இழிவான பெயர்பெற்ற அந்த “வேசி” அவளுடைய வீழ்ச்சி
“பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே!”—வெளிப்படுத்துதல் 14:8.
இந்தக் கட்டுரையும் இதைத் தொடர்ந்து வருவதும், 1988-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய தெய்வீக நீதி மாவட்ட மாநாட்டின் போது, “குறித்த காலம் சமீபமாயிருக்கிறது” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட தொடர்பேச்சின் கடைசிப்பேச்சாக இருந்தது
இழிவான பயர்பெற்ற “வேசி”—அவள் யார்? அவளைப்பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? சிலிர்ப்பூட்டும் கதைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சியும், வீடியோக்களும் ஒழுக்கக் கேடான விஷயங்களைச் சலிப்படையச் செய்யும் அளவுகளில் வழங்குகின்றனவல்லவா? உண்மைதான்! ஆனால் இவள் ஒன்றும் மாலை நேரத்து சாதாரண மங்கை அல்ல. அவள், உண்மையில், அதிகமாகச் செல்வாக்குச் செலுத்துகிறவளும், மிகவும் பேர்போனவளும், சரித்திரம் முழுமையிலும் அதிக கொலை வெறி கொண்ட வேசியுமாவாள். அவள் 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை விற்று வந்திருக்கிறாள்! நம்முடைய பாதுகாப்புக்காக அவளைப் பற்றி நாம் அறிந்திருப்பது அவசியமாகும். வெளிப்படுத்துதல் 14:8-ல், ஒழுக்கக்கேட்டுக்குப் பேர்போன இந்த ஸ்திரீயை ஒரு பரலோகத் தூதன் “பாபிலோன் மகா நகரம்” என்பதாக அழைத்து, தேசங்களைக் கற்பிழக்கச் செய்கிறவள் என்பதாக அவளை விவரிக்கிறான். அவள் அந்த அளவு ஆபத்தானவளாக இருப்பதால் அவள் மீது நியாயத்தீர்ப்பு நிறைவேற்றுவதற்குரிய யெகோவாவின் “நியமிக்கப்பட்டக் காலம் (NW) சமீபமாயிருக்கிறது” என்பதைத் தெரிந்துக் கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.—வெளிப்படுத்துதல் 1:3.
2 4,000 ஆண்டுகளுக்கு முன், “யெகோவாவுக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாக” இருந்த நிம்ரோதுவினால் மெசொப்பொத்தாமியாவில் கட்டப்பட்டிருந்த மேட்டிமையான நகரமாகிய பூர்வ பாபிலோனிலிருந்து இந்த வேசி தன் பெயரைப் பெற்றுக் கொண்டிருக்கிறாள். பாபிலோனியர்கள் ஒரு புற மத கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்த போது, யெகோவா அவர்களுடைய பாஷையைத் தாறுமாறாக்கி, பூமியின் மீதெங்கும் சிதறிப் போகப்பண்ணினார். அவர்கள் தங்களுடைய மதத்தைத் தங்களோடு எடுத்துச் செல்ல, இவ்விதமாக பாபிலோனிய மத உலக பேரரசு ஆரம்பமானது. உண்மையிலேயே அது மகா பாபிலோனாகும். (ஆதியாகமம் 10:8–10; 11:1–9) நம்முடைய நாள் வரையாகவும் பூர்வ பாபிலோனின் இரகசியங்கள், உலக மதங்களின் நம்பிக்கைகளிலும் பழக்கவழக்கங்களிலும் பிரதிபலிக்கப்பட்டு வருகின்றன. (வெளிப்படுத்துதல் 17:7) பாபேல் நகரத்தின் எபிரெய பெயரின் அர்த்தம் “குழப்பம்” என்பதாகும். இன்றைய பொய் மத கதம்பத்துக்கு இது என்னே ஒரு பொருத்தமான பெயர்!
3 பூர்வ பாபிலோன் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட இந்த தடங்கலிலிருந்து மீண்டு வந்தது. பொ.ச.மு. 632-ல் அசீரியாவைக் கவிழ்ப்பதன் மூலம் அது பைபிள் சரித்திரத்தின் மூன்றாவது உலக வல்லரசானது. அவளுடைய மகிமை குறுகிய வாழ்வுடையதாய்—நூறுக்கும் குறைவான ஆண்டுகளே இருந்தது—ஆனால் அந்த 70 வருடங்களும் அவள் கடவுளுடைய ஜனமாகிய இஸ்ரவேலை சிறைக் கைதிகளாகவே வைத்திருந்தாள். இது அவர்களை சாவாமையுள்ளவையாக அவர்கள் கருதி வழிப்பட்ட பாபிலோனிய கடவுட்களின் ஆயிரக்கணக்கான ஆலயங்களுக்கும், கோவில்களுக்கும், அவளுடைய மும்மூன்றுக் கடவுட்களுக்கும் மும்மூன்று பிசாசுகளுக்கும், தாய் சேய் வணக்கத்துக்கும் சோதிடத்துக்கும் மிக அருகாமையில் வைத்தது. இவ்விதமாக பொ.ச.மு. 539-ல் பாபிலோன் நகரம் ஒரு துயரமான வீழ்ச்சியை அனுபவித்தபோது, சிறைக் கைதிகளாயிருந்த இஸ்ரவேலர் பொய் மதத்தின் உலக மையத்தில் இருந்தார்கள். ஆனால் அவளுக்கு முடிவு இன்னும் வரவில்லை! அவளைக் கைப்பற்றியவர்கள் தொடர்ந்து அவளை செல்வாக்குள்ள மத மையமாகவே பயன்படுத்தி வந்தனர்.
உலகந்தழுவிய ஒரு மத பேரரசு
4 “சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டது போல” பாபிலோன் “சங்காரம் என்னும் துடைப்பத்தினால் பெருக்கப்பட” வேண்டும் என்பதாக யெகோவாவின் தீர்க்கதரிசிகள் அவருடைய நியாயத்தீர்ப்பை அறிவித்திருந்தார்கள். அந்த தீர்க்கதரிசனங்கள் பின்னால் நிறைவேற்றமடைந்தனவா? ஆம், கடைசி விவரம் வரையாக! காலப்போக்கில் பூர்வ பாபிலோன் கற்கூளமாக —துல்லியமாக முன்னறிவிக்கப்பட்டபடியே, ஊரும் பிராணிகளையும் மூர்க்க மிருகங்களையும் தவிர அது குடியிருப்பில்லாமல் ஆனது! (ஏசாயா 13:9, 19–22; 14:23; எரேமியா 50:35, 38–40) என்றபோதிலும் அந்த அடுத்த பாபிலோனாகிய நவீன நாளைய மகா பாபிலோன் தொடர்ந்து இருந்து வருகிறது. பொய் மத உலக பேரரசாகிய அவள் பூர்வ பாபிலோனின் போதகங்களையும் மேட்டிமையான ஆவியையும் பேணி காத்து வருகிறாள். யெகோவாவின் ராஜ்ய நோக்கங்களின் சம்பந்தமாக மக்களைக் குருடாக்குவதற்கு இவள் சாத்தானின் பிரதான கருவியாக இருந்து வருகிறாள்.—2 கொரிந்தியர் 4:3, 4.
5 கிறிஸ்துவுக்கு முன்பு சுமார் ஆறாவது நூற்றாண்டில், பாபிலோன் உலக வல்லரசு அதன் மகிமையின் உச்சியிலிருக்கையில் இந்து, புத்த, கன்ஃபூசிய மற்றும் ஷின்டோ மதங்களும்கூட முன்னிலைக்கு வந்தன. ஆனால் முழு உலகையும் பொய் மதத்தால் பாழாக்குவதில் சாத்தான் வெற்றியடைந்தானா? இல்லை, ஏனென்றால் யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட பூர்வ சாட்சிகளில் மீதியானோர், யெகோவாவின் வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக பாபிலோனிலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தனர். இதன் காரணமாக ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்பு மேசியாவை வரவேற்கவும் கிறிஸ்தவ சபையின் முதலாவதான அங்கத்தினர்களாவதற்கும் உண்மையுள்ள யூதர்கள் அங்கு இருந்தார்கள். பொய் மதம் கடவுளுடைய சொந்தக் குமாரனைக் கொலை செய்து இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் எச்சரித்திருந்தபடியே மெய்க் கிறிஸ்தவத்தை எதிர்ப்பதற்கு சாத்தானின் கருவியானது.—மத்தேயு 7:15; அப்போஸ்தலர் 20:29, 30; 2 பேதுரு 2:1.
6 குறிப்பாக பொ.ச.மு. 70-ல் எருசலேமின் இரண்டாவது அழிவுக்குப் பின்புதானே கிறிஸ்தவ போதகங்களோடு பாபிலோனிய மறைஞானத்தையும் உலகியல் கிரேக்கத் தத்துவங்களையும் ஒன்று சேர்த்து அவைகளைக் கறைப்படுத்த சாத்தான் கள்ள அப்போஸ்தலர்களைப் பயன்படுத்தினான். இவ்விதமாக பைபிளின் “ஒரே யெகோவா”வுக்குப் பதிலாக திரித்துவமாகிய ‘தெய்வீகத் திரியேகம்’ கொண்டுவரப்பட்டது. (உபாகமம் 6:4; மாற்கு 12:29; 1 கொரிந்தியர் 8:5, 6) கிறிஸ்துவின் மீட்பையும் உயிர்த்தெழுதலையும் பற்றிய பைபிளின் போதகங்களை மறுப்பதற்குப் புறமத தத்துவ ஞானி ப்ளேட்டோ கற்பித்த மனித ஆத்துமா அழியாமைக் கோட்பாடு உள்ளே கொண்டுவரப்பட்டது. நரக அக்கினியிலும் குறைவான அக்கினியுள்ள உத்தரிக்கும் ஸ்தலத்திலும் நம்பிக்கை வைப்பதற்கு வழியைத் திறந்து வைத்தது. (சங்கீதம் 89:48; எசேக்கியேல் 18:4, 20) ஜனங்களுடைய பயத்தைப் பயன்படுத்திக்கொள்ளும், கடவுளை கனவீனப்படுத்தும் இப்படிப்பட்டப் போதனைகள் சர்ச்சுகளின் பணப்பெட்டிகளை நிரப்பவே பயனுள்ளதாக இருந்திருக்கின்றன. மேலுமாக முரண் சமயக் கோட்பாடுகளை ஒடுக்குவதற்கு செய்யப்பட்ட விசாரணைகளின்போதும் சீர்த்திருத்த நாட்களின்போதும் வாதிப்பதற்கு மதகுருமார் நரக அக்கினிக்காகக் காத்திருக்கக்கூடாதவர்களாக இருந்தனர். பாபிலோனியக் கோட்பாடுகளுக்குப் பதிலாக பைபிள் சத்தியத்தை விரும்பிய ஆயிரக்கணக்கானோர் கத்தோலிக்கராலும் புராட்டஸ்டான்டினராலும் கழுமரத்தில் உயிரோடே எரிக்கப்பட்டனர். ஆனால் நாம் பார்க்கப்போகிறபடியே, மகா பாபிலோனின் வேசித்தனம் பொய்மையை ஊக்குவிக்கிறதற்கும் அப்பால் வெகு தூரம் செல்கிறது.
யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாள்
7 இந்த வேசியை நியாயந்தீர்க்கும் யெகோவாவின் நாள் வந்துவிட்டது. (எபிரெயர் 10:30) இதற்கு ஆயத்தம் பண்ணும் ஒரு காலம் 1870-களில் ஆரம்பமானது. அந்தச் சமயம் அடிப்படை பைபிள் சத்தியங்களை நிலைநாட்டவும் பாபிலோனிய பொய் போதகங்களை வெளிப்படுத்தவும் உண்மையுள்ள பைபிள் மாணாக்கரின் ஒரு குழுவை—அவருடைய “தூதனை” யெகோவா அனுப்பினார். (மல்கியா 3:1) இந்தத் “தூதர்” குழு, வெளிப்படுத்துதல் 4:11-லுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு ஆதரவளிக்க முன்வந்தார்கள்: “யெகோவாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர். உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” இந்தத் “தூதன்” மனிதவர்க்கத்தை மீட்டுக் கொள்ள கடவுளின் ஏற்பாடாகிய இயேசுவின் மீட்பின் பலியைக் குறித்து தைரியமாகப் பேசவும் ஆரம்பித்தான். மீட்கப்பட்ட மனிதவர்க்கத்தில் முதலாவது பரலோக ராஜ்யத்தில் இயேசுவோடு ஆளப்போகும் “சிறு மந்தை”, பின்னர், பரதீஸிய பூமியில் என்றுமாக வாழப் போகிற இலட்சக்கணக்கானவர்களும் அடங்குவர்—இவர்களில் பெரும்பாலானோர் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர்களாயிருப்பர். (லூக்கா 12:32; 1 யோவான் 2:2; அப்போஸ்தலர் 24:15) ஆம், அந்தப் பைபிள் மாணாக்கர்கள் இந்த அடிப்படை சத்தியங்களை மீண்டும் நிலைநாட்டி, அடையாள அர்த்தத்தில் பாபிலோனிய நித்திய வாதனைக் கோட்பாட்டு ‘அக்கினியின் மீது தண்ணீர் ஊற்றி அதை அணைத்தனர்!’a
8 சுமார் 40 வருடங்களாக, பைபிள் மாணாக்கர்கள் 1914-ம் ஆண்டு புறஜாதியாரின் காலங்களின் முடிவைக் குறிப்பதாக இருக்கும் என்று தைரியமாக அறிவித்து வந்தார்கள். எதிர்பார்த்தபடியே அந்த வருடம் உலகை அதிர வைத்த சம்பவங்களைக் கொண்டுவந்தது. இவைகளில் முதல் உலகப் போர் குறிப்பிடத்தக்கதாகும். மகா பாபிலோனின் மிகப் பிரதான பாகமாகிய கிறிஸ்தவமண்டலத்தின் மதகுருமார்—அந்த தைரியமான பைபிள் மாணாக்கர்களை அழித்திட எவ்வளவாய் உலக நெருக்கடியை பயன்படுத்திக்கொள்ள முயன்றார்கள்! கடைசியாக 1918-ல் இட்டுக்கட்டப்பட்ட ராஜதுரோக குற்றச்சாட்டின் பேரில் உவாட்ச் டவர் சங்கத்தின் எட்டுத் தலைவர்களை இரயிலில் சிறைக்குக் கொண்டுச் செல்லும்படி செய்துவிட்டார்கள். ஆனால் இவர்கள் ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டு பின்னால் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டார்கள். பிணையத்தின் மீது இவர்களை விடுவிக்க மறுத்து இவர்களை சிறைச்சாலையில் தங்க வைத்த ஐ.மா. கூட்டரசு வழக்கறிஞர் மார்டின் T. மான்டனை, பின்னால் போப் பயஸ் XI “தூய மகா கிரிகோரி வகுப்பைச் சேர்ந்த வீரன்” என்பதாக அறிவித்து அவரை கெளரவித்தார். என்றபோதிலும் அவருடைய மகிமை குறுகிய வாழ்வுடையதாயிருந்தது. ஏனென்றால் 1939-ல், அவருக்கு இரண்டு ஆண்டு கால சிறைவாசமும் பெருந்தொகை அபராதமும் விதிக்கப்பட்டது. ஏன்? ஏனென்றால் அவர் 6 நீதிமன்ற தீர்ப்புகளை மொத்தம் ரூ.27,90,000 இலஞ்சத்துக்கு விற்றதற்குக் குற்றமுள்ளவராகக் காணப்பட்டார்!
9 இப்போது நாம் கவனித்தவிதமாகவே, யெகோவாவின் ஜனங்கள் 1918-ல் கடும் சோதனையான ஒரு காலப்பகுதிக்குள் பிரவேசித்தனர். மல்கியா 3:1–3-லுள்ள தீர்க்கதரிசியின் கூடுதலான வார்த்தைகள், என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை விளக்குகிறது: “அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் [யெகோவா] நீங்கள் விரும்புகிற [ஆபிரகாமிய] உடன்படிக்கையின் தூதனுமானவர் [இயேசு] தீவிரமாய் வருவார்.” ஆம், யெகோவா நியாயந்தீர்ப்பதற்காக தம்முடைய கிறிஸ்துவோடே வந்தார். யெகோவா அப்போது கேட்பதாவது: “அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும் வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார்.” 1 பேதுரு 4:17-ன்படி நியாயத்தீர்ப்பு “தேவனுடைய வீடு” என்பதாக உரிமைப்பாராட்டுகிறவர்களிடமிருந்து ஆரம்பமாகும். இதன் காரணமாக மெய்க்கிறிஸ்தவர்கள் யெகோவாவின் ஊழியத்துக்காக தெளிவுப் பெற்றவர்களாயும் சுத்திகரிக்கப்பட்டவர்களாயும் இருந்தார்கள்.
“என் ஜனங்களே, . . . அவளை விட்டு வெளியே வாருங்கள்”!
10 மகா பாபிலோனின் மனந்திரும்பாத பாகமாக, கிறிஸ்தவமண்டல குருவர்க்கத்தால் யெகோவாவின் நியாயத்தீர்ப்பில் முன்னால் நிலைநிற்க முடியவில்லை. உலகப் போரின் படுகொலையில் பங்கு கொண்டவர்களாயும், மெய்க்கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினவர்களாயும் இருந்து தங்கள் வஸ்திரங்களைப் பயங்கரமாகக் கறைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். (எரேமியா 2:34) கிறிஸ்துவின் புதிய பரலோக ராஜ்யத்தை வரவேற்பதற்குப் பதிலாக அவர்கள் “பூமியின் மீது கடவுளுடைய ராஜ்யத்தின் அரசியல் வெளிக்காட்டு” என்பதாக விவரித்த மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சர்வ தேச சங்கத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தார்கள். 1919-ல் யெகோவா கிறிஸ்தவ மண்டலத்தின் மீதும்—எல்லாப் பொய் மதத்தின் மீதும் தீர்ப்பை வழங்கிவிட்டார் என்பது தெளிவாக ஆனது. மகா பாபிலோன் வீழ்ச்சி அடைந்து மரணத்தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது! சத்தியத்தையும் நீதியையும் நேசிக்கும் அனைவரும் எரேமியா 51:45-லுள்ள தீர்க்கதரிசனக் கட்டளையின் பேரில் செயல்படுவதற்கு உரிய நேரமாக இது இருந்தது: “என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; யெகோவாவுடைய கோபத்தின் உக்கிரத்துக்குத் தப்பும்படி, அவனவன் தன்தன் ஆத்துமாவை இரட்சித்துக் கொள்ளக்கடவன்.”
11 மகா பாபிலோன் வீழ்ந்துவிட்டது! ஆனால் அவள் இன்னும் அழிக்கப்படவில்லை. பொய் மத உலகப் பேரரசாக, சாத்தானின் வஞ்சனையின் தலையாயப் படைப்பாக அவள் இன்னும் கொஞ்ச காலம் இருப்பாள். அவள் மீது கடவுளுடைய முடிவானத் தீர்ப்பு என்ன? இதைக்குறித்து நான் சந்தேகத்தில் விடப்படுவதில்லை. நாம் நம்முடைய வேதாகமத்தை வெளிப்படுத்துதல் 17:1, 2-க்குத் திருப்புவோமாக. இங்கே ஒரு தூதன் அப்போஸ்தலனாகிய யோவானிடமும் அவன் மூலமாக இன்றைய தீர்க்கதரிசன மாணாக்கரிடமும் சொல்வதாவது: “நீ வா, திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறி கொண்டிருந்தார்களே; அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன்.” “திரளான தண்ணீர்கள்” என்ற பதம், மகா வேசியால் இத்தனை நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டுவரும் கொந்தளிப்பான மனிதவர்க்கத்தைக் குறிக்கிறது. “பூமியின் குடிகள்” அவளுடைய மதுவால் வெறி கொண்டிருப்பதாக தீர்க்கதரிசனம் சொல்கிறது. அவர்கள் பொய் போதனைகளையும் மகா பாபிலோனின் உலகப்பிரகாரமான ஒழுக்கங் கெட்ட வழிகளையும் ஏற்றுக்கொண்டு மலிவான கள்ளத்தனமான மதுவினால் வெறியேறியதுப் போல தள்ளாடுகிறார்கள்.
12 யாக்கோபு 4:4-ல் நாம் வாசிப்பதாவது: “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா?” இருபதாம் நூற்றாண்டு மதம் உலகத்தோடு சிநேகம் கொள்ள எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது. கிறிஸ்தவமண்டலத்தில் இது விசேஷமாக உண்மையாக இருக்கிறது. அவளுடைய குருவர்க்கம் வர இருக்கும் யெகோவாவின் ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்க தவறியது மட்டுமல்லாமல், சர்ச் அங்கத்தினர் மத்தியில் உலகப்பிரகாரமான கட்டுப்பாடற்ற சிற்றின்பப் போக்கைப் பொறுத்துக் கொள்வதன் மூலம் பைபிளின் ஒழுக்கப் போதனைகளின் வலிமையைக் குறைத்துவிட்டிருக்கிறார்கள். மாம்சப்பிரகாரமான வேசித்தனத்தின் சம்பந்தமாகவும்கூட குருவர்க்கம் பழிபாவமறியாததாக இல்லை. பின்வருமாறு சொன்னபோது அப்போஸ்தலனாகிய பவுல் இதைத் தானே மிக வெளிப்படையாக கண்டனம் செய்தான்: “வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும் விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள். ஆயினும் . . . கழுவப்பட்டீர்கள்.”—1 கொரிந்தியர் 6:9–11.
“சேற்றிலே புரளுவது”
13 நவீன நாளைய குருவர்க்கம் “கழுவப்பட்டு”விட்டார்களா? சரி, ஓர் உதாரணத்துக்கு, ஒரு சமயம் புராட்டஸ்டான்ட் சமயத்தின் கோட்டையாக இருந்த பிரிட்டனின் நிலைமையைக் கவனித்துப் பாருங்கள். நவம்பர் மாதம் 1987-ல் பிரிட்டனின் பிரதமர், ஒழுக்க விஷயங்களில் தலைமைப் பொறுப்பேற்று நடத்தும்படியாக குருவர்க்கத்துக்கு அழைப்பு விடுத்த சமயத்தில் ஆங்கில நாட்டு திருச்சபையின் தலைமைக் குரு சொன்னதாவது: “ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கு மற்ற அனைவரையும் போலவே பாலுணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு உரிமை உண்டு அதிலுள்ள நல்லதை நாம் பார்த்து [ஆண்புணர்ச்சிக்காரர்கள் மத்தியில்] கற்பை நாம் ஊக்குவிக்க வேண்டும்.” லண்டன் செய்தித் தாள் ஒன்று சொன்னதாவது: “ஆங்கில நாட்டு திருச்சபையைச் சேர்ந்த இறைமையியல் கல்லூரியில் ஓரினப் புணர்ச்சிப் பழக்கம் அத்தனைத் தீவிரமாக வளர்ந்து வருவதன் காரணமாக, மற்றொரு கல்லூரியின் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் அங்குச் செல்வதைத் தடைச் செய்ய வேண்டியவர்களாயிருந்தனர்.” “ஒரு லண்டன் மாவட்டத்தில், ஓரினப்புணர்ச்சி விருப்பமுள்ள குருமார், மொத்த எண்ணிக்கையில் பாதியாக இருப்பதாக” ஆராய்ச்சி ஒன்று மதிப்பிட்டது. குருமார் கூட்டமொன்றில் ஆங்கில நாட்டு சர்ச் குருமார், வேசித்தனத்தையும் விபசாரத்தையும் பாவம் என்றும், ஆனால் ஓரினப்புணர்ச்சி செயல்கள் அவ்விதமாக இல்லை என்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றை 95 சதவிகிதத்தினர் ஆதரித்தனர். இப்படிப்பட்ட ஆண்புணர்ச்சி செயல்கள் வெறுமென இலட்சிய நிலையிலிருந்து சற்றுக் குறைவானதாக இருப்பதாகச் சொல்லப்பட்டது. இவை அனைத்தின் பேரிலும் கருத்து தெரிவிப்பவராய், ஆங்கில நாட்டு சர்ச்சுக்கு, சோதோம் கொமோரா என்பதாக மறு பெயரிடலாம் என்பதாக செய்தி ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார். மற்றொரு லண்டன் செய்தித் தாள் அறிவித்ததாவது: “ஒழுக்கக் கட்டுப்பாடற்ற ஒரு சந்ததியினால் ஏற்படக்கூடிய விளைவுகளை நினைத்துப்பார்க்கையில் பிரிட்டன் நாட்டு மக்கள் திகைத்து நிற்கிறார்கள்.”
14 கடந்த ஆண்டுகளினூடே விசுவாசதுரோக குருவர்க்கம் அப்போஸ்தலனாகிய பேதுருவின் வார்த்தைகளுக்கு எத்தனை சரியாக பொருத்தமாக இருந்துவந்திருக்கிறார்கள்: “நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது!”—2 பேதுரு 2:22.
15 கிறிஸ்தவமண்டலம் முழுவதிலும், ஆம், உலகம் ழுழுவதிலும் ஒழுக்க தராதரங்கள் பயங்கரமாக சீர்குலைந்துவிட்டிருக்கின்றன. ஒரு சில சமுதாயங்களில் விவாகம் இப்பொழுது அவசியமற்றதாகக் கருதப்படுகிறது. விவாகமானவர்கள், விவாக பற்றுறுதி, பழம் பாணியானது என்று நினைக்கிறார்கள். வெகு சிலரே தங்கள் விவாகத்தை சட்டப்படி பதிவு செய்கிறார்கள். அவ்விதமாகச் செய்கிறவர்கள் மத்தியிலும் விவாகரத்து விகிதம் மிக அதிகமாக உள்ளது. ஐக்கிய மாகாணங்களில் கடந்த 25 ஆண்டுகளில் விவாகரத்து மூன்று மடங்குக்கும் அதிகமாகி, ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கும் அதிகமாகிவிட்டிருக்கிறது. 1965 முதற்கொண்டு 20 ஆண்டு காலப் பகுதியில், பிரிட்டனில் விவாகரத்து 41,000-லிருந்து 1,75,000 என்று நான்கு மடங்கு அதிகமாகிவிட்டிருக்கிறது. விவாகமில்லாத இருபாலாரும் விவாகம் செய்துகொள்ளாமல் கணவன் மனைவி போன்று கூடி வாழ விரும்புகிறவர்களாக, துணைவரை அடிக்கடி மாற்றிக் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். பாலுறவுகளினால் பரவும் பயங்கரமான நோய்களைப் பற்றி குறிப்பாக அவர்களுடைய ஒழுக்கங் கெட்ட வாழ்க்கை முறையினால் வேகமாக பரவி வரும் ஏய்ட்ஸ் நோயைப் பற்றி அவர்கள் புலம்பினாலும் தொடர்ந்து கீழ்த்தரமான பாலுறவுப் பழக்கங்களில் ஈடுபடுவதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள். கிறிஸ்தவமண்டல குருவர்க்கம் தவறு செய்யும் சர்ச் உறுப்பினர்களை சிட்சிக்கவில்லை. அவர்கள் எந்த அளவு ஒழுக்கமற்ற வாழ்க்கையைப் பார்த்து கண்டும் காணாதது போல் இருந்திருக்கிறார்களோ அந்த அளவு இந்த துயரமான விளைவுகளுக்கான பொறுப்பில் பங்கு கொள்ள வேண்டும்.—எரேமியா 5:29–31.
16 பொய் மத உலகப் பேரரசிலுள்ள வருந்தத்தக்க ஒழுக்க நிலையும்கூட, மகா பாபிலோன் விழுந்துவிட்டது என்ற உண்மையை உறுதி செய்கிறது. கடவுள் அவளை நியாயந்தீர்த்து அழிவுக்காக அவளை ஒதுக்கி வைத்திருக்கிறார். அப்படியென்றால் வெளிப்படுத்துதல் 18:2-லுள்ள தேவதூதனின் பலத்த சப்தத்துடன்கூடிய முழக்கம் எத்தனைப் பொருத்தமாக இருக்கிறது: “மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.” உலகத்தின் முடிவைத் தப்பிப்பிழைக்க விரும்பும் அனைவரும் வசனம் 4-ன் அழைப்பின் பேரில் இப்பொழுது செயல்படுவது எத்தனை முக்கியமாக இருக்கிறது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும் அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்!” இப்போது, முன்னாலிருக்கும் “மிகுந்த உபத்திரவத்தைத்” தப்பிப் பிழைப்பதற்கு, பொய் மதத்திலிருந்து வெளியேறுவது இன்றியமையாத ஒரு படியாகும். (வெளிப்படுத்துதல் 7:14) ஆனால் பார்க்கப் போகிறவிதமாகவே அதிகம் தேவைப்படுகிறது! (w89 4⁄15)
[அடிக்குறிப்புகள்]
a 1903 நவம்பர் 1-ம் தேதி, அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் கார்னிக் மன்றத்தில், சார்லஸ் T. ரஸலுக்கும் டாக்டர் E.L. ஈட்டனுக்குமிடையே நடைப்பெற்ற தொடர் சொற்போரின் முடிவில், உடனிருந்த மதகுரு சகோதரர் ரஸலின் வெற்றியை ஒப்புக்கொண்டுச் சொன்னதாவது: “நரகத்தின் மேல் தண்ணீர்க் குழாயைத் திருப்பி அக்கினியை அணைத்ததைக் காண்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.”
[கேள்விகள்]
1. அந்த அருவருப்பான “வேசி” யார்? நாம் அவளைப்பற்றி அறிந்திருப்பது ஏன் அவசியமாகும்?
2. இந்த வேசி அவளுடையப் பெயரை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறாள்? ஒரு பொய் மத உலக பேரரசு எவ்விதமாக ஆரம்பமானது?
3. (எ) எவ்வளவு காலத்துக்கு பாபிலோன் கடவுளுடைய ஜனங்களைக் கைதிகளாக வைத்திருந்தது? அவர்களை இது எதற்கு அருகாமையில் வைத்தது? (பி) பாபிலோன் எப்பொழுது துயரமான வீழ்ச்சியை அனுபவித்தது? அவளுடைய முடிவு அப்போது ஏன் வரவில்லை?
4. (எ) யெகோவாவின் தீர்க்கதரிசிகள் பாபிலோனைப் பற்றி என்ன அறிவித்தார்கள்? பாபிலோனுக்கு என்ன நேரிட்டது? (பி) பூமியிலுள்ள மக்களுக்கு தீங்கிழைக்கும் வகையில் வேறு எந்த பாபிலோன் இன்னும் இருந்து வருகிறது?
5. (எ) பாபிலோன் அதன் மகிமையின் உச்சியிலிருக்கையில், என்ன மதங்கள் தோன்றின? ஆனால் முழு உலகத்தையும் பொய் மதத்தால் பாழக்குவதில் சாத்தான் ஏன் வெற்றிப் பெறவில்லை? (பி) கிறிஸ்தவம் அறிமுகஞ்செய்து வைக்கப்பட்ட பின்பு சாத்தான் பொய் மதத்தை எவ்வாறு பயன்படுத்தினான்?
6. (எ) சாத்தான் எவ்விதமாக கிறிஸ்தவ போதனைகளைக் கறைபடுத்தினான்? கடவுளை கனவீனப்படுத்தும் என்ன போதனைகள் தோன்றின? (பி )பாபிலோனிய கோட்பாட்டுக்குப் பதிலாக பைபிள் சத்தியத்தை விரும்பின ஆயிரக்கணக்கானோருக்கு என்ன சம்பவித்தது?
7. (எ) எப்பொழுது, எவ்விதமாக, யெகோவா அடிப்படை பைபிள் சத்தியங்களை மீண்டும் நிலைநாட்டி பொய்யான பாபிலோனிய போதனைகளை வெளிப்படுத்தினார்? (பி) பைபிள் மாணாக்கர் மீண்டும் நிலைநாட்டிய அந்த அடிப்படை பைபிள் சத்தியங்கள் யாவை?
8. (எ) கிறிஸ்தவமண்டல குருமார், எவ்விதமாக பைபிள் மாணாக்கரை அழிக்கும் முயற்சியில் முதல் உலகப் போரை பயன்படுத்தினர்? (பி) உவாட்ச் டவர் சொஸையிட்டியின் எட்டு அலுவலர்களை பிணையத்தின் மீது விடுவிக்க மறுத்து சிறையில் தங்க வைத்த வழக்கறிஞருக்கு என்ன நேர்ந்தது?
9. யெகோவாவின் மக்களுக்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை மல்கியா எவ்விதமாக விளக்கினான்? ஆகவே நியாயத்தீர்ப்பு யாரிடமிருந்து ஆரம்பமானது?
10. 1919-க்குள் கிறிஸ்தவமண்டலத்தின் மீதும் எல்லா பொய் மதத்தின் மீதும் என்ன தெய்வீக நியாயத்தீர்ப்பு வழங்கப்பட்டது? இது மகா பாபிலோனுக்கு எதில் விளைவடைந்தது?
11, 12. (எ) மகா பாபிலோனின் மீது வர இருக்கும் நியாயத்தீர்ப்பின் சம்பந்தமாக வெளிப்படுத்துதல் 17:1, 2-ல் ஒரு தூதன் என்ன சொன்னான்? (பி) மகா வேசி உட்கார்ந்திருக்கும் அந்தத் “திரளான தண்ணீர்கள்” யாவை? அவள் எவ்விதமாக “வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளை வெறி கொண்டிருக்கச்” செய்திருக்கிறாள்?
13, 14. (எ) நவீன நாளைய குருவர்க்கம் “கழுவப்பட”வில்லை என்பதை என்ன உதாரணங்கள் காண்பிக்கின்றன? (பி) ஆங்கில நாட்டு சர்ச் குருமாரின் கூட்டமொன்று, ஓரினப்புணர்ச்சி செயல்களின் சம்பந்தமாக என்ன கருத்தை வெளியிட்டது? சர்ச்சுக்கு என்ன மறுபெயரிடலாம் என்பதாகச் செய்தி ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவித்தார்? (சி) விசுவாச துரோக குருவர்க்கம் அப்போஸ்தலனாகிய பேதுருவின் என்ன வார்த்தைகளுக்குச் சரியாக பொருத்தமாக இருந்து வந்திருக்கிறார்கள்?
15. (எ) கிறிஸ்தவமண்டலம் முழுவதிலுமாக ஒழுக்க தராதரங்களின் என்ன சீர்குலைவு ஏற்பட்டிருக்கின்றது? (பி) துயரமான இந்த விளைவுகளுக்கான பொறுப்பில் யார் பங்கு கொள்ள வேண்டும்?
16.(எ) மகா பாபிலோன் விழுந்துவிட்டது என்ற உண்மையை எது உறுதி செய்கிறது? வெளிப்படுத்துதல் 18:2-லுள்ள தேவதூதனின் எந்த முழக்கம் பொருத்தமாக இருக்கிறது? (பி) உலகத்தின் முடிவைத் தப்பிப்பிழைக்க விரும்புகிற அனைவரும் என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 8-ன் படம்]
குருமார் ஒழுக்கம்
“கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய மாகாணங்களில் கத்தோலிக்கப் பாதிரிகளால் கெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பிள்ளைகள் உணர்ச்சிப்பூர்வமாக, கடுமையான அதிர்ச்சிக் கோளாறினால் அவதியுற்றிருப்பதாக பெற்றோரும், மனஇயல் நிபுணர்களும், காவல் அதிகாரிகளும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களும் தெரிவிக்கிறார்கள்.”—அக்ரான் பீக்கன் ஜர்னல் (Akron Beacon Journal), ஜனவரி 3, 1988.
“தங்கள் பிள்ளைகள் பாதிரிகளால் பாலுறவு நடவடிக்கைகளில் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாக வாதாடும் குடும்பங்களுக்கு, நஷ்ட ஈடாக ஐக்கிய மாகாணங்களிலுள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச் இலட்சக்கணக்கில் பணம் செலுத்த வற்புறுத்தப்பட்டிருக்கிறது. இப்படியிருந்த போதிலும் பிரச்னை அத்தனைத் தீவிரமாக வளர்ந்து விட்டிருப்பதால், சர்ச் இவைகளை அசட்டை செய்து இப்படிப்பட்ட வழக்குகளை மூடிமறைத்துவிட்டிருப்பதாக அநேக வழக்கறிஞர்களும் இதற்கு பலியானவர்களும் தெரிவிக்கிறார்கள்.”—தி மியாமி ஹெரால்ட் (The Miami Herold), ஜனவரி 3, 1988.
[பக்கம் 6-ன் படம்]
பூர்வ எகிப்திலிருந்தும் கிறிஸ்தவமண்டலத்திலிருந்தும் திரியேக தெய்வங்களின் உருவங்கள்
[பக்கம் 9-ன் படம்]
பைபிள் ஒழுக்கமற்ற மதத்தலைவர்களை, சேற்றிலே புரள திரும்பிச்செல்லுகிற கழுவப்பட்ட பன்றிக்கு ஒப்பிடுகிறது