கிறிஸ்தவ விசுவாசம் சோதிக்கப்படும்
“விசுவாசம் எல்லாருக்கும் உரியதல்லவே.” —2 தெசலோனிக்கேயர் 3:2, திருத்திய மொழிபெயர்ப்பு.
1. எல்லாருக்கும் உண்மையான விசுவாசம் இல்லை என்பதை சரித்திரம் எவ்வாறு காண்பித்திருக்கிறது?
உண்மையான விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் சரித்திரம் முழுவதிலும் வாழ்ந்திருக்கின்றனர். “உண்மையான” என்ற பெயரடை பொருத்தமாய் இருக்கிறது, ஏனெனில் நல்ல ஆதாரமோ காரணமோ இன்றி உடனடியாக எதையும் நம்பிவிடும் இயல்புடைய ஒருவகை விசுவாசத்தை கோடிக்கணக்கான மற்றவர்கள் காண்பித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட விசுவாசத்தில் பெரும்பாலும் பொய்க் கடவுட்களோ அல்லது சர்வவல்ல யெகோவா மற்றும் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய வார்த்தைக்கு முரணான வணக்க முறைகளோ உட்பட்டிருந்தன. எனவே அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “விசுவாசம் எல்லாருக்கும் உரியதல்லவே.”—2 தெசலோனிக்கேயர் 3:2, தி.மொ.
2. நம்முடைய சொந்த விசுவாசத்தை ஆராய்ந்து பார்ப்பது ஏன் இன்றியமையாதது?
2 ஆனால், இன்றுள்ள சிலரைப் போலவே, அப்பொழுதும் சிலர் உண்மையான விசுவாசத்தை காண்பித்தனர் என்பதை பவுலின் கூற்று மறைமுகமாக தெரிவிக்கிறது. இந்தப் பத்திரிகையின் வாசகர்கள் பெரும்பாலானோர் இப்படிப்பட்ட உண்மையான விசுவாசத்தையே—தெய்வீக சத்தியத்தின் திருத்தமான அறிவோடு இசைந்த விசுவாசத்தையே—காண்பிப்பதற்கும் அதில் பெருகுவதற்கும் விரும்புகின்றனர். (யோவான் 18:37; எபிரெயர் 11:6) உங்களுடைய விருப்பமும் அதுதானா? அப்படியானால், உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்படும் என்ற உண்மையை நீங்கள் ஒப்புக்கொள்வதும் அதற்கு ஆயத்தமாயிருப்பதும் அவசியம். ஏன் அவ்வாறு சொல்லலாம்?
3, 4. விசுவாசத்தின் சோதனைகள் சம்பந்தமாக நாம் ஏன் இயேசுவை நோக்கியிருக்க வேண்டும்?
3 இயேசு கிறிஸ்துவே நம்முடைய விசுவாசத்திற்கு மையமாக திகழ்கிறார் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், நம்முடைய விசுவாசத்தைப் பூரணப்படுத்துகிறவர் என பைபிள் அவரைப் பற்றி கூறுகிறது. இயேசு சொன்னதும் செய்ததும், முக்கியமாக தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியதுமே இதற்கு காரணம். மனிதர்கள் உண்மையான விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்கான அதன் ஆதாரத்தை அவர் வலுப்படுத்தினார். (எபிரெயர் 12:1, 2; வெளிப்படுத்துதல் 1:1, 2) இருப்பினும், இயேசு ‘எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டவராய் பாவமில்லாமல்’ இருந்தார் என நாம் வாசிக்கிறோம். (எபிரெயர் 4:15) ஆம், இயேசுவின் விசுவாசம் சோதிக்கப்பட்டது. நம்மை உற்சாகமிழக்கச் செய்வதற்கோ பயமடையச் செய்வதற்கோ பதிலாக இது நம்மை ஆறுதல்படுத்த வேண்டும்.
4 வாதனைக் கழுமரத்தில் மரணம் வரையாகவுங்கூட கடும் துன்பங்களை அனுபவிப்பதன்மூலம், இயேசு “கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்[டார்].” (எபிரெயர் 5:8) மனிதர்கள் தங்களுக்கு வரும் எந்தச் சோதனைகளின் மத்தியிலும் உண்மையான விசுவாசத்தோடு வாழமுடியும் என்பதை அவர் நிரூபித்தார். இயேசு தம்மை பின்பற்றுவோரைப் பற்றி சொன்னதை நினைத்துப் பார்க்கையில் இது குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெறுகிறது: “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்.” (யோவான் 15:20) சொல்லப்போனால், இயேசு நம்முடைய காலத்தில் வாழும் அவருடைய சீஷர்களைப் பற்றி இவ்வாறு முன்னுரைத்தார்: “என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.”—மத்தேயு 24:9.
5. நாம் சோதனைகளை எதிர்ப்படுவோம் என்பதை வேதவாக்கியங்கள் எவ்வாறு சுட்டிக்காட்டுகின்றன?
5 இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், நியாயத்தீர்ப்பு கடவுளுடைய வீட்டில் ஆரம்பமானது. வேதவாக்கியங்கள் இவ்வாறு முன்னறிவித்தன: “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?”—1 பேதுரு 4:17, 18.
விசுவாசம் சோதிக்கப்படுதல்—ஏன்?
6. சோதிக்கப்பட்ட விசுவாசம் ஏன் மதிப்புமிக்கது?
6 ஒரு கருத்தில், சோதிக்கப்படாத விசுவாசத்திற்கு நிரூபிக்கப்பட்ட மதிப்பு இல்லை, அதன் தரம் அறியப்படாமலே இருக்கிறது. இன்னும் பணமாக்கப்படாத காசோலைக்கு இதை நீங்கள் ஒப்பிடலாம். நீங்கள் செய்த வேலைக்கோ கொடுத்த பொருட்களுக்கோ, அல்லது ஒரு பரிசாகவோகூட, ஒரு காசோலையை நீங்கள் பெற்றிருக்கலாம். அந்தக் காசோலை பார்ப்பதற்கு மதிப்புமிக்கதாய் தோன்றலாம், ஆனால் அது அவ்வாறு இருக்கிறதா? அதில் போடப்பட்டுள்ள தொகைக்கு அது உண்மையில் மதிப்புடையதா? அதைப்போலவே நம்முடைய விசுவாசமும் வெறும் தோற்றத்தை அல்லது உரிமை பாராட்டலைப் பார்க்கிலும் மேம்பட்டதாக இருக்க வேண்டும். அது நடைமுறையான பயனையும் சிறந்த பண்பையும் உடையது என்று நாம் நிரூபிக்க வேண்டுமானால் அது சோதிக்கப்பட வேண்டும். நம்முடைய விசுவாசம் சோதிக்கப்படுகையில், அது பலமாகவும் மதிப்புமிக்கதாகவும் இருப்பதை நாம் காணலாம். நம்முடைய விசுவாசத்திற்கு எந்த அம்சங்களில் சுத்திகரிப்பு அல்லது பலமூட்டுதல் தேவை என்பதையும்கூட ஒரு சோதனை வெளிப்படுத்தலாம்.
7, 8. எந்த ஊற்றுமூலத்திலிருந்து நம்முடைய விசுவாசத்தின் சோதனைகள் வருகின்றன?
7 துன்புறுத்துதலும் விசுவாசத்தின் மற்ற சோதனைகளும் நமக்கு வரும்படி கடவுள் அனுமதிக்கிறார். நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” (யாக்கோபு 1:13) இப்படிப்பட்ட சோதனைகளுக்கு யார் அல்லது எது பொறுப்பு? சாத்தானும் இவ்வுலகமும் நம்முடைய சொந்த அபூரண மாம்சமுமே காரணம்.
8 இவ்வுலகின் மீதும் அதன் சிந்தனைகளின் மீதும் வழிகளின் மீதும் சாத்தான் பலமாக செல்வாக்கு செலுத்துகிறான் என்பதை நாம் ஒப்புக்கொள்ளலாம். (1 யோவான் 5:19) அவன் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாய் துன்புறுத்துதலை தூண்டிவிடுகிறான் என்பதையும் நாம் ஒருவேளை அறிந்திருக்கலாம். (வெளிப்படுத்துதல் 12:17) ஆனால், நம்முடைய அபூரண மாம்சத்திற்கு கவர்ச்சியூட்டுவதன் மூலமும் உலக கவர்ச்சிகளை நம் கண்முன் காண்பித்து ஆசைகாட்டுவதன் மூலமும் சாத்தான் நம்மை தவறாக வழிநடத்த முயற்சி செய்கிறான். இந்தச் சோதனைகளுக்கு அடிபணிந்து கடவுளுக்குக் கீழ்ப்படியாமற்போய், யெகோவாவால் ஏற்கப்படாமல் தள்ளப்படுவோம் என்ற நம்பிக்கையில் இவற்றையெல்லாம் அவன் செய்கிறான் என்பதை நாம் நம்புகிறோமா? நிச்சயமாகவே, சாத்தானின் சூழ்ச்சிமுறைகள் நம்மை ஆச்சரியமடையச் செய்ய வேண்டியதில்லை, ஏனெனில் அவன் இயேசுவை சோதிக்க முயற்சி செய்தபோது இதே சூழ்ச்சிமுறைகளையே பயன்படுத்தினான்.—மத்தேயு 4:1-11.
9. விசுவாசத்தின் முன்மாதிரிகளிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
9 யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலமும் கிறிஸ்தவ சபையின் மூலமும், நாம் பின்பற்றுவதற்கு விசுவாசத்தின் உண்மையான முன்மாதிரிகளை நம் கண்களுக்கு முன் வைக்கிறார். பவுல் இவ்வாறு புத்திமதி கூறினார்: “சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.” (பிலிப்பியர் 3:17) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கடவுளுடைய-அபிஷேகஞ்செய்யப்பட்ட ஊழியர்களில் ஒருவராக, பவுல் தான் அனுபவித்த பெரும் சோதனைகளின் மத்தியிலும் விசுவாசத்திற்குரிய செயல்களை நடப்பிப்பதில் முன்னின்று வழிகாட்டினார். இந்த 20-ம் நூற்றாண்டின் கடைசியிலும்கூட, அதேபோன்று விசுவாசத்தில் முன்மாதிரியுள்ளவர்களுக்கு குறைவே இல்லை. எபிரெயர் 13:7-ன் வார்த்தைகள், பவுல் அவர்களுக்கு எழுதியபோது எவ்வளவு வலிமைமிக்கதாய் இருந்ததோ அவ்வளவு வலிமைமிக்கதாய் இப்பொழுதும் நமக்குப் பொருந்துகின்றன: “தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.”
10. சமீப காலங்களில் விசுவாசத்திற்கான குறிப்பிடத்தக்க என்ன முன்மாதிரிகள் நம்மிடம் இருக்கின்றன?
10 அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோருடைய நடத்தையின் பலனை இன்று நாம் சிந்தித்துப் பார்க்கையில், அந்தப் புத்திமதி குறிப்பிடத்தக்க வலிமையுடையதாய் உள்ளது. நாம் அவர்களுடைய முன்மாதிரியை ஆழ்ந்து சிந்தனைசெய்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றலாம். அவர்களுடைய விசுவாசம் சோதனைகளால் புடமிடப்பட்ட உண்மையான விசுவாசம். 1870-களில் சிறியளவில் தொடங்கி, உலகளாவிய ஒரு கிறிஸ்தவ சகோதரத்துவம் வளர்ந்தது. அப்பொழுது முதற்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடைய விசுவாசம் மற்றும் சகிப்புத்தன்மையின் பலனாக, ஐம்பத்தைந்து லட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் இப்பொழுது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கித்தும் போதித்தும் வருகின்றனர். வைராக்கியமுள்ள மெய் வணக்கத்தாராலான உலகளாவிய தற்போதைய சபை, சோதிக்கப்பட்ட விசுவாசத்திற்கு காணக்கூடிய ஓர் அத்தாட்சியாய் விளங்குகிறது.—தீத்து 2:14.
1914-ன் சம்பந்தமாக விசுவாசம் சோதிக்கப்படுதல்
11. சி. டி. ரஸலுக்கும் அவருடைய உடனுழைப்பாளிகளுக்கும் 1914 எவ்வாறு குறிப்பிடத்தக்க ஆண்டாக இருந்தது?
11 முதல் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, பைபிள் தீர்க்கதரிசனத்தில் 1914 ஓர் குறிப்பிடத்தக்க ஆண்டாக இருக்குமென அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் வெளிப்படையாக அறிவித்துவந்தனர். எனினும், அவர்களுடைய எதிர்பார்ப்புகளில் சில, உரிய காலத்திற்கு முற்பட்டவையாக இருந்தன; என்ன நடக்கும் என்பதைப் பற்றிய அவர்களுடைய நோக்குநிலை முழுவதும் திருத்தமாக இல்லை. உதாரணமாக, பரந்தளவில் பிரசங்க வேலை செய்யப்பட வேண்டும் என்பதை உவாட்ச் டவர் சொஸைட்டியின் முதல் பிரெஸிடென்ட் சி. டி. ரஸலும் அவருடைய உடனுழைப்பாளர்களும் உணர முடிந்தது. “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்பதை அவர்கள் வாசித்தார்கள். (மத்தேயு 24:14) ஆனால், அவர்களுடைய அந்தச் சிறிய தொகுதி எப்படி இதை என்றாவது செய்துமுடிக்க முடியும்?
12. ரஸலுடைய உடனுழைப்பாளிகளில் ஒருவர் எவ்வாறு பைபிள் சத்தியத்திற்கு பிரதிபலித்தார்?
12 ரஸலின் உடனுழைப்பாளர் ஏ. எச். மாக்மில்லனில் இது என்ன பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை கவனியுங்கள். இவர் கனடாவில் பிறந்தவர், ரஸல் எழுதிய காலங்களின் திட்டம் (1886 [ஆங்கிலம்]) என்ற புத்தகத்தைப் பெற்றபோது மாக்மில்லனுக்கு 20 வயதுகூட ஆகவில்லை. (காலங்களின் தெய்வீக திட்டம் என்றும் அழைக்கப்படுகிற இப்புத்தகம், பரவலாக விநியோகிக்கப்பட்ட வேதாகமங்களில் படிப்புகள் [ஆங்கிலம்] என்பதன் தொகுதி 1-ஆக அமைந்தது. தொகுதி 2, காலம் சமீபம் [1889 (ஆங்கிலம்)], “புறஜாதியாரின் காலம்” 1914-ல் முடிவடையும் என சுட்டிக்காட்டியது. [லூக்கா 21:24]) அன்று இரவே மாக்மில்லன் அதைப் படிக்க ஆரம்பித்தார், “இது சத்தியம் மாதிரி இருக்கிறதே!” என்று அவர் நினைத்தார். 1900-ம் ஆண்டின் கோடையில், அப்பொழுது பைபிள் மாணாக்கர்கள் என்றழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் நடத்திய ஒரு மாநாட்டில் ரஸலை சந்தித்தார். விரைவிலேயே மாக்மில்லன் முழுக்காட்டப்பட்டார்; நியூ யார்க்கிலுள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் சகோதரர் ரஸலுடன் பணிபுரிய ஆரம்பித்தார்.
13. மத்தேயு 24:14-ன் நிறைவேற்றத்தின் சம்பந்தமாக மாக்மில்லனும் மற்றவர்களும் என்ன பிரச்சினையை எதிர்ப்பட்டார்கள்?
13 பைபிளைப் படித்ததன் அடிப்படையில், அபிஷேகம் செய்யப்பட்ட அந்தக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய நோக்கத்தில் 1914 ஒரு திருப்புமுனை என சுட்டிக்காட்டினர். ஆனால், மத்தேயு 24:14-ல் முன்னறிவிக்கப்பட்டுள்ளபடி, மீதமுள்ள குறுகிய காலத்தில் தேசங்களுக்கு பிரசங்கிப்பதை எவ்வாறு செய்துமுடிக்க முடியும் என மாக்மில்லனும் மற்றவர்களும் யோசித்தனர். அவர் பிற்பாடு சொன்னார்: “சகோதரர் ரஸலுடன் அதைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அவர் சொல்வார், ‘சகோதரரே, எருசலேமில் உள்ளவர்களைவிட இங்கே நியூ யார்க்கிலேயே நிறைய யூதர்கள் இருக்கிறார்கள். டப்ளினில் உள்ளவர்களைவிட இங்கேயே அயர்லாந்து நாட்டவர் அநேகர் இருக்கிறார்கள். ரோமில் உள்ளவர்களைவிட இங்கே இத்தாலியர்கள் அநேகர் இருக்கிறார்கள். நாம் இங்குள்ளவர்களை செய்தியுடன் இப்பொழுது சென்றெட்டினால், இந்த உலகை சென்றெட்டியதாக இருக்கும்.’ ஆனால் அந்தப் பதில் எங்களுடைய மனதுக்கு திருப்தியாக படவில்லை. எனவே, ‘போட்டோ-டிராமா’-வைத் தயாரிக்க எண்ணினோம்.”
14. 1914-க்கு முன்பு, குறிப்பிடத்தக்க என்ன திட்டம் மேற்கொள்ளப்பட்டது?
14 “போட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” என்னே ஒரு சிறப்பான திட்டம்! இயங்கு திரைப்படங்களும் வண்ணம் தீட்டப்பட்ட கண்ணாடி சிலைடுகளும் பயன்படுத்தப்பட்டு, போனோகிராஃப் ரெக்கார்டுகளில் பைபிள் பேச்சும் இசையும் ஒரே சமயத்தில் கேட்கும்படி செய்யப்பட்டன. 1913-ல், அ.ஐ.மா., அர்கன்ஸாஸில் நடைபெற்ற மாநாட்டைப் பற்றி காவற்கோபுரம் (ஆங்கிலம்) இவ்வாறு சொன்னது: “பைபிள் சத்தியங்களைப் போதிப்பதில் இயங்கு திரைப்படங்களைப் பயன்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. . . . இத்திட்டத்திற்காகவே மூன்று ஆண்டுகளாக உழைத்துக்கொண்டிருந்ததாகவும் இப்பொழுது நூற்றுக்கணக்கான அழகிய படங்கள் தயாராக இருப்பதாகவும் [ரஸல்] விளக்கினார்; இது திரள் கூட்டத்தினரை கவர்ந்திழுக்கும், சுவிசேஷத்தை அறிவிக்கும், கடவுளில் பொதுமக்கள் விசுவாசம் வைப்பதற்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை என்றும் விளக்கினார்.”
15. “போட்டோ-டிராமா” என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது?
15 1914 ஜனவரியில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சிக்குப் பிறகு “போட்டோ-டிராமா” அதையே சாதித்தது. பின்வருபவை 1914-ம் ஆண்டின் ஆங்கில காவற்கோபுர இதழிலிருந்து எடுக்கப்பட்ட அறிக்கைகள்:
ஏப்ரல் 1: “இரண்டு பாகங்களைப் பார்த்தப் பிறகு பிரசங்கியார் ஒருவர் இவ்வாறு சொன்னார்: ‘போட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன் படத்தின் ஒரு பாதியைத்தான் நான் பார்த்திருக்கிறேன், ஆனால் என்னுடைய மூன்று வருட இறையியல் கல்லூரியில் படித்ததைவிட பைபிளைப் பற்றி இதிலிருந்து ஏற்கெனவே நிறைய கற்றுக்கொண்டேன்.’ அதைப் பார்த்தப் பிறகு ஒரு யூதர் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘நான் அதைப் பார்க்க உள்ளே நுழையும்போது இருந்ததைவிட திரும்பிச் செல்லும்போது ஒரு சிறந்த யூதனாக போகிறேன்.’ பல கத்தோலிக்க பாதிரிமாரும் கன்னியாஸ்திரீகளும் அந்த டிராமா-வைப் பார்த்து வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள். . . . அந்த டிராமா-வின் இன்னும் பன்னிரண்டு செட்டுகள் முடிக்கப்பட வேண்டியுள்ளன. . . . என்றபோதிலும், நாங்கள் ஏற்கெனவே முப்பத்தொன்பது நகரங்களை சென்றடைந்து அங்கு ஊழியம் செய்துவருகிறோம். . . . ஒவ்வொரு நாளும் முப்பத்தைந்தாயிரத்திற்கும் அதிகமானோர் இதைப் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள், பாராட்டுகிறார்கள், சிந்திக்கிறார்கள், ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.”
ஜூன் 15: “இந்தப் படங்கள் சத்தியத்தை அதிக வைராக்கியத்துடன் பரப்புவதற்கு என்னை தூண்டியிருக்கின்றன. இவை என்னுடைய பரலோக தகப்பனிடமும் நம்முடைய அன்பான மூத்த சகோதரராகிய இயேசுவினிடமும் என்னுடைய அன்பை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. போட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்-மீதும் அதை திரையிடுவதில் ஈடுபட்டுள்ளோர் மீதும் கடவுளுடைய அபரிமிதமான ஆசீர்வாதம் இருக்கும்படி நான் தினமும் ஜெபிக்கிறேன். . . . கர்த்தருக்குள் உங்களுடைய ஊழியன், எஃப். டபிள்யூ. நாச்.—ஐவா.”
ஜூலை 15: “இந்தப் பட்டணத்தில் இருக்கும் எல்லாருடைய மனங்களிலும் என்னே ஒரு சிறந்த முத்திரையை இப்படங்கள் பதித்துச்சென்றிருக்கின்றன என்பதை தெரியப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகிற்கு கொடுக்கப்படும் இந்த சாட்சி, கர்த்தர் தாமே தெரிந்தெடுத்த மணிக்கற்களாக இருப்பதற்கான அத்தாட்சி அளிக்கும் அநேகரை கூட்டிச் சேர்ப்பதிலும்கூட பயன்படுத்தப்படுகிறது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த வகுப்பாருடன் இப்பொழுது இங்கு கூட்டுறவு கொள்ளும் ஆர்வமுள்ள அநேக பைபிள் மாணாக்கர்களில் பெரும்பாலானோர், போட்டோ-டிராமாவை பார்த்ததன் விளைவாக வந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். . . . கர்த்தருக்குள் உங்கள் சகோதரி ஈமா எல். பிரிக்கர்.”
நவம்பர் 15: “கிங்ஸ்வே, தி லண்டன் ஓப்ரா ஹவுஸில் போட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன் மூலம் கொடுக்கப்பட்டுவரும் மகத்தான சாட்சியை கேட்பதில் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்பதைக் குறித்து நாங்கள் நிச்சயமாக இருக்கிறோம். சகோதரர்கள் அதிக சந்தோஷப்படுமளவுக்கு இக்கண்காட்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் கர்த்தருடைய வழிநடத்தும் கரம் மிக அற்புதகரமாக வெளிப்பட்டிருக்கிறது. . . . பார்க்க வந்திருந்த நம்முடைய கூட்டத்தாரில் எல்லா வகையான தரப்பினரும் அடங்குவர்; ஆஜராயிருந்தவர்களில் அநேக பாதிரிமார் இருந்ததையும் நாங்கள் கவனித்திருக்கிறோம். உள்ளூர் மதகுரு ஒருவர் . . . தானும் தன்னுடைய மனைவியும் மறுபடியும் வந்து பார்ப்பதற்கு டிக்கெட் வேண்டுமென கேட்டார். சர்ச் ஆஃப் இங்லாண்டின் மதகுரு இந்த டிராமாவுக்கு பல தடவை வந்திருக்கிறார், . . . அதைப் பார்ப்பதற்கு தன்னுடைய நண்பர்கள் அநேகரையும் அழைத்து வந்திருக்கிறார். இரண்டு பிஷப்புகளும்கூட வந்திருக்கிறார்கள், அதோடு பெருந்தகையோர் பலரும் வந்திருக்கிறார்கள்.”
டிசம்பர் 1: “உங்கள் வாயிலாக எங்களுக்கு வந்திருக்கிற பெரிதும் விலையேறப்பெற்றதுமான ஆசீர்வாதத்திற்காக என்னுடைய மனைவியும் நானும் நம்முடைய பரலோக தகப்பனுக்கு உண்மையிலேயே நன்றி செலுத்துகிறோம். சத்தியத்தை கண்டுகொள்வதற்கும் அதை ஏற்றுக்கொள்வதற்கும் எங்களுக்கு காரணமாயிருந்தது உங்களுடைய அழகிய போட்டோ-டிராமாவே. . . . எங்களிடம் உங்களுடைய வேதாகமங்களில் படிப்புகள் புத்தகத்தின் ஆறு தொகுதிகள் இருக்கின்றன. அவை பேருதவியாக இருக்கின்றன.”
அப்பொழுது ஏற்பட்ட சோதனைகளுக்கு பிரதிபலிப்பு
16. 1914-ம் ஆண்டு ஏன் விசுவாசத்தின் சோதனையைக் கொண்டுவந்தது?
16 ஆனால், 1914-ல் கர்த்தருடன் சேர்ந்துகொள்ளப்போகும் தங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதை இத்தகைய உண்மையான, ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் கண்டபோது என்ன நடந்தது? அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் வழக்கத்திற்கு மீறிய இக்கட்டான ஒரு காலப்பகுதியை அனுபவித்தார்கள். நவம்பர் 1, 1914, காவற்கோபுரம் (ஆங்கிலம்) இவ்வாறு அறிவித்தது: “நாம் சோதனை காலத்தில் வாழ்கிறோம் என்பதை நினைவிற்கொள்வோமாக.” இதைக் குறித்து, யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (1993 [ஆங்கிலம்]) புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “1914 முதல் 1918 வரையான ஆண்டுகள், உண்மையிலேயே பைபிள் மாணாக்கர்களுக்கு ‘ஒரு சோதனை காலமாக’ இருந்தன.” தங்களுக்கு முன் இருந்த அந்தப் பெரும் வேலையை அவர்கள் ஏற்று நிறைவேற்றும் பொருட்டு, தங்களுடைய விசுவாசம் புடமிடப்படவும் தங்களுடைய சிந்தனை சரிப்படுத்தப்படவும் அவர்கள் அனுமதிப்பார்களா?
17. 1914-க்குப் பின்பு, உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தாங்கள் பூமியில் இருப்பதைக் குறித்து எவ்வாறு பிரதிபலித்தனர்?
17 செப்டம்பர் 1, 1916, காவற்கோபுரம் (ஆங்கிலம்) இவ்வாறு கூறியது: “[அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களின்] சபையைக் கூட்டிச் சேர்க்கும் அறுவடை வேலை, புறஜாதியாரின் காலங்கள் முடிவடைவதற்கு முன்பே நிறைவேற்றமடையும் என்று நாங்கள் எண்ணினோம்; ஆனால் பைபிளில் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. . . . அறுப்பு வேலை தொடந்து நடைபெறுவதால் நாம் வருத்தப்படுகிறோமா? . . . அருமையான சகோதரரே, கடவுளிடம் மிகுந்த நன்றியுள்ளவர்களாய் இருக்கும் மனப்பான்மை நமக்கு தற்போது வேண்டும்; அருமையான சத்தியத்தை கண்டுணரவும் அதன் சார்பாக அடையாளம் காட்டப்படவும் கிடைத்துள்ள சிலாக்கியத்திற்காக நம்முடைய போற்றுதல் அதிகரிப்பதாய் இருக்க வேண்டும்; அந்தச் சத்தியத்தை மற்றவர்கள் அறியும்படி உதவி செய்வதில் ஆர்வத்தை அதிகரிப்பதாய் இருக்க வேண்டும்.” அவர்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டது, இருப்பினும் அவர்கள் அந்தச் சோதனையை எதிர்ப்பட்டு வெற்றிகரமாய் சமாளித்தார்கள். ஆனால், விசுவாச சோதனைகள் அநேகம் வரலாம், அது வித்தியாசப்படலாம் என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் அறிந்திருக்க வேண்டும்.
18, 19. ரஸலுடைய மரணத்திற்குப்பின் கடவுளுடைய ஜனங்களுக்கு விசுவாசத்தின் வேறென்ன சோதனைகள் ஏற்பட்டன?
18 உதாரணமாக, சகோதரர் சார்ல்ஸ் டி. ரஸல் இறந்து சிறிது காலத்திற்குப் பின்பு, மற்றொரு வகையான சோதனையை மீதியானோர் எதிர்ப்பட்டனர். அது அவர்களுடைய உண்மைப்பற்றுறுதிக்கும் விசுவாசத்திற்கும் வந்த ஒரு சோதனையாக இருந்தது. மத்தேயு 24:45-ல் (NW) சொல்லப்பட்டுள்ள ‘உண்மையான அடிமை’ யார்? சகோதரர் ரஸல்தான் அந்த அடிமையென சிலர் நினைத்தனர். அமைப்பு சார்ந்த புதிய ஏற்பாடுகளோடு ஒத்துழைப்பதை அவர்கள் நிறுத்திவிட்டனர். அவர் அந்த அடிமையாக இருந்தால், அவர் இறந்துவிட்டதால் சகோதரர்கள் இப்பொழுது என்ன செய்வது? புதிதாக நியமனம் செய்யப்படும் ஒரு நபரை அவர்கள் பின்பற்ற வேண்டுமா, அல்லது வெறும் ஒரு ஆளையல்ல, மாறாக கிறிஸ்தவர்களாலாகிய ஒரு முழு தொகுதியை ஒரு கருவியாக அல்லது அடிமை வகுப்பாக யெகோவா பயன்படுத்துகிறார் என்று ஒப்புக்கொள்வதற்கு இப்பொழுது அது காலமாக இருந்ததா?
19 மெய்க் கிறிஸ்தவர்களுக்கு 1918-ல் கூடுதலான ஒரு சோதனை வந்தது; அப்போது கிறிஸ்தவமண்டல பாதிரிமார்களால் தூண்டப்பட்ட உலக அதிகாரிகள், யெகோவாவின் அமைப்புக்கு விரோதமாக ‘சட்டத்தைப் பயன்படுத்தி தீங்கிழைக்க திட்டமிட்டார்கள்.’ (சங்கீதம் 94:20, கிங் ஜேம்ஸ் வர்ஷன்) வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்த பைபிள் மாணாக்கர்களுக்கு எதிராக பயங்கரமான துன்புறுத்துதல் அலைவீசத் தொடங்கியது. மே 7, 1918-ல், பாதிரிமாரால் தூண்டிவிடப்பட்ட எதிர்ப்பு உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்பொழுது ஏ. எச். மாக்மில்லன் உட்பட, ஜெ. எஃப். ரதர்ஃபர்டையும் அவருடைய நெருங்கிய உடனுழைப்பாளிகள் பலரையும் கைதுசெய்வதற்கு ஐ.மா. கூட்டரசு வாரண்டுகளைப் பிறப்பித்தது. ராஜதுரோகம் செய்ததாக பொய்க் குற்றம் சாட்டப்பட்டனர்; தாங்கள் குற்றமற்றவர்களென்று வாதாடினதை அதிகாரிகள் புறக்கணித்துவிட்டனர்.
20, 21. மல்கியா 3:1-3-ல் முன்னறிவிக்கப்பட்டுள்ளபடி, அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் மத்தியில் என்ன வேலை செய்யப்பட்டது?
20 சுத்திகரிக்கப்படும் வேலை நடந்துவருவதை அச்சமயத்தில் அறிந்துகொள்ளாதபோதிலும், மல்கியா 3:1-3-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, அப்படிப்பட்ட ஒன்று நடந்துவந்தது: “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் [உடன்படிக்கையின் தூதன்] புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும் வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.”
21 முதல் உலகப் போர் முடிவடையும் தறுவாயிலிருந்தது; அந்தச் சமயத்தில் பைபிள் மாணாக்கர்களில் சிலர் விசுவாசத்தின் மற்றொரு சோதனையை—அதாவது உலக இராணுவ விவகாரங்களில் கண்டிப்புடன் நடுநிலைமை வகிப்பார்களா என்ற சோதனையை—எதிர்ப்பட்டார்கள். (யோவான் 17:16; 18:36) சிலர் நடுநிலைமை வகிக்கவில்லை. ஆகவே, 1918-ல், யெகோவா தம்முடைய வணக்கத்தாரின் சிறிய தொகுதியை உலகக் கறைகளிலிருந்து சுத்திகரிப்பதற்கு ‘உடன்படிக்கையின் தூதன்’ கிறிஸ்து இயேசுவை தம்முடைய ஆவிக்குரிய ஆலய ஏற்பாட்டுக்கு அனுப்பினார். உண்மையான விசுவாசத்தைக் காண்பிப்பதற்கு உறுதியோடிருந்தவர்கள், அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு முன்னோக்கிச் சென்று வைராக்கியமாய் தொடர்ந்து பிரசங்கித்தார்கள்.
22. விசுவாசத்தின் சோதனைகள் சம்பந்தமாக, இன்னும் என்ன சிந்திக்கப்பட வேண்டியுள்ளது?
22 நாம் சிந்தித்த விஷயங்கள் வெறுமனே அக்கறைக்குரிய கடந்தகால சரித்திரம் அல்ல. இவை யெகோவாவின் உலகளாவிய சபையின் ஆவிக்குரிய நிலைமையோடு நேரடியாக தொடர்புடையவை. ஆனால், கடவுளுடைய ஜனங்கள் இன்றைக்கு எதிர்ப்பட்டுவரும் விசுவாச சோதனைகள் சிலவற்றை சிந்தித்து, இவற்றை நாம் எவ்வாறு வெற்றிகரமாய் சமாளிக்கலாம் என்பதை பின்வரும் கட்டுரையில் காண்போமாக.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ தங்களுடைய விசுவாசம் சோதிக்கப்படும் என்பதை யெகோவாவின் ஜனங்கள் ஏன் எதிர்பார்க்க வேண்டும்?
◻ கடவுளுடைய செய்தியைப் பரப்புவதற்கு 1914-க்கு முன்பு என்ன வகையான முயற்சிகள் செய்யப்பட்டன?
◻ “போட்டோ-டிராமா” என்றால் என்ன, அது என்ன விளைவுகளை ஏற்படுத்தியது?
◻ 1914-18-ன் காலப்பகுதியில் நடந்த சம்பவங்கள் எவ்வாறு அபிஷேகம் செய்யப்பட்டோரை சோதிப்பதற்கு உதவின?
[பக்கம் 12-ன் படம்]
ஏறக்குறைய 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், “ஆயிரமாண்டு உதயம்” (ஆங்கிலம்) என்ற தொடர் புத்தகங்களின் உதவியால் அநேக நாடுகளிலுள்ள மக்கள் பைபிளைப் படித்துவந்தனர்; பிற்பாடு இப்புத்தகம் “வேதாகமங்களில் படிப்புகள்” என்றழைக்கப்பட்டது
[பக்கம் 13-ன் படம்]
ரெக்கார்டிங்குக்காக சி. டி. ரஸல் கொடுத்த கடிதத்தின் அறிமுகத்தில் அவர் சொன்னதாவது: “‘போட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்’-ஐ IBSA—சர்வதேச பைபிள் மாணாக்கர் சங்கம்—வழங்குகிறது. மதம்-விஞ்ஞான விஷயங்களில், பைபிளை ஆதரிக்கும் விதத்தில் பொதுமக்களுக்குப் போதிப்பதே இதன் நோக்கம்”
[பக்கம் 15-ன் படம்]
டெமிட்ரியஸ் பாப்பாஜார்ஜ், பயணம் செய்கையில் “போட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்”-ஐக் காண்பித்தார். பிற்பாடு அவருடைய கிறிஸ்தவ நடுநிலைமையின் நிமித்தம் சிறையிலடைக்கப்பட்டார்