அவள் யெகோவாவின் தயவை மிகுதியாகப் பெற்றிருந்தாள்
“வாழ்க, மிகுதியாக தயவுப் பெற்றவளே, யெகோவா உன்னுடனே இருக்கிறார்.” என்னே ஒரு வாழ்த்துதல்! இப்படிப் பேசிக்கொண்டிருப்பவர் காபிரியேல் தூதனே அன்றி வேறு எவரும் இல்லை. தாழ்மையான இருதயமுள்ள ஓர் இளம் பெண்ணிடம்—ஏலி என்ற பெயருடைய ஒரு மனிதனின் மகளாகிய மரியாளிடம்—அவர் பேசிக்கொண்டிருக்கிறார். ஆண்டு பொ.ச.மு. 3, இடம் நாசரேத்து.—லூக்கா 1:26-28, NW.
மரியாள் தச்சனாகிய யோசேப்புக்குத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருக்கிறாள். யூத சட்டம் மற்றும் பழக்கத்தின்படி, அவள் அவருடைய மண உறுதிசெய்த மனைவியாக கருதப்படுகிறாள். (மத்தேயு 1:18) அவளைப் போலவே, அவரும் சமுதாயத்தில் தாழ்ந்த அந்தஸ்திலிருக்கிறார். அப்படியானால், தூதன் அவளை மிகுதியாக தயவுப் பெற்றவள் என்பதாக வாழ்த்துவதற்கு காரணம் என்ன?
அதிசயமான அவளுடைய சிலாக்கியம்
காபிரியேல் மேலுமாகச் சொல்கிறார்: “மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.”—லூக்கா 1:29-33.
ஆச்சரியமும் குழப்பமுமடைந்தவளாய், மரியாள் பின்வருமாறு கேட்கிறாள்: “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே.” காபிரியேல் பதிலளிக்கிறார்: “பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.” எந்தச் சந்தேகத்தையும் நீக்கிவிடுவதற்காக தூதன் மேலுமாகச் சொல்கிறார்: “இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை.”—லூக்கா 1:34-37.
மரியாள் உடனடியாக இந்த மகத்தான ஊழிய சிலாக்கியத்தை ஏற்றுக்கொள்கிறாள். மனப்பூர்வமாக, ஆனால் மனத்தாழ்மையோடு அவள் இவ்வாறு பதிலளிக்கிறாள்: “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது.” அதன் பின்னர் காபிரியேல் போய்விடுகிறார். மரியாள் மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்துக்குத் தீவிரமாய்ப் போகிறாள். ஆசாரியனாகிய சகரியா மற்றும் அவருடைய மனைவி எலிசபெத்தின் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, தேவதூதன் விவரித்த நிலைமைகளை அப்படியே காண்கிறாள். என்னே மகிழ்ச்சியினால் மரியாளின் இருதயம் நிரம்புகிறது! அவளுடைய உதடுகள் யெகோவாவுக்குத் துதியின் வார்த்தைகளைக் கொப்பளிக்கின்றன.—லூக்கா 1:38-55.
அவள் யோசேப்பின் மனைவியாகிறாள்
இயேசு கிறிஸ்துவுக்கு மனித சரீரத்தை ஒரு கன்னிப்பெண் அளிக்கவேண்டும், ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு பிறப்பே முன்னறிவிக்கப்பட்டிருந்தது. (ஏசாயா 7:14; மத்தேயு 1:22, 23) ஆனால் நிச்சயிக்கப்பட்ட ஒரு கன்னிப்பெண் ஏன் அவசியமாக இருந்தது? தாவீது அரசனின் சிங்காசனத்திற்கு சட்டப்பூர்வமான உரிமையைக் கடத்தக்கூடிய வளர்ப்புத் தகப்பன் ஒருவரை அளிப்பதற்காகவே. யோசேப்பும் மரியாளும் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகவும் தாவீது அரசனின் சந்ததியினராகவும் இருக்கிறார்கள். ஆகவே இயேசுவின் சட்டமுறையான உரிமை இரட்டிப்பாக நிலைநாட்டப்படும். (மத்தேயு 1:2-16; லூக்கா 3:23-33) இதன் காரணமாகவே தேவதூதன் யோசேப்பிடமாக அவள் கர்ப்பமாக இருந்தபோதிலும் அவளை அவருடைய சட்டப்பூர்வமான மனைவியாக ஏற்றுக்கொள்ள தயங்கக்கூடாது என்பதாக பின்னால் உறுதியாகக் கூறுகிறார்.—மத்தேயு 1:19-25.a
வரி வசூலிப்பு சம்பந்தமாக அகுஸ்து இராயன் பிறப்பித்தக் கட்டளை யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் பதிவுசெய்வதைத் தேவைப்படுத்துகிறது. அங்கே இருக்கையில் அவள் தன்னுடைய முதல்பேறான குமாரனைப் பெற்றெடுக்கிறாள். மேய்ப்பர்கள் பாலகனைக் காண வந்து, அவருடைய தகப்பனாகிய யெகோவாவுக்குத் துதியைச் செலுத்துகிறார்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி 40 நாட்கள் சுத்திகரிப்புக்குப் பின்னர், மரியாள் தன்னுடைய பாவ நிவிர்த்திக்காக எருசலேமிலுள்ள ஆலயத்துக்குச் செல்கிறாள். (லேவியராகமம் 12:1-8; லூக்கா 2:22-24) ஆம், அவள் பரிசுத்தமாக பிறக்காத காரணத்தாலும் இதன் காரணமாக பாவக் கறையிலிருந்து விடுபடாதிருந்ததாலும், பாவ நிவிர்த்திக்கான பலிகளைச் செலுத்துவதன் மூலம் அவளுடைய சுதந்தரிக்கப்பட்ட அபூரணங்கள் மூடப்பட வேண்டும்.—சங்கீதம் 51:5.
மரியாளும் யோசேப்பும் ஆலயத்தில் இருக்கையில், வயது சென்றவராயிருந்த சிமியோனும் முதிர் வயதினளாய் இருந்த தீர்க்கதரிசினி அன்னாளும் கடவுளுடைய குமாரனைப் பார்க்கும் சிலாக்கியம் பெறுகின்றனர். மரியாள் மைய கவனத்துக்குரியவளாக இல்லை. (லூக்கா 2:25-38) பின்னர், சாஸ்திரிகள் அவளை அல்ல, இயேசுவையே பணிந்துகொள்கின்றனர்.—மத்தேயு 2:1-12.
எகிப்துக்கு ஓடிப்போய் பொல்லாத ஏரோது மரிக்கும் வரையாக அங்கே தங்கியிருந்தப் பின், இயேசுவின் பெற்றோர் திரும்பிவந்து நாசரேத்து என்ற சிறிய கிராமத்தில் வந்து தங்கிவிடுகின்றனர். (மத்தேயு 2:13-23; லூக்கா 2:39) அங்குதானே யோசேப்பும் மரியாளும் தேவ பக்தியுள்ள குடும்பச் சூழலில் இயேசுவை வளர்க்கின்றனர்.
மரியாள் மற்ற பிள்ளைகளைக் கொண்டிருந்தாள்
காலப்போக்கில், மரியாளும் யோசேப்பும் இயேசுவுக்கு மற்ற இயற்கையான சகோதர சகோதரிகளைக் கொடுக்கின்றனர். இயேசுவின் ஊழியம் அவரை அவருடைய சொந்த ஊராகிய நாசரேத்துக்குக் கொண்டுவருகையில், சிறுவயதில் அவருக்கு அறிமுகமானவர்கள் அவரை அடையாளங்கண்டுகொள்கின்றனர். “இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா?” என்று அவர்கள் கேட்கின்றனர். “இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா?” (மத்தேயு 13:55, 56) நாசரேத்தூரார் இயேசுவின் இயற்கையான சகோதரர் சகோதரிகள் என்று அவர்கள் அறிந்திருந்த, யோசேப்பு மற்றும் மரியாளின் மகன்கள் மகள்கள் உள்ளிட்ட அவர்களுடைய மாம்சப் பிரகாரமான குடும்பத்தைக் குறித்துப் பேசுகின்றனர்.
இந்தச் சகோதர சகோதரிகள் இயேசுவின் பெற்றோருடைய உடன்பிறப்புக்களின் பிள்ளைகள் அல்ல. அவர்கள் அவருடைய சீஷர்களாக அல்லது ஆவிக்குரிய சகோதர சகோதரிகளாகவும் இல்லை. ஏனென்றால் யோவான் 2:12 பின்வருமாறு சொல்வதன் மூலம் இரு சாராருக்குமிடையே தெளிவான வித்தியாசத்தைக் காட்டுகிறது: “அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாள் தங்கினார்கள்.” பல ஆண்டுகளுக்குப் பிற்பாடு எருசலேமில், அப்போஸ்தலன் பவுல் கேபா அல்லது பேதுருவைக் கண்டு, “கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை,” என்பதாகச் சொன்னார். (கலாத்தியர் 1:19) மேலுமாக, யோசேப்பு “அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை [மரியாளை] அறியாதிருந்”தார் என்ற கூற்று, இயேசுவின் வளர்ப்புத் தகப்பன் அதற்குப் பிற்பாடு அவளோடு உறவுகொண்டு அவளுடைய மற்ற பிள்ளைகளுக்குத் தந்தையானார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. (மத்தேயு 1:25) இதற்கிசைவாகவே, லூக்கா 2:7 இயேசுவை அவளுடைய ‘முதற்பேறான குமாரன்’ என்றழைக்கிறது.
கடவுள் பயமுள்ள ஒரு தாய்
கடவுள் பயமுள்ள ஒரு தாயாக, மரியாள் தன்னுடைய பிள்ளைகளை நீதியின் வழிகளில் போதிப்பதற்கு யோசேப்போடு ஒத்துழைக்கிறாள். (நீதிமொழிகள் 22:6) அவள் வேதவாக்கியங்களின் ஆர்வமான ஒரு மாணவி என்பதை எலிசபெத் அவளை வாழ்த்திய போது ஆவிக்குரியவிதமாக நிறைவாயிருந்த அவளுடைய சொற்களின் அமைப்பிலிருந்து காணமுடிகிறது. அப்பொழுது இயேசுவின் தாய், அன்னாளின் பாடலிலிருந்த உணர்ச்சிகளைத் திரும்பக்கூறி, சங்கீதங்கள், வரலாற்று மற்றும் தீர்க்கதரிசன எழுத்துக்கள் மற்றும் மோசேயின் புத்தகங்களைப் பற்றிய அறிவை வெளிப்படுத்துகிறாள். (ஆதியாகமம் 30:13; 1 சாமுவேல் 2:1-10; நீதிமொழிகள் 31:28; மல்கியா 3:12; லூக்கா 1:46-55) மரியாள் தீர்க்கதரிசன சம்பவங்களையும் பழமொழிகளையும் மனப்பாடம் செய்து, அவற்றைத் தன்னுடைய இருதயத்தில் பொக்கிஷமாக வைத்து, தன் மனதில் அவற்றைப் பற்றி சிந்தனைச் செய்திருக்கிறாள். ஆகவே அவள் சிறுவனாகிய இயேசுவுக்கு பெற்றோருக்குரிய போதனைகளை அளிப்பதில் பங்குகொள்ள ஆயத்த நிலையில் இருக்கிறாள்.—லூக்கா 2:19, 33.
நன்றாகப் போதிக்கப்பட்டிருந்த 12 வயது நிரம்பிய இயேசு ஆலயத்தில் வேதவார்த்தைகளின் அறிவை வெளிப்படுத்திக் கற்றறிந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். அந்தப் பஸ்கா சமயத்தின் போது அவர் தம்முடைய பெற்றோரிடமிருந்து பிரிந்துபோன படியால் அவருடைய தாய் சொல்கிறாள்: “மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே.” இயேசு இவ்வாறு பதிலளிக்கிறார்: “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா?” இந்தப் பதிலின் முக்கியத்துவத்தைக் கிரகித்துக்கொள்ள இயலாதவளாய், மரியாள் அதைத் தன் இருதயத்தில் வைத்துக்கொள்கிறாள். நாசரேத்துக்குத் திரும்பிவந்து இயேசு “ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.”—லூக்கா 2:42-52.
இயேசுவின் சீஷராக மரியாள்
மரியாள் காலப்போக்கில் இயேசுவின் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சீஷரானது எத்தனை பொருத்தமாக உள்ளது! அவள் சாந்தமுள்ளவளாய் கடவுள் தனக்கு கொடுத்த தனிச்சிறப்பான ஒரு வேலையின் மத்தியிலும் பிரசித்திப் பெற்றவளாக இருக்கவேண்டும் என்று பேராசையுடையவளாக இருக்கவில்லை. மரியாள் வேதவாக்கியங்களை அறிந்திருக்கிறாள். நீங்கள்தாமே அவற்றை ஆராய்ந்து பார்த்தால், அவள் ஒளிவட்டத்தோடு, “தாய்-அரசி”யாக ஒரு சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டு கிறிஸ்துவினுடைய மகிமையின் ஒளியில் தோய்ந்திருப்பதாக வருணிக்கப்பட்டிருப்பதை காணமாட்டீர்கள். மாறாக, பின்னணியில், கவனத்தைக் கவரும் இடத்துக்கு வெளியே அவள் இருப்பதையே நீங்கள் காண்பீர்கள்.—மத்தேயு 13:53-56; யோவான் 2:12.
இயேசு தம்மைப் பின்பற்றுவோர் மத்தியில் மரியாள் வழிபாடு என்பது போன்ற எதையும் முளையிலேயே கிள்ளிவிட்டார். ஒரு சமயம் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, “ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் ஆசீர்வதிக்கப்பட்டவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.” ‘அதைப்பார்க்கிலும்,’ “தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,” என்பதாக அவர் பதிலளித்தார். (லூக்கா 11:27, 28, அமெரிக்காவிலுள்ள கத்தோலிக்க பைபிள் சங்கத்தின் உறுப்பினர்களால் மொழிபெயர்க்கப்பட்ட தி நியூ அமெரிக்கன் பைபிள்) திருமண விருந்து ஒன்றில், இயேசு மரியாளிடம் இவ்வாறு சொன்னார்: “ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை.” (யோவான் 2:4) மற்ற மொழிபெயர்ப்புகள் இவ்விதமாக வாசிக்கின்றன: “என்னுடைய கைகளில் காரியத்தை விட்டுவிடு.” (வேமெளத்) “என்னை வழிநடத்த முயற்சி செய்யவேண்டாம்.” (அன் அமெரிக்கன் வர்ஷன்) ஆம், இயேசு தன்னுடைய தாய்க்கு மரியாதை காட்டினார், ஆனால் அவளை வழிபடவில்லை.
நித்திய சிலாக்கியங்கள்
என்னே சிலாக்கியங்களை மரியாள் அனுபவித்தாள்! அவள் இயேசுவைப் பெற்றெடுத்தாள். தாயாக இருந்து அந்த இளம் பிள்ளைக்குப் பயிற்றுவிப்பைக் கொடுத்தாள். கடைசியாக, அவள் விசுவாசத்தை அப்பியாசித்து, கிறிஸ்துவின் சீஷராகவும் ஆவிக்குரிய சகோதரியுமானாள். மரியாளைப் பற்றிய நம்முடைய கடைசி வேதப்பூர்வமான கண்ணோட்டத்தில், நாம் எருசலேமில் ஒரு மேலறையில் அவளைக் காண்கிறோம். அங்கே அவள் இயேசுவின் அப்போஸ்தலரோடும், அவளுடைய மற்ற குமாரர்களோடும், ஒரு சில உண்மையுள்ள பெண்களோடும்கூட—அனைவரும் யெகோவாவின் வணக்கத்தார்—இருக்கிறாள்.—அப்போஸ்தலர் 1:13, 14.
காலப்போக்கில், மரியாள் மரித்துப்போனாள், அவளுடைய சரீரம் மண்ணுக்குத் திரும்பியது. அவளுடைய அருமைக் குமாரனைப் பின்பற்றிய ஆரம்பக்கால அபிஷேகம் செய்யப்பட்ட மற்றவர்களைப் போலவே, பரலோகத்தில் சாவாமையுள்ள வாழ்க்கைக்கு ஓர் ஆவி ஆளாக உயிர்த்தெழுப்பப்படுவதற்கு கடவுளுடைய குறித்த காலம் வரும்வரையாக மரணத்தில் நித்திரைசெய்துகொண்டிருந்தாள். (1 கொரிந்தியர் 15:44, 50; 2 தீமோத்தேயு 4:8) “மிகுதியாக தயவுப் பெற்ற” இவள் இப்பொழுது யெகோவா தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்!
[அடிக்குறிப்புகள்]
a மரியாள் ஒரு கன்னிகையாக இல்லாதிருந்தால், யார் அவளைத் திருமணம்செய்து கொள்ள விரும்புவார்? யூதர்கள் ஒரு பெண் கன்னிகையாக இருக்கவேண்டும் என்பதை வற்புறுத்தினார்கள்.—உபாகமம் 22:13-19; ஆதியாகமம் 38:24-26-ஐ ஒப்பிடவும்.
[பக்கம் 31-ன் படம்]
இயேசுவின் தாயாக மரியாள் மிகுதியாக தயவுபெற்றிருந்தாள்