கடவுளுடைய மந்தையை அன்போடு மேய்த்தல்
‘உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை மேய்த்திடுங்கள்.’—1 பேதுரு 5:2.
1, 2. யெகோவாவின் மேலோங்கிய பண்பு என்ன, அது எவ்விதமாக வெளிப்படுத்தப்படுகிறது?
பரிசுத்த வேதாகமம் முழுவதிலுமாக, அன்பே கடவுளுடைய மேலோங்கிய பண்பு என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” என்று 1 யோவான் 4:8 சொல்கிறது. அவருடைய அன்பு செயலில் வெளிப்படுத்தப்படுவதால், 1 பேதுரு 5:7 கடவுள் ‘உன்னை விசாரிக்கிறார்,’ என்று சொல்கிறது. பைபிளில் யெகோவா தம்முடைய மக்களை கவனித்துக்கொள்ளும் விதம், அன்புள்ள ஒரு மேய்ப்பன் தன்னுடைய செம்மறியாடுகளை கனிவோடு கவனித்துக்கொள்ளும் விதத்திற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது: “இதோ, கர்த்தராகிய ஆண்டவர் . . . மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.” (ஏசாயா 40:10, 11) தாவீது, “யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார்; எனக்குக் குறையேதுமில்லை,” என்று சொல்லமுடிந்தது என்றால் அவர் எந்தளவுக்குத் தேற்றப்பட்டிருக்கவேண்டும்!—சங்கீதம் 23:1, NW.
2 கடவுள் விரும்புகின்ற ஆட்களை பைபிள் செம்மறியாடுகளுக்கு ஒப்பிடுவது பொருத்தமாயிருக்கிறது, ஏனென்றால், செம்மறியாடுகள் அமைதியானவையாக, பணிவான நடத்தையுள்ளவையாக, தங்கள் அக்கறையுள்ள மேய்ப்பருக்கு கீழ்ப்படிகிறவையாக இருக்கின்றன. அன்புள்ள மேய்ப்பராக, யெகோவா செம்மறியாடுகளைப் போன்ற தம்முடைய ஆட்கள் மீது ஆழ்ந்த அக்கறையுள்ளவராக இருக்கிறார். பொருள் சம்பந்தமாகவும், ஆவிக்குரிய விதமாகவும் அவர்களுக்கு வேண்டுவன அளித்து, இந்தப் பொல்லாத உலகின் கடினமான ‘கடைசி நாட்களினூடாக’ அவர்களை அவருடைய வரவிருக்கும் நீதியுள்ள புதிய உலகினிடமாக வழிநடத்திச் செல்வதன் மூலம் இதைக் காண்பிக்கிறார்.—2 தீமோத்தேயு 3:1-5, 13; மத்தேயு 6:31-34; 10:28-31; 2 பேதுரு 3:13.
3 தம்முடைய செம்மறியாடுகளின் பேரில் யெகோவாவின் அன்புள்ள அக்கறையை கவனியுங்கள்: “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. . . . நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.” (சங்கீதம் 34:15-19) சர்வலோக மேய்ப்பர் தம்முடைய செம்மறியாடுகளைப் போன்ற ஆட்களுக்கு என்னே பெரிய ஆறுதலை அளிக்கிறார்!
நல்ல மேய்ப்பனின் முன்மாதிரி
4. கடவுளுடைய மந்தையைக் கவனிப்பதில் இயேசுவின் பங்கு என்ன?
4 கடவுளுடைய மகனாகிய இயேசு, தம்முடைய தந்தையிடமிருந்து நன்றாக கற்றிருந்தார், ஏனென்றால், பைபிள் இயேசுவை “நல்ல மேய்ப்பன்,” என்றழைக்கிறது. (யோவான் 10:11-16) கடவுளுடைய மந்தைக்கு அவருடைய இன்றியமையாத சேவை வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 9-ம் வசனத்தில் நம்முடைய நாளிலுள்ள கடவுளுடைய ஊழியர்கள் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த . . . திரளான கூட்டமாகிய ஜனங்கள்” என்றழைக்கப்படுகிறார்கள். பின்னர் வசனம் 17 சொல்கிறது: “ஆட்டுக்குட்டியானவரே [இயேசு] இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.” இயேசு கடவுளுடைய செம்மறியாடுகளை நித்திய வாழ்க்கைக்கு வழிநடத்தும் சத்தியத்தின் தண்ணீர்களுக்கு நடத்துகிறார். (யோவான் 17:3) இயேசுதாமே “ஆட்டுக்குட்டி” என அழைக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள், கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருப்பதற்கு முதன்மையான முன்மாதிரியாக அவர் இருப்பதால் இது அவருடைய சொந்த செம்மறியாட்டினுடையதைப் போன்ற பண்புகளைக் காண்பிப்பதாய் உள்ளது.
5. மக்களைக் குறித்து இயேசு எவ்விதமாக உணர்ந்தார்?
5 பூமியில் இயேசு மனிதர்கள் மத்தியில் வாழ்ந்திருந்து அவர்களுடைய பரிதாபகரமான நிலைமையைப் பார்த்தார். அவர்களுடைய நிலைமைக்கு அவர் எவ்விதமாக பிரதிபலித்தார்? “அவர்கள் மேய்ப்பனில்லாத செம்மறியாடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி”னார். (மத்தேயு 9:36) அக்கறையில்லாத மேய்ப்பர்களை உடைய செம்மறியாடுகளைப் போலவே, மேய்ப்பனில்லாத செம்மறியாடுகளும் விலங்குகளைக் கொன்றுதின்னும் மிருகங்களினால் வெகுவாக துன்புறுகின்றன. ஆனால் இயேசு வெகுவாக அக்கறையுள்ளவராக இருந்தார், ஏனென்றால் அவர் பின்வருமாறு சொன்னார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”—மத்தேயு 11:28-30.
6. கொடுமைக்குட்படுத்தப்பட்டவர்களுக்கு இயேசு எவ்விதமாக கரிசனைக் காட்டினார்?
6 இயேசு மக்களோடு அன்பாகச் செயல்தொடர்பு கொள்வார் என்பதாக பைபிள் தீர்க்கதரிசனம் முன்னுரைத்தது: ‘இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயம் கட்டவும் துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும் யெகோவா என்னை அபிஷேகம்பண்ணினார்.’ (ஏசாயா 61:1, 2; லூக்கா 4:17-21) ஏழைகளையும் நல்வாய்ப்பற்றவர்களையும் இயேசு ஒருபோதும் இழிவாகக் கருதியது கிடையாது. மாறாக, ஏசாயா 42:3-ஐ அவர் நிறைவேற்றினார்: “அவர் நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும்” இருப்பார். (மத்தேயு 12:17-21-ஐ ஒப்பிடவும்.) சிறுமைப்பட்டவர்கள் நெரிந்த நாணலைப் போல, எண்ணெய் இல்லாத காரணத்தால் அணைந்துபோக இருக்கும் விளக்குத் திரிகளைப் போல இருந்தார்கள். அவர்களுடைய பரிதாபகரமான நிலையை உணர்ந்தவராக, இயேசு அவர்களுக்கு இரக்கம் காண்பித்து, பலத்தையும் நம்பிக்கையையும் அவர்களுக்குப் புகட்டி ஆவிக்குரிய விதமாகவும் சரீரப்பிரகாரமாயும் அவர்களைக் குணப்படுத்தினார்.—மத்தேயு 4:23.
7. இயேசு தமக்குப் பிரதிபலித்த ஆட்களை எங்கே வழிநடத்தினார்?
7 செம்மறியாடுகளைப் போன்ற ஆட்கள் இயேசுவுக்கு பேரளவான எண்ணிக்கையில் பிரதிபலித்தார்கள். அவருடைய போதனை அவ்வளவு மனதைக் கவருவதாக இருந்ததால், அவரைக் கைதுசெய்ய அனுப்பப்பட்ட அதிகாரிகள் பின்வருமாறு அறிவித்தனர்: “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை.” (யோவான் 7:46) ஏன், மாய்மாலமான மதத் தலைவர்களேகூட இவ்வாறு புகார் செய்தார்கள்: “உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே”! (யோவான் 12:19) ஆனால் இயேசு தமக்கே கனம் அல்லது மகிமை வரவேண்டும் என்று விரும்பவில்லை. அவர் தம்முடைய தந்தையிடமாக மக்களை வழிநடத்தினார். யெகோவாவை அவருடைய மெச்சத்தக்க குணங்களுக்கான அன்பினால் தூண்டப்பட்டு சேவிக்கும்படியாக அவர்களுக்கு கற்பித்தார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்பு”கூரவேண்டும்.—லூக்கா 10:27, 28.
8. கடவுளுடைய மக்கள் அவருக்குக் கொடுக்கும் கீழ்ப்படிதல் எவ்விதமாக மற்றவர்கள் உலக ஆட்சியாளர்களுக்குக் கொடுப்பதிலிருந்து வேறுபட்டதாயுள்ளது?
8 யெகோவா தம் சர்வலோக அரசாட்சியை தம்முடைய செம்மறியாடுகளைப் போன்ற மக்கள் தம்பேரில் கொண்டுள்ள அன்பின் அடிப்படையில் ஆதரிப்பதால் பெருமைகொள்கிறார். அவருடைய நேசிக்கப்படத்தக்க குணங்களை அறிந்திருப்பதன் காரணமாக அவர்கள் அவரை சேவிக்க மனமுவந்து தெரிந்துகொள்கின்றனர். பயத்தினால் அல்லது வெறுப்போடு அல்லது ஏதோவொரு மறைவான உள்நோக்கத்தோடு மாத்திரமே தங்கள் குடிமக்கள் காட்டும் கீழ்ப்படிதலைப் பெற்றுக்கொள்ளும் இந்த உலகத் தலைவர்களுக்கு எத்தனை வித்தியாசமாக இது இருக்கிறது! ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் போப்பைப் பற்றி சொல்லப்பட்டது போல யெகோவாவைப் பற்றி அல்லது இயேசுவைப் பற்றி ஒருபோதும் சொல்லப்பட முடியாது: “அவர் அநேகரால் பாராட்டப்பட்டார், எல்லாராலும் அஞ்சப்பட்டார், ஒருவராலும் நேசிக்கப்படவில்லை.”—போப்பாண்டவர்—போப்பாதிக்கத்தின் இருண்டப் பக்கம், (Vicars of Christ—The Dark Side of the Papacy) பீட்டர் டீ ரோஸா எழுதியது.
இஸ்ரவேலில் கொடூரமான மேய்ப்பர்கள்
9, 10. பண்டைய இஸ்ரவேலிலும் முதல் நூற்றாண்டிலுமிருந்த மதத் தலைவர்களை விவரிக்கவும்.
9 இயேசுவைப் போலில்லாமல், அவருடைய நாளில் இருந்த இஸ்ரவேலின் மதத் தலைவர்கள் செம்மறியாடுகளை நேசிக்காதவர்களாக இருந்தனர். இஸ்ரவேலின் பூர்வகால ஆட்சியாளர்கள் போல அவர்கள் இருந்தனர். இவர்களைப் பற்றி யெகோவா பின்வருமாறு சொல்லியிருந்தார்: “தங்களையே போஷித்துக்கொள்ளும் இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மந்தையை அல்லவா மேய்ப்பர் போஷிக்கவேண்டும். . . . நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.”—எசேக்கியேல் 34:2-4, NW.
10 முதல் நூற்றாண்டிலிருந்த யூத மதத் தலைவர்கள் அந்த அரசியல்சார்பான மேய்ப்பர்களைப் போலவே, கடின இருதயமுள்ளவர்களாக இருந்தனர். (லூக்கா 11:47-52) இதை விளக்க, இயேசு, கொள்ளையாடப்பட்டு, அடிக்கப்பட்டு, குற்றுயிராய் சாலையோரம் விடப்பட்டிருந்த ஒரு யூதனைப் பற்றி சொன்னார். ஓர் இஸ்ரவேல ஆசாரியன் அந்த வழியாக வந்தான், ஆனால் அந்த யூதனைக் கண்டு, சாலையின் அடுத்தப்பக்கத்துக்குப் போய்விட்டான். ஒரு லேவியனும் அவ்வாறே செய்தான். பின்னர், இஸ்ரவேலனல்லாத, இழிவாகக் கருதப்பட்ட ஒரு சமாரியன் அவனைக் கண்டு, அவன்மீது பரிதாபப்பட்டான். அவனுடைய காயங்களைக் கட்டி, ஒரு வாகனத்தில் அவனை ஏற்றி, ஒரு சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். சத்திரத்தானுக்கு அவன் பணம் கொடுத்து, கூடுதலாக ஏதேனும் செலவானால், தான் திரும்ப வந்துகொடுப்பதாக சொன்னான்.—லூக்கா 10:30-37.
11, 12. (அ) இயேசுவின் நாளில் மதத் தலைவர்களின் பொல்லாப்பு எவ்விதமாக உச்சநிலையை அடைந்தது? (ஆ) ரோமர்கள் கடைசியாக மதத் தலைவர்களுக்கு என்ன செய்தார்கள்?
11 இயேசுவின் நாளிலிருந்த மதத் தலைவர்கள் அத்தனை மோசமானவர்களாக இருந்ததால், லாசருவை இயேசு மரித்தோரிலிருந்து எழுப்பினபோது, பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, இவ்வாறு சொன்னார்கள்: “நாம் என்னசெய்கிறது? இந்த மனுஷன் [இயேசு] அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே.” (யோவான் 11:47, 48) மரித்துவிட்டிருந்த மனிதனுக்காக இயேசு செய்த நல்ல காரியத்தைக் குறித்து அவர்கள் அக்கறையுள்ளவர்களாயில்லை. அவர்கள் தங்கள் ஸ்தானங்களைப் பற்றியே அக்கறையுள்ளவர்களாயிருந்தனர். ஆகவே, “அந்நாள்முதல் [இயேசுவைக்] கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள்.”—யோவான் 11:53.
12 தங்கள் பொல்லாப்பை மிகுதியாக்கும் வண்ணம், முக்கிய ஆசாரியர்கள் “லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தபடியால், லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்.” (யோவான் 12:10, 11) தங்கள் ஸ்தானங்களைக் காத்துக்கொள்ள அவர்களுடைய தன்னல முயற்சிகள் பயனற்றதாக இருந்தது, ஏனென்றால் இயேசு அவர்களிடம் சொன்னார்: “உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.” (மத்தேயு 23:38) அந்த வார்த்தைகளின் நிறைவேற்றமாக, அந்தச் சந்ததியில் ரோமர்கள் வந்து ‘அவர்களுடைய ஸ்தானத்தையும் அவர்களுடைய ஜனத்தையும்,’ அவர்களுடைய உயிர்களையும்கூட கொண்டுசென்றனர்.
கிறிஸ்தவ சபையில் அன்புள்ள மேய்ப்பர்கள்
13. யெகோவா தம்முடைய மந்தையை மேய்க்க யாரை அனுப்புவதாக வாக்களித்தார்?
13 கொடூரமான, சுயநலமுள்ள மேய்ப்பர்களுக்குப் பதிலாக, யெகோவா தம்முடைய மந்தையைக் கவனிப்பதற்காக நல்ல மேய்ப்பனாகிய இயேசுவை எழுப்புவார். செம்மறியாடுகளைக் கவனிப்பதற்காக அன்புள்ள உதவிமேய்ப்பர்களையும்கூட எழுப்பப்போவதாக அவர் வாக்களித்திருந்தார்: “அவைகளை மேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை.” (எரேமியா 23:4) இவ்விதமாக, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைகளில் செய்யப்பட்டதுபோலவே, இன்று ‘பட்டணங்கள்தோறும் மூப்பர்கள் ஏற்படுத்தப்படுகிறார்கள்.’ (தீத்து 1:5) வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்திசெய்யும் ஆவிக்குரிய விதத்தில் மூப்பராயிருக்கும் இந்த மனிதர்கள் ‘தேவனுடைய மந்தையை மேய்க்க’ வேண்டும்.—1 பேதுரு 5:2; 1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:7-9.
14, 15. (அ) என்ன மனநிலையை வளர்த்துக்கொள்வதை சீஷர்கள் கடினமாகக் கண்டனர்? (ஆ) மூப்பர்கள் மனத்தாழ்மையுள்ள ஊழியர்களாக இருக்கவேண்டும் என்பதைக் காட்ட இயேசு என்ன செய்தார்?
14 மந்தையைக் கவனித்துக்கொள்வதில் “எல்லாவற்றிற்கும் மேலாக” மூப்பர்கள் ‘ஊக்கமான அன்புள்ளவர்களாயிருக்க’ வேண்டும். (1 பேதுரு 4:8) ஆனால் அந்தஸ்தையும் ஸ்தானத்தையும் பற்றி அதீத அக்கறையுள்ளவர்களாயிருந்த இயேசுவின் சீஷர்கள் இதைக் கற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. ஆகவே இரண்டு சீஷர்களின் தாய் இயேசுவிடம், “உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும்,” என்று சொன்னபோது, மற்ற சீஷர்கள் எரிச்சலடைந்தார்கள். இயேசு அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.”—மத்தேயு 20:20-28.
15 மற்றொரு சந்தர்ப்பத்தில், சீஷர்கள் “தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று தர்க்கம்பண்ணி”னப் பிற்பாடு, இயேசு அவர்களிடம், “எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்,” என்று சொன்னார். (மாற்கு 9:34, 35) மனத்தாழ்மையும் சேவைசெய்ய முன்வருவதும் அவர்களுடைய ஆளுமையின் பாகமாக வேண்டும். இருந்தபோதிலும் சீஷர்கள் அந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வது தொடர்ந்து ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்தது, ஏனென்றால் இயேசு மரிப்பதற்கு முந்தின இரவில், அவருடைய கடைசி இராப்போஜனத்தின் போது, தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே ‘கடும் வாக்குவாதம்’ எழும்பிற்று! ஒரு மூப்பர் எவ்வாறு சேவிக்கவேண்டும் என்பதை இயேசு அவர்களுக்குக் காண்பித்திருந்த போதிலும் அது சம்பவித்தது; அவர் தம்மைத்தாமே தாழ்த்தி அவர்களுடைய கால்களைக் கழுவியிருந்தார். அவர் சொன்னார்: “ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.”—லூக்கா 22:24; யோவான் 13:14, 15.
16. மூப்பர்களின் அதிமுக்கியமான பண்பைக் குறித்து 1899-ல் காவற்கோபுரம் என்ன குறிப்புகளைச் சொன்னது?
16 மூப்பர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யெகோவாவின் சாட்சிகள் எப்பொழுதும் கற்பித்துவந்திருக்கிறார்கள். சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ஏப்ரல் 1, 1899 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரம் 1 கொரிந்தியர் 13:1-8-லுள்ள பவுலின் வார்த்தைகளைக் குறிப்பிட்டு, பின்னர் இவ்விதமாகச் சொன்னது: “அறிவும் பேச்சுத்திறமையும் மிகவும் இன்றியமையாத சோதனைகள் அல்ல என்பதை அப்போஸ்தலன் தெளிவாக சுட்டிக்காண்பிக்கிறார், ஆனால் இருதயத்துள் ஊடுருவிச்சென்று வாழ்க்கை முழுவதிலுமாக பரந்துவிரிவாகி நம்முடைய அழிவுள்ள சரீரங்களை ஏவி இயக்கும் அன்பே உண்மையான சோதனையாகும்—நம்முடைய தெய்வீக உறவுக்கு உண்மையான நிரூபணம். . . . சர்ச்சின் ஊழியனாக, பரிசுத்த காரியங்களில் ஊழியஞ்செய்வதற்கு ஏற்றுக்கொள்ளப்படும் ஒவ்வொருவரிலும் கவனிக்கவேண்டிய முதன்மையான தனிச்சிறப்புப் பண்பு எல்லாவற்றுக்கும் மேலாக அன்பின் ஆவியாக இருக்கவேண்டும்.” அன்பினால் தூண்டப்படாத மனத்தாழ்மையோடு சேவிக்காத மனிதர்கள் “ஆபத்தான போதகர்கள், நன்மையைவிட அதிகமாக தீங்கிழைக்கக்கூடியவர்கள்,” என்பதாக அது குறிப்பிட்டது.—1 கொரிந்தியர் 8:1.
17. மூப்பர்கள் கொண்டிருக்க வேண்டிய பண்புகளை பைபிள் எவ்விதமாக வலியுறுத்துகிறது?
17 இதன் காரணமாக மூப்பர்கள் செம்மறியாடுகளை ‘இறுமாப்பாய் ஆளக்’கூடாது. (1 பேதுரு 5:3) மாறாக, “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும்” இருப்பதில் முன்நின்று வழிநடத்த வேண்டும். (எபேசியர் 4:32) பவுல் பின்வருமாறு வலியுறுத்திக் கூறினார்: “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு . . . இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:12-14.
18. (அ) செம்மறியாடுகளோடு செயல்தொடர்பு கொள்வதில் என்ன சிறந்த முன்மாதிரியை பவுல் வைத்தார்? (ஆ) மூப்பர்கள் செம்மறியாடுகளின் தேவைகளை ஏன் அசட்டை செய்யக்கூடாது?
18 பவுல் இதைச் செய்ய கற்றுக்கொண்டு இவ்விதமாகச் சொன்னார்: “உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால்கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.” (1 தெசலோனிக்கேயர் 2:7, 8) அதற்கிசைவாக அவர் சொன்னார்: “திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:14) செம்மறியாடுகள் தங்களுக்குக் கொண்டுவரக்கூடிய பிரச்சினை எப்படிப்பட்டதாய் இருப்பினும், மூப்பர்கள் நீதிமொழிகள் 21:13-ஐ நினைவுகூர வேண்டும்: “ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.”
19. அன்புள்ள மூப்பர்கள் ஏன் ஓர் ஆசீர்வாதமாக இருக்கின்றனர், இப்படிப்பட்ட அன்புக்கு செம்மறியாடுகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன?
19 மந்தையை அன்பாக மேய்க்கும் மூப்பர்கள் செம்மறியாடுகளுக்கு ஓர் ஆசீர்வாதமாக இருக்கின்றனர்: ஏசாயா 32:2 முன்னறிவித்தது: ‘ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருக்கவேண்டும்.’ இன்று நம்முடைய மூப்பர்களில் பெரும்பாலானவர்கள் புத்துயிரூட்டும் அந்த அழகிய விவரிப்புக்கு இசைவாக செயல்படுகின்றனர். பின்வரும் நியமத்தைப் பொருத்த அவர்கள் கற்றுக்கொண்டிருக்கின்றனர்: “சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.” (ரோமர் 12:10) மூப்பர்கள் இத்தகைய அன்பையும் மனத்தாழ்மையும் காட்டும்போது, செம்மறியாடுகள், “அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்”வதன் மூலம் பிரதிபலிக்கின்றன.—1 தெசலோனிக்கேயர் 5:12, 13.
தெரிவுசெய்யும் சுயாதீனத்தின் உபயோகத்துக்கு மரியாதை காட்டுங்கள்
20. தெரிவுசெய்யும் சுயாதீனத்தை மூப்பர்கள் ஏன் மதிக்கவேண்டும்?
20 மனிதர்கள் தங்களுடைய சொந்த தீர்மானங்களைச் செய்வதற்கு தெரிவுசெய்யும் சுயாதீனத்தோடு யெகோவா அவர்களைப் படைத்தார். மூப்பர்கள் புத்திசொல்லவும் சிட்சிக்கவும்கூட வேண்டியிருப்பினும், அவர்கள் மற்றொருவரின் ஜீவனை அல்லது விசுவாசத்தை தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துவிடக்கூடாது. பவுல் சொன்னார்: “உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; உங்கள் விசுவாசத்தினாலேயே நீங்கள் நிலைநிற்கிறீர்கள்.” (2 கொரிந்தியர் 1:24) ஆம், “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.” (கலாத்தியர் 6:5) யெகோவா நமக்கு அவருடைய சட்டங்கள் மற்றும் நியமங்களின் எல்லைக்குள்ளாக அதிகமான சுயாதீனத்தைக் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக வேதாகம நியமங்கள் மீறப்படாத சந்தர்ப்பங்களில் மூப்பர்கள் சட்டங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். மேலும் அவர்கள் பிடிவாதமாக தங்களுடைய சொந்த தனிப்பட்ட கருத்துக்களைக் கோட்பாடுகளாக அளிக்கவோ அல்லது இப்படிப்பட்ட கருத்துக்களை எவராவது ஒத்துக்கொள்ளவில்லையென்றால், தற்பெருமை அதில் குறுக்கிடவோ அனுமதிக்கக்கூடாது.—2 கொரிந்தியர் 3:17; 1 பேதுரு 2:16.
21. பிலேமோனிடமாக பவுலின் மனநிலையிலிருந்து என்ன கற்றுக்கொள்ளப்படலாம்?
21 ரோமில் கைதியாக இருந்த சமயத்தில், பவுல், சிறிய ஆசியாவில் கொலோசெயிலிருந்த ஒரு கிறிஸ்தவ அடிமையினுடைய எஜமானனான பிலேமோனோடு எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை கவனியுங்கள். ஒநேசிமு என்ற பெயருள்ள பிலேமோனுடைய அடிமை ரோமுக்கு ஓடிப்போனார், ஒரு கிறிஸ்தவனாக மாறி பவுலுக்கு உதவிசெய்துகொண்டிருந்தார். பவுல் பிலேமோனுக்கு எழுதினார்: “சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றிருந்தேன். ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.” (பிலேமோன் 13, 14) பவுல் ஒநேசிமுவை பிலேமோனிடம் திருப்பி அனுப்பிவைத்து, அவரை ஒரு கிறிஸ்தவ சகோதரனாக நடத்தும்படி கேட்டுக்கொண்டார். மந்தை தன்னுடையதல்ல என்பதை பவுல் அறிந்திருந்தார்; அது கடவுளுடையதாக இருந்தது. அவர் அதனுடைய எஜமானனாக இல்லாமல், அதனுடைய ஊழியராக இருந்தார். பவுல் பிலேமோனுக்கு அதிகாரத்தோடு ஆணையிடவில்லை; அவருடைய தெரிவு செய்யும் சுயாதீனத்தை மதித்தார்.
22. (அ) மூப்பர்கள் தங்களுடைய ஸ்தானம் என்னவாக இருப்பதை புரிந்துகொண்டிருக்கவேண்டும்? (ஆ) யெகோவா என்ன வகையான ஓர் அமைப்பை வளர்த்துவருகிறார்?
22 கடவுளுடைய அமைப்பு வளர்ந்து வர வர, மேலும் மேலும் மூப்பர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களும், அதிக அனுபவமுள்ள மூப்பர்களும் தங்களுடைய ஸ்தானம் மனத்தாழ்மையுள்ள சேவைக்குரியது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இவ்விதமாக, கடவுள் அவருடைய அமைப்பை புதிய உலகத்தை நோக்கி கொண்டுசெல்கையில், அது அவர் விரும்பும் வண்ணமாக—நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு ஆனால் திறமைக்காக அன்பையும் இரக்கத்தையும் தியாகம் செய்யாமல்— தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும். இவ்விதமாக, அவருடைய அமைப்பு செம்மறியாடுகளைப் போன்றவர்களுக்கு அதிகமதிகமாக கவர்ச்சியுள்ளதாக ஆகும், ‘தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடப்பதற்குரிய’ அத்தாட்சியை அதில் அவர்கள் காண்பார்கள். “அன்பு ஒருக்காலும் ஒழி”யாத காரணத்தால் அன்பின்மீது நிறுவப்பட்ட ஓர் அமைப்பிடமிருந்து இது எதிர்பார்க்கப்படவேண்டியதே.—ரோமர் 8:28; 1 கொரிந்தியர் 13:8.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ தம்முடைய மக்களின் பேரில் யெகோவாவின் அக்கறையை பைபிள் எவ்வாறு விவரிக்கிறது?
◻ கடவுளுடைய மந்தையைக் கவனித்துக்கொள்வதில் இயேசு என்ன பங்கை வகிக்கிறார்?
◻ மூப்பர்கள் எந்த முக்கியமான தனிச்சிறப்புப் பண்பைக் கொண்டிருக்கவேண்டும்?
◻ மூப்பர்கள் ஏன் செம்மறியாடுகளின் தெரிவுசெய்யும் சுயாதீனத்தை கருத்தில் கொள்ள வேண்டும்?
3. யெகோவா தம்முடைய செம்மறியாடுகளிடம் அக்கறைக் கொள்ளும் விதத்தை சங்கீதக்காரன் எவ்வாறு விவரித்தார்?
[பக்கம் 16-ன் படம்]
“நல்ல மேய்ப்பன்” இயேசு இரக்கம் காண்பித்தார்
[பக்கம் 17-ன் படங்கள்]
மோசமான மதத் தலைவர்கள் இயேசுவைக் கொல்ல சதிசெய்தார்கள்