வேதவாக்கியங்கள் கற்பிக்கும் பாடங்கள்: செப்பனியா 1:1-3:20
யெகோவாவைத் தேடி அவரை முழு இருதயத்தோடு சேவியுங்கள்
விசுவாசதுரோக யூதாவைப் பாபிலோனியர் பாழாக்குவதற்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு, யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியாகிய செப்பனியா மூலம் இந்த அறிக்கையைக் கொடுத்தார்: “தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன்.” (1:1, 2) ஆனால் கடவுள் பாதுகாப்புக்கான வழியையும் தம்முடைய மக்களுக்குக் காண்பித்தார். (2:3; 3:9) இந்தக் காரியத்தில், “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்தை” எதிர்ப்படும் எல்லாருக்கும் செப்பனியா புத்தகம் மதிப்புவாய்ந்த பாடங்களைக் கொண்டிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 16:14.
யெகோவாவின் நாள் சமீபம்
யெகோவாவின் நாள் இவ்வளவு சமீபத்திலிருப்பதால், கடவுளிடமிருந்து விலகிவிட்டிருக்கும் எவரும் சீக்கிரமாக அவரிடம் திரும்பிவரவேண்டும். தேவன் “சங்காரம்பண்ணும்” ஆட்களில் “யெகோவாவை விட்டுப் பின்வாங்குகிறவர்கள்” இருப்பார்கள். அவர்கள் அவரை விட்டு போய்விட்டார்கள், கடவுளுடைய சித்தத்தைக் குறித்து இனிமேலும் அவர்களுக்கு அக்கறை இல்லை. என்னே ஆபத்தான ஒரு நிலை! அதை உடனடியாகத் திருத்திக்கொள்ளவேண்டும்.—செப்பனியா 1:3–11.
பொருள் செல்வம் யெகோவாவின் நாளில் பாதுகாப்பளிக்க முடியாது. யெகோவாவைச் சேவிப்பதாக உரிமை பாராட்டும் சிலர் பொருளாதார காரியங்களைத் தொடருவதில் சுறுசுறுப்பாக தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள், வசதியான நிலையை அணைத்துப் பிடித்துக்கொள்கிறார்கள். ஆனால் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாயிருக்கிறதே! “அந்த நாளில்” பொருள் சம்பந்தமான காரியங்கள் எந்தவித பாதுகாப்பையும் அளிக்காது.—செப்பனியா 1:12–18.
இரட்சிப்பு கூடிய காரியம்
யெகோவாவின் நாளில் மறைக்கப்படுவதற்கு, வேதவசனங்களின் மேலோட்டமான அறிவைக்காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது. “அவருடைய நியாயத்தை நடப்பித்த,” “சாந்தகுணமுள்ளவர்கள்” ‘யெகோவாவைத் தேடவும், நீதியைத் தேடவும், சாந்தத்தைத் தேடவும்’ புத்திச்சொல்லப்படுகிறார்கள். “கடைசி வரை நிலைநிற்பவனே” இரட்சிக்கப்படுவான்.—செப்பனியா 2:1–3; மத்தேயு 24:13.
யெகோவாவின் மக்களை இன்று ஒடுக்குகிற தேசங்கள் அழிவை அனுபவிக்கும். மோவாப், அம்மோன், அசீரியா மற்றும் யூதாவைச் சுற்றியிருந்த மற்ற தேசங்கள் கொண்டிருந்த அதே அனுபவத்தைக் கொண்டிருப்பார்கள். மகா பாபிலோனுக்கும் அழிவு காத்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 18:4–8) கடவுளுடைய நியாயத்தீர்ப்பை அறிவிப்பதில் நாம் தொடர்ந்து முன்னேறும்படியாக இது நம்மை எவ்வளவாக ஊக்குவிக்கிறது!—செப்பனியா 2:4–15.
திரும்ப நிலைநாட்டப்பட்ட ஒரு ஜனம்
தம்முடைய ஜனம் தப்பிப்பிழைப்பதற்காக யெகோவா அவர்களை இப்பொழுது ஆயத்தப்படுத்துகிறார். நீங்கள் பாபிலோனிய கருத்துக்களை விட்டுவிட்டு விலைமதிக்க முடியாத பைபிள் சத்தியம் என்ற “சுத்தமான பாஷையைப்” பேச ஆரம்பித்துவிட்டீர்களா? யெகோவாவுக்கு உங்களை ஒப்புக்கொடுப்பதன் மூலம் ‘யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்கிறீர்களா?’ அவருக்குக் “காணிக்கை” கொண்டுவரு”கிறீர்களா, அதாவது அவருடைய நாமத்தைத் துதிக்கும் “உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியைக்” கொண்டுவருகிறீர்களா? தப்பிப்பிழைப்பதற்கு நீங்கள் யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஜனத்தோடு “ஒருமனப்பட்டு” சேவிக்க வேண்டும்.—செப்பனியா 3:1–10; ரோமர் 10:13–15; எபிரெயர் 13:15.
இரட்சிப்படைய நாம் யெகோவாவைத் தேடி அவருடைய பரிசுத்த நாமத்தை உயர்த்த வேண்டும். யெகோவாவின் மக்களிடையே அகந்தை, அநீதி, பொய் ஆகியவற்றிற்கு இடமில்லை. (எபேசியர் 4:25–32) அவர் தம்முடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்தும்போது “சிறுமையும் எளிமையுமான”வர்கள் மட்டுமே இரட்சிப்படைவார்கள்.—செப்பனியா 3:11–20.
வேதவாக்கியங்கள் கற்பிக்கும் பாடங்கள்: ஆகாய் 1:1-2:23
ஆகாய் புத்தகம் நம்மை பொ.ச.மு. 520-க்குக் கொண்டுசெல்கிறது. யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக யூதரில் மீதியானோர் எருசலேமுக்குத் திரும்பி 17 ஆண்டுகள் கடந்தவிட்டது. (ஆகாய் 1:1) அது எல்லாரும் கடவுளுடைய வேலையில் தங்களுடைய சிந்தனையைச் செலுத்தவேண்டிய காலமாயிருந்தது. என்றபோதிலும், தம்முடைய ஜனத்துக்கு அவர்களுடைய உத்தரவாதத்தை நினைவுபடுத்துவதற்காக யெகோவா ஆகாய் தீர்க்கதரிசியை அனுப்பவேண்டியதாயிருந்தது. இதில் நமக்கு பாடங்கள் இருக்கின்றனவா?
யெகோவாவின் வேலையை முதலில் வையுங்கள்
பொருள் சம்பந்தமான அக்கறைகளை ஆவிக்குரிய கடமைகளுக்கு முன்னதாக ஒருபோதும் வைக்காதீர்கள். தங்களுடைய தாயகம் திரும்பிய யூதர்கள் பொருளாதார அநிச்சயங்கள், விரோதிக்கும் அண்டை நாட்டினர், போன்ற காரியங்களின் பேரில் கவலை கொள்வதற்குக் காரணம் இருந்தது. அவர்களுடைய செல்வச்செழிப்பான வாழ்க்கை நிலைகளைக் கவனிக்குமிடத்து, அவர்களுடைய அசட்டை மனப்பான்மைக்கு இவை காரணங்கள் அல்ல. ஆகாய் தீர்க்கதரிசியால் ஊக்குவிக்கப்பட்ட பின்புதானே அவர்கள் ஆலய வேலையில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அதுபோன்று இன்று, ‘நம் வழிகளைச் சிந்தித்துப்பார்க்க’ வேண்டும். கடவுளுடைய வேலையை முழு அளவில் ஆதரிக்கிறோமா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.—ஆகாய் 1:2–15.
யெகோவா தம்முடைய வேலையை முழு இருதயத்துடன் செய்கிறவர்களுடைய முயற்சிகளை ஆசீர்வதிக்கிறார். ஆலயத்தை முடிப்பதில் செருபாபேலின் வேலையையும் மற்ற யூதர்களின் வேலையையும் யெகோவா ஆசீர்வதிப்பார். அதன் மகிமை முன்னதாகக் கட்டப்பட்டிருந்த ஆலயத்தையும் மிஞ்சிவிடுவதாயிருக்கும். இன்று ராஜ்ய செய்திக்கு “ஒரு திரள் கூட்டம்” செவிசாய்க்கிறது, “ஜாதிகளால் விரும்பப்பட்டவை” யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்துக்குள் வருகின்றன, அவர் ‘தம்முடைய ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுகிறார்.’—ஆகாய் 2:1–9; வெளிப்படுத்துதல் 7:9.
முழு இருதயத்தோடு சேவை செய்வது அவசியம்
நாம் சுத்தமாகவும் நம்முடைய உள்நோக்கங்கள் தூய்மையாகவும், யெகோவாவை முழு இருதயத்துடன் சேவை செய்கிறவர்களாகவும் இருந்தால்தான் நம்முடைய வணக்கம் மதிப்புடையது. கடவுளுடைய வீட்டை அசட்டை செய்ததுதானே யூதர்களை அசுத்தமாக்கியது, ஆனால் ஆலய வேலையை ஆரம்பித்தவுடன் அவர் அவர்களை ஆசீர்வதிப்பார். எனவே, நாம் யெகோவாவின் ஆசீர்வாதத்தை அனுபவித்துக்களிக்க விரும்பினால், கவனிப்பு தேவைப்படும் எந்த காரியத்தையும் திருத்திக்கொண்டு, அவருடைய வேலையின் மீது சிந்தனைசெலுத்த வேண்டும். (எண்ணாகமம் 19:11–13-ஐ ஒப்பிடவும்.) கடவுள் ராஜ்யங்களைக் கவிழ்த்து வானங்களையும் பூமியையும் அசையப்பண்ணுவதற்காக நாம் காத்துக்கொண்டிருக்க, செருபாபேலுக்குப் படமாயிருக்கும் இயேசு கிறிஸ்துவை நாம் பின்பற்றி, யெகோவாவின் வேலையில் முழு இருதயத்துடன் பங்குபெறுவோமாக.—ஆகாய் 2:10–23. (w89 6⁄1)
[பக்கம் 30-ன் பெட்டி]
வேதவசனங்களை ஆராய்தல்
○ செப்பனியா 1:5—மில்காம் அநேகமாக மில்கோம், மோளேக், அல்லது மோளோக்காகத்தான் இருக்கவேண்டும். அது அம்மோனியரின் முக்கிய பொய்த் தெய்வமாகும். (1 இராஜாக்கள் 11:5, 7) மோளேக் வணக்கம் பிள்ளைகளைப் பலிசெலுத்தும் அருவருக்கத்தக்க பழக்கத்தை உட்படுத்தியது, அது நியாயப்பிரமாணத்தில் கண்டனம் செய்யப்பட்டது.—லேவியராகமம் 20:2–5; அப்போஸ்தலர் 7:42, 43.
○ செப்பனியா 2:14—முன்னறிவித்தபடி, பாழ்க்கடிப்புக்குள்ளான நினிவேயின் விழுந்துகிடந்த தூண்களும் அவற்றின் தலைநகர்களும் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் தங்கும் இடமாக ஆனது. பறவைகளும், அநேகமாய் வீசுகிற காற்றும் பாழான பலகணிகளில் ‘கூவின’. வாசல்களும் அரண்மனையின் உள்ளறைகளுங்கூட பாழாக்கப்பட்டன.
○ செப்பனியா 3:9—மனிதர் பேசும் ஒரு பொது மொழி ஐக்கியத்துக்கு உத்தரவாதமளிப்பதில்லை. இது ஒரே மொழி பேசும் மக்கள் புரியும் போர்களில் தெளிவாகத் தெரிகிறது. “சுத்தமான பாஷை” வேதப்பூர்வமான சத்தியமாகும், “ஆரோக்கியகரமான வார்த்தைகளின் மாதிரி”யாகும். (2 தீமோத்தேயு 1:13, தி.மொ.) அது அகந்தையைக் கடந்துவிடுகிறது, கடவுளை மகிமைப்படுத்துகிறது, அதைப் பேசும் அனைவரையும் ஐக்கியப்படுத்துகிறது.
○ ஆகாய் 1:6—யூதர்கள் யெகோவாவின் ஆலயத்தை அசட்டை செய்ததால் அவர்கள் அவருடைய ஆசீர்வாதத்தைக் கொண்டில்லை. எனவே அவர்கள் ஏராளமாக விதைத்தார்கள் ஆனால் கொஞ்சமாய் அறுவடை செய்தார்கள், தங்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய போதுமான உணவும் பானமும் குறைவுபட்டது. அவர்களுடைய குளிரைப் போக்க முடியாதளவுக்கு அவர்களுக்கு உடை அளவில் அல்லது தரத்தில் குறைவாயிருந்தது, சம்பாதிக்கிறவர்கள் பொத்தல்கள் நிறைந்த பணப்பையில் போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த யூதர்களைப் போல் இல்லாமல், நாம் தெய்வீக அக்கறைகளை ஒருபோதும் அசட்டை செய்யாதிருப்போமாக.—நீதிமொழிகள் 10:22; நெகேமியா 10:39.
○ ஆகாய் 2:9—சாலொமோன் கட்டிய “முந்தின” ஆலயம் 420 ஆண்டுகள் நின்றது, “பிந்தின ஆலயம்” 584 ஆண்டுகளுக்கு (பொ.ச.மு. 515–பொ.ச. 70) பயன்படுத்தப்பட்டது. எனவே இரண்டாவது ஆலயம் நீண்ட காலத்துக்கு இருந்தது. பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே அன்று யூதேயாவுக்கு அப்பாலிருந்தும் யூதர்களும் யூதமதத்திற்கு மாறியாவர்களும் கூடிவந்தது போன்று அதிகமான வணக்கத்தார் திரளாக வந்தனர். மேலும், மேசியாவாகிய இயேசு கிறிஸ்து “பிந்தின ஆலயத்”தில் போதித்தார். இந்த அம்சங்கள் அதற்கு மத சம்பந்தமாக மேன்மையான மகிமையைக் கொடுத்தது.