ஒரு ‘பொல்லாத சந்ததியிலிருந்து’ காப்பாற்றப்படுதல்
“விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்?”—லூக்கா 9:41.
1. (அ) இக்கட்டான நம்முடைய காலங்கள் எதை முன்குறித்துக் காட்டுகின்றன? (ஆ) தப்பிப்பிழைப்போரைப் பற்றி வேதவாக்கியங்கள் என்ன சொல்கின்றன?
பெரும் இக்கட்டான காலங்களில் நாம் வாழ்கிறோம். நில அதிர்ச்சிகள், வெள்ளப்பெருக்குகள், பஞ்சங்கள், நோய், அக்கிரமம், வெடிகுண்டு வீச்சுகள், பயங்கர போர்கள்—இவையும் இன்னும் அதிகமானவையும் நம் 20-வது நூற்றாண்டின்போது மனித இனத்தைச் சூழ்ந்து ஆழ்த்தியிருக்கின்றன. எனினும் எல்லாவற்றிலும் மிகப் பெரிய இக்கட்டு சமீப எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பயமுறுத்தலாயுள்ளது. அது என்ன? அது, “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம்” ஆகும். (மத்தேயு 24:21) எனினும், நம்மில் பலர், மகிழ்ச்சியுள்ள எதிர்காலத்தை ஆவலோடு எதிர்பார்க்கலாம்! ஏன்? ஏனெனில், “ஒருவரும் எண்ணமுடியாத திரள்கூட்டம். இவர்கள் சகல ஜாதிகளிலுங் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலுமிருந்து வந்தவர்கள். . . . இவர்களே பெரிதான உபத்திரவத்திலிருந்து வருகிறவர்கள்; . . . இவர்கள் இனிப் பசித்து வருந்தார்கள், தாகித்து வருந்தார்கள்; . . . கடவுள்தாமே அவர்கள் கண்களிலிருந்து கண்ணீரை எல்லாம் துடைப்பார்.”—வெளிப்படுத்துதல் 7:1, 9, 14-17, திருத்திய மொழிபெயர்ப்பு.
2. மத்தேயு 24, மாற்கு 13, மற்றும் லூக்கா 21-ன் தொடக்க வசனங்கள் என்ன முதல் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தை அடைந்தன?
2 தேவாவியால் ஏவப்பட்ட பதிவு, மத்தேயு 24:3-22-லும், மாற்கு 13:3-20-லும், லூக்கா 21:7-24-லும், ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைப்’ பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசன விவரிப்பை அறிமுகப்படுத்துகிறது.a இந்தத் தீர்க்கதரிசனம் நம்முடைய பொது சகாப்தம் முதல் நூற்றாண்டின் சீரழிந்த யூதக் காரிய ஒழுங்குமுறையின்மீது முதலில் நிறைவேறி, யூதர்மேல் முன்னொருபோதும் இருந்திராத ‘பெரிதான உபத்திரவத்தில்’ உச்ச நிலையை அடைந்தது. எருசலேம் ஆலயத்தின்பேரில் மையமாக ஊன்றியிருந்த அந்த யூத ஒழுங்குமுறையின் மத மற்றும் அரசியல் அமைப்பு முழுவதும், திரும்ப ஒருபோதும் புதுப்பிக்கப்படாதபடி அழிக்கப்பட்டது.
3. இயேசுவின் தீர்க்கதரிசனத்திற்கு இன்று நாம் கவனம் செலுத்துவது ஏன் அவசரம்?
3 இயேசுவின் தீர்க்கதரிசனத்தினுடைய இந்த முதல் நிறைவேற்றத்தைச் சூழ்ந்திருந்த சந்தர்ப்ப நிலைமைகளை நாம் இப்போது சிந்திக்கலாம். இது, இதற்கு இணையான இன்றைய நிறைவேற்றத்தை மேலும் நன்றாய்ப் புரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்யும். மனிதகுலம் முழுவதையும் பயமுறுத்துகிற உபத்திரவங்களிலெல்லாம் மிகப் பெரிதானதைத் தப்பிப்பிழைப்பதற்குத் திட்டமான நடவடிக்கையை இப்போதே எடுப்பது எவ்வளவு அவசரம் என்பதை இது நமக்குக் காண்பிக்கும்.—ரோமர் 10:9-13; 15:4; 1 கொரிந்தியர் 10:11; 15:58.
“முடிவு”—எப்போது?
4, 5. (அ) பொ.ச. முதல் நூற்றாண்டிலிருந்த கடவுள்பயமுள்ள யூதர்கள், தானியேல் 9:24-27-ன் தீர்க்கதரிசனத்தில் ஏன் அக்கறையுடையோராக இருந்தனர்? (ஆ) இந்தத் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேற்றமடைந்தது?
4 “எழுபது வார” ஆண்டு காலப்பகுதியின் கடைசி ‘வாரத்தின்போது’ சம்பவிக்கவிருந்த நிகழ்ச்சிகளைப்பற்றிய ஒரு தரிசனம் கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய தானியேலுக்கு, ஏறக்குறைய பொ.ச.மு. 539-ல் அளிக்கப்பட்டது. (தானியேல் 9:24-27) இந்த “வாரங்கள்,” பொ.ச.மு. 455-ல் பெர்சிய அரசன் அர்தசஷ்டா, எருசலேம் நகரத்தைத் திரும்பக் கட்டும்படி கட்டளையிட்டபோது தொடங்கின. இந்தக் கடைசி “வாரம்,” மேசியாவாகிய இயேசு கிறிஸ்து, பொ.ச. 29-ல் தாம் முழுக்காட்டப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டபோது தோன்றினதோடு தொடங்கினது.b பொ.ச. முதல் நூற்றாண்டிலிருந்த கடவுள்பயமுள்ள யூதர்கள், தானியேலின் தீர்க்கதரிசனத்தினுடைய இந்தக் கால அம்சத்தைப்பற்றி நன்றாய் அறிந்திருந்தனர். உதாரணமாக, பொ.ச. 29-ல் முழுக்காட்டுபவராகிய யோவான் பிரசங்கிப்பதைக் கேட்பதற்குத் திரண்டுவந்தக் கூட்டங்களைக் குறித்து லூக்கா 3:15 (தி.மொ.) கூறுகிறது: “ஜனங்கள் எதிர்பார்த்திருக்கவே, யோவான் கிறிஸ்துதானோ என்று எல்லாரும் தங்கள் இருதயங்களில் ஆலோசித்துக்கொண்டிரு[ந்தனர்].”
5 இந்த 70-வது “வாரம்,” யூதருக்குத் தனிப்பட்ட ஆதரவாக அளிக்கப்பட்ட ஏழு ஆண்டுகளாக இருக்க வேண்டியதாயிருந்தது. பொ.ச. 29-ல் தொடங்கி, அது இயேசுவின் முழுக்காட்டுதலையும் ஊழியத்தையும், “அந்த வாரம் பாதி சென்றபோது,” பொ.ச. 33-ல் அவருடைய பலிக்குரிய மரணத்தையும், மேலும் பொ.ச. 36 வரை மற்றொரு “பாதி வாரத்தையும்” அடங்கலாகக் கொண்டிருந்தது. இந்த ‘வாரத்தின்போது,’ இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களாகும்படியான வாய்ப்பு, கடவுள்பயமுள்ள யூதருக்கும் யூத மதமாறினவர்களுக்கும் தனிப்பட அளிக்கப்பட்டது. பின்பு, முன்னதாக அறியப்படாத ஒரு தேதியாகிய பொ.ச. 70-ல், டைட்டஸின் தலைமைவகிப்பின்கீழ் ரோமப் படைகள் அந்த விசுவாசதுரோக யூத ஒழுங்குமுறையை அழித்தொழித்தது.—தானியேல் 9:26, 27.
6. பொ.ச. 66-ல் ‘பாழாக்கும் அருவருப்பு’ எவ்வாறு நடவடிக்கையில் ஈடுபட்டது, கிறிஸ்தவர்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்?
6 இவ்வாறு, எருசலேமின் ஆலயத்தை அசுத்தப்படுத்தி, கடவுளுடைய சொந்தக் குமாரனைக் கொலைசெய்வதில் சதித்திட்டமிட்ட யூத ஆசாரியத்துவம் அழித்தொழிக்கப்பட்டது. அரசாங்கம் மற்றும் கோத்திரம் சம்பந்தப்பட்ட பதிவுகளும் அழிந்துபோயின. அதற்குப் பின்பு, ஒரு யூதனும் ஆசாரியத்துவ அல்லது அரச பரம்பரை பதவியைச் சட்டப்பூர்வமாய் உரிமைபாராட்ட முடியவில்லை. எனினும், மகிழ்ச்சியுண்டாக, அபிஷேகம் செய்யப்பட்ட ஆவிக்குரிய யூதர்கள், யெகோவா தேவனின் ‘மகத்துவங்களை விரிவாய் அறிவிக்கும்படி’ ஒரு ராஜரீக ஆசாரியத்துவமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். (1 பேதுரு 2:9) பொ.ச. 66-ல் ரோமின் படை எருசலேமை முதல் தடவை முற்றுகையிட்டு ஆலயப் பகுதியையும்கூட அடியரித்தபோது, அந்த இராணுவப் படையே ‘தானியேல் தீர்க்கதரிசி பேசின பாழாக்கும் அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பது’ என்பதாகக் கிறிஸ்தவர்கள் தெரிந்துகொண்டனர். இயேசுவின் தீர்க்கதரிசனக் கட்டளைக்குக் கீழ்ப்படிதலாக, எருசலேமிலும் யூதேயாவிலுமிருந்த கிறிஸ்தவர்கள் பாதுகாப்புக்காக மலைப்பிரதேசங்களுக்கு ஓடிப்போய்விட்டனர்.—மத்தேயு 24:15, 16; லூக்கா 21:20, 21.
7, 8. என்ன “அடையாளத்தைக்” கிறிஸ்தவர்கள் கண்டார்கள், ஆனால் எதை அவர்கள் அறியவில்லை?
7 அந்த உண்மையுள்ள யூதக் கிறிஸ்தவர்கள் தானியேல் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைக் கண்டனர், மற்றும் ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவினுடைய அடையாளத்தின்’ பாகமாக இயேசு முன்னறிவித்திருந்த கடும் துயரத்துக்கேதுவான போர்கள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், பூமியதிர்ச்சிகள், அக்கிரமங்கள் ஆகியவற்றைக் கண்கூடாய்க் கண்ட சாட்சிகளாகவும் இருந்தனர். (மத்தேயு 24:3, NW) ஆனால் அந்தச் சீரழிந்த ஒழுங்குமுறையின்மீது யெகோவா எப்போது ஆக்கினைத்தீர்ப்பை உண்மையில் நிறைவேற்றுவாரென்று இயேசு அவர்களுக்குச் சொல்லியிருந்தாரா? இல்லை. தம்முடைய எதிர்கால அரசதிகார வந்திருத்தலின் உச்சக்கட்டத்தைப் பற்றி அவர் தீர்க்கதரிசனம் உரைத்தது அந்த முதல் நூற்றாண்டு ‘பெரிதான உபத்திரவத்துக்கும்’ நிச்சயமாகவே பொருந்தும்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.”—மத்தேயு 24:36.
8 மேசியாவாக இயேசு தோன்றுவதன் காலத்தைத் தானியேல் தீர்க்கதரிசனத்திலிருந்து, யூதர்கள் கணக்கிட்டிருக்கலாம். (தானியேல் 9:25) எனினும் விசுவாசதுரோக யூத காரிய ஒழுங்குமுறையை முடிவாகப் பாழாக்கின ‘பெரிதான உபத்திரவத்திற்கு’ எந்தத் தேதியும் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்பட்ட பின்பே அந்தத் தேதி பொ.ச. 70 என்பதை அவர்கள் உணர்ந்தனர். எனினும், “இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று,” இயேசு சொன்ன தீர்க்கதரிசன வார்த்தைகளை அவர்கள் அறிந்திருந்தனர். (மத்தேயு 24:34) இங்கே, “சந்ததி” என்பதன் பொருத்தம் பிரசங்கி 1:4-ல் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து வேறுபடுவதாகத் தோன்றுகிறது. அங்கே அது ஒரு காலப்பகுதியில் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கும் ஒன்றன்பின் ஒன்றான சந்ததிகளைக் குறித்துப் பேசுகிறது.
“இந்தச் சந்ததி”—அது என்ன?
9. கிரேக்கச் சொல் ஜெனெயா என்பதை அகராதிகள் எவ்வாறு விளக்குகின்றன?
9 இயேசுவுடன் ஒலிவ மலையின்மேல் உட்கார்ந்திருந்த நான்கு அப்போஸ்தலர்கள், ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைப்’ பற்றிய அவருடைய தீர்க்கதரிசனத்தைக் கேட்டபோது, “இந்தச் சந்ததி” என்ற சொற்றொடரை எவ்வாறு புரிந்துகொண்டிருப்பார்கள்? சுவிசேஷங்களில் “சந்ததி” என்ற சொல் ஜெனெயா என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதைத் தற்கால அகராதிகள் பின்வரும் சொற்பாங்கில் பொருள் தொகுத்துரைக்கின்றன: “சொல்[லர்த்தமாய்] பொதுவான மூதாதையிலி[ருந்து] பரம்பரையாக வந்தவர்கள்.” (உவால்டர் பாய்யரின் கிரேக்க-ஆங்கில புதிய ஏற்பாட்டு அகராதி) “பிறப்பிக்கப்பட்டிருப்பது, ஒரு குடும்பம்; . . . ஒரு குடும்பவழிப் பட்டியலின் . . . அல்லது ஓர் இன மக்களின் . . . அல்லது ஒரே சமயத்தில் வாழும் மனிதத்திரள் முழுமையின் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும் உறுப்பினர், மத். 24:34; மாற். 13:30; லூக். 1:48; 21:32; பிலி. 2:15, மற்றும் முக்கியமாய் ஒரே காலப்பகுதியில் வாழும் யூத இனத்தினர்.” (டபிள்யூ. இ. வைனின் புதிய ஏற்பாட்டு சொற்களுக்குரிய விளக்கமான அகராதி [ஆங்கிலம்]) “பிறப்பிக்கப்பட்டிருப்பது, ஒரே குல மனிதர், ஒரு குடும்பம்; . . . “ஒரே சமயத்தில் வாழும் மனிதத் திரள் முழுமையும்: மத். xxiv. 34; மாற். xiii. 30; லூக். i. 48 . . . ஒரே மற்றும் அதே காலத்தில் வாழும் யூத இனத்தைக் குறித்து முக்கியமாய் பயன்படுத்தப்பட்டது.”—ஜே. ஹெச். தாயருடைய கிரேக்க-ஆங்கில புதிய ஏற்பாட்டு அகராதி.
10. (அ) மத்தேயு 24:34-ஐக் குறிப்பிடுவதில் என்ன ஒரே வகையான விளக்கத்தை இரண்டு நிபுணர்கள் அளிக்கின்றனர்? (ஆ) தியலாஜிக்கல் அகராதி ஒன்றும் பைபிள் மொழிபெயர்ப்புகள் சிலவும் இந்த விளக்கத்தை எவ்வாறு ஆதரிக்கின்றன?
10 இவ்வாறு “இந்தச் சந்ததி” (ஹெ ஜெனெயா ஹாட்டே) என்பதை “ஒரே சமயத்தில் வாழும் மனிதத் திரள் முழுமையும்” என்று விளக்கம் அளிப்பதில் வைனும் தாயரும் இருவருமே மத்தேயு 24:34-ஐக் குறிப்பிடுகின்றனர். தியலாஜிக்கல் டிக்ஷ்னரி ஆஃப் தி நியூ டெஸ்டமென்ட் (1964) இந்த விளக்கத்துக்கு ஆதரவளித்து, இவ்வாறு கூறுகிறது: “‘சந்ததி’ என்று இயேசு பயன்படுத்தினது அவருடைய பரந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறது: அவர் முழு ஜனத்தையும் குறிக்கிறார் மற்றும் பாவத்தில் அவர்களுடைய கூட்டுப் பொறுப்புணர்வைப்பற்றி உணர்வுடையவராக இருக்கிறார்.” உண்மையாகவே, இன்று இந்த உலக ஒழுங்குமுறையைக் குறிப்பதைப் போலவே, இயேசு பூமியில் இருந்தபோதும், “பாவத்தில் கூட்டுப் பொறுப்புணர்வு” அந்த யூத ஜனத்தில் வெளிப்படையாக இருந்தது.c
11. (அ) ஹெ ஜெனெயா ஹாட்டே என்பதை எவ்வாறு பொருத்தி பயன்படுத்துவதென்பதைத் தீர்மானிப்பதில் எந்த அதிகாரம் நம்மை முதன்மையாக வழிநடத்த வேண்டும்? (ஆ) இந்தச் சொற்றொடர் இந்த அதிகாரத்தால் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?
11 மெய்யாகவே, இந்த விஷயத்தைப் படிக்கும் கிறிஸ்தவர்கள், இயேசுவின் வார்த்தைகளை அறிவிக்கையில் ஹெ ஜெனெயா ஹாட்டே என்ற கிரேக்க சொற்றொடரை அல்லது “இந்தச் சந்ததி” என்பதை, ஏவப்பட்டெழுதிய சுவிசேஷ எழுத்தாளர்கள் இயேசு பயன்படுத்தின முறையில் தங்கள் சிந்தனையை முக்கியமாய் வழிநடத்துகின்றனர். அவர் எதிர்மறையான முறையில் அதை நிலையாகப் பயன்படுத்தினார். ஆகவேதான், இயேசு அந்த யூத மதத் தலைவர்களை “சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே” என்றழைத்து, கெஹென்னாவின் ஆக்கினைத்தீர்ப்பு “இந்தச் சந்ததியின்” மீது நிறைவேற்றப்படும் என்று தொடர்ந்து சொன்னார். (மத்தேயு 23:33, 36) எனினும், இந்த ஆக்கினைத்தீர்ப்பு அந்தப் பாசாங்குக்கார குருக்களுக்கே மட்டுப்பட்டதாக இருந்ததா? இல்லவேயில்லை. பல சந்தர்ப்பங்களில் இயேசு, ‘இந்தச் சந்ததியைப்’ பற்றி பேசி, இந்தப் பதத்தை ஒரேசீராக மேலும் விரிவான கருத்தில் பொருத்திப் பயன்படுத்துவதை அவருடைய சீஷர்கள் கேட்டிருந்தனர். அது என்ன?
‘இந்தப் பொல்லாத சந்ததி’
12. தம்முடைய சீஷர்கள் கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்தபோது, இயேசு எவ்வாறு அந்த ‘ஜனங்களை’ “இந்தச் சந்ததி”யோடு இணைத்தார்?
12 பொ.ச. 31-ல், இயேசுவின் பெரும் கலிலேய ஊழியத்தின்போதும் பஸ்காவுக்குச் சற்று பின்பும், அவர் “ஜனங்களுக்கு” இவ்வாறு சொன்னதை அவருடைய சீஷர்கள் கேட்டனர்: “இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. எப்படியெனில், [முழுக்காட்டுபவனாகிய] யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்றார்கள். மனுஷகுமாரன் [இயேசு] போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள்.” நேர்மைநெறியற்ற அந்த ‘ஜனங்களைப்’ பிரியப்படுத்துவது எதுவுமில்லை!—மத்தேயு 11:7, 16-19.
13. தம்முடைய சீஷர்களின் முன்னிலையில், இயேசு யாரை “இந்தப் பொல்லாத சந்ததி” என்று அடையாளங்காட்டி கண்டனம் செய்தார்?
13 பின்னர் பொ.ச. 31-ல், இயேசுவும் அவருடைய சீஷர்களும் இரண்டாம் தடவையாகத் தங்கள் கலிலேய ஊழியச் சுற்றுப்பயணத்துக்குப் புறப்பட்டபோது, “வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர்” இயேசுவிடம் ஓர் அடையாளத்தைக் கேட்டனர். அவர்களுக்கும் அங்கிருந்த ‘ஜனங்களெல்லாருக்கும்’ அவர் இவ்வாறு சொன்னார்: “இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். . . . அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும்.” (மத்தேயு 12:38-46) “இந்தப் பொல்லாத சந்ததி” அந்த மதத் தலைவர்களையும் அந்த ‘ஜனங்களெல்லாரையும்’ உள்ளடக்கியதென்பது தெளிவாயுள்ளது. இயேசுவின் மரணத்திலும் உயிர்த்தெழுதலிலும் நிறைவேற்றமடைந்த அந்த அடையாளத்தை அவர்கள் ஒருபோதும் விளங்கிக்கொள்ளவில்லை.d
14. இயேசு, சதுசேயரையும் பரிசேயரையும் என்ன கண்டனம் செய்வதை அவருடைய சீஷர்கள் கேட்டனர்?
14 பொ.ச. 32-ன் பஸ்காவுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் கலிலேயா பிரதேசத்து மக்தலாவுக்குள் வந்தபோது, சதுசேயரும் பரிசேயரும், ஒரு அடையாளத்தைக் காண்பிக்கும்படியாக மறுபடியும் இயேசுவை கேட்டார்கள். அவர் திரும்பவும் அவர்களிடம்: “இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.” (மத்தேயு 16:1-4) அந்த மதப் பாசாங்குக்காரர்கள், ‘இந்தப் பொல்லாத சந்ததி’ என்று இயேசு கண்டனம் செய்த உண்மையற்ற அந்த ‘ஜனங்களுக்குள்’ தலைவர்களாய், மெய்யாகவே மிக அதிகக் கண்டனத்துக்குத் தகுதியானவர்களாக இருந்தார்கள்.
15. மறுரூபக் காட்சிக்கு சற்று முன்பும் அதற்குப் பின்பும், இயேசுவும் அவருடைய சீஷர்களும் “இந்தச் சந்ததி”யோடு என்ன எதிர்ப்பட்டனர்?
15 இயேசு, தம்முடைய கலிலேய ஊழியத்தின் முடிவு சமயத்தில், ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடம் அழைத்து: “விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் . . . வெட்கப்படுவார்,” என்று சொன்னார். (மாற்கு 8:34, 38) ஆகவே மனந்திரும்பாத அந்தக் காலத்து யூதர் கூட்டங்கள் “விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததி”யாக இருந்தனரென்பது தெளிவாயுள்ளது. சில நாட்களுக்கு அப்பால், இயேசுவின் மறுரூபக் காட்சிக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் “ஜனங்களிடத்தில் வந்தபோது” ஒரு மனிதன் தன் மகனைச் சுகப்படுத்தும்படி அவரைக் கேட்டான். இயேசு கூறினார்: “விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்?”—மத்தேயு 17:14-17; லூக்கா 9:37-41.
16. (அ) ‘அந்த ஜனங்கள்பேரில்’ என்ன கண்டனத்தை இயேசு யூதேயாவில் திரும்பவும் கூறினார்? (ஆ) “இந்தச் சந்ததி” எவ்வாறு எல்லா கடும் குற்றங்களிலும் மிகப் பொல்லாதக் குற்றத்தைச் செய்வோராயினர்?
16 பொ.ச. 32-ல் கூடாரப் பண்டிகைக்குப் பின்பு, அநேகமாக யூதேயாவில், இயேசுவைச் சுற்றி “ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது,” அவர்களைத் தாம் கண்டனம் செய்வதைத் திரும்பவும் இவ்வாறு கூறினார்: “இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.” (லூக்கா 11:29) கடைசியாக, மதத் தலைவர்கள் இயேசுவை விசாரணைக்குக் கொண்டுவந்தபோது, பிலாத்து அவரை விடுதலைசெய்ய முன்வந்தார். பதிவு சொல்வதாவது: “பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள். . . . பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் [“கழுமரத்தில்,” NW] அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள். தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் [“கழுமரத்தில்,” NW] அறைய வேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.” அந்தப் ‘பொல்லாத சந்ததி’ இயேசு கொல்லப்படும்படி கேட்டது!—மத்தேயு 27:20-25.
17. பெந்தெகொஸ்தே அன்று பேதுருவின் பிரசங்கத்திற்கு ‘இந்த மாறுபாடுள்ள சந்ததியில்’ சிலர் எவ்வாறு செயல்பட்டனர்?
17 “விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததி,” அதன் மதத் தலைவர்களால் தூண்டுவிக்கப்பட்டு, இவ்வாறு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தைக் கொண்டுவருவதில் முக்கிய பாகத்தை வகித்தது. ஐம்பது நாட்களுக்குப் பின்பு, பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே அன்று, சீஷர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று வெவ்வேறு மொழிகளில் பேசத் தொடங்கினர். அந்தத் தொனியைக் கேட்டபோது, ‘திரளான ஜனங்கள் கூடிவந்தனர்,’ அப்போஸ்தலன் பேதுரு அவர்களை, “யூதர்களே; எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே” என்று குறிப்பிட்டு: “அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே [“கழுமரத்தில்,” NW] ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்,” என்று சொன்னார். கேட்டுக்கொண்டிருந்தவர்களில் சிலர் எவ்வாறு செயல்பட்டனர்? ‘இருதயத்திலே குத்தப்பட்டவர்களானார்கள்.’ அப்போது பேதுரு அவர்களிடம் மனந்திரும்பும்படி கூறினார். அவர்: ‘இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னார்.’ இதற்குப் பதில்செயலாக, ஏறக்குறைய மூவாயிரம் பேர் ‘அவருடைய வார்த்தையை முழு மனதுடன் ஏற்று முழுக்காட்டப்பட்டார்கள்.’—அப்போஸ்தலர் 2:6, 14, 23, 37, 40, 41.
“இந்தச் சந்ததி” அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது
18. இயேசு பயன்படுத்தின “இந்தச் சந்ததி” என்ற சொற்றொடர் நிலையாக எதைக் குறிக்கிறது?
18 அவ்வாறெனில், இயேசு தம்முடைய சீஷர்களின் முன்னிலையில் அவ்வளவு அடிக்கடி குறிப்பிட்ட அந்தச் “சந்ததி” எது? “இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது,” என்ற அவருடைய வார்த்தைகளால் அவர்கள் என்ன விளங்கிக்கொண்டனர்? நிச்சயமாகவே, “இந்தச் சந்ததி” என்ற சொற்றொடரைத் தாம் நிலையாகப் பயன்படுத்தின முறையிலிருந்து இயேசு விலகவில்லை. அதை அவர், அந்த யூத ஜனத்தை உண்டுபண்ணின தங்கள் ‘குருட்டு வழிகாட்டிகளோடுகூடிய’ சமகாலத்து பொதுஜனக்கூட்டங்களுக்கு நிலையாகப் பயன்படுத்தினார். (மத்தேயு 15:14) “இந்தச் சந்ததி,” இயேசு முன்னறிவித்த இக்கட்டுகளையெல்லாம் அனுபவித்து, பின்பு எருசலேமின்மீது வந்த ‘பெரிதான உபத்திரவத்தில்’ ஒழிந்துபோயிற்று.—மத்தேயு 24:21, 34.
19. அந்த யூத ஒழுங்குமுறையின் “வானமும் பூமியும்” எப்போது, எவ்வாறு ஒழிந்துபோயின?
19 முதல் நூற்றாண்டில், அந்த யூத ஜனத்தை யெகோவா நியாயந்தீர்த்துக் கொண்டிருந்தார். கிறிஸ்துவின் மூலமாகச் செய்த யெகோவாவின் இரக்கமுள்ள ஏற்பாட்டில் விசுவாசம் காட்டின மனந்திரும்பினவர்கள், அந்தப் ‘பெரிதான உபத்திரவத்திலிருந்து’ காப்பாற்றப்பட்டார்கள். இயேசுவின் வார்த்தைகளின்படியே உண்மையாக, தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட எல்லாக் காரியங்களும் சம்பவித்தன. பின்பு, அந்த யூதக் காரிய ஒழுங்குமுறையின் “வானமும் பூமியும்”—அந்த முழு ஜனமும், அதன் மதத் தலைவர்களோடும் பொல்லாத ஜன சமுதாயத்தோடும் ஒழிந்துபோயிற்று. யெகோவா ஆக்கினைத்தீர்ப்பை நிறைவேற்றிவிட்டார்!—மத்தேயு 24:35; ஒப்பிடுக: 2 பேதுரு 3:7.
20. காலத்துக்குப் பொருத்தமான என்ன அறிவுரை கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் அவசரமாய்ப் பொருந்துகிறது?
20 அந்த யூதரில், இயேசுவின் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்குக் கவனம் செலுத்தியிருந்தவர்கள், தங்கள் இரட்சிப்பானது, ஒரு ‘சந்ததியின்’ அல்லது தேதி குறிப்பிட்ட ‘காலங்களின் அல்லது வேளைகளின்’ நீட்சியைக் கணக்கிட முயற்சி செய்வதன்பேரில் அல்ல, ஆனால் அந்தச் சமகாலத்துப் பொல்லாத சந்ததியிலிருந்து விலகியிருந்து, உள்ளார்வத்துடன் கடவுளுடைய சித்தத்தை செய்துகொண்டிருப்பதன்பேரிலேயே சார்ந்திருந்ததென்பதை உணர்ந்தார்கள். இயேசுவின் தீர்க்கதரிசனத்தினுடைய கடைசி வார்த்தைகள் நம்முடைய நாளில் பெரிய நிறைவேற்றத்திற்குப் பொருந்துகிறபோதிலும், முதல் நூற்றாண்டு யூதக் கிறிஸ்தவர்களும் பின்வரும் இந்த அறிவுரைக்குச் செவிகொடுக்க வேண்டியதாக இருந்தது: “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பவும் மனுஷகுமாரன் முன்னிலையில் நிற்கவும் வலிமை பெறும்படி எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்.”—லூக்கா 21:32-36, தி.மொ.; அப்போஸ்தலர் 1:6-8.
21. சமீப எதிர்காலத்தில் என்ன திடீர் நிகழ்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம்?
21 இன்று, “யெகோவாவின் மகத்தான நாள் சமீபம், அது மிகவும் விரைந்து கிட்டிச்சேருகிறது.” (செபனியா 1:14-18, தி.மொ.; ஏசாயா 13:9, 13) திடீரென்று, யெகோவாவின் சொந்த முன்தீர்மானிக்கப்பட்ட ‘நாளிலும் நாழிகையிலும்’ பரலோகத் தூதர்கள், இந்த உலகத்தின் மத, அரசியல், மற்றும் வியாபார மூலங்களின்மீதும், அவற்றோடுகூட இந்தச் சமகாலத்து ‘பொல்லாத விபசாரச் சந்ததியின்’ மனம்போன போக்கில் செல்லும் ஜனத்தின் மீதும் அவருடைய கோபாக்கினை தாக்கும்படி கட்டவிழ்த்து விடுவார்கள். (மத்தேயு 12:39; 24:36; வெளிப்படுத்துதல் 7:1-3, 9, 14) நீங்கள் எவ்வாறு இந்தப் ‘பெரிதான உபத்திரவத்திலிருந்து’ வெளிவரும்படி காப்பாற்றப்படலாம்? எமது அடுத்தக் கட்டுரை இதற்குப் பதிலளித்து, எதிர்காலத்துக்குரிய மகத்தான நம்பிக்கையைப் பற்றி தெரிவிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தத் தீர்க்கதரிசனத்தின் விவரச் சுருக்கக் குறிப்புக்கு, பிப்ரவரி 15, 1994 காவற்கோபுரத்தின் 14-வது 15-வது பக்கங்களிலுள்ள அட்டவணையைக் காண்க.
b ‘வார’ ஆண்டுகளின்பேரில் மேலுமான தகவலைப் பெறுவதற்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்த, பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகத்தில் 130-2 பக்கங்களைக் காண்க.
c மத்தேயு 24:34-ல் உள்ள ஹெ ஜெனெயா ஹாட்டே என்பதை சில பைபிள்கள் பின்வருமாறு மொழிபெயர்க்கின்றன: “இந்த ஜனங்கள்” (பரிசுத்த பைபிள் இன்றைய மொழியில் [ஆங்கிலம், 1976], டபிள்யூ. எஃப். பெக் என்பவரால்); “இந்த ஜனத்தார்” (புதிய ஏற்பாடு—விரிவாக்கப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பு [ஆங்கிலம், 1961], கே. எஸ். உவியெஸ்ட் என்பவரால்); “இந்த ஜனம்” (யூத புதிய ஏற்பாடு [ஆங்கிலம், 1979], டி. ஹெச். ஸ்டெர்ன் என்பவரால்).
d அகந்தைகொண்ட அந்த மதத் தலைவர்கள் கூட்டுறவுகொள்ள மறுத்தவர்களும், ஆனால் அவர்களுக்காக இயேசு ‘பரிதபித்ததுமான,’ அம்ஹாரட்ஸ், அல்லது ‘தேச ஜனங்களுடன்,’ உண்மையற்ற இந்த ‘ஜனக்கூட்டங்களை’ சமப்படுத்தக்கூடாது.—மத்தேயு 9:36; யோவான் 7:49; NW.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ தானியேல் 9:24-27-ன் நிறைவேற்றத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
◻ பைபிள்பூர்வமாய்ப் பயன்படுத்தப்படுகிற “இந்தச் சந்ததி” என்பதைத் தற்கால அகராதிகள் எவ்வாறு விளக்குகின்றன?
◻ “சந்ததி” என்ற பதத்தை இயேசு எவ்வாறு நிலையாகப் பயன்படுத்தினார்?
◻ மத்தேயு 24:34, 35 முதல் நூற்றாண்டில் எவ்வாறு நிறைவேற்றமடைந்தது?
[பக்கம் 12-ன் படம்]
இயேசு “இந்தச் சந்ததியை” கட்டுப்பாடற்ற பிள்ளைகளின் கூட்டங்களுக்கு ஒப்பிட்டார்
[பக்கம் 15-ன் படம்]
அந்தப் பொல்லாத யூத ஒழுங்குமுறையின்மீது ஆக்கினைத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான அந்த நாழிகையை யெகோவா ஒருவரே முன்னதாக அறிந்திருந்தார்