“என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்”
“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” —மத்தேயு 11:29.
1. இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வது சந்தோஷத்தை தந்து, வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க காரணம் என்ன?
இயேசு கிறிஸ்துவின் சிந்தனையும், சொல்லும், செயலும் எப்போதுமே ஏற்க தகுந்தவையாக இருந்தன. அவர் பூமியில் வாழ்ந்த காலம் மிகக் குறைவு என்றாலும் பயனும் திருப்தியும் அளித்த வேலையில் ஈடுபட்டார், எப்போதும் சந்தோஷமாக இருந்தார். அவர் சீஷர்களை திரட்டி, கடவுளை வணங்கவும், எல்லாரிடமும் அன்பு காட்டவும், உலகத்தை ஜெயிக்கவும் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். (யோவான் 16:33) அவர் நம்பிக்கையினால் அவர்களுடைய இருதயங்களை நிரப்பினார், “ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.” (2 தீமோத்தேயு 1:10) நீங்களும் அவருடைய சீஷர்களில் ஒருவரானால், சீஷனாக இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்று நினைக்கிறீர்கள்? சீஷர்களை பற்றி இயேசு கூறுவதை சிந்தித்துப் பார்த்தால் நம் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிகளை கற்றுக்கொள்ளலாம். இது, அவருடைய நோக்குநிலையை ஏற்றுக்கொள்வதையும் சில அடிப்படை நியமங்களை பின்பற்றுவதையும் உட்படுத்துகிறது.—மத்தேயு 10:24, 25; லூக்கா 14:26, 27; யோவான் 8:31, 32; 13:35; 15:8.
2, 3. (அ) இயேசுவின் சீஷன் என்பதன் அர்த்தம் என்ன? (ஆ) ‘யாருடைய சீஷனாக இருக்கிறேன்?’ என நம்மை நாமே கேட்டுக்கொள்வது ஏன் முக்கியம்?
2 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் “சீஷன்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை அடிப்படையில், ஏதோ ஒன்றிடம் தன் மனதை ஒருமுகப்படுத்துபவர் அல்லது கற்றுக்கொள்பவர் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. அதோடு சம்பந்தப்பட்ட ஒரு வார்த்தை இக்கட்டுரையின் முக்கிய வசனமான மத்தேயு 11:29-லும் உள்ளது: ‘நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.’ ஆம், சீஷன் என்றால் கற்றுக்கொள்பவர். இயேசுவை பின்பற்றிய மிக நெருங்கிய நண்பர்களுக்கே “சீஷன்” என்ற வார்த்தையை சுவிசேஷங்கள் பொதுவாக உபயோகிக்கின்றன; இவர்கள் இயேசு பிரசங்கிக்கையில் அவரோடு பயணம் செய்தனர், அவரால் கற்பிக்கப்பட்டனர். சிலர் இயேசுவின் போதனைகளை வெறுமனே ஒப்புக்கொண்டனர், இரகசியமாகக்கூட அவருக்கு சீஷராக இருந்தனர். (லூக்கா 6:17; யோவான் 19:38) முழுக்காட்டுபவனாகிய ‘யோவானுடைய [ஸ்நானனுடைய] சீஷரை பற்றியும் பரிசேயருடைய சீஷரை’ பற்றியும் சுவிசேஷ எழுத்தாளர்கள் குறிப்பிட்டனர். (மாற்கு 2:18) ‘பரிசேயரின் உபதேசத்தைக் குறித்து எச்சரிக்கையாய்’ இருக்கும்படி இயேசு தம்மை பின்பற்றியவர்களை எச்சரித்ததால், ‘யாருடைய சீஷனாக இருக்கிறேன்?’ என நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம்.—மத்தேயு 16:12.
3 நாம் இயேசுவின் சீஷராக இருந்து, அவரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் என்றால் நம்மோடு இருக்கையில் மற்றவர்கள் ஆவிக்குரிய விதத்தில் புத்துணர்ச்சி அடைய வேண்டும். நாம் அதிக சாந்தகுணம் உள்ளவர்களாகவும் மனத்தாழ்மை உள்ளவர்களாகவும் மாறியிருப்பதை அவர்கள் கண்டுணர வேண்டும். நாம் ஓர் அதிகாரியாக வேலை செய்தால், பெற்றோராக இருந்தால், அல்லது கிறிஸ்தவ சபையில் மேய்க்கும் பொறுப்புகளை ஏற்றிருந்தால், இயேசு தம்முடன் இருந்தவர்களை எப்படி நடத்தினாரோ அதுபோலவே நாமும் நடத்துவதாக நம் பொறுப்பில் இருப்பவர்கள் உணருகிறார்களா?
இயேசு ஜனங்களை நடத்திய விதம்
4, 5. (அ) பிரச்சினைகள் உள்ளவர்களை இயேசு நடத்திய விதத்தை அறிவது ஏன் கடினமாக இல்லை? (ஆ) ஒரு பரிசேயனுடைய வீட்டில் போஜனம் பண்ணுகையில் இயேசுவுக்கு என்ன அனுபவம் ஏற்பட்டது?
4 இயேசு ஜனங்களை, முக்கியமாக கடும் பிரச்சினைகள் உள்ளவர்களை எவ்வாறு நடத்தினார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதை கற்றுக்கொள்வது கடினமாக இருக்காது. ஏனெனில், இயேசு மற்றவர்களை சந்தித்ததை பற்றிய அநேக அறிக்கைகள் பைபிளில் உள்ளன; அவர்களில் சிலர் கடும் துயரத்தில் இருந்தனர். அதே பிரச்சினைகளில் சிக்கி தவித்தவர்களை மதத்தலைவர்கள், அதிலும் முக்கியமாக பரிசேயர்கள் எவ்வாறு நடத்தினர் என்பதையும் கவனிக்கலாம். இந்த வேறுபாடு நமக்கு அதிகத்தை உணர்த்தும்.
5 பொ.ச. 31-ல், இயேசு கலிலேயாவில் பிரசங்கிக்கையில் “பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை [இயேசுவை] வேண்டிக்கொண்டான்.” அந்த அழைப்பை ஏற்க இயேசு தயங்கவில்லை. “அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார். அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து, அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமள தைலத்தைப் பூசினாள்.”—லூக்கா 7:36-38.
6. ‘பாவியாக’ இருந்த பெண் பரிசேயனுடைய வீட்டிற்கு வந்திருந்ததற்கு என்ன காரணம் இருக்கலாம்?
6 அதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஒரு புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மிச்சமீதிகளில் கொஞ்சத்தை பெற ஏழை எளியவர்கள் அப்படிப்பட்ட விருந்துகளில் அனுமதிக்கப்படும் சமூக பழக்கங்களை அந்த பெண் (வச. 37) தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள்.” அழைக்கப்படாதவர்களும் எவ்வாறு உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என்பதை அது விளக்குகிறது. விருந்து முடிந்த பிறகு மிச்சமீதிகளை பெறுவதற்காக மற்றவர்களும் அங்கு வந்திருக்கலாம். ஆனால், இந்த பெண் நடந்துகொண்ட விதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவள் ஓரத்தில் நின்றுகொண்டு விருந்து முடியும் வரை காத்திருக்கவில்லை. அவள் அனைவரும் அறிந்த ‘பாவியாக’ இருந்ததால் அவப்பெயர் பெற்றிருந்தாள். இயேசுவும்கூட, “இவள் செய்த அநேக பாவங்க”ளை அறிந்திருந்ததாக குறிப்பிட்டார்.—லூக்கா 7:47.
7, 8. (அ) லூக்கா 7:36-38-ல் அறிக்கை செய்யப்பட்டதைப் போன்ற சந்தர்ப்பங்களில் நாம் எவ்வாறு பிரதிபலித்திருப்போம்? (ஆ) சீமோன் எவ்வாறு பிரதிபலித்தான்?
7 நீங்கள் அந்த காலத்தில், இயேசுவின் இடத்தில் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். என்ன செய்திருப்பீர்கள்? அந்த பெண் உங்கள் அருகே வருகையில் அசௌகரியமாக உணர்ந்திருப்பீர்களா? அப்படிப்பட்ட சூழ்நிலை உங்களை எவ்வாறு பாதித்திருக்கும்? (லூக்கா 7:45) நீங்கள் கலக்கமடைந்திருப்பீர்களா?
8 விருந்தாளிகளில் ஒருவராக நீங்கள் இருந்திருந்தால், ஓரளவுக்காவது பரிசேயனாகிய சீமோனைப்போல யோசித்திருப்பீர்களா? “அவரை [இயேசுவை] அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.” (லூக்கா 7:39) இயேசுவோ பரிவிரக்கம் நிறைந்தவர். அந்த பெண்ணின் பிரச்சினையை அவர் புரிந்துகொண்டார், அவளுடைய கடுந்துயரை உணர்ந்தார். அவள் எவ்வாறு பாவ வாழ்க்கையில் விழுந்தாள் என்று நமக்கு தெரியாது. அவள் உண்மையில் ஒரு வேசி என்றால், அந்த நகரிலிருந்த பக்தியுள்ள யூத ஆண்கள் அவளுக்கு உதவ தவறிவிட்டனர் என்பது தெளிவாக உள்ளது.
9. இயேசு என்ன கூறினார், அதன் விளைவாக என்ன நிகழ்ந்திருக்கலாம்?
9 இயேசுவோ அவளுக்கு உதவ விரும்பினார். “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என அவளிடம் கூறினார். பின்னர், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ” என்றும் கூறினார். (லூக்கா 7:48-50) அதோடு பதிவு முடிகிறது. இயேசு அவளுக்கு பெரிதாக எந்த உதவியும் செய்துவிடவில்லை என்று எவராவது மறுப்பு தெரிவிக்கலாம். உண்மையில், இயேசு அவளை ஆசீர்வதித்து அனுப்பினார். அவள் அந்த கேவலமான வாழ்க்கைக்கே மீண்டும் திரும்பினாள் என நீங்கள் நினைக்கிறீர்களா? நம்மால் உறுதியாக சொல்ல முடியாது என்றாலும் லூக்கா அடுத்ததாக கூறுவதை கவனியுங்கள். இயேசு “பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்து வந்தார்” என அவர் கூறினார். இயேசுவோடும் அவருடைய சீஷர்களோடும் “சில ஸ்திரீகளும்” இருந்தனர், “தங்கள் [அந்த ஸ்திரீகளின்] ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டு வந்த”னர் என்றும் லூக்கா அறிக்கை செய்தார். மனந்திரும்பிய, நன்றியுள்ள அந்த பெண்ணும் அவர்களில் ஒருத்தியாக இருந்திருக்கலாம். அவள் சுத்த மனசாட்சியோடும், வாழ்க்கையில் புதிதாக பெற்ற நோக்கத்தோடும், கடவுளிடம் இன்னும் அதிக அன்போடும் அவருக்குப் பிரியமான விதத்தில் வாழ ஆரம்பித்திருக்கலாம்.—லூக்கா 8:1-3.
இயேசுவுக்கும் பரிசேயருக்கும் உள்ள வித்தியாசம்
10. இயேசுவும் ஒரு பெண்ணும் உட்பட்ட சீமோன் வீட்டில் நடந்த சம்பவத்தை சிந்தித்து பார்ப்பது ஏன் பிரயோஜனமானது?
10 இந்த தெளிவான பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? அது நம் உணர்வுகளை தூண்டுகிறது அல்லவா? நீங்கள் சீமோனின் வீட்டில் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்போது எவ்வாறு உணருவீர்கள்? நீங்கள் இயேசுவை போல செயல்படுவீர்களா அல்லது அவரை விருந்துக்கு அழைத்த பரிசேயனை போல கொஞ்சம் உணருவீர்களா? இயேசு, தேவனுடைய குமாரனாக இருந்ததால் அவர் உணர்ந்ததையும் செய்ததையும் போலவே நம்மால் நடந்துகொள்ள முடியாது. மறுபட்சத்தில், பரிசேயனாகிய சீமோனை போல இருக்கவும் நாம் விரும்ப மாட்டோம். பரிசேயர்களை போல இருப்பதில் யாருமே பெருமைப்பட மாட்டார்கள்.
11. பரிசேயர்களில் ஒருவராக கருதப்பட நாம் ஏன் விரும்பமாட்டோம்?
11 பைபிளிலும் பிற புத்தகங்களிலும் காணப்படும் அத்தாட்சிகளை ஆராய்வதிலிருந்து, பொதுநலத்தையும் தேசிய நலத்தையும் பாதுகாப்பவர்களாக பரிசேயர்கள் தங்களை பற்றியே பெருமையாக எண்ணிக்கொண்டிருந்தனர் என்ற முடிவுக்கு வரலாம். கடவுளுடைய சட்டம் அடிப்படையில் தெளிவாகவும் எளிதில் புரிந்துகொள்ள முடிந்ததாகவும் இருந்ததில் அவர்கள் திருப்தி அடையவில்லை. நியாயப்பிரமாணம் திட்டவட்டமாக இல்லை என அவர்கள் நினைத்த இடங்களில் அதிலிருப்பதாக நினைத்த ஓட்டைகளை அடைக்க முயன்று, இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என வரையறுத்து மனசாட்சிக்கு தேவையே இல்லாமல் செய்துவிட்டனர். இந்த மதத்தலைவர்கள், அற்பமானவை உட்பட எல்லா விஷயங்களிலும் நடத்தையை கட்டுப்படுத்தும் ஒரு சட்டத்தை உருவாக்க முயன்றனர்.a
12. பரிசேயர்கள் தங்களை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருந்தனர்?
12 பரிசேயர்கள் தங்களை அன்புள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், பட்சபாதமற்றவர்கள், தங்கள் வேலையை செய்ய முற்றிலும் தகுதி வாய்ந்தவர்கள் என நினைத்தனர் என்று முதல் நூற்றாண்டு யூத சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் மிகவும் தெளிவாக கூறுகிறார். சில பரிசேயர்கள் அவ்வாறு இருந்தனர் என்பதிலும் சந்தேகமில்லை. நிக்கொதேமு உங்கள் நினைவுக்கு வரலாம். (யோவான் 3:1, 2; 7:50, 51) காலப்போக்கில், அவர்களில் சிலர் கிறிஸ்தவத்தை தழுவினர். (அப்போஸ்தலர் 15:5) பரிசேயரை போன்ற சில யூதர்களை பற்றி கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவனைப் பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.” (ரோமர் 10:2) என்றாலும், பொதுமக்கள் நோக்கிய விதமாகவே—பெருமைமிக்க, ஆணவமிக்க, சுயநீதியுள்ள, குற்றம் காண்கிற, கண்டனம் செய்கிற, தரங்குறைந்த ஆட்களாகவே—சுவிசேஷங்கள் அவர்களை விவரிக்கின்றன.
இயேசுவின் கருத்து
13. பரிசேயர்களை பற்றி இயேசு என்ன கூறினார்?
13 பரிசேயரும் சதுசேயரும் மாய்மாலக்காரர்கள் என இயேசு குற்றஞ்சாட்டினார். “சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின் மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்” என்றார். ஆம், மக்கள்மீது சுமத்தப்பட்ட சுமை அதிக பாரமாகவும், நுகம் கடினமாகவும் இருந்தன. பரிசேயரையும் சதுசேயரையும் “மதிகேடரே” என இயேசு அழைத்தார். மதிகேடன் சமுதாயத்திற்கே ஆபத்தானவன். இயேசு அவர்களை ‘குருடரான வழிகாட்டிகள்’ என்றும் குறிப்பிட்டு, “நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்”டார்கள் என்றும் கூறினார். பரிசேய குணம் படைத்தவராக இயேசு தங்களை கருதுவதை யார்தான் விரும்புவர்?—மத்தேயு 23:1-4, 16, 17, 23.
14, 15. (அ) மத்தேயு எனப்பட்ட லேவியுடன் இயேசுவின் தொடர்பு பரிசேயர்களை பற்றி எதை வெளிப்படுத்துகிறது? (ஆ) இந்த பதிவிலிருந்து என்ன முக்கிய பாடங்களை கற்றுக்கொள்ளலாம்?
14 பெரும்பாலான பரிசேயர்கள் குற்றம் குறை காண்பவர்களாகவே இருந்தனர் என்பதை சுவிசேஷங்களை வாசிக்கும் எவரும் தெளிவாக காண முடியும். வரி வசூலிப்பவனாகிய மத்தேயு எனப்பட்ட லேவியை சீஷனாகும்படி இயேசு அழைத்த பிறகு, இயேசுவுக்காக ஒரு பெரிய விருந்தை லேவி ஏற்பாடு செய்தார். பதிவு தொடர்ந்து கூறுகிறது: “வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: . . . நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.”—லூக்கா 5:27-32.
15 “பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்” என அந்த சந்தர்ப்பத்தில் இயேசு கூறியதை லேவி நன்றாக புரிந்துகொண்டார். (மத்தேயு 9:13) பரிசேயர்கள், எபிரெய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களை நம்புவதாக சொல்லிக்கொண்டாலும் ஓசியா 6:6-ல் உள்ள இந்த வாக்கியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தவறு செய்தாலும்கூட, பாரம்பரியத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தனர். நாம் ஒவ்வொருவரும் நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘ஒரு விஷயத்தை பற்றிய தனிப்பட்ட விருப்பங்களில் அல்லது பொதுவான விஷயங்களில் என்னுடைய கருத்தையே விடாப்பிடியாக பிடித்திருப்பவன் என்று பெயரெடுத்திருக்கிறேனா? அல்லது இரக்கமும் அன்பும் மிக்கவனாகவே மற்றவர்கள் என்னை கருதுகிறார்களா?’
16. பரிசேயர்களின் வழக்கம் என்ன, நாம் எவ்வாறு அவர்களை போலிருப்பதை தவிர்க்கலாம்?
16 எப்போதும் குற்றம் காண்பதே பரிசேயரின் வழக்கம். அது உண்மையோ, கற்பனையோ சதா குற்றம் கண்டுபிடிப்பதிலேயே பரிசேயர்கள் குறியாக இருந்தனர். அவர்கள் மக்களை தடுப்புச் சுவராக வைத்து அவர்களுடைய குறைபாடுகளை எப்போதும் நினைப்பூட்டிக்கொண்டே இருந்தனர். ஒற்தலாம், வெந்தயம், சீரகம் போன்ற மிகச் சிறிய தானியங்களிலும் தசமபாகம் செலுத்தியதற்காக பரிசேயர்கள் பெருமைப்பட்டுக் கொண்டனர். தங்கள் உடையினால் தேவ பக்தியிருப்பதுபோல் காட்டிக்கொண்டனர், தேசத்தை வழிநடத்த முயன்றனர். நம் செயல்களோ இயேசுவின் முன்மாதிரிக்கு இசைய இருக்க வேண்டுமென்றால் எப்போதும் மற்றவர்களின் குற்றங்களையே கண்டுபிடித்து அவற்றை சுட்டிக்காட்டும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
இயேசு பிரச்சினைகளை எவ்வாறு கையாண்டார்?
17-19. (அ) மிகவும் மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையை இயேசு எவ்வாறு கையாண்டார் என விளக்குங்கள். (ஆ) அந்த சூழ்நிலையை அழுத்தம் நிறைந்ததாகவும் அருவருப்பானதாகவும் ஆக்கியது எது? (இ) அந்த பெண் இயேசுவை சந்தித்தபோது நீங்கள் அங்கிருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
17 இயேசு பிரச்சினைகளை கையாண்ட விதம், பரிசேயர்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தியிருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை இயேசு எவ்வாறு கையாண்டார் என்பதை கவனியுங்கள். அது, 12 வருடங்களாக இரத்தப்போக்கால் அவதிப்பட்ட ஒரு பெண்ணை பற்றிய சம்பவம். இந்த விவரத்தை லூக்கா 8:42-48-ல் நீங்கள் வாசித்து பார்க்கலாம்.
18 அந்த பெண் “பயந்து, நடுங்கி”னாள் என மாற்குவின் பதிவு கூறுகிறது. (மாற்கு 5:33) ஏன்? ஏனெனில், கடவுளுடைய சட்டத்தை மீறியதை அவள் அறிந்திருந்ததே அதற்குக் காரணமாக இருந்திருக்கும். லேவியராகமம் 15:25-28-ன்படி, ஒரு பெண்ணுக்கு இயற்கைக்கு மாறாக இரத்தப்போக்கு தொடர்ந்தால் அந்த காலம் முழுவதும் அதற்குப் பிறகும் ஒரு வாரம் அவள் தீட்டுப்பட்டிருந்தாள். அவள் தொட்ட எல்லா பொருட்களும் தீட்டுப்படும், தொடர்புகொண்ட எல்லா நபர்களும் தீட்டுப்பட்டார்கள். இந்த பெண் இயேசுவை அணுக பெரும் கூட்டத்திற்குள் நுழைந்து செல்ல வேண்டியிருந்தது. இப்போது, 2,000 வருடங்கள் கழித்து அந்த விவரத்தை வாசிக்கையிலும் அந்த பெண்ணின் துயரத்தைக் கண்டு நாம் இரக்கப்படுகிறோம்.
19 அன்று நீங்கள் அங்கிருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் என்ன செய்திருப்பீர்கள்? என்ன சொல்லியிருப்பீர்கள்? இயேசு அந்த பெண்ணை இரக்கத்தோடும், அன்போடும், தயவோடும் நடத்தினார் என்பதை கவனியுங்கள். அவளால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் பற்றி அவர் மறைமுகமாகக்கூட குறிப்பிடவில்லை.—மாற்கு 5:34.
20. லேவியராகமம் 15:25-28-ஐ இன்று கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டியிருந்தால் நாம் என்ன சவாலை எதிர்ப்படுவோம்?
20 இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா? இன்றுள்ள கிறிஸ்தவ சபையில் நீங்கள் மூப்பராக இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். மேலும், லேவியராகமம் 15:25-28 கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய தேவையாக இருந்து, குழப்பமடைந்தவளாகவும் உதவியற்றவளாகவும் உணர்ந்த ஒரு கிறிஸ்தவ பெண் அந்த சட்டத்தை மீறிவிட்டதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவளுடைய தவற்றை குத்திக்காட்டும் விதத்தில் ஆலோசனை கொடுத்து எல்லாருக்கும் முன்பாக அவளை அவமானப்படுத்துவீர்களா? “நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்! இயேசுவைப் போலவே தயவாகவும், அன்பாகவும், பிறர் நலனை மனதில் வைத்தும், இரக்கத்தோடும் செயல்பட எல்லா முயற்சியும் செய்வேன்” என நீங்கள் சொல்லலாம். அது மிகவும் நல்லது! என்றாலும், இயேசுவின் உதாரணத்தை பின்பற்றி அதை உண்மையில் செய்வதே சவாலாகும்.
21. இயேசு, நியாயப்பிரமாணத்தை பற்றி மக்களுக்கு என்ன போதித்தார்?
21 இயேசுவோடு இருக்கையில் மக்கள் புத்துணர்வு பெற்றனர், கட்டியெழுப்பப்பட்டனர், உற்சாகமடைந்தனர். கடவுளுடைய சட்டம் திட்டவட்டமாக குறிப்பிடுகையில் அதற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும். அது கூறுவது பொதுப்படையாக தோன்றினால் மக்கள் தங்கள் மனசாட்சியை உபயோகித்து, தங்கள் தீர்மானங்களால் கடவுள் மேலுள்ள அன்பை வெளிக்காட்டலாம். நியாயப்பிரமாணம் வளைந்துகொடுக்கும் தன்மை கொண்டது. (மாற்கு 2:27, 28) கடவுள் தம் மக்களிடம் அன்பு காட்டினார், எப்போதும் அவர்களுடைய நன்மைக்காக செயல்பட்டார், அவர்கள் தவறு செய்தபோது இரக்கம் காட்ட தயாராயிருந்தார். இயேசுவும் அப்படித்தான் இருந்தார்.—யோவான் 14:9.
இயேசுவுடைய போதனைகளின் விளைவுகள்
22. இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்ட அவருடைய சீஷர்கள் என்ன மனநிலையில் இருந்தனர்?
22 இயேசுவுக்கு செவிகொடுத்து அவருடைய சீஷரானவர்கள், “என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்ற அவருடைய சொற்களில் பொதிந்திருந்த உண்மையை உணர்ந்தனர். (மத்தேயு 11:30) அவர் தங்கள்மீது பாரம் சுமத்தியதாகவோ, தங்களை அலைக்கழித்ததாகவோ, சதா புத்திசொல்லிக் கொண்டிருந்ததாகவோ உணரவேயில்லை. அவர்கள் அதிக சுதந்திரமாக, அதிக சந்தோஷமாக, கடவுளோடும் மற்றவர்களோடும் தங்களுக்கிருந்த உறவை பற்றி அதிக நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தனர். (மத்தேயு 7:1-5; லூக்கா 9:49, 50) மற்றவர்களுக்கு புத்துணர்ச்சியளித்து, மனதிலும் இருதயத்திலும் தாழ்மையாயிருப்பதே ஆவிக்குரிய தலைவருக்கு அழகு என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டனர்.—1 கொரிந்தியர் 16:17, 18; பிலிப்பியர் 2:3.
23. இயேசுவோடு இருந்ததால் சீஷர்கள் என்ன முக்கிய பாடத்தை கற்றுக்கொண்டனர், இது என்ன முடிவுகளுக்கு வர அவர்களுக்கு உதவியது?
23 அதுமட்டுமா, கிறிஸ்துவோடு சேர்ந்திருப்பதும் அவருடைய மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதும் அதிமுக்கியம் என்பது அநேகரின் மனதில் ஆழமாக பதிந்தது. “பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறது போல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” என அவர் தம் சீஷர்களிடம் கூறினார். (யோவான் 15:9, 10) தேவனுடைய ஊழியர்களாக அவர்கள் வெற்றி பெற வேண்டுமானால் இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டவற்றை ஊக்கமாக கடைப்பிடிக்க வேண்டும். கடவுளுடைய அருமையான நற்செய்தியை மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதிலும் போதிப்பதிலும், குடும்ப அங்கத்தினரையும் நண்பர்களையும் நடத்தும் விதத்திலும்கூட அதை பின்பற்ற வேண்டும். அந்த சிறிய தொகுதி சபைகளாக வளர வளர இயேசுவின் வழியே மிகச் சிறந்த வழி என்பதை அவர்கள் அடிக்கடி தங்களுக்கு தாங்களே நினைப்பூட்டிக்கொள்ள வேண்டும். அவர் போதித்ததே சத்தியம், அவரில் அவர்கள் கண்ட வாழ்க்கையே விரும்பத்தக்க வாழ்க்கை.—யோவான் 14:6; எபேசியர் 4:20, 21.
24. இயேசுவின் உதாரணத்திலிருந்து என்ன விஷயங்களை நம் இருதயத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்?
24 நாம் இதுவரை கலந்தாலோசித்த சிலவற்றை யோசித்து பார்க்கையில் முன்னேற்றம் செய்வதற்கான வழிகளை உங்களால் காண முடிகிறதா? இயேசுவின் சிந்தனையும், சொல்லும், செயலும் எப்போதும் சரியானதே என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? அப்படியானால் மனந்தளர்ந்துவிடாதீர்கள். அவர் நம்மிடம் கூறும் உற்சாகமான வார்த்தைகள் இவையே: “நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.”—யோவான் 13:17.
[அடிக்குறிப்புகள்]
a “கடவுளை பற்றிய புரிந்துகொள்ளுதலில் இருந்த எதிரும் புதிருமான இரு நோக்குநிலைகளை கருத்தில் கொண்டால்தான் [இயேசுவுக்கும் பரிசேயருக்கும் இடையிலிருந்த] அடிப்படை வித்தியாசம் தெளிவாகிறது. பரிசேயர்களை பொருத்தவரை கடவுள் அதிகத்தை கேட்கிறவர் மட்டுமே; இயேசுவுக்கோ கடவுள் கிருபை பொருந்தியவரும் இரக்கமுள்ளவரும் ஆவார். கடவுளுடைய நற்குணத்தையும் அன்பையும் பரிசேயன் மறுப்பதில்லை, ஆனால் அவனை பொருத்தவரை அவை பரிசாக கிடைத்த டோராவிலும் [நியாயப்பிரமாணத்திலும்] அதில் கேட்கப்பட்டவற்றை பூர்த்தி செய்வதிலுமே அடங்கியிருந்தது. . . . சட்டத்தை விளக்கும் வரம்புகள் அடங்கிய வாய்வழி பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதே டோராவை நிறைவேற்றும் வழி என பரிசேயன் நினைத்தான். . . . இயேசு, அன்பின் இரட்டை சட்டத்தை (மத்தேயு 22:34-40) ஏற்கத்தக்க ஒரே விளக்கமாக வலியுறுத்தியதும் கட்டுப்பாடுமிக்க வாய்வழி பாரம்பரியத்தை ஒதுக்கியதுமே . . . அவர் பரிசேயர்களோடு மோத வழிநடத்தின.”—த நியூ இன்டர்நேஷனல் டிக்ஷ்னரி ஆஃப் நியூ டெஸ்டமன்ட் தியாலஜி.
உங்களுடைய பதில் என்ன?
• உங்களை பொருத்தவரை இயேசுவின் சீஷனாக இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
• இயேசு ஜனங்களை எவ்வாறு நடத்தினார்?
• இயேசு போதித்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
• இயேசுவுக்கும் பரிசேயருக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருந்தது?
[பக்கம் 18, 19-ன் படங்கள்]
ஜனங்களை பற்றிய இயேசுவின் மனப்பான்மை பரிசேயர்களிலிருந்து எவ்வளவு வித்தியாசமாக இருந்தது!