யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
ஒபதியா, யோனா, மீகா புத்தகங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
“ஒ பதியாவின் தரிசனம்.” (ஒபதியா 1) பைபிள் புத்தகமாகிய ஒபதியாவின் ஆரம்ப வார்த்தைகளே அவை. இத்தீர்க்கதரிசி தன்னுடைய பெயரைத் தவிர தன்னைப் பற்றிய வேறெந்த தகவல்களையும் இதில் தெரிவிப்பதில்லை. பொ.ச.மு. 607-ல் இப்புத்தகத்தை அவர் எழுதி முடிக்கிறார். இப்புத்தகம் எழுதப்படுவதற்கு இருநூறுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பே யோனா புத்தகம் எழுதப்பட்டது; மிஷனரி நியமிப்பில் தனக்கு கிடைத்த அனுபவத்தை யோனா தீர்க்கதரிசி ஒளிவுமறைவின்றி அதில் குறிப்பிடுகிறார். மீகா தீர்க்கதரிசியோ, 60 ஆண்டுகளுக்கு அதாவது பொ.ச.மு. 777 முதல் பொ.ச.மு. 717 வரை தீர்க்கதரிசியாக சேவை செய்கிறார். அது ஒபதியாவும் யோனாவும் தீர்க்கதரிசனம் உரைத்த காலத்திற்கு இடைப்பட்ட காலமாகும். மீகா தீர்க்கதரிசியும்கூட தன்னைப்பற்றி ஒரேவொரு தகவலை மட்டுமே தருகிறார். அதாவது, தான் ‘மொரேசா ஊரைச்’ சேர்ந்தவர் என்றும் “யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில்” தனக்கு யெகோவாவுடைய வார்த்தை உண்டானது என்றும் குறிப்பிடுகிறார். (மீகா 1:1) அவருடைய எழுத்து நடையிலிருந்து அவர் ஒரு கிராமவாசி என்பது தெளிவாகத் தெரிகிறது. தன்னுடைய செய்தியிலுள்ள குறிப்புகளை வலியுறுத்த கிராமப்புற வாழ்க்கை சம்பந்தப்பட்ட உதாரணங்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
ஏதோம் ‘முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப் போகும்’
ஏதோமைக் குறித்து ஒபதியா இவ்வாறு கூறுகிறார்: “நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம் வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப்போவாய்.” யாக்கோபின் பிள்ளைகளான இஸ்ரவேலருக்கு ஏதோமியர் சமீபத்தில் இழைத்த கொடுமைகள் இத்தீர்க்கதரிசியின் மனதில் பசுமையாக இருக்கின்றன. பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர் எருசலேமை அழித்தபோது, இந்த ஏதோமியர் இஸ்ரவேலருக்கு ‘எதிர்த்து நின்றார்கள்’; அதோடு, படையெடுத்துவந்த ‘மறுதேசத்தாருடன்’ கூட்டுச்சேர்ந்தார்கள்.—ஒபதியா 10, 11.
ஆனால், யாக்கோபின் வீட்டார் மீண்டும் தாயகம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை அளிக்கப்படுகிறது. ஒபதியாவின் தீர்க்கதரிசனம் அதை இவ்வாறு கூறுகிறது: “சீயோன் பர்வதத்திலே தப்பியிருப்பார் உண்டு, அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்.”—ஒபதியா 17.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
vs 5-8—ஏதோமியரின் அழிவு இராத்திரியில் கொள்ளையடிக்க வருகிறவர்களோடும் திராட்சப்பழங்களை அறுக்கிறவர்களோடும் ஒப்பிடப்படுவதன் காரணமென்ன? ஏதோமியரிடத்திற்கு கொள்ளையர் வந்தால், தங்களுக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துச் செல்வார்கள். அறுக்கிறவர்கள் வந்தால் பின்பறிப்புக்குச் சிலவற்றையாவது விட்டுச் செல்வார்கள். ஆனால், ஏதோமியர் வீழ்ச்சியடைகையில், அவர்களோடு ‘உடன்படிக்கை செய்த மனுஷர்,’ அதாவது அவர்களோடு கூட்டுச்சேர்ந்திருந்த பாபிலோனியர் அவர்கள் மறைத்து வைத்திருந்த பொக்கிஷங்களை எல்லாம் கண்டுபிடித்து அவற்றை முற்றிலும் சூறையாடிச் செல்வார்கள்.—எரேமியா 49:9, 10.
vs 10—ஏதோம் ‘முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப் போவது’ எப்படி? முன்னறிவித்தபடியே, பூமியின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்துவந்த ஏதோம் மக்கள் பூண்டோடு அழிந்துவிட்டனர்; அவர்களுடைய அரசாங்கமும் சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது. எப்படியெனில், சுமார் பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்திபத்தில் பாபிலோனிய அரசனான நபோனிடஸ் ஏதோமைத் தோற்கடித்தார். பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டிற்குள்ளாக, நபட்டீயர்கள் ஏதோமியரின் பிராந்தியத்தில் குடியேறிவிட்டனர்; அதனால் யூதேயாவின் தென் பகுதியிலுள்ள நெகெப் என்ற இடத்திற்கு ஏதோமியர் குடிபுகுந்தனர். இந்த இடம், பிற்பாடு இதுமேயா என்று அழைக்கப்பட்டது. பொ.ச. 70-ல் எருசலேமை ரோமர்கள் அழித்த பிறகு ஏதோமியர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர்.
நமக்குப் பாடம்:
vs 3, 4. ஏதோமியர் உயர்ந்த மலைகளும் ஆழமான பள்ளத்தாக்குகளும் சூழ்ந்த கரடுமுரடான நிலப்பகுதியில் வாழ்ந்ததால், விரோதிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பித்து வந்தார்கள். ஆகவே, மிதமீறிய தன்னம்பிக்கையுடன் தாங்கள் பத்திரமாயும் பாதுகாப்பாயும் இருப்பதாக அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளிலிருந்து எவராலும் தப்பிக்க முடியாது.
vs 8, 9, 15. ‘கர்த்தருடைய நாளில்’ மனித ஞானமோ பலமோ எவ்வித பாதுகாப்பையும் அளிக்காது.—எரேமியா 49:7, 22.
vs 12-14. கடவுளுடைய ஊழியர்கள் கஷ்டப்படுகையில் அதைப் பார்த்து அகமகிழ்பவர்களுக்கு ஏதோமியரின் உதாரணம் எச்சரிப்பாக அமைகிறது. தம்முடைய மக்களை யாராவது மோசமாக நடத்தினால் அவர்களை யெகோவா சும்மா விட்டுவிடமாட்டார்.
vs 17-20. யாக்கோபின் வம்சத்தார் தாயகம் திரும்புவது சம்பந்தமான இத்தீர்க்கதரிசனம், பொ.ச.மு. 537-ல் பாபிலோனிலிருந்து கொஞ்சம் பேர் எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது நிறைவேற ஆரம்பித்தது. யெகோவாவின் வார்த்தை எப்போதும் நிறைவேறும். ஆகவே, அவருடைய வாக்குறுதிகளில் நாம் முழு நம்பிக்கை வைக்கலாம்.
“நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்”
“மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாக” நியாயத்தீர்ப்பின் செய்தியை ‘பிரசங்கிக்கும்படி’ யோனாவுக்குக் கடவுள் கட்டளையிடுகிறார். அவரோ அக்கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் எதிர்திசையிலுள்ள ஓரிடத்திற்கு ஓடிப்போக முயல்கிறார். “சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை” வீசச் செய்தும் “ஒரு பெரிய மீனை” பயன்படுத்தியும் யெகோவா யோனாவை திரும்பி வரும்படிச் செய்கிறார்; அசீரியாவின் தலைநகருக்குச் சென்று பிரசங்கிக்கும்படி மீண்டும் கட்டளையிடுகிறார்.—யோனா 1:2, 4, 17; 3:1, 2.
யோனா நினிவேக்குச் சென்று, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுபோல் செய்தியை இவ்வாறு அறிவிக்கிறார்: “இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்.” (யோனா 3:4) இந்தச் செய்தியை அறிவித்த பிறகு தான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் போனதால் யோனா ‘கடுங்கோபம் கொள்கிறார்.’ ஓர் “ஆமணக்குச் செடியை” பயன்படுத்தி இரக்கம் காட்டுவதன் அவசியத்தை யோனாவுக்கு யெகோவா கற்பிக்கிறார்.—யோனா 4:1, 6.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
3:3—நினிவே “மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான” இடமாக இருந்ததா? ஆம். பண்டைய காலத்தில், வடக்கே கார்ஸபாடிலிருந்து தெற்கே நிம்ரூட் வரைக்கும் பரந்திருந்த மற்ற குடியிருப்புகளும் நினிவே நகரத்தைச் சேர்ந்ததாக கருதப்பட்டன. நினிவேயோடு சேர்ந்ததாக கருதப்பட்ட எல்லா குடியிருப்புகளும் 100 கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்ட நாற்கோணமாக அமைந்திருந்தன.
3:4—நினிவே மக்களுக்குப் பிரசங்கிப்பதற்கு யோனா அசீரிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டியிருந்ததா? யோனாவுக்கு அசீரிய மொழி ஏற்கெனவே தெரிந்திருக்கலாம், அல்லது அம்மொழியில் பேசுவதற்கான திறமையை அவர் அற்புதமாய்ப் பெற்றிருக்கலாம். மற்றொரு சாத்தியம் என்னவென்றால், அவர் எபிரெயுவில் நேரடியாகச் சொன்ன செய்தியை வேறொருவர் அசீரிய மொழியில் மொழிபெயர்த்திருக்கலாம். அப்படி ஒருவர் மொழிபெயர்த்திருந்தால் அவருடைய செய்தியை அந்த மக்கள் இன்னும் ஆர்வத்தோடு கேட்டிருப்பார்கள்.
நமக்குப் பாடம்:
1:1-3. பிரசங்கிக்கும் வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் முழுமையாக ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே பிற காரியங்களைத் திட்டமிடுவது, நம்முடைய உள்நோக்கம் சரியல்ல என்பதையே காட்டுகிறது. அப்படிச் செய்பவர், ஒரு கருத்தில் கடவுள் கொடுத்துள்ள வேலையைச் செய்யாமல் ஓடிப்போகிறார்.
1:1, 2; 3:10. குறிப்பிட்ட ஒரு தேசத்துக்கோ இனத்துக்கோ விசேஷித்த சில மக்களுக்கோ மட்டும் யெகோவா இரக்கம் காட்டுவதில்லை. “கர்த்தர் எல்லார் மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுமுள்ளது.”—சங்கீதம் 145:9.
1:17; 2:10. யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றில் இரவும் பகலும் மூன்று நாள் இருந்தது, இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் தீர்க்கதரிசனமாகக் காட்டுகிறது.—மத்தேயு 12:39, 40; 16:21.
1:17; 2:10; 4:6. கொந்தளிக்கும் கடலிலிருந்து யோனாவை யெகோவா மீட்டார். ‘யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டார்.’ யெகோவாவின் தற்கால ஊழியர்களும்கூட பாதுகாப்பையும் மீட்பையும் பெறுவதற்கு அவர்மீதும் அவருடைய கிருபையின்மீதும் நம்பிக்கை வைக்கலாம்.—சங்கீதம் 13:5; 40:11.
2:1, 2, 9, 10. யெகோவா தமது ஊழியர்களின் ஜெபங்களைக் கேட்கிறார், அவர்களுடைய விண்ணப்பங்களுக்குச் செவிசாய்க்கிறார்.—சங்கீதம் 120:1; 130:1, 2.
3:8, 10. மெய்க் கடவுள் தாம் சொல்லியிருந்த தீங்கைக் குறித்து “மனஸ்தாபப்பட்டு,” அதாவது தம் மனதை மாற்றி “அதைச் செய்யாதிருந்தார்.” ஏன்? ஏனெனில், அந்த நினிவே மக்கள் ‘தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்கள்.’ அவ்வாறே இன்றும், பாவம் செய்த ஒருவர் உண்மையான மனந்திரும்புதலைக் காட்டுவாரானால் கடவுளும் அவருக்குத் தண்டனை வழங்காமல் விட்டுவிடலாம்.
4:1-4. கடவுள் இரக்கம் காட்டுவதை எந்த மனிதனாலும் தடுக்க முடியாது. நாமும்கூட யெகோவா இரக்கம் காட்டும் விதத்தைப்பற்றி குறைசொல்லாதபடி கவனமாய் இருக்க வேண்டும்.
4:11. உலகமெங்குமுள்ள மக்களுக்கு ராஜ்ய செய்தி அறிவிக்கப்படுவதற்காக யெகோவா பொறுமையோடு காத்திருக்கிறார். ஏனென்றால், நினிவேயில் வாழ்ந்த 1,20,000 ஆட்களுக்காக பரிதபித்ததைப் போலவே இன்றும் “வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத” மக்களுக்காக அவர் பரிதாபப்படுகிறார். நம்முடைய பிராந்தியத்திலுள்ள மக்களுக்காக நாமும் பரிதாபப்பட்டு, ராஜ்யத்தைப் பிரசங்கிக்கும் வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் மும்முரமாய் ஈடுபட வேண்டும், அல்லவா?—2 பேதுரு 3:9.
‘அவர்கள் முழு மொட்டையாய் இருப்பார்கள்’
இஸ்ரவேல் மற்றும் யூதாவின் பாவங்களை மீகா அம்பலப்படுத்துகிறார்; அவற்றின் தலைநகரம் பாழாக்கப்படும் என முன்னறிவிப்பதோடு அவை மீண்டும் மக்களால் குடியேற்றப்படும் என்ற வாக்குறுதியையும் அளிக்கிறார். சமாரியா “வெளியான [அதாவது வயலின்] மண்மேடு” போலாகும். இஸ்ரவேலும் யூதாவும் விக்கிரக வழிபாட்டில் ஈடுபட்டதால் ‘மொட்டையிட்டுக்கொள்ள,’ வேண்டும் அதாவது அவமானப்பட வேண்டும். அவர்கள் கைதிகளாக நாடுகடத்தப்படுவதால், “கழுகைப்போல” முழு மொட்டையாய் இருக்கப் போகிறார்கள். ஆம், தலையில் சற்று மென்மையான இறகுகளுடைய கழுகு இனத்தைப்போல முற்றிலும் மொட்டையாய் இருக்கப் போகிறார்கள். ‘யாக்கோபின் ஜனங்களை நான் நிச்சயமாய்க் கூட்டுவேன்’ என யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். (மீகா 1:6, 16; 2:12) ஊழல்மிக்க தலைவர்கள், கடமைத் தவறிய தீர்க்கதரிசிகள் ஆகியோரின் நிமித்தம் எருசலேமுங்கூட “மண்மேடுகளாய்ப்போம்.” ஆனாலும், யெகோவா தம் மக்களைச் “சேர்ப்பார்.” ‘எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமிலிருந்து’ “இஸ்ரவேலை ஆளப்போகிறவர்” வருவார்.—மீகா 3:12; 4:12; 5:2.
இஸ்ரவேலரிடம் யெகோவா அநியாயமாக நடந்துகொண்டாரா? அவர் எதிர்பார்க்கிற காரியங்கள் பாரமானவையா? இல்லவே இல்லை. “நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, . . . தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை” அல்லாமல் வேறு எதையும் தம் வணக்கத்தாரிடம் அவர் கேட்பதில்லை. (மீகா 6:8) என்றாலும், மீகாவின் காலத்தில் வாழ்பவர்கள் மிகவும் பொல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ‘நல்லவன் முட்செடிக்கொத்தவனாயும் செம்மையானவன் நெரிஞ்சிலைப் பார்க்கிலும் கடுங்கூர்மையானவனாயும்’ மாறிவிடுகிறான்; இப்படிப்பட்டவர்கள் தங்களிடம் வருவோரைப் புண்படுத்துகிறார்கள், அவர்களுக்கு மன நோவுண்டாக்குகிறார்கள். ஆனால், தீர்க்கதரிசி இவ்வாறு கேட்கிறார்: “தேவரீருக்கு [“யெகோவாவுக்கு,” NW] ஒப்பான தேவன் யார்?” கடவுள் தமது மக்களுக்கு மீண்டும் இரக்கம் காட்டுவார்; அவர்களுடைய “பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.”—மீகா 7:4, 18, 19.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2:12—‘இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சேர்ப்பது’ பற்றிய தீர்க்கதரிசனம் எப்போது நிறைவேறியது? பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்களில் மீதியானோர் பொ.ச.மு. 537-ல் தாயகம் திரும்பியபோது இதன் முதல் நிறைவேற்றம் நடந்தேறியது. நவீன காலத்தில், ‘தேவனுடைய இஸ்ரவேலரிடத்தில்’ இது நிறைவேறுகிறது. (கலாத்தியர் 6:16) 1919 முதற்கொண்டு, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் “தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய்” சேர்க்கப்பட்டுள்ளார்கள். முக்கியமாக 1935 முதற்கொண்டு ‘வேறே ஆடுகளான’ ‘திரள் கூட்டத்தாரும்’ அவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளதால் அங்கே ‘ஜனத்திரளின் இரைச்சல் உண்டாகியிருக்கிறது.’ (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16) இந்தத் திரள்கூட்டத்தாரும் அவர்களோடு சேர்ந்து மெய் வணக்கத்தை மும்முரமாய் ஆதரிக்கிறார்கள்.
4:1-4—“கடைசி நாட்களில்” யெகோவா எப்படி ‘திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்கிறார்’ அதாவது காரியங்களைச் சரி செய்கிறார்? ‘திரளான ஜனங்கள்’ மற்றும் “பலத்த ஜாதி” ஆகிய சொற்றொடர்கள் தேசத்து மக்களையோ அரசியல் தலைவர்களையோ குறிப்பதில்லை. மாறாக, எல்லா தேசத்திலிருந்தும் யெகோவாவின் வணக்கத்தாராக ஆகியிருக்கும் தனி நபர்களைக் குறிக்கின்றன. யெகோவா அவர்களை நியாயந்தீர்த்து, ஆன்மீக ரீதியில் அவர்களைச் சரிசெய்கிறார்.
நமக்குப் பாடம்:
1:6, 9; 3:12; 5:2. பொ.ச.மு. 740-ல் மீகாவின் வாழ்நாள் காலத்திலேயே அசீரியர்களால் சமாரியா பாழாக்கப்பட்டது. (2 இராஜாக்கள் 17:5, 6) எசேக்கியா அரசாண்ட காலத்தில் அசீரியர்கள் எருசலேம் மட்டும் வந்தார்கள். (2 இராஜாக்கள் 18:13) பொ.ச.மு. 607-ல் எருசலேமை பாபிலோனியர் தீக்கொளுத்தினார்கள். (2 நாளாகமம் 36:19) தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டபடியே ‘எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமில்’ மேசியா பிறந்தார். (மத்தேயு 2:3-6) யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஒருகாலும் நிறைவேறாமல் போவதில்லை.
2:1, 2. கடவுளைச் சேவிப்பதாகச் சொல்லிக்கொண்டு, அதே சமயத்தில் செல்வத்திற்கு முதலிடம் கொடுத்து அவருடைய ‘ராஜ்யத்தையும் நீதியையும்’ பின்னுக்குத் தள்ளுவது எவ்வளவு ஆபத்தானது!—மத்தேயு 6:33; 1 தீமோத்தேயு 6:9, 10.
3:1-3, 5. தம் மக்களை முன்நின்று நடத்துபவர்கள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார்.
3:4. நம் ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிக்க வேண்டுமென நாம் விரும்பினால், பாவத்தை பழக்கமாய் செய்கிறவர்களாயோ இரட்டை வாழ்க்கை வாழ்பவர்களாயோ இருக்கக்கூடாது.
3:8. நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையில் நியாயத்தீர்ப்பின் செய்திகளை அறிவிப்பதும் உட்பட்டுள்ளது. யெகோவாவுடைய பரிசுத்த ஆவியின் பலத்தினால் மட்டுமே இவ்வேலையை நம்மால் செய்துமுடிக்க முடியும்.
5:5. இது மேசியாவைக் குறித்த தீர்க்கதரிசனமாகும். யெகோவாவுடைய மக்களை விரோதிகள் தாக்குகையில், ‘ஏழு [முழுமையைக் குறிக்கிறது] மேய்ப்பரும்,’ ‘எட்டு அதிபதிகளுமாகிய’ தகுதிவாய்ந்த அநேகர் அவருடைய மக்களை வழிநடத்துவதற்காக நியமிக்கப்படுவார்கள் என்பதை இத்தீர்க்கதரிசனம் நமக்கு உறுதிப்படுத்துகிறது.
5:7, 8. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இன்று அநேகருக்கு “கர்த்தராலே வருகிற பனியைப்போல,” அதாவது கடவுள் தந்த ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். ராஜ்ய செய்தியை அறிவிப்பதற்கு இவர்களை அவர் பயன்படுத்துவதே இதற்குக் காரணம். ‘வேறே ஆடுகளும்கூட’ பிரசங்க வேலையில் அபிஷேகம் செய்யப்பட்டோருக்கு ஆர்வத்துடன் தோள்கொடுப்பதன்மூலம் மக்கள் ஆன்மீக ரீதியில் புத்துணர்ச்சி அடைய உதவுகிறார்கள். (யோவான் 10:16) மற்றவர்கள் உண்மையான புத்துணர்ச்சியை அடைய உதவும் இந்த வேலையில் பங்கெடுப்பது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம் அல்லவா?
6:3, 4. நாம் யெகோவா தேவனைப் பின்பற்றி மற்றவர்களிடம் இரக்கமும் பரிவும் காட்ட வேண்டும். அவர்கள் ஒத்துப்போக முடியாதவர்களாகவோ கடவுளோடுள்ள பந்தத்தைக் குலைத்துப் போட்டவர்களாகவோ இருந்தாலும்சரி அப்படிப்பட்ட குணங்களை நாம் காட்ட வேண்டும்.
7:7. இந்தப் பொல்லாத உலகின் முடிவு காலத்திலே பிரச்சினைகளைச் சமாளிக்கையில் நாம் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. மாறாக, மீகாவைப்போல ‘தேவனுக்காகக் காத்திருக்கும்’ மனப்பான்மையை வெளிக்காட்டுவது அவசியம்.
7:18, 19. நம் தவறுகளை மன்னிக்க யெகோவா தயாராக இருப்பதுபோல, நாமும்கூட மற்றவர்கள் நமக்கு விரோதமாகச் செய்த தவறுகளை மன்னிக்க மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
தொடர்ந்து ‘யெகோவாவுடைய நாமத்தில் நடவுங்கள்’
கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராகப் போரிடுபவர்கள் ‘முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப் போவார்கள்.’ (ஒபதியா 10) என்றாலும், நாம் யெகோவாவின் எச்சரிப்புக்குச் செவிசாய்த்து ‘பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினால்’ யெகோவாவும் தம்முடைய கோபத்தைவிட்டுத் திரும்புவார். (யோனா 3:10) இந்தக் “கடைசி நாட்களில்” எல்லா பொய் மதங்களுக்கும் மேலாக உண்மை மதம் உயர்த்தப்பட்டிருக்கிறது; கீழ்ப்படிதலுள்ள மக்கள் அதனிடம் திரண்டு வருகிறார்கள். (மீகா 4:1; 2 தீமோத்தேயு 3:1) ஆகவே, ‘நம் தேவனாகிய கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடக்க’ நாம் தீர்மானமாய் இருப்போமாக.—மீகா 4:5.
ஒபதியா, யோனா, மீகா புத்தகங்கள் புகட்டும் பாடங்கள் எத்தனை மதிப்புமிக்கவை! 2,500-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன் அவை எழுதப்பட்டிருந்தாலும் அவற்றிலுள்ள செய்தி இன்றைக்கும்கூட ‘ஜீவனும் வல்லமையும் உள்ளதாய்’ இருக்கிறது.—எபிரெயர் 4:12.
[பக்கம் 13-ன் படம்]
ஏதோம் ‘முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப் போகும்’ என ஒபதியா தீர்க்கதரிசனம் உரைத்தார்
[பக்கம் 15-ன் படம்]
‘யெகோவாவுக்காகக் காத்திருக்கும்’ மனப்பான்மையை மீகா வெளிக்காட்டியதுபோல நீங்களும் காட்டலாம்
[பக்கம் 16-ன் படம்]
பிரசங்க வேலை பொன்னென போற்ற வேண்டிய கௌரவமான வேலை