உங்கள் கைகளைத் திடப்படுத்துங்கள்
“தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டு வருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது.”—சகரியா 8:9.
1, 2. ஆகாய், சகரியா புத்தகங்களுக்கு நாம் ஏன் கவனம்செலுத்த வேண்டும்?
ஆகாய், சகரியா தீர்க்கதரிசனங்கள் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டபோதிலும், அவை நிச்சயமாக உங்கள் வாழ்க்கைக்கு முக்கியமானவை. அவற்றிலுள்ள பதிவுகள் வெறும் சரித்திரப் பதிவுகள் அல்ல. ‘நமக்குப் போதனையாக முன்பு எழுதப்பட்டவற்றின்’ பாகமாக அவை இருக்கின்றன. (ரோமர் 15:4) அவற்றை நாம் வாசிக்கும்போது, 1914-ல் பரலோக ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து நடைபெறுகிற உலக சம்பவங்கள் நம் மனத்திரைக்கு வருகின்றன.
2 பூர்வகால யூதர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களையும் சூழ்நிலைகளையும் பற்றிக் குறிப்பிடும்போது அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறினார்: “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.” (1 கொரிந்தியர் 10:11) எனவே, ‘ஆகாய், சகரியா புத்தகங்களால் இன்றைக்கு நமக்கென்ன பிரயோஜனம்?’ என நீங்கள் யோசிக்கலாம்.
3. ஆகாயும் சகரியாவும் எதற்கு முக்கியக் கவனம் செலுத்தினார்கள்?
3 முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டபடி, பாபிலோனிய சிறையிருப்புக்குப் பிறகு, யூதர்கள் தாயகம் திரும்பிய காலத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றியே ஆகாய், சகரியாவின் தீர்க்கதரிசனங்கள் விவரிக்கின்றன. அவ்விரு தீர்க்கதரிசிகளும் ஆலயத்தைத் திரும்பக் கட்டும் வேலைக்கே முக்கியக் கவனம் செலுத்தினார்கள். பொ.ச.மு. 536-ல் ஆலயத்திற்கு யூதர்கள் அஸ்திவாரம் அமைத்தார்கள். அப்போது வயதான யூதர்கள் சிலர், கடந்த காலத்தைப் பற்றி நினைத்து அழுதபோதிலும், பெரும்பாலான யூதர்கள் “சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள்.” ஆனால், அதைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று நம் காலத்தில் நடந்திருக்கிறது. எப்படி?—எஸ்றா 3:3-13.
4. முதல் உலகப் போர் முடிந்தபின் சீக்கிரத்திலேயே என்ன நடந்தது?
4 முதல் உலகப் போர் முடிந்தபின் சீக்கிரத்திலேயே, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மகா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து விடுதலையானார்கள். இது யெகோவாவுடைய ஆதரவுக்கு மாபெரும் அடையாளமாக இருந்தது. அதற்கு முன்னர், மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் கூட்டுச்சேர்ந்து, பைபிள் மாணாக்கர்கள் செய்துவந்த பிரசங்க வேலையை நிறுத்தியதுபோல் தோன்றியது. (எஸ்றா 4:8, 13, 21-24) இருந்தபோதிலும், ராஜ்ய பிரசங்க வேலைக்கும் சீஷராக்கும் வேலைக்கும் ஏற்பட்ட தடங்கல்களை யெகோவா தகர்த்தெறிந்தார். 1919 முதற்கொண்டு பல்லாண்டு காலமாக ராஜ்ய வேலை நல்ல பலன்களைத் தந்திருக்கிறது; அதுமட்டுமின்றி, அதன் முன்னேற்றத்தை எதுவுமே தடுத்து நிறுத்த முடியவில்லை.
5, 6. சகரியா 4:7 என்ன மகத்தான நிறைவேற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது?
5 யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் இன்றைய ஊழியர்களின் பிரசங்க வேலையும் கற்பிக்கும் வேலையும் அவரது ஆதரவினால் தொடர்ந்து நடைபெறும் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம். சகரியா 4:7 (NW) இவ்வாறு சொல்கிறது: “மூலைக்கல்லை அவர் நிச்சயம் கொண்டுவருவார். அதைக் கண்டு, ‘எத்தனை அழகு! எத்தனை அழகு!’ என ஆர்ப்பரிப்பார்கள்.” இந்தத் தீர்க்கதரிசனம் என்ன மகத்தான நிறைவேற்றத்தை நம்முடைய நாளில் சுட்டிக்காட்டுகிறது?
6 சர்வலோகப் பேரரசருடைய அடையாளப்பூர்வ ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரத்தில் மெய் வணக்கம் பூரண நிலையை அடையப்போகிற காலத்தைத்தான் சகரியா 4:7 சுட்டிக்காட்டுகிறது. அடையாளப்பூர்வ ஆலயம் என்பது இயேசு கிறிஸ்துவுடைய மீட்கும்பலியின் அடிப்படையில் யெகோவாவை அணுகுவதற்கான ஏற்பாடாகும். மிகப் பெரிய அந்த அடையாளப்பூர்வ ஆலயம் முதல் நூற்றாண்டிலிருந்து செயல்பட்டு வந்திருப்பது உண்மைதான். என்றாலும், இந்தப் பூமிக்குரிய பிரகாரத்தில் மெய் வணக்கம் இன்னும் பூரண நிலையை அடைய வேண்டியிருந்தது. இன்று லட்சக்கணக்கானோர் இந்தப் பிரகாரத்தில் கடவுளுக்குச் சேவை செய்துவருகிறார்கள். இவர்களும் உயிர்த்தெழுப்பப்படுகிற திரளான ஜனங்களும் இயேசு கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியின்போது பரிபூரண நிலைக்குக் கொண்டுவரப்படுவார்கள். அந்த ஆயிரவருட ஆட்சியின் முடிவில், சுத்திகரிக்கப்பட்ட பூமியில் கடவுளுடைய உண்மை வணக்கத்தார் மட்டுமே இருப்பார்கள்.
7. நம்முடைய நாளில் மெய் வணக்கத்தைப் பூரண நிலைக்குக் கொண்டுவருவதில் இயேசு என்ன பங்கு வகிக்கிறார், அது நம்மை என்ன செய்யத் தூண்ட வேண்டும்?
7 பொ.ச.மு. 515-ல் ஆலயக் கட்டுமானப் பணி பூரணமடைய ஆளுநரான செருபாபேலும் பிரதான ஆசாரியரான யெசுவாவும் பங்கு வகித்தார்கள். அவ்வாறே, உண்மை வணக்கத்தை பூரண நிலைக்குக் கொண்டுவருவதில் இயேசு பங்கு வகிக்கிறார்; இதைப் பற்றி சகரியா 6:12, 13 இவ்வாறு முன்னறிவித்தது: “சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். . . . அவர் மகிமை பொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்.” அடையாளப்பூர்வ ஆலயத்தில் நடைபெறும் ராஜ்ய வேலையை, பரலோகத்தில் இருப்பவரும் தாவீதின் அரச வம்சத்தை முளைத்தெழும்பப் பண்ணுகிறவருமான இயேசுவே ஆதரித்துவருவதால், அதன் முன்னேற்றத்தை யாரால் தடைசெய்ய முடியும்? யாராலும் முடியாது! அப்படியானால், அன்றாட கவலைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, ஊழியத்தில் தொடர்ந்து முன்னேற அது நம்மைத் தூண்ட வேண்டும், அல்லவா?
மிக முக்கியமானவை
8. அடையாளப்பூர்வ ஆலயத்தில் நடைபெறும் வேலைக்கு நாம் ஏன் முதலிடம் கொடுக்க வேண்டும்?
8 யெகோவாவின் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்காக, அவருடைய அடையாளப்பூர்வ ஆலயத்தில் நடைபெறும் வேலைக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். “ஏற்ற காலம் இன்னும் வரவில்லை” என்று சொன்ன யூதர்களைப் போல் நாம் சொல்லக் கூடாது; மாறாக, “கடைசி நாட்களில்” வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைவில் வைக்க வேண்டும். (ஆகாய் 1:2; 2 தீமோத்தேயு 3:1) உண்மையுள்ள சீஷர்கள் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கித்து, சீஷராக்குவார்கள் என்று இயேசு முன்னறிவித்தார். அந்த ஊழிய சிலாக்கியத்தை அசட்டை செய்யாதபடி நாம் கவனமாய் இருக்க வேண்டும். சாத்தானுடைய உலகத்திலிருந்து வந்த எதிர்ப்பினால் முன்பு தற்காலிகமாய் நிறுத்தப்பட்டிருந்த பிரசங்க வேலை 1919-ல் மீண்டும் துவங்கியது; ஆனால் அது இன்னும் முடிவடையவில்லை. என்றாலும், கட்டாயம் அது முடிவடையும்!
9, 10. யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும், இதனால் நாம் என்ன செய்ய வேண்டும்?
9 தனிநபர்களாகவும் சரி, தொகுதியாகவும் சரி, எந்தளவு அவ்வேலையில் மும்முரமாக ஈடுபடுகிறோமோ அந்தளவு நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். யெகோவா அளித்த நம்பிக்கையூட்டுகிற வாக்குறுதியைக் கவனியுங்கள். உள்ளப்பூர்வமான வணக்கத்திலும், ஆலய அஸ்திவாரப் பணியிலும் யூதர்கள் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்தவுடன், “நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன்” என்று அவர் வாக்குறுதி அளித்தார். (ஆகாய் 2:19) ஆம், அவருடைய ஆசீர்வாதத்தை அவர்கள் மீண்டும் முழுமையாக அனுபவிக்க இருந்தார்கள். கடவுள் வாக்குறுதி அளித்த அந்த ஆசீர்வாதங்களை இப்போது கவனியுங்கள்: “விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்.”—சகரியா 8:9-13.
10 ஆன்மீக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் யூதர்களை யெகோவா ஆசீர்வதித்தது போலவே, அவருடைய வேலையை ஊக்கம் தளராமல் மகிழ்ச்சியுடன் செய்கிற நம்மையும்கூட ஆசீர்வதிப்பார். அதாவது, பரஸ்பர சமாதானம், பாதுகாப்பு, பொருளாதார செழுமை போன்றவற்றை அருளுவார், ஆன்மீக வளர்ச்சி அடையவும் உதவுவார். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம், யெகோவாவின் அடையாளப்பூர்வ ஆலயத்தில் அவர் எதிர்பார்க்கும் விதத்தில் வேலை செய்தால்தான் அவருடைய ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கும்.
11. நம் வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம் என்பதை எப்படிச் சிந்தித்துப் பார்க்கலாம்?
11 ‘நம் வழிகளைச் சிந்தித்துப் பார்க்க’ இதுவே காலம். (ஆகாய் 1:5, 7) ஆம், வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க நாம் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். யெகோவாவின் பெயரை நாம் எந்தளவு மகிமைப்படுத்துகிறோம் என்பதையும், அவருடைய அடையாளப்பூர்வ ஆலயத்தின் கட்டுமானப் பணியில் எந்தளவு முன்னேறுகிறோம் என்பதையும் பொறுத்தே அவரது ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்வோம். ஆகையால், உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘முன்பு நான் முதலிடத்தில் வைத்திருந்த காரியங்களை இப்போது இரண்டாம் இடத்திற்குத் தள்ளிவிட்டேனா? முழுக்காட்டப்பட்ட சமயத்தில், யெகோவாவுக்காகவும் அவரைப் பற்றிய சத்தியத்திற்காகவும் அவருடைய வேலைக்காகவும் நான் காட்டிய பக்திவைராக்கியம் எப்படியிருந்தது, இப்போது எப்படியிருக்கிறது? சௌகரியமாய் வாழ வேண்டும் என்பதற்காக யெகோவாவுக்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறேனா? மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தின் காரணமாக யெகோவாவின் சேவையில் அதிகம் ஈடுபடாமல் இருக்கிறேனா?’—வெளிப்படுத்துதல் 2:2-4.
12. ஆகாய் 1:6, 9-ல், யூதர்களின் என்ன நிலைமை விளக்கப்பட்டிருக்கிறது?
12 யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்தும் பிரசங்க வேலையை நாம் புறக்கணித்தால், அவருடைய அபரிமிதமான ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்; அவ்வாறு நேரிட நாம் விரும்புவதில்லை. தாயகம் திரும்பிய யூதர்கள் ஆலயக் கட்டுமானப் பணியை ஆர்வத்தோடு ஆரம்பித்த பிறகு, ‘அவனவன் தன்தன் வீட்டிற்கு [அதாவது, வீட்டுக் காரியத்திற்காக] ஓடிப்போனதாய்’ ஆகாய் 1:9 சொல்கிறது. அவர்கள் தங்களுடைய சொந்த தேவைகளைக் கவனிப்பதிலேயே மூழ்கிப்போனார்கள். இதன் விளைவாக அவர்கள் ‘கொஞ்சமாய் அறுத்தார்கள்,’ அதாவது உணவு, பானம், கதகதப்பூட்டும் வஸ்திரம் என எல்லாவற்றிலும் அவர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. (ஆகாய் 1:6) அவர்கள்மீது பொழிந்துவந்த ஆசீர்வாதங்களை யெகோவா நிறுத்திவிட்டார். இதில் நமக்கு ஏதாவது பாடம் இருக்கிறதா?
13, 14. ஆகாய் 1:6, 9-லுள்ள பாடங்களை நாம் எப்படிப் பொருத்தலாம், அது ஏன் முக்கியம்?
13 யெகோவாவின் ஆசீர்வாதத்தை நாம் தொடர்ந்து பெற வேண்டுமானால், அவருடைய வணக்கத்தைப் புறக்கணிக்கும் அளவுக்கு நம்முடைய சொந்த காரியங்களில் மூழ்கிவிடக்கூடாது, அல்லவா? செல்வங்களை நாடுவது, திடீர் பணக்காரராக முயலுவது, உயர்ந்த அந்தஸ்துக்கு ஆசைப்பட்டு மேற்படிப்புக்காகத் திட்டமிடுவது, சொந்த இலட்சியங்களை அடைவதற்காக சில வகுப்புகளுக்குச் செல்வது என நம் கவனத்தைச் சிதறடிக்கும் எந்தவொரு செயலுக்கும் விருப்பத்திற்கும் நாம் அணைபோட வேண்டும்.
14 உண்மைதான், இப்படிப்பட்ட காரியங்களெல்லாம் தவறானவை எனச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், நித்திய ஜீவனோடு ஒப்பிடும்போது அவையெல்லாம் ‘செத்த கிரியைகளாகவே’ இருக்கின்றன, அல்லவா? (எபிரெயர் 9:14) ஆனால், எந்த அர்த்தத்தில் அவை ‘செத்த கிரியைகளாக’ இருக்கின்றன? ஆன்மீக ரீதியில் அவை செத்தவையாக, வீணானவையாக, பலனற்றவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட கிரியைகளில் தொடர்ந்து ஈடுபடும் ஒருவர், ஆன்மீக ரீதியில் மரித்துக்கூட போய்விடலாம். அப்போஸ்தலர்களின் காலத்தில் வாழ்ந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சிலருக்கு அதுவே நடந்தது. (பிலிப்பியர் 3:17-19) நம் காலத்திலும் சிலருக்கு அதுவே நடந்திருக்கிறது. அப்படி கிறிஸ்தவ நடவடிக்கைகளிலிருந்தும் சபையிலிருந்தும் படிப்படியாக விலகிக்கொண்ட சிலரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; இப்போது அவர்கள் யெகோவாவின் சேவையில் மீண்டும் ஈடுபட துளிகூட விருப்பம் இல்லாதவர்களாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் என்றாவது ஒருநாள் யெகோவாவிடம் திரும்பி வருவார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்; ஆனாலும், ‘செத்த கிரியைகள்,’ யெகோவாவின் தயவையும் ஆசியையும் கண்டிப்பாக இழந்துபோகச் செய்துவிடும். அது எவ்வளவு வேதனையானது! அதோடு, அவை கடவுளுடைய ஆவியால் கிடைக்கிற சந்தோஷத்தையும் சமாதானத்தையும் இழந்துபோகச் செய்துவிடும். அதுமட்டுமல்ல, கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் அன்பிலிருந்து பயன்பெற முடியாதபடியும் செய்துவிடும். எப்பேர்ப்பட்ட இழப்பு என யோசித்துப்பாருங்கள்!—கலாத்தியர் 1:6; 5:7, 13, 22-24.
15. நம் வணக்கத்திற்கு மிகுந்த கவனம்செலுத்த வேண்டிய அவசியத்தை ஆகாய் 2:14 எப்படிக் காண்பிக்கிறது?
15 இது மிகுந்த கவனம்செலுத்த வேண்டிய விஷயம். யூதர்கள் யெகோவாவின் ஆலயத்தைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் வீடுகளை அலங்கரிப்பதில் மூழ்கிப்போயிருந்தார்கள்; அதை யெகோவா எப்படிக் கருதினார் என ஆகாய் 2:14-ல் கவனியுங்கள்: ‘அப்படியே இந்த ஜனங்களும் இந்த ஜாதியாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லாக் கிரியைகளும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது.’ ஆம், எருசலேமில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பலிபீடத்தில் யூதர்கள் எப்பேர்ப்பட்ட பலிகளைச் செலுத்தியபோதிலும், உண்மை வணக்கத்தை அவர்கள் புறக்கணித்ததால் அவையெல்லாம் ஏற்கத் தகாதவையாக ஆயின.—எஸ்றா 3:3.
கடவுளுடைய ஆதரவுக்கு உத்தரவாதம்
16. சகரியா கண்ட தரிசனங்களின் மூலம் யூதர்களுக்கு என்ன உறுதி அளிக்கப்பட்டது?
16 கடவுளுடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டும் யூதர்களுக்கு, அவருடைய ஆதரவு இருக்குமென்று உறுதி அளிக்கப்பட்டது; இந்த உறுதி, எட்டு தரிசனங்களின் மூலம் சகரியாவுக்கு அளிக்கப்பட்டது. யூதர்கள் கீழ்ப்படிதலுடன் ஆலயக் கட்டுமானப் பணியில் தொடர்ந்து ஈடுபடும்போது மட்டுமே அது நல்லபடியாக முடிவடையும் என்றும், எருசலேமும் யூதாவும் செழித்தோங்கும் என்றும் முதல் தரிசனம் உத்தரவாதம் அளித்தது. (சகரியா 1:8-17) உண்மை வணக்கத்தை எதிர்த்த அனைத்து அரசாங்கங்களும் முடிவுக்கு வருமென இரண்டாவது தரிசனம் வாக்குறுதி அளித்தது. (சகரியா 1:18-21) இன்னும் பல விஷயங்களை மற்ற தரிசனங்கள் உறுதிப்படுத்தின. அதாவது, கட்டுமானப் பணிக்குக் கடவுளுடைய பாதுகாப்பு இருக்கும், கட்டி முடிக்கப்பட்ட யெகோவாவின் ஆலயத்திற்கு அநேக தேசத்தார் திரண்டு வருவார்கள், மெய் சமாதானமும் பாதுகாப்பும் நிலவும், கடவுளுடைய வேலைக்கு எதிராக எழும்புகிற மலைபோன்ற தடைகள் தரைமட்டமாக்கப்படும், துன்மார்க்கம் ஒழிக்கப்படும், தேவதூதர்களின் கண்காணிப்பும் பாதுகாப்பும் கிடைக்கும் என்ற விஷயங்களையெல்லாம் அவை உறுதிப்படுத்தின. (சகரியா 2:5, 11; 3:10; 4:7; 5:6-11; 6:1-8) கடவுளுடைய ஆதரவு உண்டென்பதற்கு இவ்வாறு உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் காரணமாகவே, கீழ்ப்படிதலுள்ள ஆட்களால் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு, கடவுள் கொடுத்த வேலையில் முழு மூச்சுடன் ஈடுபட முடிந்தது.
17. நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்குமென்ற உத்தரவாதம் இருப்பதால், நம்மை நாமே என்ன கேட்டுக்கொள்ள வேண்டும்?
17 அதேபோல், யெகோவாவின் அடையாளப்பூர்வ ஆலயத்தில் மெய் வணக்கம் தழைத்தோங்குமென்ற உத்தரவாதம், வணக்கத்திற்கு நாம் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதற்கும், அது சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் நம்மைத் தூண்ட வேண்டும். ஆகையால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் இலட்சியங்களும் வாழ்க்கை முறையும் எதைக் காட்டுகின்றன? ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் சீஷர்களை உண்டாக்குவதற்கும் இதுவே ஏற்ற காலம் என நான் நம்புவதைக் காட்டுகின்றனவா? பைபிள் தீர்க்கதரிசனங்களைப் படிப்பதற்கு போதிய நேரம் செலவிடுகிறேனா? அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேனா? அதைப் பற்றி சக கிறிஸ்தவர்களிடமும் மற்றவர்களிடமும் பேசுகிறேனா?’
18. வருங்காலத்தில் என்ன நடக்குமென்று சகரியா 14-ம் அதிகாரம் சொல்கிறது?
18 மகா பாபிலோனின் அழிவைப் பற்றியும், அதன்பின் வரும் அர்மகெதோன் யுத்தத்தைப் பற்றியும் சகரியா இவ்வாறு குறிப்பிட்டார்: ‘ஒருநாள் உண்டு, அது யெகோவாவுக்குத் தெரிந்தது [அதாவது, யெகோவாவின் நாள்]; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.’ ஆம், யெகோவாவின் நாள் பூமியிலுள்ள அவரது எதிரிகளுக்கு உண்மையிலேயே இருளும் வேதனையும் நிறைந்த நாளாக இருக்கும்! ஆனால் யெகோவாவின் உண்மை வணக்கத்தாருக்கோ ஒளியும் கிருபையும் நிறைந்த நாளாக இருக்கும். புதிய உலகத்திலுள்ள அனைத்துமே யெகோவாவின் பரிசுத்தத்தை எப்படிப் பறைசாற்றும் எனவும் சகரியா விவரித்தார். கடவுளுடைய மாபெரும் அடையாளப்பூர்வ ஆலயத்தின் மெய் வணக்கம் மட்டுமே அப்போது பூமியில் இருக்கும். (சகரியா 14:7, 16-19) எவ்வளவு அருமையான உத்தரவாதம்! முன்னறிவிக்கப்பட்ட காரியங்களெல்லாம் நிறைவேறுவதையும், யெகோவாவின் சர்வலோகப் பேரரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படுவதையும் நாம் காண்போம். யெகோவாவின் அந்த நாள் எப்பேர்ப்பட்ட நிகரற்ற நாளாக இருக்கும்!
நிரந்தர ஆசீர்வாதங்கள்
19, 20. சகரியா 14:8, 9 ஏன் ஊக்கமூட்டுவதாய் இருக்கிறது?
19 அந்த வியத்தகு நாளுக்குப் பிறகு, பிசாசாகிய சாத்தானும் அவனைச் சேர்ந்த தூதர்களும் பாதாளத்திற்கு, அதாவது செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, காவலில் வைக்கப்படுவார்கள். (வெளிப்படுத்துதல் 20:1-3, 7) அதன்பின் தொடங்கும் கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியில் மனிதர்கள் அநேக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். சகரியா 14:8, 9 வசனங்கள் இவ்வாறு சொல்கின்றன: ‘அந்நாளிலே ஜீவ தண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரி காலத்துக்கும் கோடை காலத்துக்கும் இருக்கும். அப்பொழுது யெகோவா பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.’
20 நித்திய ஜீவனை அளிப்பதற்கு யெகோவா செய்துள்ள ஏற்பாடுகளை அடையாளப்படுத்தும் “ஜீவ தண்ணீர்கள்,” அதாவது “ஜீவ தண்ணீருள்ள சுத்தமான நதி,” மேசியாவின் சிங்காசனத்திலிருந்து வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும். (வெளிப்படுத்துதல் 22:1, 2) அர்மகெதோனில் தப்பிப்பிழைக்கும் திரள்கூட்டமாகிய யெகோவாவின் வணக்கத்தார் ஆதாமிடமிருந்து பெற்ற மரணத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள். இறந்தவர்கள்கூட உயிர்த்தெழுப்பப்படுவார்கள்; ஆக, பூமியெங்கும் யெகோவாவுடைய அரசாட்சியின் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும். பூமியில் வாழும் மனிதரெல்லாரும் யெகோவாவே சர்வலோகப் பேரரசர் என்பதையும், அவர் மட்டுமே நம் வணக்கத்தைப் பெறத் தகுதியானவர் என்பதையும் புரிந்திருப்பார்கள்.
21. நாம் என்ன தீர்மானத்தை எடுக்க வேண்டும்?
21 ஆகாய், சகரியா தீர்க்கதரிசனங்களையும் அவற்றின் நிறைவேற்றங்களையும் பார்க்கும்போது, யெகோவாவுடைய அடையாளப்பூர்வ ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரத்தில் நமக்கு நியமிக்கப்பட்டுள்ள வேலையில் தொடர்ந்து நாம் முன்னேற வேண்டுமென்பது நன்றாகவே தெரிகிறது. மெய் வணக்கம் பூரண நிலையை அடையும் காலம் வரும்வரை, ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுக்க நாம் அனைவருமே அரும்பாடுபடுவோமாக. சகரியா 8:9 இவ்வாறு நம்மை ஊக்குவிக்கிறது: “தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டு வருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது.”
நினைவிருக்கிறதா?
• ஆகாய், சகரியா காலத்தில் நடந்த சம்பவங்கள் நம்முடைய நாளில் நடக்கும் சம்பவங்களோடு எப்படி ஒத்திருக்கின்றன?
• முதலிடம் கொடுக்க வேண்டிய விஷயத்தைப் பற்றி ஆகாய், சகரியா புத்தகங்கள் நமக்கு என்ன பாடத்தை அளிக்கின்றன?
• ஆகாய், சகரியா தீர்க்கதரிசனங்களைச் சிந்திப்பது, எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையோடு இருக்க நமக்கு ஏன் உதவுகிறது?
[பக்கம் 26-ன் படம்]
முழு ஆத்துமாவோடு வேலை செய்து, ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி ஆகாயும் சகரியாவும் யூதர்களை ஊக்கப்படுத்தினார்கள்
[பக்கம் 27-ன் படங்கள்]
‘உங்கள் வீட்டுக் காரியத்திற்காகவே ஓடுகிறீர்களா’?
[பக்கம் 28-ன் படம்]
யெகோவா ஓர் ஆசீர்வாதத்தை வழங்குவதாக வாக்குக் கொடுத்தார், அதை நிறைவேற்றியும் இருக்கிறார்