வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
செப்பனியா 2:3-ல் காணப்படும் “ஒருவேளை” என்ற வார்த்தை, கடவுளுடைய ஊழியர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் நிச்சயத்துடன் இருக்க முடியாது என்பதை அர்த்தப்படுத்துகிறதா?
அந்த வசனம் இவ்வாறு வாசிக்கிறது: “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” ஏன் இந்த வசனம் “ஒருவேளை” என கூறுகிறது?
அர்மகெதோனில் யெகோவா தமது உண்மையுள்ள ஊழியர்களை எப்படி நடத்துவார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, நியாயத்தீர்ப்புக்கு முன்பு இறந்துபோகிறவர்களுக்கு கடவுள் என்ன செய்வார் என்பதைக் குறித்து பைபிள் கற்பிக்கும் விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொள்வது உதவியாக இருக்கும். சிலர் அழியாத வாழ்க்கையைப் பெற ஆவி சிருஷ்டிகளாக பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள்; வேறு சிலரோ பரதீஸில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்புடன் பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (யோவான் 5:28, 29; 1 கொரிந்தியர் 15:53, 54) அர்மகெதோனுக்கு முன்பு மரிக்கும் தமது உண்மையுள்ள ஊழியர்களை யெகோவா நினைவுகூர்ந்து அவர்களுக்குப் பலனளிப்பார் என்றால், அவருடைய கோபத்தின் நாளில் உயிரோடிருக்கிற தமது ஊழியர்களுக்கும் இதைப் போலவே நிச்சயம் பலனளிப்பார், அல்லவா?
ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட அப்போஸ்தலன் பேதுருவின் வார்த்தைகளும் உற்சாகம் அளிக்கின்றன. அவர் இவ்வாறு எழுதினார்: “நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப் பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, . . . நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.” (2 பேதுரு 2:5-9) கடந்த காலங்களில், பொல்லாதவர்களை யெகோவா அழித்தபோதிலும், உண்மையுடன் சேவித்த நோவாவையும் லோத்துவையும் பாதுகாத்தார். அது போலவே அர்மகெதோனில் பொல்லாதவர்களை அழிக்கும்போதும் தேவபக்தியுள்ளவர்களை யெகோவா காப்பாற்றுவார். நீதியுள்ள ‘திரள் கூட்டத்தார்’ தப்பிப்பிழைப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 14.
அப்படியானால், “ஒருவேளை” என்ற வார்த்தை தமது அங்கீகாரத்தைப் பெற்றவர்களைப் பாதுகாக்கும் கடவுளுடைய திறமையை சந்தேகிக்கும் விதத்தில் செப்பனியா 2:3-ல் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, யெகோவாவுடைய கோபத்தின் நாளில் ஒருவர் மறைக்கப்படுவது அவர் நீதியையும் மனத்தாழ்மையையும் தேடுவதைப் பொறுத்தே இருக்கிறது. தனிப்பட்ட நபர் தொடர்ந்து மனத்தாழ்மையையும் நீதியையும் தேடுவதன் பேரிலேயே அவருடைய பாதுகாப்பு சார்ந்திருக்கிறது.—செப்பனியா 2:3.
[பக்கம் 31-ன் படம்]
‘யெகோவா தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க அறிந்திருக்கிறார்’