யெகோவாவின் ஆசீர்வாதம் ஐசுவரியத்தைத் தரும்
“கர்த்தரின் [யெகோவாவின், NW] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.”—நீதிமொழிகள் 10:22.
1-3. பொருள் சம்பந்தமான காரியங்களில் பலர் அக்கறையுள்ளவர்களாய் இருக்கும்போது, பொருள் செல்வத்தின் எந்த உண்மையை அனைவரும் மனதில்கொள்ள வேண்டும்?
பணத்தைப் பற்றி—அல்லது அது இல்லாமல் இருப்பதைப் பற்றிப் பேசுவதைச் சிலர் என்றும் நிறுத்துவதில்லை. சமீப ஆண்டுகளில், அவர்களை வருத்தப்படச்செய்த அநேக காரியங்கள் அவர்களுக்குப் பேசுவதற்காக இருந்தன. செழிப்பான மேலைநாடுகளும் 1992-ல் பின்வாங்குதலை அனுபவித்தன, அதிகாரிகளும் சாதாரண வேலையாட்களும் வேலை இல்லாத நிலையை உணர்கிறார்கள். இனி என்றாவது நிரந்தரமான செழிப்பை மறுபடியும் காண முடியுமோ என பலர் சந்தேகிக்கின்றனர்.
2 நம்முடைய பொருள் சம்பந்தமான நலத்தைப் பற்றி நாம் அக்கறைக்கொண்டிருப்பது தவறா? இல்லை, ஓரளவிற்கு இது இருப்பது இயல்பானது தான். அதே சமயத்தில், ஆஸ்திகளைப் பற்றிய ஓர் அடிப்படை உண்மையையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். என்னதான் இருந்தாலும் அனைத்துப் பொருள்களும் சிருஷ்டிகரிடமிருந்தே வருகின்றன. அவரே, “பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் [மெய்யான தேவன், யெகோவா, NW].”—ஏசாயா 42:5.
3 யெகோவா யார் பணக்காரராக இருக்கவேண்டும், யார் ஏழையாக இருக்கவேண்டும் என்று விதி எழுதிவைக்கவில்லையென்றாலும், ‘இந்தப் பூமியிலும் அதன் உற்பத்தியிலும்’ நமக்கு இருக்கும் எந்தப் பங்கையும் நாம் அனைவரும் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் பதில்கொடுக்க வேண்டிய பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம். நாம் நம்முடைய ஆஸ்தியை மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்குப் பயன்படுத்தினால், யெகோவா நம்மைக் கணக்குக்கொடுக்க வேண்டியவராக கருதுவார். யெகோவாவுக்கு அடிமையாக இல்லாமல், ஐசுவரியத்திற்கு அடிமையாக இருக்கும் எவரும், “தன் சொத்தில் நம்பிக்கை வைக்கிறவன் வீழ்ந்தழிவான்,” என்பதை உணர்வார். (பழமொழிகள் 11:28, கத். பை.; மத்தேயு 6:24; 1 தீமோத்தேயு 6:9) யெகோவாவுக்கு இருதயப்பூர்வமான கீழ்ப்படிதலோடு இல்லாத சொத்துக்களின் அதிகரிப்புக்கு, முடிவில் மதிப்பே கிடையாது.—பிரசங்கி 2:3-11, 18, 19; லூக்கா 16:9.
மிக முக்கியமான செழுமை
4. ஆவிக்குரிய செழுமை ஏன் பொருள் சம்பந்தமான மிகுதியைவிட மேலானது?
4 சொத்துக்களின் செழுமையோடு, ஆவிக்குரிய செழுமையைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. தெளிவாகவே இதுவே மிகச்சிறந்தது. (மத்தேயு 6:19-21) ஆவிக்குரிய அபிவிருத்தியே யெகோவாவோடு என்றும் நிரந்தரமாக இருக்கும் ஒரு திருப்திப்படுத்தும் உறவைக் காத்துக்கொள்கிறது. (பிரசங்கி 7:12) மேலுமாக, ஆவிக்குரிய வகையில் பணக்காரர்களாக இருக்கும் கடவுளின் ஊழியக்காரர்கள், அத்தியாவசியமான பொருள் சம்பந்தமான ஆசீர்வாதங்களைப் பெறாமல் இழந்துபோவதில்லை. புதிய உலகில், ஆவிக்குரிய செழிப்பு பொருள் சம்பந்தமான செழுமையோடு சம்பந்தப்பட்டு இருக்கும். கொடூரமான போட்டியினால், அல்லது உடல்நலத்தையும், சந்தோஷத்தையும் தியாகம் செய்ததினால் சம்பாதிக்கும் இன்றைய பெரும்பாலான நிலையில்லாமல், அவ்வாறு சம்பாதிக்காத பொருள் சம்பந்தமான பாதுகாப்புணர்வை விசுவாசிகள் அனுபவிப்பார்கள். (சங்கீதம் 72:16; நீதிமொழிகள் 10:28; ஏசாயா 25:6-8) இவர்கள், “கர்த்தரின் [யெகோவாவின், NW] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்,” என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் கண்டுணர்வார்கள்.—நீதிமொழிகள் 10:22.
5. பொருள் சம்பந்தமான காரியங்கள் குறித்து இயேசு என்ன வாக்குறுதி கொடுத்தார்?
5 இன்றும்கூட ஆவிக்குரிய காரியங்களுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள், பொருளாதார விஷயத்தில் ஒருவித திருப்தியை உணர்கிறார்கள். அவர்கள் தங்களுடைய செலவுகளைச் சமாளிக்கவும் தங்களுடைய குடும்பத்தைக் கவனிக்கவும் வேலைசெய்கிறார்கள் என்பது உண்மையே. அல்லது ஒருசிலர், வேலையாட்கள் குறைப்புக் காலங்களில் ஒருவேளை வேலையையும் இழப்பார்கள். ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களால் தாங்கள் ஆட்டிப்படைக்கப்படுவதற்கு தங்களை அனுமதிப்பதில்லை. இதற்குப் பதிலாக, “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள் . . . இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் [தொடர்ந்து, NW] தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்,” என்று இயேசு சொன்ன அவருடைய வாக்குறுதிகளின்மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.—மத்தேயு 6:31-33.
இன்றுள்ள ஆவிக்குரிய செல்வம்
6, 7. (எ) கடவுளுடைய மக்களின் ஆவிக்குரிய செழுமையின் சில அம்சங்களைப் பற்றி விளக்குங்கள். (பி) என்ன தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறிக்கொண்டிருக்கிறது, இது என்னென்ன கேள்விகளை எழுப்புகிறது?
6 ஆகவே யெகோவாவின் ஜனங்கள், தங்களுடைய வாழ்க்கையில் ராஜ்யத்திற்கு முதலிடம் கொடுக்க தெரிந்துகொண்டிருப்பதால், அவர்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! தங்களுடைய சீஷராக்கும் வேலையில் அவர்கள் அதிகமான வெற்றியை அனுபவிக்கிறார்கள். (ஏசாயா 60:22) இவர்கள் யெகோவாவினால் போதிக்கப்பட்டு, ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்’ மூலமாக இடைவிடாது வரும் ஆவிக்குரிய நல்ல காரியங்களை அனுபவிக்கிறார்கள். (மத்தேயு 24:45-47; ஏசாயா 54:13) இதற்கும் மேலாக, யெகோவாவின் ஆவி இவர்கள் மேல் இருந்து, இவர்களை ஒரு மகிழ்ச்சியான சர்வலோக சகோதரத்துவமாக வார்ப்பிக்கிறது.—சங்கீதம் 133:1; மாற்கு 10:29, 30.
7 இது உண்மையாகவே, ஆவிக்குரிய செழுமையாகும், பணம் வாங்கமுடியாத ஒன்று. இது யெகோவாவின் வாக்குறுதியின் ஒரு விசேஷித்த நிறைவேற்றம்: “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே [களஞ்சியத்திற்கு, கத். பை.] கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (மல்கியா 3:10) இந்த வாக்குறுதி நிறைவேறுவதை நாம் இன்று காணமுடிகிறது. அனைத்துச் செல்வங்களுக்கும் ஊற்றுமூலமாக யெகோவா இருந்தபோதிலும், அவர் ஏன் அவருடைய ஊழியர்களைப் பத்தில் ஒரு பங்கை அல்லது தசமபாகத்தைக் கொண்டுவரும்படி கேட்கிறார்? அந்தத் தசமபாகத்திலிருந்து பயனடைவது யார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தர, யெகோவா ஏன் இந்த வார்த்தைகளை மல்கியா மூலம் பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில் சொன்னார் என்பதைக் கவனிக்கலாம்.
தசமபாகமும் காணிக்கைகளும்
8. நியாயப்பிரமாண உடன்படிக்கையின்படி, இஸ்ரவேலின் பொருள் சம்பந்தமான செழுமை எதில் சார்ந்திருந்தது?
8 மல்கியாவின் காலத்தில், கடவுளுடைய ஜனங்கள் செழிப்பாக இல்லை. ஏன் இல்லை? இதற்குக் காரணம், காணிக்கைகளோடும் தசமபாகத்தோடும் கொஞ்சம் சம்பந்தப்பட்டதாக இருந்தது. அந்தச் சமயத்தில் இஸ்ரவேல், மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ் இருந்தது. இந்த உடன்படிக்கையை யெகோவா செய்தபோது, இதில் இஸ்ரவேல் தன்னுடைய பாகத்தை ஒழுங்காக செய்தால், அவர்களை ஆவிக்குரிய வகையிலும் பொருள் சம்பந்தமான வகையிலும் ஆசீர்வதிப்பதாக சொல்லியிருந்தார். சுருக்கமாக சொன்னால், இஸ்ரவேலின் செழுமை அவர்களுடைய உண்மைத்தன்மையோடு தொடர்புடையதாக இருந்தது.—உபாகமம் 28:1-19.
9. பூர்வீக இஸ்ரவேலின் நாட்களில், யெகோவா ஏன் இஸ்ரவேல் தசமபாகத்தை கொடுக்கவும் காணிக்கைகளைக் கொண்டுவரவும் வேண்டும் என்று எதிர்பார்த்தார்?
9 ஆலயத்திற்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவதும் தசமபாகத்தைக் கொடுப்பதும் நியாயப்பிரமாணத்தின்படி இஸ்ரவேலின் கடமையின் பாகமாக இருந்தது. சில காணிக்கைகள் யெகோவாவின் பலிபீடத்தின்மீது முழுமையாக எரிக்கப்பட்டன. மற்றவற்றின் விசேஷித்த பாகங்கள் யெகோவாவிற்குக் கொடுக்கப்பட்டன, மீதியானவை ஆசாரியர்களுக்கும் பலியைச் செலுத்துபவர்களுக்கும் இடையே பகிர்ந்துகொடுக்கப்பட்டன. (லேவியராகமம் 1:3-9; 7:1-15) தசமபாகத்தைப் பற்றி, மோசே இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னார்: “நிலங்களின் பலனிலும் மரங்களின் பழங்களிலும் பத்தில் ஒரு பங்கு ஆண்டவருக்கு உரியது, அது அவருக்குப் பரிசுத்தமானது.” (லேவியராகமம் 27:30, கத். பை.) ஆசரிப்புக்கூடாரத்திலும் பிற்காலத்தில் ஆலயத்திலும் இருந்த லேவிய வேலையாட்களுக்கே இந்தத் தசமபாகம் கொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆசாரிய வேலை செய்யாத லேவியர்கள், தாங்கள் பெற்றதில் பத்தில் ஒரு பங்கை ஆரோனிய ஆசாரியர்களிடம் கொடுப்பார்கள். (எண்ணாகமம் 18:21-29) இஸ்ரவேல் தசமபாகத்தைக் கொடுக்கும்படி ஏன் யெகோவா கேட்டார்? முதல் காரணம், யெகோவாவின் நற்குணத்திற்கு அவர்களின் போற்றுதலை அவர்கள் வெளிப்படையாக காட்டவேண்டும் என்பதற்காக. இரண்டாவது காரணம், இவர்கள் இப்படிச் செய்வதன்மூலம் லேவியர்களுக்கு உதவிசெய்ய முடிகிறது, இதனால் அவர்கள், நியாயப்பிரமாணத்தைச் சொல்லிக்கொடுப்பதையும் உட்படுத்திய, அவர்களுடைய கடமைகளைச் செய்வதற்கு அதிக கவனம் அவர்களால் செலுத்தமுடிகிறது. (2 நாளாகமம் 17:7-9) இந்த முறையில், உண்மை வணக்கமும் ஆதரிக்கப்பட்டது, அனைவரும் நன்மை அடைந்தார்கள்.
10. இஸ்ரவேல் தசமபாகத்தையும் காணிக்கைகளையும் கொண்டுவரத் தவறியபோது என்ன நடந்தது?
10 தசமபாகங்களும் காணிக்கைகளும் லேவியர்களால் பின்பு பயன்படுத்தப்பட்டாலும், அவை உண்மையில் யெகோவாவிற்குக் கொடுக்கப்படும் பரிசுகளாகும், எனவே இவை நல்ல உயர்தரமானதாகவும் அவருக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். (லேவியராகமம் 22:21-25) இஸ்ரவேலர்கள் அவர்களுடைய தசமபாகங்களைக் கொண்டுவராமல் இருந்தபோது, அல்லது அவர்கள் பழுதுள்ள பலிகளை கொண்டுவந்தபோது என்ன நடந்தது? நியாயப்பிரமாணத்தில் இதற்கு எந்தத் தண்டனையும் கொடுக்கப்பட்டில்லை, ஆனால் அதற்குரிய பாதிப்புகள் இருந்தன. யெகோவா தம்முடைய ஆசீர்வாதத்தைக் கொடுப்பதில்லை, லேவியர்களுக்குப் பொருள் சம்பந்தமாக உதவி கொடுக்கப்படவில்லை, இதனால் இவர்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையைச் சமாளிக்க வேண்டுமே என்பதற்காக, தங்களுடைய ஆலய பணிகளைச் செய்யாமல் விட்டுவிட்டனர். எனவே, முழு இஸ்ரவேலும் பாதிக்கப்பட்டது.
“உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்”
11, 12. (எ) இஸ்ரவேல் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்ற அசட்டைச் செய்தபோது என்ன நடந்தது? (பி) யெகோவா, இஸ்ரவேலரை பாபிலோனிலிருந்து திரும்ப கொண்டுவந்தபோது என்ன கட்டளையைக் கொடுத்தார்?
11 இஸ்ரவேலின் சரித்திரத்தில் தசமபாகம் கொடுப்பதை உட்படுத்தும் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்ற முயற்சிசெய்வதில் சிலர் நல்ல முன்மாதிரிகளாக இருந்தார்கள். (2 நாளாகமம் 31:2-16) ஆனாலும், பொதுவாக, இந்தத் தேசம் அசட்டையாக இருந்தது. இறுதியில் அவர்கள் ஜெயிக்கப்பட்டு, பொ.ச.மு. 607-ல் பாபிலோனுக்கு நாடுகடத்தப்படும்படி அனுமதிக்கப்படும்வரை, திரும்பத்திரும்ப, யெகோவாவோடு செய்த உடன்படிக்கையை அவர்கள் மீறினர்.—2 நாளாகமம் 36:15-21.
12 அது கஷ்டமான தண்டனை, ஆனால் 70 வருடங்களுக்குப் பின்பு யெகோவா, தம்முடைய ஜனங்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்குத் திருப்பிக் கொண்டுவந்தார். இந்தத் திரும்பிவருதலுக்குப் பின்புதான், ஏசாயாவில் சொல்லப்பட்டுள்ள பரதீஸைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் அதனுடைய ஆரம்ப நிறைவேற்றத்தைக் கொண்டிருந்தன. (ஏசாயா 35:1, 2; 52:1-9; 65:17-19) ஆனாலும், யெகோவா அவருடைய ஜனத்தைத் திரும்ப கொண்டுவருவதற்கு முக்கிய காரணம், ஒரு பூமிக்குரிய பரதீஸைக் கட்டுவதற்காக அல்ல, ஆனால் அந்த ஆலயத்தைத் திரும்ப கட்டவும், உண்மை வணக்கத்தை மறுபடியும் நிலைநிறுத்தவும் ஆகும். (எஸ்றா 1:2, 3) இஸ்ரவேல் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தால், பொருள் சம்பந்தமான ஆசீர்வாதங்கள் தொடரும், எனவே, யெகோவாவின் ஆசீர்வாதமே அவர்களை ஆவிக்குரிய வகையிலும் பொருள் சம்பந்தமான வகையிலும் ஐசுவரியமானவர்களாக ஆக்கும். சரியாகவே, அவர்கள் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு பொ.ச.மு. 537-ல் வந்தவுடனேயே, யூதர்கள் ஒரு பலிபீடத்தை எருசலேமில் கட்டி, ஆலயம் கட்டும் வேலையை ஆரம்பித்தனர். எனினும், அவர்கள் தீவிரமான எதிர்ப்பை எதிர்ப்பட்டு, வேலையை நிறுத்திவிட்டனர். (எஸ்றா 4:1-4, 23) இதன் விளைவாக இஸ்ரவேல் யெகோவாவின் ஆசீர்வாதத்தை அனுபவிக்கவில்லை.
13 யெகோவா, ஆலயம் கட்டும் வேலையைச் செய்ய மீண்டும் இஸ்ரவேலை வரும்படி தூண்டுவதற்காக, ஆகாய் மற்றும் சகரியா தீர்க்கதரிசிகளை பொ.ச.மு. 520-ம் ஆண்டில் எழுப்பினார். ஆகாய், இந்தத் தேசம் பொருள் சம்பந்தமாக கஷ்டமான நிலைகளை எதிர்ப்படுவதாக காண்பித்து, இதை யெகோவாவின் வீட்டிற்கான ஆர்வத்தின் குறைபாடோடு தொடர்புபடுத்திப் பேசினார். அவர் சொன்னார்: “இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான். உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டு வந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”—ஆகாய் 1:5-8.
13, 14. (எ) ஆலயத்தைத் திரும்பக் கட்ட இஸ்ரவேலர் தவறியபோது என்ன பின்தொடர்ந்தது? (பி) ஆலயம் கடைசியாக, எவ்வாறு மீண்டும் கட்டப்பட்டது, ஆனால் இன்னும் என்ன குறைபாடுகள் இஸ்ரவேலரின் பாகத்தில் சொல்லப்பட்டது?
14 ஆகாயினாலும் சகரியாவினாலும் உற்சாகப்படுத்தப்பட்டு, இஸ்ரவேலர் தங்களுடைய வழிகளைச் சிந்தித்துப் பார்த்தார்கள், ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்பு, நெகேமியா, எருசலேமுக்கு விஜயம் செய்தபோது, இஸ்ரவேல் திரும்பவும் யெகோவாவின் நியாயப்பிரமாணத்தைப் புறக்கணிக்க ஆரம்பித்திருந்ததைக் கண்டார். அவர் இதைச் சரிசெய்தார். ஆனால் இரண்டாவது விஜயத்தில் அவர் காரியங்கள் மறுபடியும் மோசமாகியிருப்பதைக் கண்டார். அவர் அறிக்கையிடுகிறார்: “லேவியருக்கு அவர்கள் பங்குகள் கொடுக்கப்படவில்லையென்பதையும், பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் அவரவர் தங்கள் வெளிநிலங்களுக்கு ஓடிப்போனார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.” (நெகேமியா 13:10) இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டது, “யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் [சேகரிப்புக் கிடங்குகளுக்கு, NW] கொண்டுவந்தார்கள்.”—நெகேமியா 13:12.
யெகோவாவைக் கொள்ளையடித்தல்
15, 16. என்னென்ன தவறுகளுக்காக, யெகோவா இஸ்ரவேலரை, மல்கியா மூலம் கண்டிக்கிறார்?
15 பெரும்பாலும், இதே பொதுவான காலத்தின் போதுதான் மல்கியா தீர்க்கதரிசனம் சொன்னார், இந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் உண்மையற்றத்தன்மையைப் பற்றி இன்னும் அதிகத்தைக் கூறுகிறார். இஸ்ரவேலுக்கான யெகோவாவின் வார்த்தைகளைப் பின்வருமாறு பதிவுசெய்கிறார்: “நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்.” என்ன தவறு ஏற்பட்டுவிட்டது? யெகோவா விளக்குகிறார்: “நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல [என்கிறீர்கள்], நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே.”—மல்கியா 1:6-8.
16 இப்படிப்பட்ட கவர்ந்திழுக்கும் வர்ணனையின்மூலம், மல்கியா, இஸ்ரவேலர் காணிக்கைகளைக் கொண்டுவந்து கொண்டிருந்தாலும் அவற்றின் கீழான தரம், முழு அவமரியாதையையும் வெளிக்காட்டுகிறது என்று எடுத்துக்காண்பிக்கிறார். மல்கியா மேலும் எழுதினார்: “நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” இஸ்ரவேலர்களோ, தாங்கள் குறிப்பாக என்ன செய்யவேண்டும் என்று குழப்பத்திலிருந்தார்கள், எனவே அவர்கள் கேட்டார்கள்: “நாங்கள் என்ன விஷயத்தில் திரும்பவேண்டும்”? யெகோவா அவர்களுக்குப் பதிலளித்தார்: “மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா [கொள்ளையடிக்கலாமா, NW]? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள் [கொள்ளையடிக்கிறீர்கள், NW].” எல்லா செல்வத்திற்கும் ஊற்றுமூலராகிய யெகோவாவை, இஸ்ரவேல் எப்படிக் கொள்ளையடிக்க முடியும்? யெகோவா பதில் சொன்னார்: “தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.” (மல்கியா 3:7, 8) ஆம், அவர்களுடைய தசமபாகத்தையும் காணிக்கைகளையும் கொண்டுவர தவறுவதன்மூலம், இஸ்ரவேல் யெகோவாவைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தது!
17. இஸ்ரவேலில் தசமபாகங்களும், காணிக்கைகளும் என்ன நோக்கத்தை நிறைவேற்றின, தசமபாகத்தைப் பற்றி யெகோவா என்ன வாக்குறுதி கொடுத்தார்?
17 இந்தச் சரித்திர பின்னணிச்சூழல், இஸ்ரவேலில் தசமபாகத்திற்கும் காணிக்கைக்கும் உரிய முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. இவை, கொடுப்பவரின் பங்கில் உள்ள போற்றுதல் உணர்வின் வெளிக்காட்டாக இருந்தது. கூடுதலாக, உண்மை வணக்கத்திற்குப் பொருள் வகையில் ஆதரவுதர அவை உதவின. எனவே, யெகோவா தொடர்ந்து இஸ்ரவேலை இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே [களஞ்சியத்தில் கொட்டுங்கள், கத். பை.] கொண்டுவாருங்கள்.” அவர்கள் அவ்வாறு செய்தால், என்ன பின்தொடரும் என்பதைக் காண்பிப்பவராக, யெகோவா இவ்வாறு வாக்குறுதி கொடுத்தார்: “நான் . . . இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோ.” (மல்கியா 3:10) யெகோவாவின் ஆசீர்வாதமே அவர்களை ஐசுவரியமாக்க முடியும்.
‘மெய்யான ஆண்டவ’ரால் நியாயந்தீர்க்கப்படுதல்
18. (எ) யாருடைய வருகையைப் பற்றி யெகோவா எச்சரிக்கிறார்? (பி) ஆலயத்திற்குள் வருவது எப்போது நடந்தது, யாரெல்லாம் உட்பட்டிருந்தார்கள், மேலும் இஸ்ரவேலருக்கு இதன் பாதிப்பு என்ன?
18 யெகோவா, அவருடைய மக்களை நியாயந்தீர்க்க வருவார் என்பதையும் மல்கியாவின் மூலம் எச்சரித்தார். “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற [மெய்யான, NW] ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார்.” (மல்கியா 3:1) ஆலயத்திற்கு வரும் இந்த வாக்குறுதிகொடுக்கப்பட்ட வருகை எப்பொழுது நிறைவேற்றம் அடைந்தது? வழியை ஆயத்தம்பண்ணுகிற ஒரு தூதனைப் பற்றிய மல்கியாவின் தீர்க்கதரிசனத்தை இயேசு மத்தேயு 11:10-ல் மேற்கோள் காட்டி, இதை முழுக்காட்டுபவனாகிய யோவானுக்குப் பொருத்திக் காண்பித்தார். (மல்கியா 4:5; மத்தேயு 11:14) எனவே, பொ.ச. 29-ல், நியாயத்தீர்ப்புக்கான காலம் வந்துவிட்டது! ‘மெய்யான ஆண்டவராகிய’ யெகோவாவோடு சேர்ந்து ஆலயத்திற்குப் போகும் அந்த உடன்படிக்கையின் தூதனாகிய, இரண்டாவது தூதன் யார்? இயேசு கிறிஸ்துவே, இரண்டு தடவை அவர் எருசலேமில் உள்ள ஆலயத்திற்கு வந்திருந்து, கிளர்ச்சியூட்டும் வகையில், நேர்மையில்லாத காசுக்காரர்களையெல்லாம் தூரத்திவிட்டு அதைச் சுத்தம்செய்தார். (மாற்கு 11:15-17; யோவான் 2:14-17) இந்த முதல் நூற்றாண்டின் நியாயத்தீர்ப்புக் காலத்தைப் பற்றி, யெகோவா தீர்க்கதரிசனமாக இவ்வாறு கேட்கிறார்: “அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்?” (மல்கியா 3:2) உண்மையில், இஸ்ரவேல் நிற்க முடியவில்லை. அவர்கள் சோதிக்கப்பட்டு, தகுதியற்றவர்களாக இருந்ததால், பொ.ச. 33-ல் யெகோவாவின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம் என்ற நிலையிலிருந்து நீக்கப்பட்டனர்.—மத்தேயு 23:37-39.
19. முதல் நூற்றாண்டில், மீதியானோர் எந்தவகையில் யெகோவாவினிடம் திரும்பிவந்தனர், அவர்கள் என்ன ஆசீர்வாதத்தைப் பெற்றனர்?
19 என்றபோதிலும், மல்கியா இவ்வாறும் எழுதினார்: “அவர் [யெகோவா] உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப் போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.” (மல்கியா 3:3) இதன் அடிப்படையில், முதல் நூற்றாண்டில் யெகோவாவைச் சேவிப்பதாக உரிமைபாராட்டினவர்களில் பலர் நீக்கப்பட்டனர், சிலர் சுத்திகரிக்கப்பட்டு யெகோவாவினிடம் வந்து, ஏற்றுக்கொள்ளத்தக்க காணிக்கைகளைச் செலுத்தினார்கள். இவர்கள் யார்? உடன்படிக்கையின் தூதராகிய இயேசுவுக்குச் செவிகொடுத்தவர்கள் இவர்களே. பெந்தெகொஸ்தே பொ.ச. 33-ல், இந்தப் பொறுப்புடையவர்களில் 120 பேர் எருசலேமில் ஒரு மாடியில் கூடிவந்திருந்தனர். பரிசுத்த ஆவியினால் பலப்படுத்தப்பட்டவர்களாக, இவர்கள் நீதியாய் காணிக்கையைச் செலுத்த ஆரம்பித்தனர், மேலும் அவர்களுடைய எண்ணிக்கையும் வெகு சீக்கிரத்தில் அதிகரித்தது. குறுகிய காலத்தில், ரோமப் பேரரசு முழுவதும் அவர்கள் பரவினார்கள். (அப்போஸ்தலர் 2:41; 4:4; 5:14) எனவே, மீதியானோர் சிலர் யெகோவாவிடம் திரும்பிவந்தனர்.—மல்கியா 3:7.
20. எருசலேமும் ஆலயமும் அழிக்கப்பட்டபோது, தேவனுடைய புதிய இஸ்ரவேலருக்கு என்ன நடந்தது?
20 சொல்லப்போனால், அடிமரமாகிய இஸ்ரவேலோடு ஒட்டிவைக்கப்பட்ட புறஜாதியினரையும் உள்ளடக்கிய இஸ்ரவேலின் இந்த மீதியானோர் “தேவனுடைய [புதிய] இஸ்ரவேல”ராக இருந்தனர், இந்தத் தேசம் ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது. (கலாத்தியர் 6:16; ரோமர் 11:17) எருசலேமும் அதனுடைய ஆலயமும் ரோமப்படையினரால் அழிக்கப்பட்டபோது மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலின்மீது பொ.ச. 70-ல், “சூளையைப்போல எரிகிற நாள்,” வந்தது. (மல்கியா 4:1; லூக்கா 19:41-44) தேவனுடைய இஸ்ரவேலுக்கு என்ன நடந்தது? யெகோவா, “தந்தை தமக்கு ஊழியம் செய்யும் மகனுக்கு இரக்கம் காட்டுவதுபோல . . . அவர்களுக்கு இரக்கம்” காட்டினார். (மலாக்கியா 3:17, கத். பை.) இந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவச் சபை, இயேசுவின் தீர்க்கதரிசன எச்சரிப்புக்கு செவிசாய்த்தது. (மத்தேயு 24:15, 16) அவர்கள் தப்பிப்பிழைத்தார்கள், யெகோவாவின் ஆசீர்வாதம் தொடர்ந்து அவர்களை ஆவிக்குரிய வகையில் ஐசுவரியமுள்ளவர்களாக ஆக்கியது.
21. மல்கியா 3:1-ஐயும் 10-ஐயும் பற்றி என்ன கேள்விகள் இன்னும் இருக்கின்றன?
21 யெகோவாவினுடைய என்னே ஓர் உரிமைமெய்ப்பித்தல்! அப்படியானால், இன்று மல்கியா 3:1 எப்படி நிறைவேற்றம் அடைகிறது? முழு தசமபாகத்தையும் கொண்டுவந்து களஞ்சியத்தில் கொட்டுங்கள் என்று சொல்லும் மல்கியா 3:10-ல் உள்ள உற்சாகப்படுத்துதலுக்கு ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? இது அடுத்தக் கட்டுரையில் கலந்தாராயப்படும்.
உங்களால் விளக்க முடியுமா?
◻ கடைசியாக, யார் தான் அனைத்துச் செல்வங்களின் ஊற்றுமூலம்?
◻ பொருள் செல்வத்தைவிட ஆவிக்குரிய செழுமை ஏன் மேலானது?
◻ இஸ்ரவேலில் தசமபாகங்களும் காணிக்கைகளும் என்ன நோக்கத்தை நிறைவேற்றின?
◻ ‘உண்மையான ஆண்டவராகிய’ யெகோவா இஸ்ரவேலை நியாயத்தீர்ப்புச் செய்ய எப்போது வந்தார், என்ன விளைவோடு?
◻ பொ.ச. முதல் நூற்றாண்டில், யெகோவா தம்முடைய ஆலயத்திற்கு வந்தபிறகு, யார் அவரிடம் திரும்பிவந்தனர்?
[பக்கம் 10-ன் படம்]
உடன்படிக்கையின் தூதன், இயேசு, பொ.ச. முதல் நூற்றாண்டில் யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்து நியாயந்தீர்க்க ஆலயத்திற்கு வந்தார்