இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
பெருமையுள்ளோரும் தாழ்மையுள்ளோரும்
ஹமுழுக்காட்டுபவன் யோவானின் நற்பண்புகளைக் குறிப்பிட்டபின், இயேசு, தம்மைச் சுற்றியிருந்த பெருமையான, நிலையற்ற ஆட்களிடம் கவனத்தைத் திருப்புகிறார். “இந்தச் சந்ததி, . . . சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது,” என்று சொல்லுகிறார்.
இயேசு கருதுவதென்ன? அவர் பின்வருமாறு விளக்குகிறார்: “யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்றார்கள். மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள்.”
அந்த ஜனங்களைத் திருப்திசெய்ய முடியாது. எதுவும் அவர்களை மகிழ்விப்பதில்லை. “அவன் திராட்சமதுவும் வெறிமிக்கப் பானமும் குடிக்கவேகூடாது,” (NW) என்ற தேவதூதரின் அறிவிப்புக்கிணங்க யோவான் நசரேயனாகத் தன்னலம் மறுத்த மிக எளிமையான வாழ்க்கை நடத்தினான். எனினும் ஜனங்கள் அவனைப் பிசாசுபிடித்தவனென சொல்லுகிறார்கள். மறுபட்சத்தில், இயேசு மற்ற ஆட்களைப்போல் வாழ்கிறார், அவர் துறவி வாழ்க்கை நடத்தவில்லை, அவரை மட்டுமீறியவரென குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இந்த ஜனங்களைப் பிரியப்படுத்துவது எவ்வளவு கடினம்! இவர்கள் சிறுவரின் விளையாட்டுத் தோழர்களைப்போல் இருக்கின்றனர், சிறுவர் சிலர், மற்றப் பிள்ளைகள் குழல் ஊதினால் அதற்குப் பிரதிபதிலாக நடனமாட அல்லது தங்கள் உடன்தோழர் புலம்பினால் துக்கத்துடன் பிரதிபலிக்க மறுத்துவிடுகின்றனர். எனினும், இயேசு பின்வருமாறு சொல்லுகிறார்: “ஞானம் அதன் செயல்களால் நீதியுள்ளதாய் நிரூபிக்கப்படுகிறது.” (NW) ஆம், அந்த அத்தாட்சி—செயல்கள்—யோவானுக்கும் இயேசுவுக்கும் எதிராகச் செய்த அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யென தெளிவாய்த் தெரியசெய்கின்றன.
இயேசு தம்முடைய வல்லமையுள்ள செயல்களில் பெரும்பான்மையானவற்றைச் செய்திருந்த பட்டணங்களாகிய கோராசின், பெத்சாயிதா மற்றும் கப்பர்நகூமைக் கண்டனத்துக்குரியவையாகத் தனிப்பட குறிப்பிடுகிறார். அந்தச் செயல்களை அவர் பொனீஷிய பட்டணங்களான தீருவிலும் சீதோனிலும் செய்திருந்தால், அந்தப் பட்டணங்களிலுள்ளோர் இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்களென இயேசு சொல்லுகிறார். அவருடைய ஊழியத்தின்போது அவருக்குத் தங்குமிடமாக இருந்ததென தெரிகிற கப்பர்நகூமை இயேசு கண்டனம் செய்து: “நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப் பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்,” என்று அறிவிக்கிறார்.
இவ்வாறு சொல்வதால் இயேசு கருதுவதென்ன? நியாயத்தீர்ப்பின் நாளின்போது கப்பர்நகூமிலிருக்கும் பெருமையுள்ளவர்கள் உயிர்த்தெழுப்பப்படுகையில், தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு கிறிஸ்துவை ஏற்பது, உயிர்த்தெழுப்பப்பட்ட பூர்வ சோதோம் பட்டணத்தார் தாழ்மையுடன் மனந்திரும்பி நீதியைக் கற்றுக்கொள்வதைப் பார்க்கிலும் அதிகக் கடினமாயிருக்குமென அவர் காட்டுவதாகத் தெரிகிறது.
இதையடுத்து இயேசு தம்முடைய பரலோகத் தகப்பனை யாவர்முன்னும் துதிக்கிறார். விலைமதியா ஆவிக்குரிய சத்தியங்களைக் கடவுள், ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்து, ஆனால் இந்த அதிசயமான காரியங்களைத் தாழ்மையுள்ளோருக்கு, குழந்தைகளைப்போல் இருப்போருக்கு வெளிப்படுத்துவதனால் அவ்வாறு துதிக்க அவர் மனங்கனிவிக்கப்படுகிறார்.
கடைசியாக, இயேசு மனங்கவரும் இந்த அழைப்பைக் கொடுக்கிறார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”
இயேசு எவ்வாறு இளைப்பாறுதல் தருகிறார்? மதத் தலைவர்கள் ஜனங்கள்மீது சுமத்தியிருக்கிற அடிமைப்படுத்தும் பாரம்பரியங்களிலிருந்து, உதாரணமாக, ஓய்வுநாளைக் கைக்கொள்ளும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் உட்பட்டவற்றிலிருந்தும் விடுதலையளிப்பதன்மூலம் இளைப்பாறுதலைத் தருகிறார். மேலும் அரசியல் அதிகாரிகளால் அடக்கியாளப்படுவதன் நொறுக்கும் பாரத்தை உணருவோருக்கும் வாதிக்கும் மனச்சாட்சியின்மூலம் தங்கள் பாவங்களின் பாரத்தை உணருவோருக்கும் விடுதலைக்குரிய வழியையும் அவர் காட்டுகிறார். அல்லற்பட்டுவருந்தும் இத்தகையோருக்கு, அவர்கள் பாவங்கள் எவ்வாறு மன்னிக்கப்பட முடியுமென்பதையும் கடவுளுடன் அவர்கள் எவ்வாறு அருமையான உறவை அனுபவித்துமகிழ முடியுமென்பதையும் அவர் வெளிப்படுத்துகிறார்.
இயேசு அளிக்கும் இந்தத் தயவான நுகம் கடவுளுக்கு முழுமையாய் ஒப்புக்கொடுத்து, கனிவும் இரக்கமுமுள்ள நம்முடைய பரலோகத் தகப்பனைச் சேவிக்கக்கூடியதாயிருக்கும் ஒன்றாகும். மேலும் தம்மிடம் வருவோருக்கு இயேசு அளிக்கும் அந்த இலகுவான சுமையானது ஜீவனடைவதற்குத் தேவையான கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாகும், அவருடைய கட்டளைகள் சற்றேனும் பாரமானவையல்ல. மத்தேயு 11:16-30; லூக்கா 1:15; 7:31-35; 1 யோவான் 5:3.
◆ இயேசுவின் சந்ததியார் எவ்வாறு சிறுபிள்ளைகளைப்போல் இருந்தனர்?
◆ கப்பர்நகூமைப் பார்க்கிலும் சோதோமுக்கு எவ்வாறு அதிக இலகுவாயிருக்கும்?
◆ எம்முறைகளில் ஜனங்கள் பாரம் சுமக்கின்றனர்? என்ன விடுதலையை இயேசு அளிக்கிறார்? (w87 1⁄15)