தேவதூதர்கள்—அவர்கள் உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கிறார்களா?
தேவதூதர்கள் உண்மையில் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் வெறுமென கற்பனையில் உருவானவர்களா? அவர்கள் உண்மையில் இருந்தால், அவர்களால் உங்கள் வாழ்க்கையைப் பாதிக்க முடியுமா?
இப்படிப்பட்ட கேள்விகளுக்குரிய பதில்களைப் பெற ஒரே ஒரு நம்பத்தக்க ஊற்றுமூலம் மாத்திரமே இருக்கிறது. அது மனிதவர்க்கத்துக்குக் கடவுள் கொடுத்திருக்கும் தம்முடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பதிவு—தம்முடைய வார்த்தையாகிய பைபிள். அதைக்குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாவது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது . . . அவைகள் சீர்திருத்தலுக்கு பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16.
இதன் காரணமாகவே தேவதூதர்கள் இருக்கிறார்களா என்பது பற்றியும் அவர்கள் நம்மை பாதிக்கிறார்களா என்பது பற்றியும் பைபிள் நமக்கு நேரடியான பதில்களைக் கொடுக்கும் என்று நாம் நம்பலாம். நிச்சயமாகவே தம்முடைய சிருஷ்டிகளில் தேவதூதர்களும் இருந்தனரா என்பது பற்றி சர்வலோகத்தின் சிருஷ்டிகர் நமக்குச் சொல்ல முடியும்.
தேவதூதர்கள் மெய்யானவர்களா?
பைபிள் தெளிவாகச் சொல்வதாவது: “தம்முடைய தூதர்களை அவர் (கடவுள்) ஆவிகளாகச் செய்கிறார்.” (எபிரெயர் 1:7) ஆகவே சிருஷ்டிகர் பரலோகத்தில் ஆவி சிருஷ்டிகளைக் கொண்டிருக்கிறார். இவர்கள் நம்மால் காணமுடியாதவர்களாகவும் வல்லமையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.—சங்கீதம் 104:4; 2 பேதுரு 2:11.
தேவதூதர்கள் வெறுமென பொதுமுறையான உருவரையற்றவர்களாக இருக்கும்படியாகக் கடவுள் நோக்கங்கொண்டிருந்தாரா? இது அப்படியிருக்குமானால், தேவதூதர்களை உணர்ச்சிகளுள்ளவர்களாக பைபிள் ஏன் வருணிக்கிறது? உதாரணமாக, பூமிக்கு அஸ்திபாரம் போடப்பட்டபோது, தேவதூதர்கள் “ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் (தேவதூதர்கள்) எல்லாரும் கெம்பீரித்தார்கள்,” என்று அது நமக்குச் சொல்கிறது.—யோபு 38:4–7.
கடவுளுடைய புத்திக்கூர்மையுள்ள பூமிக்குரிய சிருஷ்டிப்புகளுக்கிருப்பது போலவே, புத்திக்கூர்மையுள்ள ஆவி சிருஷ்டிகளாகிய தேவதூதர்களுக்குச் சொந்தமான ஆள்தன்மைகளும் இருப்பது தெரிகிறது. பைபிள் இரண்டு தேவதூதர்களின் பெயர்களை (மிகாவேல், காபிரியேல்) மட்டுமே குறிப்பிட்ட போதிலும், தேவதூதர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன என்ற உண்மை அவர்களுடைய தனித்தன்மையைக் கூட்டுவதாக இருக்கிறது. (லூக்கா 1:11, 19, 26; யூதா 9) தேவதூதர்களின் வணக்கத்தை பைபிள் பலமாகக் கண்டனம் செய்கிறது. இது அவர்களிடம் வேண்டிக் கொள்வதையும் உட்படுத்துகிறது. தேவதூதர்களிடம் வேண்டிக்கொள்வதற்குப் பதிலாக, அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு அறிவுரைக் கூறுவதாவது: “எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்”.—பிலிப்பியர் 4:6; வெளிப்படுத்துதல் 19:10; 22:8, 9.
ஆனால் தேவதூதர்கள் சிந்திக்கும் திறனற்ற இயந்திர மனிதர்களைப் போல சரியானதற்கும் தவறானதற்குமிடையே சொந்தமாகத் தெரிந்து கொள்ளும் உரிமையற்றவர்களாக இருக்கும்படியாக உருவாக்கப்பட்டார்களா? இல்லை. மனிதர்களைப் போலவே தேவதூதர்களும் தெரிவு செய்து கொள்ளும் சுயாதீனமுள்ளவர்களாக இருக்கின்றனர். உதாரணமாக, நோவாவின் நாளில் சில தூதர்கள் கடவுளுடைய சட்டங்களை மீறின போது, கடவுள் அவர்களைத் தள்ளிவிட்டார். அவர்கள் கடவுளுடைய பரலோக அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுடைய கீழ்ப்படியாத நடத்தையே தேவதூதர்களின் தனித்தன்மையைத் தெளிவாக காண்பித்தது.—ஆதியாகமம் 6:1, 2; 2 பேதுரு 2:4; மத்தேயு 25:41.
இதன் காரணமாகவே தேவதூதர்களின் ஆரம்பம், வாழ்க்கை மற்றும் பண்புகளைப் பற்றி பயனுள்ள தகவலை பைபிள் நமக்கு அளிக்கிறது. அவர்களைப் பற்றி கடவுளுடைய வார்த்தை சொல்வதற்கு அப்பால் செல்வது, பைபிள் பதிலளிக்காத கேள்விகளைக் குறித்து அனாவசியமாக சிந்தித்துக் கொண்டிருக்கும்படியாக ஒருவரை செய்யக்கூடும். இது தேவதூதர்களுக்கு தகுதியற்ற கவனத்தைக் கொடுக்க அல்லது அவர்களை வணங்கவுங்கூட வழிநடத்திவிடக் கூடும். (கொலோசெயர் 2:18) “அதிமுக்கியமான காரியங்களைக் குறித்து நிச்சயித்துக் கொள்”ளும்படியாகவும் ‘ஏற்கெனவே நற்செய்தியாக அறிவிக்கப்பட்டதற்கும் அப்பால்’ செல்லாதிருக்கும்படியாகவும் பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது.—பிலிப்பியர் 1:10; கலாத்தியர் 1:8.
கடவுளுடைய நோக்கத்தில் தேவதூதர்கள்
தேவதூதர்களின் தோற்றத்தையும் அவர்களின் தன்மைகளையும் அநேகர் ஒப்புக்கொண்டபோதிலும், அவர்கள் இருப்பதற்கான காரணத்தையும், இன்று அவர்கள் நம்முடைய வாழ்க்கையை எவ்விதமாகப் பாதிக்கிறார்கள் என்பதையும் உண்மையில் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
பைபிளில், தேவதூதர்களுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு வார்த்தைகள் மல்லாக் (malʼakh’, எபிரெயு) மற்றும் அகிலோஸ் (ag’gelos, கிரேக்கு) ஆகும். இவை இரண்டுமே தூதறிவிப்பவர் என்று பொருள்படுகின்றன. இவை தேவதூதர்களின் கடமைகளில் ஒன்றைப் பற்றி நமக்குச் சொல்கின்றன. தேவதூதர்கள் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே தூது உரைப்பவர்களாக அல்லது செய்தி கொண்டு செல்பவர்களாக செயலாற்றுகின்றனர்.
உதாரணமாக, ஆபிரகாமுக்கு அவனுடைய குமாரனாகிய ஈசாக்கைப் பற்றியும் அவன் மூலமாக வரக்கூடிய ஓர் ஆசீர்வாதத்தைப் பற்றியும் ஒரு செய்தியை அறிவிக்க ஒரு தேவதூதன் அனுப்பப்பட்டான். நாம் பெற்றுக்கொள்ளப் போகிற ஓர் ஆசீர்வாதமாகவுங்கூட இது இருக்கிறது. (ஆதியாகமம் 22:11–17) மோசேயுடன் பேசுவதற்கு ஒரு தேவதூதன் அனுப்பப்பட்டான். (அப்போஸ்தலர் 7:37, 38) கடவுள் எலியாவினிடம் ஒரு தேவதூதனை ஒரு செய்தியோடு அனுப்பி வைத்தார். (2 இராஜாக்கள் 1:3) மேலுமாக இயேசுவின் வளர்ப்புத் தகப்பனாகிய யோசேப்புக்கு, குழந்தையைப் பற்றிய விசேஷமான அறிவுரைகளோடு ஒரு தேவதூதன் தோன்றினான்.—மத்தேயு 2:13.
கடவுளுடைய ஜனங்களை பாதுகாப்பதற்காகவுங்கூட தேவதூதர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்: “யெகோவாவுடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.” (சங்கீதம் 34:7) உதாரணமாக, அப்போஸ்தலனாகிய பேதுருவை ஒரு தூதன் சிறைச்சாலையிலிருந்து விடுவித்தான். (அப்போஸ்தலர் 12:6–11) சோதோம் கொமோராவின் அழிவின்போது லோத்தையும் அவனுடைய குமாரத்திகளையும் அவ்விடத்திலிருந்து அவர்களை வெளியே அழைத்துச் செல்வதன் மூலம் இரண்டு தேவதூதர்கள் அவர்களுக்கு உதவிச் செய்தார்கள். ஆனால் லோத்தின் மனைவியோ, தேவதூதர்கள் சொன்னபடி முழுமையாகச் செயல்படாததால் அந்த நகரங்களோடுகூட அவளும் அழிந்துப் போனாள்.—ஆதியாகமம் 19:1–26.
தேவதூதர்களின் உதவியைப்பற்றி அநேக இடங்களில் பைபிள் குறிப்புகளைக் கொடுத்து எபிரெயர் 1:7 மற்றும் 14 சொல்வதை உறுதி செய்கின்றது: “தேவதூதரைக் குறித்தோ: ‘தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும் தம்முடைய ஊழியக்காரரை, அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார்’ என்று சொல்லியிருக்கிறது. இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களினிமித்தாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?”
இயேசுவை ஒரு தேவதூதன் வெகுவாகத் தேற்றினான். தம்முடைய மரணத்துக்கு முந்தின இரவில் தமக்கு முன்னாலிருந்ததை—தாம் காட்டிக் கொடுக்கப்பட்டு, அடிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படப் போவதை இயேசு அறிந்திருந்தார். உத்தமத்தின் இந்தச் சோதனையைச் சகிப்பதற்கு அவருக்கு பெலன் தேவைப்பட்டது. அந்த ஒரு இக்கட்டான நேரத்தில் அவரை ‘பலப்படுத்துவதற்காக’ ஒரு தேவதூதன் தோன்றினான். தேவதூதனின் ஆறுதல் இயேசுவுக்கு எத்தனை ஆசீர்வாதமாக இருந்திருக்க வேண்டும்! இதன் விளைவாக, அவருடைய “வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழும்” அளவுக்கு மிகவும் வியாகுலப்பட்ட போதிலும், அவரால் மரணபரியந்தம் உண்மையுடன் நிலைத்திருக்க முடிந்தது.—லூக்கா 22:43, 44.
கடவுள் தம்முடைய ஜனங்களின் சத்துருக்களை அழிக்கவுங்கூட தேவதூதர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அசீரிய உலக வல்லரசு கடவுளுடைய பூர்வ வணக்கத்தாரை அச்சுறுத்திய போது, பின்வரும் சம்பவம் நடந்தேறியது: “அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: யெகோவாவுடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும் போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.” (2 இராஜாக்கள் 19:35) தேவதூதர்களின் மலைப்பூட்டும் வல்லமையை இங்கே நீங்கள் காணமுடியும்—கடவுளையும் அவருடைய ஜனங்களையும் எதிர்த்த 1,85,000 பேரைக் கொல்ல ஒரே ஒரு தூதன் மாத்திரமே தேவைப்பட்டான்.
கடவுளை மதியாத ஏரோதுங்கூட ஒரு தேவதூதனின் வல்லமையை நேருக்கு நேர் பார்த்தான். ஏரோது தான் கடவுளைப் போல இருப்பதாகச் சிந்திக்க ஆரம்பித்த போது, “அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே யெகோவாவுடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழு புழுத்து இறந்தான்.”—அப்போஸ்தலர் 12:21–23.
சீக்கிரத்தில் கடவுள் இந்த முழு பொல்லாத காரிய ஒழுங்கு முறையையும் முடிவுக்குக் கொண்டு வருகையில், மறுபடியுமாக தேவதூதர்கள் அழிப்பதற்காக உபயோகிக்கப்படுவார்கள் என்று நாம் சொல்லப்படுகிறோம்: “மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்.”—மத்தேயு 13:41, 42.
இதன் காரணமாகவே தேவதூதர்கள் அநேக ஆட்களின் கற்பனையிலிருந்து வெகுவாக வித்தியாசமாயிருக்கிறார்கள். ஜெர்மன் மத ஆசிரியர் டாக்டர் மான்ஃப்ரெட் பர்த்தல் சொன்னதாவது: “பழைய ஏற்பாட்டின் ஆசிரியர்கள் பார்த்தது போல, கர்த்தருடைய தூதர்களை நாம் கற்பனை செய்து பார்க்க விரும்பினால், முதலாவதாக நம்முடைய வாழ்த்து அட்டைகளை அலங்கரிக்கும் . . . கன்னத்தில் குழிவுள்ள கேரூபீன்களை நாம் மறந்துவிட வேண்டும்.”—பைபிள் உண்மையில் சொல்வது என்ன (What the Bible Really Says).
தேவதூதர்கள் உங்களை எவ்விதமாக பாதிக்கிறார்கள்?
என்றபோதிலும் தேவதூதர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி இன்னும் பதிலளிக்கப்படவில்லை. இப்பொழுது அவர்கள் நம்மை பாதிக்கிறார்களா? ஆம், நிச்சயமாகவே!
“காரிய ஒழுங்கின் முடிவு” பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தில் இயேசு பின்வருமாறு முன்னறிவித்ததை நினைவுபடுத்திப் பாருங்கள்: “மனுஷகுமாரன் (ராஜ்ய வல்லமையில்) தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும் போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். அவர்களை அவர் பிரி”ப்பார்.—மத்தேயு 24:3; 25:31, 32.
ஜனங்கள் பிரிக்கப்படும் இந்த வேலை எவ்விதமாக செய்து முடிக்கப்படும்? இயேசு பின்வருமாறு முன்னறிவித்தார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) ஆம், இந்த உலகளாவிய பிரசங்க வேலையைச் செய்ய கடவுள் பூமியிலுள்ள தம்முடைய ஜனங்களை பயன்படுத்தி வருகிறார்.
கடவுளுடைய ராஜ்யமே மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கு ஒரே பரிகாரத்தைக் கொண்டுவரப்போகிற அரசாங்கமாக இருக்கிறது. இன்று அதைப் பற்றியச் செய்தி, தேவதூதர்களின் துணைக் கொண்டு உலகம் முழுவதிலும் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகளால் அறிவிக்கப்பட்டு வருகிறது. “இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரிப்பார்கள்.”—மத்தேயு 13:49.
தேவதூதர்களால் வழிநடத்தப்படும் இந்த வேலைக்கு மக்கள் பல்வேறு வித்தியாசமான வழிகளில் பிரதிபலிக்கிறார்கள். சிலர் தங்களால் செவி கொடுத்து கேட்க முடியாத அளவு அதிக வேலையாக இருப்பதாகவோ அல்லது கேட்க மறுக்கிறவர்களாகவோ இருக்கிறார்கள். மற்றவர்கள் தயங்குகிறவர்களாக அல்லது முடிவுக்கு வர இயலாதவர்களாக இருக்கிறார்கள். என்றபோதிலும், நேர்மையான இருதயமுள்ள அநேகர் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி அக்கறையுள்ளவர்களாகச் சாதகமாகப் பிரதிபலித்திருக்கிறார்கள். எவ்விதமாக?
208 தேசங்களில் யெகோவாவின் சாட்சிகள் “தங்கள் ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்களாகவும்” ‘நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களாகவும்’ இருக்கும் இலட்சக்கணக்கான ஆட்களோடு பைபிள் படிப்புகளை நடத்திக் கொண்டு வருகிறார்கள். (மத்தேயு 5:3, 6) இரட்சிப்பின் செய்தியோடு இப்படிப்பட்ட நேர்மையான இருதயமுள்ள ஆட்களைச் சந்திக்க கடவுளுடைய ஊழியர்களைத் தேவதூதர்கள் வழிநடத்துவதை அநேக அனுபவங்கள் காண்பிக்கின்றன. வெளிப்படுத்துதல் 14:6, “பூமியில் வாசம் பண்ணுகிற ஜனக்கூட்டத்தாருக்கு அறிவிக்கத்தக்க நித்திய சுவிசேஷத்தை உடையவனாய்” ஒரு “தூதன் வானத்தின் மத்தியிலே பறப்பதை” அடையாள அர்த்தத்துடன் விவரிக்கிறது. அது நிச்சயமாகவே இப்பொழுதே நடந்தேறி வருகிறது! இது உங்கள் எதிர்காலத்தை எவ்விதமாக பாதிக்கும்?
உங்கள் எதிர்காலத்தில் தேவதூதர்கள்
பைபிள் நம்முடைய காலங்களை, இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையின் “கடைசி நாட்கள்” என்பதாகத் தெளிவாக அடையாளங் காட்டுகிறது. (2 தீமோத்தேயு 3:1–5) தேவதூதர்கள் இப்பொழுது “பூமியின் நான்கு திசைகளிலும் நின்று நான்கு காற்றுகளையும் பிடித்திருப்பதாகவும்” கூட பைபிள் நமக்கு தெரிவிக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:1) இதன் அடையாள அர்த்தம் என்ன?
பூமியின் “நான்கு திசைகளிலும்” இருப்பதால், தேவதூதர்கள் எல்லா திசைகளிலுமிருந்தும் அழிவுண்டாக்கும் “காற்றுகளை” அவிழ்த்துவிடக்கூடிய நிலையிலிருக்கின்றனர். பூமியின் எந்த ஒரு பகுதியும் விட்டுவைக்கப்பட மாட்டாது. இது இந்தப் பொல்லாத ஒழுங்குக்கும் அதன் எல்லா ஆதரவாளர்களுக்கும் “சேதத்தை” அல்லது அழிவை அர்த்தப்படுத்தும். சமிக்கை கொடுக்கப்படுகையில் தேவதூதர்கள் செயலில் இறங்க தயாராக இருப்பதாக வருணிக்கப்படுகிறார்கள்!—வெளிப்படுத்துதல் 7:3; 19:11–21.
ஆனால் இப்பொழுது பூமி முழுவதிலும் தேவதூதர்களின் துணையோடு பிரசங்கிக்கப்பட்டு வரும் செய்திக்கு செவிகொடுக்காதவர்கள் மீது மாத்திரமே அழிவுண்டாக்கும் “சேதம்” கொண்டுவரப்படும். கடவுளைத் தேடி, ராஜ்ய செய்திக்கு செவிகொடுக்கிறவர்களின் மீது அது சேதத்தை உண்டுபண்ணாது. கடவுளுடைய வார்த்தை சொல்கிறபடியே அவர்கள் பாதுகாக்கப்படுவர்: “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே . . . யெகோவாவைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.”—செப்பனியா 2:3
இப்படிப்பட்ட சாந்தகுணமுள்ளவர்களின் பங்கு என்னவாக இருக்கும்? சங்கீதம் 37:11 சொல்வதாவது: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” எவ்வளவு காலத்துக்கு? “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொண்டு என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) அப்படியென்றால் இயேசு குறிப்பிட்ட விதமாகவே, பரதீஸாக மாற்றப்படப் போகிற ஒரு பூமியிலே நித்தியமாக வாழ்வது கூடிய காரியமாக இருக்கும்.—லூக்கா 23:43.
அப்படியென்றால், ‘என்னுடைய எதிர்காலம் என்னவாக இருக்கும்?’ என்பதே நீங்கள் கேட்க வேண்டிய கேள்வியாகும். இதற்கு விடை தேவதூதர்களின் வழிநடத்துதலுக்கு நீங்கள் எவ்விதமாகப் பிரதிபலிக்கிறீர்கள் என்பதை சார்ந்ததாக இருக்கிறது. அவர்கள் துணைக் கொண்டு அறிவிக்கப்படும் செய்தியை நீங்கள் செவிகொடுத்துக் கேட்டு சாதகமாகப் பிரதிபலிப்பீர்களா? நீங்கள் அப்படிச் செய்வீர்களானால் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மக்களின் மத்தியில் இருப்பீர்கள். கடவுளுடைய நிச்சயமான வாக்குறுதியானது: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17. (w87 12⁄15)
[பக்கம் 7-ன் படம்]
தேவதூதர்கள் இப்பொழுது ‘நான்கு காற்றுகளையும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.’ ஏன்?