‘கர்த்தரின் வல்லமையில் பலப்படுங்கள்’
“கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.”—எபேசியர் 6:10.
சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு, போர்க்களத்தில் எதிரும் புதிருமான இரு படையினருக்கு நடுவே இரு வீரர்கள் நேருக்கு நேர் மோதினர். அந்த இருவரில் ஒருவர் மேய்ப்பனாக இருந்த சிறுவன்; அவருடைய பெயர் தாவீது. அவரை எதிர்த்து நின்றவனுடைய பெயர் கோலியாத்; அவன் மகா பலம் படைத்தவன்; நெடு நெடுவென்று வளர்ந்தவன். அவன் அணிந்திருந்த மார்க்கவசத்தின் எடை சுமார் 57 கிலோ; அதுமட்டுமல்ல கனமான மிகப் பெரிய ஈட்டியும் வாளும் வைத்திருந்தான். தாவீதோ எந்தவொரு கவசமும் அணியவில்லை, அவருடைய கையில் இருந்த ஒரே ஆயுதம் கவண்தான். இஸ்ரவேலரின் சார்பாக ஒரு பொடியன் போர் புரிய வந்ததை பெலிஸ்தனாகிய இராட்சத கோலியாத் தனக்கு கௌரவ குறைச்சலாக நினைத்தான். (1 சாமுவேல் 17:42-44) வெற்றி யாருக்கு என்பது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இருதரப்பினருக்கும் ஏற்கெனவே உறுதியாகிவிட்டது போல் தோன்றியது. ஆனால் வலிமை வாய்ந்தோர் எப்போதுமே போரில் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. (பிரசங்கி 9:11) தாவீதின் வெற்றிக்கு காரணம், அவர் யெகோவா அருளிய பலத்தில் போரிட்டார். “யுத்தம் யெகோவாவுடையது” என அவர் சொன்னார். “ஒரு கவணையும் ஒரு கல்லையும் வைத்திருந்த தாவீது, அந்த பெலிஸ்தனைவிட பலசாலியாய் இருந்தார்” என பைபிள் பதிவு காட்டுகிறது.—1 சாமுவேல் 17:47, 50, NW.
2 கிறிஸ்தவர்கள் சொல்லர்த்தமான போரில் ஈடுபடுவதில்லை. அவர்கள் எல்லா மனிதரோடும் சமாதானமாக இருந்தாலும், மிகவும் பலம் படைத்த எதிராளிகளுடன் ஓர் ஆன்மீக போரில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். (ரோமர் 12:18) எபேசியருக்கு எழுதிய நிருபத்தின் கடைசி அதிகாரத்தில், கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஈடுபட்டிருக்கும் ஒரு போராட்டத்தைப் பற்றி பவுல் குறிப்பிட்டார். “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என அவர் எழுதினார்.—எபேசியர் 6:12.
3 யெகோவா தேவனுடன் உள்ள நம் உறவை முறித்துப்போட விரும்பும் சாத்தானும் பேய்களுமே அந்த ‘பொல்லாத ஆவிகளின் சேனைகள்.’ நம்மைவிட அவை அதிக பலம் படைத்தவையாய் இருப்பதால், தாவீதைப் போன்ற அதே சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்; ஆகவே பலத்திற்காக கடவுள் மீது சார்ந்திருக்கவில்லை என்றால், நாம் வெற்றி பெற முடியாது. சொல்லப்போனால், “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” என பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார். (எபேசியர் 6:10) இந்த ஆலோசனையைக் கொடுத்த பிறகு, போரில் நாம் வெற்றி பெற உதவும் ஆன்மீக உபகரணங்களையும், கிறிஸ்தவ பண்புகளையும் பற்றி அப்போஸ்தலன் விளக்குகிறார்.—எபேசியர் 6:11-17.
4 நம் எதிராளியின் பலங்களையும் சூழ்ச்சி முறைகளையும் பற்றி பைபிள் சொல்வதை இப்போது நாம் ஆராய்வோம். அதன் பிறகு, நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு முறைகளைப் பற்றி சிந்திப்போம். யெகோவாவின் அறிவுரைகளை நாம் பின்பற்றினால், எதிரிகள் நம்மை மேற்கொள்ள மாட்டார்கள் என்பதில் உறுதியோடிருக்கலாம்.
பொல்லாத ஆவி சேனைகளுக்கு எதிராக போராட்டம்
5 “வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என பவுல் விளக்குகிறார். ஆம், “பிசாசுகளின் தலைவனாகிய” சாத்தானே அந்தப் பொல்லாத ஆவிகளில் பிரதானமானவன். (மத்தேயு 12:24-26) மூல மொழியில் பார்த்தால், நமக்கு இருக்கும் இந்தப் போராட்டத்தை மல்யுத்தத்திற்கு பைபிள் ஒப்பிடுவதைக் காணலாம். பண்டைய கிரீஸில் நடந்த மல்யுத்த போட்டிகளில் பங்கேற்ற ஒவ்வொருவரும் தன் எதிரியை வீழ்த்துவதற்கு அவருடைய சமநிலையை இழக்கச் செய்ய முயலுவார். அது போலவே, நமது ஆன்மீக சமநிலையை இழக்கச் செய்வதற்கு பிசாசானவன் விரும்புகிறான். இதை அவன் எவ்வாறு செய்கிறான்?
6 பிசாசானவன் ஒரு பாம்பைப் போல, கெர்ச்சிக்கிற சிங்கம் போல, ஏன் ஒளியின் தூதனைப் போலவும் வேஷம் போடலாம். (2 கொரிந்தியர் 11:3, 14; 1 பேதுரு 5:8) நம்மை துன்புறுத்துவதற்கோ, சலிப்படைய செய்வதற்கோ மனிதரை அவன் பயன்படுத்தலாம். (வெளிப்படுத்துதல் 2:10) முழு உலகமும் சாத்தானின் கைக்குள் இருப்பதால், நம்மை சிக்க வைப்பதற்கு அதன் ஆசாபாசங்களையும் கவர்ச்சிகளையும் அவன் பயன்படுத்தலாம். (2 தீமோத்தேயு 2:26; 1 யோவான் 2:16; 5:19) ஏவாளை வஞ்சித்தது போல நம்மையும் தவறாக வழிநடத்துவதற்கு உலகத்தின் எண்ணங்களையோ விசுவாச துரோக எண்ணங்களையோ அவன் பயன்படுத்தலாம்.—1 தீமோத்தேயு 2:14.
7 சாத்தானும் அவனுடைய பேய்களும் பயன்படுத்துகிற ஆயுதங்களும் அவர்களுடைய பலமும் வியக்க வைத்தாலும் அவர்களுக்கு வரம்புகள் உள்ளன. நமது பரலோக தகப்பனுக்கு பிரியமில்லாத கெட்ட காரியங்களை செய்யும்படி இந்தப் பொல்லாத ஆவிகள் நம்மை வற்புறுத்த முடியாது. நல்லது கெட்டதை தெரிவு செய்யும் சுயாதீனம் நமக்கு இருப்பதால், நமது சிந்தைகளையும் செயல்களையும் கட்டுப்படுத்தும் சக்தி நமக்கு இருக்கிறது. அதுமட்டுமல்ல, நாம் தன்னந்தனியாக போரிடுவதில்லை. “அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்”—இது எலிசாவின் காலத்தில் மட்டுமல்ல நம்முடைய காலத்திலும் உண்மை. (2 இராஜாக்கள் 6:16) கடவுளுக்கு கீழ்ப்படிந்து, பிசாசை எதிர்த்தால் அவன் நம்மை விட்டு ஓடிப்போவான் என பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.—யாக்கோபு 4:7.
சாத்தானின் தந்திரங்களை அறிந்திருத்தல்
8 சாத்தானின் தந்திரங்கள் நமக்கு தெரியாதவை அல்ல; ஏனெனில் அவன் பயன்படுத்தும் முக்கியமான சூழ்ச்சி முறைகளை பைபிள் அம்பலப்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 2:11) நீதிமானாயிருந்த யோபுவுக்கு எதிராக அவன் பயன்படுத்திய சூழ்ச்சி முறைகளாவன: கடும் பொருளாதார பிரச்சினைகள், அன்பானவர்களின் மரணம், குடும்பத்தில் எதிர்ப்பு, உடல் உபாதைகள், போலி நண்பர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகியவை. யோபு மிகவும் மனமொடிந்து போய், கடவுள் தன்னை கைவிட்டுவிட்டதாக நினைத்தார். (யோபு 10:1, 2) இன்று இப்படிப்பட்ட பிரச்சினைகளால் சாத்தான் நேரடியாக தாக்காத போதிலும் இப்படிப்பட்ட இன்னல்கள் அநேக கிறிஸ்தவர்களை பாதிக்கத்தான் செய்கின்றன; அதோடு தனக்கு சாதகமாக இவற்றை பிசாசால் பயன்படுத்த முடியும்.
9 இந்த முடிவின் காலத்தில் ஆன்மீக ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன. ஆன்மீக இலக்குகளை ஒதுக்கித்தள்ளி பொருளாதார நாட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். முறைகேடான செக்ஸை மனதுக்கு வேதனை தரும் ஒன்றாக அல்ல, ஆனால் இன்பம் தரும் ஒன்றாகவே மீடியாக்கள் தொடர்ந்து சித்தரிக்கின்றன. அநேகர் “தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்” ஆகியிருக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:1-5) ‘விசுவாசத்திற்காக தைரியமாய்ப் போராடவில்லை’ என்றால் இவ்விதமான சிந்தை நம் ஆன்மீக சமநிலைக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.—யூதா 3.
10 சாத்தான் வெற்றிகரமாக பயன்படுத்தும் சூழ்ச்சி முறைகளில் ஒன்றுதான் இவ்வுலக காரியங்களிலும் பொருளாதார நாட்டங்களிலும் நம்மை முற்றிலும் மூழ்கடித்துவிடுவது. விதைக்கிறவனைப் பற்றிய உவமையை சொல்லும்போது சிலருடைய விஷயத்தில், ‘உலகக் கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் [கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய] வசனத்தை நெருக்கிப் போடுகிறது’ என இயேசு எச்சரித்தார். (மத்தேயு 13:18, 22) “நெருக்கிப் போடு” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை “முற்றிலுமாக நெரித்துப் போடுவதை” அர்த்தப்படுத்துகிறது.
11 நெரித்துப் போடும் ஒருவகை அத்தி மரத்தை (strangler fig) வெப்பமண்டல காடுகளில் காணலாம். இது ஆதரவு தரும் மரத்தின் அடிமரத்தை சுற்றிக்கொண்டு மெதுமெதுவாக வளர்கிறது. வேர்கள் நன்கு ஊன்ற ஊன்ற ஆதரவு தரும் மரத்தை அதன் தண்டு கொஞ்சம் கொஞ்சமாக சுற்றி வளைக்கிறது. நாளடைவில், ஆதரவு தரும் மரத்தின் அடியிலுள்ள பெரும்பாலான சத்துக்களை இந்த அத்தியின் வேர்கள் உறிஞ்சிக்கொள்கின்றன, அதோடு அத்தியின் கிளைகள் உயரமாக வளர்ந்து படர்ந்துவிடுவதால் ஆதரவு தரும் மரத்திற்கு வெளிச்சமும் கிடைக்காமல் போய்விடுகிறது. கடைசியில், ஆதரவு தரும் மரம் பட்டுப்போகிறது.
12 இதே விதமாகவே இந்த உலகத்தின் கவலைகளும் செல்வம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கான தணியாத ஆசையும் நம்முடைய நேரத்தையும் சக்தியையும் மெதுமெதுவாக உறிஞ்சிவிடலாம். உலகக் காரியங்கள் மீது நம்முடைய கவனம் திசைதிரும்பினால், ஒருவேளை தனிப்பட்ட பைபிள் படிப்பை நாம் எளிதில் அலட்சியம் செய்துவிடுவோம், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்லாமல் இருப்பதையும் பழக்கமாக்கிவிடுவோம்; இதனால் ஆன்மீக ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடலாம். அப்போது ஆன்மீக காரியங்களுக்கான இடத்தை பொருளாதார காரியங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன, கடைசியில் சாத்தானுக்கு எளிதில் இரையாகி விடுகிறோம்.
உறுதியாய் நிற்பது அவசியம்
13 ‘பிசாசின் தந்திரங்களோடு [“உறுதியாய்,” NW] எதிர்த்து நிற்கும்படி’ சக விசுவாசிகளுக்கு பவுல் அறிவுறுத்தினார். (எபேசியர் 6:11) உண்மைதான், பிசாசையும் அவனுடைய பேய்களையும் நம்மால் முற்றிலுமாக முறியடிக்க முடியாது. அந்தப் பொறுப்பை இயேசு கிறிஸ்துவிடம் கடவுள் ஒப்படைத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 20:1, 2) என்றாலும், சாத்தான் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரையில் அவனுடைய தாக்குதல்களால் அடங்கியொடுங்கி போகாதிருக்க நாம் ‘உறுதியாய் நிற்பது’ அவசியம்.
14 சாத்தானுக்கு எதிராக உறுதியாய் நிற்பதன் அவசியத்தை அப்போஸ்தலனாகிய பேதுருவும் வலியுறுத்தினார். “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே” என அவர் எழுதினார். (1 பேதுரு 5:8, 9) சொல்லப்போனால், கெர்ச்சிக்கிற சிங்கம் போல பிசாசு நம்மை தாக்கும்போது, உறுதியாய் நிற்பதற்கு ஆவிக்குரிய சகோதர சகோதரிகளின் ஆதரவு நமக்கு மிகவும் முக்கியம்.
15 ஆப்பிரிக்க சவானா புல்வெளிக்கு அருகே ஒரு சிங்கம் கெர்ச்சிக்குமானால், அங்குள்ள மறிமான்கள் ஆபத்திலிருந்து தப்பிக்கும் வரை ஒரே ஓட்டம் பிடிக்கின்றன. என்றாலும் ஒருவருக்கொருவர் ஆதரவு காட்டுவதில், யானைகள் நமக்கு முன்மாதிரி வைக்கின்றன. யானைகள்—ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் அமைதியான அரக்கர்கள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “பொதுவாக யானைக் கூட்டம் பாதுகாப்புக்காக என்ன செய்யுமென்றால், வெளியிலிருந்து வரும் ஆபத்தை சமாளிப்பதற்கு பெரிய யானைகள் வட்டமாக நிற்குமாம், குட்டி யானைகளோ அந்த வட்டத்திற்குள் பாதுகாப்பாக இருக்குமாம்.” இப்படிப்பட்ட பலத்தையும் பாதுகாப்பையும் பார்க்கும் சிங்கங்கள் குட்டி யானைகளையும்கூட தாக்காமல் போய்விடுகின்றன.
16 சாத்தானும் அவனுடைய பேய்களும் அச்சுறுத்துகையில், நாமும் இவ்வாறே ஒன்று சேர்ந்து நிற்பது அவசியம்; விசுவாசத்தில் திடமாக இருக்கும் சகோதரர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நிற்க வேண்டும். ரோமில் பவுல் காவலில் இருந்தபோது சக கிறிஸ்தவர்கள் சிலர் அவருக்கு ‘பக்கபலமாக’ இருந்தார்கள் என அவர் ஒப்புக்கொண்டார். (கொலோசெயர் 4:10, 11, NW) ‘பக்கபலம்’ என இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் ஒரேவொரு முறை மட்டுமே காணப்படுகிறது. வைன் என்பவரின் எக்ஸ்போஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ் குறிப்பிடுகிறபடி, “இந்த வார்த்தையின் ஒரு வினைச்சொல் வடிவம் எரிச்சலைத் தணிக்கும் மருந்துகளை குறிக்கிறது.” இதமளிக்கும் களிம்பைப் போல, யெகோவாவை வணங்கும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் தரும் ஆதரவு, உணர்ச்சிப்பூர்வ அல்லது சரீரப்பிரகாரமான இன்னல்களால் ஏற்படும் வேதனையைத் தணிக்கிறது.
17 இன்று சக கிறிஸ்தவர்கள் அளிக்கும் உற்சாகம், கடவுளை உண்மையோடு சேவிக்க வேண்டுமென்ற நம் தீர்மானத்தை பலப்படுத்தும். முக்கியமாக கிறிஸ்தவ மூப்பர்கள் ஆன்மீக உதவி அளிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். (யாக்கோபு 5:13-15) தவறாமல் பைபிள் வாசிப்பதும், கிறிஸ்தவ கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் ஆகியவற்றிற்கு செல்வதும் கடவுளை உண்மையோடு சேவிக்க உதவுகின்றன. கடவுளோடு நெருங்கிய உறவு வைத்திருப்பதும்கூட அவரிடம் உண்மையாய் நிலைத்திருக்க நமக்கு உதவுகிறது. சொல்லப்போனால், நாம் சாப்பிட்டாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும் கடவுளுடைய மகிமைக்கென்றே செய்ய வேண்டும். (1 கொரிந்தியர் 10:31) கடவுளுக்கு பிரியமான வழியில் தொடர்ந்து நடப்பதற்கு ஜெப சிந்தையுடன் யெகோவாவை நம்பியிருப்பதும்கூட இன்றியமையாதது.—சங்கீதம் 37:5.
18 சில சமயங்களில், ஆன்மீக ரீதியில் நாம் பலமாக இல்லாதபோதுதான் சாத்தானிடமிருந்து தாக்குதல்கள் வருகின்றன. பலவீனமான மிருகத்தையே ஒரு சிங்கம் சட்டென பாய்ந்து தாக்குகிறது. குடும்ப பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடி, அல்லது வியாதி போன்ற சூழ்நிலைகள் நம் ஆன்மீக பலத்தை உறிஞ்சிவிடலாம். ஆனாலும், கடவுளுக்கு பிரியமானதைச் செய்வதை நாம் விட்டுவிடாதிருப்போமாக; ஏனெனில், “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” என பவுல் சொன்னார். (2 கொரிந்தியர் 12:10; கலாத்தியர் 6:9; 2 தெசலோனிக்கேயர் 3:13) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? பலத்திற்காக நாம் யெகோவாவிடம் கேட்டால், நமது பலவீனத்தை அவரது பலம் ஈடுகட்டிவிடும் என்றே அவர் அர்த்தப்படுத்தினார். கோலியாத்தை தாவீது வென்றது, தம்முடைய ஜனங்களுக்கு கடவுள் பலம் அளிக்க முடியும் என்பதையும் பலம் அளிக்கிறார் என்பதையும் காட்டுகிறது. மிகவும் நெருக்கடியான சமயங்களில், கடவுள் தமது கரத்தால் பலப்படுத்தியிருக்கிறார் என்பதற்கு இன்றைய யெகோவாவின் சாட்சிகளால் சான்றளிக்க முடியும்.—தானியேல் 10:19.
19 தங்களுக்கு கடவுள் ஆதரவளித்ததைப் பற்றி ஒரு தம்பதியர் இவ்வாறு எழுதினர்: “கணவன் மனைவியாக நாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக யெகோவாவை சேவித்திருக்கிறோம்; அநேக ஆசீர்வாதங்களை ருசித்திருக்கிறோம், அநேக அருமையான ஆட்களை அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது. கஷ்டங்களை வெற்றிகரமாக சகிப்பதற்கு பயிற்சியையும் பலத்தையும் யெகோவா அளித்திருக்கிறார். ஏன் இப்படியெல்லாம் கஷ்டங்கள் வருகின்றன என்பதை யோபுவைப் போலவே எங்களாலும் புரிந்துகொள்ளவே முடியவில்லை, ஆனால் எங்களுக்கு உதவ யெகோவா எப்போதுமே தயாராய் இருக்கிறார் என்பதை மட்டும் நாங்கள் புரிந்துகொண்டோம்.”
20 உண்மையுள்ள தமது மக்களை ஆதரிக்கவும் பலப்படுத்தவும் முடியாதளவுக்கு யெகோவாவின் கை குறுகினதல்ல. (ஏசாயா 59:1) “கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்” என சங்கீதக்காரனாகிய தாவீது பாடினார். (சங்கீதம் 145:14) சொல்லப்போனால், நம் பரலோக தகப்பன் “ஒவ்வொரு நாளும் நமது பாரத்தை சுமந்து” நமக்கு உண்மையில் தேவையானதை வழங்குகிறார்.—சங்கீதம் 68:19, NW.
நமக்கு ‘தேவனுடைய சர்வாயுதவர்க்கம்’ தேவை
21 சாத்தானுடைய சில சூழ்ச்சி முறைகளையும் அவனுடைய தாக்குதல்களின் மத்தியிலும் உறுதியாய் நிற்பதன் அவசியத்தையும் நாம் கலந்தாலோசித்தோம். நமது விசுவாசத்தை சிறந்த முறையில் பாதுகாத்துக்கொள்வதற்கான மற்றொரு முக்கிய ஏற்பாட்டை பற்றியும் நாம் இப்போது கலந்தாலோசிப்பது அவசியம். பிசாசின் தந்திரங்களுக்கு எதிராக உறுதியாய் நிற்பதற்கும், பொல்லாத ஆவி சேனைகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி காண்பதற்கும் தேவையான ஒரு முக்கிய அம்சத்தை எபேசியர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் இருமுறை குறிப்பிட்டார். அவர் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். . . . தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 6:11, 13.
22 ஆம், ‘தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை’ நாம் அணிந்துகொள்வது அவசியம். எபேசியர்களுக்கு பவுல் கடிதம் எழுதிய சமயத்தில், அவர் ரோம போர்வீரன் ஒருவனின் கண்காணிப்பில் இருந்தார். அந்த வீரன் ஒருவேளை சர்வாயுதவர்க்கத்தையும் அவ்வப்போது அணிந்திருந்திருக்கலாம். என்றாலும், யெகோவாவின் ஊழியர் ஒவ்வொருவருக்கும் மிகவும் தேவையான இந்த ஆன்மீக ஆயுதத்தைப் பற்றி எழுதுவதற்கு தேவ ஆவியே அவரைத் தூண்டியது.
23 கடவுள் கொடுத்துள்ள இந்த சர்வாயுதவர்க்கத்தில் ஒரு கிறிஸ்தவருக்கு இருக்க வேண்டிய பண்புகளும், யெகோவா செய்துள்ள ஆன்மீக ஏற்பாடுகளும் உட்படுகின்றன. அடுத்த கட்டுரையில் இந்த ஆன்மீக சர்வாயுதவர்க்கத்தின் ஒவ்வொரு பாகத்தையும் நாம் ஆராயலாம். இது, ஆன்மீக போரில் ஈடுபடுவதற்கு நாம் எந்தளவு தகுதி பெற்றிருக்கிறோம் என்பதைக் காண நமக்கு உதவும். அதே சமயத்தில், பிசாசாகிய சாத்தானை எதிர்ப்பதில் வெற்றி காண இயேசு கிறிஸ்துவின் சிறந்த முன்மாதிரி நமக்கு எப்படி உதவுகிறது என்பதையும் நாம் காண்போம்.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• எல்லா கிறிஸ்தவர்களுக்கும் என்ன போராட்டம் இருக்கிறது?
• சாத்தானின் சில தந்திரங்களை விளக்குங்கள்.
• சக விசுவாசிகளின் ஆதரவு நம்மை எப்படி பலப்படுத்தலாம்?
• யாருடைய பலத்தில் நாம் சார்ந்திருக்க வேண்டும், ஏன்?
[கேள்விகள்]
1. (அ) சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு என்ன அசாதாரண போர் நடந்தது? (ஆ) தாவீதின் வெற்றிக்குக் காரணம் என்ன?
2. கிறிஸ்தவர்கள் எவ்வகையான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்?
3. எபேசியர் 6:10-ல் குறிப்பிட்டுள்ளபடி, நாம் வெற்றி பெற எது தேவை?
4. இந்தக் கட்டுரையில் என்ன இரண்டு முக்கிய குறிப்புகளை நாம் ஆராய்வோம்?
5. போராட்டம் என்பதற்கு மூல மொழியில் எபேசியர் 6:12-ல் கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தை சாத்தானின் தந்திரத்தைப் புரிந்துகொள்ள நமக்கு எப்படி உதவுகிறது?
6. நமது விசுவாசத்தைக் குலைத்துப்போட வித்தியாசமான சூழ்ச்சி முறைகளை பிசாசு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பைபிளிலிருந்து காட்டுங்கள்.
7. பேய்களுக்கு என்ன வரம்புகள் இருக்கின்றன, என்னென்ன நன்மைகளை நாம் அனுபவிக்கிறோம்?
8, 9. யோபுவின் உத்தமத்தை முறிப்பதற்கு சாத்தான் என்னென்ன சோதனைகளைக் கொண்டு வந்தான், இன்று நாம் எதிர்ப்படும் ஆன்மீக ஆபத்துக்கள் என்னென்ன?
10-12. (அ) விதைக்கிறவனைப் பற்றிய உவமையில் இயேசு கொடுத்த ஒரு எச்சரிப்பு என்ன? (ஆ) ஆன்மீக காரியங்கள் எப்படி நெருக்கிப் போடப்படலாம் என்பதை விளக்குங்கள்.
13, 14. சாத்தான் நம்மை தாக்கும்போது எப்படிப்பட்ட நிலைநிற்கை எடுப்பது அவசியம்?
15, 16. உறுதியாய் நிலைத்திருப்பதற்கு சக விசுவாசிகள் தரும் ஆதரவு நமக்கு எப்படி உதவும் என்பதற்கு ஒரு வேதப்பூர்வ உதாரணத்தை கொடுங்கள்.
17. கடவுளிடம் உண்மையோடிருக்க என்னென்ன காரியங்கள் நமக்கு உதவும்?
18. நெருக்கடியான சூழ்நிலைகள் நம் பலத்தை உறிஞ்சிவிட்டாலும்கூட நாம் ஏன் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது?
19. யெகோவா தம் ஊழியர்களை பலப்படுத்த முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
20. யெகோவா தமது ஜனங்களை எப்போதுமே தாங்கி ஆதரிக்கிறார் என்பதை என்ன வேதப்பூர்வ அத்தாட்சி நிரூபிக்கிறது?
21. ஆன்மீக சர்வாயுதவர்க்கத்தின் அவசியத்தை பவுல் எப்படி வலியுறுத்தினார்?
22, 23. (அ) நமது ஆன்மீக சர்வாயுதவர்க்கத்தில் என்னவெல்லாம் உட்பட்டுள்ளன? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதை கலந்தாலோசிப்போம்?
[பக்கம் 11-ன் படங்கள்]
கிறிஸ்தவர்களுக்கு ‘பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு போராட்டம் உண்டு’
[பக்கம் 12-ன் படம்]
இவ்வுலக கவலைகள் ராஜ்யத்தைப் பற்றிய வசனத்தை நெருக்கிப் போடும்
[பக்கம் 13-ன் படம்]
சக கிறிஸ்தவர்கள் ‘பக்கபலமாக’ இருக்கலாம்
[பக்கம் 14-ன் படம்]
பலத்திற்காக கடவுளிடம் ஜெபம் செய்கிறீர்களா?