மிஷ்னாவும்—மோசேக்கு கடவுள் கொடுத்த நியாயப்பிரமாணமும்
“நம்மால் கிரகித்துக்கொள்ளவே முடியாத விஷயங்களைப்பற்றி நீண்டநேரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு உரையாடலின் நடுவே நாம் சேர்ந்துகொள்வதைப்போன்ற உணர்வுடன் படிக்க ஆரம்பிக்கிறோம் . . . எங்கோ கண்காணா தொலைவிலுள்ள ஏர்போர்ட் வெயிட்டிங் ரூமில் இருப்பதுபோல நமக்கு தோன்றுகிறது. ஆட்கள் பேசுகையில் நம் காதில் விழும் வார்த்தைகளைப் புரிந்துகொள்கிறோம், ஆனால் உண்மையில் அவற்றின் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும், எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுடைய குரல்களில் தொனிக்கும் அவசரத்தன்மையையும் கண்டு நாம் திகைத்துப்போகிறோம்.” முதல் முறையாக மிஷ்னாவை புரட்டுகையில் வாசகருக்கு ஏற்படும் உணர்ச்சியை யூத கல்விமான் ஜேக்கப் நோஸ்நர் இப்படித்தான் விவரிக்கிறார். மேலும் நோஸ்நர் சொல்லுகிறார்: “மிஷ்னாவுக்கு முறையான ஒரு ஆரம்பம் இல்லை. அது திடீரென்று முடிந்துவிடுகிறது.”
யூத மத வரலாறு என்ற ஆங்கில புத்தகத்தில், டேனியேல் ஜெரோமி சில்வர், மிஷ்னாவை “ரபீனித்துவ யூத மதத்தின் முக்கிய பாடநூல்” என அழைக்கிறார். உண்மையில் சொல்லப்போனால், அவர் மேலும் இவ்வாறு சொல்கிறார்: “[யூத] கல்வியின் அடிப்படை பாடதிட்டத்தில் பைபிளின் இடத்தை மிஷ்னா எடுத்துக்கொண்டது.” இத்தனை தெளிவில்லாத பாணியில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் எப்படி அத்தனை முக்கியத்துவம் பெற்றதாக ஆகமுடியும்?
இதற்கு ஓரளவான பதிலை மிஷ்னாவில் சொல்லப்பட்ட இந்தக் கூற்றில் காணமுடியும்: “மோசே சீனாய் மலையில் டோராவைப் பெற்றுக்கொண்டு அதை யோசுவாவிடம் ஒப்படைத்தார், யோசுவா அதை மூப்பர்களிடமும் மூப்பர்கள் அதைத் தீர்க்கதரிசிகளிடமும் ஒப்படைத்தார்கள். தீர்க்கதரிசிகள், பேரவையைச் சேர்ந்த மனிதர்களின் கைகளில் ஒப்படைத்தனர்.” (அவட் 1:1) சீனாய் மலையில் மோசேயிடம் ஒப்படைக்கப்பட்ட தகவல்—இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய நியாயப்பிரமாணத்தின் எழுதப்படாத பாகம்—மிஷ்னாவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. (பின்னால் ஆலோசனை சங்கம் [Sanhedrin] என்றழைக்கப்பட்ட) பேரவையைச் சேர்ந்த மனிதர்கள், காலவரிசைப்படி வாழ்ந்த ஞானமுள்ள கல்விமான்களின் அல்லது அறிவாளிகளின் பாகமாக கருதப்பட்டனர்; இவர்கள் சில போதனைகளை தலைமுறை தலைமுறையாக வாய்மொழி வாயிலாக கடத்தினர்; இவை கடைசியில் மிஷ்னாவில் பதிவுசெய்யப்பட்டன. ஆனால் அது உண்மையா? மிஷ்னாவை உண்மையில் எழுதியது யார், ஏன் எழுதப்பட்டது? அதன் பொருளடக்கம் சீனாய் மலையில் மோசேயோடு ஆரம்பமானதா? இன்று நமக்கு அது முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறதா?
ஒரு ஆலயமில்லாத யூத மதம்
வேதவாக்கியங்கள் ஏவப்பட்டெழுதப்பட்ட அந்தச் சமயத்தில், மோசேக்கு கொடுக்கப்பட்ட எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தோடுகூட கடவுள் கொடுத்த வாய்மொழி பிரமாணத்தில் நம்பிக்கை என்பது அறியப்படாத ஒன்றாக இருந்தது.a (யாத்திராகமம் 34:27) பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே யூத மதத்திற்குள் இருந்த பரிசேயரின் தொகுதியினர் கடவுளின் வாய்மொழி பிரமாணம் என்ற கருத்தை உருவாக்கி அதை ஊக்குவித்தனர். பொ.ச. முதல் நூற்றாண்டின்போது, சதுசேயரும் மற்ற யூதர்களும் பைபிளுக்கு புறம்பான இந்தப் போதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் எருசலேமிலிருந்த ஆலயம் யூதரின் வணக்கத்துக்கு மையமாக இருந்தவரையில் வாய்மொழி பிரமாணம் பற்றிய இந்த விவாதம் இரண்டாம் பட்சமானதாகவே இருந்தது. ஆலயத்தில் வழிபாடு ஒவ்வொரு யூதரின் வாழ்க்கைக்கும் ஒழுங்கமைப்பையும் ஓரளவு ஸ்திரத்தன்மையையும் வழங்கியது.
ஆனால் பொ.ச. 70-ல் யூத தேசம் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு ஒரு மத நெருக்கடியை எதிர்ப்பட்டது. எருசலேம் ரோம படையினால் அழிக்கப்பட்டது, பத்து லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கையின் மையமாக இருந்த ஆலயம் இல்லாமல் போனது. பலிகளையும் ஆசாரிய சேவையையும் தேவைப்படுத்தின மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி வாழ்தல் சாத்தியமற்றதாகிவிட்டது. யூத மதத்தின் அஸ்திபாரக் கல் இல்லாமல் போய்விட்டது. தால்முட் கல்விமான் அடின் ஸ்டின்சால்ட்ஸ் இவ்வாறு எழுதுகிறார்: “பொ.ச. 70-ல் ஏற்பட்ட அழிவு . . . மத வாழ்க்கையின் முழு திட்டமைப்பையும் அவசரமாக மறுபடியும் கட்டி அமைப்பதை நிர்ப்பந்தப்படுத்தியது.” அதை மறுபடியும் கட்டி அமைக்கவும் செய்தார்கள்.
ஆலயம் அழிக்கப்படுவதற்கு முன்னதாகவே பரிசேயர்களின் தலைவரான ஹில்லேலின் மதிப்புக்குரிய சீடனாகிய யோஹனன் பென் சாக்கி, யூத மதத்தின் ஆன்மீக மையத்தையும் ஆலோசனை சங்கத்தையும் எருசலேமிலிருந்து ஜாப்னேவுக்கு மாற்றுவதற்கு (விரைவில் பேரரசராகவிருந்த) வெஸ்பாஸியனிடமிருந்து அனுமதி பெற்றிருந்தார். ஸ்டின்சால்ட்ஸ் விளக்குகிறபடி, எருசலேமின் அழிவுக்குப் பின்பு, யோஹனன் பென் சாக்கி, “மக்களுக்காக புதிய ஒரு மையத்தை ஏற்படுத்தி புதிய சூழ்நிலைமைகளுக்குத் தக்கவாறு தங்களை மாற்றியமைத்துக்கொள்ள அவர்களுக்கு உதவிசெய்யும் சவாலை எதிர்ப்பட்டார். இதன் மூலமாக, ஆலயம் இப்பொழுது அழிந்து போய்விட்டபடியால் அவர்களுடைய மத ஆர்வம் மற்றொரு மையத்தினிடம் திசை திருப்பப்பட வேண்டும்.” அந்தப் புதிய மையமே வாய்மொழி பிரமாணமாக இருந்தது.
ஆலயம் இடிந்துகிடக்கையில், சதுசேயர்களும் மற்ற யூத மதப் பிரிவினரும் மனமேற்கும் விதமாக இதற்கு இணையான எதையும் அளிக்கவில்லை. பரிசேயர்கள் யூத மதத்தில் அதிக செல்வாக்குள்ளவர்களாகி, ஒன்றை ஒன்று எதிர்த்துக்கொண்டிருந்த தொகுதிகளை ஒன்றுசேர்த்தனர். பரிசேயர்கள் என்ற பதம் அதிகமாக பிரிவினைவாதத்தையும் கட்சி மனப்பான்மையையும் அர்த்தப்படுத்திய காரணத்தால் ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக அவர்களில் முதன்மையாக இருந்த ரபீக்கள் தங்களைப் பரிசேயர்கள் என்று அழைத்துக்கொள்வதை நிறுத்திவிட்டனர். அவர்கள் வெறுமனே ரபீக்கள், “இஸ்ரவேலின் ஞானிகள்” என்பதாக அறியப்படலானார்கள். இந்த ஞானிகள் வாய்மொழி பிரமாணமாகிய தங்கள் கருத்துக்கு இடமளிக்கும் ஒரு தொகுப்பை உருவாக்க முடியும். ஆலயத்தைப் போல மனிதரால் எளிதில் தகர்க்கமுடியாத ஒரு ஆவிக்குரிய கட்டமைப்பாக அது இருக்கும்.
வாய்மொழி பிரமாணத்தின் தொகுப்பு
ஜாப்னேயில் (எருசலேமுக்கு மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில்) இருந்த ரபீக்களின் பாடசாலையே இப்பொழுது பிரதான மையமாக இருந்தபோதிலும் இஸ்ரேல் முழுவதிலும் பாபிலோன், ரோம் போன்ற தொலைவிடங்களிலும்கூட வாய்மொழி பிரமாணத்தைப் போதிக்கும் மற்ற பாடசாலைகள் தோன்ற ஆரம்பித்தன. இருந்தபோதிலும் இது பிரச்சினையை உருவாக்கியது. ஸ்டின்சால்ட்ஸ் விளக்குகிறார்: “அறிஞர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்திருந்து [எருசலேமில்] ஒரே தொகுதியாக இருந்து அறிவாராய்ச்சியாகிய முக்கிய வேலையை செய்துவந்த வரையில் பாரம்பரியத்தின் ஒருமைப்பாடு காக்கப்பட்டுவந்தது. ஆனால் ஆசிரியர்களின் எண்ணிக்கைப் பெருகி வித்தியாசமான பள்ளிகள் நிறுவப்பட்டபோது . . . வார்த்தைகளின் வரிசை முறைகளும் வெளிப்படுத்தும் முறைகளும் அளவுக்கு அதிகமாக பெருகின.”
வாய்மொழி பிரமாணத்தின் போதகர்கள் டனாயம் என்றழைக்கப்பட்டார்கள், “படிக்க,” “திரும்பச் சொல்ல” அல்லது “போதிக்க” என்று பொருள்படும் அராமிக் வேர்ச்சொல்லிலிருந்து இந்தப் பதம் பெறப்பட்டுள்ளது. வாய்மொழி பிரமாணத்தை ஊக்கத்தோடு திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமும் மனப்பாடம் செய்வதன் மூலமும் அதைக் கற்றுக்கொண்டு போதிக்கும் அவர்களுடைய முறையை இது வலியுறுத்திக் காட்டியது. வாய்மொழிப் பாரம்பரியங்களை மனப்பாடம் செய்வதை எளிதாக்குவதற்காக, ஒவ்வொரு கட்டளையும் அல்லது பாரம்பரியமும் சுருக்கமான எளிய சொற்றொடராக்கப்பட்டது. வார்த்தைகள் எந்தளவுக்கு குறைவாக இருந்ததோ அந்தளவுக்கு அது நல்லதாக இருந்தது. முறைப்படியான கவிதை நடையில் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டது. சொற்றொடர்கள் அடிக்கடி ஓதப்பட்டன அல்லது பாடப்பட்டன. இருந்தபோதிலும் இந்தக் கட்டளைகள் தாறுமாறாகவும் போதகருக்குப் போதகர் மிகவும் வித்தியாசப்பட்டவையாகவும் இருந்தன.
வித்தியாசமாக இருந்த அநேக வாய்மொழிப் பாரம்பரியங்களுக்கு திட்டவட்டமான வடிவத்தையும் அமைப்பையும் கொடுத்த முதல் ரபி அக்கிவா பென் ஜோசப் (சுமார் பொ.ச. 50-135) என்பவராவார். அவரைக் குறித்து ஸ்டின்சால்ட்ஸ் இவ்விதமாக எழுதுகிறார்: “விளை நிலத்திற்குள் சென்று அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் பார்க்கும் எல்லாவற்றையும் தன் கூடைக்குள் அள்ளிப்போட்டு திணித்துக்கொண்டு வீட்டுக்குவந்த பின்னர் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்துவைக்கும் ஒரு வேலையாளின் வேலைக்கு இவருடைய வேலையை சமகாலத்தவர் ஒப்பிட்டனர். ஒழுங்காக அமையப்பெற்றிராத எண்ணிலடங்காத விஷயங்களை அக்கிவா படித்து தனித்தனியே தரம் பிரித்து அவற்றை வகைப்படுத்தினார்.”
பொ.ச. இரண்டாவது நூற்றாண்டில்—எருசலேம் அழிக்கப்பட்டு 60-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்பு—ரோமுக்கு எதிராக யூதர்களின் இரண்டாவது பெரிய புரட்சி ஒன்றை பார் கோக்பா முன்நின்று நடத்தினார். மறுபடியுமாக கலகம் அழிவைக் கொண்டுவந்தது. உயிரிழந்த சுமார் பத்து லட்சம் யூதர்களில் அக்கிவாவும் அவருடைய சீடர்களில் பலரும் இருந்தனர். ஆலயம் அழிக்கப்பட்ட நாளை நினைவுகூருகிற நாள் தவிர யூதர்கள் எருசலேமின் எல்லைக்குள் வருவதை ரோம பேரரசன் ஹேட்ரின் தடைசெய்துவிட்டபோது, ஆலயத்தை மறுபடியும் கட்டுவதற்கான எந்த நம்பிக்கையும் குலைந்துபோனது.
அக்கிவாவுக்குப் பின் வாழ்ந்த டனாயம் எருசலேமின் ஆலயத்தை ஒருபோதும் பார்த்திராதவர்களாக இருந்தார்கள். ஆனால் வாய்மொழி பிரமாணத்தில் இருந்த மாதிரி படிப்பு முறை அவர்களுடைய “ஆலயமாக” அல்லது வணக்கத்தின் மையமாக ஆனது. வாய்மொழி பிரமாணத்தின் இந்த அமைப்பை உறுதிசெய்வதற்காக அக்கிவாவும் அவருடைய சீடர்களும் ஆரம்பித்து வைத்த வேலையை டனாயமில் கடைசியானவராகிய ஜுடா ஹா-நிசி என்பவர் தொடர்ந்தார்.
மிஷ்னாவை உண்டுபண்ணுதல்
ஜுடா ஹா-நிசி என்பவர் ஹில்லேல் மற்றும் கமாலியேலின் மரபில் வந்தவர்.b பார் கோக்பாவின் புரட்சி ஏற்பட்ட காலப்பகுதியில் பிறந்த இவர் பொ.ச. இரண்டாவது நூற்றாண்டின் முடிவிலும் மூன்றாவது நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இஸ்ரேலில் யூத சமுதாயத்தின் தலைவராக ஆனார். ஹா-நிசி என்பது உடன் யூதர்களின் பார்வையில் அவருக்கு இருந்த அந்தஸ்தைக் குறித்துக்காட்டிய “இளவரசன்” என்ற பொருள் கொண்ட ஒரு பதவிப் பெயராகும். அவர் அடிக்கடி வெறுமனே ரபீ என்றே அழைக்கப்படுகிறார். ஜுடா ஹா-நிசி தன்னுடைய சொந்த பாடசாலையையும் ஆலோசனை சங்கத்தையும் முதலில் பெட் ஷியாரிமிலும் பின்னால் கலிலேயாவில் சிப்போரியிலும் தலைமை வகித்து நடத்திவந்தார்.
எதிர்காலத்தில் ரோமோடு பூசல்கள் ஏற்பட்டால் வாய்மொழி பிரமாணத்தை வழிவழியாக கடத்துவதே கஷ்டமாகிவிடும் என்பதை உணர்ந்த ஜுடா ஹா-நிசி, அது பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் ஒரு உருவை அதற்குக் கொடுக்க தீர்மானித்தார். தன்னுடைய நாளில் இருந்த அதிக பிரசித்திப்பெற்ற அறிஞர்களை தன் பாடசாலையில் கூட்டிச்சேர்த்தார். வாய்மொழி பிரமாணத்தின் ஒவ்வொரு குறிப்பும் பாரம்பரியமும் விவாதிக்கப்பட்டது. இந்தக் கலந்தாலோசிப்புகளின் முடிவுகள், கவிதை நடையில் இருக்கும் எபிரெய உரைநடை விதிப்படி அவ்வளவு சுருக்கமான சொற்றொடர்களாக சேர்த்துத் தொகுக்கப்பட்டன.
இந்த முடிவுகள், ஆறு முக்கிய பகுதிகளாக அல்லது தொகுதிகளாக முக்கிய தலைப்புகளின்கீழ் தொகுக்கப்பட்டன. ஜுடா இவற்றை 63 உட்பிரிவுகளாக அல்லது ஆய்வுக்கட்டுரைகளாக பிரித்தார். ஆவிக்குரிய கட்டமைப்பு இப்பொழுது முழுமைப்பெற்றுவிட்டது. அந்தச் சமயம் வரையாக, இப்படிப்பட்ட பாரம்பரியங்கள் எப்பொழுதும் வாய்மொழி வாயிலாகவே கடத்தப்பட்டு வந்தன. ஆனால் கூடுதலான பாதுகாப்புக்கு இறுதியாக முக்கியமான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது—அனைத்தும் எழுத்து வடிவில் எழுதி வைக்கப்பட்டன. வாய்மொழி பிரமாணத்துக்கு இடமளித்த எழுத்துவடிவிலிருந்த கருத்தைக் கவரும் இந்தப் புதிய கட்டமைப்பு மிஷ்னா என்றழைக்கப்பட்டது. மிஷ்னா என்ற பெயர் “போதிக்க,” “திரும்பச் சொல்ல” அல்லது “போதிக்க” என்று பொருள்படும் எபிரெய வேர்ச்சொல்லாகிய ஷானாவிலிருந்து வருகிறது. மிஷ்னாவின் போதகர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட டனாயம் என்ற சொல் அராமிக் டெனாவிலிருந்து வருகிறது. ஷானா இதற்கு சமமான ஒரு வார்த்தையாகும்.
யூத சட்டத்தை இறுதியாக சுருக்கமாகக்கூறி அதை நிலைநிறுத்துவது மிஷ்னாவின் நோக்கமாக இல்லை. வாசகர் அடிப்படை நியமங்களை அறிந்திருப்பார் என்ற ஊகத்தின் அடிப்படையில் அது அதிகமாக விதிவிலக்குகளைப் பற்றியே பேசியது. உண்மை என்னவென்றால், ஜுடா ஹா-நிசியின் காலப்பகுதியில் ரபீக்களின் பாடசாலைகளில் கலந்தாலோசிக்கப்பட்டு போதிக்கப்பட்டதை அது சுருக்கமாக கூறியது. மேலும் விவாதிப்பதற்காக வாய்மொழி பிரமாணத்தை மேலும் வளர்ச்சியடைய செய்வதற்கு உண்டான ஆதார சட்டத்தை அல்லது அடிப்படை கட்டமைப்பை அளிப்பதுமே மிஷ்னாவின் நோக்கமாக இருந்தது.
சீனாய் மலையில் மோசேயிடம் கொடுக்கப்பட்ட எதையும் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, பரிசேயர்களோடு ஆரம்பமான கோட்பாடாகிய வாய்மொழி பிரமாணத்தின் வளர்ச்சியைப் பற்றிய உட்பார்வையை மிஷ்னா அளிக்கிறது. மிஷ்னாவில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் தகவல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள கூற்றுகளின் பேரிலும் இயேசு கிறிஸ்துவுக்கும் பரிசேயர்களுக்குமிடையே நடந்த சில உரையாடல்களின் பேரிலும் ஓரளவு விளக்கத்தை அளிக்கிறது. இருந்தபோதிலும் எச்சரிப்பு அவசியம், ஏனென்றால் மிஷ்னாவில் காணப்படும் கருத்துக்கள் பொ.ச. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த யூதர்களின் நோக்குநிலைகளைப் பிரதிபலிக்கின்றன. மிஷ்னா இரண்டாவது ஆலய காலப் பகுதியையும் தால்முட்டையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a கூடுதலான தகவலுக்கு உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியினால் வெளியிடப்பட்டுள்ள போரில்லாத உலகம் எப்போதாவது வருமா? என்ற ஆங்கில சிற்றேட்டில் பக்கங்கள் 8-11-ஐக் காணவும்.
b “கமாலியேல்—அவர் தர்சு பட்டணத்து சவுலுக்குக் கற்பித்தார்” கட்டுரையை 1996, ஜூலை 15 காவற்கோபுர பத்திரிகையில் காண்க.
[பக்கம் 26-ன் பெட்டி]
மிஷ்னாவின் பிரிவுகள்
மிஷ்னா ஆறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இத்தொகுதிகள் 63 சிறு புத்தகங்களை அல்லது ஆய்வுக்கட்டுரைகளைக் கொண்டவை. இவை அத்தியாயங்களாகவும் மிஷ்னாயோட், அல்லது பாராக்களாகவும் (வசனங்களாக அல்ல) பிரிக்கப்பட்டுள்ளன.
1. செராயிம் (வேளாண்மைச் சட்டங்கள்)
உணவின்பேரில் செய்யப்படும் ஜெபங்களும் வேளாண்மை சம்பந்தமாக செய்யப்படும் ஜெபங்களும் இந்த ஆய்வுக் கட்டுரையில் உள்ளன. தசம பாகம் செலுத்துதல், ஆசாரியருக்குரிய பங்குகள், சிந்திக் கிடக்கும் கதிரைப் பொறுக்குதல், ஓய்வு வருடங்கள் ஆகியவற்றின் சம்பந்தமான சட்டங்களும்கூட இதில் அடங்கியுள்ளன.
2. மோயட் (பரிசுத்த நிகழ்ச்சிகள், பண்டிகைகள்)
இந்தத் தொகுதியிலுள்ள ஆய்வுக்கட்டுரைகள் ஓய்வு நாள், பாவ நிவாரண நாள், இதர பண்டிகைகள் ஆகியவற்றின் சம்பந்தமான சட்டங்களை கலந்தாலோசிக்கின்றன.
3. நாஷிம் (பெண்கள், திருமண சட்டம்)
இவை திருமணம் மற்றும் மணவிலக்கு, உறுதிமொழிகள், நசரேயர்கள், சந்தேகிக்கப்படும் விபச்சார வழக்குகள் ஆகியவற்றைக் கலந்தாலோசிக்கும் ஆய்வுக்கட்டுரைகள்.
4. நெசிக்கின் (சேதங்களும் உரிமைச் சட்டங்களும்)
உள்நாட்டு மற்றும் சொத்துரிமைச் சட்டங்கள், நீதிமன்றங்களும் அபராதங்களும், ஆலோசனை சங்கத்தின் கடமைகள், உருவ வழிப்பாடு, ஆணைகள், தலைவர்களுக்குரிய நன்னெறிகள் ஆகியவற்றைப்பற்றிய விஷயங்கள் இந்தத் தொகுதியிலுள்ள ஆய்வுக் கட்டுரைகளில் உள்ளன (அவட்).
5. கோடாஷிம் (பலிகள்)
இந்த ஆய்வுக் கட்டுரைகள் மிருக மற்றும் தானிய பலிகளோடுகூட ஆலயத்தின் பரிமாணங்கள் சம்பந்தப்பட்ட சட்டங்களை கலந்தாலோசிக்கின்றன.
6. டோஹாரட் (சுத்திகரிப்பு சடங்குகள்)
இந்தத் தொகுதி, சடங்கு முறையான சுத்தம், குளித்தல், கைகளைக் கழுவுதல், தோல் சம்பந்தமான நோய்கள், பல்வேறு பொருட்களின் அசுத்தம் ஆகியவற்றை கலந்தாலோசிக்கும் ஆய்வுக்கட்டுரைகளை உடையது.
[பக்கம் 28-ன் பெட்டி]
மிஷ்னாவும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமமும்
மத்தேயு 12:1, 2: “அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள். பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.” இயேசுவின் சீஷர்கள் செய்த காரியத்தை எபிரெய வேதவாக்கியங்கள் தடைசெய்வதில்லை. ஆனால் ஓய்வுநாளில் ரபீக்கள் தடைசெய்திருந்த 39 வேலைகளின் ஒரு பட்டியலை நாம் மிஷ்னாவில் காண்கிறோம்.—ஷாபாட் 7:2.
மத்தேயு 15:3: “அவர்களுக்கு அவர் [இயேசு] பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?” மிஷ்னா இந்த மனநிலையை உறுதிசெய்கிறது. (சான்ஹெட்ரின் 11:3) நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “[எழுதப்பட்ட] நியாயப்பிரமாண வார்த்தைகளை [கடைப்பிடிப்பதை] விட வேதபாரகரின் வார்த்தைகளை [கடைப்பிடிப்பது] அதிக கண்டிப்பானது. ஒரு மனிதன் ‘மறைவாசகங்கள் அடங்கிய சிறு தோல்பேழையை அணிய வேண்டுமென்பது கட்டாயமில்லை, அது நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை மீறுவதாகாது’ என்று சொன்னால் ‘அவன் கண்டிக்கத்தக்கவன் அல்ல;’ [ஆனால்] வேதபாரகரின் வார்த்தைகளோடு ‘அதில் ஐந்து அறைகள் இருக்கவேண்டும்’ என்பதை சேர்த்துக்கொள்வானாகில் அவன் கண்டிக்கத்தக்கவன் ஆவான்.”—ஹெர்பர்ட் டேன்பி எழுதிய த மிஷ்னா, பக்கம் 400.
எபேசியர் 2:14: ‘அவரே [இயேசு] நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்தார்.’ மிஷ்னா இவ்வாறு சொல்லுகிறது: “ஆலயத்தின் உட்புறத்தே பத்து கையகல உயரமுள்ள மரப்பலகைகளை குறுக்குச் சட்டங்களாக வைத்து அடிக்கப்பட்ட ஒரு வேலி (சோரக்) இருந்தது.” (மிட்டாட் 2:3) புறஜாதியாருக்கு இந்த இடத்தைத் தாண்டி உட்பிரகாரத்துக்கு வருவதற்கு அனுமதி அளிக்கவில்லை. அப்போஸ்தலன் பவுல் எபேசியருக்கு பொ.ச. 60 அல்லது 61-ல் எழுதிய அச்சமயத்தில் இன்னும் நின்றுகொண்டிருந்த அந்தச் சுவரைக் குறித்து அடையாள அர்த்தத்தில் குறிப்பிட்டிருக்கலாம். அடையாள அர்த்தமுள்ள அந்தச் சுவர் நீண்ட காலமாக யூதர்களைப் புறஜாதியாரிடமிருந்து பிரித்து வைத்த நியாயப்பிரமாண உடன்படிக்கையாக இருந்தது. ஆனால் பொ.ச. 33-ல் கிறிஸ்துவின் மரணத்தின் அடிப்படையில் அந்தச் சுவர் இடிக்கப்பட்டு போனது.