மீண்டும் நிலைநாட்டப்பட்ட யெகோவாவின் மக்கள் பூமி முழுவதிலும் அவரைத் துதிக்கிறார்கள்
‘ஜனங்களெல்லாரும் யெகோவாவுடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடும்படிக்கு . . . நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.’—செப்பனியா 3:9.
1. அழிவைப் பற்றிய செய்திகள் யூதாவின் மீதும் மற்ற தேசங்களின் மீதும் நிறைவேற காரணம் என்ன?
எப்பேர்ப்பட்ட வலிமையான நியாயத்தீர்ப்பு செய்திகளை அறிவிக்கும்படி செப்பனியாவை யெகோவா ஏவியிருந்தார்! இந்த அழிவின் செய்தி யூதா தேசத்தின் மீதும் அவளுடைய தலைநகரான எருசலேமின்மீதும் நிறைவேறின, ஏனென்றால் ஒரு தொகுதியாக தலைவர்களும் மக்களும் யெகோவாவின் சித்தத்தைச் செய்துகொண்டில்லை. சுற்றியிருந்த பெலிஸ்தியா, மோவாப், அம்மோன் போன்ற தேசங்களும்கூட கடவுளுடைய கோபாக்கினையை அனுபவிக்கும். ஏன்? ஏனென்றால் அவை பல நூற்றாண்டுகளாக யெகோவாவின் மக்களை மிகவும் கொடூரமாக எதிர்த்து வந்தன. அதே காரணத்துக்காக அசீரிய உலக வல்லரசும்கூட அழிக்கப்படும், மீண்டும் அது ஒருபோதும் தலைதூக்காது.
2. செப்பனியா 3:8-லுள்ள வார்த்தைகள் யாரிடம் சொல்லப்பட்டிருக்க வேண்டும்?
2 ஆனால் பண்டைய யூதாவில் சரியான மனச்சாய்வுடன் சிலர் இருந்தார்கள். பொல்லாதவர்கள் மீது கடவுளின் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படுவதற்காக இவர்கள் காத்திருந்தார்கள். இவர்களிடம்தான் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டன: ‘நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம் பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.’—செப்பனியா 3:8.
‘சுத்தமான பாஷை’—யாருக்கு?
3. ஏவுதலால் செப்பனியா உரைத்த நம்பிக்கையின் செய்தி என்ன?
3 ஆம், யெகோவா கொண்டுவர இருந்த அழிவின் செய்தியை செப்பனியா அறிவித்தார். ஆனால் தீர்க்கதரிசி அருமையான ஒரு நம்பிக்கையின் செய்தியையும் சொல்வதற்கு ஏவப்பட்டார். இந்தச் செய்தி யெகோவாவுக்கு உண்மையுடன் நிலைத்திருந்த மக்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும். செப்பனியா 3:9-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, யெகோவா இவ்வாறு கூறினார்: ‘ஜனங்களெல்லாரும் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு [“தோளோடு தோள் நின்று,” NW] அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.’
4, 5. (அ) அநீதிமான்களுக்கு என்ன நேரிடும்? (ஆ) இதனால் நன்மையடையப் போவது யார், ஏன்?
4 சுத்தமான பாஷை ஒரு ஜனத்துக்கு கொடுக்கப்படாது. அவர்களை கவனத்திற்கொண்டு, தீர்க்கதரிசனம் இவ்வாறு சொல்கிறது: “நான் உன் பெருமையைக் குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்.” (செப்பனியா 3:11) ஆகவே கடவுளுடைய சட்டங்களை அவமதித்து அநீதியான காரியங்களைச் செய்த பெருமைக்காரர்கள் நீக்கப்படுவார்கள். இதனால் நன்மையடையப் போவது யார்? செப்பனியா 3:12, 13 இவ்வாறு கூறுகிறது: ‘உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்; அவர்கள் யெகோவாவுடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள். இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ்செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சக நாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை; அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக்கொள்வார்கள்.’
5 பண்டைய யூதாவில் உண்மையோடு இருந்த மீதிப்பேர் நன்மையடையவிருந்தார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் இந்த வார்த்தைகளின்படி செய்திருந்தார்கள்: ‘தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, யெகோவாவுடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.’—செப்பனியா 2:3.
6. செப்பனியா தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றத்தில் என்ன நடந்தது?
6 செப்பனியா தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றத்தில், பொ.ச.மு. 607-ல் பாபிலோனிய உலக வல்லரசு உண்மையற்ற யூதாவை வீழ்த்துவதற்கும் அவளுடைய ஜனத்தை கைதிகளாக கொண்டு செல்வதற்கும் அனுமதித்து கடவுள் அவளை தண்டித்தார். எரேமியா உட்பட சிலர் தப்பினர், மற்றவர்கள் சிறைப்பட்ட நிலையிலும் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்தனர். பொ.ச.மு. 539-ல் கோரேசு அரசனின் தலைமையில் வந்த மேதிய பெர்சியர்கள் பாபிலோனை முறியடித்தனர். இரண்டு வருடங்களுக்குப்பின், யூத மீதியானோர் தாயகம் திரும்பும்படி கோரேசு கட்டளை பிறப்பித்தார். அதன் பிறகு எருசலேம் ஆலயம் திரும்பக் கட்டப்பட்டது, ஆசாரியர்கள் மக்களுக்கு நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் நிலைக்கு மறுபடியும் வந்தார்கள். (மல்கியா 2:7) இவ்வாறாக, நிலைநாட்டப்பட்ட மீதியானோர் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருந்தவரை யெகோவா அவர்களை செழிக்கச் செய்தார்.
7, 8. செப்பனியா 3:14-17-லுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகள் யாருக்கு பொருந்தின, நீங்கள் ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்?
7 திரும்ப நிலைநாட்டப்பட்டு சந்தோஷத்தை அனுபவிக்கப் போகிறவர்களைக் குறித்து செப்பனியா இவ்வாறு முன்னறிவித்திருந்தார்: ‘சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப் பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. யெகோவா உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய யெகோவா உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய். அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும். உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.’—செப்பனியா 3:14-17.
8 இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தங்களுடைய முற்பிதாக்களின் தேசத்துக்கு திரும்ப கொண்டுவரப்பட்டிருந்த மீதியானோரை குறித்து சொல்லப்பட்டன. செப்பனியா 3:18-20-லிருந்து இது தெளிவாக தெரிகிறது. அங்கே நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘உன் சபையின் மனுஷராயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாய்க் கூட்டிக்கொள்ளுவேன். இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அனுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன். அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.’
9. யூதாவின் சம்பந்தமாக யெகோவா எவ்வாறு தமக்கு ஒரு பெயரை உண்டுபண்ணினார்?
9 கடவுளுடைய மக்களின் சத்துருக்களாக சுற்றியிருந்த தேசத்தார் எவ்வளவு அதிர்ச்சியடைந்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்! யூதாவின் குடிகள் பாபிலோன் வல்லரசால் சிறைபிடிக்கப்பட்டிருந்தார்கள், ஆகவே இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையே இல்லை. அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய தேசமும் பாழாய் கிடந்தது. ஆனால், கடவுளுடைய வல்லமையினால் அவர்கள் 70 ஆண்டுகளுக்குப்பின் தங்கள் தாயகத்தில் திரும்ப நிலைநாட்டப்பட்டார்கள். சத்துருக்களோ அழிவின் பாதையில் இப்போது இருந்தனர். உண்மையுள்ள மீதிபேரை திரும்ப கொண்டுவருவதன் மூலம் என்னே ஒரு பெயரை யெகோவா தமக்கு உண்டுபண்ணினார்! அவர்களை அவர் ‘சகல ஜனங்களுக்குள்ளும் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக’ வைத்தார். மீண்டும் அவர்கள் நிலைநாட்டப்பட்டதால் யெகோவாவுக்கும் அவருடைய பெயரைத் தாங்கியிருந்தவர்களுக்கும் எத்தனை புகழ்ச்சியாக இருந்தது!
யெகோவாவின் வணக்கம் உயர்த்தப்பட்டது
10, 11. திரும்ப நிலைநாட்டப்படுவதைக் குறித்த செப்பனியா தீர்க்கதரிசனத்தின் பெரிய நிறைவேற்றம் எப்போது நடக்கவிருந்தது, இது நமக்கு எப்படித் தெரியும்?
10 பொது சகாப்தம் முதலாம் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்து இஸ்ரவேலில் மீதியானோரை உண்மை வணக்கத்தில் கூட்டிச்சேர்த்தபோது மற்றொரு திரும்ப நிலைநாட்டப்படுதல் நடந்தேறியது. இன்னும் வரவிருந்த காரியத்துக்கு அது மாதிரியாக அமைந்தது. ஏனென்றால் பெரிய அளவில் திரும்ப நிலைநாட்டப்படுதல் இன்னும் எதிர்காலத்தில் நிகழவிருந்தது. மீகா தீர்க்கதரிசனம் இவ்வாறு முன்னுரைத்தது: ‘கடைசி நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.’—மீகா 4:1.
11 இது எப்போது சம்பவிக்கும்? தீர்க்கதரிசனம் கூறுகிற பிரகாரம் இது “கடைசி நாட்களில்” சம்பவிக்கும். ஆம், நாம் வாழும் இந்தக் ‘கடைசி நாட்களிலேயே’ சம்பவிக்கும். (2 தீமோத்தேயு 3:1) தற்போதுள்ள பொல்லாத காரிய ஒழுங்கு முடிவுக்கு வருவதற்கு முன்பாக, தேசங்கள் இன்னும் பொய்க் கடவுட்களை வணங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் இது நடக்கும். மீகா 4:5 இவ்வாறு சொல்கிறது: “சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்.” ஆனால் உண்மை வணக்கத்தார் என்ன செய்வார்கள்? மீகா தீர்க்கதரிசனம் பதிலளிக்கிறது: ‘நாங்களும் எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.’
12. இந்தக் கடைசி நாட்களில் உண்மை வணக்கம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
12 ஆகவே இந்தக் கடைசி நாட்களில் ‘யெகோவாவுடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கிறது.’ யெகோவாவின் உன்னதமான உண்மை வணக்கம் திரும்ப நிலைநாட்டப்பட்டுள்ளது, உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, எல்லா மதங்களுக்கும் மேலாக மிகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மீகா தீர்க்கதரிசனம் சொன்னது போலவே “எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவரு”கிறார்கள். உண்மை மதத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள் ‘யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்பார்கள்.’
13, 14. இந்த உலகம் எப்போது அதனுடைய “கடைசி நாட்களில்” பிரவேசித்தது, உண்மை வணக்கத்தின் சம்பந்தமாக அப்போது முதல் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது?
13 பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக நடக்கும் சம்பவங்கள் இந்த உலகம் 1914-ம் ஆண்டில் அதனுடைய “கடைசி நாட்களில்” பிரவேசித்துவிட்டது என்பதை நிரூபிக்கிறது. (மாற்கு 13:4-10) பரலோக நம்பிக்கையுடைய அபிஷேகம் பெற்ற உண்மையுள்ள மீதியானோரை யெகோவா உண்மை வணக்கத்தில் கூட்டிச்சேர்க்க ஆரம்பித்தார் என்பதை வரலாறு காட்டுகிறது. இதைத் தொடர்ந்து பூமியில் என்றுமாக வாழும் நம்பிக்கை கொண்டிருக்கும் “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” கூட்டிச் சேர்க்கப்படலானார்கள். இவர்கள் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” வருகிறவர்கள்.—வெளிப்படுத்துதல் 7:9.
14 முதல் உலகப் போர் முதற்கொண்டு, இந்நாள் வரையாகவும் யெகோவாவின் பெயரைத் தாங்கியுள்ள ஜனங்களின் வணக்கம் அவருடைய வழிநடத்துதலின்கீழ் தீவிரமாக முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. யெகோவாவின் வணக்கத்தார் முதல் உலகப் போருக்குப்பின் சில ஆயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்து இன்று சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளனர். இவர்கள் 235 தேசங்களில் சுமார் 91,000 சபைகளில் கூடிவருகிறார்கள். கடவுளை பகிரங்கமாக துதிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த ராஜ்ய அறிவிப்பாளர்கள் 100 கோடிக்கும் அதிகமான மணிநேரத்தை செலவழிக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளாகிய இவர்களே, இயேசுவின் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றுகிறவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”—மத்தேயு 24:14.
15. செப்பனியா 2:3 இப்போது எவ்வாறு நிறைவேறி வருகிறது?
15 செப்பனியா 3:17 இவ்வாறு கூறுகிறது: ‘உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்.’ எல்லாம் வல்ல கடவுளாக யெகோவா அவர்கள் “நடுவில்” இருப்பதால்தானே அவரது ஊழியர்கள் இந்தக் கடைசி நாட்களில் ஆவிக்குரிய செழுமையை அனுபவித்து வருகிறார்கள். இப்போதும் சரி, பொ.ச.மு. 537-ல் பண்டைய யூதா மீண்டும் நிலைநாட்டப்பட்டபோதும் சரி இதுவே உண்மை. ஆகவே ‘தேசத்திலுள்ள எல்லா சிறுமையானவர்களே, யெகோவாவைத் தேடுங்கள்’ என்று சொல்லும் செப்பனியா 2:3 எவ்வாறு இன்று பெரிய அளவில் நிறைவேறி வருகிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. பொ.ச.மு. 537-ல் “எல்லா” என்பது பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த யூத மீதியானோரை உட்படுத்தியது. இன்று அது பூமி முழுவதிலும் எல்லா தேசங்களிலிருந்தும் வரும் மனத்தாழ்மையுள்ள மக்களைக் குறிக்கிறது. இவர்கள் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும் ராஜ்ய செய்தியைக் கேட்டு ‘யெகோவாவின் ஆலயமாகிய பர்வதத்துக்கு’ திரண்டு வந்திருக்கிறார்கள்.
உண்மை வணக்கம் செழித்தோங்குகிறது
16. நவீன காலங்களில் யெகோவாவின் ஊழியர்களுடைய வளர்ச்சியையும் செழுமையையும் பார்க்கும் சத்துருக்கள் எப்படி பிரதிபலிக்கிறார்கள்?
16 பொ.ச.மு. 537-க்குப் பிறகு, கடவுளுடைய ஊழியர்கள் தங்கள் தாயகத்தில் உண்மை வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டிவிட்டதைப் பார்த்து சுற்றிலுமிருந்த அநேக தேசத்தார் மிகவும் ஆச்சரியப்பட்டு போனார்கள். ஆனாலும் ஒப்பிட்டுப் பார்க்கையில் அந்த நிலைநாட்டப்படுதல் சிறிய அளவில்தான் இருந்தது. நவீன காலங்களில் யெகோவாவின் ஊழியர்களுடைய அதிசயிக்கத்தக்க வளர்ச்சியையும் செழுமையையும் முன்னேற்றப் பாதையில் அவர்கள் செல்வதையும் பார்க்கும் சிலர்—கடவுளுடைய மக்களின் சத்துருக்கள்கூட—என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களால் கற்பனைசெய்து பார்க்க முடியுமா? ஜனங்கள் இயேசுவிடம் திரண்டு செல்வதைப் பார்த்த பரிசேயர்கள் நினைத்த விதமாகவே இந்தச் சத்துருக்களில் சிலரும் நினைக்கலாம். பரிசேயர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே.”—யோவான் 12:19.
17. யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஒரு எழுத்தாளர் என்ன சொன்னார், அவர்கள் எவ்வாறு அதிகரித்திருக்கிறார்கள்?
17 இவர்களும் நம்புகிறார்கள் என்ற ஆங்கில புத்தகத்தில் பேராசிரியர் சார்ல்ஸ் எஸ். பிரேடன் இவ்வாறு கூறியுள்ளார்: “யெகோவாவின் சாட்சிகள் சொல்லர்த்தமாகவே பூமி முழுக்க சாட்சி கொடுத்துவிட்டார்கள். யெகோவாவின் சாட்சிகளைப் போல உலகிலுள்ள வேறு எந்த ஒரு மத அமைப்பும் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பரப்புவதற்கு இந்தளவு ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் காட்டியது கிடையாது என்று உறுதியாக சொல்லலாம். இந்த இயக்கத்திலுள்ளவர்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே இருக்கும்.” அவர் எவ்வளவு சரியாக சொன்னார்! 50 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் இந்த வார்த்தைகளைக் கூறியபோது சுமார் 3,00,000 சாட்சிகள் மாத்திரமே உலகம் முழுவதிலும் பிரசங்கித்து வந்தார்கள். இன்று அதைவிட சுமார் 20 மடங்கு அதிகமான சாட்சிகள், அதாவது சுமார் 60 லட்சம் பேர் நற்செய்தியைப் பிரசங்கிப்பதைப் பார்த்தால் அவர் என்ன சொல்வார்?
18. சுத்தமான பாஷை என்பது என்ன, கடவுள் அதை யாருக்குக் கொடுத்திருக்கிறார்?
18 தம்முடைய தீர்க்கதரிசியின் மூலமாக கடவுள் இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: ‘ஜனங்களெல்லாரும் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.’ (செப்பனியா 3:9) இந்தக் கடைசி நாட்களில் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, முறிக்கவே முடியாத அன்பென்ற கட்டினால் ஐக்கியமாக, ஆம் “ஒருமனப்பட்டு” அவரை சேவிப்பவர்கள் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே. இவர்களுக்குத்தான் யெகோவா சுத்தமான பாஷையைக் கொடுத்திருக்கிறார். கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய உண்மையை சரியாக புரிந்துகொண்டிருப்பது இந்தச் சுத்தமான பாஷையில் உட்பட்டிருக்கிறது. யெகோவா மாத்திரமே அவருடைய பரிசுத்த ஆவியின் மூலமாக இந்தப் புரிந்துகொள்ளுதலை தருகிறார். (1 கொரிந்தியர் 2:10) யாருக்கு அவருடைய ஆவியைத் தந்திருக்கிறார்? ‘அரசராகிய அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கு’ மாத்திரமே. (அப்போஸ்தலர் 5:32, NW) யெகோவாவின் சாட்சிகள் மாத்திரமே அரசராகிய கடவுளுக்கு எல்லா காரியங்களிலும் கீழ்ப்படிந்திருக்க மனமுள்ளவர்களாக இருக்கின்றனர். அதன் காரணமாகவே அவர்கள் கடவுளுடைய ஆவியைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் யெகோவாவையும் அவருடைய மகத்தான நோக்கங்களையும் பற்றிய சத்தியமாகிய சுத்தமான பாஷையைப் பேசுகிறார்கள். பூமி முழுவதிலும் மாபெரும் அளவில் யெகோவாவைத் துதிக்க சுத்தமான பாஷையை பயன்படுத்தி வருகிறார்கள்.
19. சுத்தமான பாஷையைப் பேசுவதென்பது எதை உட்படுத்துகிறது?
19 சுத்தமான பாஷையை பேசுவதென்பது சத்தியத்தை விசுவாசிப்பதையும் போதிப்பதையும் மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை; கடவுளுடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் ஏற்றவாறு ஒருவர் நடந்துகொள்வதையும் உட்படுத்துகிறது. யெகோவாவைத் தேடுவதிலும் சுத்தமான பாஷையைப் பேசுவதிலும் அபிஷேகம் பெற்ற கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள். என்ன நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள்! அபிஷேகம் பெற்றவர்கள் 8,700-க்கும் குறைவாக ஆகிவிட்டபோதிலும் எண்ணிக்கையில் ஏறக்குறைய 60 லட்சமாக இருக்கும் மற்றவர்கள் யெகோவாவைத் தேடி சுத்தமான பாஷையை பேசுவதன் மூலம் இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுகிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் பெருகிவரும் திரள் கூட்டமான மக்களாக இருக்கிறார்கள், சகல தேசங்களிலிருந்தும் வருகிற இவர்கள் இயேசுவின் கிரய பலியில் விசுவாசத்தைக் காண்பிக்கிறார்கள். கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரங்களில் அவருக்கு பரிசுத்த சேவை செய்கிறார்கள். வெகு விரைவில் இந்த அநீதியான உலகின்மீது வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தை’ இவர்கள் தப்பிப்பிழைப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 14, 15.
20. உண்மையுள்ள அபிஷேகம் பெற்றவர்களுக்கும் திரள் கூட்டத்தாருக்கும் என்ன காத்திருக்கிறது?
20 கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகத்திற்குள் திரள் கூட்டத்தார் அழைத்துச் செல்லப்படுவார்கள். (2 பேதுரு 3:13) இயேசு கிறிஸ்துவும் அவரோடுகூட ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் இருக்கும்படி பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படும் அபிஷேகம் பெற்ற 1,44,000 பேரும் பூமியை ஆளும் புதிய அரசாங்கமாக இருப்பார்கள். (ரோமர் 8:16, 17; வெளிப்படுத்துதல் 7:4; 20:6) மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பவர்கள் பூமியை பரதீஸாக மாற்றுவதற்கு உழைப்பார்கள், கடவுள் கொடுத்த சுத்தமான பாஷையைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். முக்கியமாக இவர்களுக்கு இந்த வார்த்தைகள் பொருந்துகின்றன: ‘உன் பிள்ளைகளெல்லாரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்.’—ஏசாயா 54:13, 14.
வரலாற்றிலேயே மாபெரும் போதிக்கும் வேலை
21, 22. (அ) அப்போஸ்தலர் 24:15 காட்டுகிறபடி, சுத்தமான பாஷையை யாருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்? (ஆ) ராஜ்ய ஆட்சியின்கீழ் பூமியில் என்ன மாபெரும் போதிக்கும் வேலை நடைபெறும்?
21 புதிய உலகில் சுத்தமான பாஷையைக் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்படும் ஒரு பெரிய தொகுதியைப் பற்றி அப்போஸ்தலர் 24:15 இவ்வாறு சொல்கிறது: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்கள். கடந்த காலங்களில் யெகோவாவைப் பற்றி திருத்தமாக தெரிந்துகொள்ளாமலே கோடிக்கணக்கான ஆட்கள் வாழ்ந்து மரித்தும்விட்டிருக்கிறார்கள். வரிசை கிரமப்படி அவர்களை திரும்ப உயிருக்குக் கொண்டுவருவார். இப்படி உயிர்த்தெழுந்து வருகிறவர்களுக்கு சுத்தமான பாஷை கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
22 அந்த மாபெரும் போதிக்கும் வேலையில் பங்குகொள்வது எப்பேர்ப்பட்ட ஒரு பாக்கியம்! மனிதவர்க்க சரித்திரம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய கல்விபுகட்டும் வேலையாக அது இருக்கும். இவை அனைத்தும் ராஜ்ய வல்லமையில் வீற்றிருக்கும் கிறிஸ்து இயேசுவின் நன்மைபுரியும் ஆட்சியின்கீழ் செய்துமுடிக்கப்படும். இதன் விளைவாக மனிதவர்க்கம் ஏசாயா 11:9-ன் நிறைவேற்றத்தை இறுதியில் காணும். அது இவ்வாறு சொல்கிறது: ‘சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.’
23. யெகோவாவின் மக்களாக நாம் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள் என்று நீங்கள் ஏன் சொல்வீர்கள்?
23 யெகோவாவைப் பற்றிய அறிவு உண்மையில் பூமியை நிரப்பப்போகும் அந்த மகத்தான காலத்துக்காக இந்தக் கடைசி நாட்களில் நம்மை தயார்செய்து கொண்டிருப்பது எப்பேர்ப்பட்ட ஒரு பாக்கியம்! இப்போதேகூட கடவுளுடைய ஜனமாயிருந்து செப்பனியா 3:20-ல் பதிவு செய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளின் மகத்தான நிறைவேற்றத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதும் எப்பேர்ப்பட்ட ஒரு பாக்கியம்! அங்கே யெகோவா நமக்கு இவ்வாறு உறுதியளித்திருப்பதை நாம் காண்கிறோம்: “பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்.”
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• திரும்ப நிலைநாட்டப்படுதலைப் பற்றிய செப்பனியா தீர்க்கதரிசனத்துக்கு என்ன நிறைவேற்றங்கள் இருந்திருக்கின்றன?
• இந்தக் கடைசி நாட்களில் உண்மை வணக்கம் எவ்வாறு செழித்தோங்கியிருக்கிறது?
• புதிய உலகில் என்ன மாபெரும் போதிக்கும் வேலை நடைபெறும்?
[பக்கம் 25-ன் படம்]
யெகோவாவின் மக்கள் சுத்தமான வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக தங்கள் தாயகம் திரும்பினார்கள். இன்று இதற்கிருக்கும் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியுமா?
[பக்கம் 26-ன் படங்கள்]
‘சுத்தமான பாஷையை’ பேசுவதன் மூலம் யெகோவாவின் சாட்சிகள் மக்களுக்கு பைபிளின் ஆறுதலான செய்தியை சொல்லி வருகிறார்கள்