயரை அறிவிப்பது கனிவான செயல் அல்ல. அப்படி செய்வது தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம். (மத்தேயு 6:3)—9/1, பக்கம் 29.
• நாம் ஏன் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும்?
தவறாமல் ஜெபிப்பது கடவுளுடனுள்ள நம் உறவை பலப்படுத்தும், கடும் சோதனைகளை சந்திக்க நம்மை தயார்படுத்தும். தேவைக்கேற்பவும் சூழ்நிலைக்கேற்பவும் நமது ஜெபங்கள் சுருக்கமாகவோ நீளமாகவோ இருக்கலாம். ஜெபம் நம் விசுவாசத்தை பலப்படுத்தி, பிரச்சினைகளை சமாளிக்க உதவும்.—9/15, பக்கங்கள் 15-18.
• ‘மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவது’ என சில மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்த்திருக்கிற 1 கொரிந்தியர் 15:29-ஐ நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?
கிறிஸ்து உத்தமத்தன்மையுடன் எப்படி மரித்தாரோ அதே விதமான மரணத்துக்கு வழிநடத்தும் வாழ்க்கை முறைக்குள் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள், அதாவது முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் அர்த்தப்படுத்தினார். பிறகு அவர்கள் கிறிஸ்துவைப் போலவே ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள்.—10/1, பக்கம் 29.
• கிறிஸ்தவர்களாக ஆவது 1 கொரிந்தியர் 6:9-11-ல் குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளைத் தவிர்ப்பதை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை என நாம் எப்படி அறிகிறோம்?
வேசி மார்க்கம், விக்கிரகாராதனை, குடிவெறி போன்ற தவறான காரியங்களை மட்டுமே தவிர்த்தால் போதும் என அப்போஸ்தலன் பவுல் கூறவில்லை. கூடுதலான மாற்றங்கள் செய்வது அவசியமாக இருக்கலாம் என்பதையும் அடுத்த வசனத்தில் அவர் காட்டினார்: “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது.”—10/15, பக்கங்கள் 18-19.
• கடவுளுடைய இருதயத்தை மகிழ்வித்த சில பூர்வ கால பெண்கள் யாவர்?
பிறக்கும் எல்லா இஸ்ரவேல ஆண் குழந்தைகளையும் கொல்லும்படி சொன்ன பார்வோனுக்குக் கீழ்ப்படியாத சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகள் அப்படிப்பட்ட பெண்களில் அடங்குவார்கள். (யாத்திராகமம் 1:15-20) கானானிய வேசியாகிய ராகாப் இஸ்ரவேலின் இரண்டு வேவுகாரர்களைப் பாதுகாத்தாள். (யோசுவா 2:1-13; 6:22, 23) அபிகாயிலின் புத்திசாலித்தனம் அநேகருடைய உயிரை காப்பாற்றியதோடு, தாவீதை இரத்தப் பழியிலிருந்தும் தடுத்தது. (1 சாமுவேல் 25:2-35) இன்றைய பெண்களுக்கு இவர்கள் முன்மாதிரிகளாய் இருக்கிறார்கள்.—11/1, பக்கங்கள் 8-11.
• நியாயாதிபதிகள் 5:20 குறிப்பிடுகிறபடி, ‘வானத்திலிருந்து நட்சத்திரங்கள்’ எப்படி சிசெராவுடன் யுத்தம் பண்ணின?
இது தெய்வீக உதவியைக் குறிப்பதாக சிலர் கருதுகிறார்கள். வேறு சிலரோ தேவதூதர்களுடைய உதவி கிடைத்ததாக, விண்கற்கள் விழுந்ததாக, அல்லது சிசெரா சோதிட முன்கணிப்புகளை சார்ந்திருந்ததாக கருதுகிறார்கள். பைபிள் எந்த விளக்கமும் கொடுக்காததால், இஸ்ரவேலருடைய படையின் சார்பாக ஏதோ ஒரு வகை தெய்வீக தலையீடு இருந்ததென நாம் புரிந்துகொள்ளலாம்.—11/15, பக்கம் 30.
• மதம் என்றாலே எங்கும் அலட்சியமும் சலிப்பும் நிலவும் இக்காலத்தில் ஏன் அநேகர் தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள்?
சிலர் மன நிம்மதிக்காக சர்ச்சுக்குப் போகிறார்கள். இன்னும் சிலர் மரித்த பின்பு நித்திய வாழ்வு கிடைக்கும், அல்லது ஆரோக்கியம், செல்வம், வெற்றி ஆகியவை கிடைக்கும் என நினைத்து செல்கிறார்கள். சில இடங்களில், முதலாளித்துவம் சார்ந்த பொருளாதார சீர்திருத்த கொள்கைகள் கம்யூனிஸ கொள்கையை மாற்றீடு செய்துவிட்டதால் ஏற்பட்ட ஆன்மீக வெற்றிடத்தை நிரப்புவதற்காகவே ஜனங்கள் செல்கிறார்கள். இத்தகைய காரணங்களை தெரிந்து வைத்திருப்பது அர்த்தமுள்ள உரையாடலைத் தொடங்க ஒரு கிறிஸ்தவருக்கு உதவும்.—12/1, பக்கம் 3.