பைபிள் புத்தக எண் 39—மல்கியா
எழுத்தாளர்: மல்கியா
எழுதப்பட்ட இடம்: எருசலேம்
எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 443-க்கு பின்
மல்கியா யார்? அவருடைய வம்சாவளி அல்லது அவரைப் பற்றிய தனிப்பட்ட எந்த விவரமும் பதிவு செய்யப்பட்டில்லை. எனினும், அவர் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கும் விதத்தைப் பார்த்தால், யெகோவா தேவன் மேல் அவருக்கிருந்த பக்தி வைராக்கியம் தெளிவாக தெரிகிறது. யெகோவாவுடைய பெயரையும் தூய்மையான வணக்கத்தையும் அவர் ஆதரித்தது புலனாகிறது. அதோடு, கடவுளை சேவிப்பதாக சொல்லிக்கொண்டு தங்களையே சேவித்துக்கொள்பவர்கள் மேல் அவர் கடுங்கோபத்தை வெளிப்படுத்துவதையும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. அவருடைய தீர்க்கதரிசனத்தின் நான்கு அதிகாரங்களில் யெகோவாவின் பெயர் 48 தடவை குறிப்பிடப்பட்டுள்ளது.
2 எபிரெயுவில் அவருடைய பெயர் மலாக்கி (Mal·ʼa·khiʹ) என்பதாகும். இதன் அர்த்தம் “என் தூதுவன்” என்பதாக இருக்கலாம். எபிரெய வேதாகமம், செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு, வேதவாக்கியங்களின் காலவரிசைப் பட்டியல் ஆகிய அனைத்துமே மல்கியா புத்தகத்தை சிறிய தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்படுகிற 12 புத்தகங்களில் கடைசியாக வைக்கின்றன. கிரேட் சினகாக் பாரம்பரியத்தின்படி அவர் ஆகாய், சகரியா தீர்க்கதரிசிகளுக்கு பிறகும் நெகேமியாவின் காலத்திலும் வாழ்ந்தவர்.
3 இந்தத் தீர்க்கதரிசனம் எப்போது எழுதப்பட்டது? ஒரு தேசாதிபதி ஆட்சிசெய்த காலத்தின்போது எழுதப்பட்டது. ஆகவே இது, யூதாவின் 70 ஆண்டு பாழ்க்கடிப்பிற்கு பிறகு எருசலேம் திரும்ப நிலைநாட்டப்பட்ட காலத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும். (மல். 1:8) ஆனால் எந்தத் தேசாதிபதி? ஆலய சேவை பற்றி குறிப்பிடப்பட்டாலும் ஆலயம் கட்டப்படுவதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லாததால் இது தேசாதிபதி செருபாபேலின் காலத்திற்கு பின்பே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், அவருடைய ஆட்சிக் காலத்தின்போதே ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இந்தக் காலப்பகுதியின்போது சேவித்த மற்றொரு தேசாதிபதியைப் பற்றி மட்டுமே வேதவாக்கியங்கள் குறிப்பிடுகின்றன, அவரே நெகேமியா. இந்தத் தீர்க்கதரிசனம் நெகேமியாவின் காலத்திற்கு பொருந்துகிறதா? எருசலேமும் அதன் மதிலும் திரும்ப கட்டப்படுவது பற்றி எந்தக் குறிப்பும் மல்கியாவில் இல்லை. ஆகவே இது, நெகேமியா தேசாதிபதியான சமயத்தின் ஆரம்பத்தில் எழுதப்பட்டிருக்க முடியாது. எனினும், ஆசாரியர்கள் செய்த தவறான செயல்களைப் பற்றி அதிகம் சொல்லப்படுகிறது. அர்தசஷ்டாவின் 32-ம் ஆண்டாகிய பொ.ச.மு. 443-ல் அவர் நெகேமியாவை பாபிலோனுக்கு திரும்ப அழைத்தார். அதற்கு பிறகு நெகேமியா இரண்டாவது முறையாக எருசலேமிற்கு வந்தபோது அங்கிருந்த நிலைமை மல்கியாவின் விவரிப்பிற்கு நன்றாக பொருந்துகிறது. (மல். 2:1; நெ. 13:6) இந்தத் தீர்க்கதரிசனம் இந்தக் காலத்திற்கு பொருந்துகிறது என மல்கியாவிலும் நெகேமியாவிலும் காணப்படும் ஒரே மாதிரியான விவரங்கள் நிரூபிக்கின்றன.—மல். 2:4-8, 11, 12—நெ. 13:11, 15, 23-26; மல். 3:8-10—நெ. 13:10-12.
4 மல்கியா புத்தகம் நம்பகமானது என யூதர்கள் எப்போதுமே ஏற்றுக்கொண்டனர். அதன் தீர்க்கதரிசன நிறைவேற்றங்களைக் காட்டும் அநேக மேற்கோள்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் உள்ளன. இவை அனைத்தும், மல்கியா தேவாவியால் ஏவப்பட்டது என்பதையும் கிறிஸ்தவ சபை ஏற்றுக்கொண்டிருந்த எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது என்பதையும் நிரூபிக்கின்றன.—மல். 1:2, 3—ரோ. 9:13; மல். 3:1—மத். 11:10-ம் லூக். 1:76-ம் 7:27-ம்; மல். 4:5, 6—மத். 11:14-ம் 17:10-13-ம், மாற். 9:11-13-ம் லூக். 1:17-ம்.
5 ஆலயம் திரும்ப கட்டப்பட்ட சமயத்தில் தீர்க்கதரிசிகளாகிய ஆகாயும் சகரியாவும் தூண்டியெழுப்பின மத ஆர்வமும் ஊக்கமும் தணிந்து போய்விட்டதை மல்கியாவின் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. ஆசாரியர்கள் அக்கறையற்ற, அகந்தையுள்ள, சுய நீதிமான்களாக ஆகிவிட்டனர். ஆலய சேவைகள் இகழ்ச்சிக்குரிய ஒன்றாகிவிட்டன. கடவுள் இஸ்ரவேலில் அக்கறையுடையவராக இல்லை என்ற எண்ணத்தின் காரணமாக தசமபாகங்களும் காணிக்கைகளும் நின்றுபோயின. செருபாபேலில் வைக்கப்பட்ட நம்பிக்கைகள் நிறைவேறவில்லை, சிலர் எதிர்பார்த்ததுபோல மேசியாவும் வரவில்லை. யூதர்களின் ஆவிக்குரிய நிலைமை படுமோசமாக இருந்தது. அவர்களுக்கு ஊக்கமூட்டி, நம்பிக்கையூட்ட என்ன ஆதாரம் இருந்தது? அந்த ஜனங்களின் உண்மையான நிலைமையை அவர்களுக்கு உணர்த்தி, நீதியின் பாதைக்கு திரும்பும்படி அவர்களை விழிப்பூட்டுவது எவ்வாறு? மல்கியா தீர்க்கதரிசனம் பதிலளித்தது.
6 மல்கியாவின் எழுத்துநடை நேரடியாகவும் சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது. அவர் தான் கூற விரும்பும் கருத்தை முதலில் கூறுகிறார், பின்பு தனக்கு செவிகொடுப்போரின் எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கிறார். கடைசியாக, தான் ஆரம்பத்தில் கூறிய கருத்தையே மீண்டும் வலியுறுத்தி கூறுகிறார். இதனால் அவருடைய விவாதம் உறுதியையும் தெளிவையும் பெறுகிறது. அதிக நாவன்மையுடன் பேசுவதற்கு பதிலாக அவர் நேரடியான, சக்திவாய்ந்த விவாத நடையை உபயோகிக்கிறார்.
மல்கியாவின் பொருளடக்கம்
7 ஆசாரியர்களுக்கு யெகோவாவின் கட்டளை (1:1–2:17). முதலில் யெகோவா தம்முடைய ஜனத்தின் மேல் தமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறார். அவர் யாக்கோபை நேசித்து ஏசாவை வெறுத்தார். ஏதோம் அதன் பாழாக்கப்பட்ட இடங்களைக் கட்ட முயற்சி செய்யட்டும், யெகோவா அவற்றை இடித்துப்போடுவார். அவர்கள் “துன்மார்க்கத்தின் எல்லை” என்றும் யெகோவா கண்டனம் தெரிவித்த ஜனம் என்றும் அழைக்கப்படுவார்கள். ஏனெனில் யெகோவா “இஸ்ரவேலுடைய எல்லை துவக்கி மகிமைப்படுத்தப்படுவார்.”—1:4, 5.
8 இப்போது யெகோவா, ‘தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களிடம்’ நேரடியாக பேசுகிறார். அவர்கள் தங்கள்மேல் குற்றமில்லை என்று காட்ட முயலுகையில் அவர்களுடைய குருடும், முடமும், நோயுற்றதுமான பலிகளை யெகோவா குறிப்பிட்டு காட்டி, அதிபதியும்கூட இத்தகைய பலிகளை அங்கீகரிப்பானோ என்று கேட்கிறார். யெகோவாவுக்கும் அவற்றில் எந்தப் பிரியமும் இல்லை. அவருடைய பெயர் தேசங்களுக்குள்ளே மகிமைப்பட வேண்டும், ஆனால் இவர்களோ, “கர்த்தருடைய பந்தி அசுத்தமானது” என்று சொல்லி அவரை நிந்திக்கிறார்கள். மதிப்பற்ற பலிகளை செலுத்தி, தாங்கள் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றாமல் தந்திரமாய் விலகிப்போனதால் அவர்கள்மீது சாபம் வரும். ஏனெனில், “என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”—1:6, 12, 14.
9 யெகோவா இப்போது ஆசாரியர்களுக்கு ஒரு கட்டளை கொடுக்கிறார். அவர்கள் இந்த ஆலோசனையை இருதயத்தில் ஏற்கவில்லை என்றால் அவர்கள் மீதும் அவர்களுடைய ஆசீர்வாதங்கள் மீதும் சாபத்தை அனுப்புவதாக அவர் கூறுகிறார். அவர்கள் லேவியின் உடன்படிக்கையை கடைப்பிடிக்க தவறியதால் அவர்களுடைய பண்டிகைகளின் சாணத்தை அவர்களுடைய முகங்கள் மீதே இறைப்பார். ஏனெனில், “ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.” (2:7) மல்கியா இப்போது இஸ்ரவேல் மற்றும் யூதாவின் பெரும் பாவத்தை அறிக்கையிடுகிறார். அவர்கள் ஒருவருக்கொருவர் துரோகம்பண்ணி, அந்நிய கடவுளை வணங்கும் பெண்ணை மணமகளாக ஏற்பதன்மூலம் தங்கள் தகப்பனும் சிருஷ்டிகருமாகிய யெகோவாவின் பரிசுத்தத்தை அவமதித்திருக்கிறார்கள். யெகோவாவை மட்டுக்குமீறி வருத்தப்படுத்திவிட்டார்கள். “நியாயந்தீர்க்கிற தேவன் எங்கே” என்றுங்கூட கேட்டார்கள்.—2:17.
10 உண்மையான ஆண்டவரும் தூதரும் (3:1-18). இந்தத் தீர்க்கதரிசனம் இப்பொழுது உச்சக்கட்டத்தை எட்டுகிறது. “சேனைகளின் யெகோவா”வே இந்த வார்த்தைகளைக் கூறுகிறார்: “இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாக போய் வழியை ஆயத்தம் பண்ணுவான். அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதரும் அவருடைய ஆலயத்திற்கு விரைந்துவருவார். இதோ! அவர் நிச்சயமாய் வருவார்.” (3:1, NW) புடமிடுபவராக அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து தமக்கு பயப்படாத பொல்லாதவர்களுக்கு எதிராக தீவிரமான சாட்சியாவார். யெகோவா மாறாதவர்; அவர்கள் யாக்கோபின் புத்திரராக இருப்பதன் காரணமாக அவர்கள் தம்மிடம் திரும்பினால் அவர் இரக்கத்துடன் அவர்களிடம் திரும்புவார்.
11 அவர்கள் இதுவரை கடவுளை கொள்ளையிட்டார்கள். ஆனால் இப்போது அவருடைய வீட்டில் ஆகாரம் இருக்கும்படி தங்கள் தசமபாகங்களைப் பண்டசாலைக்குள் கொண்டுவருவதன் மூலம் அவர்கள் கடவுளை சோதித்து பார்க்கட்டும். வானத்தின் மதகுகளைத் திறந்து தம்முடைய ஆசீர்வாதத்தை முழு நிறைவாக பொழிவாரென்ற நம்பிக்கையுடன் அவ்வாறு செய்யட்டும். மகிழ்ச்சியுள்ளவர்கள் என்று சகல தேசத்தாரும் கூறும் இன்ப தேசமாக அவர்கள் ஆவார்கள். யெகோவாவுக்கு பயப்படுவோர் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள், யெகோவா அவர்கள் பேசுவதை கவனித்து கேட்டுக்கொண்டிருந்தார். “கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்”பட தொடங்கினது. (3:16) தனக்கென ஒரு விசேஷமான உடைமையை அவர் உண்டுபண்ணும் நாளில் அவர்கள் நிச்சயமாகவே யெகோவாவுக்கு உரியவர்கள் ஆவார்கள்.
12 யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் (4:1-6). பொல்லாதவர்களுக்கு வேரையும் கொப்பையும் விட்டுவைக்காமல் அவர்களை அழிக்க வரவிருக்கும் நாள் இதுவே. ஆனால் யெகோவாவின் பெயருக்கு பயப்படுவோர்மீது நீதியின் சூரியன் பிரகாசிக்கும், அவர்கள் ஆரோக்கியம் அடைவார்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தை நினைவுகூரும்படி யெகோவா அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்கு முன்பாக அவர் தீர்க்கதரிசியாகிய எலியாவை அனுப்புவதாக வாக்கு கொடுக்கிறார். “நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.”—4:6.
ஏன் பயனுள்ளது
13 யெகோவா தேவனின் மாறாத நியமங்களையும் இரக்கமுள்ள அன்பையும் புரிந்துகொள்ள மல்கியா புத்தகம் உதவுகிறது. யெகோவாவின் ஜனமாகிய ‘யாக்கோபின்’மீது அவர் வைத்திருந்த மிகுதியான அன்பை அது ஆரம்பத்திலேயே வலியுறுத்துகிறது. “யெகோவாவாகிய நான் மாறாதவர்” என்று அவர் யாக்கோபின் புத்திரருக்கு அறிவித்தார். தம்முடைய மக்கள் மிகுதியான அக்கிரமம் செய்தபோதிலும், அவர்கள் தம்மிடம் திரும்பினால் அவரும் அவர்களிடம் திரும்ப தயாராக இருந்தார். எவ்வளவு இரக்கமுள்ள கடவுள்! (மல். 1:2; 3:6, 7, தி.மொ.; ரோ. 11:28; யாத். 34:6, 7) ஆசாரியனின் உதடுகள் “அறிவைக் காக்கவேண்டும்” என மல்கியா மூலம் யெகோவா அறிவுறுத்தினார். கடவுளுடைய வார்த்தையை கற்பிக்கும் பொறுப்பு பெற்ற அனைவரும் இந்தக் குறிப்பிற்கு கவனம் செலுத்தி, தாங்கள் திருத்தமான அறிவை மட்டுமே போதிக்கிறார்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். (மல். 2:7; பிலி. 1:9-11; ஒப்பிடுக: யாக்கோபு 3:1.) “பொல்லாப்பைச் செய்கிறவனெவனும் கர்த்தரின் பார்வைக்கு நல்லவன்” என காட்ட முயற்சிக்கும் மாய்மாலக்காரரை யெகோவா சகிப்பதில்லை. இந்த மகத்துவமான ராஜாவுக்கு பலி செலுத்துவதைப் போல வேஷம்போட்டு அவரை ஏமாற்றிவிடலாம் என்று ஒருவரும் நினைக்கக்கூடாது. (மல். 2:17; 1:14; கொலோ. 3:23, 24) யெகோவாவுடைய நீதியுள்ள சட்டங்களையும் நியமங்களையும் மீறும் யாவருக்கும் விரோதமாக அவர் தீவிரமான சாட்சியாக இருப்பார்; பொல்லாப்பை செய்தாலும் தப்பிக்கொள்ளலாம் என ஒருவரும் எதிர்பார்க்க முடியாது. யெகோவா அவர்களை நியாயந்தீர்ப்பார். (மல். 3:5; எபி. 10:30, 31) யெகோவா நீதிமான்களின் செயல்களை நினைவுகூர்ந்து நிச்சயம் பலனளிப்பார் என்று அவர்கள் முழுமையாக நம்பலாம். இயேசு செய்ததைப்போலவே அவர்களும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கவனம் செலுத்த வேண்டும்; ஏனெனில் அவரில் நிறைவேற்றமடைந்த பல காரியங்கள் அதில் அடங்கியுள்ளன.—மல். 3:16; 4:4; லூக். 24:44, 45.
14 தேவாவியால் ஏவப்பட்ட எபிரெய வேதாகமத்தின் கடைசி புத்தகமான மல்கியா, மேசியாவின் வருகையோடு தொடர்புடைய சம்பவங்களை முன்னுரைக்கிறது. அவ்வாறே அவர் நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு தோன்றினார், அதுவே கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை எழுதுவதற்கான காரணத்தை அளித்தது. மல்கியா 3:1-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி சேனைகளின் யெகோவா இவ்வாறு கூறினார்: “இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாக போய் வழியை ஆயத்தம் பண்ணுவான்.” முதிர்வயதான சகரியா, இது தன் குமாரனாகிய முழுக்காட்டுபவனான யோவானில் நிறைவேறியது என தேவாவியால் ஏவப்பட்டு கூறினார். (லூக். 1:76) இயேசு கிறிஸ்துவும் இதை உறுதிசெய்தார், அதேசமயம் அவர் பின்வருமாறு கூறினார்: “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோக ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறான்.” மல்கியா முன்னறிவித்தபடி, யோவான் ‘வழியை ஆயத்தம் பண்ணுவதற்காக’ அனுப்பப்பட்டார். ஆகவே, பிற்காலத்தில் இயேசு ஒரு ராஜ்யத்திற்காக உடன்படிக்கை செய்தவர்கள் மத்தியில் யோவான் இருக்கவில்லை.—மத். 11:7-12; லூக். 7:27, 28; 22:28-30.
15 பின்பு மல்கியா 4:5, 6-ல் (NW) யெகோவா இந்த வாக்குறுதியைக் கொடுத்தார்: “இதோ! நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.” இந்த “எலியா” யார்? இயேசுவும் சகரியாவுக்கு தோன்றின தேவதூதனும் இந்த வார்த்தைகளை முழுக்காட்டுபவரான யோவானுக்கு பொருத்தினார்கள். அவரே ‘எல்லாவற்றையும் சீர்படுத்தி,’ மேசியாவை ஏற்றுக்கொள்ளும் “உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்து”கிறவர் என்றும் காட்டினார்கள். எனினும், “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்” வருவதற்கு முன்னே “எலியா” தோன்றுவார் என்றும் மல்கியா சொல்லுகிறார். இவ்வாறு, எதிர்கால நியாயத்தீர்ப்பு நாளில் இது மற்றொரு நிறைவேற்றத்தைக் காணும் என்று குறிப்பிடுகிறார்.—மத். 17:11; லூக். 1:17; மத். 11:14; மாற். 9:12.
16 அந்த நாளைப் பற்றி முன்னறிவிப்பவராய் சேனைகளின் யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் . . . என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா.” உண்மையில் பயங்கரமாய் இருக்கிறது அல்லவா! ஏனெனில் ‘அந்த நாள் சூளையைப்போல் எரியும், அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்.’ எனினும், யெகோவாவின் பெயருக்கு பயப்படுவோர் மகிழ்ச்சியுள்ளவர்கள், அவர்களுக்காக “நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்.” இது, கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் அனைவரும் முழுமையாக குணமடையும் அந்தச் சந்தோஷமான காலத்தைக் குறிக்கிறது. அப்போது அவர்கள் ஆவிக்குரிய விதமாக, உணர்ச்சிப்பூர்வமாக, மானசீக ரீதியில், சரீரப்பிரகாரமான விதத்தில் குணமடைவர். (வெளி. 21:3, 4) மகிமையும் ஆசீர்வாதமுமான அந்த நாளைக் குறிப்பிடும் மல்கியா, யெகோவாவின் வீட்டுக்குள் நம்முடைய காணிக்கையை முழு இருதயத்தோடு கொண்டுவரும்படி நம்மை ஊக்கப்படுத்துகிறார்: “அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”—மல். 1:11, 14; 4:1, 2; 3:10.
17 தீர்க்கதரிசிகளின் இந்தக் கடைசி புத்தகம், ‘பூமியானது சங்காரத்தால் அழிக்கப்படும்’ என்று தொடர்ந்து எச்சரிக்கிறது. அதேசமயம், யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு பின்வருமாறு வாக்குறுதி கொடுத்திருப்பதால் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும்கூட அளிக்கிறது: “அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும்.”—4:6; 3:12.
[கேள்விகள்]
1. மல்கியா யெகோவாமீது வைத்திருந்த வைராக்கியத்தை எது சுட்டிக்காட்டுகிறது?
2. மல்கியாவுடைய பெயரின் அர்த்தம் என்னவாக இருக்கலாம், அவர் எப்போது வாழ்ந்ததாக தோன்றுகிறது?
3. மல்கியா தீர்க்கதரிசனம் பொ.ச.மு. 443-க்கு பின் எழுதப்பட்டது என்று எது காட்டுகிறது?
4. மல்கியா புத்தகம் நம்பகமானது தேவாவியால் ஏவப்பட்டது என எது நிரூபிக்கிறது?
5. என்ன மோசமான ஆவிக்குரிய நிலைமை மல்கியாவை தீர்க்கதரிசனம் உரைக்க தூண்டியது?
6. மல்கியாவின் எழுத்துநடை எவ்வாறு உள்ளது?
7. யாரிடம் அன்பையும் யாரிடம் வெறுப்பையும் யெகோவா வெளிப்படுத்துகிறார்?
8. ஆசாரியர்கள் யெகோவாவின் மேசையை எந்த விதத்தில் அசட்டை பண்ணினார்கள், ஏன் அவர்கள்மீது ஒரு சாபம் வரும்?
9. ஆசாரியர்கள் எதில் தவறினார்கள், யெகோவாவின் பரிசுத்தத்தை அவர்கள் எவ்வாறு அவமதித்தார்கள்?
10. என்ன நியாயத்தீர்ப்பு வேலைக்காக ஆண்டவர் தம்முடைய ஆலயத்திற்கு வருகிறார்?
11. அவர்கள் இப்பொழுது கடவுளை எவ்வாறு சோதித்து பார்க்க வேண்டும், என்ன ஆசீர்வாதங்கள் பின்தொடரும்?
12. யெகோவாவின் பயங்கரமான நாளைக் குறித்து என்ன வாக்குறுதி அளிக்கப்படுகிறது?
13. பின்வருபவற்றைக் குறித்து மல்கியா என்ன சொல்கிறார்: (அ) யெகோவாவின் இரக்கமும் அன்பும்? (ஆ) கடவுளுடைய வார்த்தையை போதிப்பவர்களின் பொறுப்பு? (இ) கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் மீறுபவர்கள்?
14. (அ) மல்கியா முக்கியமாய் எதைப் பற்றி முன்னறிவிக்கிறார்? (ஆ) மல்கியா 3:1 பொ.ச. முதல் நூற்றாண்டில் எவ்வாறு நிறைவேற்றமடைந்தது?
15. மல்கியா தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்படுகிற “எலியா” யார்?
16. ஆசீர்வாதமான எந்த நாளைப் பற்றி மல்கியா முன்னறிவிக்கிறார், எவ்வாறு அன்புடன் உற்சாகமூட்டுகிறார்?
17. மல்கியா எச்சரிப்புகள் செய்தபோதிலும் என்ன நம்பிக்கையான எதிர்பார்ப்பை அளிக்கிறார்?