அதிகாரம் 43
நம் சகோதர சகோதரிகள் யார்?
ஒருமுறை பெரிய போதகர் ஆச்சரியமான ஒரு கேள்வியைக் கேட்டார். ‘என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?’ என்று கேட்டார். (மத்தேயு 12:48) உன்னால் அதற்கு பதில் சொல்ல முடியுமா?— இயேசுவின் அம்மா பெயர் மரியாள் என்பது உனக்குத் தெரியும். ஆனால் அவரது சகோதரர்களின் பெயர்கள் உனக்குத் தெரியுமா?— அவருக்கு சகோதரிகளும் இருந்தார்களா?—
இயேசுவின் சகோதரர்கள் “யாக்கோபு, யோசே, சீமோன், யூதா” என்று பைபிள் சொல்கிறது. இயேசுவுக்கு சகோதரிகளும் இருந்தார்கள். அவர் பிரசங்கம் செய்து கொண்டிருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். இயேசுவே முதலில் பிறந்தவர் என்பதால் இவர்கள் எல்லாரும் அவருக்கு தம்பி, தங்கைகளே.—மத்தேயு 13:55, 56; லூக்கா 1:34, 35.
இயேசுவின் சகோதரர்களும் அவரது சீஷர்களாக இருந்தார்களா?— முதலில் அவர்கள் ‘அவரை விசுவாசிக்கவில்லை’ என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 7:5) ஆனால் பிற்பாடு யாக்கோபும் யூதாவும் அவரது சீஷர்கள் ஆனார்கள். அவர்கள் பைபிள் புத்தகங்களைக்கூட எழுதினார்கள். அவர்கள் எந்தப் புத்தகங்களை எழுதினார்கள் தெரியுமா?— ஆமாம், யாக்கோபு, யூதா என்ற புத்தகங்களை எழுதினார்கள்.
இயேசுவின் சகோதரிகளுடைய பெயர்கள் பைபிளில் இல்லை என்றாலும் அவருக்கு குறைந்தது இரண்டு தங்கைகளாவது இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் அதற்கு அதிகமாகவும் இருந்திருக்கலாம். இவர்களும் அவரது சீஷர்கள் ஆனார்களா?— பைபிள் அதைப் பற்றி சொல்வதில்லை, ஆகவே நமக்குத் தெரியாது. ஆனால் ‘என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?’ என்று இயேசு ஏன் கேட்டார் தெரியுமா?— அதை இப்போது பார்க்கலாம்.
இயேசு தன்னுடைய சீஷர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவன் வந்து, “உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேச வேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள்” என்றான். ஆகவே ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்க இயேசு இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார். ‘என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?’ என்ற ஆச்சரியமான கேள்வியைக் கேட்டார். பிறகு தன் சீஷர்களுக்கு நேராக கையை நீட்டி, “இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!” என்றார்.
பிறகு அதன் அர்த்தத்தை இயேசு விளக்கினார். ‘பரலோகத்திலிருக்கிற என் தந்தையின் விருப்பப்படி செய்கிறவனே என் சகோதரனும் சகோதரியும் தாயுமாக இருக்கிறான்’ என்றார். (மத்தேயு 12:47-50) இயேசு தன் சீஷர்களை எவ்வளவு நேசித்தார் என்பதை இது காட்டுகிறது. சீஷர்கள் தன்னுடைய நிஜமான சகோதரர்களையும் சகோதரிகளையும் தாய்களையும் போன்றவர்கள் என்று அவர் கற்பித்தார்.
அந்தச் சமயத்தில் இயேசுவின் சொந்த சகோதரர்கள்— யாக்கோபு, யோசே, சீமோன், யூதா ஆகியவர்கள்— அவர் கடவுளுடைய மகன் என்பதை நம்பவில்லை. காபிரியேல் தூதன் தங்கள் அம்மாவிடம் சொன்ன விஷயத்தை அவர்கள் நம்பாமல் இருந்திருக்கலாம். (லூக்கா 1:30-33) இதனால் அவர்கள் இயேசுவிடம் அன்பில்லாமல் நடந்திருக்கலாம். அப்படி நடந்துகொள்ளும் எவரும் உண்மையான சகோதரராக அல்லது சகோதரியாக இருக்க முடியாது. தன் சகோதரரிடம் அல்லது சகோதரியிடம் அன்பு காட்டாத யாரையாவது உனக்குத் தெரியுமா?—
யாக்கோபையும் ஏசாவையும் பற்றி பைபிள் சொல்கிறது. ஏசா பயங்கர கோபத்தோடு, ‘என் சகோதரனாகிய யாக்கோபைக் கொல்லப் போகிறேன்’ என்று சொன்னான். அவர்களுடைய அம்மா ரெபெக்காள் மிகவும் பயந்துவிட்டார். ஆகவே ஏசாவால் கொலை செய்யப்படாதிருக்க யாக்கோபை வேறு இடத்திற்கு அனுப்பி வைத்தார். (ஆதியாகமம் 27:41-46) ஆனால் நிறைய வருடங்களுக்குப் பிறகு ஏசா மனம் மாறி, யாக்கோபை கட்டிப்பிடித்து முத்தமிட்டான்.—ஆதியாகமம் 33:4.
பிறகு யாக்கோபிற்கு 12 மகன்கள் பிறந்தார்கள். ஆனால் யாக்கோபின் மூத்த மகன்களுக்கு தங்கள் தம்பி யோசேப்பை பிடிக்கவில்லை. அவன்மேல் பொறாமைப்பட்டார்கள். ஏனென்றால் அப்பாவின் செல்லப்பிள்ளையாக அவன் இருந்தான். ஆகவே எகிப்திற்கு போய்க் கொண்டிருந்த வியாபாரிகளிடம் அவனை அடிமையாக விற்றார்கள். ஆனால் ஒரு காட்டு மிருகம் யோசேப்பை கொன்றுவிட்டதாக தங்கள் அப்பாவிடம் பொய் சொன்னார்கள். (ஆதியாகமம் 37:23-36) எப்படிப்பட்ட கெட்ட எண்ணம் பிடித்தவர்கள் பார்த்தாயா?—
நிறைய வருடங்களுக்குப் பிறகு யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தினார்கள். ஆகவே யோசேப்பு அவர்களை மன்னித்தார். இந்த விஷயத்தில் அவர் எப்படி இயேசுவைப் போல் இருந்தார் என்று புரிகிறதா?— இயேசு பிரச்சினையில் சிக்கியபோது அவரது அப்போஸ்தலர்கள் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். அவரை தெரியவே தெரியாது என்றுகூட பேதுரு சொன்னார். ஆனால் யோசேப்பைப் போல் இயேசு அவர்கள் எல்லாரையும் மன்னித்தார்.
காயீன், ஆபேல் என்ற சகோதரர்களைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. அவர்களிடமிருந்தும் நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். காயீன் தன் சகோதரனை மனதார நேசிக்கவில்லை என்பதை கடவுள் கண்டார். ஆகவே காயீன் திருந்த வேண்டும் என்று கடவுள் சொன்னார். அவன் கடவுளை உண்மையிலேயே நேசித்திருந்தால் அவர் பேச்சைக் கேட்டிருப்பான். ஆனால் அவன் கடவுளை நேசிக்கவில்லை. ஒருநாள் அவன் ஆபேலிடம், ‘வா, நாம் வயல்வெளிக்கு போகலாம்’ என்று கூப்பிட்டான். ஆபேலும் அவனோடு சென்றான். அவர்கள் வயல்வெளியில் தனியாக இருந்தபோது காயீன் தன் சகோதரனை பலமாக அடித்துக் கொன்று போட்டான்.—ஆதியாகமம் 4:2-8.
இதிலிருந்து நாம் முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. அது என்ன தெரியுமா?— ‘தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்ட செய்தி இதுதான்: நாம் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும்; பொல்லாதவனிடமிருந்து வந்த காயீனைப் போல் இருக்கக்கூடாது.’ ஆகவே, சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் காயீனைப் போல் இருக்கக் கூடாது.—1 யோவான் 3:11, 12.
நாம் ஏன் காயீனைப் போல் இருக்கக்கூடாது?— ஏனெனில் அவன் ‘பொல்லாதவனிடமிருந்து,’ அதாவது சாத்தானிடமிருந்து வந்ததாக பைபிள் சொல்கிறது. காயீன் சாத்தானைப் போலவே நடந்ததால், சாத்தான் அவனுடைய தந்தை போல் இருந்தான்.
உன் சகோதர சகோதரிகளை நேசிப்பது ஏன் முக்கியம் என்று உனக்குப் புரிகிறதா?— அவர்கள்மேல் நீ அன்பு காட்டவில்லை என்றால், யாருடைய பிள்ளையைப் போல் நீ இருப்பாய்?— சாத்தானுடைய பிள்ளையைப் போல் இருப்பாய். அப்படியிருக்க உனக்குப் பிடிக்காதுதானே?— ஆகவே கடவுளுடைய பிள்ளையாக இருக்க விரும்புவதை நீ எப்படி காட்டலாம்?— உன் சகோதர சகோதரிகளிடம் உண்மையிலேயே அன்பு காட்டுவதன் மூலமாகும்.
ஆனால் அன்பு என்றால் என்ன?— மற்றவர்களுக்கு நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கும் பலமான உணர்ச்சியே அன்பு. மற்றவர்களிடம் பாசத்தை உணரும்போதும் அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்யும்போதும் அவர்களிடம் அன்பு இருப்பதைக் காட்டுகிறோம். நாம் அன்பு காட்ட வேண்டிய சகோதர சகோதரிகள் யார்?— அவர்கள் மிகப் பெரிய கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று இயேசு கற்றுக்கொடுத்ததை நினைத்துப் பார்.
இப்படிப்பட்ட கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடம் நாம் அன்பு காட்ட வேண்டியது எவ்வளவு முக்கியம்?— ‘கண்ணுக்குத் தெரியும் தன் சகோதரனிடம் [அல்லது சகோதரியிடம்] அன்பு காட்டாதவன் கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் அன்பு காட்ட முடியாது’ என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:20) ஆகவே கிறிஸ்தவ குடும்பத்தில் உள்ள சிலரை மட்டும் நாம் நேசிப்பது சரியல்ல. எல்லாரையுமே நேசிக்க வேண்டும். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னார். (யோவான் 13:35) நீ எல்லா சகோதர சகோதரிகளையும் நேசிக்கிறாயா?— இல்லை என்றால், உன்னால் கடவுளை உண்மையிலேயே நேசிக்க முடியாது என்பதை மறந்துவிடாதே.
சகோதர சகோதரிகளிடம் நமக்கு உண்மையிலேயே அன்பு இருப்பதை எப்படிக் காட்டலாம்?— நாம் அவர்களை நேசித்தால், அவர்களை தவிர்க்க மாட்டோம். அவர்களோடு பேசாமல் இருக்க மாட்டோம். எல்லாரிடமும் அன்பாக பழகுவோம். அவர்களுக்கு எப்போதுமே நல்லது செய்வோம், நல்ல காரியங்களை அவர்களோடு பகிர்ந்துகொள்வோம். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக உதவி செய்வோம். ஏனென்றால் நாம் உண்மையில் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
எல்லா சகோதர சகோதரிகளையும் நாம் உண்மையிலேயே நேசித்தால் அது எதைக் காட்டும்?— நாம் பெரிய போதகரான இயேசுவின் சீஷர்கள் என்பதைக் காட்டும். அவருடைய சீஷர்களாக இருக்கத்தானே நாம் ஆசைப்படுகிறோம்?—
நம் சகோதர சகோதரிகள் மீது அன்பு காட்டுவதைப் பற்றி கலாத்தியர் 6:10, 1 யோவான் 4:8, 21 ஆகிய வசனங்கள் சொல்கின்றன. நாம் பைபிளைத் திறந்து இந்த வசனங்களை வாசிக்கலாமா?