யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
மல்கியா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
எ ருசலேமிலுள்ள ஆலயம் திரும்பக் கட்டி முடிக்கப்பட்டு 70-க்கும் அதிகமான ஆண்டுகள் உருண்டோடி விட்டன. என்றாலும், காலம் செல்லச்செல்ல யூதர்களின் ஆன்மீக நிலை படுமோசமாகிக் கொண்டே வருகிறது. ஆசாரியர்களும்கூட ஊழல் பேர்வழிகளாகிவிட்டனர். அவர்களுடைய உண்மை நிலையை உணர்த்தி, கடவுளிடம் நெருங்கி வருவதற்கு யார் அவர்களுக்கு உதவுவார்? மல்கியா தீர்க்கதரிசிக்கு அந்தப் பொறுப்பை யெகோவா கொடுக்கிறார்.
எபிரெய வேதாகமத்தின் இந்தக் கடைசி புத்தகத்தில் மல்கியா வலிமைமிக்க எழுத்து நடையைப் பயன்படுத்தியிருக்கிறார்; இதில் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட தீர்க்கதரிசனம் உள்ளது. மல்கியாவின் தீர்க்கதரிசன வார்த்தைக்குச் செவிசாய்ப்பது, இந்தப் பொல்லாத உலகிற்கு முடிவுகட்டவிருக்கிற ‘கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாளுக்கு’ தயாராயிருக்க நமக்கு உதவும்.—மல்கியா 4:5.
ஆசாரியர் ‘அநேகரை இடறப்பண்ணினார்கள்’
“நான் உங்களைச் சிநேகித்தேன்” என்று சொல்வதன்மூலம் இஸ்ரவேலரிடம் தமக்குள்ள பாசத்தை யெகோவா தெரிவிக்கிறார். ஆனால், ஆசாரியர்களோ கடவுளுடைய பெயரை அவமதித்தார்கள். எப்படி? அவருடைய ‘பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலும்’ “காலூனமானதையும் நசல் பிடித்ததையும்” பலியிடுகிறதினாலுமே.—மல்கியா 1:2, 6-8.
ஆசாரியர்கள், ‘அநேகரை வேதத்தைக் குறித்து இடறப்பண்ணினார்கள்.’ மக்கள் ஒருவருக்கொருவர் ‘துரோகம் பண்ணினார்கள்.’ சிலரோ அந்நியப் பெண்களை மணந்துகொண்டார்கள். இன்னும் சிலரோ ‘தங்களுடைய இளவயதின் மனைவிக்கு’ துரோகம் இழைத்தார்கள்.—மல்கியா 2:8, 10, 11, 14-16.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2:2—யெகோவா எவ்விதத்தில் தம் சட்டங்களை மீறி நடந்த ஆசாரியர்களின் ‘ஆசீர்வாதங்களைச் சாபமாக்கினார்’? அத்தகைய ஆசாரியர்களின் வாயிலிருந்து வருகிற ஆசீர்வாதமெல்லாம் சாபமாக மாறிவிடும் என்ற கருத்திலேயே கடவுள் இதைச் செய்தார்.
2:3—ஆசாரியர்களின் முகங்களில் ‘சாணியை இறைப்பதன்’ அர்த்தம் என்ன? நியாயப்பிரமாண சட்டத்தின்படி பலிக்குரிய மிருகத்தின் சாணியை பாளயத்திற்குப் புறம்பே எடுத்துச்சென்று அதை எரித்துவிட வேண்டும். (லேவியராகமம் 16:27) ஆசாரியர்களின் முகங்களில் சாணியை இறைப்பது, அந்தப் பலிகளை யெகோவா நிராகரித்தார் என்றும் அவற்றைச் செலுத்தியவர்களை அவர் வெறுத்து ஒதுக்கினார் என்றும் அர்த்தப்படுத்தியது.
2:13—யெகோவாவுடைய பீடம் யாருடைய கண்ணீரினால் நிரப்பப்பட்டது? ஆலயத்திற்கு வந்த மனைவிகள் யெகோவாவுக்கு முன்பாக இருதயத்தில் உள்ளவற்றையெல்லாம் கொட்டி அழுதனர். அவர்கள் அந்தளவுக்குக் கண்ணீர் சிந்தக் காரணமென்ன? அவர்களுடைய கணவர்கள் தவறான காரணங்களைக் காட்டி அவர்களை விவாகரத்து செய்திருந்தார்கள்; இந்த யூத ஆண்கள் புறதேசத்து இளம் பெண்களை மணமுடிப்பதற்காக தங்கள் மனைவிகளை கைவிட்டதாகத் தெரிகிறது.
நமக்குப் பாடம்:
1:10. பேராசைபிடித்த ஆசாரியர்கள் செலுத்திய பலிகளின்மேல் யெகோவா பிரியங்கொள்ளவில்லை. கதவுகளைப் பூட்டுவது, பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கொளுத்துவது போன்ற சிறு சிறு பணிகளுக்கும்கூட அவர்கள் கூலி வாங்கினார்கள். நம்முடைய கிறிஸ்தவ ஊழியம் உட்பட வழிபாடு சம்பந்தப்பட்ட காரியங்கள் எதுவாயிருந்தாலும் அவற்றை ஒருபோதும் ஆதாயத்திற்காக அல்ல, ஆனால் கடவுள்மீதும் பிறர்மீதும் உள்ள சுயநலமற்ற அன்பினால் தூண்டப்பட்டு செய்வது எவ்வளவு முக்கியம்!—மத்தேயு 22:37-39; 2 கொரிந்தியர் 11:7.
1:14; 2:17. மாய்மாலத்தை யெகோவா ஒருபோதும் கண்டும் காணாமல் விட்டுவிட மாட்டார்.
2:7-9. சபையில் போதிப்பதற்கான பொறுப்பைப் பெற்றவர்கள், தங்களுடைய போதனை கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளுக்கு இசைவாகவும் ‘உண்மையுள்ள விசாரணைக்காரன்’ பிரசுரிக்கிற பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களுக்கு இசைவாகவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.—லூக்கா 12:42; யாக்கோபு 3:11.
2:10, 11. ‘கர்த்தருக்குட்பட்டவரையே’ மணமுடிக்க வேண்டும் என்ற அறிவுரையை தம்மை வழிபடுவோர் முக்கியமானதாய்க் கருத வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார்.—1 கொரிந்தியர் 7:39.
2:15, 16. யெகோவாவை வழிபடுவோர் தங்களுடைய இளவயதின் மனைவியோடு செய்துகொண்ட திருமண உடன்படிக்கையை உயர்வாய் மதிக்கிறார்கள்.
‘மெய்யான ஆண்டவர் தம்முடைய ஆலயத்திற்கு வருவார்’
‘[மெய்யான] ஆண்டவராகிய’ யெகோவா தேவன் ‘உடன்படிக்கையின் தூதனான’ இயேசு கிறிஸ்துவுடன் “தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்.” கடவுள் ‘நியாயத்தீர்ப்பு செய்யும்படி தம் மக்களிடத்தில் வந்து’ எல்லா விதமான தவறான செயல்களிலும் ஈடுபடுகிற மக்களுக்கு விரோதமாய்த் தீவிரமான சாட்சியாக இருப்பார். அதுமட்டுமல்ல, யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களுக்காக, “ஞாபகப் புஸ்தகம் ஒன்று” எழுதப்படவிருக்கிறது.—மல்கியா 3:1, 3, 5, 16.
“சூளையைப்போல எரிகிற” நாள் வரும்; அது அக்கிரமம் செய்கிற யாவரையும் சுட்டெரிக்கும். அந்நாள் வருவதற்கு முன்பாக, யெகோவா தமது தீர்க்கதரிசியை அனுப்புவார்; அவர் ‘பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவார்.’—மல்கியா 4:1, 5, 6.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
3:1-3—‘மெய்யான ஆண்டவரும்,’ ‘உடன்படிக்கையின் தூதனும்’ ஆலயத்திற்கு வந்தது எப்போது, அவர்களுக்கு முன்பாக அனுப்பப்படுபவர் யார்? நிசான் 10, பொ.ச. 33 அன்று யெகோவா தம் பிரதிநிதியின் மூலமாக தமது ஆலயத்திற்கு வந்து அதைச் சுத்திகரித்தார். இயேசு எருசலேம் ஆலயத்தில் பிரவேசித்து வாங்குகிறவர்களையும் விற்கிறவர்களையும் துரத்திவிட்ட சமயமே அது. (மாற்கு 11:15) யெகோவா அவரை எதிர்கால அரசராக அபிஷேகம் செய்து மூன்றரை வருடங்களுக்குப் பிறகு அது நடந்தது. அதற்கு இணையாக, இயேசு பரலோகத்தில் அரியணையேறி மூன்றரை வருடங்களுக்குப் பிறகு, யெகோவாவுடன் ஆன்மீக ஆலயத்திற்குச் சென்றதாகவும், அங்கு கடவுளுடைய மக்கள் சுத்திகரிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்ததைக் கண்டதாகவும் தெரிகிறது. முதல் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக யூதர்களைத் தயார்படுத்துவதற்கு முழுக்காட்டுபவரான யோவான் அனுப்பப்பட்டார். நம் காலத்திலும்கூட ஆன்மீக ஆலயத்தில் யெகோவாவின் வருகைக்காக வழியை ஆயத்தம் பண்ணுவதற்கு முன்கூட்டியே ஒரு தூதுவர் அனுப்பப்பட்டார். பைபிள் மாணாக்கரின் ஒரு தொகுதியே இந்தத் தூதுவர். இவர்கள் 1880-களின் ஆரம்பத்திலேயே, பைபிளின் அநேக அடிப்படை சத்தியங்களை நல்மனமுள்ள ஆட்களின் இதயத்தில் பதிய வைப்பதற்காக பைபிள் கல்வியைப் புகட்டத் துவங்கினர்.
3:10—“தசமபாகங்களையெல்லாம்,” அதாவது பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டுவருவது, நம்மிடமுள்ள அனைத்தையும் யெகோவாவுக்குக் கொடுப்பதை அர்த்தப்படுத்துகிறதா? நியாயப்பிரமாணம், இயேசுவின் மரணத்தின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது; ஆகவே, இன்று கடவுளை வழிபடுவோர் நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டதுபோல் பத்திலொரு பங்கை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், அடையாள அர்த்தத்தில் தசமபாகம் கொடுக்கப்படுகிறது. (எபேசியர் 2:15) இது நம்மிடமுள்ள அனைத்தையும் கொடுப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. அன்று, இஸ்ரவேலர் வருடாவருடம் கடவுளுக்கு தசமபாகம் கொண்டு வந்தார்கள்; ஆனால், நாமோ நமக்குள்ள எல்லாவற்றையும் யெகோவாவுக்கு ஒரே தடவை கொடுத்துவிடுகிறோம், அதாவது நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து, அதற்கு அடையாளமாக தண்ணீரில் முழுக்காட்டப்படும்போது கொடுத்துவிடுகிறோம். அச்சமயம் முதற்கொண்டு, நமக்குரிய அனைத்தும் யெகோவாவுக்கு உரியதாகிறது. என்றாலும், அதில் ஒரு பங்கை, அதாவது அடையாள அர்த்தமுள்ள தசமபாகத்தை, அவருடைய சேவையில் பயன்படுத்த அவர் நம்மை அனுமதிக்கிறார். எந்தளவுக்கு நம் சூழ்நிலைகள் அனுமதிக்கிறதோ, எந்தளவுக்கு நம் இதயம் தூண்டுகிறதோ அந்தளவுக்கு நாம் செய்யும் சேவையை அது குறிக்கிறது. பிரசங்க வேலைக்காகவும் சீஷராக்கும் வேலைக்காகவும் பயன்படுத்தப்படுகிற நேரம், சக்தி, வளங்கள் ஆகியவை யெகோவாவுக்கு நாம் கொடுப்பவற்றில் உட்பட்டுள்ளன. கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வது, வியாதிப்பட்டிருக்கிற, வயதான சக விசுவாசிகளைச் சந்திப்பது, உண்மை வழிபாட்டிற்காக பண உதவி அளிப்பது ஆகியவையும்கூட அதில் உட்பட்டுள்ளன.
4:3—யெகோவாவை வழிபடுவோர் எந்த அர்த்தத்தில் ‘துன்மார்க்கரை மிதிப்பார்கள்’? பூமியிலுள்ள கடவுளுடைய மக்கள் நேரடி அர்த்தத்தில் ‘துன்மார்க்கரை மிதிக்க’ மாட்டார்கள்; அதாவது கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதில் பங்குகொள்ள மாட்டார்கள். மாறாக, சாத்தானுடைய உலகின் முடிவுக்குப் பிறகு வரும் வெற்றி கொண்டாட்டத்தில் பூமியிலுள்ள யெகோவாவின் ஊழியர்கள் முழு இருதயத்தோடு பங்கெடுப்பதை அடையாள அர்த்தத்தில் இது குறிப்பிடுகிறது.—சங்கீதம் 145:20; வெளிப்படுத்துதல் 20:1-3.
4:4—நாம் ஏன் ‘நியாயப்பிரமாணத்தை நினைக்க’ வேண்டும்? கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை; என்றாலும், அது ‘வரப்போகிற நன்மைகளின் நிழலாய்’ இருந்தது. (எபிரெயர் 10:1) ஆகவே, நியாயப்பிரமாணத்திற்குக் கவனம் செலுத்துவது, அதில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் எவ்வாறு நிறைவேறியிருக்கின்றன என்பதைக் காண நமக்கு உதவலாம். (லூக்கா 24:44, 45) அதுமட்டுமல்ல, நியாயப்பிரமாணத்தில், “பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள்” உள்ளன. ஆகவே, கிறிஸ்தவ போதனைகளையும் நடத்தையையும்பற்றி அறிந்துகொள்வதற்கு அதை ஆழ்ந்து படிப்பது முக்கியம்.—எபிரெயர் 9:23.
4:5, 6—“எலியா தீர்க்கதரிசி” யாருக்கு அடையாளமாக இருக்கிறார்? கடவுளோடுள்ள தங்களுடைய பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கு மக்களின் இருதயத்தை “எலியா” தயார்படுத்துவார் என் முன்னறிவிக்கப்பட்டது. முழுக்காட்டுபவராகிய யோவானே இந்த எலியா என்று பொ.ச. முதல் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்து அடையாளம் காட்டினார். (மத்தேயு 11:12-14; மாற்கு 9:11-13) இன்று அவருக்கு இணையாக இருப்பவர், “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே” அனுப்பப்பட்டிருக்கிறார். நம் நாளில் எலியாவாக அடையாளம் காட்டப்பட்டிருப்பவர் ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனே.’ (மத்தேயு 24:45) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாலான இந்த வகுப்பார், மக்கள் கடவுளோடுள்ள தங்கள் பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கு உதவும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நமக்குப் பாடம்:
3:10. நம்மிடமுள்ள மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுக்கத் தவறினால் அவருடைய ஆசீர்வாதத்தை நாம் இழந்துவிடுவோம்.
3:14, 15. ஆசாரியர்கள் வைத்த கெட்ட முன்மாதிரியின் காரணமாக, கடவுளைச் சேவிப்பதை பிரயோஜனமற்றதாக யூதர்கள் கருத ஆரம்பித்தார்கள். கிறிஸ்தவ சபையில் பொறுப்பில் உள்ளவர்கள் நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும்.—1 பேதுரு 5:1-3.
3:16. தமக்கு பயந்து நடப்பவர்களையும் தமக்கு உண்மையாய் இருப்பவர்களையும் பற்றிய பதிவு ஒன்றை யெகோவா வைத்திருக்கிறார். சாத்தானுடைய இந்தப் பொல்லாத உலகிற்கு முடிவைக் கொண்டுவருகையில், அவர்களை அவர் நினைவில் வைத்து காப்பாற்றுவார். ஆகவே, கடவுளுக்குத் தொடர்ந்து உத்தமமாய் நடக்க வேண்டுமென்ற நம் தீர்மானத்தை ஒருபோதும் விட்டுவிடாதிருப்போமாக.—யோபு 27:5.
4:1. யெகோவாவுக்குக் கணக்கு கொடுக்க வேண்டிய நாளில், ‘வேரும் கொப்பும்’ ஆகிய இரண்டுமே ஒரேவிதமான முடிவைச் சந்திக்கும். அதாவது, பெற்றோருக்குக் கிடைக்கும் அதே நியாயத்தீர்ப்பைச் சிறு பிள்ளைகளும் பெறுவர். வயதுவராத தங்களுடைய பிள்ளைகள்மீது பெற்றோருக்கு எந்தளவு பொறுப்பு இருக்கிறது, பாருங்கள்! கிறிஸ்தவ தகப்பன்மாரும் தாய்மாரும், கடவுளுடைய ஆதரவை நாடுவதற்கும் அவருக்கு முன்பாக நல்ல நிலையில் இருப்பதற்கும் ஊக்கமாக முயல்வது அவசியம்.—1 கொரிந்தியர் 7:14.
‘தேவனுக்குப் பயப்படுங்கள்’
‘கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாளில்’ யார் காப்பாற்றப்படுவார்? (மல்கியா 4:5) “என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்” என யெகோவா சொல்கிறார்.—மல்கியா 4:2.
கடவுளுடைய பெயருக்குப் பயந்து நடக்கிறவர்கள்மீது ‘நீதியின் சூரியனாகிய’ இயேசு கிறிஸ்து பிரகாசிக்கிறார், அவர்கள் யெகோவாவின் தயவைப் பெறுகிறார்கள். (யோவான் 8:12) அவர்களுக்காக, ‘அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியமும் இருக்கும்’; இப்போது கடவுளோடு மீண்டும் நல்ல பந்தம் உருவாவதையும், புதிய உலகில் மனமும் உள்ளமும் உடலும் பூரண ஆரோக்கியம் பெறுவதையும் இது குறிக்கும். (வெளிப்படுத்துதல் 22:1, 2) அவர்கள் ஆனந்தப் பரவசமடைந்தவர்களாய் “கொழுத்த கன்றுகளைப்போல” நடந்துகொள்வார்கள். இத்தகைய ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருக்கிற நாம், சாலொமோன் ராஜாவுடைய அறிவுரையை மனதில் கொள்வோமாக: “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.”—பிரசங்கி 12:13.
[பக்கம் 26-ன் படம்]
மல்கியா தீர்க்கதரிசி, உள்ளார்வத்தோடும் முழு மூச்சோடும் கடவுளுக்கு ஊழியம் செய்தார்
[பக்கம் 29-ன் படம்]
பைபிளில் உள்ளவற்றையே நாம் கற்பிக்க வேண்டும்
[பக்கம் 29-ன் படம்]
யெகோவாவின் ஊழியர்கள் விவாக உடன்படிக்கைக்கு மதிப்பு கொடுக்கிறார்கள்