வீணானவற்றைப் பார்க்காதபடி கண்களைத் திருப்பிக்கொள்ளுங்கள்!
“வீணானவற்றைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்பிவிடுங்கள்; உங்கள் வழியில் என்னை நடத்தி, பாதுகாத்திடுங்கள்.”—சங். 119:37, NW.
1. பார்வைத் திறன் எந்தளவு முக்கியம்?
பார்வைத் திறன்—நம்மிடம் இருக்கிற எப்பேர்ப்பட்ட அருமையான சொத்து! நம் சுற்றுப்புறத்தை ஒரு பார்வை பார்த்தாலே போதும், அங்கு என்னென்ன இருக்கின்றன, அவற்றின் நிறங்கள் என்ன, வடிவங்கள் என்ன என்பதெல்லாம் நம் மூளையில் பதிவாகிவிடும். பார்வைத் திறன் இருப்பதால்தான் நம் நண்பர்களைக் கண்டுகொள்கிறோம், ஆபத்துகளைக் கண்டுணருகிறோம். அழகைக் கண்டுரசிக்கிறோம், படைப்பின் அதிசயங்களைக் கண்டுகளிக்கிறோம், கடவுள் இருப்பதற்கான அத்தாட்சிகளையும் அவருடைய மகிமைக்கான அத்தாட்சிகளையும் கண்டுவியக்கிறோம். (சங். 8:3, 4; 19:1, 2; 104:24; ரோ. 1:20) நம்முடைய கண்தான் நம் மனதின் ஜன்னல்; அதன் வழியாகவே பல விஷயங்களை அறிந்துகொள்கிறோம், முக்கியமாக யெகோவாவைப் பற்றி அதிகமதிகமாய் அறிந்துகொள்கிறோம், அதோடு, அவர் மீதுள்ள விசுவாசத்தைப் பலப்படுத்துகிறோம்.—யோசு. 1:8; சங். 1:2, 3.
2. எவற்றைப் பார்க்கிறோம் என்பதில் நாம் ஏன் கவனமாய் இருக்க வேண்டும், சங்கீதக்காரனின் ஊக்கமான ஜெபத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
2 என்றாலும், சிலசமயங்களில் நம்முடைய கண்கள் மூலமாக நாம் ஆபத்தை விலைக்கு வாங்கிவிடலாம். நம்முடைய பார்வைக்கும் மனதிற்கும் இடையே உள்ள தொடர்பு மிகமிக நெருக்கமானதாக இருப்பதால், நாம் பார்க்கிற காரியங்கள் நம் இருதயத்தில் ஆசையைத் துளிர்விடச் செய்யலாம் அல்லது அது வெறியாக மாறிவிடச் செய்யலாம். பிசாசாகிய சாத்தானால் ஆளப்படுகிற ஒழுக்கங்கெட்ட உலகத்தில், காமவெறிபிடித்த உலகத்தில் நாம் வாழ்கிறோம்; ஒழுக்கக்கேடு எனும் சகதியில் நம்மை விழவைக்கிற படங்களும் விளம்பரங்களும் தினம்தினம் நம் கண்முன் வந்து குவிகின்றன; அவற்றை ஒரு கணம் பார்த்தால்கூட நாம் அந்தச் சகதியில் சிக்கிவிடலாம். (1 யோ. 5:19) ஆகவே, “வீணானவற்றைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்பிவிடுங்கள்; உங்கள் வழியில் என்னை நடத்தி, பாதுகாத்திடுங்கள்” என்று சங்கீதக்காரன் கடவுளை நோக்கிக் கெஞ்சியதில் ஆச்சரியமில்லை.—சங். 119:37, NW.
கண்கள் நம்மை வஞ்சித்துவிடலாம்—எப்படி?
3-5. நம்முடைய கண்கள் நம்மை வஞ்சிக்க இடங்கொடுப்பதால் வரும் ஆபத்தை பைபிளிலுள்ள எந்த உதாரணங்கள் காட்டுகின்றன?
3 முதல் பெண் ஏவாள் என்ன செய்தாள் என யோசித்துப் பாருங்கள். “நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின்” கனியைச் சாப்பிட்டால் அவளுடைய “கண்கள் திறக்கப்படும்” என்று சாத்தான் அவளிடம் சொன்னான். கண்கள் “திறக்கப்படும்” என்ற வார்த்தைகள் அவளுடைய ஆர்வத்தை உசுப்பிவிட்டன. ‘அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டபோது’ அவளுடைய ஆர்வப்பசி இன்னும் அதிகமானது. அந்த விருட்சத்தைப் பார்க்கப் பார்க்க அவளுடைய ஆர்வம் ஏக்கமாக மாறியது; அதனால், கடவுளுடைய கட்டளையை மீறினாள். பின்பு, அவளுடைய கணவன் ஆதாமும் மீறினான். விளைவு? மனிதகுலமே பாவமெனும் பாதாளத்தில் வீழ்ந்தது.—ஆதி. 2:17; 3:2-6; ரோ. 5:12; யாக். 1:14, 15.
4 நோவாவின் நாட்களில், சில தேவதூதர்களும்கூட தங்கள் கண்களாலேயே கெட்டுப்போனார்கள். அவர்களைப் பற்றி ஆதியாகமம் 6:2 இவ்வாறு சொல்கிறது: “தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.” கலகக்கார தேவதூதர்கள் அந்தப் பெண்கள்மீது காமப்பார்வை வீசினார்கள்; இதனால், அவர்களோடு உடலுறவு கொள்ள ஆசைப்பட்டார்கள்; இயற்கைக்கு மாறான அந்த ஆசையைத் தீர்த்துக்கொள்ளப் பூமிக்கு வந்து, அவர்களோடு உடலுறவு கொண்டார்கள்; கொடிய ராட்சதர்களுக்குத் தகப்பன்மார் ஆனார்கள். அந்தச் சமயத்தில், மனிதர்களுடைய அக்கிரமம் பெருகியது. விளைவு? நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் தவிர முழு மனிதகுலமும் அழிக்கப்பட்டது.—ஆதி. 6:4-7, 11, 12.
5 பல நூற்றாண்டுகளுக்குப் பின், ஆகான் என்ற இஸ்ரவேலனும் தன்னுடைய கண்களால்தான் புத்திகெட்டுப்போனான்; எரிகோ நகரத்திலிருந்த சில பொருள்களைக் கண்டு, ஆசைப்பட்டு அவற்றைத் திருடினான். ஆனால், யெகோவா என்ன கட்டளையிட்டிருந்தார்? தம்முடைய பொக்கிஷத்திற்குப் போய்ச்சேர வேண்டிய சில பொருள்களைத் தவிர, எல்லாப் பொருள்களையுமே அழித்துவிட வேண்டுமெனக் கட்டளையிட்டிருந்தார். ‘அழிக்கப்பட வேண்டிய பொருள்களிலிருந்து விலகியே இருங்கள், இல்லையென்றால் அவற்றில் எதையாவது எடுத்துக்கொள்ள வேண்டுமென உங்களுக்கு ஆசை வந்துவிடும்’ என்று யோசுவா மூலம் இஸ்ரவேலரை அவர் எச்சரித்திருந்தார். ஆகான் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. விளைவு? இஸ்ரவேலர் ஆயி பட்டணத்தாரிடம் தோற்றுப்போனார்கள், அநேகர் உயிரிழந்தார்கள். உண்மை வெட்டவெளிச்சத்திற்கு வரும்வரை, ஆகான் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவே இல்லை. அந்தப் பொருள்களை “நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்” என்று கடைசியில்தான் சொன்னான். கண்களின் இச்சையினால் அவன் தன்னுடைய உயிரையே இழந்தான்; ‘அவனுக்குச் சொந்தமானவை எல்லாம்’ அழிக்கப்பட்டன. (யோசு. 6:18, 19; 7:1-26, NW) எடுத்துக்கொள்ளக் கூடாதெனச் சொல்லப்பட்டிருந்த பொருள்கள்மீது அவன் தன் இருதயத்தில் ஆசையை வளர்த்துக்கொண்டான்.
சுயக்கட்டுப்பாடு அவசியம்
6, 7. சாத்தானின் எந்த ‘சதித்திட்டம்’ நம்மைச் சபலத்திற்கு ஆளாக்குவதற்காகப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது, விளம்பரதாரர்கள் அதை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்?
6 ஏவாளும் சரி கீழ்ப்படியாத தூதர்களும் சரி ஆகானும் சரி, சபலத்திற்கு ஆளானது கண்களால்தான்; இன்றுள்ளவர்கள் சபலத்திற்கு ஆளாவதும் கண்களால்தான். மனிதகுலத்தை மோசம்போக்குவதற்காக ‘கண்களின் இச்சையை’ பயன்படுத்துவதே சாத்தானுடைய ‘சதித்திட்டங்களில்’ மிகவும் வலிமை வாய்ந்த சதித்திட்டமாகும். (2 கொ. 2:11; 1 யோ. 2:16) நம்முடைய கண்களுக்கு இருக்கிற வலிமையைப் பற்றி இக்கால விளம்பரதாரர்களுக்கு நன்றாகவே தெரியும். “நம்முடைய ஐம்புலன்களிலேயே பார்வைத் திறன்தான் மிகமிக வசீகரிக்கும் தன்மை உடையது” என ஐரோப்பிய வர்த்தகத் துறையின் முன்னணி வல்லுநர் ஒருவர் சொல்கிறார். “பெரும்பாலும் அது மற்ற புலன்களையெல்லாம் அடக்கி ஆளுகிறது, நம்முடைய பகுத்தறிவுக் கண்களையே மறைத்துவிடும் அளவுக்கு வலிமை வாய்ந்தது” என்றும் சொல்கிறார்.
7 அதனால்தான் விளம்பரதாரர்கள் கண்களுக்குக் கவர்ச்சியூட்டும் விதத்தில் புத்திசாலித்தனமாக விளம்பரங்களைத் தயாரிக்கிறார்கள்; தங்களுடைய பொருள்களை வாங்கவோ தங்களுடைய சேவைகளைப் பெறவோ வாடிக்கையாளர்களின் ஆசையைத் தூண்டும் நோக்கத்தோடு அவற்றைத் தயாரிக்கிறார்கள். விளம்பரங்கள் மக்களை எந்தளவு சுண்டியிழுக்கின்றன என்பது பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் ஆய்வு நடத்தினார்; விளம்பரங்கள் “தகவல் தருவதற்காக மட்டுமே தயாரிக்கப்படுவதில்லை, நேயர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களைச் செயல்பட வைப்பதற்காகவும் தயாரிக்கப்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார். பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்துகிற ஓர் உபாயம், பாலியல் உணர்வுகளைத் தூண்டியெழுப்புகிற காட்சிகளைக் காட்டுவதாகும். அப்படியானால், நாம் எவற்றைப் பார்க்கிறோம், எவற்றை நம் மனதிற்குள்ளும் இருதயத்திற்குள்ளும் பதிய வைக்கிறோம் என்பது எவ்வளவு முக்கியம்!
8. நாம் எதைப் பார்க்கிறோம் என்பதைக் குறித்து எச்சரிக்கையாய் இருப்பதன் முக்கியத்துவத்தை பைபிள் எப்படி வலியுறுத்துகிறது?
8 கண்களின் இச்சைக்கும் உடலின் இச்சைக்கும் உண்மைக் கிறிஸ்தவர்கள்கூடச் சிலசமயம் அடிபணிந்துவிடலாம். ஆகவே, நாம் எதைப் பார்க்கிறோம், எதற்கு ஏங்குகிறோம் என்ற விஷயத்தில் சுயக்கட்டுப்பாட்டோடு இருக்கும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்கப்படுத்துகிறது. (1 கொ. 9:25, 27; 1 யோவான் 2:15-17-ஐ வாசியுங்கள்.) பார்ப்பதற்கும் இச்சிப்பதற்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பை நீதிமானாகிய யோபு உணர்ந்திருந்தார். “என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” என அவர் சொன்னார். (யோபு 31:1) யோபு எந்தவொரு பெண்ணையும் கெட்ட எண்ணத்தோடு தொடாமல் இருந்தது மட்டுமல்லாமல், அப்படிப்பட்ட எண்ணத்திற்குக்கூடத் தன் மனதில் இடங்கொடுக்கவில்லை. நம் மனதில் ஒழுக்கக்கேடான எண்ணங்கள் வரக் கூடாதென்ற குறிப்பை வலியுறுத்த இயேசுவும்கூட இவ்வாறு சொன்னார்: “காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.”—மத். 5:28.
தவிர்க்க வேண்டிய வீணான காரியங்கள்
9. (அ) இன்டர்நெட்டைப் பயன்படுத்தும்போது நாம் ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? (ஆ) ஆபாசப் படத்தை ஒரு கணம் பார்ப்பதுகூட எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம்?
9 ஆபாசப் படங்களை, முக்கியமாக இன்டர்நெட்டில் வரும் படங்களை “பார்த்துக்கொண்டே இருக்கும்” பழக்கம் இன்றைய உலகில் சர்வ சாதாரணமாகிவிட்டது. அப்படிப்பட்ட இன்டர்நெட் தளங்களை நாம் தேடிப்போக வேண்டுமென்பதில்லை, அவையே நம்மைத் தேடிவருகின்றன! எவ்வாறு? கவர்ச்சிகரமான ஒரு படத்தைக் கொண்ட விளம்பரம் நம்முடைய கம்ப்யூட்டர் திரையில் திடீரெனத் தோன்றலாம். அல்லது, சாதாரண ஈ-மெயில் ஒன்றைத் திறந்து பார்க்கும்போது அதில் ஓர் ஆபாசப் படம் இருக்கலாம்; அது அந்தளவு சபலமூட்டுவதாக இருப்பதால், அதை மூடிவிட நமக்கு மனமில்லாமல் போகலாம். அந்த ஈ-மெயிலை டிலீட் செய்வதற்குமுன், அதாவது அழிப்பதற்குமுன், அந்தப் படம் தெரியாத்தனமாக நம் கண்களில் பட்டுவிட்டால்கூட, நம் மனதிற்குள் ஆழமாகப் பதிந்துவிடும். ஆபாசப் படத்தை ஒரு கணம் பார்த்தால்கூட, விபரீதமான விளைவுகள் ஏற்படலாம்! குற்ற உணர்வு நம்மை வதைக்கலாம், அசிங்கமான காட்சிகள் நம் மனதைவிட்டு அகல மறுக்கலாம். ஆபாசமான காட்சியை ஒரு கணம் பார்ப்பதே இப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்றால், அதை ‘பார்த்துக்கொண்டே இருப்பது’ இன்னும் எந்தளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்! ஆகவே, பாவ இச்சைகளை நாம் மரத்துப்போகச் செய்ய வேண்டும்.—எபேசியர் 5:3, 4, 12-ஐ வாசியுங்கள்; கொலோ. 3:5, 6.
10. ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்திற்குக் குறிப்பாகப் பிள்ளைகள் ஏன் ஆளாகிவிடுகிறார்கள், அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?
10 ஆர்வக்கோளாறு காரணமாகப் பிள்ளைகள் ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிடலாம். அப்படி ஆகிவிட்டால், பாலியல் பற்றிய அவர்களுடைய கண்ணோட்டத்தின் மீது நிரந்தரமான பாதிப்புகள் ஏற்படலாம். என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? “பாலியல் பற்றிய திரிக்கப்பட்ட கருத்துகள் மனதில் பதிந்துவிடலாம்; அதுமட்டுமல்ல, பெண்களோடு ஆரோக்கியமாக, அன்பாகப் பழக முடியாமல் போய்விடலாம், பெண்களைப் போகப்பொருளாகக் கருத ஆரம்பித்துவிடலாம், ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிடலாம்; இதனால், பள்ளிப் பாடங்களில் கவனம்செலுத்த முடியாமல் போய்விடலாம், நண்பர்களோடும் குடும்ப அங்கத்தினர்களோடும் உள்ள பந்தம் பாதிக்கப்பட்டுவிடலாம்” என ஓர் அறிக்கை சொல்கிறது. இவற்றையெல்லாம்விட, பிற்பாடு திருமண வாழ்வில் படுபயங்கரமான பாதிப்புகளும் ஏற்படலாம்.
11. ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் வரும் ஆபத்தை விளக்க ஓர் உதாரணத்தைக் குறிப்பிடுங்கள்.
11 ஒரு சகோதரர் இவ்வாறு எழுதினார்: “நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆவதற்குமுன் எத்தனையோ பழக்கங்களுக்கு அடிமையாகியிருந்தேன், ஆனால், அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவதைவிட ஆபாசப் படங்களைப் பார்க்கிற பழக்கத்திலிருந்து விடுபடுவதுதான் ரொம்பக் கஷ்டமாக இருந்தது. எதிர்பாராத வேளைகளில், எங்கிருந்தோ வரும் நறுமணம், காதில் விழும் பாட்டு, கண்ணில் படும் காட்சி, அல்லது திடீரென மனதில் தோன்றும் ஓர் எண்ணமும்கூட அந்த ஆபாசக் காட்சிகளை என் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகின்றன. இப்படி, தினந்தோறும் எனக்குள் ஒரு போராட்டமே நடந்துவருகிறது.” மற்றொரு சகோதரர் சிறுவனாக இருந்தபோது, சத்தியத்தில் இல்லாத தன்னுடைய அப்பா வைத்திருந்த ஆபாசப் பத்திரிகைகளை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் எடுத்துப் பார்த்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “அந்தப் படங்கள் என்னுடைய பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்துவிட்டன! 25 வருடங்கள் உருண்டோடி விட்டாலும், அந்தப் படங்கள் என் மனதில் இன்னும் அச்சாகப் பதிந்திருக்கின்றன. என்னதான் போராடினாலும், அவற்றை என்னால் அகற்றவே முடியவில்லை. அவற்றைப் பற்றியே நான் யோசித்துக் கொண்டிருக்காவிட்டாலும், குற்ற உணர்ச்சியால் தவிக்கிறேன்.” அப்படியானால், வீணான காரியங்களைப் பார்த்துவிட்டு வேதனைகளை அனுபவிப்பதைவிட அவற்றைப் பார்க்காமலே இருப்பது ஞானமானது, அல்லவா? இப்படிப்பட்ட பிரச்சினையில் தவிக்கும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்? “எல்லா எண்ணங்களையும் கட்டுப்படுத்தி கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும்படி” செய்ய வேண்டும்.—2 கொ. 10:5.
12, 13. வீணான எந்தக் காரியங்களைக் கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும், ஏன்?
12 பொருளாசை, மாயமந்திரம், வெட்டுக்குத்து, கொலை, வன்முறை ஆகியவற்றை ஆதரிக்கிற பொழுதுபோக்கே நாம் தவிர்க்க வேண்டிய மற்றொரு “தீங்கான காரியம்,” அதாவது வீணான காரியம் ஆகும். (சங்கீதம் 101:3-ஐ வாசியுங்கள்.) தங்களுடைய பிள்ளைகள் எப்படிப்பட்ட பொழுதுபோக்குகளில் ஈடுபட வேண்டுமெனக் கிறிஸ்தவப் பெற்றோர் தீர்மானிக்க வேண்டும்; இந்த விஷயத்தில் யெகோவாவுக்கு அவர்கள் கணக்குக் கொடுக்க வேண்டும். எந்தவொரு கிறிஸ்தவரும் தெரிந்தே ஆவியுலகத் தொடர்பில் ஈடுபட மாட்டார் என்பது உண்மைதான்; என்றாலும், பிள்ளைகள் பார்க்கிற சில சினிமாக்கள், டிவி சீரியல்கள், வீடியோ கேம்ஸ்கள், படிக்கிற காமிக்ஸ் புத்தகங்கள், சிறுவர் புத்தகங்கள் ஆகியவற்றில் மாயாஜாலங்கள் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன என்பதைப் பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.—நீதி. 22:5.
13 நாம் சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, வன்முறையையும் கொடூரக் கொலைகளையும் தத்ரூபமாகக் காட்டுகிற வீடியோ கேம்ஸ்களைப் பார்த்து மகிழக் கூடாது. (சங்கீதம் 11:5-ஐ வாசியுங்கள்.) யெகோவா கண்டனம் செய்கிற எந்தவொரு காரியத்திலும் நம் மனதை ஊன்ற வைக்கக் கூடாது. நம்முடைய எண்ணங்களைக் கறைபடுத்துவதே சாத்தானுடைய குறி என்பதை நினைவில் வையுங்கள். (2 கொ. 11:3) நல்ல பொழுதுபோக்குகளிலும்கூட அளவுக்கு மீறி ஈடுபடுவது, நம்முடைய குடும்ப வழிபாட்டு நேரத்தையும், அன்றாட பைபிள் வாசிப்பு நேரத்தையும், சபைக் கூட்டங்களுக்குத் தயாரிக்கிற நேரத்தையும் ஆக்கிரமித்துவிடலாம்.—பிலி. 1:9, 10.
இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்
14, 15. இயேசுவைச் சாத்தான் மூன்றாவது முறை சோதித்தபோது குறிப்பிடத்தக்க என்ன உத்தியைப் பயன்படுத்தினான், இயேசு அந்தச் சோதனையில் எப்படி வெற்றிபெற்றார்?
14 இந்தப் பொல்லாத உலகத்தில் வீணான காரியங்கள் நம் கண்களில் தென்படவே செய்கின்றன; வருத்தகரமாக, நம்மால் அவற்றைத் தவிர்க்க முடிவதில்லை. வீணான காரியங்களை இயேசுவும்கூடப் பார்க்க நேர்ந்தது. கடவுளுடைய சித்தத்தைச் செய்வதிலிருந்து அவரைத் திசைதிருப்ப பிசாசாகிய சாத்தான் மூன்றாவது முறையாகச் சோதித்தபோது, ‘அவரை மிக உயரமான ஒரு மலைக்கு அழைத்துக்கொண்டுபோய், இந்த உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் மகத்துவங்களையும் அவருக்குக் காண்பித்தான்.’ (மத். 4:8) சாத்தான் ஏன் அவற்றைக் காண்பித்தான்? கண்கள் ஒருவர்மீது செலுத்துகிற பலமான செல்வாக்கைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த அவன் விரும்பியதால்தான் காண்பித்தான். உலகத்திலுள்ள எல்லா ராஜ்யங்களின் மகத்துவங்களையும் பார்த்து இயேசு பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படுவாரென அவன் நினைத்தான். ஆனால், இயேசு என்ன செய்தார்?
15 சாத்தான் காட்டிய வசீகரக் காட்சிகளின் மீது இயேசு கவனத்தை ஊன்ற வைக்கவில்லை. அத்தகைய ஆசைகள் தம்முடைய இருதயத்தில் பதிய அவர் இடங்கொடுக்கவில்லை. சாத்தான் கொடுக்க முன்வந்ததை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. உடனடியாக அதை உதறித்தள்ளினார். “அப்பாலே போ சாத்தானே!” என்று கட்டளையிட்டார். (மத். 4:10) யெகோவாவோடு தமக்குள்ள பந்தத்தின் மீதே கவனத்தை ஊன்ற வைத்தார். தம்முடைய வாழ்க்கையின் நோக்கத்திற்கு இசைய, அதாவது கடவுளுடைய சித்தத்தைச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்திற்கு இசைய, அவனுக்குப் பதிலளித்தார். (எபி. 10:7) இவ்வாறு, சாத்தான் விரித்த தந்திர வலையில் விழாதபடி பார்த்துக்கொண்டார்.
16. சாத்தானுடைய சோதனைகளை இயேசு எதிர்த்து நின்றதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
16 இயேசுவின் உதாரணத்திலிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். முதலாவதாக, சாத்தான் தன்னுடைய தந்திர வலையில் நம் எல்லாரையுமே சிக்க வைக்க முயலுகிறான். (மத். 24:24) இரண்டாவதாக, நாம் பார்க்கிற காரியங்கள் நம்முடைய இருதயத்திலுள்ள ஆசைகளை—நல்லதோ கெட்டதோ—அவற்றைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யலாம். மூன்றாவதாக, நம்மை வழிவிலகச் செய்வதற்கு ‘கண்களின் இச்சையை’ சாத்தான் முடிந்தமட்டும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறான். (1 பே. 5:8) நான்காவதாக, சாத்தானை நம்மால் எதிர்க்க முடியும், அதுவும் உடனடியாகச் செயல்பட்டால் அவனை எதிர்க்க முடியும்.—யாக். 4:7; 1 பே. 2:21.
கண்களை “தெளிவாக” வைத்திருங்கள்
17. வீணான காரியங்களை எப்படி எதிர்த்து நிற்கலாமென முன்கூட்டியே திட்டமிடுவது ஏன் நல்லது?
17 யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது, வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்போம் என்றும் நாம் வாக்குறுதி கொடுக்கிறோம். அவருடைய சித்தத்தைச் செய்வதாக உறுதி அளிக்கும்போது சங்கீதக்காரனைப் போலவே, “உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்” என்று சொல்கிறோம். (சங். 119:101) எனவே, வீணான காரியங்கள் நம் கண்முன் வரும்வரை காத்திராமல், அவை வந்தால் எப்படி எதிர்த்து நிற்கலாமென முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. எந்தெந்தக் காரியங்களை பைபிள் கண்டனம் செய்கிறதென்று நமக்குத் தெளிவாகத் தெரியும். சாத்தானின் சதித்திட்டங்களும் நமக்கு நன்றாகவே தெரியும். கற்களை ரொட்டிகளாக்கும்படி சாத்தான் எந்தச் சூழ்நிலையில் இயேசுவைச் சோதித்தான் என்று யோசித்துப் பாருங்கள். 40 நாட்கள் இரவும் பகலும் விரதமிருந்த பின், அவருக்கு ‘பசியெடுத்தபோது’ சோதித்தான். (மத். 4:1-4) ஆகவே, நாம் எப்போது பலவீனமாக இருப்போம், எப்போது எளிதில் சோதனைக்கு அடிபணிந்துவிடுவோம் என்று அவனால் ஊகிக்க முடியும். இந்த விஷயங்களை இப்போதே கவனமாகச் சிந்தித்துப் பாருங்கள். தள்ளிப்போடாதீர்கள்! யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்தபோது கொடுத்த வாக்குறுதியைத் தினம்தினம் மனதில் வைத்தோமென்றால், வீணானவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்போம்.—நீதி. 1:5; 19:20.
18, 19. (அ) ‘தெளிவான’ கண்ணையும் “பொல்லாத” கண்ணையும் வேறுபடுத்திக் காட்டுங்கள். (ஆ) அதிமுக்கியமானவற்றைச் சிந்தித்துக்கொண்டே இருப்பது ஏன் முக்கியம், இது சம்பந்தமாக பிலிப்பியர் 4:8-ல் என்ன அறிவுரை கொடுக்கப்பட்டிருக்கிறது?
18 நம்மைத் திசைதிருப்பும் கண்கவர் காரியங்கள் தினம்தினம் நம்மைச் சுண்டியிழுக்கின்றன, அதுவும் வெவ்வேறு கோணங்களில் வந்து நம் கண்முன் மொய்க்கின்றன. ஆகவே, நம் கண்களை “தெளிவாக” வைத்திருக்கும்படி இயேசு கூறிய அறிவுரையின் முக்கியத்துவத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. (மத். 6:22, 23) ‘தெளிவான’ கண் ஒரே காரியத்தின் மீது ஒருமுகப்படுத்தப்பட்டதாக இருக்கும், அதாவது கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன் மீது ஒருமுகப்படுத்தப்பட்டதாக இருக்கும். ஆனால், “பொல்லாத” கண் சூழ்ச்சி நிறைந்ததாக, பேராசை பிடித்ததாக, வீணானவற்றிடம் ஈர்க்கப்படுவதாக இருக்கும்.
19 இதை நினைவில் வையுங்கள்: நம் கண்கள் வழியாக நம் மனதிற்குள் செய்திகள் அனுப்பப்படுகின்றன, நம் மனதிற்கு வரும் செய்திகளோ நம் இருதயத்தைத் தொட்டு நம்மைச் செயல்படத் தூண்டுகின்றன. அப்படியானால், நம் மனதில் அதிமுக்கியமானவற்றைச் சிந்தித்துக்கொண்டே இருப்பது எவ்வளவு முக்கியம்! (பிலிப்பியர் 4:8-ஐ வாசியுங்கள்.) “வீணானவற்றைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்பிவிடுங்கள்” என்று சங்கீதக்காரன் ஜெபம் செய்தது போலவே நாமும் தொடர்ந்து ஜெபம் செய்வோமாக! அந்த ஜெபத்திற்கு இசைவாகச் செயல்பட்டோம் என்றால், யெகோவா ‘அவருடைய வழியில் நம்மை நடத்தி, பாதுகாத்திடுவார்.’ இதில் துளியும் சந்தேகமில்லை!—சங். 119:37, NW; எபி. 10:36.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• நம் கண்கள், மனம், இருதயம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றி?
• ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் வரும் ஆபத்துகள் பற்றி?
• நம் கண்களை “தெளிவாக” வைத்திருப்பதன் முக்கியத்துவம் பற்றி?
[பக்கம் 23-ன் படங்கள்]
வீணான எந்தக் காரியங்களைக் கிறிஸ்தவர்கள் பார்க்காமல் இருக்க வேண்டும்?