ஒரே உண்மையான கிறிஸ்தவ மதம்—சாத்தியமே
இயேசு கிறிஸ்து ஒரே ஒரு சர்ச்சை அல்லது சபையைத்தான் ஸ்தாபித்தார். அந்தச் சபை ஆவிக்குரிய கருத்தில் ஒரு சரீரமாக, ஒரு குடும்பமாக இருந்தது. அதாவது, கடவுளுடைய பரிசுத்த ஆவியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒன்றாக கூட்டிச் சேர்க்கப்பட்ட ஒரு தொகுதியை குறித்தது; அவர்கள் அனைவரையுமே கடவுள் தம்முடைய ‘பிள்ளைகளாக’ அங்கீகரித்தார்.—ரோமர் 8:16, 17; கலாத்தியர் 3:26.
ஜனங்களை சத்தியத்திடமும் ஜீவனிடமும் வழிநடத்த கடவுள் ஒரு வழியை மட்டுமே உபயோகித்தார் என இயேசு கற்பித்தார். அந்த முக்கியமான சத்தியத்தை புரிய வைப்பதற்காக, நித்திய ஜீவனுக்கு செல்லும் பாதையை இயேசு ஒரு வழிக்கு ஒப்பிட்டார். “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்றார்.—மத்தேயு 7:13, 14; யோவான் 14:6; அப்போஸ்தலர் 4:11, 12.
ஐக்கியப்பட்ட சபை
“நவீன காலங்களில் கத்தோலிக்க சர்ச்சைப் பற்றி பேசுகையில் உலகளாவிய ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு” என்று கூறுகிறோம்; ஆனால், முதல் நூற்றாண்டிலிருந்த சபை இதைப்போல் இருந்ததாக நாம் கருதக்கூடாது என இறையியலின் புதிய அகராதி (ஆங்கிலம்) கூறுகிறது. ஏன் அவ்வாறு கருதக்கூடாது? “ஏனென்றால், அத்தகைய ஒழுங்கமைக்கப்பட்ட உலகளாவிய அமைப்பு என்று ஒன்றும் இருக்கவில்லை” என அது கூறுகிறது.
பூர்வகால கிறிஸ்தவ சபைக்கும் இன்று நாம் பார்க்கிற ஒழுங்கமைக்கப்பட்ட சர்ச் அமைப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற உண்மையை யாராலுமே மறுக்க முடியாது. ஆனாலும் பூர்வகால சபை ஒழுங்கமைக்கப்பட்டுதான் இருந்தது. தனித்தனி சபைகள் அதனதன் இஷ்டத்திற்கு செயல்படவில்லை; அவை அனைத்தும் எருசலேமிலிருந்த ஆளும் குழுவின் அதிகாரத்தை அங்கீகரித்தன. எருசலேம் சபையிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் அடங்கிய அந்தக் குழு, கிறிஸ்துவின் ‘ஒரே சரீரமாக’ சபையின் ஒற்றுமையை பாதுகாக்க உதவியது.—எபேசியர் 4:4, 11-16; அப்போஸ்தலர் 15:22-31; 16:4, 5.
அந்த ஒரே உண்மையான சபைக்கு என்னவானது? அதுவே செல்வாக்குமிக்க கத்தோலிக்க சர்ச்சாக உருமாறியதா? அல்லது இன்று நாம் காண்கிற, தொகுதிகளாக பிளவுற்ற புராட்டஸ்டன்ட் சர்ச்சாக உருவானதா? அல்லது வேறு ஏதாவது நடந்ததா?
‘கோதுமையும் களைகளும்’
பதில்களைக் கண்டுபிடிக்க, என்ன நடக்கும் என்று இயேசு கிறிஸ்துவே கூறியதை கவனமாக ஆராய்வோம். தம்முடைய சபை காட்சியிலிருந்து மறைந்து போகும் என்று இயேசு எதிர்பார்த்தார் என்பதையும் அந்த மோசமான சூழ்நிலை அன்றிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு தொடர அவர் அனுமதிப்பார் என்பதையும் அறிய வருகையில் நீங்கள் ஆச்சரியப்படலாம்.
தம்முடைய சபையை ‘பரலோக ராஜ்யத்திற்கு’ ஒப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்: “பரலோக ராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான்.”—மத்தேயு 13:24-30.
தாமே ‘விதையை விதைக்கிறவர்’ என்று இயேசு விளக்கினார். “நல்ல விதை” அவருடைய உண்மையுள்ள சீஷர்களை குறித்தது. அவருடைய “சத்துரு” பிசாசாகிய சாத்தான். “களைகள்” பூர்வ கிறிஸ்தவ சபைக்குள் மெல்ல நுழைந்த பொய் கிறிஸ்தவர்கள். ‘உலகத்தின் முடிவில்’ நடக்கும் “அறுப்பு” வரைக்கும் ‘கோதுமையையும் களைகளையும்’ ஒன்றாக வளர அனுமதிப்பதாக அவர் கூறினார். (மத்தேயு 13:37-43) இவற்றின் அர்த்தம் என்ன?
கிறிஸ்தவ சபை மாசுபட்டது
அப்போஸ்தலர்கள் மரித்த சிறிது காலத்திலேயே, சபைக்குள் இருந்த விசுவாசதுரோக போதகர்கள் சபையை கட்டுப்படுத்த ஆரம்பித்தார்கள். அவர்கள், “சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதி”த்தார்கள். (அப்போஸ்தலர் 20:29, 30) அதன் காரணமாக, அநேக கிறிஸ்தவர்கள் ‘விசுவாசத்தை விட்டு விலகிப்போனார்கள்.’ அவர்கள் “கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோ”னார்கள்.—1 தீமோத்தேயு 4:1-3; 2 தீமோத்தேயு 4:3, 4.
பொது சகாப்தம் நான்காவது நூற்றாண்டிற்குள்ளாக “கத்தோலிக்க கிறிஸ்தவ மதம், ரோம சாம்ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ . . . மதமானது” என்று இறையியலின் புதிய அகராதி (ஆங்கிலம்) கூறுகிறது. அப்போது “சர்ச்சும் அரசாங்கமும் ஒன்றாக இணைந்தன”; அது, பூர்வ கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாக இருந்தது. (யோவான் 17:16; யாக்கோபு 4:4) காலப்போக்கில், “பழைய ஏற்பாடும் நியோபிளேட்டோனிய கருத்துக்களும் இணைந்ததன் விளைவாக” சர்ச்சின் ஒட்டுமொத்த அமைப்பும் இயல்பும் மட்டுமல்ல அதன் அடிப்படை நம்பிக்கைகளில் அநேகம்கூட பெருமளவு மாறின; “இந்த இணைப்பு வினோதமான, முற்றிலும் மோசமான ஒன்றாக இருந்தது” என்றும் அதே புத்தகம் கூறுகிறது. இயேசு கிறிஸ்து முன்னறிவித்த விதமாகவே, பொய் கிறிஸ்தவர்கள் பெருகியதால் அவருடைய உண்மையுள்ள சீஷர்கள் பார்வையிலிருந்து மறைந்துபோனார்கள்.
உண்மையான கோதுமையிலிருந்து களைகளை வித்தியாசப்படுத்தி பார்ப்பது எவ்வளவு கடினம் என்பது இயேசு கூறியதை கேட்டவர்களுக்கு நன்றாக தெரியும். ஏனெனில், முடி நிறைந்த டார்னல் என்ற நச்சு மிகுந்த ஒருவகை களை, வளரும் பருவத்தில் பார்ப்பதற்கு கோதுமை போலவே இருக்கும். ஆகவே, கொஞ்ச காலத்திற்கு உண்மை கிறிஸ்தவர்களையும் பொய் கிறிஸ்தவர்களையும் வித்தியாசம் காண்பது கடினமாக இருக்கும் என்பதாக இயேசு இந்த உவமையில் கூறினார். என்றாலும், கிறிஸ்தவ சபை இல்லாமல் போய்விட்டது என்று அர்த்தமாகிவிடவில்லை; ஏனெனில், “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும்” தமது ஆவிக்குரிய சகோதரர்களை தொடர்ந்து வழிநடத்துவதாக இயேசு வாக்குறுதி கொடுத்திருந்தார். (மத்தேயு 28:20) கோதுமை தொடர்ந்து வளரும் என்று இயேசு கூறினார். இருந்தாலும், தனியாகவோ தொகுதியாகவோ இருந்த உண்மை கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் போதனைகளை கடைப்பிடிக்க காலங்காலமாக கடினமாய் முயன்றார்கள். ஆனால், அவர்கள் தனித்து தெரிகிற குழுவாக அல்லது அமைப்பாக தென்படவில்லை. என்றாலும், சரித்திரம் முழுவதிலும் இயேசு கிறிஸ்துவிற்கு அவமரியாதையையும் அவப்பெயரையுமே கொண்டு வந்திருக்கிற, காணக்கூடிய விசுவாசதுரோக மத அமைப்பைப் போல அவர்கள் இருக்கவில்லை.—2 பேதுரு 2:1, 2.
‘பாவமனுஷன் வெளிப்பட்டான்’
போலியான இந்த மத அமைப்பை சுட்டிக்காட்டும் மற்றொரு விஷயத்தை அப்போஸ்தலன் பவுல் முன்னுரைத்தார். “விசுவாசதுரோகம் முந்தி நேரிட்டு, . . . பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த [யெகோவாவின்] நாள் வராது” என்று அவர் எழுதினார். (2 தெசலோனிக்கேயர் 2:2-4) “கிறிஸ்தவ” சபையின் மேல் அதிகாரம் செலுத்தும் அளவிற்கு தன்னை உயர்த்திய குருவர்க்கமே இந்த “பாவமனுஷன்.”a
விசுவாச துரோகம், அப்போஸ்தலன் பவுலின் காலத்தில் ஆரம்பமானது. அப்போஸ்தலர்கள் உயிரோடிருந்த வரைக்கும் அது பரவுவது தடை செய்யப்பட்டிருந்தது; அவர்கள் மரித்தபோதோ அது படுவேகமாக பரவ ஆரம்பித்தது. அது, “சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், . . . சகலவித வஞ்சகத்தோடும்” தெளிவாக அடையாளம் காட்டப்படும் என பவுல் கூறினார். (2 தெசலோனிக்கேயர் 2:6-12) அந்தக் கூற்று, காலங்காலமாக இருந்த பல மத தலைவர்களின் நடவடிக்கைகளை எவ்வளவு துல்லியமாக படம்பிடித்துக் காட்டுகிறது!
ரோமன் கத்தோலிக்க மதமே உண்மையான சர்ச் என்ற வாதத்தை ஆதரிப்பதற்காக கத்தோலிக்க தலைவர்கள் கூறுவது இதுதான்: தங்கள் பிஷப்புகள், “ஆரம்பத்திலிருந்தே வந்த வாரிசுரிமை என்ற சங்கிலித் தொடர் மூலம் பூர்வ அப்போஸ்தலர்களிடமிருந்து அப்போஸ்தல உரிமைகளை பெற்றார்கள்.” உண்மை என்னவென்றால், இந்த அப்போஸ்தல வாரிசுரிமையை ஆதரிக்க எந்த சரித்திரப்பூர்வ அல்லது வேதப்பூர்வ ஆதாரமும் இல்லை. இயேசுவின் அப்போஸ்தலர்கள் மரித்த பிறகு உருவான சர்ச் அமைப்பு கடவுளுடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டது என்பதற்கு எந்த நம்பகமான அத்தாட்சியும் இல்லை.—ரோமர் 8:9; கலாத்தியர் 5:19-21.
சமய சீர்திருத்தம் என்று அழைக்கப்பட்ட இயக்கத்திற்கு பிறகு தோன்றிய மற்ற சர்ச்சுகளைப் பற்றி என்ன சொல்லலாம்? அவை, ஆரம்பகால கிறிஸ்தவ சபையின் முன்மாதிரியை பின்பற்றினவா? பூர்வ கிறிஸ்தவ சபையின் பரிசுத்தத்தன்மையை அவை திரும்ப நிலைநாட்டினவா? சமய சீர்திருத்தத்திற்கு பிறகு பொதுமக்களில் அநேகருக்கு பைபிள் அவர்களுடைய சொந்த மொழியில் கிடைக்க ஆரம்பித்தது உண்மையே. என்றாலும், இந்த சர்ச்சுகள் தொடர்ந்து தவறான கோட்பாடுகளையே போதித்ததாக சரித்திரம் சாட்சி பகருகிறது.b—மத்தேயு 15:7-9.
ஆனால், பின்வருவதை கவனியுங்கள். உலகத்தின் முடிவு என இயேசு அழைத்த காலப்பகுதியில் தமது ஒரே உண்மையான சபை மீண்டும் உயிர் பெறும் என்று அவர் உறுதியாக முன்னறிவித்தார். (மத்தேயு 13:30, 39) நிறைவேறி வரும் பைபிள் தீர்க்கதரிசனங்கள், இப்போது நாம் அந்தக் காலப்பகுதியில்தான் வாழ்கிறோம் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. (மத்தேயு 24:3-35) இது உண்மை என்பதால் நாம் ஒவ்வொருவரும் நம்மையே பின்வருமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘அந்த ஒரே உண்மையான சர்ச் எது?’ அதை அடையாளம் காண்பது இப்போது அதிக தெளிவாகி வர வேண்டும்.
அந்த சர்ச்சை அல்லது சபையை ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டதாக நீங்கள் உணரலாம். அதை நிச்சயப்படுத்திக்கொள்வது மிக முக்கியம். ஏன்? ஏனென்றால், முதல் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே இன்றும் உண்மையான சர்ச் ஒன்று மட்டுமே இருக்க முடியும். உங்களுடைய சர்ச், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபை வைத்த முன்மாதிரியை அச்சுப்பிசகாமல் பின்பற்றுகிறதா என்பதையும் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை உண்மையோடு கடைப்பிடிக்கிறதா என்பதையும் நிதானமாக ஆராய்ந்திருக்கிறீர்களா? ஏன் அதை இப்போது ஆராய்ந்து பார்க்கக்கூடாது? இவ்வாறு ஆராய்ந்து பார்க்க யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு சந்தோஷத்தோடு உதவுவார்கள்.—அப்போஸ்தலர் 17:11.
[அடிக்குறிப்புகள்]
a “பாவமனுஷன்” பற்றிய கூடுதலான விவரத்திற்கு காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1990, பக்கங்கள் 12-16-ஐக் காண்க.
b கடவுளைத் தேடி என்ற ஆங்கில புத்தகத்தில் பக். 306-28-ல் உள்ள, “சமய சீர்திருத்தம்—தேடுதல் புதிய திசைக்கு திரும்புகிறது” என்ற அதிகாரத்தைக் காண்க; இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 5-ன் படங்கள்]
கோதுமையும் களைகளும் பற்றிய இயேசுவின் உவமை உண்மையான சபையைப் பற்றி நமக்கு எதை கற்பிக்கிறது?
[பக்கம் 7-ன் படங்கள்]
பிரசங்கிப்பதிலும் படிப்பதிலும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் வைத்த முன்மாதிரியை உங்கள் சர்ச் கடைப்பிடிக்கிறதா?