பலவீனங்களின் மத்தியிலும் பலம் பெறுதல்
உங்களுடைய பலவீனங்கள் உங்களைத் திணறடிக்கலாம். உடலுடன் ஒட்டிக்கொள்ளும் அட்டையைப் போல் அவை உங்களுடன் ஒட்டிக்கொண்டே இருக்கலாம். அவற்றை உங்களால் ஒருபோதும் அடக்கியாள முடியாதென்று நீங்கள் நினைக்கலாம். அல்லது மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் நன்றாக செய்வதாகவும் நீங்கள் எதற்கும் லாயக்கற்றவர்களாக இருப்பதாகவும் உணரலாம். மறுபட்சத்தில், உங்களிடமிருக்கிற சக்தியையும் துடிப்பையும் உறிஞ்சிவிடுகிற கொடிய நோயால் நீங்கள் அவதிப்படலாம். எதுவாக இருந்தாலும்சரி, அதிலிருந்து வெளிவர வழியே இல்லை என நீங்கள் நினைக்கலாம். ஒருவேளை நீங்களும் யோபுவைப் போலவே உணரலாம். “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்” என்று அவர் கடவுளிடம் சொன்னார்.—யோபு 14:13.
உங்கள் நம்பிக்கை எல்லாம் வற்றிவிட்டது போல் உணருகிறீர்களா? கவலைப்படாதீர்கள், இதிலிருந்து விடுபெற வழி இருக்கிறது. முதலாவது, உங்களுக்கு இருக்கிற பிரச்சினைகளைப்பற்றி கொஞ்சம் நேரம் யோசிக்காமலிருங்கள். இது கஷ்டமாக இருந்தாலும் அப்படிச் செய்வது நல்லது. உதாரணமாக, உண்மையுள்ள தமது ஊழியரான யோபுவிடம் கடவுள் கேட்ட கேள்விகளை சிந்தித்துப் பாருங்கள். “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு” என்று அவர் கேட்டார். (யோபு 38:4, 5) இந்தக் கேள்விகளைச் சிந்தித்துப் பார்த்தால், யெகோவாவுக்கு ஒப்பற்ற ஞானமும் வல்லமையும் இருப்பதை நிச்சயம் ஒத்துக்கொள்வோம். இன்றைய உலக நிலைமைகள் தொடர அவர் அனுமதித்திருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.
“மாம்சத்திலே ஒரு முள்”
மற்றொரு உண்மையுள்ள ஊழியராகிய அப்போஸ்தலன் பவுல், தன் ‘மாம்சத்திலிருந்த முள்ளை’ நீக்கும்படி யெகோவாவிடம் கேட்டார். அதாவது, சதா தன்னை வாட்டிக்கொண்டிருந்த பிரச்சினையை நீக்கும்படி அவர் மூன்றுமுறை மன்றாடினார். அந்த பிரச்சினை எதுவாக இருந்தாலும் சதா உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு முள்ளைப் போல், யெகோவாவின் சேவையில் பவுல் அனுபவித்த சந்தோஷத்தை அது பறித்திருக்கலாம். அது தன்னை எப்போதும் குட்டிக்கொண்டிருப்பது போல் பவுல் உணர்ந்தார். “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்று யெகோவா அவருக்கு பதிலளித்தார். அந்த மாம்சத்தின் முள்ளை யெகோவா எடுத்துப்போடவில்லை. பவுல் அதனுடன் போராடவேண்டியிருந்தது. ஆனாலும் அவர் தொடர்ந்து இவ்வாறு சொன்னார்: “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.” (2 கொ. 12:7-10) இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன?
பவுலின் பிரச்சினை அற்புதமாக தீர்ந்துவிடவில்லை. என்றாலும், யெகோவாவின் சேவையில் அபாரமான சாதனைகளைப் புரிவதிலிருந்து அது அவரைத் தடுத்து நிறுத்தவில்லை. பலத்துக்காக அவர் யெகோவாவையே சார்ந்திருந்தார்; அவருடைய உதவிக்காக தொடர்ந்து ஜெபித்தார். (பிலி. 4:6, 7) பூமியில் அவருடைய வாழ்நாளின் முடிவில், “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்று அவரால் சொல்ல முடிந்தது.—2 தீ. 4:7.
மனிதர்கள் குறைகளும் பலவீனங்களும் நிறைந்தவர்களாக இருந்தாலும் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு யெகோவா அவர்களைப் பயன்படுத்துகிறார். எனவே, இதற்கான புகழ் அனைத்தும் அவரையே சேரும். பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு தேவையான அறிவுரைகளையும் ஞானத்தையும் அளித்து அவருடைய சேவையில் சந்தோஷத்தைக் காண அவர் உதவுகிறார். ஆம், குறையுள்ள மனிதர்களைக் கொண்டே யெகோவா அபார சாதனைகளைப் புரிகிறார்.
தன்னுடைய மாம்சத்திலிருந்த முள்ளை கடவுள் நீக்காததற்கான காரணத்தை பவுல் தெரியப்படுத்தினார். “நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார். (2 கொ. 12:7) பவுலிடம் இருந்த “முள்” அவருடைய குறைபாடுகளை நினைப்பூட்டி, மனத்தாழ்மையுடன் இருக்க அவருக்கு உதவியது. “தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்று இயேசு சொன்ன நியமத்திற்கு இசைவாக இது இருக்கிறது. (மத். 23:12) கடவுளுடைய ஊழியர்களுக்கு வரும் சோதனைகள், மனத்தாழ்மையைக் கற்றுத்தருகின்றன. அதோடு, உண்மையுடன் சகித்திருப்பதற்கு யெகோவாமீது சார்ந்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன. எனவே, அந்த அப்போஸ்தலனைப் போல் அவர்களும் ‘யெகோவாவைக் குறித்தே மேன்மை பாராட்ட’ முடியும்.—1 கொ. 1:30.
நமக்குள் மறைந்திருக்கும் குறைபாடுகள்
சிலருக்குத் தங்களிடம் இருக்கும் குறைகள் தெரியாமலேயே இருக்கலாம் அல்லது, அவற்றை ஒப்புக்கொள்ள அவர்களுக்கு மனமில்லாமல் இருக்கலாம். உதாரணமாக, ஒரு நபருக்கு அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை இருக்கலாம். (1 கொ. 10:12) ‘எல்லாவற்றிலும் தனக்குத்தான் முதலிடம் கிடைக்க வேண்டும்’ என்ற ஆசை அபூரண மனிதர்களிடம் இயல்பாகக் காணப்படுகிற மற்றொரு குறையாக இருக்கிறது.
தாவீது ராஜாவின் படைத்தளபதியாக இருந்தவர் யோவாப்; அவர் தைரியசாலியாகவும் முடிவுகள் எடுப்பதில் திறமைசாலியாகவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வல்லவராகவும் இருந்தார். என்றாலும், அவருக்கு அகந்தையும் பதவி வெறியும் இருந்தது. அவர் செய்த மோசமான தவறுகளிலிருந்து இது தெரிய வருகிறது. படைத்தலைவர்கள் இருவரை அவர் கொடூரமாக கொலை செய்தார். முதலில், பழிவாங்கும் எண்ணத்துடன் அப்னேரைக் கொன்றார். அடுத்ததாக, தன்னுடைய உறவினரான அமாசாவிடம் நலன் விசாரிப்பது போல் நடித்து கொலை செய்தார்; அமாசாவை முத்தம் செய்வதற்காக அவருடைய தாடியை வலது கையால் பற்றி இடது கையில் இருந்த வாளால் அவரைக் குத்திக் கொலை செய்தார். (2 சா. 17:25; 20:8-10) யோவாபுக்குப் பதிலாக அமாசா படைத்தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். எனவே, தனக்குப் போட்டியாக இருந்தவரை ஒழித்துக்கட்டுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். இப்படி செய்தால், பறிபோன பதவி தனக்கு மீண்டும் கிடைத்துவிடும் என்று அவர் நினைத்திருக்கலாம். பதவி வெறியையும் அவருக்கிருந்த மற்ற தவறான எண்ணங்களையும் அவர் கட்டுப்படுத்தவில்லை. ஈவிரக்கமில்லாமல் நடந்துகொண்டாலும் அவருக்கு எவ்வித மன உறுத்தலும் இருக்கவில்லை. யோவாப் செய்த தவறுகளுக்கு தக்க தண்டனை வழங்கும்படி தாவீது ராஜா இறப்பதற்கு முன்பு தன் மகனாகிய சாலொமோனிடம் தெரிவித்தார்.—1 இரா. 2:5, 6, 29-35.
தவறான ஆசைகளுக்கு நாம் ஒருபோதும் அடிபணிந்துவிடக் கூடாது. நம்முடைய பலவீனங்களை நம்மால் அடக்கியாள முடியும். நம்மிடம் இருக்கும் குறைகளை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை ஒப்புக்கொள்ளவும் வேண்டும். அப்போதுதான் அவற்றை சரிசெய்ய நம்மால் முயற்சி எடுக்க முடியும். நம்முடைய பலவீனங்களுக்கு பலியாகாமல் இருக்க உதவும்படி யெகோவாவிடம் தவறாமல் ஜெபிக்கலாம். அதோடு, இப்படிப்பட்ட தவறான எண்ணங்களைக் கட்டுப்படுத்த உதவும் வழிகளைக் கண்டுபிடிப்பதற்காக அவருடைய வார்த்தையை ஊக்கமாகப் படிக்கலாம். (எபி. 4:12) நம் குறைகளைச் சரிசெய்துகொள்ள நாம் தொடர்ந்து போராட வேண்டும். அதில் நாம் மனந்தளர்ந்துவிடக்கூடாது. இந்தப் போராட்டம் நாம் பரிபூரணர்களாக ஆகும்வரைகூட தொடரலாம். பவுலின் வாழ்க்கையிலும் இது உண்மையாக இருந்தது. “நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்” என்று அவர் ஒப்புக்கொண்டார். என்றாலும், தன்னுடைய செயல்களைத் தன்னால் கட்டுப்படுத்தவே முடியாது என நினைத்து தன் பலவீனங்களுக்கு அவர் இணங்கிவிடவில்லை என்பது தெரிந்த விஷயம்தான். அதற்குப் பதிலாக, இயேசு கிறிஸ்துவின் மூலமாக கடவுள் தரும் உதவியில் சார்ந்திருந்து தன்னுடைய பலவீனங்களுடன் தொடர்ந்து மல்லுக்கட்டினார். (ரோ. 7:15-25) “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” என்று அவர் மற்றொரு சமயம் குறிப்பிட்டார்.—1 கொ. 9:27.
செய்வதையெல்லாம் நியாயப்படுத்துவதுதான் மனிதர்களின் இயல்பு. ஆனால், யெகோவாவின் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்வதன்மூலம் இந்த இயல்பை விட்டொழிக்க நாம் உழைக்கலாம். “தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்” என்று பவுல் கிறிஸ்தவர்களுக்கு தந்த அறிவுரை இதற்கு உதவியாக இருக்கிறது. (ரோ. 12:9) நம் பலவீனங்களை அடக்கியாளுவதற்கு நமக்கு நேர்மை, விடாமுயற்சி, சுயக் கட்டுப்பாடு ஆகியவை அவசியம். “என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்” என்று தாவீது யெகோவாவிடம் கெஞ்சினார். (சங். 26:2) நம்முடைய உள்ளான உணர்வுகளை கடவுளால் துல்லியமாக எடைபோட முடியும் என்றும் நமக்கு உதவி தேவைப்படும்போது அவரால் உதவ முடியும் என்றும் தாவீது அறிந்திருந்தார். யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலமும் பரிசுத்த ஆவியின் அதாவது சக்தியின் மூலமும் தருகிற அறிவுரைக்கு கீழ்ப்படிந்தால் பலவீனங்களை அடக்கியாளுவதில் நம்மால் முன்னேற முடியும்.
தங்களால் சமாளிக்கவே முடியாதது போல் தோன்றுகிற பிரச்சினைகளோடு சிலர் அல்லாடலாம். அப்படிப்பட்ட சமயங்களில் சபை மூப்பர்கள் அன்பான உதவியையும் ஊக்குவிப்பையும் நிச்சயம் அளிக்கலாம். (ஏசா. 32:1, 2) ஆனால், நம் எதிர்பார்ப்புகளும் எதார்த்தமானவையாக இருப்பது நல்லது. சில பிரச்சினைகளுக்கு இந்த உலகத்தில் தீர்வே கிடையாது. என்றாலும், அநேகர் அவற்றைச் சமாளிக்க கற்றுக்கொண்டதால் திருப்தியாக வாழ்கிறார்கள்.
யெகோவாவின் ஆதரவு நிச்சயம்
இந்தக் கொடிய காலத்தில் நாம் எப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தாலும்சரி, யெகோவா நம்மை வழிநடத்தி ஆதரிப்பார் என்பதில் நிச்சயமாயிருக்கலாம். “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்று பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது.—1 பே. 5:6, 7.
கேத்தி பல வருடங்களாக பெத்தேலில் சேவை செய்து வருகிறார். மூளை செயல்பாட்டை பாதித்த அல்ஸைமர் நோய் அவருடைய கணவருக்கு இருப்பதை அறிந்தபோது, எப்படித்தான் இதை சமாளிப்பது என்று நினைத்து இடிந்துபோனார். ஞானத்தையும் மனோபலத்தையும் தரும்படி தினந்தோறும் யெகோவாவிடம் கெஞ்சினார். அவருடைய கணவரின் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தபோது, இப்படிப்பட்ட நோய் உள்ளவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதைத் தெரிந்துகொள்வதற்கு அன்பான சகோதரர்கள் அதிக முயற்சி எடுத்தார்கள். அவர்கள்மீது அக்கறை கொண்ட சகோதரிகளும் உணர்ச்சிரீதியில் ஆதரவு தந்தார்கள். யெகோவாவின் ஆதரவு இந்த கிறிஸ்தவர்கள் மூலமாகவும் கிடைத்தது. இதனால், 11 ஆண்டுகளுக்கு, அதாவது தன் கணவர் சாகும்வரை கேத்தி கண்ணும் கருத்துமாய் அவரை கவனித்துக் கொண்டார். “யெகோவா தந்த எல்லா உதவிக்காகவும் அவருக்கு நான் கண்ணீருடன் மனதார நன்றி சொன்னேன். அவருடைய உதவியால் மட்டுமே நான் இதுவரைக்கும் சமாளித்தேன். நானே தளர்ந்து பலவீனமாக இருக்கையில், இவ்வளவு வருடங்களுக்கு என்னால் அவரை கவனித்துக்கொள்ள முடியும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று அவர் சொல்கிறார்.
மறைந்திருக்கும் குறைகளை சரிசெய்ய உதவி
ஒருவர் லாயக்கற்றவராக உணர்ந்தால், கஷ்டமான காலத்தில் யெகோவாவிடம் உதவி கேட்டு மன்றாடும்போது அவர் அதற்கு செவிசாய்க்க மாட்டார் என நினைக்கலாம். அப்படியானால், பத்சேபாளுடன் மோசமான தவறில் ஈடுபட்ட தாவீது மனம் வருந்திய சமயத்தில் சொன்ன வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. “தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” என்று அவர் சொன்னார். (சங். 51:17) தாவீது உள்ளப்பூர்வமாக மனந்திரும்பினார்; எனவே, தன்னால் கடவுளை அணுக முடியும் என்றும் அவருடைய இரக்கத்தைப் பெற முடியும் என்றும் அவர் அறிந்திருந்தார். யெகோவா காட்டுகிற கரிசனையைத்தான் இயேசுவும் காட்டுகிறார். “அவர் . . . நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்” என்ற ஏசாயாவின் வார்த்தைகளை சுவிசேஷ எழுத்தாளரான மத்தேயு இயேசுவுக்குப் பொருத்தினார். (மத். 12:20; ஏசா. 42:3) இயேசு பூமியிலிருந்த சமயத்தில் ஏழை எளியோரிடமும் மற்றவர்களால் ஒடுக்கப்பட்டவர்களிடமும் கரிசனை காட்டினார். சொல்லப்போனால், மங்கியெரிகிற திரியைப் போல வாழ்க்கையின் கடைசி உயிர்த்துடிப்பு ஏறக்குறைய அடங்கிப்போகிற நிலையில் இருந்த ஆட்களை அவர் உதாசினப்படுத்தவில்லை. மாறாக, துன்பத்தில் வாடியவர்களை கனிவுடன் நடத்துவதன்மூலம் அவர்களுடைய வாழக்கையில் ஒளிதீபத்தை ஏற்றினார். மனிதர்கள் மத்தியில் வாழ்ந்தபோது அவர் இப்படித்தான் இருந்தார். இன்றும்கூட இயேசு அப்படித்தான் நடந்துகொள்கிறார், நம்முடைய பலவீனங்களைக் கண்டு அனுதாபப்படுகிறார் என்பதை நம்புகிறீர்கள், அல்லவா? அவர் ‘நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கிறவர்’ என்று எபிரெயர் 4:15 தெரிவிப்பதைக் கவனியுங்கள்.
பவுல் தன்னுடைய ‘மாம்சத்திலிருந்த முள்ளைப்’ பற்றி எழுதுகையில், கிறிஸ்துவின் வல்லமை ஒரு ‘கூடாரம் போல்’ தன்மீது தங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். (2 கொ. 12:7-9; NW) கூடாரத்திலிருக்கும் ஒரு நபர் காற்று, மழை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்; அதுபோல, கிறிஸ்துவின் மூலமாக கடவுள் தன்னைப் பாதுகாப்பதாக பவுல் உணர்ந்தார். இந்த விஷயத்தில் பவுலைப் போல நாம் இருக்க வேண்டும். நம் பலவீனங்களும் குறைகளும் நம்மை அடக்கியாள விட்டுவிடக்கூடாது. யெகோவாவுடன் நெருக்கமான பந்தத்தை அனுபவிக்க தம் பூமிக்குரிய சபையின் மூலமாக செய்திருக்கும் எல்லா ஏற்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். நம் பங்கில் நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்த பிறகு யெகோவா நம்மை வழிநடத்துவார் என்ற முழு நம்பிக்கையில் அவரைச் சார்ந்திருக்கலாம். கடவுளுடைய வல்லமையின் உதவியோடு நம்முடைய பலவீனங்களைச் சமாளிக்க முடியும் என்பதை அனுபவத்தில் தெரிந்துகொள்ளும்போது, பவுலைப் போலவே நாமும் இவ்வாறு சொல்வோம்: “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.”—2 கொ. 12:10.
[பக்கம் 3-ன் படம்]
தன்னுடைய ஊழியத்தை செய்து முடிக்க உதவும்படி யெகோவாவிடம் பவுல் தொடர்ந்து ஜெபம் செய்தார்
[பக்கம் 5-ன் படம்]
தாவீது ராஜா, யோவாபை படைத்தளபதியாக நியமித்தார்
[பக்கம் 5-ன் படம்]
தனக்குப் போட்டியாக இருந்த அமாசாவை யோவாப் ஒழித்துக்கட்டினார்
[பக்கம் 6-ன் படம்]
பிரச்சினைகளைச் சமாளிக்க உதவும் அன்பான அறிவுரைகளை மூப்பர்கள் பைபிளிலிருந்து தருகிறார்கள்