“உன் கைகளைத் தளரவிடாதே”
“உன் கைகளைத் தளரவிடாதே . . . உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்.”—செப்பனியா 3:16, 17.
1. செப்பனியாவின் தீர்க்கதரிசனத்தைக் குறித்து ஒரு பைபிள் கல்விமான் எதைக் குறிப்பிட்டார்?
செப்பனியாவின் தீர்க்கதரிசனம், பொ.ச.மு. ஏழாவது மற்றும் ஆறாவது நூற்றாண்டுகளில் நிகழ்ந்த அதன் முதல் நிறைவேற்றத்தைக் காட்டிலும் அதிகத்தை சுட்டிக்காண்பித்தது. செப்பனியாவைப் பற்றிய தன்னுடைய கருத்துரையில், பேராசிரியர் சி. எஃப். கைல் இவ்வாறு எழுதினார்: “செப்பனியாவின் தீர்க்கதரிசனம் . . . பாவங்களின் காரணமாக யூதாவின்மீதும், யெகோவாவின் ஜனங்களின்மீது பகைமையைக் காண்பித்ததன் காரணமாக உலக தேசங்களின்மீதும், வரவிருந்த நியாயத்தீர்ப்பு எதிலிருந்து எழும்புகிறதோ அந்த முழு உலகத்தின்மீதான சர்வலோக நியாயத்தீர்ப்பின் அறிவிப்போடு ஆரம்பிப்பது மட்டுமல்லாமல், யெகோவாவின் மகா பயங்கரமான நாளைக் குறித்து எல்லா இடங்களிலும் குறிப்பான விதத்தில் சிந்திக்கிறது.”
2. செப்பனியாவின் நாளிலிருந்த நிலைமைகளுக்கும் இன்று கிறிஸ்தவமண்டலத்தில் காணப்படும் நிலைமைக்கும் என்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?
2 இன்று, செப்பனியாவின் நாளைக் காட்டிலும் அதிக விரிவான அளவில் தேசங்களை அழிவுக்கு கூட்டிச்சேர்ப்பதே யெகோவாவின் நியாயமான தீர்மானம் ஆகும். (செப்பனியா 3:8) கிறிஸ்தவர்கள் என்பதாக உரிமைபாராட்டிக்கொள்ளும் தேசங்கள் எவையோ அவை கடவுளுடைய பார்வையில் குறிப்பாக கண்டனத்திற்குரியவையாக இருக்கின்றன. யெகோவாவிற்கு உண்மையற்றதாயிருந்ததன் காரணமாக எருசலேம் எவ்வாறு கடுமையாக தண்டிக்கப்பட்டதோ, அதுபோலவே கிறிஸ்தவமண்டலம் தன்னுடைய தீயொழுக்கமுடைய வழிகளுக்காக கடவுளுக்கு பதில் சொல்லவேண்டும். செப்பனியாவின் நாளில் யூதாவிற்கும் எருசலேமிற்கும் எதிராக அறிவிக்கப்பட்ட தெய்வீக நியாயத்தீர்ப்புகள், சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்தவமண்டல உட்பிரிவுகளுக்கு இன்னும் அதிக வலிமையோடு பொருந்துகின்றன. கடவுளை அவமதிக்கும் தங்களுடைய கோட்பாடுகளால் தூய்மையான வணக்கத்தை மாசுபடுத்தியும் இருக்கின்றன; அந்தக் கோட்பாடுகளில் பெரும்பாலானவை புறஜாதி மூலத்தைக் கொண்டவை. தங்களுடைய ஆரோக்கியமுள்ள குமாரர்களில் லட்சக்கணக்கானோரை நவீன நாளைய பலிபீடமான யுத்தத்தில் பலியிட்டிருக்கின்றன. கூடுதலாக, பாகால் வணக்கத்தை நினைப்பூட்டுகிற ஜோதிடம், ஆவி சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்கள், சீர்கெட்ட பால்சம்பந்தமான ஒழுக்கக்கேடு ஆகியவற்றை மாதிரிப்படிவத்துக்குரிய எருசலேமின் குடிமக்கள் கிறிஸ்தவம் என்று சொல்கிறதோடு கலந்திருக்கின்றனர்.—செப்பனியா 1:4, 5, 6.
3. இன்று உள்ள அநேக உலகத் தலைவர்களைக் குறித்தும் அரசாங்கங்களைக் குறித்தும் என்ன சொல்லப்படலாம், செப்பனியா என்ன தீர்க்கதரிசனம் உரைத்தார்?
3 கிறிஸ்தவமண்டலத்தின் அரசியல் தலைவர்களில் அநேகர் சர்ச்சில் முதன்மைவாய்ந்தவர்களாக இருப்பதில் சந்தோஷமடைகின்றனர். ஆனால் யூதாவின் ‘பிரபுக்களைப்போல,’ அவர்களில் அநேகர் ‘கெர்ச்சிக்கிற சிங்கங்களைப்’ போலவும் கடும்பசியுள்ள ‘ஓநாய்களைப்’ போலவும் ஜனங்களை சுரண்டிப்பிழைக்கிறார்கள். (செப்பனியா 3:1-3) அப்படிப்பட்டவர்களின் அரசியல் பணியாட்கள் ‘கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிறார்கள்.’ (செப்பனியா 1:9) லஞ்சமும் ஊழலும் பரவலாக காணப்படுகிறது. கிறிஸ்தவமண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அரசாங்கங்களைப் பொறுத்தவரையில், அவற்றில் அதிகரித்துவரும் எண்ணிக்கை, சேனைகளின் யெகோவாவுடைய ஜனங்களாகிய அவருடைய சாட்சிகளுக்கு எதிராக ‘பெருமைபாராட்டுபவையாக’ இருக்கின்றன; அவர்களை ஒரு இழிவான ‘மதபேதமாகவும்’ நடத்துகின்றன. (செப்பனியா 2:8; அப்போஸ்தலர் 24:5, 14) அப்படிப்பட்ட எல்லா அரசியல் தலைவர்களையும் அவர்களை பின்பற்றுபவர்களையும் குறித்து செப்பனியா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.”—செப்பனியா 1:18.
‘கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுதல்’
4. யெகோவாவின் மகா நாளில் தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள் என்பதை எது காண்பிக்கிறது, ஆனால் அவர்கள் என்ன செய்யவேண்டும்?
4 பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டில் யூதாவின் குடிமக்கள் அனைவரும் அழிக்கப்படவில்லை. அதேவிதமாக, யெகோவாவின் மகா நாளில் தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை நோக்கி தம்முடைய தீர்க்கதரிசியாகிய செப்பனியாவின் மூலமாக யெகோவா இவ்வாறு குறிப்பிட்டார்: “கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும், தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள், நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.”—செப்பனியா 2:1, 3.
5. இந்த முடிவு காலத்தில், செப்பனியாவின் எச்சரிக்கைக்கு யார் முதலில் செவிகொடுத்தார்கள், யெகோவா எவ்வாறு அவர்களை பயன்படுத்தியிருக்கிறார்?
5 இந்த உலகத்தின் முடிவு காலத்தில், தீர்க்கதரிசன அழைப்பிற்கு முதலில் செவிகொடுத்தவர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலர்களில் மீதியானோராகிய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள். (ரோமர் 2:28, 29; 9:6; கலாத்தியர் 6:16) நீதியையும் மனத்தாழ்மையையும் தேடியதாலும் யெகோவாவின் நியாயங்களுக்கு மரியாதை காண்பித்ததாலும், பொய்மத உலக பேரரசான மகா பாபிலோனிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, 1919-ல் தெய்வீக தயவிற்குள் கொண்டுவரப்பட்டனர். அதிலிருந்து, குறிப்பாக 1922 முதற்கொண்டு, இந்த உண்மையுள்ள மீதியானோர் சர்ச்சுகளுக்கு எதிராகவும் கிறிஸ்தவமண்டலத்தின் பிரிவுகளுக்கு எதிராகவும் அரசியல் தேசங்களுக்கு எதிராகவும் யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை பயமின்றி அறிவித்துக்கொண்டு வந்திருக்கின்றனர்.
6. (அ) உண்மையுள்ள மீதியானோரைக் குறித்து செப்பனியா என்ன தீர்க்கதரிசனம் உரைத்தார்? (ஆ) இந்தத் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியிருக்கிறது?
6 இந்த உண்மையுள்ள மீதியானோரைக் குறித்து, செப்பனியா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள். இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ்செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை; அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக்கொள்வார்கள்.” (செப்பனியா 3:12, 13) இந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எப்போதுமே யெகோவாவின் நாமத்தை முன்னிலையில் வைத்திருக்கின்றனர், ஆனால் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை 1931-ல் ஏற்றுக்கொண்டது முதற்கொண்டு இதை விசேஷமாக செய்திருக்கின்றனர். (ஏசாயா 43:10-12) யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தின் விவாதத்தை சிறப்பித்துக்காண்பிப்பதன் மூலம், அவர்கள் அந்தத் தெய்வீகப் பெயரை கனப்படுத்தியிருக்கின்றனர், இது அவர்களுக்கு ஒரு அடைக்கலமாக நிரூபித்திருக்கிறது. (நீதிமொழிகள் 18:10) யெகோவா அவர்களை ஆவிக்குரிய விதத்தில் அபரிமிதமாக போஷித்திருக்கிறார், அவர்கள் ஆவிக்குரிய பரதீஸில் எந்த விதமான பயமுமின்றி வாழ்கின்றனர்.—செப்பனியா 3:16, 17.
‘சகல ஜனங்களுக்குள்ளும் கீர்த்தியும் புகழ்ச்சியும்’
7, 8. (அ) ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதியானோர் பேரில் என்ன கூடுதலான தீர்க்கதரிசனம் நிறைவேறியிருக்கிறது? (ஆ) லட்சக்கணக்கான ஜனங்கள் எதை அடையாளங்கண்டுள்ளனர், இந்தக் காரியத்தின் பேரில் உங்களுடைய உணர்ச்சிகள் என்ன?
7 யெகோவாவுடைய நாமத்தின் பேரிலும் அவருடைய வார்த்தையின் நீதியுள்ள நியமங்களின் பேரிலும் மீதியானோருக்கிருக்கும் ஆழ்ந்த பிணைப்பு கவனிக்கப்படாமல் போய்விடவில்லை. மீதியானோரின் நடத்தைக்கும் உலகத்தின் அரசியல் மற்றும் மத தலைமைத்துவத்தின் ஊழலுக்கும் மாய்மாலத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உண்மை மனங்கொண்ட ஜனங்கள் பார்த்திருக்கின்றனர். ‘[ஆவிக்குரிய] இஸ்ரவேலின் மீதியானோரை’ யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். அவருடைய நாமத்தை தாங்கும் சிலாக்கியத்தைக் கொடுத்து அவர்களை கனப்படுத்தியிருக்கிறார், மேலுமாக பூமியின் ஜனங்களுக்கிடையே அவர்கள் ஒரு நற்பெயரை கொண்டிருக்கும்படி செய்திருக்கிறார். செப்பனியா தீர்க்கதரிசனம் உரைத்தபடியே இது இருக்கிறது: “அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன்; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”—செப்பனியா 3:20.
8 யெகோவாவின் ஆசீர்வாதம் மீதியானோரின் மீதிருக்கிறது என்பதை, 1935 முதற்கொண்டு சொல்லர்த்தமாகவே லட்சக்கணக்கான ஜனங்கள் அடையாளங்கண்டுள்ளனர். “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடே கூடப் போவோம்” என்று சொல்லி, இந்த ஆவிக்குரிய யூதர்களை, அல்லது இஸ்ரவேலரை அவர்கள் மகிழ்ச்சியோடு பின்பற்றுகின்றனர். (சகரியா 8:23) “தன்னுடைய [பூமிக்குரிய] ஆஸ்திகள் எல்லாவற்றின் மேலும்” கிறிஸ்து நியமித்த ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனாக’ இந்த அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரை ‘வேறே ஆடுகள்’ அடையாளங்காண்கின்றனர். “ஏற்றவேளையிலே” அடிமை வகுப்பார் தயாரிக்கும் ஆவிக்குரிய உணவில் அவர்கள் நன்றியோடு பங்குகொள்கிறார்கள்.—யோவான் 10:16; மத்தேயு 24:45-47.
9. என்ன ‘பாஷையை’ லட்சக்கணக்கான ஜனங்கள் பேசுவதற்கு கற்றிருக்கின்றனர், எந்தப் பெரிய வேலையை அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரோடுகூட ‘ஒருமனப்பட்டு’ வேறே ஆடுகள் செய்துவருகின்றனர்?
9 மீதியானோரோடுகூட, லட்சக்கணக்கான வேறே ஆடுகளாகிய இவர்கள், ‘சுத்தமான பாஷைக்கு’a ஒத்திசைவாக வாழவும் பேசவும் கற்றுக்கொண்டு வருகின்றனர். செப்பனியாவின் மூலமாக யெகோவா தீர்க்கதரிசனம் உரைத்தார்: “அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.” (செப்பனியா 3:9) ஆம், “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் . . . சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக” பிரசங்கிக்கப்படும் இந்த அவசர வேலையில் ‘சிறுமந்தையாகிய’ அபிஷேகம் செய்யப்பட்ட அங்கத்தினர்களோடு “ஒருமனப்பட்டு” ஐக்கியமாக வேறே ஆடுகள் யெகோவாவை சேவித்துவருகின்றனர்.—லூக்கா 12:32; மத்தேயு 24:14.
“கர்த்தருடைய நாள் . . . வரும்”
10. எதைக் குறித்து அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் எப்போதுமே நம்பிக்கையுடன் இருந்திருக்கின்றனர், ஒரு வகுப்பாக எதைப் பார்க்கும்படி அவர்கள் உயிருடன் இருப்பர்?
10 அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் அப்போஸ்தலனாகிய பேதுருவின் ஏவப்பட்ட கூற்றை தொடர்ந்து மனதில் வைத்து வந்திருக்கின்றனர்: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்.” (2 பேதுரு 3:9, 10) நம்முடைய காலத்தில் யெகோவாவின் நாள் வருவதைக் குறித்து எந்த விதமான சந்தேகங்களையும் உண்மையுள்ள அடிமை வகுப்பாரின் அங்கத்தினர்கள் கொண்டிருக்கவில்லை. மாதிரிப்படிவத்திற்குரிய எருசலேமாகிய கிறிஸ்தவமண்டலத்திற்கும் மகா பாபிலோனின் எஞ்சியுள்ள தொகுதிக்கும் எதிராக யெகோவாவுடைய நியாயத்தீர்ப்புகளின் நிறைவேற்றத்தோடு அந்த மகா நாள் ஆரம்பமாகும்.—செப்பனியா 1:2-4, 6; வெளிப்படுத்துதல் 17:1, 5; 19:1, 2.
11, 12. (அ) மீதியானோரின் பேரில் செப்பனியாவுடைய தீர்க்கதரிசனத்தின் வேறெந்த பகுதி நிறைவேறியிருக்கிறது? (ஆ) “உன் கைகளைத் தளரவிடாதே” என்ற கட்டளைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் எவ்வாறு செவிகொடுத்திருக்கின்றனர்?
11 1919-ல் பொய் மத உலகப் பேரரசான மகா பாபிலோனின் ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்து விடுதலையாக்கப்பட்டதைக் குறித்து உண்மையுள்ள மீதியானோர் மகிழ்ச்சியடைகின்றனர். செப்பனியாவின் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தை அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள்: “சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய். அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும். உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்.”—செப்பனியா 3:14-17.
12 யெகோவா அவர்களை ஆதரிக்கிறார் என்ற திடநம்பிக்கையுடனும் அதற்கான ஏராளமான ஆதாரத்துடனும், தங்களுடைய தெய்வீக வேலையை நிறைவேற்றுவதில் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் பயமின்றி முன்னோக்கி சென்றிருக்கின்றனர். அவர்கள் ராஜ்யத்தினுடைய சுவிசேஷத்தை பிரசங்கித்து கிறிஸ்தவமண்டலத்திற்கு எதிராகவும், மகா பாபிலோனின் எஞ்சிய பகுதிக்கு எதிராகவும் சாத்தானின் இந்த முழு பொல்லாத ஒழுங்குமுறைக்கு எதிராகவும் யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை அறிவித்திருக்கின்றனர். எல்லா கஷ்ட நஷ்டங்களிலும், 1919 முதற்கொண்டு பல பத்தாண்டுகளாக, ‘பயப்படாதே . . . சீயோனே, உன் கைகளைத் தளரவிடாதே,’ என்ற தெய்வீக கட்டளைக்கு கீழ்ப்படிந்திருக்கிறார்கள். யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிற கோடிக்கணக்கான துண்டுப்பிரதிகள், பத்திரிகைகள், புத்தகங்கள், மற்றும் சிறிய புத்தகங்களை விநியோகிப்பதில் அவர்கள் சுறுசுறுப்பாய் இருந்துவந்திருக்கின்றனர். 1935 முதற்கொண்டு அவர்கள் பக்கமாக திரண்டு வந்திருக்கும் வேறே ஆடுகளுக்கு இவர்கள் விசுவாசத்தை ஏவும் ஒரு முன்மாதிரியாக இருந்துவந்திருக்கின்றனர்.
‘உன் கைகளைத் தளரவிடாதே’
13, 14. (அ) ஏன் சில யூதர்கள் யெகோவாவை சேவிப்பதிலிருந்து பின்வாங்கிப் போனார்கள், இது எவ்வாறு வெளிக்காட்டப்பட்டது? (ஆ) நாம் எதைச் செய்வது ஞானமற்ற ஒன்றாயிருக்கும், எந்த வேலையில் நம் கைகளை தளரவிடக்கூடாது?
13 யெகோவாவின் மகா நாளிற்காக நாம் ‘காத்துக்கொண்டிருக்கும்போது,’ செப்பனியாவின் தீர்க்கதரிசனத்திலிருந்து நடைமுறையான உதவியை நாம் எவ்வாறு பெற முடியும்? முதலாவதாக, யெகோவாவின் நாள் நெருங்கி வருவதைக் குறித்த சந்தேகங்களுக்கு இடங்கொடுத்ததன் காரணமாக யெகோவாவை பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கிப்போன செப்பனியாவின் நாளைச் சேர்ந்த யூதர்களைப்போல் ஆகிவிடாதபடிக்கு நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அப்படிப்பட்ட யூதர்கள் தங்களுடைய சந்தேகங்களை வெளியரங்கமாக வெளிக்காட்டவில்லை, ஆனால் யெகோவாவின் மகா நாள் அருகிலிருந்ததை அவர்கள் உண்மையிலேயே நம்பவில்லை என்பதை அவர்களுடைய போக்கு காண்பித்தது. யெகோவாவிற்கு காத்திருப்பதற்கு பதிலாக செல்வத்தை குவிப்பதில் அவர்கள் அக்கறை காண்பித்தனர்.—செப்பனியா 1:12, 13; 3:8.
14 நம்முடைய இருதயங்களில் சந்தேகங்களை வளரவிட அனுமதிப்பதற்கு இது காலமல்ல. யெகோவாவின் நாள் வருவதை நம்முடைய மனங்களிலும் இருதயங்களிலும் தள்ளிப்போடுவது மிகவும் ஞானமற்ற ஒன்றாயிருக்கும். (2 பேதுரு 3:1-4, 10) யெகோவாவை பின்பற்றுவதிலிருந்து பின்வாங்குவதை அல்லது அவருடைய சேவையில் ‘நம்முடைய கைகளை தளரவிடுவதை’ நாம் தவிர்க்கவேண்டும். ‘சுவிசேஷத்தை’ பிரசங்கிப்பதில் ‘சோம்பற்கையால் வேலைசெய்கிறவர்களாக’ இல்லாமலிருப்பதை இது உட்படுத்துகிறது.—நீதிமொழிகள் 10:4; மாற்கு 13:10.
அசட்டை மனப்பான்மையோடு போராடுவது
15. யெகோவாவின் சேவையில் நம்முடைய கைகளை தொய்யவிடும்படி எது செய்யக்கூடும், செப்பனியாவின் தீர்க்கதரிசனத்தில் இந்தப் பிரச்சினை எவ்வாறு முன்னறிவிக்கப்பட்டது?
15 இரண்டாவதாக, அசட்டை மனப்பான்மையின் தளர்வூட்டும் விளைவுகளைக் குறித்து நாம் விழிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும். அநேக மேற்கத்திய நாடுகளில், ஆவிக்குரிய காரியங்களின்பேரில் அக்கறையற்றத்தன்மை சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பவர்களுக்கிடையே ஏற்படும் உற்சாகமிழத்தலுக்கு ஒரு காரணமாயிருக்கக்கூடும். அப்படிப்பட்ட அசட்டை மனப்பான்மை செப்பனியாவின் நாளிலே இருந்தது. அவருடைய தீர்க்கதரிசியின் மூலமாக யெகோவா குறிப்பிட்டார்: “கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன்.” (செப்பனியா 1:12) கேம்பிரிஜ் பைபிள் ஃபார் ஸ்கூல்ஸ் அண்ட் காலேஜஸ் என்ற புத்தகத்தில் இந்தப் பத்தியைப் பற்றி எழுதுபவராய், ஏ. பி. டேவிட்சன் குறிப்பிட்டதாவது: “மனிதவர்க்கத்தின் விவகாரங்களில் கடவுளின் எந்த விதமான தலையீட்டைக் குறித்தும் அசட்டை மனப்பான்மையில் அல்லது சந்தேகத்தில்கூட வீழ்ந்திருக்கும்” ஜனங்களை இது குறிப்பிடுகிறது.
16. கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் அநேக அங்கத்தினர்களிடையே என்ன மனப்பான்மை காணப்படுகிறது, ஆனால் என்ன உற்சாகத்தை யெகோவா நமக்கு கொடுக்கிறார்?
16 பூமியின் அநேக பாகங்களில், குறிப்பாக அதிக வளமான தேசங்களில் இன்று காணப்படுவது அசட்டை மனப்பான்மையாகும். கிறிஸ்தவமண்டல சர்ச்சின் அங்கத்தினர்கள்கூட நம்முடைய நாளில் மனித விவகாரங்களில் யெகோவா தேவன் தலையிடுவார் என்பதை நம்புவதில்லை. சந்தேகப் புன்முறுவலுடனோ அல்லது “எனக்கு அக்கறையில்லை!” என்ற ஒரு சுருக்கமான பதிலுடனோ ராஜ்யத்தைக் குறித்த சுவிசேஷத்தோடு அவர்களை எட்டுவதற்கான நம்முடைய முயற்சிகளை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். இந்த நிலைமைகளில், சாட்சி கொடுக்கும் வேலையில் உறுதியாக தரித்திருப்பது ஒரு உண்மையான சவாலாயிருக்கக்கூடும். அது நம்முடைய சகிப்புத்தன்மையை சோதிக்கிறது. ஆனால் செப்பனியாவுடைய தீர்க்கதரிசனத்தின் மூலமாக, யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஜனங்களை இவ்வாறு சொல்வதன் மூலம் ஊக்கமூட்டுகிறார்: “உன் கைகளைத் தளரவிடாதே . . . உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.”—செப்பனியா 3:16, 17.
17. வேறே ஆடுகளிலுள்ள புதிதானவர்கள் என்ன முன்மாதிரியைப் பின்பற்றவேண்டும், எவ்வாறு?
17 மீதியானோரும் வேறே ஆடுகளின் மத்தியிலுள்ள முதிர்வயதானோரும்கூட இந்தக் கடைசி நாட்களில் ஒரு பிரமாண்டமான கூட்டிச் சேர்க்கும் வேலையை நிறைவேற்றியிருக்கின்றனர் என்பது யெகோவாவின் ஜனங்களுடைய நவீன நாளைய சரித்திரத்தில் உண்மையான ஒன்றாயிருக்கிறது. உண்மையுள்ள இந்த எல்லா கிறிஸ்தவர்களும் பல பத்தாண்டுகளாக சகிப்புத்தன்மையை காண்பித்திருக்கின்றனர். கிறிஸ்தவமண்டலத்திலுள்ள பெரும்பான்மையோர் காண்பிக்கும் அசட்டை மனப்பான்மை தங்களை உற்சாகமிழக்கச் செய்யும்படி அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆகவே இன்று அநேக நாடுகளில் ஆவிக்குரிய காரியங்களின் பேரில் அவ்வளவு பரவலாக காண்பிக்கப்படும் அசட்டை மனப்பான்மையினால் வேறே ஆடுகளிலுள்ள புதிதானவர்கள் ஊக்கமிழந்துபோகும்படி தங்களை அனுமதியாதிருப்பார்களாக. தங்கள் ‘கைகளை தளரவிட’ அல்லது தொய்யவிடாதிருப்பார்களாக. யெகோவாவின் நாளைக் குறித்தும் அதைப் பின்தொடரும் ஆசீர்வாதங்களைப் பற்றிய சத்தியங்களை கற்றுக்கொள்ள செம்மறியாடு போன்ற ஜனங்களுக்கு உதவுவதற்காக விசேஷமாக தயாரிக்கப்பட்டிருக்கும் காவற்கோபுரம், விழித்தெழு! மற்றும் மற்ற சிறந்த பிரசுரங்களை அளிப்பதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களாக.
மகா நாளிற்கு காத்துக்கொண்டிருக்கையில் முன்னேறுதல்!
18, 19. (அ) மத்தேயு 24:13 மற்றும் ஏசாயா 35:3, 4 ஆகியவற்றில் சகிப்பதற்கான என்ன உற்சாகத்தை நாம் காண்கிறோம்? (ஆ) யெகோவாவுடைய சேவையிலே ஐக்கியமாக முன்நோக்கிச் செல்லும்போது நாம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுவோம்?
18 இயேசு குறிப்பிட்டார்: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மத்தேயு 24:13) ஆகவே, யெகோவாவின் மகா நாளிற்காக காத்துக்கொண்டிருக்கும்போது ‘தளர்ந்த கைகளோ’ அல்லது ‘தள்ளாடுகிற முழங்கால்களோ’ இல்லை! (ஏசாயா 35:3, 4) செப்பனியாவின் தீர்க்கதரிசனம் யெகோவாவைக் குறித்து மறுபடியுமாக உறுதிப்படுத்தும் விதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்.” (செப்பனியா 3:17) ஆம், தம்முடைய ஜனங்களுக்கு எதிராக ‘பெருமைபாராட்டிக்கொண்டிருக்கும்’ அரசியல் தேசங்களை உடைத்துப்போடும்படி தம்முடைய குமாரருக்கு கட்டளையிடும் சமயமான ‘மகா உபத்திரவத்தின்’ கடைசி கட்டத்திலிருந்து யெகோவா ‘திரள் கூட்டத்தை’ பாதுகாப்பார்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; செப்பனியா 2:10, 11; சங்கீதம் 2:7-9.
19 யெகோவாவுடைய மகா நாள் நெருங்கி வந்துகொண்டிருக்கும்போது, அவரை “ஒருமனப்பட்டு” சேவித்து, வைராக்கியமாக முன்நோக்கிச் செல்வோமாக! (செப்பனியா 3:9) அவ்வாறு செய்வதன்மூலமாக, ‘கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படும்படியும்’ அவருடைய பரிசுத்த பெயர் புனிதமாக்கப்படுவதை பார்க்கும்படியான ஒரு நிலையிலும் வைக்கப்படுவோம்.
[அடிக்குறிப்பு]
a ‘சுத்தமான பாஷையைக்’ குறித்த முழு கலந்தாலோசிப்பிற்கு, காவற்கோபுரம், ஏப்ரல் 1, 1991, பக்கங்கள் 20-5, மற்றும் மே 1, 1991, பக்கங்கள் 10-20-ஐ காண்க.
மறுகலந்தாலோசிப்பு
◻ என்ன விதங்களில் கிறிஸ்தவமண்டலத்தில் காணப்படும் மத சூழ்நிலை செப்பனியாவின் நாளிலிருந்ததற்கு ஒப்பானதாயிருக்கிறது?
◻ இன்று உள்ள அரசியல் தலைவர்கள் எவ்வாறு செப்பனியாவின் காலத்திலிருந்த ‘பிரபுக்களுடன்’ ஒத்திருந்தார்கள்?
◻ செப்பனியாவில் உள்ள என்ன வாக்குறுதிகள் மீதியானோரின்மீது நிறைவேறியிருக்கின்றன?
◻ லட்சக்கணக்கான ஜனங்கள் எதை அடையாளங்கண்டுள்ளனர்?
◻ யெகோவாவின் சேவையில் நம்முடைய கைகளை ஏன் தளரவிடக்கூடாது?
[பக்கம் 15-ன் படங்கள்]
செப்பனியாவைப் போலவே, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் உண்மையுள்ள மீதியானோர் யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை பயமின்றி அறிவித்து வருகிறார்கள்
[பக்கம் 18-ன் படங்கள்]
ஜனங்களுடைய அசட்டை மனப்பான்மை தங்களை உற்சாகமிழக்கச் செய்யும்படி “வேறே ஆடுகள்” அனுமதிக்கவில்லை