சீத்தியர்கள்—மர்ம தேசத்து மக்கள்
கொள்ளைப் பொருட்கள் நிரப்பப்பட்ட பைகளை சேணத்தில் பூட்டி, புழுதி பறக்க குதிரைகளில் பாய்ந்து வந்து சேர்ந்தார்கள் இந்த நாடோடி மக்கள். ஐரோப்பிய ஆசிய தரிசு நிலத்தில் சுமார் பொ.ச.மு. 700 முதல் 300 வரை அந்த மர்ம தேசத்து மக்களின் ஆட்சியே கொடிகட்டி பறந்தது. அதற்குப் பிறகு அவர்கள் மறைந்து போனார்கள்—ஆனால் சரித்திரத்தில் தங்கள் கால் சுவடுகளைப் பதித்துவிட்டுத்தான். பைபிளில்கூட அவர்களைப் பற்றி சிறு குறிப்பு காணப்படுகிறது. அவர்கள்தான் சீத்தியர்கள்.
கிழக்கு ஐரோப்பாவில் கம்பீரமாக நிற்கும் கார்பேத்தியன் மலைகளிலிருந்து தற்போதைய தென் கிழக்கு ரஷ்யா வரை பரந்துகிடக்கும் புல் வெளிகளில் பல நூற்றாண்டுகளாக நாடோடி மக்களும் காட்டு குதிரைகளின் மந்தைகளுமே காணப்பட்டன. பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் சீன மன்னர் ஷுயியான் இராணுவ நடவடிக்கையில் இறங்கியபோது இவர்கள் மேற்கே இடம்பெயர ஆரம்பித்தனர். அங்கே சென்று, காகஸஸ் மற்றும் கருங்கடலுக்கு வடக்கே இருந்த பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸமிரியர்களோடு சண்டையிட்டு அவர்களை விரட்டினார்கள் சீத்தியர்கள்.
செல்வத்தைத் தேடிச்சென்ற சீத்தியர்கள் அசீரியாவின் தலைநகரமாகிய நினிவேயை கைப்பற்றி சூறையாடினார்கள். பிறகு அவர்கள் அசீரியாவோடு நட்புகொண்டு மேதியா, பாபிலோனியா, இன்னும் பிற தேசங்களுக்கு எதிரிகளாக மாறினார்கள். அவர்களுடைய தாக்குதல்கள் வட எகிப்து வரை சென்றன. வடகிழக்கு இஸ்ரவேலில் இருந்த பெத்சான் என்ற நகரம் பிற்காலத்தில் சீத்தோபாலீஸ் என அழைக்கப்பட்டதால் கொஞ்ச காலத்திற்கு சீத்தியர்கள் இங்கே தங்கியிருந்தனர் என்பது தெரிகிறது.—1 சாமுவேல் 31:11, 12.
கடைசியாக, நவீன நாளைய ருமேனியா, மால்டோவா, உக்ரேன், தெற்கு ரஷ்யா ஆகியவற்றின் தரிசு நிலங்களில் சீத்தியர்கள் குடியேறினர். இங்கே இவர்கள் கிரேக்கர்களுக்கும், தற்போதைய உக்ரேன் மற்றும் தெற்கு ரஷ்யாவில் தானியங்களை உற்பத்தி செய்தவர்களுக்கும் இடையே தரகர்களாக இருந்து அதிக செல்வந்தரானார்கள். தானியம், தேன், ரோமம், ஆடுமாடு ஆகியவற்றிற்கு பண்டமாற்றாக கிரேக்கரிடமிருந்து திராட்சரசம், ஜவுளி, ஆயுதங்கள், கலைப்பொருட்கள் ஆகியவற்றை சீத்தியர்கள் பெற்றுக்கொண்டனர். இப்படியாக நம்ப முடியாத அளவுக்கு அவர்கள் செல்வங்களைச் சேர்த்துக்கொண்டனர்.
பிரமிக்க வைக்கும் குதிரை வீரர்கள்
பாலைவனத்து மக்களுக்கு ஒட்டகம் என்றால் தரிசு நிலத்தில் தவழ்ந்த இந்த மாவீரர்களுக்கு குதிரைகள்தான் வாகனம். சீத்தியர்கள் மிகச் சிறந்த குதிரை வீரர்கள். இவர்கள்தான் சேணம், பாதங்களைத் தாங்கும் வளையம் ஆகியவற்றை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள். இவர்கள் குதிரை இறைச்சி சாப்பிட்டு குதிரைப் பாலை பருகினர். சொல்லப்போனால், குதிரையைத்தான் தகனபலியாகவும் செலுத்தினர். சீத்திய வீரன் மடிந்துபோகையில், அவனுடைய குதிரை கொல்லப்பட்டு சகல மரியாதையோடும் அடக்கம் செய்யப்பட்டது; அதோடு சேணமும் அலங்கார பொருட்களும் அடக்கம் செய்யப்பட்டன.
சீத்தியர்கள் மிகவும் கொடூர பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தனர் என சரித்திராசிரியர் ஹிராடட்டஸ் கூறினார். இவர்கள் எதிரிகளைக் கொன்று, அவர்களுடைய மண்டை ஓட்டை குடிப்பதற்கு கிண்ணமாக பயன்படுத்தினார்கள். இரும்பு வாள்கள், போர் கோடாலிகள், ஈட்டிகள், உடலைக் கிழித்த முள் தைக்கும் அம்புகள் ஆகியவற்றை வைத்து எதிரிகளை அழித்தார்கள்.
நித்திய வாழ்வுக்காக சகலத்தையும் பெற்ற கல்லறைகள்
சீத்தியர்கள் பில்லி சூனியம், மாயவித்தை ஆகியவற்றில் வழக்கமாக ஈடுபட்டார்கள். இவர்கள் நெருப்பையும் தெய்வ தாயையும் வணங்கினார்கள். (உபாகமம் 18:10-12) கல்லறையை மரித்தோர் வாழும் வீடாக கருதினர். இறந்த எஜமானரின் உபயோகத்திற்காக அடிமைகளும் விலங்குகளும் பலிசெலுத்தப்பட்டன. செல்வங்களும் வீட்டு வேலைக்காரர்களும் தலைவர்களோடு சேர்ந்து “அடுத்த உலகுக்கு” செல்வதாக நம்பினார்கள். ஓர் அரச கல்லறையில், வேலைக்காரர்கள் உடனடியாக எழுந்து தங்கள் பணிகளைத் தொடரும் வண்ணமாக எஜமானரின் காலடியில் ஐந்து பேர் கிடத்தப்பட்டிருந்தார்கள்.
அரசர்களை ஏராளமான காணிக்கைகளோடு புதைத்தார்கள். துக்கம் அனுசரிக்கும் காலத்தில் சீத்தியர்கள் தங்கள் இரத்தத்தைச் சிந்தி, முடி வெட்டிக்கொண்டார்கள். ஹிராடட்டஸ் இவ்வாறு எழுதினார்: “காதின் ஒரு பாகத்தை அவர்கள் அறுத்து, தலையை மொட்டை அடித்து, கைகளைச் சுற்றி வெட்டிக்கொண்டு, நெற்றியையும் மூக்கையும் கீறிக்கொண்டு, இடது கையில் அம்பினால் துளைபோட்டார்கள்.” இதற்கு நேர் எதிர்மாறாக, அதே காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்த இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்திருந்த சட்டம் இவ்வாறு சொன்னது: “செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக.”—லேவியராகமம் 19:28.
இந்த சீத்தியர்கள் ஆயிரக்கணக்கில் குர்கான்களை (கல்லறை மேடுகளை) விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த குர்கான்களில் காணப்படும் பல ஆபரணங்கள் சீத்தியர்களின் தினசரி வாழ்க்கையை சித்தரித்துக் காட்டுகின்றன. ருஷ்ய சார் மன்னர் மகா பீட்டர் என்பவர் 1715-ல் இந்தப் பொருட்களை சேகரிக்க ஆரம்பித்தார், பளபளப்பான இந்தப் பொருட்கள் இன்று ரஷ்யாவிலும் உக்ரேனிலும் இருக்கும் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. “விலங்கின கலை”யில் குதிரைகள், கழுகுகள், இராசாளிகள், பூனைகள், சிறுத்தைகள், கடம்பை மான்கள், மான்கள், கற்பனை உருவ பறவை ஜந்துக்கள், சிங்க ஜந்துக்கள் (இறக்கையுள்ள அல்லது இறக்கையில்லாத ஒரு விலங்கின் உடலில் மற்றொன்றின் தலையுடைய புராணங்களில் வரும் ஜந்துக்கள்) ஆகியவையும் காணப்படுகின்றன.
சீத்தியர்களும் பைபிளும்
சீத்தியர்களைப் பற்றி நேரடியாக ஒரேவொரு குறிப்பு மாத்திரமே பைபிளில் உண்டு. கொலோசெயர் 3:11-ல் (தமிழ் கத்தோலிக்க பைபிள்) இவ்வாறு நாம் வாசிக்கிறோம்: “கிரேக்கனென்றும் யூதனென்றும் இல்லை; விருத்தசேதனம் பெற்றவனென்றும் பெறாதவனென்றும் இல்லை; மிலேச்சன் என்றும், சீத்தியன் என்றும் இல்லை; அடிமையென்றும் உரிமைக் குடிமகனென்றும் இல்லை. கிறிஸ்துவே அனைவரிலும் அனைத்துமானவர்.” இந்த வார்த்தைகளை கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் எழுதியபோது, “சீத்தியன்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை எந்த குறிப்பிட்ட ஒரு தேசத்தையும் குறிக்கவில்லை, ஆனால் மிகவும் மோசமான காட்டுமிராண்டித்தனமான மக்களையே குறித்தது. யெகோவாவின் பரிசுத்த ஆவி அல்லது செயல் நடப்பிக்கும் சக்தியின் உதவியோடு இப்படிப்பட்ட நபர்களும்கூட தேவபக்தியுள்ள ஆள்தன்மையை தரித்துக்கொள்ள முடியும் என்பதையே அவர் இதில் வலியுறுத்தினார்.—கொலோசெயர் 3:9, 10.
எரேமியா 51:27-ல் காணப்படும் அஸ்கெனாஸ் என்ற பெயர் அசீரிய ஆஷ்கூஸேவுக்கு இணையானது, இது சீத்தியர்களைக் குறித்தது என புதைபொருள் நிபுணர்கள் சிலர் நம்புகின்றனர். பொ.ச.மு. ஏழாம் நூற்றாண்டில் இந்த மக்கள் மின்னை என்ற மக்களோடு சேர்ந்துகொண்டு அசீரியாவுக்கு எதிராக கலகம் செய்ததாக ஆப்புவடிவ எழுத்துப் பலகை ஒன்று குறிப்பிடுகிறது. எரேமியா தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பிப்பதற்கு முன், எகிப்துக்கு போகையிலும் அங்கிருந்து திரும்பி வருகையிலும் சீத்தியர்கள் யூத தேசத்தை அமைதியாகவே கடந்து வந்தார்கள். ஆகவே யூதாவுக்கு வடக்கே இருந்து தீங்கு வரும் என்று எரேமியா முன்னறிவிப்பதைக் கேட்ட அநேகர் இந்தத் தீர்க்கதரிசனத்தை சந்தேகித்திருக்கலாம்.—எரேமியா 1:13-15.
எரேமியா 50:42-ல் சீத்தியர்களைப் பற்றி ஒரு குறிப்பு வருவதாக பைபிள் அறிஞர்கள் சிலர் நினைக்கின்றனர். அது இவ்வாறு வாசிக்கிறது: “அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியர்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள்.” ஆனால் இந்த வார்த்தைகள் முக்கியமாக பொ.ச.மு. 539-ல் பாபிலோனைக் கைப்பற்றிய மேதிய பெர்சியர்களையே குறிக்கின்றன.
எசேக்கியேல் 38 மற்றும் 39 அதிகாரங்கள் குறிப்பிடும் ‘மாகோகு தேசம்’ சீத்திய மக்களை குறிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ‘மாகோகு தேசம்’ என்பது அடையாள அர்த்தமுள்ளது. அது பரலோகத்தில் நடந்த போருக்குப்பின் சாத்தானும் அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்ட பூமியின் சுற்றுப்புறத்தையே குறிக்கிறது.—வெளிப்படுத்துதல் 12:7-17.
நினிவேயின் வீழ்ச்சியை முன்னறிவிக்கும் நாகூமின் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தில் சீத்தியர்கள் உட்பட்டிருந்தார்கள். (நாகூம் 1:1, 14) கல்தேயரும் சீத்தியர்களும் மேதியர்களுமே பொ.ச.மு. 632-ல் நினிவேயை சூறையாடி அசீரிய பேரரசை வீழ்த்தினர்.
மர்மமான ஒரு வீழ்ச்சி
சீத்தியர்கள் மறைந்துவிட்டனர், ஆனால் ஏன்? “என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியாது என்பதே உண்மை” என்று உக்ரேனை சேர்ந்த பிரபல புதைபொருள் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். செல்வத்தின் மீது அவர்களுக்கு இருந்த மோகத்தின் காரணமாக பலம் குன்றி, பொ.ச.மு. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் ஆசியாவிலிருந்து வந்த சர்மேஷியர்களிடம் தோல்வியைத் தழுவினர் என்று சிலர் நம்புகின்றனர்.
வேறுசிலரோ சீத்தியர்கள் தங்களுக்குள்ளே சண்டைபோட்டுக் கொண்டதால் அழிந்துபோயினர் என்று நினைக்கின்றனர். இன்னும் சிலர் காகஸஸில் வாழும் ஆஸட்டியர்கள் மத்தியில் சீத்தியர்களில் மீந்திருந்த ஒரு சிறுபான்மையரை காண முடியும் என கூறுகின்றனர். எப்படியிருந்தாலும், கடந்த காலத்தில் வாழ்ந்த இந்த மர்ம தேசத்து மக்கள் மனித வரலாற்றில் முத்திரை பதித்து சென்றிருக்கிறார்கள், சீத்தியன் என்ற வார்த்தையே கொடூரம் என்று அர்த்தம் தரும் அளவுக்கு அதைச் செய்திருக்கிறார்கள்.
[பக்கம் 24-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பண்டைய நகரம்
. இன்றைய நகரம்
டான்யூப்
சீத்தியா இடம் பெயர்ந்து சென்ற மார்க்கம்
. கீவ்
நீப்பர்
நீஸ்டர்
கருங்கடல்
ஆஸட்டியா
காகஸஸ் மலைகள்
காஸ்பியன் கடல்
அசீரியா படையெடுப்பு மார்க்கங்கள்
நினிவே
டைக்ரிஸ்
மேதியா படையெடுப்பு மார்க்கங்கள்
மெசொப்பொத்தாமியா
பாபிலோனியா
பாபிலோன்
யூஃப்ரடீஸ்
பெர்சிய பேரரசு
சூசா
பெர்சிய வளைகுடா
பலஸ்தீனா
பெத்சான் (சீத்தோபாலீஸ்)
எகிப்து
நைல்
மத்தியதரைக்கடல்
கிரீஸ்
[பக்கம் 25-ன் படங்கள்]
சீத்தியர்கள் போர்ப் பிரியர்கள்
[படத்திற்கான நன்றி]
The State Hermitage Museum, St. Petersburg
[பக்கம் 26-ன் படங்கள்]
சீத்தியர்கள் தங்கள் பொருட்களை விற்று கிரேக்கரின் கலைப்பொருட்களை வாங்கி செல்வந்தர்களானார்கள்
[படத்திற்கான நன்றி]
Courtesy of the Ukraine Historic Treasures Museum, Kiev