இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
உவமைகளைக் கொண்டு கற்பித்தல்
இயேசு பரிசேயர்களை கடிந்துகொள்ளும் போது அவர் கப்பர்நகூமிலிருக்கிறார். பின்னர், அன்றையதினமே அவர் வீட்டிலிருந்து புறப்பட்டு அருகாமையிலிருந்த கலிலேயா கடலோரத்துக்கு நடந்து போகிறார். அங்கே திரளான ஜனங்கள் கூடி வருகிறார்கள். அவர் படவில் ஏறி சற்றே தள்ளிப் போகிறார். கரையிலிருந்த ஜனங்களுக்குப் பரலோக ராஜ்யத்தைக் குறித்துக் கற்பிக்கத் தொடங்குகிறார். வரிசையாக, ஒவ்வொன்றும் ஜனங்களுக்குப் பழக்கமாயிருந்த பின்னணி அமைப்பைக் கொண்ட பல உதாரணங்கள் அல்லது உவமைகளைக் கொண்டு அவ்விதமாகச் செய்கிறார்.
முதலாவதாக, இயேசு விதைக்கிற ஒருவனைப் பற்றிச் சொல்லுகிறார். சில விதை வழியருகே விழுகிறது, பறவைகள் வந்து அவைகளை பட்சித்துப் போடுகின்றன. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுகிறது, வேர்களுக்கு ஆழம் இல்லாததால் புதிய தாவரங்கள் வெயிலில் தீய்ந்து போய்விடுகின்றன. இன்னும் சில முள்ளுள்ள இடங்களில் விழுகின்றன. அவை வளரும் போது முள் அதை நெருக்கிப் போடுகிறது. கடைசியாக சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும் சிலது முப்பதாகவும் பலன் தருகின்றன.
மற்றொரு உவமையில், இயேசு பரலோக ராஜ்யம் தன் நிலத்தில் விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது என்று சொல்லுகிறார். நாட்கள் சென்ற போது, அவன் இரவில் தூங்கி பகலில் விழித்துக் கொள்ள விதை வளருகிறது. அந்த மனுஷனுக்கு அது தெரியவில்லை. அது தானாகவே வளர்ந்து, தானியத்தைக் கொடுக்கிறது. கதிர் முழு வளர்ச்சியடைகையில் அந்த மனுஷன் அதை அறுக்கிறான்.
இயேசு மூன்றாவது உவமை ஒன்றைச் சொல்கிறார். இதில் ஒரு மனுஷன் நிலத்தில் நல்ல விதையை விதைக்கிறான். அவன் நித்திரைப் பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போய்விடுகிறான். அந்த மனுஷனுடைய வேலைக்காரர்கள் அவைகளைப் போய் பிடுங்கிப் போடலாமா என்று கேட்கிறார்கள். ஆனால் அவன் சொல்வதாவது: ‘வேண்டாம், நீங்கள் அப்படிச் செய்தால் சில கோதுமையையும்கூட வேரோடே பிடுங்கிப் போடுவீர்கள். அறுப்பு மட்டும் இரண்டையும் வளரவிடுங்கள். பின்னர் நான் அறுக்கிறவர்களிடத்தில் களைகளைப் பிடுங்கி அவைகளைச் சுட்டெரிக்கிறதற்காகக் கட்டுகளாக கட்டச் சொல்லுவேன்.’
கடலோரத்திலே ஜனக்கூட்டத்தினிடமாக தன்னுடைய பேச்சைத் தொடருகையில், இயேசு இன்னும் இரண்டு உவமைகளைச் சொல்கிறார். “பரலோக ராஜ்யம்” ஒரு மனிதன் விதைக்கும் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது என்பதாக அவர் விளக்குகிறார். அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும் சகல பூண்டுகளிலும் அது பெரிதாக வளருகிறது. பறவைகள் அதன் கிளைகளில் வந்து அடையத்தக்க அது பெரிய ஒரு மரமாக வளருகிறது.
சிலர் இன்று கடுகு விதையிலும் சிறிய விதைகள் உண்டு என்பதாக ஆட்சேபிக்கிறார்கள். ஆனால் இயேசு இங்கே தாவரவியலில் பாடம் நடத்திக் கொண்டில்லை. அவருடைய நாளிலிருந்த கலிலேய மக்களுக்குப் பரிச்சயமாயிருப்பதில் கடுகு விதையே உண்மையில் மிகச் சிறியதாகும். ஆகவே அவர்கள் இயேசு விளக்கிக் கொண்டிருந்த அந்த வியத்தகு வளர்ச்சியின் விஷயத்தைப் போற்றுகிறார்கள்.
கடைசியாக இயேசு “பரலோக ராஜ்யத்தை” ஒரு ஸ்திரீ மூன்று படி மாவிலே அடக்கி வைக்கும் புளித்த மாவுக்கு ஒப்பிடுகிறார். காலப்போக்கில் அது பிசைந்த மா முழுவதிலும் கலந்துவிடுகிறது என்று அவர் சொல்லுகிறார்.
இந்த ஐந்து உவமைகளையும் சொன்ன பிறகு இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு தாம் தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்புகிறார். அப்பொழுது அவருடைய 12 அப்போஸ்தலர்களும் மற்றவர்களும் அங்கு அவரிடத்துக்கு வருகிறார்கள். மத்தேயு 13:1–9, 24–36; மாற்கு 4:1–9, 26–32; லூக்கா 8:1–8.
◆ இயேசு எப்பொழுது, எங்கே ஜனங்களிடம் உவமைகளாலே பேசினார்?
◆ இயேசு என்ன ஐந்து உவமைகளை ஜனங்களுக்குச் சொல்லுகிறார்?
◆ கடுகு விதையே சகல விதைகளிலும் சிறியது என்று இயேசு ஏன் சொன்னார்? (w87 3⁄15)