யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் சமீபம்!
‘யெகோவாவுடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது.’—செப்பனியா 1:14.
1. கடவுள் செப்பனியாவின் மூலம் என்ன எச்சரிப்பை கொடுத்தார்?
பொல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு யெகோவா தேவன் தயாராக இருக்கிறார். இதோ! அவரது எச்சரிக்கை: “மனுஷரை . . . வாரிக்கொள்ளுவேன்; தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம் பண்ணுவேன்.” (செப்பனியா 1:3) செப்பனியா தீர்க்கதரிசியின் வாயிலாக உன்னத ஆண்டவராகிய யெகோவா இந்த வார்த்தைகளை உரைத்தார். செப்பனியா ஒருவேளை உண்மையுள்ள அரசனாகிய எசேக்கியாவின் கொள்ளு பேரனுடைய மகனாக இருந்திருக்கலாம். நல்ல அரசனாகிய யோசியாவின் நாட்களில் உரைக்கப்பட்ட இந்த அறிவிப்பு யூதா தேசத்தில் குடியிருந்த பொல்லாதவர்களுக்கு நல்ல செய்தியாக இல்லை.
2. யோசியா நடவடிக்கை எடுத்தும், யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளை ஏன் தவிர்க்க முடியவில்லை?
2 செப்பனியா உரைத்த இந்தத் தீர்க்கதரிசனம், யூதாவிலிருந்து அசுத்தமான வணக்கத்தை நீக்க வேண்டிய அவசியத்தை இளம் யோசியாவுக்கு இன்னும் அதிகமாக உணர்த்தியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேசத்திலிருந்து பொய் மதத்தை ஒழிக்க ராஜா எடுத்த நடவடிக்கை மக்களிடமிருந்த எல்லா பொல்லாப்பையும் நீக்கிவிடவுமில்லை அல்லது அவருடைய தாத்தா மனாசே ராஜா ‘எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பிய’ பாவங்களை நிவிர்த்தி செய்யவுமில்லை. (2 இராஜாக்கள் 24:3, 4; 2 நாளாகமம் 34:3) ஆகவே யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் கட்டாயமாக வரவிருந்தது.
3. ‘யெகோவாவுடைய கோபத்தின் நாளை’ தப்பிப்பிழைக்க முடியும் என்று நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?
3 ஆனால் திகிலூட்டும் அந்த நாளைத் தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள். ஆகவே கடவுளுடைய தீர்க்கதரிசி இவ்வாறு ஊக்கப்படுத்தினார்: ‘கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் யெகோவாவுடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், யெகோவாவுடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும், . . . தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, யெகோவாவுடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.’ (செப்பனியா 2:1, 3) யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளைத் தப்பிப்பிழைப்போம் என்ற நம்பிக்கையோடு பைபிள் புத்தகமாகிய செப்பனியாவை நாம் ஆய்வு செய்வோமாக. பொ.ச.மு. 648-க்கு முன்பு யூதாவில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் கடவுளுடைய “தீர்க்கதரிசன வசன”த்தின் பாகமாக இருப்பதால் நாமனைவரும் இதற்கு முழு இருதயத்தோடு கவனம் செலுத்த வேண்டும்.—2 பேதுரு 1:19.
யெகோவா தம் கையை நீட்டுகிறார்
4, 5. யூதாவிலிருந்த பொல்லாதவர்கள் மீது செப்பனியா 1:1-3 எவ்வாறு நிறைவேறியது?
4 செப்பனியாவுக்கு உண்டான ‘யெகோவாவுடைய வசனம்’ மேலே கூறப்பட்ட எச்சரிப்போடு ஆரம்பிக்கிறது. கடவுள் அறிவிப்பதாவது: ‘தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு, தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம் பண்ணுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.’—செப்பனியா 1:1-3.
5 ஆம், யூதா தேசத்தின் மன்னிக்க முடியாத பொல்லாப்பை யெகோவா முடிவுக்குக் கொண்டுவரவிருந்தார். ‘தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ள’ யெகோவா யாரை பயன்படுத்துவார்? பொ.ச.மு. 659-ல் துவங்கிய யோசியா அரசரின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் செப்பனியா தீர்க்கதரிசனம் உரைத்த காரணத்தால் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர்கள் யூதாவையும் அதன் தலைநகராகிய எருசலேமையும் அழித்து பாழாக்கினபோது நிறைவேறின. அந்தச் சமயத்தில் யூதாவில் இருந்த பொல்லாதவர்கள் ‘வாரிக்கொள்ளப்பட்டார்கள்.’
6-8. செப்பனியா 1:4-6-ல் என்ன முன்னறிவிக்கப்பட்டது, பண்டைய யூதாவில் அந்தத் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?
6 பொய் வணக்கத்தாருக்கு எதிராக கடவுளின் செயல்களை முன்னறிவிக்கையில், செப்பனியா 1:4-6 இவ்வாறு சொல்கிறது: ‘நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும், வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், யெகோவாவின் பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும், யெகோவாவை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், யெகோவாவைத் தேடாமலும், அவரைக் குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம் பண்ணுவேன்.’
7 யூதா மற்றும் எருசலேமின் குடிகளுக்கு எதிராக யெகோவா தம் கையை நீட்டினார். கானானியரின் கருவள தெய்வமாகிய பாகால் வணக்கத்தாரை அவர் நிர்மூலமாக்க தீர்மானமாயிருந்தார். பல்வேறு உள்ளூர் தெய்வங்களையும் அவர்கள் பாகால் என்ற பெயரால் அழைத்தனர், ஏனென்றால் அவற்றிற்கு அந்தந்த இடத்தில் சக்தியும் செல்வாக்கும் இருப்பதாக கருதினார்கள். உதாரணமாக மோவாபியரும் மீதியானியரும் பேயோர் மலையில் அவ்விடத்திற்குரிய பாகாலை வணங்கினர். (எண்ணாகமம் 25:1, 3, 6) யூதா முழுவதிலுமாக, பாகாலின் ஆசாரியர்களையும் அவர்களோடு உறவு வைத்துக்கொண்டு கடவுளுடைய சட்டத்தை மீறிய உண்மையற்ற ஆசாரிய லேவியர்களையும் யெகோவா அழித்திடுவார்.—யாத்திராகமம் 20:2, 3.
8 ‘வானசேனையைப் பணிகிறவர்களை,’ அதாவது ஜோதிடம் பார்க்கிறவர்களையும் சூரிய நமஸ்காரம் செய்கிறவர்களையும் யெகோவா அழித்திடுவார். (2 இராஜாக்கள் 23:11; எரேமியா 19:13; 32:29) ‘யெகோவா பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களுக்கு’ எதிராக, அதாவது மெய் வணக்கத்தை பொய் வணக்கத்தோடு கலக்க முற்படுகிறவர்களுக்கு எதிராகவும் கடவுளின் கோபம் கட்டவிழ்த்துவிடப்படும். மல்காம் என்பது அம்மோனியர்களின் முக்கிய தெய்வமாகிய மோளேகுவுக்கு மற்றொரு பெயராக இருக்க வேண்டும். மோளேகுவின் வணக்கத்தில் பிள்ளைகளை நரபலியாக செலுத்தும் பழக்கம் இருந்தது.—1 இராஜாக்கள் 11:5; எரேமியா 32:35.
கிறிஸ்தவமண்டலத்தின் முடிவு சமீபம்!
9. (அ) கிறிஸ்தவமண்டலம் எதைக் குறித்து குற்றமுள்ளதாக இருக்கிறது? (ஆ) யூதாவிலிருந்த உண்மையற்றவர்களைப் போலில்லாமல், நாம் என்ன செய்ய தீர்மானமாயிருக்க வேண்டும்?
9 இவையனைத்துமே பொய் வணக்கத்திலும் ஜோதிடத்திலும் ஊறிப்போன கிறிஸ்தவமண்டலத்தைத்தான் நமக்கு நினைவுபடுத்துகிறது. பாதிரிமாரின் ஆதரவோடு நடைபெறும் போர் என்ற பலிபீடத்தின்மீது லட்சக்கணக்கான உயிர்களை பலிசெலுத்துவதில் அவள் வகிக்கும் பங்கு அருவருப்பூட்டுவதாக உள்ளது! யூதாவில் ‘யெகோவாவை விட்டுப் பின்வாங்கி,’ இனியும் அவரைத் தேடாமலும் அவருடைய வழிநடத்துதலை நாடாமலும் அலட்சியமாக இருந்த உண்மையற்றவர்களைப் போல நாம் ஒருபோதும் இருக்கக்கூடாது. மாறாக கடவுளுக்கு நம்முடைய உத்தமத்தை எப்போதும் காத்துக்கொள்வோமாக.
10. செப்பனியா 1:7-ன் தீர்க்கதரிசன முக்கியத்துவத்தை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்?
10 தீர்க்கதரிசி அடுத்து சொன்ன வார்த்தைகள், யூதாவில் பொல்லாப்பு செய்தவர்களுக்கும் நம்முடைய நாளிலிருக்கும் பொல்லாதவர்களுக்கும் ஒன்றுபோல பொருந்துகின்றன. செப்பனியா 1:7 இவ்வாறு சொல்கிறது: ‘யெகோவாவாகிய ஆண்டவருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; யெகோவாவுடைய நாள் சமீபித்திருக்கிறது; யெகோவா ஒரு யாகத்தை [“பலியை,” NW] ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.’ இந்த ‘விருந்தாளிகள்’ யூதாவின் எதிரிகளாகிய கல்தேயர்கள், “பலி” என்பது யூதாவையும் அவளுடைய தலைநகரத்தையும் குறிக்கிறது. ஆகவே எருசலேமை அழிப்பது கடவுளுடைய நோக்கமாக இருப்பதை செப்பனியா அறிவித்தார், இந்தத் தீர்க்கதரிசனம் கிறிஸ்தவமண்டலத்தின் அழிவையும் சுட்டிக்காட்டியது. சொல்லப்போனால், இன்று கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள் மிகவும் சமீபத்தில் இருப்பதால் உலகம் முழுவதும் ‘யெகோவாவாகிய ஆண்டவருக்கு முன்பாக மெளனமாயிருந்து,’ இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களடங்கிய “சிறு மந்தை”யின் மூலமும் அவர்களுடைய தோழர்களாகிய “வேறே ஆடு”களின் மூலமும் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். (லூக்கா 12:32; யோவான் 10:16) செவிகொடுத்து கேட்காமல் இருப்பதன் மூலமாக கடவுளுடைய ராஜ்ய ஆட்சிக்கு எதிராக தங்களை வைத்துக்கொள்ளும் அனைவருக்கும் அழிவு காத்திருக்கிறது.—சங்கீதம் 2:1, 2.
அலறுகிற நாள்—விரைவில்!
11. செப்பனியா 1:8-11-ன் சாராம்சம் என்ன?
11 யெகோவாவின் நாளைப் பற்றி செப்பனியா 1:8-11 கூடுதலாக இவ்வாறு சொல்கிறது: ‘யெகோவாவுடைய யாகத்தின் [“பலியின்,” NW] நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன். வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன். அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று யெகோவா சொல்லுகிறார். மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் [“வெள்ளியை நிறுத்துக் கொடுப்பவர்,” NW] யாவரும் வெட்டுண்டு போனார்கள்.’
12. சிலர் எவ்வாறு ‘மறுதேசத்து வஸ்திரம் தரித்தவர்களாய்’ காணப்படுகின்றனர்?
12 யோசியா ராஜாவுக்குப்பின் யோவாகாஸ், யோயாக்கீம், யோயாக்கீன் ஆகியோர் அரசாளுவார்கள். அதன்பிறகு சிதேக்கியா ஆட்சி செய்வார். அப்போது எருசலேமுக்கு அழிவுவரும். இப்படியொரு அழிவு வரவிருந்தபோதிலும், ‘மறுதேசத்து வஸ்திரம் தரித்துக்கொள்வதன்’ மூலம் சிலர் அண்டை நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படுவதை நாடினர். அதே விதமாகவே இன்று பலர் தாங்கள் யெகோவாவுடைய அமைப்பின் பாகமாக இல்லை என்பதை பல்வேறு விதங்களில் காட்டுகின்றனர். தெளிவாகவே சாத்தானுடைய அமைப்பின் பாகமாக இருக்கும் அவர்களுக்கு தண்டனை நிச்சயம்!
13. செப்பனியாவின் தீர்க்கதரிசனத்துக்கு இசைவாக பாபிலோனியர் எருசலேமை தாக்கும்போது என்ன நடக்கவிருந்தது?
13 யூதாவின் கணக்கைத் தீர்த்த ‘அந்நாள்,’ யெகோவா தம் சத்துருக்களின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் நாளுக்கு இணையாக இருக்கிறது. அந்நாளிலே அவர் பொல்லாப்பை முடிவுக்குக் கொண்டுவந்து தம்முடைய உன்னத அதிகாரத்தை நிரூபித்திடுவார். பாபிலோனியர்கள் எருசலேமை தாக்கும்போது, மீன் வாசலிலிருந்து கூக்குரல் கேட்கும். ஒருவேளை இது மீன் அங்காடிக்கு அருகில் இருந்ததால் இந்தப் பெயரைப் பெற்றிருக்கலாம். (நெகேமியா 13:16) பாபிலோனிய படைகள் இரண்டாம் பாகம் என்றழைக்கப்படும் பகுதிக்குள் பிரவேசிக்கும், ‘மேடுகளிலிருந்து சங்காரத்தின் இரைச்சல்’ என்பது நெருங்கி வந்துகொண்டிருந்த கல்தேயரின் சத்தத்தைக் குறிக்கலாம். மேல் டைரோப்பியன் பள்ளத்தாக்கில், மக்தேஷின் குடிகள் ‘அலறுவார்கள்.’ அவர்கள் ஏன் அலறுவார்கள்? ‘வெள்ளியை நிறுத்துக் கொடுப்பது’ உட்பட, எல்லா வர்த்தக நடவடிக்கைகளும் நின்று போவதால் அலறுவார்கள்.
14. யெகோவா தம்மை வணங்குவதாக உரிமைபாராட்டும் வணக்கத்தாரை எந்தளவுக்கு சோதித்தறிவார்?
14 தம்மை வணங்குவதாக உரிமைபாராட்டும் வணக்கத்தாரை யெகோவா எந்தளவுக்கு சோதித்தறிவார்? தீர்க்கதரிசனம் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறது: ‘அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், யெகோவா நன்மை செய்வதும் இல்லை தீமை செய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன். அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்க மாட்டார்கள்; அவர்கள் திராட்சத்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.’—செப்பனியா 1:12, 13.
15. (அ) எருசலேமின் விசுவாசதுரோக ஆசாரியர்களுக்கு என்ன நடக்கவிருந்தது? (ஆ) தற்போது பொய் மதத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்கு என்ன காத்திருக்கிறது?
15 எருசலேமின் விசுவாசதுரோக ஆசாரியர்கள் யெகோவாவின் வணக்கத்தை பொய் மதத்தோடு கலப்படம் செய்து வந்தார்கள். யாரும் தங்களை ஒன்றும் செய்ய முடியாதென்று அவர்கள் நினைத்தபோதிலும், விளக்கைக்கொண்டு தேடுகிறதுபோல கடவுள் அவர்களைத் தேடிப் பிடிப்பார்; அந்த விளக்கின் ஒளி அவர்கள் புகலிடம் நாடிப்போயிருக்கும் அந்த ஆவிக்குரிய இருளில் ஊடுருவிச் செல்லும். தெய்வீக நியாயத்தீர்ப்பின் அறிவிப்பையும் நிறைவேற்றத்தையும் யாருமே தப்பமுடியாது. மெத்தனமான அந்த விசுவாசதுரோகிகள் திராட்ச பழரசத்தின் வண்டலைப்போல இருந்தனர். மனித விவகாரங்களில் கடவுள் தலையிடப்போகிறார் போன்ற எந்த அறிவிப்புகளை கேட்டும் கலங்க அவர்களுக்கு விருப்பம் இல்லை, ஆனால் அவர்கள்மீது வரும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து அவர்களால் தப்பவே முடியாது. தற்போது பொய் மதத்தைக் கடைப்பிடிக்கிறவர்களும் தப்ப முடியாது, கிறிஸ்தவமண்டல உறுப்பினர்கள், யெகோவாவின் வணக்கத்தைவிட்டு விலகிப்போன விசுவாசதுரோகிகள் ஆகிய அனைவருமே அழிக்கப்படுவார்கள். இவை ‘கடைசி நாட்கள்’ என்பதை மறுதலித்து, ‘யெகோவா நன்மை செய்வதும் இல்லை தீமை செய்வதும் இல்லையென்று’ இவர்கள் தங்கள் இருதயங்களில் சொல்லிக்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்!—2 தீமோத்தேயு 3:1-5; 2 பேதுரு 3:3, 4, 10.
16. யூதாவின்மீது கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும்போது என்ன நடக்கவிருந்தது, இதை அறிந்திருப்பது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
16 யூதாவிலிருந்த விசுவாசதுரோகிகளுக்கு, பாபிலோனியர்கள் அவர்களுடைய ஆஸ்திகளைக் கொள்ளையிடுவார்கள், வீடுகளைப் பாழாக்கிவிடுவார்கள், திராட்சத்தோட்டத்தின் விளைச்சலை எடுத்துக்கொள்வார்கள் என்று எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்படியென்றால் யூதாவின்மீது தெய்வீக நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும்போது செல்வங்களுக்கு மதிப்பு இருக்காது. தற்போதைய காரிய ஒழுங்கின்மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பு வரும்போதும் அப்படித்தான் இருக்கும். ஆகவே நாம் ஆன்மீக சிந்தையோடிருந்து யெகோவாவின் சேவையை நம்முடைய வாழ்க்கையில் முதலிடத்தில் வைப்பதன்மூலம் ‘பரலோகத்திலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்போமாக.’—மத்தேயு 6:19-21, 33.
‘யெகோவாவுடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது’
17. செப்பனியா 1:14-16-ன் பிரகாரம் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் எவ்வளவு அருகில் உள்ளது?
17 யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் எவ்வளவு அருகில் உள்ளது? செப்பனியா 1:14-16 பிரகாரம் யெகோவா இவ்வாறு நமக்கு உறுதியளிக்கிறார்: ‘யெகோவாவுடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; யெகோவாவுடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள். அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான [“எச்சரிப்பூட்டுகிறதுமான,” NW] நாள்.’
18. யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பு நாள் நெடுநாள் கழித்து வரும் என்ற முடிவுக்கு நாம் ஏன் வரக்கூடாது?
18 பாவம் செய்துகொண்டிருந்த யூதாவின் ஆசாரியர்கள், பிரபுக்கள், மக்கள் ஆகியோருக்கு ‘யெகோவாவுடைய பெரியநாள் சமீபமாயிருக்கிறது’ என்ற எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருந்தது. யூதாவுக்கு அது ‘கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து’ வந்துகொண்டிருந்தது. அதே விதமாகவே நம்முடைய நாளிலும் யெகோவா பொல்லாதவர்கள் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் காலம் நெடுநாள் கழித்து வரும் என்று எவரும் நினைக்கக்கூடாது. மாறாக, யூதாவின் மீது கடவுள் துரிதமாக செயல்பட்டதைப் போலவே நியாயத்தீர்ப்பு நாளையும் ‘தீவிரமாக’ கொண்டுவருவார். (வெளிப்படுத்துதல் 16:14, 16) தமது சாட்சிகள் வாயிலாக யெகோவா கொடுக்கும் எச்சரிப்புகளை அசட்டை செய்து மெய் வணக்கத்தை தழுவிக்கொள்ள தவறும் அனைவருக்கும் அது என்னே வேதனையான காலமாக இருக்கும்!
19, 20. (அ) யூதா மீதும் எருசலேம் மீதும் கடவுளுடைய கோபாக்கினை நிறைவேற்றப்பட்ட அந்த நாளின் அம்சங்கள் சில யாவை? (ஆ) இந்தக் காரிய ஒழுங்கில் பொல்லாதவர்கள் மாத்திரமே அழிக்கப்பட இருப்பதால் என்ன கேள்விகள் எழுகின்றன?
19 யூதா மீதும் எருசலேம் மீதும் கடவுளுடைய கோபாக்கினை நிறைவேற்றப்பட்ட அந்த நாள் “இக்கட்டும் இடுக்கமுமான நாள்.” பாபிலோனியர் படையெடுத்துவந்தபோது மரணத்தையும் அழிவையும் எதிர்ப்பட்ட யூதாவின் குடிகளுக்கு மனவேதனையையும் அநேக துன்பங்களையும் அவர்கள் கொண்டுவந்தனர். அந்த “அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்” இருளும் அந்தகாரமும் மப்பும் மந்தாரமுமான நாளாக இருந்தது. அடையாள அர்த்தத்தில் மாத்திரமல்ல, சொல்லர்த்தமாகவும் அப்படியே இருந்திருக்கலாம். ஏனென்றால் எங்கு பார்த்தாலும் புகையும் பிணக் குவியலுமே காணப்பட்டன. அது ‘எக்காளம் ஊதுகிறதும் எச்சரிப்பூட்டுகிறதுமான நாளாக’ இருந்தது, ஆனால் எச்சரிப்புகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல பயனில்லாமல் போயின.
20 மதில் சுவர்களைத் தகர்க்கும் பாபிலோனியரின் எந்திரங்கள் ‘உயரமான கொத்தளங்களைத்’ தரைமட்டமாக்கியபோது எருசலேமின் காவல்காரர் செய்வதறியாது நின்றனர். அதே போலவே பொல்லாதவர்களை அழிப்பதற்கு கடவுளுடைய பரலோக படைக்கலத்தில் இருக்கும் ஆயுதங்களுக்கு முன்னால் இப்போதுள்ள பொல்லாத ஒழுங்குமுறையின் கோட்டைகள் தவிடுபொடியாகிவிடும். அதிலிருந்து நீங்கள் தப்பிப்பிழைக்க வேண்டுமா? அப்படியென்றால் “தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழி”க்கப்போகும் யெகோவாவின் பக்கமாக நீங்கள் உறுதியான நிலைநிற்கையை எடுத்துவிட்டீர்களா?—சங்கீதம் 145:20.
21, 22. செப்பனியா 1:17, 18 நம்முடைய நாளில் எவ்வாறு நிறைவேற்றமடையும்?
21 செப்பனியா 1:17, 18-ல் என்னே பயங்கரமான ஒரு நியாயத்தீர்ப்பு நாள் முன்னறிவிக்கப்பட்டது! ‘மனுஷர் யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்’ என்று யெகோவா தேவன் சொல்கிறார். ‘அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்; அவர்கள் மாம்சம் [“குடல்கள்,” NW] எருவைப்போல் கிடக்கும். யெகோவாவுடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய வைராக்கியமென்னும் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.’
22 செப்பனியாவின் நாளில் செய்தது போலவே யெகோவா சீக்கிரத்தில் அவருடைய எச்சரிக்கைக்கு செவிகொடுக்காத ‘தேசத்தின் குடிகள் மீது’ கடுந்துன்பத்தைக் கொண்டுவருவார். அவர்கள் கடவுளுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறபடியால் குருடனைப் போல தடவி நடந்து, விடுவிப்பார் இல்லாமல் உதவியற்று தவிப்பார்கள். யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களுடைய இரத்தம் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத “புழுதியைப்போல் சொரி”யும். அவர்களுடைய முடிவு மானங்கெட்ட ஒரு முடிவாகும், ஏனென்றால் பொல்லாதவர்களுடைய உடல்களை—குடல்களையும்கூட—கடவுள் பூமியின்மீது “எருவைப்போல்” தூவிடுவார்.
23. ‘யெகோவாவுடைய உக்கிரத்தின் நாளிலே’ பொல்லாதவர்கள் தப்பிக்க முடியாது என்றாலும் செப்பனியா தீர்க்கதரிசனம் என்ன நம்பிக்கையான செய்தியை நமக்கு அளிக்கிறது?
23 கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராக போர் செய்கிறவர்களை யாருமே காப்பாற்ற முடியாது. யூதாவில் பாவஞ்செய்தவர்களை பொன்னும் வெள்ளியும் விடுவிக்க முடியாமல் போனது. அதே விதமாகவே கிறிஸ்தவமண்டலத்தின் மீதும் இந்தக் காரிய ஒழுங்கின் மீதும் வரவிருக்கும் ‘யெகோவாவுடைய உக்கிரத்தின் நாளிலே,’ சேர்த்து வைக்கப்பட்ட செல்வமும் வாங்கி குவிக்கப்பட்ட லஞ்சமும் எந்தப் பாதுகாப்பையும் அளிக்காது. கணக்குத் தீர்க்கும் அந்த நாளில் “தேசமெல்லாம்” கடவுளுடைய வைராக்கியமென்னும் அக்கினிக்கு இரையாகும்; பொல்லாதவர்கள் அழிவார்கள். கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தையில் நமக்கு விசுவாசம் இருப்பதால் நாம் ‘முடிவு காலத்தின்’ முடிவு கட்டத்தில் வாழ்கிறோம் என்பதை உறுதியாக நம்புகிறோம். (தானியேல் 12:4) யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் அருகில் இருக்கிறது, சீக்கிரத்தில் அவர் தம்முடைய சத்துருக்களை பழிவாங்குவார். ஆனாலும், செப்பனியாவின் தீர்க்கதரிசனத்தில் தப்பிப்பிழைக்கும் நம்பிக்கையின் செய்தியும் உண்டு. அப்படியென்றால், யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே நாம் மறைக்கப்பட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• யூதாவின் மீதும் எருசலேமின் மீதும் செப்பனியா தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?
• கிறிஸ்தவமண்டலத்துக்கும் நம்முடைய நாளிலுள்ள எல்லா பொல்லாதவர்களுக்கும் என்ன காத்திருக்கிறது?
• யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பு நாள் நெடுநாள் கழித்து வரும் என்று நாம் ஏன் நினைக்கக்கூடாது?
[பக்கம் 13-ன் படம்]
யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள் சமீபத்திலிருப்பதை செப்பனியா தைரியமாக அறிவித்தார்
[படத்திற்கான நன்றி]
From the Self-Pronouncing Edition of the Holy Bible, containing the King James and the Revised versions
[பக்கம் 15-ன் படம்]
யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் யெகோவாவின் நாள் பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர் மூலம் வந்தது
[பக்கம் 16-ன் படம்]
பொல்லாதவர்களை யெகோவா அழிக்கையில் நீங்கள் காக்கப்பட விரும்புகிறீர்களா?