‘நீதிமான்கள் சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்’
“அச்சமயத்திலே, நீதிமான்கள் தங்களுடைய தகப்பனின் அரசாங்கத்தில் சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்.”—மத். 13:43.
1. கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட எந்தெந்த அம்சங்களை விளக்க இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார்?
கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வெவ்வேறு அம்சங்களை விளக்க இயேசு கிறிஸ்து அநேக உவமைகளைப் பயன்படுத்தினார். “கூட்டத்தாரிடம் இயேசு . . . உவமைகளாகவே பேசினார். சொல்லப்போனால், உவமைகள் இல்லாமல் அவர்களிடம் அவர் பேசியதே இல்லை.” (மத். 13:34) விதை விதைப்பது பற்றி அவர் சொன்ன ஓர் உவமையில், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை ஏற்றுக்கொள்வதில் ஒரு நபருடைய இருதயம் என்ன பாகத்தை வகிக்கிறதென வலியுறுத்திக் காட்டினார்; மற்றொரு உவமையில், ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்துவதில் யெகோவா என்ன பாகத்தை வகிக்கிறாரென வலியுறுத்திக் காட்டினார். (மாற். 4:3-9, 26-29) வேறு உவமைகளில், நற்செய்திக்குச் செவிசாய்க்கிறவர்களின் எண்ணிக்கை மிகப் பிரமாண்டமாக அதிகரிக்கும் என்றும், ஆரம்பத்தில் அந்த அதிகரிப்பு வெளிப்படையாகத் தெரியாது என்றும் வலியுறுத்திக் காட்டினார். (மத். 13:31-33) இன்னொரு உவமையில், நற்செய்தியைக் கேட்கிற எல்லாருமே கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாவதற்குத் தகுதியானவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதைச் சிறப்பித்துக் காட்டினார்.—மத். 13:47-50.a
2. கோதுமை, களைகள் பற்றிய இயேசுவின் உவமையில், நல்ல விதை எதைக் குறிக்கிறது?
2 மத்தேயு 13-ஆம் அதிகாரத்தில் இயேசு மற்றொரு உவமையையும் சொன்னார்; அது, பரலோக அரசாங்கத்தில் அவரோடு ஆட்சி செய்யப்போகிறவர்களைக் கூட்டிச்சேர்ப்பது பற்றியதாகும். கோதுமை, களைகள் பற்றிய உவமை எனப் பெரும்பாலும் அது அழைக்கப்படுகிறது. வேறொரு உவமையில், விதையை “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி” என்று அவர் சொல்லியிருந்தார்; இந்த உவமையிலோ, நல்ல விதை “கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்” என்று குறிப்பிடுகிறார். (மத். 13:19, 38) இவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இருக்கப்போகிறவர்கள் அல்ல, ஆனால் அந்த அரசாங்கத்தின் ‘பிள்ளைகளாக,’ அதாவது வாரிசுகளாக, இருக்கப்போகிறவர்கள்.—ரோ. 8:14-17; கலாத்தியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.
கோதுமை, களைகள் பற்றிய உவமை
3. இந்த உவமையில் சொல்லப்பட்டுள்ள மனிதர் என்ன பிரச்சினையை எதிர்ப்பட்டார் என்றும், அதை அவர் எப்படிக் கையாளத் தீர்மானித்தார் என்றும் விளக்குங்கள்.
3 கோதுமை, களைகள் பற்றிய உவமை இதுவே: “பரலோக அரசாங்கம், நல்ல விதையைத் தன் வயலில் விதைத்த ஒரு மனிதருக்கு ஒப்பாக இருக்கிறது. எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவருடைய எதிரி வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் வளர்ந்திருந்தன. அதனால், வீட்டு எஜமானருடைய வேலைக்காரர்கள் அவரிடம் வந்து, ‘எஜமானே, நீங்கள் வயலில் நல்ல விதையைத்தானே விதைத்தீர்கள்? அப்படியிருக்கும்போது, களைகள் எப்படி வளர்ந்தன?’ என்று கேட்டார்கள். ‘இது எதிரியுடைய வேலை’ என்று அவர் சொன்னார். அதற்கு அவர்கள், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடலாமா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘வேண்டாம், அப்படிச் செய்யாதீர்கள்; களைகளைப் பிடுங்கும்போது தவறுதலாகக் கோதுமைப் பயிர்களையும் பிடுங்கிவிடுவீர்கள். அதனால் அறுவடைவரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும்; அறுவடைக் காலம் வந்ததும் அறுவடை செய்கிறவர்களை நோக்கி, “முதலில் களைகளைப் பிடுங்கி அவற்றை எரித்துப்போடுவதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள், அதன்பின் கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்” என்று நான் சொல்வேன்’ என்றார்.”—மத். 13:24-30.
4. (அ) உவமையில் சொல்லப்பட்ட அந்த மனிதர் யார்? (ஆ) நல்ல விதையை இயேசு எப்போது, எப்படி விதைக்க ஆரம்பித்தார்?
4 தன் வயலில் நல்ல விதையை விதைத்த அந்த மனிதர் யார்? “நல்ல விதையை விதைக்கிறவர் மனிதகுமாரன்” என்று இயேசுவே பிற்பாடு தம் சீடர்களிடம் விளக்கினார். (மத். 13:37) ‘மனிதகுமாரனாகிய’ இயேசு மூன்றரை வருடங்கள் தம் வயலைப் பண்படுத்தினார், அதாவது பூமியில் ஊழியம் செய்தார். (மத். 8:20; 25:31; 26:64) பின்பு, கி.பி. 33-ஆம் ஆண்டு பெந்தெகொஸ்தே தினத்திலிருந்து நல்ல விதையை, அதாவது ‘கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகளை,’ விதைக்க ஆரம்பித்தார். ஆம், யெகோவாவின் பிரதிநிதியான அவர், தம் சீடர்கள்மீது பரிசுத்த சக்தியைப் பொழிந்து கடவுளுடைய பிள்ளைகளாக அவர்களை அபிஷேகம் செய்த அந்தச் சமயத்தில்தான் நல்ல விதையை விதைக்க ஆரம்பித்தார்.b (அப். 2:33) அந்த நல்ல விதை வளர்ந்து கோதுமைப் பயிரானது. எனவே, பரலோக அரசாங்கத்தில் தம்முடைய சக வாரிசுகளாக, சக ராஜாக்களாக இருக்கப்போகிற அத்தனை பேரையும் காலப்போக்கில் கூட்டிச்சேர்க்கும் நோக்கத்தோடுதான் அவர் அந்த நல்ல விதையை விதைத்தார்.
5. உவமையில் சொல்லப்பட்டுள்ள எதிரி யார்? களைகள் யாரைப் படம்பிடித்துக் காட்டுகின்றன?
5 உவமையில் சொல்லப்பட்ட எதிரி யார்? களைகள் யார்? அந்த எதிரி “பிசாசு” என்றும், களைகள் “பொல்லாதவனின் பிள்ளைகள்” என்றும் இயேசு சொல்கிறார். (மத். 13:25, 38, 39) இயேசு குறிப்பிட்ட இந்தக் களைகள், டார்னல் என்ற ஒருவகை விஷச் செடியாக இருந்திருக்கலாம். இந்தச் செடிகள் ஆரம்பப் பருவத்தில் பார்ப்பதற்குக் கோதுமைப் பயிரைப் போலவே இருக்கும். போலிக் கிறிஸ்தவர்களைப் படம்பிடித்துக் காட்டுகிற எப்பேர்ப்பட்ட பொருத்தமான ஒப்புமை! இந்தப் போலிக் கிறிஸ்தவர்கள், கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகளென உரிமைபாராட்டுகிறார்கள், ஆனால் உண்மையான பலனைத் தருவதில்லை. கிறிஸ்துவின் சீடர்களெனச் சொல்லிக்கொள்கிற அந்த வெளிவேஷக்கார கிறிஸ்தவர்கள் பிசாசாகிய சாத்தானுடைய ‘வித்தின்,’ அதாவது சந்ததியின், பாகமாகவே இருக்கிறார்கள்.—ஆதி. 3:15.
6. களைகள் எப்போது தோன்ற ஆரம்பித்தன, அந்தச் சமயத்தில் எல்லாரும் எப்படி ‘தூங்கிக்கொண்டிருந்தார்கள்’?
6 களைகள் போன்ற இந்தக் கிறிஸ்தவர்கள் எப்போது தோன்றினார்கள்? “எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தபோது” என இயேசு சொல்கிறார். (மத். 13:25) அது எப்போது? எபேசு சபையின் மூப்பர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய பின்வரும் வார்த்தைகளில் இதற்கான பதிலைப் பார்க்கிறோம்: “நான் போன பின்பு உங்களிடையே கொடிய ஓநாய் போன்ற ஆட்கள் நுழைவார்கள் என்று அறிந்திருக்கிறேன்; கடவுளுடைய மந்தையை அவர்கள் மென்மையாக நடத்த மாட்டார்கள்; அதோடு, உங்கள் மத்தியிலிருந்தே சிலர் தோன்றி சீடர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக உண்மைகளைத் திரித்துக் கூறுவார்கள்.” (அப். 20:29, 30) எனவே, ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருக்கும்படி அவர் அந்த மூப்பர்களை அறிவுறுத்தினார். விசுவாசதுரோகம் தலைதூக்காதபடி “தடையாக” இருந்த அப்போஸ்தலர்கள் மரணம் என்ற தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டபோது, அநேக கிறிஸ்தவர்கள் ஆன்மீக ரீதியில் தூங்கிவிட்டார்கள். (2 தெசலோனிக்கேயர் 2:3, 6-8-ஐ வாசியுங்கள்.) அந்தச் சமயத்தில்தான் மிகப் பெரிய விசுவாசதுரோகம் தலைதூக்கியது.
7. கோதுமைப் பயிர்களில் சில களைகளாக மாறினவா? விளக்கவும்.
7 கோதுமைப் பயிர்கள் களைகளாக மாறிவிடுமென இயேசு சொல்லவில்லை, கோதுமைப் பயிர்களுக்கு இடையில் களைகள் விதைக்கப்பட்டதென்றே சொன்னார். ஆகையால், சத்தியத்தைவிட்டு விலகிப்போகிற உண்மைக் கிறிஸ்தவர்களை இந்த உவமை சுட்டிக்காட்டுவதில்லை. மாறாக, சாத்தானின் சதிவேலையால் கிறிஸ்தவ சபைக்குள் பொல்லாத ஆட்கள் ஊடுருவுவதைக் குறிக்கிறது. கடைசி அப்போஸ்தலன் யோவான் வயதுமுதிர்ந்தவராக ஆன சமயத்தில் இந்த விசுவாசதுரோகம் அப்பட்டமாகத் தெரிந்தது.—2 பே. 2:1-3; 1 யோ. 2:18.
“அறுவடைவரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும்”
8, 9. (அ) வீட்டு எஜமான் தன் அடிமைகளுக்குச் சொன்ன அறிவுரைகளுக்கான காரணம் இயேசுவின் சீடர்களுக்குப் புரிந்திருக்கும் என ஏன் சொல்லலாம்? (ஆ) உவமையின் நிறைவேற்றத்தில், கோதுமைப் பயிர்களும் களைகளும் எப்படிச் சேர்ந்தே வளர்ந்தன?
8 வீட்டு எஜமானரின் அடிமைகள் களைகளைப் பற்றி அவரிடம் தெரிவித்துவிட்டு, “நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடலாமா?” என்று கேட்டார்கள். (மத். 13:27, 28) அதற்கு வீட்டு எஜமான் சொன்ன பதில் ஒருவேளை நமக்கு ஆச்சரியமூட்டுவதாக இருக்கலாம். அறுவடைக் காலம்வரை கோதுமைப் பயிர்களையும் களைகளையும் சேர்ந்தே வளரவிடும்படி அவர்களிடம் சொன்னார். வீட்டு எஜமான் அப்படிச் சொன்னதற்கான காரணம் இயேசுவின் சீடர்களுக்குப் புரிந்திருந்தது. எது கோதுமைப் பயிர், எது டார்னல் செடி என்று கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். டார்னல் செடியின் வேர்கள் பொதுவாக கோதுமைப் பயிரின் வேர்களோடு பின்னிப்பிணைந்துவிடும் என்பது விவசாயத்தில் ஓரளவு அனுபவம் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.c அதனால்தான், வீட்டு எஜமான் அவர்களைக் காத்திருக்கும்படி அறிவுறுத்தினார்.
9 பல நூற்றாண்டுகளாக, கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த வெவ்வேறு பிரிவுகள் களைகளை அமோகமாக விளைவித்திருக்கின்றன; முதலாவது, ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகளும், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளும், பிற்பாடு ஏராளமான புரொட்டஸ்டன்ட் சர்ச் பிரிவுகளும் அவ்வாறு விளைவித்திருக்கின்றன. அதேசமயத்தில், உண்மையான சில கோதுமை மணிகளும் உலகம் முழுக்க விதைக்கப்பட்டன. உவமையில் சொல்லப்பட்ட வீட்டு எஜமானர், பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராகும்வரை நீண்ட காலம் பொறுமையோடு காத்திருந்தார். பயிர்களின் வளர்ச்சிக் காலத்தோடு ஒப்பிட அறுவடைக் காலம் குறுகிய காலம்தான்.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அறுவடைக் காலம்
10, 11. (அ) அறுவடை எப்போது தொடங்கியது? (ஆ) அடையாளப்பூர்வ கோதுமை மணிகள் யெகோவாவின் களஞ்சியத்திற்குள் எப்படிக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன?
10 “அறுவடை, இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டம்; அறுவடை செய்கிறவர்கள், தேவதூதர்கள்” என இயேசு சொன்னார். (மத். 13:39) இந்தப் பொல்லாத உலகத்தின் கடைசி நாட்களில், கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள் கூட்டிச்சேர்க்கப்பட்டு, களைகள் போன்ற ஆட்களிடமிருந்து பிரிக்கப்படுகிறார்கள். இதைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு சொல்கிறார்: “நியாயத்தீர்ப்பு கடவுளுடைய வீட்டில் தொடங்குவதற்கான காலம் வந்துவிட்டது; அது முதலில் நம்மிடம் தொடங்குகிறதென்றால், கடவுளுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுடைய முடிவு என்னவாக இருக்கும்?”—1 பே. 4:17.
11 கடைசி நாட்கள், அதாவது “இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டம்,” தொடங்கிய சிறிது காலத்திற்குள் உண்மைக் கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டிய ஆட்கள் மத்தியில் நியாயத்தீர்ப்பு ஆரம்பமானது; ஆம், அவர்கள் உண்மையில் ‘கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகளா’ அல்லது ‘பொல்லாதவனின் பிள்ளைகளா’ என்று நியாயந்தீர்க்கப்படுவது ஆரம்பமானது. அறுவடை தொடங்கியபோது, “முதலில்” மகா பாபிலோன் வீழ்ச்சியடைந்தது, “அதன்பின்” கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள் கூட்டிச்சேர்க்கப்பட்டார்கள். (மத். 13:30) அதுமுதற்கொண்டு, இந்த அடையாளப்பூர்வ கோதுமை மணிகள் யெகோவாவின் களஞ்சியத்திற்குள் எப்படிக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன? அறுவடை செய்யப்பட்ட கோதுமை மணியாகிய இவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட கிறிஸ்தவ சபைக்குள் கொண்டுவரப்பட்டு, கடவுளுடைய தயவையும் பாதுகாப்பையும் அனுபவித்து வந்திருக்கிறார்கள்; இறந்துபோனவர்கள் பரலோக வாழ்க்கையைப் பரிசாகப் பெற்றுவந்திருக்கிறார்கள்.
12. நியாயத்தீர்ப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?
12 நியாயத்தீர்ப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்? அறுவடையை இயேசு “காலம்” என்று குறிப்பிட்டார்; எனவே, அது குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு நீடிக்கும். (வெளி. 14:15, 16) பரலோக நம்பிக்கையுள்ள தனிப்பட்ட நபர்கள் நியாயந்தீர்க்கப்படுவது இந்த முடிவுகாலம் முழுக்கத் தொடரும். அவர்கள் கடைசி முத்திரையைப் பெறும்வரை அது நீடிக்கும்.—வெளி. 7:1-4.
13. களைகள் போன்றவர்கள் மற்றவர்களை எப்படிப் பாவக்குழியில் விழ வைத்திருக்கிறார்கள், எப்படி அக்கிரமம் செய்துவந்திருக்கிறார்கள்?
13 கடவுளுடைய அரசாங்கத்திலிருந்து யார் பிரித்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்? அவர்கள் எப்படி மற்றவர்களைப் பாவக்குழியில் விழ வைத்திருக்கிறார்கள், அக்கிரமம் செய்து வந்திருக்கிறார்கள்? (மத். 13:41) களைகள் போன்ற கிறிஸ்தவமண்டல குருமார் பல நூற்றாண்டுகளாகக் கோடிக்கணக்கானோரை மோசம்போக்கியிருக்கிறார்கள். நரக அக்கினியில் நித்திய வாதனை, குழப்பமும் மர்மமும் நிறைந்த திரித்துவக் கோட்பாடு போன்ற, கடவுளை அவமதிக்கும் போதனைகளை, அதாவது “மற்றவர்களைப் பாவக்குழியில் விழ வைக்கிற” போதனைகளை, கற்பிப்பதன் மூலம் மக்களை மோசம்போக்கியிருக்கிறார்கள். மதத் தலைவர்கள் பலர் கடவுளுக்குத் துரோகம் செய்து, இந்த உலகத்தோடு நட்புறவை வைத்துக்கொள்வதன் மூலமும், வெட்கக்கேடான பாலுறவுப் பழக்கங்களில் ஈடுபடுவதன் மூலமும் தங்கள் மந்தைக்குக் கெட்ட முன்மாதிரிகளாக இருந்துவந்திருக்கிறார்கள். (யாக். 4:4) அதோடு, தங்கள் சர்ச் அங்கத்தினர்களுடைய ஒழுக்கங்கெட்ட நடத்தைக்குப் பச்சைக்கொடி காட்டிவந்திருக்கிறார்கள். (யூதா 4-ஐ வாசியுங்கள்.) இப்படியெல்லாம் செய்துவிட்டு, பக்திமான்களைப் போலவும், தேவபயமுள்ளவர்களைப் போலவும் வெளிவேஷம் போட்டுக்கொள்கிறார்கள். பாவக்குழியில் விழ வைக்கிற இப்படிப்பட்ட களைகளின் செல்வாக்கிலிருந்தும், தவறான போதனைகளிலிருந்தும் பிரித்தெடுக்கப்படுவது கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகளுக்கு எப்பேர்ப்பட்ட சந்தோஷம்!
14. களைகள் போன்றோர் எப்படி அழுது அங்கலாய்க்கிறார்கள்?
14 களைகள் போன்ற பொல்லாதவனின் பிள்ளைகள் எப்படி அழுது அங்கலாய்க்கிறார்கள்? (மத். 13:42) அவர்களுடைய விஷ செல்வாக்கையும் விஷ போதனைகளையும் “கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்” வெளிச்சம்போட்டுக் காட்டுவதால் அவர்கள் கடும் வேதனையை அனுபவிக்கிறார்கள். தங்கள் சர்ச் அங்கத்தினர்களுடைய ஆதரவைப் படிப்படியாக இழந்துவருவதாலும், அவர்கள்மீது தங்களுக்குள்ள ஆதிக்கம் குறைந்துவருவதாலும் அழுது அங்கலாய்க்கிறார்கள்.—ஏசாயா 65:13, 14-ஐ வாசியுங்கள்.
15. எந்த அர்த்தத்தில் களைகள் போன்றோர் நெருப்பில் போடப்படுவார்கள்?
15 களைகளெல்லாம் ஒன்றுசேர்க்கப்பட்டு நெருப்பில் போடப்படுவது எதைக் குறிக்கிறது? (மத். 13:40) களைகளுக்குக் கடைசியில் என்ன நடக்கும் என்பதையே இது குறிக்கிறது. கொழுந்து விட்டெரியும் உலைக்குள் அடையாள அர்த்தத்தில் வீசப்படுவது, அவர்கள் நித்திய அழிவைச் சந்திக்கப்போகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. (வெளி. 20:14; 21:8) களைகள் போன்ற போலிக் கிறிஸ்தவர்களாகிய மோசடிக்காரர்கள் ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ முற்றிலும் அழிக்கப்படுவார்கள்.—மத். 24:21.
அவர்கள் “சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்”
16, 17. கடவுளுடைய ஆலயத்தைக் குறித்து மல்கியா என்ன தீர்க்கதரிசனம் சொன்னார், அது எப்படி நிறைவேறத் தொடங்கியது?
16 கோதுமை போன்றோர் எப்போது “சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்”? (மத். 13:43) கடவுளுடைய ஆலயம் சுத்திகரிக்கப்படுவதைக் குறித்து மல்கியா இவ்வாறு தீர்க்கதரிசனம் சொன்னார்: ‘அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் யெகோவாவுடையவர்களாய் இருக்கும்படிக்கும், நீதியாய்க் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப் போலவும் வெள்ளியைப் போலவும் புடமிடுவார்.’—மல். 3:1-3.
17 நவீன காலங்களில், இந்தத் தீர்க்கதரிசனம் 1918-ல் நிறைவேறத் தொடங்கியது; அந்தச் சமயத்தில் யெகோவா, ‘உடன்படிக்கையின் தூதனாகிய’ இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து, ஆன்மீக ஆலயத்தைப் பரிசோதனையிட்டார். இந்தச் சுத்திகரிப்பு முடிவடைந்தவுடன் என்ன நடக்கிறதென மல்கியா சொல்கிறார்: “நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.” (மல். 3:18) புத்துயிர் பெற்ற உண்மைக் கிறிஸ்தவர்களின் பிரசங்க வேலையில் ஏற்பட்ட மாபெரும் முன்னேற்றம், அறுவடைக் காலம் அச்சமயத்தில் ஆரம்பமாகிவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறது.
18. நம்முடைய நாளில் என்ன நடக்குமென தானியேல் தீர்க்கதரிசனம் சொன்னார்?
18 தானியேல் தீர்க்கதரிசி நம்முடைய நாளைக் குறித்து இவ்வாறு முன்னுரைத்தார்: “ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப் போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் பிரகாசிப்பார்கள்.” (தானி. 12:3) இந்தளவு பிரகாசிப்பவர்கள் யார்? வேறு யாருமல்ல, பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான்! கோதுமை, களைகளைப் பற்றிய உவமையில் இயேசு குறிப்பிட்ட உண்மையான கோதுமைப் பயிர்கள்தான்! அதேசமயம், களைகள் போன்ற போலிக் கிறிஸ்தவர்கள் ‘பிடுங்கிப் போடப்படுவதை’ செம்மறியாடு போன்ற திரள்கூட்டத்தார் தெள்ளத்தெளிவாகக் காண்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தில் குடிமக்களாய் ஆகப்போகிற இவர்கள், ஆன்மீக இஸ்ரவேலரில் மீதியானோருடன் சேர்ந்துகொண்டு, இருளடைந்த உலகத்தில் தங்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்கிறார்கள்.—சக. 8:23; மத். 5:14-16; பிலி. 2:15.
19, 20. “கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்” எதற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள், அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திப்போம்?
19 இன்று, “கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்” தங்களுடைய மகத்தான வெகுமதிக்காக, பரலோக வெகுமதிக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். (ரோ. 8:18, 19; 1 கொ. 15:53; பிலி. 1:21-24) ஆனால் அதுவரை அவர்கள் விசுவாசத்தில் நிலைத்திருந்து தொடர்ந்து பிரகாசிக்க வேண்டும்; ‘பொல்லாதவனின் பிள்ளைகளிலிருந்து’ தனித்துத் தெரிய வேண்டும். (மத். 13:38; வெளி. 2:10) அடையாள அர்த்தத்தில் களைகள் ‘பிடுங்கிப் போடப்படுவதால்’ ஏற்படுகிற அந்த விளைவுகளைக் கண்கூடாகப் பார்க்கிற பாக்கியம் நமக்குக் கிடைத்திருப்பதை எண்ணி நாம் எவ்வளவாய்ச் சந்தோஷப்படலாம்!
20 ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகளும், அந்த அரசாங்கத்தின் குடிமக்களாக என்றென்றும் வாழ்கிற நம்பிக்கை உள்ள திரள்கூட்டத்தாரும் எப்படி ஒரே மந்தையாக இருக்கிறார்கள்? அடுத்த கட்டுரை இதற்குப் பதிலளிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a இந்த உவமைகளைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, ஜூலை 15, 2008 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 12-21-ஐக் காண்க.
b இந்த உவமையில் சொல்லப்பட்டுள்ள விதைக்கிற வேலை, பரலோக நம்பிக்கையுள்ள புதிய சீடர்களை உருவாக்குவதற்காகச் செய்யப்பட்ட பிரசங்க வேலையைக் குறிப்பதில்லை. ஏனென்றால், இயேசு இந்த உவமையில், நல்ல விதை “கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகளாய் ஆகப்போகிறவர்கள்” என்று சொல்லவில்லை, “கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்” என்றே சொன்னார். அப்படியானால், உலகமெனும் வயலில் கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகளை அபிஷேகம் செய்வதையே, அதாவது பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுப்பதையே, இந்த விதைக்கும் வேலை குறிக்கிறது.
c பியர்டட் டார்னல் என்ற செடியின் வேர்கள், கோதுமைப் பயிரின் வேர்களோடு அந்தளவு பின்னிப்பிணைந்துவிடும் என்பதால், அறுவடைக்கு முன்னர் அவற்றைப் பிடுங்கும்போது கோதுமைப் பயிரும் நாசமாகிவிடும்.—வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) தொகுப்பு 1, பக்கம் 1178-ஐக் காண்க.
நினைவிருக்கிறதா?
கோதுமை, களைகள் பற்றிய இயேசுவின் உவமையில், பின்வரும் அம்சங்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
• நல்ல விதை
• நல்ல விதையை விதைத்த மனிதர்
• நல்ல விதை விதைக்கப்படுவது
• எதிரி
• களைகள்
• அறுவடைக் காலம்
• களஞ்சியம்
• அழுது அங்கலாய்ப்பது
• கொழுந்து விட்டெரியும் உலை
[பக்கம் 20-ன் படங்கள்]
நல்ல விதை விதைக்கப்படுவது கி.பி. 33-ஆம் ஆண்டு பெந்தெகொஸ்தே தினத்திலிருந்து ஆரம்பமானது
[பக்கம் 23-ன் படம்]
அடையாளப்பூர்வ கோதுமை மணிகள் யெகோவாவுடைய களஞ்சியத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.