இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
அதிகமான போதனைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அந்த சீஷர்கள் அப்பொழுதுதானே விதைக்கிறவனைப் பற்றிய உவமைக்கு விளக்கம் பெற்றார்கள். ஆனால் இப்பொழுது இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். “நிலத்தின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
கடற்கரையில் கூடியிருந்த அந்த மற்றவர்களிலிருந்து சீஷர்களின் மனப்பான்மை எவ்வளவு வித்தியாசமாயிருக்கிறது! அந்த உவமைகளின் பின்னாலிருந்த பொருளைக் கற்றுக்கொள்வதற்கான உள்ளான ஆர்வம் அந்த ஆட்களுக்கு இல்லை, அவற்றில் கொடுக்கப்பட்ட மேலான குறிப்புகளில் திருப்தியாயிருந்துவிடுகிறார்கள். அந்தக் கடற்பகுதியில் இயேசுவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆட்களிலிருந்து, காரியங்களை அறிய ஆவலாயிருந்த தம்முடைய சீஷர்களை வித்தியாசப்படுத்தி பேசுகிறவராய் இயேசு பின்வருமாறு சொல்லுகிறார்:
“எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும், கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.” சீஷர்கள் இயேசுவானவருக்கு உள்ளான அக்கறையையும் கவனத்தையும் செலுத்தும் விதத்தில் அளந்து கொடுப்பதால் அதிகமான போதனைகளைப் பெறும் விதத்தில் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். எனவே தம்முடைய சீஷர்களின் கேள்விக்கு விடையளிப்பவராக இயேசு பின்வருமாறு விளக்குகிறார்:
“நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்; நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர். களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர். அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு. அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவ தூதர்கள்.”
தம்முடைய உவமையின் ஒவ்வொரு அம்சத்தையும் அடையாளங் காண்பித்த பின்பு, இயேசு விளைவை விளக்குகிறார். இந்தக் காரியங்களின் ஒழுங்குமுறையின் முடிவில் “அறுக்கிறவர்கள்” அல்லது தேவதூதர்கள் களைபோன்ற போலி கிறிஸ்தவர்களை “ராஜ்யத்தின் புத்திர”ரிலிருந்து பிரிப்பார்கள் என்கிறார். “பொல்லாங்கனுடைய புத்திரர்” அழிவுக்காகக் குறிக்கப்படுவார்கள், ஆனால் ராஜ்யத்தின் புத்திரர், “நீதிமான்கள்,” பிதாவின் ராஜ்யத்தில் பிரகாசிப்பார்கள்.
அடுத்து, காரியங்களை அறிந்துகொள்ளும் ஆர்வமுடைய சீஷர்களுக்கு கூடுதலாக மூன்று உவமைகளைச் சொல்லி ஆசீர்வதிக்கிறார். முதலாவது அவர் சொல்கிறார்: “பரலோக ராஜ்யம் நிலத்திலே புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.”
“மேலும்,” என்று தொடருகிறார், “பரலோக ராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்கிறான்.”
இயேசு தாமே மறைந்திருக்கும் ஒரு பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்கிற மனுஷனுக்கும் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டுபிடிக்கிற வியாபாரிக்கும் ஒப்பாயிருக்கிறார். சொல்லப்போனால், அவர் எல்லாவற்றையும் விற்றார், தாழ்மையுள்ள ஒரு மனிதனாவதற்காகப் பரலோகத்தில் தமக்கு இருந்த கனத்துக்குரிய ஸ்தானத்தை விட்டு வந்தார். அத்துடன், பூமியில் ஒரு மனிதனாக அவர் நிந்தையையும் கடுமையான துன்புறுத்தலையும் அனுபவித்து, கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக ஆவதற்குப் பாத்திரமுள்ளவராகத் தன்னை நிரூபிக்கிறார்.
இந்தச் சவால் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு முன்பும் வைக்கப்படுகிறது, அதாவது கிறிஸ்துவோடுகூட ஓர் உடன் அரசராக அல்லது பூமியில் ராஜ்ய பிரஜையாக இருக்கும் மகத்தான பரிசைப் பெறுவதற்காக எல்லாவற்றையும் விற்கவேண்டிய சவால் முன்வைக்கப்படுகிறது. கடவுளுடைய ராஜ்யத்தில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதை நாம் வாழ்க்கையில் வேறு எந்த ஒரு காரியத்தைக் காட்டிலும் அதிக மதிப்புள்ளதாக, விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷமாக அல்லது விலையுயர்ந்த ஒரு முத்தாகக் கருதுவோமா?
கடைசியாக இயேசு “பரலோக ராஜ்யத்தை” எல்லா வகையான மீன்களையும் சேகரித்திடும் ஒரு மீன்வலைக்கு ஒப்பிடுகிறார். மீன்கள் பிரிக்கப்படும்போது, ஆகாதவை தூக்கியெறியப்படுகிறது. ஆனால் நல்ல மீன்களோ வைக்கப்படுகிறது. காரியங்களின் ஒழுங்குமுறையின் முடிவில் அப்படியே இருக்கும் என்று இயேசு சொல்லுகிறார்; தேவதூதர்கள் பொல்லாவர்களை நீதிமான்களிலிருந்து பிரித்து பொல்லாதவர்களை அழிவுக்காக வைக்கிறார்.
இந்த மீன்பிடிக்கும் வேலையை இயேசுதாமே ஆரம்பித்து வைக்கிறார். தம்முடைய முதல் சீஷர்களை “மனுஷரைப் பிடிக்கிறவர்கள்” என்று அழைக்கிறார். தேவதூதரின் மேற்பார்வையில் அந்த மீன்பிடிக்கும் வேலை இந்த நூற்றாண்டுகள் வரை தொடர்ந்திருக்கிறது. கிறிஸ்தவர்களென உரிமை பாராட்டும் பூமியிலுள்ள அமைப்புகளுக்குப் படமாயிருக்கும் அந்த “வலை” கடைசியில் இழுத்து கரைசேர்க்கப்படும் சமயம் வருகிறது.
ஆகாத மீன்கள் அழிக்கப்படுகிறது என்றாலும், கூடையில் சேர்த்து வைக்கப்படுகிற ‘நல்ல மீன்களாக’ நாம் எண்ணப்படக்கூடும் என்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கலாம். இயேசுவின் சீஷர்களைப் போல் அதிகமான அறிவுக்கும், தெளிந்துணர்வுக்குமான அந்த உள்ளான ஆர்வத்தை வெளிப்படுத்துவதன் மூலம் நாம் அதிகமான போதனைகளால் ஆசீர்வதிக்கப்படுவது மட்டுமல்லாமல், கடவுளுடைய ஆசீர்வாதமாகிய நித்திய ஜீவனையும் பெறுவோம். மத்தேயு 13:36-52; 4:19; மாற்கு 4:24, 25.
◆ கடற்கரையிலிருந்த அந்தக் கூட்டத்திலிருந்து இயேசுவின் சீஷர்கள் எந்த விதத்தில் வித்தியாசமாயிருக்கிறார்கள்?
◆ பின்வரும் காரியங்கள் யாரை அல்லது எதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது: விதைக்கிறவன், நிலம், நல்ல விதை, சத்துரு, அறுப்பு மற்றும் அறுக்கிறவர்கள்?
◆ இயேசு கூடுதலாக என்ன மூன்று உவமைகளைச் சொன்னார்? அவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
(w87 4/15)