யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
நாகூம், ஆபகூக், செப்பனியா புத்தகங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
இ ஸ்ரவேலின் பத்துக்கோத்திர ராஜ்யத்தின் தலைநகரான சமாரியாவை உலக வல்லரசான அசீரியா ஏற்கெனவே சூறையாடியிருந்தது. இந்த அசீரியா, யூதா தேசத்தாரையும்கூட பல காலமாக அச்சுறுத்தி வந்திருக்கிறது. யூதாவைச் சேர்ந்த நாகூம் தீர்க்கதரிசி அசீரியாவின் தலைநகரான நினிவேக்கு எதிராக கடவுள் சொன்ன செய்தியை அறிவிக்கிறார். அந்தச் செய்தியே நாகூம் புத்தகத்தில் உள்ளது; இது பொ.ச.மு. 632-க்கு முன்பு எழுதி முடிக்கப்பட்டது.
அடுத்து உதயமாகவிருக்கிற வல்லரசு பாபிலோன் பேரரசாகும்; சில காலங்களுக்கு கல்தேய ராஜாக்கள் இப்பேரரசை அரசாண்டிருக்கிறார்கள். யெகோவா தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக இந்த உலக வல்லரசை எப்படிப் பயன்படுத்துவார் என்பதையும் முடிவில் இதற்கு என்ன நேரிடும் என்பதையும் ஆபகூக் புத்தகம் முன்னறிவிக்கிறது. இப்புத்தகம் பொ.ச.மு. 628-ல் எழுதி முடிக்கப்பட்டிருக்கலாம்.
யூதாவைச் சேர்ந்த செப்பனியா தீர்க்கதரிசி, நாகூமுக்கும் ஆபகூக்குக்கும் முன்னரே தீர்க்கதரிசனம் உரைக்கிறார். பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்படுவதற்கு 40-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பே அவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார். யூதாவுக்கு அழிவின் செய்தியையும் நம்பிக்கையின் செய்தியையும் அவர் அறிவிக்கிறார். செப்பனியா புத்தகத்தில் பிற தேசங்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்புச் செய்திகளும் உள்ளன.
“இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ!”
“நீடிய சாந்தமும் மிகுந்த வல்லமையுமுள்ள” யெகோவா தேவன் ‘நினிவேயின் பாரத்தை’ அதாவது அதற்கு எதிரான நியாயத்தீர்ப்புச் செய்தியை அறிவிக்கிறார். தம்மிடத்தில் அடைக்கலம் புகுபவர்களுக்கு ‘இக்கட்டு நாளிலே அரணான கோட்டையாக’ யெகோவா திகழ்கிறார்; என்றாலும், நினிவே அழிவிலிருந்து தப்பாது.—நாகூம் 1:1, 3, 7.
‘கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவார்.’ என்றாலும், ‘சிங்கம் பீறிப்போடுவதை’போல கடவுளுடைய மக்களை அசீரியர் திகிலடையச் செய்துள்ளனர். யெகோவாவோ, நினிவேயின் ‘[போர்] இரதங்களைப் புகையெழும்ப எரித்துப்போடுவார்; பட்டயம் அதன் பாலசிங்கங்களைப் பட்சிக்கும்.’ (நாகூம் 2:2, 12, 13) ‘இரத்தப்பழிகளின் நகரத்திற்கு [நினிவேக்கு] ஐயோ!’ ‘[அந்நகரைப் பற்றிய] செய்தியைக் கேட்பவர் யாவரும் கைகொட்டி’ மகிழ்வார்கள்.—நாகூம் 3:1, 19.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:9—நினிவேயை ‘சர்வசங்காரம் பண்ணுவதால்’ யூதாவுக்கு என்ன பலன் கிடைக்கும்? அசீரியா இனி யூதாவுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதே அதற்குக் கிடைக்கும் பலன்; “இடுக்கம் மறுபடியும் உண்டாகாது.” நினிவே சுவடு தெரியாமல் மறைந்துவிட்டதுபோல் நாகூம் இவ்வாறு எழுதுகிறார்: “இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை ஆசரி.”—நாகூம் 1:15.
2:6—திறக்கப்பட்ட “ஆறுகளின் மதகுகள்” எவை? டைக்ரிஸ் ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக நினிவேயின் மதில் சுவரில் ஏற்பட்ட திறப்புகளையே இந்த மதகுகள் அர்த்தப்படுத்துகின்றன. பொ.ச.மு. 632-ல், நினிவேக்கு எதிராக பாபிலோனியரும் மேதியரும் கூட்டாக வந்தபோது, அதன் மக்கள் பெரிதாகப் பீதியடையவில்லை. சுற்றிலும் உயர்ந்து நிற்கும் மதில்களுக்குள் பத்திரமாய் இருப்பதாகவும் அந்நகருக்குள் எவராலும் நுழையமுடியாது என்பதாகவும் கருதினார்கள். என்றாலும், கன மழை காரணமாக டைக்ரிஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் “நகரத்தின் ஒரு பகுதி வெள்ளக்காடானது, நகரத்தின் மதிலும் சற்று தூரத்திற்கு இடிந்து விழுந்தது” என்று சரித்திராசிரியர் டையடோரஸ் குறிப்பிடுகிறார். இவ்வாறு ஆற்றின் மதகுகள் திறந்தன; முன்னறிவிக்கப்பட்ட விதமாக, காய்ந்த சருகுகள் நெருப்பில் எரிந்துபோவதுபோல நினிவே நொடிப்பொழுதில் கைப்பற்றப்பட்டது.—நாகூம் 1:8-10.
3:4—நினிவே ஒரு வேசியைப்போல் இருந்தது எவ்வாறு? நினிவே பிற தேசத்தாரை வஞ்சித்தது; எப்படியெனில் அவற்றுடன் கூட்டுச் சேர்ந்துக்கொள்வதாயும் அவற்றிற்கு உதவுவதாயும் வாக்குக் கொடுத்துவிட்டு அந்த வாக்கைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக அவற்றை ஒடுக்கவே செய்தது. உதாரணமாக, சீரியரும் இஸ்ரவேலரும் இணைந்து சதித்திட்டம் தீட்டியபோது யூத ராஜாவான ஆகாசுக்கு அசீரியா கைகொடுத்தது. என்றாலும், பிற்பாடு ‘அசீரியாவின் ராஜா அவரிடத்தில் [ஆகாசிடத்தில்] வந்து, அவரை நெருக்கினான்.’—2 நாளாகமம் 28:20.
நமக்குப் பாடம்:
1:2-6. தமக்கு முழுமையான பக்தியைக் காட்டாத விரோதிகளை யெகோவா பழிவாங்குவது, தம்முடைய வணக்கத்தார் தமக்கு மட்டுமே முழுமையான பக்தியைக் காட்ட வேண்டுமென அவர் எதிர்பார்ப்பதைக் காண்பிக்கிறது.—யாத்திராகமம் 20:5.
1:10. நினிவேயைச் சுற்றி நூற்றுக்கணக்கான அரண்களைக் கொண்ட உயர்ந்தோங்கிய மதில்கள் இருந்தன; அப்படியிருந்தும் அந்நகருக்கு எதிராக யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறுவதை அவற்றால் தடுக்க முடியவில்லை. இன்றுள்ள யெகோவாவின் மக்களுடைய விரோதிகளும்கூட கடவுளுடைய தண்டனைத்தீர்ப்பிலிருந்து தப்பிக்கவே முடியாது.—நீதிமொழிகள் 2:22; தானியேல் 2:44.
‘நீதிமான் பிழைப்பான்’
ஆபகூக் புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்களில் தீர்க்கதரிசிக்கும் யெகோவா தேவனுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. யூதாவில் நடக்கிற காரியங்களைப் பார்த்து நொந்து போயிருக்கும் ஆபகூக் தீர்க்கதரிசி கடவுளிடம் இவ்வாறு கேட்கிறார்: “நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன?” அதற்கு மறுமொழியாக யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்.” ஆனால், “துரோகிகளை” பயன்படுத்தி யெகோவா யூதாவுக்குத் தண்டனை வழங்கப் போகிறார் என்பதை அறிந்து ஆபகூக் அதிர்ச்சி அடைகிறார். (ஆபகூக் 1:3, 6, 13) நீதிமான்கள் தொடர்ந்து வாழ்வார்கள் என்றும் விரோதிகளோ தண்டனையிலிருந்து தப்பிக்க மாட்டார்கள் என்றும் ஆபகூக்கிற்கு உறுதி அளிக்கப்படுகிறது. பகைவரான கல்தேயருக்கு வரவிருக்கும் ஐந்து இன்னல்களையும் ஆபகூக் பதிவு செய்கிறார்.—ஆபகூக் 2:4.
இரக்கம் காட்டும்படியான ஜெபத்தை ‘விண்ணப்பப் பாடலாக’ அதாவது புலம்பலாக ஆபகூக் பாடுகிறார். உதாரணமாக, கடந்த காலத்தில் சிவந்த சமுத்திரத்திலும் வனாந்தரத்திலும் எரிகோவிலும் யெகோவா செய்த வல்லமைமிக்க செயல்களை அதில் அவர் குறிப்பிடுகிறார். அர்மகெதோனில் யெகோவா கடும் கோபத்தோடே வரும்போது துஷ்டர் அழிக்கப்படுவார்கள் என்பதையும் தீர்க்கதரிசி முன்னறிவிக்கிறார். அந்த ஜெபம் பின்வரும் வார்த்தைகளோடு முடிவடைகிறது: “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான் கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.”—ஆபகூக் 3:1, 19.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:5, 6—எருசலேமுக்கு விரோதமாய் கல்தேயர் எழும்புவது யூதர்களுக்கு ஏன் நம்ப முடியாததாய் இருந்திருக்கலாம்? ஆபகூக் தீர்க்கதரிசனம் உரைக்கத் துவங்கிய சமயத்தில், யூதாவை எகிப்து ஆட்டிப்படைத்து வந்தது. (2 இராஜாக்கள் 23:29, 30, 34) அப்போது, பாபிலோனியர்களின் ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்திருந்தபோதிலும், அவர்களுடைய படைவீரர்கள் பார்வோன் நேகோவை இன்னும் முறியடித்திருக்கவில்லை. (எரேமியா 46:2) அதுமட்டுமல்ல, யெகோவாவின் ஆலயம் எருசலேமில் இருந்தது; தாவீதின் பரம்பரையில் வந்த ராஜாக்கள் அங்கே தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தார்கள். அப்போதிருந்த யூதர்களால் கடவுளின் ‘கிரியையை’ அதாவது, கல்தேயர்களைக் கொண்டு எருசலேமை அவர் அழிப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாதிருந்தது. ஆபகூக் சொன்ன விஷயங்கள் அவர்களுக்கு நம்பமுடியாததாக இருந்தபோதிலும், எருசலேமை பாபிலோனியர் அழிப்பதைப் பற்றிய தரிசனம் பொ.ச.மு. 607-ல் ‘நிறைவேறியது.’—ஆபகூக் 2:3, பொது மொழிபெயர்ப்பு.
2:5—இங்கு “அவன்” என சொல்லப்பட்டிருப்பது யாரைக் குறிக்கிறது, அவன் ஏன் ‘திருப்தியடைவதில்லை’? “அவன்” என இங்குச் சொல்லப்பட்டிருப்பது ஒரு தொகுதியாக பாபிலோனியரைக் குறிக்கிறது. இவர்கள் பிற தேசங்களைக் கைப்பற்றுவதற்காக தங்களுடைய ராணுவ பலத்தைப் பயன்படுத்தினார்கள். வெற்றியில் மிதந்த அவன் மதுபானத்தினால் மதிமயங்கினவனைப்போல் இருந்தான். என்றாலும், சகல தேசங்களையும் தன் வசமாகச் சேர்த்துக்கொள்வதில் அவன் வெற்றிபெற மாட்டான். ஏனெனில், யெகோவா மேதியர்களையும் பெர்சியர்களையும் பயன்படுத்தி அவனை வீழ்த்துவார். இன்று ‘அவன்’ என்பது ஒரு தொகுதியாக அரசியல் அதிகாரங்களைக் குறிக்கிறது. இவர்களும்கூட தன்னம்பிக்கை மற்றும் அகங்காரம் எனும் போதையில் மதிமயங்கி இருக்கிறார்கள். தங்களுடைய எல்லைகளை விரிவுபடுத்துவதில் அவர்களுடைய தாகம் இன்னும் தணிந்த பாடில்லை. ஆனாலும், ‘சகல ஜாதிகளையும் தங்கள் வசமாகச் சேர்த்துக்கொள்ள’ வேண்டுமென்ற இலக்கை அவர்கள் அடையப் போவதில்லை. கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே மனிதகுலத்தை ஒன்றுசேர்க்கும்.—மத்தேயு 6:9, 10.
நமக்குப் பாடம்:
1:1-4; 1:12–2:1. ஆபகூக் உள்ளப்பூர்வமாகக் கேட்ட கேள்விகளுக்கு யெகோவா பதிலளித்தார். தமது உண்மையுள்ள ஊழியர்களின் ஜெபங்களுக்கு மெய்க் கடவுள் செவிசாய்க்கிறார்.
2:1. ஆபகூக்கைப்போல நாமும் கவனமாயிருந்து, யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாய் ஈடுபட வேண்டும். யாரேனும் நம்மைக் ‘கண்டிக்கும்போது,’ அதாவது திருத்தும்போது நம்முடைய சிந்தையை அதற்கேற்ப மாற்றுவதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
2:3; 3:16. யெகோவாவின் நாளுக்காக நாம் விசுவாசத்தோடு காத்திருக்கையில், அவசரவுணர்வை இழந்துவிடாதிருப்போமாக.
2:4. வரவிருக்கும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளைத் தப்பிப்பிழைக்க நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.—எபிரெயர் 10:36-38.
2:6, 7, 9, 12, 15, 19. அநியாயமான லாபத்தின்மேல் பேராசை கொள்வோர், வன்முறையில் ஆர்வம் காட்டுவோர், ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவோர், விக்கிரகங்களை வழிபடுவோர் நாசமடையப்போவது உறுதி. இத்தகைய சுபாவங்களையும் பழக்கங்களையும் தவிர்ப்பதற்கு நாம் கவனமாயிருக்க வேண்டும்.
2:11. இந்த உலகில் நடக்கிற பொல்லாத காரியங்களை நாம் அம்பலப்படுத்தாமல் போனால், ‘கல் சுவரிலிருந்து கூப்பிடும்,’ அதாவது கூக்குரலிடும். அப்படியானால், ராஜ்ய செய்தியைத் தொடர்ந்து தைரியமாக அறிவிப்பது முக்கியம், அல்லவா?
3:6. யெகோவா தமது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகையில் எதுவுமே அவரைத் தடுத்து நிறுத்த முடியாது; பர்வதங்களையும் மலைகளையும்போல நிலையானதாய்த் தெரிகிற மனித அமைப்புகளாலும்கூட அவரைத் தடுத்த நிறுத்த முடியாது.
3:13. யெகோவா அர்மகெதோனில் யாரையும் கண்மூடித்தனமாக அழித்துப்போட மாட்டார் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. தமது உண்மையுள்ள ஊழியர்களை அவர் காப்பாற்றுவார்.
3:17-19. அர்மகெதோன் யுத்தத்தின்போதும் அதற்கு முன்பும் நமக்குப் பல நெருக்கடிகள் வரலாம். இருந்தாலும், கடவுளுக்கு நாம் சந்தோஷமாகத் தொடர்ந்து சேவை செய்கையில் அவர் நமக்கு “பெலன்” அளிப்பார் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்.
“கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது”
யூதாவில் திரும்பிய திக்கெல்லாம் மக்கள் பாகாலை வழிபடுகிறார்கள். தம் தீர்க்கதரிசி செப்பனியா மூலமாக யெகோவா இவ்வாறு கூறுகிறார்: ‘நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டுவேன்.’ “கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது” என செப்பனியா எச்சரிக்கிறார். (செப்பனியா 1:4, 7, 14) கடவுளின் சொல்படி நடப்பவர்கள் மட்டுமே அந்நாளில் ‘மறைக்கப்படுவார்கள்.’—செப்பனியா 2:3.
‘இடுக்கண் செய்கிற நகரத்திற்கு [எருசலேமுக்கு] ஐயோ!’ “நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்க . . . நான் தீர்மானம்பண்ணினேன்.” ஆனால் கடவுள் இவ்வாறு வாக்குக் கொடுக்கிறார்: “உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்.”—செப்பனியா 3:1, 8, 20.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2:13, 14—முற்றிலும் பாழாக்கப்பட்ட நினிவேயில் யாருடைய ‘சத்தம் பலகணிகளில் பிறக்கும்’? நினிவே, காட்டு மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் உறைவிடமாக மாறப்போவதால், அங்கு கேட்கப்படுகிற சத்தம் பறவையின் கீதமாய் இருக்கலாம். பாழாய் கிடக்கிற வீடுகளின் ஜன்னல் வழியாக கேட்கும் காற்றின் இரைச்சலாகவும் அது இருக்கலாம்.
3:9—“சுத்தமான பாஷை” என்பது என்ன, அது எவ்வாறு பேசப்படுகிறது? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் அவரைப்பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள சத்தியமே அது. பைபிள் போதனைகள் அனைத்தையும் அது உட்படுத்துகிறது. அந்தச் சத்தியத்தில் நம்பிக்கை வைப்பது, அதை மற்றவர்களுக்குச் சரியாகச் சொல்லிக்கொடுப்பது, கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக வாழ்வது ஆகியவற்றின்மூலம் நாம் அதைப் பேசுகிறோம்.
நமக்குப் பாடம்:
1:8. செப்பனியாவின் காலத்தில் வாழ்ந்த சிலர், ‘மறு தேசத்தாருடைய வஸ்திரத்தைத் தரித்துக்கொள்வதன்’மூலம் சுற்றுமுற்றுமிருந்த தேசத்தாருடன் நட்பு வைத்துக்கொள்ள விரும்பியதாகத் தெரிகிறது. இன்று யெகோவாவை வழிபடுவோர் இதுபோன்ற விஷயங்களில் இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவது எவ்வளவு முட்டாள்தனம்!
1:12; 3:5, 16. யெகோவா தமது நியாயத்தீர்ப்புகளை அறிவிப்பதற்காக தமது மக்களிடம் தீர்க்கதரிசிகளை அனுப்பிக்கொண்டே இருந்தார். அநேக யூதர்கள் திராட்சைரச தொட்டியின் அடியில் படிந்திருக்கும் வண்டலைப்போல தங்களுடைய வாழ்க்கைப் போக்கில் ஒன்றிப்போனவர்களாயும் கடவுளுடைய செய்தியை ஒருகாதில் கேட்டு மறுகாதில் விட்டுவிடுகிறவர்களாயும் இருந்தார்கள். அப்போதும்கூட யெகோவா இவ்வாறு அனுப்பிக்கொண்டே இருந்தார். யெகோவாவின் மகாநாள் நெருங்கி வருகையில், மக்களுடைய அக்கறையற்ற மனப்பான்மையினால் ‘நம் கைகளைத் தளர விடுவதற்கு’ பதிலாக ராஜ்ய செய்தியைத் தொடர்ந்து அறிவிப்பது அவசியம்.
2:3. யெகோவாவுடைய கோபத்தின் நாளில் அவர் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும். அவருடைய ஆதரவில் எப்போதும் இருக்க வேண்டுமானால், நாம் ‘அவரைத் தேட’ வேண்டும். அதற்காக, அவருடைய வார்த்தையாகிய பைபிளைக் கருத்தூன்றி படிக்க வேண்டும்; அவருடைய வழிநடத்துதலுக்காக ஜெபிக்க வேண்டும்; அவரிடம் நெருங்கி வர வேண்டும். ஒழுக்கசீலர்களாக வாழ்வதன்மூலம் அவருடைய ‘நீதியையும் தேட’ வேண்டும். அதோடு, பணிவையும் அடக்கத்தையும் காண்பிப்பதன்மூலம் ‘மனத்தாழ்மையையும் தேட’ வேண்டும்.
2:4-15; 3:1-5. பூர்வ எருசலேமுக்கும் சுற்றியிருந்த தேசத்தாருக்கும் சம்பவித்தது போலவே, யெகோவா தமது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் நாளில், கடவுளுடைய மக்களை ஒடுக்குகிற கிறிஸ்தவமண்டலத்திற்கும் மற்ற எல்லா தேசங்களுக்கும் சம்பவிக்கும். (வெளிப்படுத்துதல் 16:14, 16; 18:4-8) கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் செய்திகளை நாம் தொடர்ந்து தைரியமாக அறிவிக்க வேண்டும்.
3:8, 9. யெகோவாவின் நாளுக்காக நாம் காத்திருக்கையில், ‘சுத்தமான பாஷையை’ பேசுவதன் மூலமும் ‘அவருடைய பெயரில் தொழுதுகொள்வதற்காக’ அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதன் மூலமும் தப்பிப்பிழைப்பதற்கு நம்மைத் தயார்படுத்துகிறோம். அதோடு, யெகோவாவின் மக்களுடன் சேர்ந்து “ஒருமனப்பட்டு” அவருக்குச் சேவை செய்கிறோம்; ‘ஸ்தோத்திர பலியையும்’ காணிக்கையாகச் செலுத்துகிறோம்.—எபிரெயர் 13:15.
அது “மிகவும் தீவிரித்து வருகிறது”
சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.” (சங்கீதம் 37:10) நாகூம் புத்தகத்தில் நினிவேயைப் பற்றியும் ஆபகூக் புத்தகத்தில் பாபிலோன் மற்றும் விசுவாசத்துரோக யூதாவைப் பற்றியும் முன்னறிவிக்கப்பட்டவற்றை நாம் சிந்தித்துப் பார்க்கும்போது சங்கீதக்காரனுடைய வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படாது. அப்படியானால், நாம் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்க வேண்டும்?
“கர்த்தருடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது” என செப்பனியா 1:14 கூறுகிறது. அந்நாளில் நம்மை எப்படி மறைத்துக்கொள்ளலாம் என்றும் தப்பிப்பிழைப்பதற்காக இப்போதே நம்மை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும் என்றும்கூட செப்பனியா புத்தகம் காண்பிக்கிறது. ஆம், ‘தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளது.’—எபிரெயர் 4:12.
[பக்கம் 8-ன் படங்கள்]
நினிவேயின் உயர்ந்தோங்கிய மதில்கள், நாகூம் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதைத் தடுக்கவில்லை
[படத்திற்கான நன்றி]
Randy Olson/National Geographic Image Collection