மிக மகத்தான பெயரின் புதிரைத் தெளிவாக்குதல்
முகமதிய குர்ஆனும் கிறிஸ்தவ பைபிளும் அந்த மிக மகத்தான பெயரைக் குறிப்பிடுவது அக்கறைக்குரியது. இந்தக் கலந்தாலோசிப்பு அந்த மிக மகத்தான பெயரின் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது. அந்தப் பெயர் எப்படி முழு மனிதவர்க்கத்தையும் இங்கு பூமியில் நம்முடைய எதிர்காலத்தையும் பாதிக்கிறது என்பதையும் காண்பிக்கிறது.
இந்தப் பூமியில் இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் வாழ்ந்து, இறந்திருக்கின்றனர். பெரும்பாலானவர்களின் காரியத்தில், அவர்களோடு அவர்களுடைய பெயர்களும் இறந்துவிட்டிருக்கின்றன; மேலும் அவர்களைப் பற்றிய நினைவும் மறக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மகத்தான பெயர்கள்—அவெசெனா, எடிசன், பாஸ்டர், பேத்தோவென், காந்தி, நியூட்டன் போன்றவை—தொடர்ந்து வாழ்கின்றன. இந்தப் பெயர்கள், அவற்றைத் தாங்கியோரின் சாதனைகள், கண்டுபிடிப்புகள், மற்றும் புதிய புனைவுகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.
இருந்தாலும், மற்ற எல்லாவற்றையும்விட மகத்தான பெயர் ஒன்று இருக்கிறது. இந்த முழு பிரபஞ்சத்தின் கடந்தகால மற்றும் தற்போதைய எல்லா அதிசயங்களும் அதோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஏன், நீண்ட, மகிழ்ச்சிகர வாழ்க்கைக்கான மனிதவர்க்கத்தின் நம்பிக்கை இந்தப் பெயருடன் சம்பந்தப்பட்டிருக்கிறதே!
அநேகர் இந்தப் பெயரை அறியவர விரும்பியிருக்கின்றனர். அவர்கள் அதற்காகத் தேடியிருக்கின்றனர், வினவியிருக்கின்றனர், ஆனால் அவர்கள் அதைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்கு அது ஒரு புதிராகவே இருந்திருக்கிறது. உண்மையில், அதன் சொந்தக்காரர் அதை அவருக்கு வெளிப்படுத்தினாலொழிய ஒரு மனிதனும் இந்தப் பெயரைக் கண்டுபிடிக்க முடியாது. மகிழ்ச்சிக்குரியவிதத்தில், இந்த இணையற்ற பெயரின் புதிர் தெளிவாக்கப்பட்டுள்ளது. தம்மை நம்புகிறவர்கள் தம்மைப் பற்றி அறிந்துகொள்ளும்படி கடவுள் தாமே இதைச் செய்திருக்கிறார். ஆதாமுக்கும், பின்னர் ஆபிரகாம், மோசே, மற்றும் தம்முடைய பண்டைய காலத்து மற்ற உண்மையுள்ள ஊழியர்களுக்கும் அவர் தம்முடைய பெயரை வெளிப்படுத்தினார்.
மிக மகத்தான பெயருக்கான தேடுதல்
‘இறைவேத ஞானமுடைய’ ஒருவரைப் பற்றி குர்ஆன் சொல்லுகிறது. (27:40) இந்த வசனத்தை விளக்குகையில், டாஃப்செர் ஷாலல்யன் எனப்பட்ட விளக்கவுரை சொல்லுகிறது: “பார்க்கீயாவின் மகன் ஆசாஃப் ஒரு நீதிமானாக இருந்தான். அவன் கடவுளின் மிக மகத்தான பெயரை அறிந்திருந்தான்; மேலும் அவன் அதைக் கூப்பிட்டபோதெல்லாம், பதிலளிக்கப்பட்டான்.” இது பைபிள் எழுத்தாளரான ஆசாபை நமக்கு நினைவுபடுத்துகிறது; அவர் சங்கீதம் 83:17-ல் இவ்வாறு சொன்னார்: “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உண”ர வேண்டும்.
குர்ஆன் 17:2-ல் நாம் வாசிக்கிறோம்: ‘நாம் மூஸா நபிக்கு வேதத்தை அருளினோம். இஸ்ரவேலர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அருளினோம்.’ அந்த வேத எழுத்துக்களில், இவ்வாறு சொல்லி மோசே கடவுளிடம் பேசுகிறார்: “நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்.” பின்வருமாறு சொல்வதன்மூலம் கடவுள் மோசேக்குப் பதிலளித்தார்: “ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம்.”—யாத்திராகமம் 3:13, 15.
பண்டைய காலங்களில், கடவுளுடைய இந்த மகத்தான பெயரை இஸ்ரவேலர் அறிந்திருந்தனர். அவர்களுடைய சொந்த பெயர்களின் ஒரு பாகமாகக்கூட அது பயன்படுத்தப்பட்டது. “கடவுளின் ஊழியன்” என்று அர்த்தங்கொள்ளும் அப்துல்லா என்ற பெயரை ஒருவர் தற்போது காண்பதுபோல், பண்டைய இஸ்ரவேல் மக்கள், “யெகோவாவின் ஊழியன்” என்று அர்த்தங்கொள்ளும் ஒபதியா என்ற பெயரைக் கொண்டிருந்தனர். மோசே தீர்க்கதரிசியின் தாய் யோகெபேத் என்று பெயரிடப்பட்டிருந்தாள்; அது “யெகோவா மகிமையுள்ளவர்” என்று அர்த்தம் கொண்டிருக்கவேண்டும். யோவான் என்ற பெயர் “யெகோவா கிருபை உள்ளவராய் இருந்திருக்கிறார்” என்று அர்த்தம் கொள்கிறது. எலியா தீர்க்கதரிசியின் பெயர், “என்னுடைய கடவுள் யெகோவா” என்று அர்த்தம் கொள்கிறது.
தீர்க்கதரிசிகள் இந்த மகத்தான பெயரை அறிந்திருந்தனர்; அதை ஆழ்ந்த மரியாதையுடன் பயன்படுத்தினர். அது பரிசுத்த வேத எழுத்துக்களில் 7,000 தடவைகளுக்கு மேல் காணப்படுகிறது. மரியாளின் மகன் இயேசு கிறிஸ்து, கடவுளிடம் தம்முடைய ஜெபத்தில் பின்வருமாறு சொன்னபோது அதைச் சிறப்பித்துக்காட்டினார்: “நீர் . . . எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். . . . நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கு . . . உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்.” (யோவான் 17:6, 26) குர்ஆனைப்பற்றிய தன்னுடைய குறிப்பிடத்தக்க விளக்கவுரையில், பைடாவீ, குர்ஆன் 2:87-ஐப்பற்றி குறிப்பிடுகிறார்; இயேசு “கடவுளுடைய மிக மகத்தான பெயரால் இறந்த ஆட்களை உயிர்ப்பித்துக்” கொண்டிருந்தார் என்று சொல்கிறார்.
அப்படியானால், அந்தப் பெயரை ஒரு புதிராக்கும்படி என்ன சம்பவித்தது? நம் ஒவ்வொருவரின் எதிர்காலத்துடனும் அந்தப் பெயருக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது?
அந்தப் பெயர் ஒரு புதிரானது எப்படி?
எபிரெயுவில் “யெகோவா” என்பது “அல்லா” (கடவுள்) என்று அர்த்தப்படுகிறது என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் “அல்லா” என்பது எபிரெய “எலோஹிம்” (ʼElo·himʹ) என்பதற்கு ஒத்திருக்கிறது; இது எலோஹா (ʼelohʹah) (கடவுள்) என்ற வார்த்தையின் மாட்சிமைக்குரிய பன்மை. யூதர்கள் மத்தியில் ஒரு மூடநம்பிக்கை எழும்பியது; அது அவர்களைத் தெய்வீக நாமமாகிய யெகோவாவை உச்சரிப்பதிலிருந்து தடை செய்தது. ஆகவே, அவர்கள் பரிசுத்த வேத எழுத்துக்களை வாசித்துக்கொண்டிருந்தபோது, யெகோவா என்ற பெயரைப் பார்த்ததும், “கர்த்தர்” என்று அர்த்தமுடைய அடோனை (ʼAdho·naiʹ) என்று சொல்வது அவர்களுடைய பழக்கமாகிவிட்டது. சில இடங்களில், “யெகோவா”வுக்குப் பதில் அடோனை என்பதாக மூல எபிரெய வாசகத்தைக்கூட அவர்கள் மாற்றி அமைத்தனர்.
கிறிஸ்தவமண்டல மதத் தலைவர்கள் அதே போக்கைப் பின்பற்றினர். அவர்கள் யெகோவா என்ற பெயரை “கடவுள்” (அரபிக்கில் “அல்லா”) மற்றும் “கர்த்தர்” என்பவற்றால் மாற்றீடு செய்தனர். பரிசுத்த வேத எழுத்துக்களில் எந்த அடிப்படையையும் கொண்டிராத திரித்துவம் என்ற பொய்க் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு அது உதவியது. இதன் காரணமாக, கோடிக்கணக்கானோர் தவறாக இயேசுவையும் பரிசுத்த ஆவியையும் வணங்கி, அவர்களைக் கடவுளுக்குச் சமமாகக் கருதுகின்றனர்.a
எனவே, யூதமத மற்றும் கிறிஸ்தவமண்டலத் தலைவர்கள் மிக மகத்தான பெயரைப்பற்றிய மிகப்பரவலான அறியாமைக்கான குற்றப்பொறுப்பில் பங்கேற்கின்றனர். ஆனால் கடவுள் தீர்க்கதரிசனமுரைத்தார்: “என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம் பண்ணுவேன்; . . . அப்பொழுது புறஜாதிகள் . . . நான் கர்த்தர் [யெகோவா, NW] என்பதை அறிந்துகொள்வார்கள்.” ஆம், எல்லா ஜாதிகளுக்குள்ளும் யெகோவா தம்முடைய பெயரைத் தெரியப்பண்ணுவார். ஏன்? ஏனென்றால், அவர் வெறும் யூதர்களுக்கு அல்லது மற்ற ஏதோ ஒரு தனிப்பட்ட ஜாதி அல்லது மக்களுக்கு மட்டும் கடவுளல்ல. யெகோவா முழு மனிதவர்க்கத்தின் கடவுள்.—எசேக்கியேல் 36:23; ஆதியாகமம் 22:18; சங்கீதம் 145:21; மல்கியா 1:11.
மிக மகத்தான பெயரும் நம் எதிர்காலமும்
பரிசுத்த வேத எழுத்துக்கள் சொல்கின்றன: “யெகோவாவின் பெயரின்பேரில் கூப்பிடுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.” (ரோமர் 10:13, NW) நியாயத்தீர்ப்பு நாளில் நம்முடைய இரட்சிப்பு, நாம் கடவுளுடைய பெயரை அறிந்திருப்பதுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும். அவருடைய பெயரை அறிந்திருத்தல், அவருடைய குணாதிசயங்கள், கிரியைகள், மற்றும் நோக்கங்களை அறிந்திருப்பதையும், அவருடைய உயர்ந்த நியமங்களுக்கு இசைவாக வாழ்வதையும் உட்படுத்துகிறது. உதாரணமாக, ஆபிரகாம் கடவுளுடைய பெயரை அறிந்திருந்தார்; அந்தப் பெயரை நோக்கிக் கூப்பிட்டார். அதன் விளைவாக, அவர் கடவுளுடன் ஒரு நல்ல உறவை அனுபவித்துக் களித்தார், அவரில் விசுவாசம் வைத்தார், அவரைச் சார்ந்திருந்தார், மேலும் அவருக்குக் கீழ்ப்படிந்தார். இவ்வாறு ஆபிரகாம் கடவுளின் நண்பனானார். அதேவிதமாக, கடவுளுடைய பெயரை அறிந்திருத்தல், நம்மை அவரிடம் நெருங்கிவரச் செய்து, அவருடைய அன்பில் விடாமல் நிலைத்திருந்து, அவருடன் ஒரு தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள உதவிசெய்கிறது.—ஆதியாகமம் 12:8; சங்கீதம் 9:10; நீதிமொழிகள் 18:10; யாக்கோபு 2:23.
நாம் பைபிளில் இவ்வாறு வாசிக்கிறோம்: “கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் [பெயரின்பேரில் சிந்திப்பவர்களுக்காகவும், NW] ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.” (மல்கியா 3:16) நாம் ஏன் இந்த மகத்தான பெயரின்‘பேரில் சிந்திக்க’வேண்டும்? யெகோவா என்ற பெயர் சொல்லர்த்தமாக, “அவர் ஆகும்படி செய்கிறவர்” என்று பொருள்படுகிறது. வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவராகத் தம்மை ஆக்கிக்கொள்ளும் ஒருவராக இது யெகோவாவைக் காண்பிக்கிறது. அவர் எப்போதும் தம்முடைய நோக்கங்களைக் கைகூடிவரப்பண்ணுகிறார். அவரே சர்வவல்லமையுள்ள கடவுள், எல்லா நல்ல குணங்களையும் உடைய ஒரே சிருஷ்டிகர். கடவுளுடைய தெய்வீக தன்மையை முழுமையாக விவரிக்கக்கூடிய எந்த ஒரு தனி வார்த்தையும் இல்லை. ஆனால் கடவுள் அந்த மகத்தான பெயர்—யெகோவா—என்பதைத் தமக்குத்தாமே தேர்ந்தெடுத்தார்; அது அவருடைய எல்லா குணங்களையும், பண்புகளையும், நோக்கங்களையும் மனதிற்குக் கொண்டுவருகிறது.
பரிசுத்த வேத எழுத்துக்களில், மனிதவர்க்கத்திடமான தம்முடைய நோக்கங்களைக் கடவுள் நமக்குச் சொல்கிறார். பரதீஸில் ஒரு நித்திய, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிப்பதற்காக யெகோவா தேவன் மனிதனைச் சிருஷ்டித்தார். எல்லா மக்களும், அன்பிலும் சமாதானத்திலும் ஒன்றுபட்ட ஒரு குடும்பத்தை உருவாக்கவேண்டும் என்பதே மனிதவர்க்கத்திற்கான அவருடைய சித்தம். கூடிய சீக்கிரத்தில், அன்பின் கடவுள் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவார்.—மத்தேயு 24:3-14, 32-42; 1 யோவான் 4:14-21.
கடவுள், மனிதவர்க்கத்தின் துன்பத்திற்கான காரணங்களை விவரித்து, இரட்சிப்பு கூடிய காரியம் என்பதைக் காண்பிக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:4) சங்கீதம் 37:10, 11-ல் நாம் வாசிக்கிறோம்: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—குர்ஆன் 21:105-ஐயும் பார்க்கவும்.
ஆம், கடவுள் தம்முடைய மகத்தான பெயரால் அறியப்படுவார். அவர் யெகோவா என்பதை ஜாதிகள் அறிந்துகொள்ள வேண்டும். அந்த மிக மகத்தான பெயரை அறிந்திருப்பது, அதற்காகச் சான்று பகர்வது, அதைப் பற்றிக்கொண்டு இருப்பது என்னே ஓர் அற்புதமான சிலாக்கியம்! அந்தவிதத்தில் கடவுளுடைய சந்தோஷமான நோக்கம் நம் ஒவ்வொருவரிலும் நிறைவேற்றப்படும்: “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; . . . நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.”—சங்கீதம் 91:14-16.
[அடிக்குறிப்புகள்]
a திரித்துவம் ஒரு பைபிள் போதனை அல்ல என்பதற்கான நிரூபணத்திற்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் 1989-ல் பிரசுரிக்கப்பட்ட நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேட்டைப் பாருங்கள்.
[பக்கம் 5-ன் படம்]
எரிகிற செடியில், கடவுள் தம்மைத்தாமே ‘ஆபிரகாமின் கடவுளாகிய, யெகோவா’ என்று மோசேக்கு அடையாளங்காட்டினார்
[படத்திற்கான நன்றி]
Moses and the Burning Bush, by W. Thomas, Sr.