யெகோவா எதிர்பார்ப்பவற்றை செய்வது அவரை மகிமைப்படுத்துகிறது
“அவரை ஸ்தோத்திரத்தினால் [“நன்றியோடு,” NW] மகிமைப்படுத்துவேன்.”—சங்கீதம் 69:30.
1. (அ) மகிமையைப் பெற யெகோவா ஏன் தகுதியானவர்? (ஆ) நாம் எவ்வாறு நன்றியோடு அவரை மகிமைப்படுத்த முடியும்?
யெகோவா சர்வ வல்லமையுள்ள கடவுள், சர்வலோக பேரரசர், நம்மை படைத்தவர். ஆகவே அவருடைய பெயரும் நோக்கங்களும் மகிமையைப் பெற தகுதியானவை. யெகோவாவை மகிமைப்படுத்துவது என்றால் அவரை மிகவும் உயர்வாக மதித்து, சொல்லிலும் செயலிலும் அவரை புகழ்ந்து பாராட்டுவதைக் குறிக்கிறது. “நன்றியோடு” அவ்வாறு செய்வதென்றால், அவர் இப்போது நமக்காக செய்கிறவற்றிற்கும் எதிர்காலத்தில் செய்யப்போகிறவற்றிற்கும் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் குறிக்கிறது. நமக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை தேவை என வெளிப்படுத்துதல் 4:11 கூறுகிறது; அங்கு, பரலோகத்திலுள்ள உண்மையுள்ள ஆவி சிருஷ்டிகள் இவ்வாறு கூறுவதாக வாசிக்கிறோம்: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” நாம் எவ்வாறு யெகோவாவை மகிமைப்படுத்தலாம்? அவரைப் பற்றி கற்றுக்கொண்டு, அவர் எதிர்பார்ப்பவற்றை செய்வதன் மூலமே. “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்” என்று கூறிய சங்கீதக்காரனைப் போல நாமும் உணர வேண்டும்.—சங்கீதம் 143:10.
2. தம்மை மகிமைப்படுத்துவோரையும் மகிமைப்படுத்தாதோரையும் யெகோவா எவ்வாறு நடத்துகிறார்?
2 யெகோவாவை மகிமைப்படுத்துவோரை அவர் உயர்வாக மதிக்கிறார். எனவே, ஊக்கத்தோடு “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கி”றார். (எபிரெயர் 11:6) என்ன பலன் அளிக்கிறார்? “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என தம் பரலோக தகப்பனிடம் ஜெபிக்கையில் இயேசு கூறினார். (யோவான் 17:3) ஆம், ‘நன்றியோடு யெகோவாவை மகிமைப்படுத்துகிறவர்கள்’ “பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) மறுபட்சத்தில், “தீயவர்களுக்கு எதிர்காலம் இராது.” (நீதிமொழிகள் 24:20, NW) இந்தக் கடைசி நாட்களில் யெகோவாவை மகிமைப்படுத்துவது அவசரமாகும், ஏனெனில் சீக்கிரத்தில் அவர் துன்மார்க்கரை அழித்து நீதிமான்களை பாதுகாப்பார். “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17; நீதிமொழிகள் 2:21, 22.
3. மல்கியா புத்தகத்திற்கு நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
3 “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்பதால் யெகோவாவின் சித்தம் பைபிளில் உள்ளது. (2 தீமோத்தேயு 3:16) தம்மை மகிமைப்படுத்துவோரை யெகோவா எவ்வாறு ஆசீர்வதிக்கிறார், அப்படி செய்யாதோருக்கு என்ன நேரிடுகிறது என்பதைப் பற்றிய பல விவரிப்புகள் கடவுளுடைய வார்த்தையில் உள்ளன. அவற்றுள் ஒன்று மல்கியா தீர்க்கதரிசியின் காலத்தில் இஸ்ரவேலில் நடைபெற்றதாகும். நெகேமியா யூதாவில் ஆளுனராக இருந்தபோது ஏறக்குறைய பொ.ச.மு. 443-ல், மல்கியா தன் பெயரை தாங்கிய புத்தகத்தை எழுதினார். ‘உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்ட’ தகவல்களும் தீர்க்கதரிசனங்களும் இந்த சக்திவாய்ந்த, விறுவிறுப்பூட்டும் புத்தகத்தில் உள்ளன. (1 கொரிந்தியர் 10:11) மல்கியாவின் வார்த்தைகளுக்கு கவனம் செலுத்துவது, யெகோவா இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையை அழிக்கப்போகும் ‘கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாளுக்கு’ தயாராயிருக்க நமக்கு உதவும்.—மல்கியா 4:5.
4. மல்கியா முதல் அதிகாரத்தில் என்ன ஆறு குறிப்புகள் நம் கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றன?
4 மல்கியா புத்தகம் 2,400-க்கும் அதிக வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது; அப்படியிருக்க, யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாளுக்கு தயாராயிருக்க இந்த 21-வது நூற்றாண்டில் வாழும் நமக்கு அது எவ்வாறு உதவும்? யெகோவாவின் தயவையும் நித்திய ஜீவனையும் பெறும்படி நாம் நன்றியோடு அவரை மகிமைப்படுத்துவதற்கு அவசியமான குறைந்தது ஆறு முக்கிய குறிப்புகளை முதல் அதிகாரம் நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. (1) யெகோவா தம் மக்களிடம் அன்பு காட்டுகிறார். (2) நாம் பரிசுத்த காரியங்களை மதிப்பதை காண்பிக்க வேண்டும். (3) நம்மிடமுள்ள மிகச் சிறந்ததை கொடுக்கும்படியே யெகோவா எதிர்பார்க்கிறார். (4) பேராசை அல்ல, சுயநலமற்ற அன்பே உண்மை வணக்கத்திற்கு தூண்டுகோல். (5) கடவுளுக்கு செய்யும் ஏற்கத்தகுந்த சேவை வெறும் பாரமான சடங்கு அல்ல. (6) நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். ஆகவே, மல்கியா புத்தகத்தை விளக்கும் மூன்று கட்டுரைகளில் முதலாவதான இதில், மல்கியா முதல் அதிகாரத்தை கவனமாக ஆராய்ந்து இந்த ஒவ்வொரு குறிப்பையும் சிந்திப்போமாக.
யெகோவா தம் மக்களிடம் அன்பு காட்டுகிறார்
5, 6. (அ) யெகோவா ஏன் யாக்கோபிடம் அன்பு காட்டினார்? (ஆ) யாக்கோபின் உண்மைத்தன்மையை பின்பற்றினால் நமக்கு என்ன கிடைக்கும்?
5 மல்கியாவின் ஆரம்ப வசனங்களிலேயே யெகோவாவின் அன்பு தெளிவாக காட்டப்படுகிறது. “கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம்” என்ற வார்த்தைகளோடு அந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது. மேலுமாக, “நான் உங்களைச் சிநேகித்தேன்” என கடவுள் கூறுகிறார். அதற்கு ஓர் உதாரணமாக, “யாக்கோபை நான் சிநேகித்தேன்” என அதே வசனத்தில் யெகோவா கூறுகிறார். யாக்கோபு யெகோவா மீது விசுவாசம் வைத்திருந்தார். காலப்போக்கில், யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என யெகோவா மாற்றினார்; அவரே இஸ்ரவேல் தேசத்தின் முற்பிதாவானார். விசுவாசமுள்ளவராக இருந்ததால் யெகோவா யாக்கோபிடம் அன்பு காட்டினார். அவரைப் போலவே இஸ்ரவேலில் விசுவாசமுள்ளவர்களாய் இருந்த மற்றவர்களிடமும் யெகோவா அன்பு காட்டினார்.—மல்கியா 1:1, 2.
6 நாமும் யெகோவாவை நேசித்து உண்மையுடன் அவருடைய மக்களோடு சேர்ந்திருந்தால், 1 சாமுவேல் 12:22 சொல்வது நமக்கு ஆறுதலளிக்கும்: “கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.” யெகோவா தம்முடைய மக்களிடம் அன்பு காட்டுவதால் முடிவில் நித்திய ஜீவனைக் கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்கிறார். அதனால்தான், “கர்த்தரை நம்பி நன்மை செய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்” என வாசிக்கிறோம். (சங்கீதம் 37:3, 4) நாம் யெகோவாவை நேசிப்பதில் உட்பட்டுள்ள இரண்டாவது குறிப்பை மல்கியா முதல் அதிகாரம் நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது.
பரிசுத்த காரியங்களை மதிக்க வேண்டும்
7. யெகோவா ஏன் ஏசாவை வெறுத்தார்?
7 மல்கியா 1:2, 3-ல் வாசிக்கிற விதமாக, “யாக்கோபை நான் சிநேகித்தேன்” என்று சொன்ன பிறகு “ஏசாவையோ நான் வெறுத்தேன்” என யெகோவா கூறுகிறார். ஏன் இந்த பாகுபாடு? யாக்கோபு யெகோவாவை மகிமைப்படுத்தினார், அவருடன் இரட்டையராக பிறந்த ஏசாவோ அப்படி செய்யவில்லை. ஏசா, ஏதோம் என்றும் அழைக்கப்பட்டான். மல்கியா 1:4-ல் ஏதோம் தேசம் துன்மார்க்கத்தின் எல்லை என அழைக்கப்பட்டு அதன் குடிகள் கண்டனம் செய்யப்படுகின்றனர். கொஞ்சம் சிவப்பான கூழுக்காக ஏசா தனது மதிப்புமிக்க பிறப்புரிமையை யாக்கோபுக்கு விற்றதால் அவனுக்கு (“சிவப்பு” என அர்த்தம் தரும்) ஏதோம் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. “ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்” என ஆதியாகமம் 25:34 கூறுகிறது. “ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் [“பரிசுத்த காரியங்களை மதிக்க தவறுகிறவனாகவும்,” NW] இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்” என அப்போஸ்தலன் பவுல் தன் சக விசுவாசிகளை உந்துவித்தார்.—எபிரெயர் 12:14-16.
8. பவுல் ஏன் ஏசாவை ஒரு வேசிக்கள்ளனுக்கு ஒப்பிட்டார்?
8 பவுல் ஏன் ஏசாவின் செயல்களை வேசித்தனத்துடன் சம்பந்தப்படுத்தினார்? ஏனெனில், ஏசாவைப் போன்ற மனநிலை நமக்கிருந்தால் பரிசுத்த காரியங்களை அவமதிக்க வழிநடத்தப்படுவோம். இது, வேசித்தனம் போன்ற படுமோசமான பாவங்களை செய்ய தூண்டலாம். ஆகவே, நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்வது சாலச்சிறந்தது: ‘பயற்றங்கூழ் போன்ற நிலையற்ற ஒன்றிற்காக என் கிறிஸ்தவ ஆஸ்தியாகிய நித்திய ஜீவனை விட்டுக்கொடுக்க சில சமயங்களில் தூண்டப்படுகிறேனா? ஒருவேளை எனக்கே தெரியாமல் பரிசுத்த காரியங்களை அசட்டை செய்கிறேனா?’ தன் சரீர ஆசையை உடனடியாக திருப்தி செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏசாவுக்கு இருந்தது. அவன் யாக்கோபிடம், “சீக்கிரம், சிவப்பான அந்தக் கூழிலே நான் சாப்பிட தயவுசெய்து கொஞ்சம் தா” என்று கேட்டான். (ஆதியாகமம் 25:30, NW) கடவுளுடைய ஊழியர்களில் சிலர், “சீக்கிரம், முறையாக திருமணம் நடக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?” என கூறுவதுபோல் நடந்திருப்பது வருத்தகரமானது. எப்படியாவது பாலுறவு ஆசைகளை திருப்தி செய்துகொள்ள வேண்டும் என்பதே அவர்களுக்கு ‘பயற்றங்கூழாக’ இருந்திருக்கிறது.
9. யெகோவாவிடம் பயபக்தியை நாம் எவ்வாறு காத்துக்கொள்ளலாம்?
9 கற்பு, உத்தமத்தன்மை, நம் ஆவிக்குரிய ஆஸ்தி ஆகியவற்றை புறக்கணிக்காமல் இருப்போமாக; அதன் மூலம் பரிசுத்த காரியங்களை ஒருபோதும் அசட்டை செய்யாதிருப்போமாக. ஏசாவைப் போலில்லாமல், விசுவாசமுள்ள யாக்கோபைப் போல பரிசுத்த காரியங்களுக்கு ஆழ்ந்த மதித்துணர்வு காண்பித்து கடவுளிடம் பயபக்தியை காத்துக்கொள்வோமாக. இதை நாம் எவ்வாறு செய்யலாம்? யெகோவா எதிர்பார்ப்பவற்றை செய்ய கவனமாய் இருப்பதன் மூலமே. இது, மல்கியா முதல் அதிகாரம் குறிப்பிடும் மூன்றாவது முக்கிய குறிப்பை நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறது. அது என்ன?
நம்மிடமுள்ள மிகச் சிறந்ததை யெகோவாவுக்கு கொடுத்தல்
10. ஆசாரியர்கள் எவ்வாறு யெகோவாவின் பந்தியை அசட்டை செய்தார்கள்?
10 மல்கியாவின் காலத்தில் எருசலேமிலிருந்த ஆலயத்தில் சேவித்த யூத ஆசாரியர்கள் மிகச் சிறந்த பலிகளை யெகோவாவுக்கு செலுத்தவில்லை. மல்கியா 1:6-8 இவ்வாறு கூறுகிறது: “குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம் பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டை பண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்.” “உமது நாமத்தை எதினாலே அசட்டை பண்ணினோம்” என ஆசாரியர்கள் கேட்டனர். “என் பீடத்தின் மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே” என யெகோவா பதிலளித்தார். “உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம்” என ஆசாரியர்கள் கேட்டனர். “கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே” என யெகோவா அவர்களிடம் கூறினார். குறைபாடுள்ள பலிகளை செலுத்தும் ஒவ்வொரு சமயமும் “அது பொல்லாப்பல்ல” என்று கூறுவதன் மூலம் அந்த ஆசாரியர்கள் யெகோவாவின் பந்தியை அசட்டை செய்தார்கள்.
11. (அ) ஏற்றுக்கொள்ளத்தகாத பலிகளைப் பற்றி யெகோவா என்ன கூறினார்? (ஆ) பொதுமக்களும் எவ்வாறு குற்றமுள்ளவர்களாக இருந்தார்கள்?
11 ஏற்றுக்கொள்ளத்தகாத அப்படிப்பட்ட பலிகளைப் பற்றி யெகோவா அவர்களிடம் இவ்வாறு நியாயவிவாதம் செய்தார்: “அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன் மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ?” அப்படிப்பட்ட பரிசை அவர்களுடைய அதிபதி ஏற்றுக்கொள்ள மாட்டான். அப்படியிருக்க, சர்வலோக பேரரசர் குறைபாடுள்ள பலிகளை ஏற்றுக்கொள்வாரா? ஆசாரியர்கள் மட்டுமே குற்றமுள்ளவர்கள் அல்ல. அந்தப் பலிகளை செலுத்தியதால் யெகோவாவை அவர்கள் அசட்டை செய்தது உண்மைதான். ஆனால் பொதுமக்கள் மீது எந்தத் தவறும் இல்லாதிருந்ததா? அப்படி சொல்ல முடியாது! குருடான, முடமான, வியாதிப்பட்ட மிருகங்களைத் தேர்ந்தெடுத்து யெகோவாவுக்கு பலி செலுத்த ஆசாரியர்களிடம் கொண்டுவந்தது அவர்கள்தானே! அது எவ்வளவு பெரிய பாவம்!
12. நம்மிடமுள்ள மிகச் சிறந்ததை யெகோவாவுக்கு கொடுக்க நமக்கு என்ன உதவி கிடைக்கிறது?
12 நம்மிடமுள்ள மிகச் சிறந்ததை யெகோவாவுக்கு கொடுப்பதே அவரிடம் உண்மையாக அன்புகூருவதைக் காட்டுவதற்கான ஒரு வழியாகும். (மத்தேயு 22:37, 38) மல்கியாவின் நாளிலிருந்த, வழி தவறிய ஆசாரியர்களைப் போலில்லாமல் இன்று யெகோவாவின் அமைப்பு அருமையான பைபிள் போதனையை நமக்கு ஏராளமாக அளிக்கிறது; யெகோவா எதிர்பார்ப்பவற்றைச் செய்து அவரை மகிமைப்படுத்த இது நமக்கு உதவுகிறது. இது, மல்கியா முதல் அதிகாரத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் நான்காவது முக்கிய குறிப்போடு சம்பந்தப்பட்டது.
பேராசை அல்ல, சுயநலமற்ற அன்பே உண்மை வணக்கத்திற்கு தூண்டுகோல்
13. ஆசாரியர்களின் என்ன செயல் அவர்கள் பேராசையால் தூண்டப்பட்டிருந்ததை காண்பித்தது?
13 மல்கியாவின் நாளிலிருந்த ஆசாரியர்கள் சுயநலவாதிகள், அன்பற்றவர்கள், பண ஆசை பிடித்தவர்கள். இது நமக்கு எப்படி தெரியும்? மல்கியா 1:10 இவ்வாறு கூறுகிறது: “உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின் மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள் பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல.” ஆம், பேராசைமிக்க அந்த ஆசாரியர்கள் மிகவும் சாதாரணமான ஆலய சேவைகளை செய்வதற்குக்கூட பணம் கேட்டனர்! கதவுகளை மூடுவதற்கும் பலிபீடத்தில் நெருப்பு மூட்டுவதற்கும்கூட கூலி கேட்டனர்! அவர்கள் செலுத்திய காணிக்கையில் யெகோவாவுக்கு பிரியமில்லாமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை!
14. யெகோவாவின் சாட்சிகள் அன்பினால் தூண்டப்பட்டு செயல்படுகிறார்கள் என்று நாம் ஏன் சொல்லலாம்?
14 பூர்வ எருசலேமிலிருந்த பாவமுள்ள ஆசாரியர்களின் பேராசையும் சுயநலமும், கடவுளுடைய வார்த்தையின்படி பேராசைமிக்கவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை என்பதையே நமக்கு நினைப்பூட்டுகின்றன. (1 கொரிந்தியர் 6:9, 10) அந்த ஆசாரியர்களின் சுயநல போக்கை சிந்தித்துப் பார்க்கையில் யெகோவாவின் சாட்சிகள் செய்யும் உலகளாவிய பிரசங்க வேலைக்கான நமது போற்றுதல் இன்னும் அதிகமாகிறது. அது மனமுவந்து செய்யப்படும் ஊழியம், அதோடு சம்பந்தப்பட்ட எந்த வேலைக்காகவும் நாம் பணம் கேட்பதில்லை. நாம் ‘கடவுளுடைய வார்த்தையை விற்பனை செய்கிறவர்கள் அல்ல.’ (2 கொரிந்தியர் 2:17, NW) “சந்தோஷத்தோடு தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்[தேன்]” என்று சொன்ன பவுலைப்போல நாம் ஒவ்வொருவருமே உண்மையுடன் சொல்ல முடியும். (2 கொரிந்தியர் 11:7, NW) பவுல், ‘சந்தோஷத்தோடு சுவிசேஷத்தை பிரசங்கித்தார்’ என்பதை கவனியுங்கள். மல்கியா முதல் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்தாவது குறிப்பை இது நமக்கு நினைப்பூட்டுகிறது.
கடவுளுக்கு செய்யும் சேவை வெறும் பாரமான சடங்கு அல்ல
15, 16. (அ) பலிகள் செலுத்துவதில் ஆசாரியர்களுக்கு என்ன மனப்பான்மை இருந்தது? (ஆ) யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு பலிகளை செலுத்துகிறார்கள்?
15 பூர்வ எருசலேமிலிருந்த விசுவாசமற்ற ஆசாரியர்கள் பலிகள் செலுத்துவதை சலிப்பூட்டும் சடங்காக கருதினர். அது அவர்களுக்கு பாரமாக இருந்தது. மல்கியா 1:13-ல் (பொ.மொ.) உள்ளபடி, “‘எவ்வளவு தொல்லை!’ என்று அதைப்பற்றி இழிவாய்ப் பேசுகிறீர்கள்” என கடவுள் அவர்களிடம் கூறினார். அந்த ஆசாரியர்கள் கடவுளுடைய பரிசுத்த காரியங்களைக் குறித்து இழிவாய் பேசினர் அல்லது வெறுத்தனர். தனிப்பட்டவர்களாக நாம் ஒருபோதும் அவர்களைப்போல ஆகிவிடாமலிருக்க ஊக்கமாய் ஜெபிப்போமாக. அதற்கு மாறாக, 1 யோவான் 5:3-ல் காணப்படும் மனப்பான்மையே நமக்கு எப்போதும் இருப்பதாக: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.”
16 கடவுளுக்கு ஆவிக்குரிய பலிகள் செலுத்துவதில் நாம் சந்தோஷப்படுவோமாக, அதை சலிப்பூட்டும் சடங்காக ஒருபோதும் கருதாதிருப்போமாக. “அவரை [யெகோவாவை] நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்” என்ற தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவோமாக. (ஓசியா 14:2) ‘உதடுகளின் காளைகள்’ என்ற சொற்றொடர் ஆவிக்குரிய பலிகளை, யெகோவாவை துதிக்கவும் அவருடைய நோக்கங்களை அறிவிக்கவும் நாம் உபயோகிக்கும் வார்த்தைகளை குறிக்கின்றன. எபிரெயர் 13:15 கூறுவதாவது: “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் [இயேசு கிறிஸ்து] மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.” நமது ஆவிக்குரிய பலிகள் வெறும் சடங்குகளாக இல்லாமல் கடவுள் மீதுள்ள நம் அன்பின் இருதயப்பூர்வ வெளிக்காட்டுகளாய் இருப்பதற்காக நாம் எவ்வளவு சந்தோஷப்படுகிறோம்! மல்கியா முதல் அதிகாரத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஆறாவது குறிப்பிற்கு இது நம்மை வழிநடத்துகிறது.
ஒவ்வொருவரும் கணக்கு கொடுக்க வேண்டும்
17, 18. (அ) யெகோவா ஏன் ‘கபடஸ்தனை’ சபிக்கிறார்? (ஆ) இந்தக் கபடஸ்தர்கள் எதை சிந்திக்க தவறிவிட்டார்கள்?
17 மல்கியாவின் நாளில் வாழ்ந்த தனி நபர்கள் தங்கள் செயல்களுக்கு பொறுப்புள்ளவர்களாய் இருந்தனர், இன்று நம்மை பொருத்ததிலும் அதுவே உண்மை. (ரோமர் 14:12; கலாத்தியர் 6:5) இதன் காரணமாகவே, மல்கியா 1:14 இவ்வாறு கூறுகிறது: “தன் மந்தையில் [குறையற்ற ஒரு] கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்.” மந்தை வைத்திருந்தவனிடம் அநேக மிருகங்கள் இருந்தன; அவனிடம் ஒரே ஒரு விலங்கு, அதாவது ஒரு ஆடு மாத்திரமே இருந்திருந்தால் வேறு வழியே இல்லை என்று சொல்லலாம். ஆகவே, பலி செலுத்த ஒரு மிருகத்தை தெரிவு செய்கையில், குருடான, முடமான, வியாதிப்பட்ட ஒன்றை அவன் தேர்ந்தெடுக்க அவசியமே இல்லை. அப்படியிருந்தும் குறைபாடுள்ள ஒரு மிருகத்தை அவன் தேர்ந்தெடுத்தால் யெகோவாவுக்குப் பலி செலுத்தும் ஏற்பாட்டை அவமதிக்கிறான் என்றுதானே அர்த்தம்? ஒரு மந்தைக்கே சொந்தக்காரனாக இருப்பவனுக்கு எந்தக் குறையுமில்லாத ஒரு விலங்கை கண்டுபிடிப்பதா கஷ்டம்?
18 ஆகவே, பொருத்தமான ஒரு ஆண் மிருகம் தன் வசம் இருந்தும் குருடான, முடமான அல்லது வியாதிப்பட்ட ஒன்றை பலியிடுவதற்காக ஆசாரியனிடம் இழுத்துக்கொண்டு வந்த கபடஸ்தனை யெகோவா சபிப்பதில் தவறேதும் இல்லையே! என்றாலும், குறைபாடுள்ள மிருகத்தை பலியிடக்கூடாது என எந்தவொரு ஆசாரியனும் நியாயப்பிரமாண சட்டத்தைச் சுட்டிக் காட்டி விளக்கியதாக ஒரு குறிப்பும் இல்லை. (லேவியராகமம் 22:17-20) அப்படிப்பட்ட பரிசை நல்லதென கூறி தங்கள் அதிபதியிடம் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என நியாயமாய் சிந்தித்த எவரும் உணர்ந்திருப்பார். ஆனால், எந்த மானிட அதிபதியையும்விட மிக உயர்ந்த சர்வலோக பேரரசராகிய யெகோவாவுக்கு அதை இப்போது செலுத்தினர்! எனவே மல்கியா 1:14 இவ்வாறு கூறுகிறது: “என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”
19. நாம் எதற்காக ஏங்குகிறோம், எதை செய்துகொண்டிருக்க வேண்டும்?
19 மகத்துவமான ராஜாவாகிய யெகோவாவை மனிதவர்க்கம் முழுவதுமே பயபக்தியோடு வணங்கும் அந்த நாளைக் காண அவருடைய உண்மையுள்ள ஊழியர்களாகிய நாம் ஏங்குகிறோம். அந்தச் சமயத்தில், “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9) அதுவரையில், “அவரை ஸ்தோத்திரத்தினால் [“நன்றியோடு,” NW] மகிமைப்படுத்துவேன்” என்று கூறிய சங்கீதக்காரனைப் போல் யெகோவா எதிர்பார்ப்பவற்றை செய்ய நம்மாலான அனைத்தையும் செய்வோமாக. (சங்கீதம் 69:30) அதற்கு உதவ, மல்கியாவின் தீர்க்கதரிசனம் கூடுதலான ஆலோசனை அளிக்கிறது, அதுவும் நமக்கு பயனளிக்கும். ஆகவே, பின்வரும் இரண்டு கட்டுரைகளில் கலந்தாராயப்படும் மல்கியா புத்தகத்தின் மீதி பாகத்திற்கு கூர்ந்து கவனம் செலுத்துவோமாக.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• நாம் ஏன் யெகோவாவை மகிமைப்படுத்த வேண்டும்?
• மல்கியாவின் நாளில் ஆசாரியர்கள் செலுத்திய பலிகள் ஏன் யெகோவாவுக்கு ஏற்கத்தகுந்தவையாக இல்லை?
• நாம் எவ்வாறு யெகோவாவுக்கு துதியின் பலியை செலுத்துகிறோம்?
• எது உண்மை வணக்கத்திற்கு தூண்டுகோலாக அமைய வேண்டும்?
[பக்கம் 9-ன் படம்]
மல்கியா தீர்க்கதரிசனம் நம் நாளை சுட்டிக்காட்டியது
[பக்கம் 10-ன் படம்]
ஏசா பரிசுத்த காரியங்களை மதிக்கவில்லை
[பக்கம் 11-ன் படம்]
ஆசாரியர்களும் மக்களும் ஏற்கத்தகாத பலிகளை செலுத்தினர்
[பக்கம் 12-ன் படம்]
உலகமுழுவதிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் இலவசமாக துதியின் பலிகளை செலுத்துகின்றனர்