வேதவாக்கியங்கள் கற்பிக்கும் பாடங்கள்: மல்கியா 1:1–4:6
உண்மையான கர்த்தர் நியாயத்தீர்ப்புசெய்ய வருகிறார்
“கடவுளைச் சேவிப்பது வீணே.” (மல்கியா 3:14, தி.மொ.) பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில் மல்கியா தீர்க்கதரிசனம் உரைத்தபோது கடவுளுடைய சொந்த ஜனமே இத்தகைய சந்தேக மனப்பான்மையை வெளிப்படுத்திக் கூறினது. ஏன்? ஏனெனில் யூதாவில், முக்கியமாய் ஆசாரியருக்குள், வருந்தத்தக்க நிலைமைகள் இருந்துவந்தன. தன்னல லாபமே அவர்களுடைய முதன்மையான நோக்கமாயிருந்தது. நேர்முகமான மற்றும் சக்திவாய்ந்த முறையில், மல்கியா அந்தப் பாசாங்குக்காரரான மதத் தலைவர்களை வெளிப்படுத்தி, உண்மையான கர்த்தர் நியாயத்தீர்ப்பு செய்ய வருகிறாரென எச்சரித்தான்.—மல்கியா 1:6-8; 2:6-9; 3:1.
மல்கியாவின் தீர்க்கதரிசனம் நம்முடைய சொந்த நாளில் ஒரு நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கிறது. ஆகையால், அதில் அடங்கியுள்ள பாடங்களை நாம் ஆழ்ந்து கவனிப்பது நல்லது.
கடவுளுடைய பெயரை அவமதித்தல்
தம்முடைய ஜனங்கள் தங்களுடைய மிகச் சிறந்ததை அளிக்கும்படி யெகோவா எதிர்பார்க்கிறார். முதலாவதாகத் தம் ஜனத்துக்குத் தம்முடைய அன்பைக் கடவுள் வெளிப்படுத்துகிறார். எனினும், ஆசாரியர்கள், பலிசெலுத்துவதற்குக் குருடான, நோயுற்ற, மற்றும் நொண்டியான மிருகங்களை ஏற்பதனால் அவருடைய பெயரை அவமதிக்கின்றனர். தங்ளைத் தாங்களே சேவித்துக்கொள்ளும் ஆசாரியர்களிலோ அவர்களுடைய கைகளின் கீழ்த்தரமான காணிக்கைகளிலோ யெகோவா மகிழ்ச்சி கொள்ளுகிறதில்லை. அவர்கள் என்ன செய்தபோதிலும், யெகோவாவின் பெயர் “ஜாதிகளுக்குள் பயத்தைத்-தூண்டுவதாயிருக்கும்.”—1:1-14, தி.மொ.; NW.
போதகராய் இருப்பவர்களுக்குக் கனத்தப் பொறுப்புண்டு. (யாக்கோபு 3:1) ஆசாரியர்கள் “சட்டத்தில் பலரை இடறச் செய்தி”ருக்கின்றனர்.” (NW) எவ்வாறு? கடவுளுடைய சட்டத்தில் ஜனங்களைக் கற்பித்துப் பயிற்றுவிக்கத் தவறுவதாலும் பட்சபாதம் காட்டுவதாலுமே. யெகோவா சரியாகவே அவர்கள்பேரில் கோபங்கொள்ளுகிறார், ஏனெனில், “ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; [ஜனங்கள்] வேதத்தை அவன் வாயிலே தேட”வேண்டும்.”—2:1-9.
திருமண ஏற்பாட்டுக்கு அவமதிப்பு காட்டுவோரை யெகோவா எளிதாகக் கருதுகிறதில்லை. கடவுளுடைய சட்டத்துக்கு எதிர்மாறாக, யூதா மனிதர் அந்நியரை மனைவிகளாகக் கொண்டனர். (உபாகமம் 7:3, 4) தங்கள் இளவயதின் மனைவிகளைத் தள்ளிவிட்டதனால் அவர்களுக்குத் துரோகம் பண்ணினார்கள். யெகோவா “தள்ளிவிடுதலை வெறுக்கி”றார், என்று மல்கியா எச்சரிக்கிறான்.—2:10-17.
நியாயத்தீர்ப்பும் சுத்திகரிப்பும்
தவறுசெய்தலை யெகோவா என்றென்றும் பொறுத்துக்கொண்டிருப்பதில்லை. “உண்மையான கர்த்தர்,” “உடன்படிக்கையின் தூத”னோடுகூட தம்முடைய ஆலயத்துக்கு வருவார். அவர் லேவியின் புத்திரரைப் புடமிட்டுச் சுத்திகரிப்பார். சூனியக்காரருக்கும், விபசாரக்காரருக்கும், பொய்யாணை இடுவோருக்கும், வஞ்சித்து அபகரிப்போருக்கும், ஒடுக்குவோருக்கும் எதிராக யெகோவா தீவிரமான சாட்சியாவார்.—3:1-5.
யெகோவாவுக்குத் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தாமல் நிறுத்திவைத்துக்கொள்பவர்கள் தங்களையே ஏழ்மையாக்கிக்கொள்கிறார்கள். யெகோவா மாறாதவர். தாறுமாறாய் நடக்கும் அந்த ஜனங்கள் அதைவிட்டுத் தம்மிடம் திரும்பினால், அவர் இரக்கமாய் அவர்களிடம் திரும்புவார். தசமபாகங்களையும் காணிக்கைகளையும் செலுத்தாமல் அவர்கள் கடவுளைக் கொள்ளையிட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் தசமபாகங்களை அவர்கள் கொண்டுவந்தால், “இடங்கொள்ளாமற்போகுமட்டும்” ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணுவாரென யெகோவா வாக்குக்கொடுக்கிறார். குறைபடாத பலனை அவர்கள் அனுபவிப்பார்கள்.—3:6-12.
யெகோவாவின் கண்கள் அவருடைய ஜனங்களின்மீதிருக்கின்றன. தமக்கு விரோதமாய்க் கடின வார்த்தைகளைப் பேசினவர்களுடன் கடவுள் விவாதிக்கிறார். அதற்கு மாறாக, தமக்குப் பயப்படுவோர் சொல்வதை உற்றுக் கவனித்துக் கேட்கிறார். “அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காக” “ஞாபகப் புஸ்தகம் ஒன்று” எழுதப்படும். நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் உள்ள வேறுபாட்டை அவருடைய ஜனங்கள் காண்பார்கள்.—3:13-18.
யெகோவாவின் நாள் வருகிறது!
யெகோவாவின் நாள் துன்மார்க்கருக்கு முழு அழிவைக் குறிக்கும். யெகோவாவின் நாள் வருகிறது, எரிகிற சூளையில் அரிதாள்களைப்போல் துன்மார்க்கர் பொசுக்கப்பட்டுப்போவர். ‘வேரோ கொப்போ’ விட்டுவைக்கப்படாமல் அவர்கள் முழுமையாய் அழிக்கப்படுவர். யெகோவாவின் பெயருக்குப் பயப்படுகிறவர்களோவெனில், “நீதியின் சூரிய”னுடைய சுகப்படுத்தும் நன்மைகளை அனுபவித்து மகிழ்வார்கள். இந்தப் பயங்கர நாள் வருவதற்கு முன்னால், திரும்பப் புதுப்பிக்கும் ஒரு வேலையைச் செய்வதற்குத் தீர்க்கதரிசியாகிய எலியாவை யெகோவா அனுப்புவார்.—4:1-6.
இன்றைக்குரிய பாடங்கள்: வணக்கத்தைக் கருதுகையில், தம்முடைய ஜனங்கள் தங்கள் மிகச் சிறந்ததை அளிக்கும்படி யெகோவா கேட்கிறார். (மத்தேயு 22:37, 38-ஐ ஒத்துப் பாருங்கள்.) கடவுளுடைய வார்த்தையின் போதகர்கள் சரியானபடி கற்பித்து உண்மைவணக்கத்தில் மற்றவர்களை வழிநடத்தும்படியான பொறுப்புடையோராக இருக்கின்றனர். திருமணத்துக்குச் சரியான மதிப்புக் காட்டத் தவறுவோர்மீதும் தவறுசெய்வதில் ஈடுபடுவோர்மீதும் நீதியின் கடவுளுடைய கண்கள் நோக்கமாயிருக்கின்றன என்பதை நாம் நினைவில் வைப்பது நல்லது. “யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் வர” நாம் ஆவலோடு காத்திருக்கையில் உண்மையான கர்த்தரின் புடமிடும் மற்றும் சுத்திகரிக்கும் நடவடிக்கைக்கு நாம் மனத்தாழ்மையுடன் நம்மைக் கீழ்ப்படுத்துவோமாக! (w89 7⁄1)
[பக்கம் 31-ன் பெட்டி]
வேத வசனங்களை ஆராய்தல்
● 1:10—தன்னல, பணப்பசி கொண்ட ஆசாரியர்கள் தன்னல லாபத்துக்கே சேவித்துக்கொண்டிருந்தனர். கதவுகளை மூடுதல் அல்லது பலிபீட நெருப்புகளை எரியச் செய்தல் ஆகியவற்றைப்போன்ற மிக எளிய ஆலய சேவைகளுக்காக அவர்கள் சம்பளம் கேட்டார்கள். யெகோவா ‘அவர்களுடைய கைகளின் காணிக்கைகளில் பிரியங்கொள்ளாததில்’ அதிசயமொன்றுமில்லை! (NW).
● 1:13—உண்மையற்ற ஆசாரியர்கள் அந்தப் பலிகளைச் சலிப்பூட்டும் ஆசாரமென, பாரச் சுமையென கருதும் நிலைக்கு வந்திருந்தார்கள். யெகோவாவின் பரிசுத்தக் காரியங்களின்பேரில் வெறுப்புச் சைகைத் தெரிவித்தார்கள், அல்லது அவற்றை ஏளனஞ்செய்தார்கள். “நம்முடைய உதடுகளின் காளைகள்” வெறும் ஆசாரமாகச் செலுத்தப்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது!—ஓசியா 14:2; எபிரெயர் 13:15.
● 2:13—யூதக் கணவர்கள் பலர் தங்கள் இளவயதின் மனைவிகளை விவாகரத்துச் செய்துகொண்டிருந்தனர், ஒருவேளை புறமத இளம்பெண்களை மணம்செய்துகொள்வதற்தாக அவ்வாறு செய்திருக்கலாம். யெகோவாவின் பலிபீடம் கண்ணீரால் நிரம்பிருந்தது—அவை, கடவுள் முன்னிலையில் தங்கள் துக்கத்தை ஊற்றிவிட பரிசுத்த ஸ்தலத்துக்கு வந்த அந்தத் தள்ளப்பட்ட மனைவிகளின் கண்ணீர்களெனத் தெரிகிறது.—மல்கியா 2:11, 14, 16.
x● 3:1—“ஆண்டவர்” (“உண்மையான கர்த்தர்,” NW) யெகோவா தேவனே. “உடன்படிக்கையின் தூதன்” இயேசு கிறிஸ்து. இந்தத் தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றம் இயேசு ஆலயத்தைச் சுத்திகரித்தபோது நடந்தேறியது. (மாற்கு 11:15-17) இது, அவர் அரசர்-நியமனம் பெற்றவராக அபிஷேகஞ்செய்யப்பட்டு மூன்றரை ஆண்டுகளுக்கப்பால் ஆகும். இவ்வாறே 1914-ன் இலையுதிர் காலத்தில் இயேசு அரசராக சிங்காசனத்திலேற்றப்பட்டதற்கு மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் யெகோவாவுடன் சேர்ந்து ஆவிக்குரிய ஆலயத்துக்கு வந்து, கடவுளுடைய ஜனங்கள் புடமிடப்படவும் சுத்திகரிக்கப்படவும் வேண்டிய தேவையில் இருப்பதைக் கண்டார்.
● 3:2, 3—புடமிடும் பூர்வ முறை நேரமெடுத்தது. ஆகையால், புடமிடுபவன் பெரும்பாலும் “உட்கார்ந்து,” அந்த உருக்கப்பட்ட உலோகம், மிக உச்ச அளவில் பளப்பளப்பாக்கப்பட்ட கண்ணாடியைப்போல் எதிரொளிவீசி, அவன் தன் உருவத்தை அதில் காண முடிகிறவரையில் காத்திருப்பான். அவ்வாறே, யெகோவா இன்று, தம்முடைய ஜனத்தைத் தொடர்ந்து புடமிட்டு அசுத்தமான போதகங்களையும் பழக்கங்களையும் நீக்கிச் சுத்திகரிக்கிறார். இது அவருடைய சாயலை மேலுமதிகத் திருத்தமாய்ப் பிரதிபலிக்க அவர்களுக்கு உதவிசெய்திருக்கிறது.—எபேசியர் 5:1.
● 4:2—இது, கடவுளுடைய பெயருக்குப் பயப்படுவோர் அனுபவித்து மகிழப்போகிற எதிர்கால ஆசீர்வாதங்களின் விவரிப்பாகும். மனிதக் குடும்பத்தைத் தொல்லைப்படுத்தின உடல், மன, மற்றும் உணர்ச்சி சம்பந்தமான நோய்கள் சுகப்படுத்தப்படுகையில், கடவுளுடைய தயவுக்குரிய சூரிய ஒளியை மகிழ்ந்தனுபவிக்கும் எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
● 4:5—இந்தத் தீர்க்கதரிசனம் கொடுக்கப்பட்டதற்கு ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்கதரிசி எலியா வாழ்ந்தான். பொ.ச. முதல் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்து, முழுக்காட்டுபவன் யோவானை முன்னறிவிக்கப்பட்ட எலியாவின் மறுபடிவமென அடையாளங்காட்டினார். (மத்தேயு 11:12-14; மாற்கு 9:11-13) எனினும், “எலியா” “யெகோவாவின் நாளின்” முன்னோடியாக இருக்கவேண்டும், இது, கிறிஸ்து “வந்திருக்கும்” இக்காலத்தில் மேலுமான நிறைவேற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறது.—2 தெசலோனிக்கேயர் 2:1, 2, NW.
[பக்கம் 30-ன் படம்]
தம்முடைய பூமிக்குரிய ஊழியகாலத்தின்போது, இயேசு ஆலயத்தைச் சுத்திகரித்தார். 1918-ல் கடவுளுடைய ஜனங்களைச் சுத்திகரிக்க அவர் யெகோவாவுடன்கூட ஆவிக்குரிய ஆலயத்துக்கு வந்தார்