அதிகாரம் எட்டு
“இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்”
1-4. (அ) ஒரு சமாரியப் பெண்ணுக்கு இயேசு எப்படித் திறமையாகக் கற்பிக்கிறார், அதன் விளைவு என்ன? (ஆ) அப்போஸ்தலர்கள் எப்படிப் பிரதிபலிக்கிறார்கள்?
இயேசுவும் அப்போஸ்தலர்களும் மணிக்கணக்காக நடந்திருக்கிறார்கள். யூதேயாவிலிருந்து வடக்கு நோக்கி கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். சமாரியா வழியாக சென்றால் சுமார் மூன்றே நாள் பயணம்தான், அதனால் அந்த வழியே போகிறார்கள். உச்சிப்பொழுதில் சீகார் என்ற சிறிய நகரை நெருங்குகிறார்கள்; இப்போது சாப்பிடுவதற்காகத் தங்கள் பயணத்தைச் சற்று ஒத்திவைக்கிறார்கள்.
2 அப்போஸ்தலர்கள் சாப்பாடு வாங்கிவர செல்ல, ஊருக்கு வெளியே இருந்த ஒரு கிணற்றருகில் இயேசு கொஞ்சம் ஓய்வெடுக்கிறார். தண்ணீர் எடுப்பதற்காக ஒரு பெண் அங்கே வருகிறாள். இயேசு அவளைக் கண்டுகொள்ளாமலேயே இருந்திருக்கலாம். அவர் ஏற்கெனவே “பயணம் செய்து களைப்பாக” இருக்கிறார். (யோவான் 4:6) அதனால் கண்ணை மூடிக்கொண்டு அந்த சமாரியப் பெண் வந்துபோவதை அவர் பார்க்காமலேயே இருந்திருக்கலாம். இந்தப் புத்தகத்தின் 4-ஆம் அதிகாரத்தில் பார்த்தபடி, அந்த சமாரியப் பெண்ணும் தன்னை ஒரு யூதன் அலட்சியப்படுத்துவார் என்றுதான் எதிர்பார்த்திருப்பாள். ஆனால், இயேசுவே அந்தப் பெண்ணிடம் பேசுகிறார்.
3 ஓர் உதாரணத்தோடு பேச்சை ஆரம்பிக்கிறார். அவள் அன்றாடம் செய்துவருகிற ஒரு வேலையையே, அதுவும் அந்தச் சமயத்தில் அவள் செய்துகொண்டிருக்கிற ஒரு வேலையையே, உதாரணமாகப் பயன்படுத்திப் பேசுகிறார். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பதற்காக அந்தப் பெண் வந்திருக்கிறாள்; அவளுடைய ஆன்மீகத் தாகத்தைத் தணிக்கும் வாழ்வு தரும் தண்ணீரைப் பற்றி இயேசு அவளிடம் பேசுகிறார். அவள் பலமுறை சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுப்புகிறாள்.a இயேசு அவற்றைக் குறித்து வாதம் செய்யாமல் தாம் பேச வந்த விஷயத்தையே சாதுரியமாகத் தொடர்கிறார். ஆம், ஆன்மீக விஷயங்களைக் குறித்தே, தூய வழிபாட்டையும் யெகோவா தேவனையும் குறித்தே, பேசுகிறார். அவருடைய வார்த்தைகள் அவள்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; ஏனென்றால், அந்தப் பெண் ஊருக்குள் சென்று தான் கேட்ட விஷயங்களை அங்குள்ளவர்களிடம் சொல்கிறாள், அதனால் ஊர் மக்களும் இயேசு சொல்வதைக் கேட்க வருகிறார்கள்.—யோவான் 4:3-42.
4 இயேசு அற்புதமாய் சாட்சி கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, திரும்பி வந்த அப்போஸ்தலர்கள் எப்படி உணருகிறார்கள்? அவர்கள் முகத்தில் எந்தவித உற்சாகமும் தென்படவில்லை. சொல்லப்போனால், இயேசு அந்தப் பெண்ணிடம் பேசுவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியம்தான் அடைகிறார்கள்; அவளிடம் அவர்கள் எதுவும் பேசியதாகத் தெரியவில்லை. அவள் போன பிறகு, தாங்கள் வாங்கிவந்த உணவைச் சாப்பிடும்படி இயேசுவிடம் சொல்கிறார்கள். ஆனால் இயேசு, “உங்களுக்குத் தெரியாத ஒரு உணவு என்னிடம் இருக்கிறது” என்கிறார். அவர் சொன்னதைக் கேட்டு முதலில் அவர்கள் குழம்பிப்போய், அவரிடம் நிஜமாகவே ஏதோ உணவு இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். பின்பு இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி செய்து அவருடைய வேலையை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது” என்று சொல்லி விளக்குகிறார். (யோவான் 4:32, 34) அவர் எந்த வேலைக்காகப் பூமிக்கு வந்தாரோ அந்த வேலை அவருக்கு உணவைவிட முக்கியம் என அவர்களுக்குக் கற்பிக்கிறார். அவர்களும் அவ்வாறே உணர வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். அது என்ன வேலை?
5. இயேசுவின் வாழ்வில் எது மிக முக்கியமான வேலையாக இருந்தது, இந்த அதிகாரத்தில் நாம் எதைப் பற்றி சிந்திக்கப்போகிறோம்?
5 “நான் . . . கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று இயேசு ஒருசமயம் சொன்னார். (லூக்கா 4:43) ஆம், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைக் குறித்து பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதற்கும் இயேசு அனுப்பப்பட்டார்.b அவரைப் பின்பற்றுகிறவர்களும் இன்று அதே வேலையைத்தான் செய்கிறார்கள். ஆகவே, இயேசு ஏன் பிரசங்கித்தார், எதைப் பற்றி பிரசங்கித்தார், என்ன மனப்பான்மையோடு பிரசங்கித்தார் என்பதை நாம் சிந்திப்பது அவசியம்.
இயேசு ஏன் பிரசங்கித்தார்?
6, 7. ‘கற்றுக்கொடுக்கிற ஒவ்வொருவரும்’ நல்ல செய்தியை பிறரிடம் சொல்லும்போது எப்படி உணர வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்? உதாரணத்துடன் விளக்குங்கள்.
6 தாம் கற்றுக்கொடுத்த சத்தியங்களைப் பற்றி இயேசு எப்படி உணர்ந்தார் என்பதை இப்போது சிந்திக்கலாம்; அதன்பின் தாம் கற்பித்த மக்களைக் குறித்து அவர் எப்படி உணர்ந்தார் என்று பார்க்கலாம். யெகோவா சொல்லிக்கொடுத்த சத்தியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதைக் குறித்து தாம் எப்படி உணர்ந்தார் என்பதைத் தத்ரூபமான ஓர் உவமையைக் கொண்டு இயேசு விளக்கினார். “பரலோக அரசாங்கத்தைப் பற்றிக் கற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிற ஒவ்வொருவரும், தன்னுடைய பொக்கிஷத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளியே எடுக்கிற வீட்டு எஜமானைப் போல் இருக்கிறார்கள்” என்று சொன்னார். (மத்தேயு 13:52) இந்த உவமையில் வரும் வீட்டுச் சொந்தக்காரர் ஏன் தன்னுடைய பொக்கிஷங்களை வெளியே எடுக்கிறார்?
7 பூர்வ எசேக்கியா ராஜாவைப் போல் அந்த வீட்டுக்காரர் தன்னிடம் இருக்கிற பொருள்களைப் பகட்டாகக் காட்டிக்கொள்வதற்காக வெளியே எடுக்கவில்லை—அப்படிக் காட்டியதால் அந்த ராஜாவுக்கு வேதனைதான் மிஞ்சியது. (2 ராஜாக்கள் 20:13-20) அப்படியென்றால், என்ன காரணத்திற்காக அந்த வீட்டுக்காரர் பொக்கிஷங்களை வெளியே எடுக்கிறார்? ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு வாத்தியாரை அவருடைய வீட்டில் சந்திக்கிறீர்கள். அவர் தன்னுடைய மேஜையைத் திறந்து இரண்டு கடிதங்களை வெளியே எடுக்கிறார். அதில் ஒன்று நாளானதால் பழுப்படைந்து இருக்கிறது, மற்றொன்று புதிதாக இருக்கிறது. இந்தக் கடிதங்கள் அவருடைய அப்பாவிடமிருந்து வந்தவை. ஒரு கடிதம் அந்த வாத்தியார் சிறுவனாக இருந்தபோது வந்தது, இன்னொரு கடிதம் சமீபத்தில் வந்தது. அந்தக் கடிதங்களை அவர் எந்தளவு பொக்கிஷமாகக் கருதுகிறார்... அதிலுள்ள அறிவுரைகள் அவருடைய வாழ்க்கையை எப்படிச் செதுக்கி சீராக்கின... அவை உங்களுக்கும் எப்படி உதவியாக இருக்கும்... என்றெல்லாம் அவர் சொல்லும்போது அவருடைய கண்கள் மகிழ்ச்சியில் பிரகாசிக்கின்றன. அந்தக் கடிதங்களை அவர் உயர்வாய் மதிப்பதும், நெஞ்சார நேசிப்பதும் இதிலிருந்து தெரிகிறது. (லூக்கா 6:45) பெருமைப்பட்டுக்கொள்ளவோ லாபமடையவோ அவற்றை அவர் காட்டுவதில்லை, மாறாக நீங்கள் பயனடையவும் அதன் மதிப்பை உணர்ந்துகொள்ளவுமே காட்டுகிறார்.
8. கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்ளும் சத்தியங்களை நாம் பொக்கிஷமாய்க் கருதுவதற்கு முக்கியக் காரணம் என்ன?
8 பெரிய போதகரான இயேசுவும் இதே காரணங்களுக்காகத்தான் கடவுள் கற்பித்த விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்பித்தார். அதுதான் சத்தியம் என்று அவருக்குத் தெரியும், அந்தச் சத்தியங்கள் அவருக்கு விலையேறப்பெற்ற பொக்கிஷங்களாக இருந்தன. அவற்றை அவர் நேசித்தார், மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதில் ஆவலாய் இருந்தார். தம்முடைய சீஷர்கள் ஒவ்வொருவரும், ‘மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கிற ஒவ்வொருவரும்,’ இப்படித்தான் உணர வேண்டும் என்று விரும்பினார். நாம் அப்படி உணருகிறோமா? இதுவே கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்கிற ஒவ்வொரு சத்தியத்தையும் நாம் நேசிப்பதற்கு முக்கியக் காரணம். பைபிள் சத்தியங்களை நாம் பொக்கிஷமாய்ப் போற்றுகிறோம்—அவை வெகுகாலத்திற்கு முன் கற்றுக்கொண்ட விஷயங்களாக இருந்தாலும் சரி சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்களாக இருந்தாலும் சரி. நாம் ஆர்வம் பொங்க பேசும்போது... யெகோவா கற்பித்தவற்றின் மீது நமக்கு இருக்கும் அன்பு தணிந்துவிடாமல் காக்கும்போது... மற்றவர்களும் இந்த சத்தியத்தைப் பொக்கிஷமாய்ப் போற்ற உதவுவோம்; இந்த விதத்தில் இயேசுவைப் பின்பற்றுவோம்.
9. (அ) இயேசு தாம் கற்பித்த மக்களைக் குறித்து எப்படி உணர்ந்தார்? (ஆ) இயேசுவைப் போல் நாம் எப்படி மக்கள்மீது அக்கறை காட்டலாம்?
9 தாம் கற்பித்த மக்களையும் இயேசு நேசித்தார்; இதை 3-ஆம் பாகத்தில் இன்னும் விரிவாக ஆராய்வோம். மேசியா “ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவார்” என்று அவரைக் குறித்து தீர்க்கதரிசனமாக முன்னரே சொல்லப்பட்டது. (சங்கீதம் 72:13) உண்மையிலேயே மக்கள்மீது இயேசு அக்கறை காட்டினார். அவர்களை ஆட்டிப்படைத்த எண்ணங்களையும் மனோபாவங்களையும் குறித்து கவலைப்பட்டார். அவர்களைப் பயங்கரமாக அழுத்திக்கொண்டிருந்த சுமைகளையும் சத்தியத்தைப் புரிந்துகொள்வதற்கு முட்டுக்கட்டையாக இருந்த தடைகளையும் பற்றி வேதனைப்பட்டார். (மத்தேயு 11:28; 16:13; 23:13, 15) உதாரணமாக, சமாரியப் பெண்ணை நினைவுபடுத்தி பாருங்கள். அவள்மீது இயேசு அக்கறை காட்டியது அவளை மிகவும் கவர்ந்தது. அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவர் அறிந்திருந்ததால் அவரைத் தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்ளவும் மற்றவர்களிடம் அவரைப் பற்றி சொல்லவும் அவளை உந்துவித்தது. (யோவான் 4:16-19, 39) இயேசுவைப் பின்பற்றுவோர் பிறர் மனதில் இருப்பதை அறிந்துகொள்ள முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், இயேசுவைப் போல் நாமும் அவர்கள்மீது அக்கறை காட்ட முடியும்; அதை வெளிப்படையாக அவர்களுக்குத் தெரியப்படுத்த முடியும்; அவர்களுடைய விருப்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பேச முடியும்.
இயேசு எதைப் பற்றி பிரசங்கித்தார்?
10, 11. (அ) இயேசு எதைக் குறித்து பிரசங்கித்தார்? (ஆ) கடவுளுடைய அரசாங்கத்திற்கான தேவை ஏன் எழுந்தது?
10 இயேசு எதைக் குறித்து பிரசங்கித்தார்? இதற்குப் பதில் தெரிந்துகொள்ள இயேசுவைப் பின்பற்றுவதாக உரிமை பாராட்டும் அநேக சர்ச்சுகளின் போதனைகளை ஆராய்ந்து பார்த்தால், அவர் ஒருவித சமூக சீர்திருத்தத்தைக் குறித்து பிரச்சாரம் செய்தார் என்ற முடிவுக்கு நீங்கள் வரலாம்; அல்லது அரசியல் சீர்திருத்தத்தைக் குறித்து பேசினார் என்று கருதலாம்; அல்லது தனிநபர்களின் இரட்சிப்பையே வலியுறுத்திக் கூறினார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நாம் முன்பு பார்த்தபடி, “நான் . . . கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும்” என்று இயேசு தெளிவாகச் சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார்?
11 யெகோவாவின் பெயரை சாத்தான் பழித்துப் பேசியபோதும், அவருக்கு ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறதா என்று சவால்விட்டபோதும் இயேசு பரலோகத்தில்தான் இருந்தார். நீதியான தம் தகப்பன், படைப்புகளுக்கு நல்லது செய்யாத அநீதியான ஆட்சியாளர் என்று சாத்தான் குற்றம் சாட்டியதைக் கண்டு இயேசு எந்தளவு வேதனைப்பட்டிருப்பார்! மனிதகுலத்தின் ஆதி பெற்றோரான ஆதாமும் ஏவாளும் சாத்தானுடைய பழிப்பேச்சுக்குச் செவிசாய்த்தபோது கடவுளுடைய மகனின் மனம் எந்தளவு புண்பட்டிருக்கும்! அந்தக் கலகத்தினால் மனித குடும்பத்தைப் பாவமும் மரணமும் தொற்றிக்கொண்டதை மகன் பார்த்தார். (ரோமர் 5:12) ஆனால், இவை எல்லாவற்றையும் தம்முடைய தகப்பன் ஒருநாள் சரிசெய்வார் என்பதை அறிந்தபோது அவர் எந்தளவு ஆனந்தம் அடைந்திருப்பார்!
12, 13. என்னென்ன அநியாயங்களை கடவுளுடைய அரசாங்கம் சரிசெய்யப்போகிறது, கடவுளுடைய அரசாங்கமே இயேசுவுடைய ஊழியத்தின் மையப்பொருளாக இருந்தது என்று எப்படிச் சொல்லலாம்?
12 முதலாவதாக எது சரிசெய்யப்பட வேண்டியிருந்தது? யெகோவாவின் புனிதமான பெயர் பரிசுத்தமாக்கப்பட வேண்டியிருந்தது; ஆம், சாத்தானும் அவனுடன் சேர்ந்துகொண்ட அனைவரும் கடவுளுடைய பெயர்மீது குவித்த எல்லா அவதூறையும் அடியோடு அகற்ற வேண்டியிருந்தது. யெகோவாவுடைய பெயர் என்று சொல்லும்போது ஒரு ஆட்சியாளராக அவருக்கு இருக்கும் மதிப்பு மரியாதை... ஆட்சி செய்ய அவருக்கு இருக்கும் உரிமை... அவர் ஆட்சி செய்யும் விதம்... என பல விஷயங்கள் அதில் உட்பட்டிருக்கிறது. அதனால் அவருடைய பெயர் புனிதப்படுத்தப்பட வேண்டியிருந்தது. வேறெந்த மனிதனையும்விட இயேசுவே இந்த முக்கியமான விவாதங்களை நன்கு புரிந்திருந்தார். தம் சீஷர்களுக்கு மாதிரி ஜெபத்தை இயேசு கற்றுக்கொடுத்தபோது, முதலில் தம்முடைய தகப்பனின் பெயர் பரிசுத்தமாக்கப்படுவதற்காகவும், பின்பு அவருடைய அரசாங்கம் வருவதற்காகவும், அடுத்து அவருடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதற்காகவும் வேண்டிக்கொள்ளும்படி சொன்னார். (மத்தேயு 6:9, 10) கிறிஸ்து இயேசுவை அரசராகக் கொண்டு இயங்கும் கடவுளுடைய அரசாங்கம் விரைவில் பூமியிலிருந்து சாத்தானுடைய சீர்கேடான ஆட்சிமுறையை ஒழித்துக்கட்டி, யெகோவாவின் நீதியான ஆட்சியை என்றென்றைக்கும் நிலைநாட்டும்.—தானியேல் 2:44.
13 அந்த அரசாங்கமே இயேசுவுடைய ஊழியத்தின் மையப்பொருளாக இருந்தது. அந்த அரசாங்கம் எப்படிப்பட்டது என்பதையும் அது எப்படி யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றும் என்பதையும் அவருடைய ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் தெளிவாக எடுத்துக்காட்டியது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கும் முக்கியமான வேலையிலிருந்து எதுவும் தம்மைத் திசைதிருப்ப இயேசு அனுமதிக்கவில்லை. அவருடைய நாளில் சமூக பிரச்சினைகள் மக்களைத் திணறடித்தன, அநீதி மலிந்து கிடந்தது; இருந்தாலும், தாம் அறிவித்துவந்த செய்தியிலும் செய்துவந்த வேலையிலுமே இயேசு தம் கவனத்தை ஒருமுகப்படுத்தினார். அப்படியானால், அவருக்குக் குறுகிய கண்ணோட்டம் இருந்தது என்றோ, அவருடைய செய்தி சுவாரஸ்யமில்லாமல் சலிப்பூட்டுவதாக இருந்தது என்றோ சொல்ல முடியுமா? நிச்சயம் அப்படிச் சொல்ல முடியாது!
14, 15. (அ) இயேசு எப்படி ‘சாலொமோனைவிடப் பெரியவராக’ இருந்தார்? (ஆ) பிரசங்கிக்கையில் நாம் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்?
14 இயேசு சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் போதித்தார், மக்களின் மனதைத் தூண்டும் விதத்தில் பேசினார். இதைத்தான் இந்தப் பாகத்தில் நாம் பார்க்கப்போகிறோம். யெகோவாவின் சக்தியால் அருளப்பட்ட செய்தியை எழுதுவதற்கு ஞானியான சாலொமோன் ராஜா இனிமையான வார்த்தைகளை, சத்தியத்தைப் பற்றிய திருத்தமான வார்த்தைகளை, தேடினார் என்பதை நாம் பைபிளில் வாசித்திருக்கலாம். (பிரசங்கி 12:10) அபூரண மனிதனான சாலொமோன் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேச, அதாவது பறவைகளைப் பற்றி... மீன்களைப் பற்றி... மரம் செடிகொடிகளைப் பற்றி... விலங்கினங்களைப் பற்றி... பேச, யெகோவா அவருக்கு “பரந்த இதயத்தை” கொடுத்தார். சாலொமோன் பேசுவதைக் கேட்பதற்கு பூமியின் கடைக்கோடியிலிருந்து மக்கள் வந்தார்கள். (1 ராஜாக்கள் 4:29-34) என்றாலும், இயேசு ‘சாலொமோனைவிட பெரியவராக’ இருந்தார். (மத்தேயு 12:42) அவரைவிட “பரந்த இதயத்தை” பெற்றிருந்தார்; ஞானத்தில் சிகரமாய் விளங்கினார். கடவுளுடைய வார்த்தையைப் பற்றியும், பறவைகள்... விலங்குகள்... மீன்கள்... விவசாயம்... வானிலை... நாட்டு நடப்புகள்... சரித்திரம்... சமுதாயம்... போன்ற விஷயங்களைப் பற்றியும் தமக்கு இருந்த பரந்த அறிவைப் பயன்படுத்தி மக்களுக்குக் கற்பித்தார். அதேசமயத்தில், மக்களைத் தம்மிடம் ஈர்ப்பதற்காகத் தமக்கு இருந்த அறிவை ஒருபோதும் பகட்டாகக் காட்டிக்கொள்ளவில்லை. அவர் எப்போதும் எளிமையாகவும் தெளிவாகவும் கற்பித்தார். அவர் பேசுவதைக் கேட்பதற்கு மக்கள் ஆவலாய் இருந்ததில் ஆச்சரியமே இல்லை!—மாற்கு 12:37; லூக்கா 19:48.
15 இயேசுவைப் பின்பற்ற இன்று கிறிஸ்தவர்கள் முயற்சி செய்கிறார்கள். நமக்கு அவரைப் போல் அபார ஞானமும் அறிவும் இல்லைதான், என்றாலும் நம் அனைவருக்கும் ஓரளவு ஞானமும் அனுபவமும் இருக்கிறது; அதைக் கொண்டு கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியங்களை மற்றவர்களுக்குக் கற்பிக்கலாம். உதாரணத்திற்கு, பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர் தாங்கள் பெற்ற அனுபவத்தைப் பயன்படுத்தி யெகோவா தம் பிள்ளைகள்மீது வைத்திருக்கும் அன்பை விளக்கலாம். இன்னும் சிலர், வேலையிலும் பள்ளியிலும் நடந்த சம்பவங்களை... மக்களுடன் பழகியதில் கிடைத்த அனுபவங்களை... நாட்டு நடப்புகளைப் பற்றிய அறிவை... பயன்படுத்தி உதாரணங்கள் சொல்லலாம். என்றாலும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைத் தெரிவிப்பதில் நாம் முழு கவனம் செலுத்த வேண்டுமே தவிர வேறு விஷயங்களில் அல்ல.—1 தீமோத்தேயு 4:16.
ஊழியத்தைக் குறித்ததில் இயேசுவின் மனப்பான்மை
16, 17. (அ) ஊழியத்தைக் குறித்ததில் இயேசுவுக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை இருந்தது? (ஆ) ஊழியமே தமது வாழ்வில் அதிமுக்கியம் என்று இயேசு எப்படிக் காட்டினார்?
16 ஊழியத்தை இயேசு அரும்பெரும் பொக்கிஷமாகக் கருதினார். தம்முடைய பரலோக தகப்பன் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் அவர் அலாதி ஆனந்தம் அடைந்தார். ஆம், குழப்பமூட்டுகிற மனித கோட்பாடுகளையும் பாரம்பரியங்களையும் தவிர்த்து தம் தகப்பனைப் பற்றி தெளிவாகத் தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி கண்டார். யெகோவாவோடு மக்கள் நல்லுறவுக்குள் வருவதற்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கும் அவர்களுக்கு உதவ இயேசு ஆவலாய் இருந்தார். நல்ல செய்தியின் மூலம் அவர்களுக்கு ஆறுதலையும் ஆனந்தத்தையும் அளிப்பதில் பேரின்பம் கண்டார். அவர் இப்படியெல்லாம் உணர்ந்தார் என்பதை எப்படித் தெரியப்படுத்தினார்? மூன்று விதங்களில்...
17 முதலாவதாக, இயேசு தம்முடைய வாழ்வில் ஊழியத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பேசுவதே அவருடைய வாழ்க்கை தொழிலாக, உயிர் மூச்சாக, லட்சியமாக இருந்தது. அதனால்தான், நாம் 5-ஆம் அதிகாரத்தில் பார்த்தபடி, இயேசு ஞானமாக தம் வாழ்க்கையை எளிமையுடன் வைத்துக்கொண்டார். மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கியதற்கு இசைவாக அவரும் அதிமுக்கியமானவற்றின் மீதே தம் கண்களை ஒருமுகப்படுத்தினார். பொருள்களை வாங்கி குவிப்பது... அவற்றை பராமரிப்பது... பழுதுபார்ப்பது... பழையதைக் கழித்துவிட்டு புதியதை வாங்குவது... என கவனத்தைச் சிதறடிக்கும் எந்தவொரு காரியத்திலும் அவர் ஈடுபடவில்லை. ஊழியத்திலிருந்து தம்மை எதுவும் அநாவசியமாக திசைதிருப்பாதவாறு தம் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டார்.—மத்தேயு 6:22; 8:20.
18. ஊழியத்தில் இயேசு எவ்விதங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்?
18 இரண்டாவதாக, ஊழியத்தில் இயேசு முழுமூச்சுடன் ஈடுபட்டார். தம்முடைய முழு சக்தியையும் இதற்காகவே செலவிட்டார்; மக்களுக்கு நல்ல செய்தியை அறிவிப்பதற்காக பாலஸ்தீனா தேசமெங்கும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே சென்றார். வீடுகளில், பொது இடங்களில், கடைவீதிகளில், வெட்ட வெளியில் என எல்லா இடங்களிலும் மக்களைச் சந்தித்துப் பேசினார். அவர் களைப்பாக இருந்த சமயத்திலும், பசியாக இருந்த சமயத்திலும், தாகமாய் இருந்த சமயத்திலும், உயிர் நண்பர்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சமயத்திலும் மக்களுக்குச் சாட்சி கொடுத்தார். ஏன், அவர் சாகும் தறுவாயிலும்கூட கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவித்தார்.—லூக்கா 23:39-43.
19, 20. பிரசங்க வேலையின் அவசரத் தன்மையை தாம் உணர்ந்திருந்ததை இயேசு எப்படி ஓர் உவமையுடன் விளக்கினார்?
19 மூன்றாவதாக, ஊழியத்தை இயேசு அவசர உணர்வோடு செய்தார். சீகார் நகரத்திற்கு வெளியே இருந்த கிணற்றருகில் சமாரியப் பெண்ணோடு அவர் பேசியதை நினைத்துப் பாருங்கள். அவசரத் தன்மையோடு நல்ல செய்தியை அறிவிப்பதன் அவசியத்தை இயேசுவின் அப்போஸ்தலர்கள் அந்தச் சமயத்தில் உணரவில்லை. அவர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “அறுவடைக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறதென்று நீங்கள் சொல்வதில்லையா? இதோ! நான் உங்களுக்குச் சொல்கிறேன்: வயல்களை ஏறெடுத்துப் பாருங்கள். அவை விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன.”—யோவான் 4:35.
20 அந்தச் சமயத்தில் நிலவிய பருவகாலத்தையே உவமையாக இயேசு பயன்படுத்தினார். அது கிஸ்லே (நவம்பர்/டிசம்பர்) மாதமாக இருந்திருக்க வேண்டும். பார்லி அறுவடைக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருந்தன, அதாவது நிசான் 14, பஸ்கா பண்டிகை சமயத்தில்தான் அறுவடை நடக்கும். இன்னும் நிறைய நாள் இருந்ததால் அவசரமாக அறுவடை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அந்தச் சமயத்தில் நினைக்கவில்லை. ஆனால், அடையாள அர்த்தத்தில் அறுவடை செய்வதைப் பற்றி என்ன? ஆம், நல்ல செய்தியைக் கேட்பதற்கு, கற்றுக்கொள்வதற்கு, கிறிஸ்துவின் சீஷர்களாய் ஆவதற்கு, யெகோவா அளிக்கும் மகத்தான நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கு எத்தனையோ பேர் தயாராய் இருந்தார்கள். அடையாள அர்த்தமுள்ள இந்த வயல்வெளியை இயேசு ஏறெடுத்து பார்த்தபோது காற்றில் மென்மையாக அசைந்தாடும் கதிர்கள் அறுவடைக்குத் தயாராய் இருப்பது போல் அவருக்குத் தெரிந்தது. அறுவடைக்கான நேரம் நெருங்கிவிட்டதால் அதை மிக அவசரமாகச் செய்ய வேண்டியிருந்தது! அதனால்தான், ஓர் ஊரில் இருந்த மக்கள் இயேசுவைத் தங்களோடே தங்கிவிடும்படி சொன்னபோது, “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார்.—லூக்கா 4:43.
21. இயேசுவை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
21 இதுவரை பார்த்த இந்த மூன்று விதங்களிலும் நாம் இயேசுவைப் பின்பற்றலாம். ஊழியத்திற்கு நம்முடைய வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். நமக்கு குடும்ப பொறுப்புகளோ மற்ற பொறுப்புகளோ இருந்தாலும் ஊழியத்துக்கே முதலிடம் கொடுக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு இயேசுவைப் போல் பக்திவைராக்கியத்துடன் தவறாமல் அதில் ஈடுபடலாம். (மத்தேயு 6:33; 1 தீமோத்தேயு 5:8) நம்முடைய நேரத்தையும் சக்தியையும் வளத்தையும் தாராளமாக அர்ப்பணிப்பதன் மூலம் ஊழியத்தில் முழுமூச்சுடன் ஈடுபடலாம். (லூக்கா 13:24) அதேசமயம், இது அவசர உணர்வோடு செய்யப்பட வேண்டிய வேலை என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்கலாம். (2 தீமோத்தேயு 4:2) எனவே, பிரசங்கிப்பதற்கு நமக்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்திக்கொள்வது அவசியம்.
22. அடுத்த அதிகாரத்தில் எதைக் குறித்து சிந்திப்போம்?
22 இயேசு தமது மரணத்திற்குப் பின்பும் இந்த வேலை தொடர்ந்து நடைபெற ஏற்பாடு செய்தார்; இதன்மூலம் இந்த வேலையின் முக்கியத்துவத்தை அவர் அறிந்திருந்தார் என்பதைக் காட்டினார். பிரசங்க வேலையையும் கற்பிக்கும் வேலையையும் தொடர்ந்து செய்யும்படி தம்மைப் பின்பற்றினவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். இந்தக் கட்டளையே அடுத்த அதிகாரத்தின் பொருள்.
a உதாரணமாக, ஒரு யூதனான இயேசு ஏன் சமாரியப் பெண்ணான தன்னிடம் பேசுகிறார் என்று அவள் கேட்டபோது அந்த இரு தேசத்தவருக்கும் காலங்காலமாக இருந்துவரும் பகையைச் சுட்டிக்காட்டுகிறாள். (யோவான் 4:9) அவளுடைய தேசத்தார் யாக்கோபின் வம்சத்திலிருந்து வந்தவர்கள் என்றும் கூறுகிறாள்—இது அன்றைய யூதர்கள் ஒத்துக்கொள்ளாத ஒரு விஷயம். (யோவான் 4:12) சமாரியர்கள் அந்நிய தேசத்தாரிலிருந்து தோன்றியவர்கள் என்பதை வலியுறுத்திக் காட்டுவதற்காக அவர்களை கியூத்தையர்கள் என்று யூதர்கள் அழைத்தார்கள்.
b பிரசங்கிப்பது என்றால் ஒரு செய்தியை அறிவிப்பதைக் குறிக்கிறது. கற்பிப்பதும் கிட்டத்தட்ட அதே அர்த்தத்தைத்தான் தருகிறது, ஆனால் ஒரு செய்தியை விலாவாரியாக, மிகத் தெளிவாக எடுத்து சொல்வதைக் குறிக்கிறது. நன்கு கற்பிப்பது என்றால், மாணாக்கர்களைச் செயல்பட உந்துவிப்பதற்காக அவர்களுடைய மனதைத் தொடும் விதத்தில் சொல்லித் தருவதாகும்.