வலையும் மீனும் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன?
“பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.”—மத்தேயு 13:11.
1, 2. இயேசுவின் உவமைகளில் நாம் ஏன் ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கக்கூடும்?
ஒரு ரகசியத்தை அறிந்துகொள்வதிலோ அல்லது ஒரு புதிரை விடுவிப்பதிலோ நீங்கள் சந்தோஷம் அனுபவிக்கிறீர்களா? அவ்வாறு செய்வது கடவுளுடைய நோக்கத்தில் உங்களுடைய பங்கை அதிக தெளிவாகக் காண்பதற்கு உங்களுக்கு உதவக்கூடுமென்றால் அப்போது என்ன? இயேசு கொடுத்த ஓர் உதாரணத்தின் மூலம் நீங்கள் அப்படிப்பட்ட சிலாக்கியமான உட்பார்வையை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்ளக்கூடும். அது அதை கேட்டுக்கொண்டிருந்த அநேகரை குழப்பமடையச் செய்தது. மேலும், அச்சமயம் முதற்கொண்டு எண்ணற்ற மற்ற ஆட்களையும் குழப்பமடையச் செய்திருக்கிறது, ஆனால் நீங்கள் அதை புரிந்துகொள்ளக்கூடும்.
2 மத்தேயு 13-ம் அதிகாரத்தில் உவமைகளை உபயோகிப்பதைக் குறித்து இயேசு என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள். “ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர்?” என்று அவருடைய சீஷர்கள் கேட்டார்கள். (மத்தேயு 13:10) ஆம், பெரும்பான்மையர் புரிந்துகொள்ளமுடியாத உவமைகளை இயேசு ஏன் உபயோகித்தார்? 11-13 வரை உள்ள வசனங்களில் அவர் பதிலளித்தார்: “பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. . . . அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.”
3. இயேசுவின் உவமைகளை புரிந்துகொள்ளுதல் நமக்கு எவ்வாறு நன்மைகளைக் கொண்டுவரக்கூடும்?
3 இயேசு பிறகு ஏசாயா 6:9, 10-ஐ பொருத்தினார். ஆவிக்குரிய விதத்தில் செவிடராயும் குருடராயும் இருந்த ஒரு ஜனத்தை அது விவரித்தது. ஆனால் நாமோவென்றால் அவர்களைப் போன்று இருக்க வேண்டிய அவசியமில்லை. அவருடைய உவமைகளைப் புரிந்துகொண்டு அதன் பேரில் செயல்பட்டோமென்றால் நாம் அதிக மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கலாம்—இப்போதும், முடிவில்லா எதிர்காலத்திலும் அப்படி இருக்கலாம். இயேசு இந்த அனலான உறுதியை நமக்கு அளிக்கிறார்: “உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.” (மத்தேயு 13:16) அந்த உறுதிமொழி இயேசுவின் எல்லா உவமைகளையும் உள்ளடக்குவதாய் இருக்கிறது. ஆனால் மத்தேயு 13:47-50-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் வலையைப் பற்றிய சுருக்கமான உவமையின் பேரில் நாம் நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்துவோம்.
ஆழ்ந்த அர்த்தமுள்ள ஓர் உவமை
4. மத்தேயு 13:47-50-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, உவமையின் மூலம் இயேசு எதை எடுத்துரைத்தார்?
4 “அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள். இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.”
5. வலையைப் பற்றிய உவமையின் அர்த்தத்தைக் குறித்ததில் எத்தகைய கேள்விகள் எழும்புகின்றன?
5 ஒரு வலையை வைத்துக்கொண்டு ஆட்கள் மீன்பிடிப்பதை நீங்கள் ஒருவேளை திரைப்படத்திலாவது அல்லது தொலைக்காட்சியிலாவது பார்த்திருப்பீர்கள். ஆகையால் இயேசுவின் உவமையை கற்பனை செய்து பார்ப்பது கடினமானதல்ல. ஆனால் அதன் நுட்ப விவரங்கள், அர்த்தம் ஆகியவற்றைப் பற்றியென்ன? உதாரணமாக, இந்த உவமை “பரலோக ராஜ்யத்தைப்,” பற்றியது என்று இயேசு சொன்னார். என்றபோதிலும் “சகலவிதமான ஆட்களும்,” நல்லவர்களும், தகுதியற்றவர்களும் அல்லது பொல்லாதவர்களும் அந்த ராஜ்யத்தில் இருப்பர் என்று அவர் நிச்சயமாகவே அர்த்தப்படுத்தவில்லை. மேலுமாக யார் அந்த மீன்பிடிக்கும் வேலையை செய்கிறார்கள்? இந்த மீன்பிடிக்கும் வேலையும், பிரிக்கும் வேலையும் இயேசுவின் நாளில் நடந்ததா, அல்லது நம்முடைய நாளுக்கு, “காரிய ஒழுங்கின் முடிவுக்கு,” அது மட்டுப்படுத்தப்பட்டதாய் இருக்குமா? இந்த உவமையில் நீங்கள் உங்களைக் காண்கிறீர்களா? அழுது கொண்டு தங்கள் பற்களை கடித்துக்கொண்டும் இருப்பவர்களோடு சேர்க்கப்படுவதை நீங்கள் எவ்வாறு தவிர்க்கலாம்?
6. (எ) வலையைப் பற்றிய உவமையை புரிந்துகொள்வதில் நாம் ஏன் ஆர்வமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்? (பி) அதை புரிந்துக்கொள்ள அத்தியாவசியமானது என்ன?
6 இந்த உவமை எளிதானதல்ல என்பதை இப்படிப்பட்ட கேள்விகள் காண்பிக்கின்றன. “உங்கள் கண்கள் காண்கிறதினாலும் உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கிமுள்ளவைகள்,” என்பதை மறந்துவிடாதீர்கள். அதனுடைய உட்பொருளைக் குறித்ததில் நம்முடைய காதுகள் கேட்காதவையாயும் நம்முடைய கண்கள் மூடப்பட்டதாயும் இல்லாமலிருக்க அதனுடைய அர்த்தத்தை நாம் ஆராய முடியுமா என்பதை நாம் பார்க்கலாம். உண்மையில், அதனுடைய அர்த்தத்தை விளங்கிக்கொள்வதற்கு அத்தியாவசியமான திறவுகோல் ஏற்கெனவே நம்மிடம் இருக்கிறது. கலிலேய மீனவர்கள் தங்கள் தொழிலை விட்டுவிட்டு, “மனுஷரைப் பிடிக்கிறவர்களா”கும், ஆவிக்குரிய வேலையை எடுத்துக்கொள்ளும்படி இயேசு அழைத்ததை முந்தின கட்டுரை சொன்னது. (மாற்கு 1:17) “இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்,” என்று அவர் அவர்களிடம் சொன்னார்.—லூக்கா 5:10.
7. மீன்களைக் குறித்து பேசிய போது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்?
7 அதற்கு ஒத்தாற்போல், இந்த உவமையில் உள்ள மீன்கள் மானிடர்களைக் குறிக்கிறது. எனவே, 49-வது வசனம் நீதிமான்களிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்தெடுப்பதைக் குறித்து பேசுகையில், கடலில் இருக்கும் நீதியான அல்லது பொல்லாத உயிரினங்களைக் குறித்து அது குறிப்பிடுவதில்லை. ஆனால் நீதியான அல்லது பொல்லாத ஆட்களை அது குறிப்பிடுகிறது. அதே போன்று, அழுதுகொண்டு அல்லது தங்கள் பற்களைக் கடித்துக்கொண்டு இருக்கும் கடல் மிருகங்களைக் குறித்து வசனம் 50 நாம் நினைக்கும்படி செய்விக்கக்கூடாது. இல்லை. மானிடர்களை கூட்டிச் சேர்ப்பது, பின்னர் அவர்களை பிரிப்பது ஆகியவற்றைக் குறித்தே இந்த உவமை சொல்கிறது. அதனுடைய விளைவு காண்பிக்கிறபடி அது அதிக வினைமையானதாக இருக்கிறது.
8. (எ) தகுதியற்ற மீன்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளக்கூடும்? (பி) தகுதியற்ற மீன்களைக் குறித்து சொல்லப்பட்டதைக் கொண்டு, ராஜ்யத்தைக் குறித்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
8 தகுதியற்ற மீன்கள், அதாவது பொல்லாதவர்கள் அக்கினிச் சூளையிலே போடப்படுவார்கள். அங்கே அவர்கள் அழுதுகொண்டும், தங்கள் பற்களை கடித்துக்கொண்டும் இருக்க வேண்டும் என்பதை கவனியுங்கள். ராஜ்யத்துக்கு வெளியே அப்படிப்பட்ட அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று இயேசு மற்றொரு இடத்தில் குறிப்பிட்டார். (மத்தேயு 8:12; 13:41, 42) மத்தேயு 5:22-லும் 18:9-லும் (NW) நித்திய அழிவைக் குறிக்கும் “எரிகிற கெஹன்னா,” என்றும்கூட அவர் குறிப்பிட்டார். இந்த உவமையின் அர்த்தத்தை அறிந்துகொண்டு, அதன்படி செயல்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அது காண்பிக்கிறது அல்லவா? கடவுளுடைய ராஜ்யத்தில் பொல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். எனவே, “பரலோகராஜ்யம் வலைக்கு ஒப்பாயிருக்கிறது,” என்று இயேசு சொன்னபோது, வலையைப் போட்டு பலவிதமான மீன்களைச் சேகரிப்பதற்கு வலையைப் போன்ற ஓர் அம்சம் கடவுளுடைய ராஜ்யத்தின் சம்பந்தமாக இருக்கிறது என்று அவர் அர்த்தப்படுத்தியிருக்க வேண்டும்.
9. வலையைப் பற்றிய உவமையில் தேவதூதர்கள் எவ்வாறு உட்பட்டிருக்கின்றனர்?
9 வலையைக் கடலிலே போட்டு மீன்களை சேகரித்த பிறகு, பிரிக்கும் வேலை இருக்கும். யார் அதில் உட்பட்டிருப்பர் என்று இயேசு சொன்னார்? இப்படிப்பட்ட பிரிக்கும் வேலையைச் செய்யும் மீனவர்கள் தேவதூதர்கள் என்று மத்தேயு 13:49 அடையாளங் காட்டியது. பரலோக ராஜ்யத்துக்கு மனிதர்களில் சிலரை சிறந்தவர்களாகவும் தகுதியுள்ளவர்களாகவும், மற்றவர்களை அந்த அழைப்புக்கு தகுதியற்றவர்களாகவும் அடையாளங் கண்டுபிடிப்பதற்கு உபயோகப்படுத்தப்பட்ட பூமியில் இருந்த ஒரு கருவியின் மீது தேவதூதர்களின் கண்காணிப்பு இருந்ததைக் குறித்து இயேசு நம்மிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
மீன்பிடித்தல்—எப்போது?
10. மீன்பிடிக்கும் வேலை ஒரு கணிசமான காலப்பகுதி வரை நீடித்தது என்பதை என்ன நியாய காரணத்தின் மூலம் நாம் தீர்மானிக்கலாம்?
10 இது எப்போது பொருந்தும் என்பதைக் கண்டுபிடிக்க சூழமைவு நமக்கு உதவிசெய்கிறது. இதற்கு சற்று முன்பு நல்ல விதையை விதைப்பதைக் குறித்த உவமையை இயேசு கொடுத்தார். ஆனால் அந்த நிலத்தில் அவைகளுக்குள் களைகள் விதைக்கப்பட்டன. அது உலகத்தைப் படமாகக் குறிப்பிடுகிறது. “நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்,” என்று மத்தேயு 13:38-ல் அவர் விளக்கினார். காரிய ஒழுங்குமுறையின் முடிவில் அறுவடை வரை இவைகள் அநேக நூற்றாண்டுகளாக ஒன்றாக வளர்ந்து வந்தன. பின்னர் களைகள் பிரிக்கப்பட்டு சுட்டெரிக்கப்பட்டன. வலையைப் பற்றிய உவமையோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கையில், வலைக்குள் இந்த உயிரினங்கள் இழுக்கப்படுவது ஒரு நீண்ட காலப்பகுதிவரை நீடித்திருக்கும் என்று நாம் காண்கிறோம்.—மத்தேயு 13:36-43.
11. சர்வதேச மீன்பிடிக்கும் வேலை எவ்வாறு முதல் நூற்றாண்டில் ஆரம்பித்து நடத்தப்பட்டது?
11 இயேசுவின் உவமையின்படி, பாகுபாடின்றி மீன்கள் சேகரிக்கப்படும். அதாவது, நல்ல மீன்களையும், தகுதியற்ற மீன்களையும் வலை பிடித்துக் கொண்டது. அப்போஸ்தலர்கள் உயிரோடிருந்த போது, மீன்பிடிக்கும் வேலையை வழிநடத்திய தேவதூதர்கள் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களாக ஆன “மீன்களைப்” பிடிப்பதற்கு கடவுளுடைய கிறிஸ்தவ அமைப்பை உபயோகப்படுத்தினர். பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்பு இயேசு மனிதர்களைப் பிடித்தது ஏறக்குறைய 120 சீஷர்கள் வலையில் சிக்கும்படிச் செய்தது. (அப்போஸ்தலர் 1:15) ஆனால் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் சபை ஸ்தாபிக்கப்பட்டவுடனேயே, வலை கருவியை உபயோகித்து மீன்பிடிக்கும் வேலை ஆரம்பமானது, ஆயிரக்கணக்கான நல்ல மீன்கள் பிடிக்கப்பட்டன. பொ.ச. 36-லிருந்து மீன்பிடிக்கும் வேலை சர்வதேச தண்ணீர்களுக்குள் பரவலாக பரவியது. கிறிஸ்தவத்துக்குள் புறஜாதியார் சேர்க்கப்பட்டு கிறிஸ்துவின் அபிஷேகம்பண்ணப்பட்ட சபையின் அங்கத்தினர்களாக ஆனபோது இது நடந்தது.—அப்போஸ்தலர் 10:1, 2, 23-48.
12. அப்போஸ்தலர்களின் மரணத்துக்குப் பின் என்ன உருவானது?
12 அப்போஸ்தலர்கள் காட்சியை விட்டு மறைந்து போன பிறகு வந்த நூற்றாண்டுகளில் தெய்வீக சத்தியத்தை கண்டுபிடித்து அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்த கிறிஸ்தவர்கள் சிலர் இருந்தனர். இப்படிப்பட்டவர்களில் சிலருக்காவது கடவுளுடைய அங்கீகாரம் இருந்தது. அவர் அவர்களைப் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்தார். என்றபோதிலும், அப்போஸ்தலர்களின் மரணம் தடுத்து நிறுத்தும் ஆற்றலை நீக்கியது. இது விசுவாசத் துரோகம் பரவலாக வளருவதற்கு அனுமதித்தது. (2 தெசலோனிக்கேயர் 2:7, 8) கடவுளுடைய சபை என்று தகுதியற்ற விதத்தில் உரிமை பாராட்டிக் கொண்ட அமைப்பு ஒன்று வளர்ந்தது. கிறிஸ்துவோடு ஆட்சி செய்வதற்கு கடவுளுடைய ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்ட பரிசுத்த தேசம் என்று அது பொய்யாக உரிமைபாராட்டிக் கொண்டது.
13. வலை செய்த வேலையில் கிறிஸ்தவமண்டலத்துக்கு ஒரு பங்கு இருந்தது என்று ஏன் சொல்லப்படலாம்?
13 கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொண்ட உண்மையற்றவர்களுக்கு வலையைப் பற்றிய உவமையில் ஏதாவது பங்கு இருந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆம், அவர்களுக்கு பங்கு இருந்தது என்று பதிலளிப்பதற்கு காரணம் இருக்கிறது. அடையாளப்பூர்வமான வலை கிறிஸ்தவமண்டலத்தையும் உட்படுத்தியதாய் இருந்தது. நெடுங்காலமாக கத்தோலிக்க சர்ச் பைபிளை பொது மக்களிடமிருந்து விலக்கி வைத்திருந்தது உண்மைதான். அப்படியிருந்தாலும் கடவுளுடைய வார்த்தையை மொழிபெயர்ப்பது, நகல் எடுப்பது, விநியோகிப்பது ஆகியவற்றில் கிறிஸ்தவமண்டல அங்கத்தினர்கள் பல நூற்றாண்டுகளாக ஒரு முக்கிய பங்கை வகித்தனர். பின்னர் சர்ச்சுகள் பைபிள் சங்கங்களை ஏற்படுத்தின அல்லது அவைகளை ஆதரித்தன. தொலைக்கோடியான தேசங்களின் மொழிகளில் பைபிளை அந்தச் சங்கங்கள் மொழிபெயர்த்தன. அவர்கள் மருத்துவ மிஷனரிகளையும், ஆசிரியர்களையும்கூட அனுப்பினர். உணவு, பொருள் சம்பந்தமான அனுகூலங்களின் காரணமாக கிறிஸ்தவர்களாக ஆகும் ஆட்களை அவர்கள் உண்டுபண்ணினர். இது கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றிராத தகுதியற்ற மீன்களை பெரும் எண்ணிக்கையில் கூட்டிச் சேர்த்தது. ஆனால் கிறிஸ்தவர்கள் அல்லாத ஆயிரக்கணக்கானோரை இது பைபிளுக்கும் மாசுப்பட்ட ஒரு வகையான கிறிஸ்தவத்துக்கும் அறிமுகம் செய்தது.
14. கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் செய்த சில வேலைகள் மூலம் நல்ல மீன்களை பிடிக்கும் வேலைக்கு எவ்வாறு உதவி கிடைத்தது?
14 கடவுளுடைய வார்த்தையை கடைப்பிடித்து வந்த சிதறடிக்கப்பட்டிருந்த உண்மையுள்ள நபர்கள் தங்களால் முடிந்த சிறந்ததை செய்வதற்கு கடுமுயற்சி எடுத்தனர். கடவுளுடைய மெய்யான அபிஷேகம்பண்ணப்பட்ட சபையாக பூமியின் மீது எக்காலத்திலும் அவர்கள் காணப்பட்டனர். அவர்களும்கூட மீன்களை அல்லது மனிதர்களை பிடித்துக்கொண்டிருந்திருப்பர் என்பதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம். அவர்களில் அநேகரை கடவுள் நல்லவர்களாக கருதி அவர்களை தம்முடைய ஆவியால் அபிஷேகம்பண்ணுவார். (ரோமர் 8:14-17) கிறிஸ்தவத்தைச் சேர்ந்தவர்கள் என்று உரிமைபாராட்டிக் கொண்டிருந்த இப்படிப்பட்ட நல்லவர்கள் சில அனுகூலங்களின் காரணமாக கிறிஸ்தவர்களாக ஆன அநேகருக்கு அல்லது கிறிஸ்தவமண்டல பைபிள் சங்கங்களால் மொழிபெயர்க்கப்பட்டிருந்த வேதாகமத்திலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட பைபிள் அறிவை பெற்றிருந்த அநேகருக்கு பைபிள் சத்தியத்தைக் கொண்டுவர முடிந்தது. கிறிஸ்தவமண்டலம் சேகரித்த அநேக மீன்கள் கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து தகுதியற்றவர்களாக இருந்தாலும் நல்ல மீன்களை சேகரிக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது என்பது உண்மை தான்.
15. உவமையில் இருக்கும் வலை குறிப்பாக எதை பிரதிநிதித்துவம் செய்கிறது?
15 கடவுளுடைய சபை என்று உரிமைபாராட்டிக் கொள்ளும் ஒரு பூமிக்குரிய கருவியை வலை பிரதிநிதித்துவம் செய்கிறது. அது மீன்களை கூட்டிச் சேர்க்கிறது. அது கிறிஸ்தவமண்டலத்தையும், அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையையும் உள்ளடக்கியது. மத்தேயு 13:49-ன்படி அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் சபை தேவதூதர்களின் காணக்கூடாத வழிநடத்துதலின் கீழ் நல்ல மீன்களை தொடர்ந்து சேகரித்து வருகிறது.
நம்முடைய காலம் விசேஷமானது
16, 17. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் இயேசுவின் வலையைப் பற்றிய உவமையின் நிறைவேற்றத்தில் ஏன் அவ்வளவு முக்கியமானதாய் இருக்கிறது?
16 இப்போது நாம் கால அடிப்படையை சிந்திக்கலாம். பல நூற்றாண்டுகளாக வலை என்ற கருவி நல்ல மீன்களையும், தகுதியற்ற அல்லது பொல்லாத மீன்களையும் சேகரித்தது. பிறகு, முடிவைத் தீர்மானிக்கும் பிரிக்கும் வேலையில் தேவதூதர்கள் ஈடுபட்ட காலம் வந்தது. எப்போது? “காரிய ஒழுங்கு முறையின் முடிவின்” போது என்று வசனம் 49 (NW) தெளிவாக சொல்கிறது. வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ஆகியவற்றைப் பற்றிய உவமையில் இயேசு கூறியதோடு இது ஒத்ததாய் இருக்கிறது: “அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரி”ப்பார்.—மத்தேயு 25:31, 32.
17 எனவே, மத்தேயு 13:47-50-ன் படி, 1914-ல் “காரிய ஒழுங்கு முறையின் முடிவு,” ஆரம்பித்ததிலிருந்து தேவதூதர்களின் வழிநடத்துதலின் கீழ், முடிவைத் தீர்மானிக்கும் பிரிக்கும் வேலை ஒன்று நடந்தேறிக் கொண்டிருக்கிறது. 1919-க்குப் பிறகு குறிப்பாக இது வெளிப்படையாக ஆனது. அப்போது தற்காலிக ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்து அபிஷேகம்பண்ணப்பட்டவர்களின் மீதியானோர் விடுதலை செய்யப்பட்டு, மீன்பிடிக்கும் வேலையை நிறைவேற்றுவதற்கு அதிக திறம்பட்ட கருவியாக ஆனார்கள்.
18. நல்ல மீன்கள் எவ்வாறு கூடைகளுக்குள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன?
18 பிரித்து வைக்கப்பட்டிருந்த நல்ல மீன்களுக்கு என்ன நேரிடும்? பிரிக்கும் வேலையை செய்யும் தேவதூத மீனவர்கள் “நல்லவைகளைக் [மீன்களைக்] கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்,” என்று வசனம் 48 சொல்கிறது. கூடைகள் பாதுகாக்கிற பாத்திரங்களாக இருக்கின்றன. அதில் நல்ல மீன்கள் போடப்படுகின்றன. இது நம்முடைய நாளில் நடந்தேறியிருக்கிறதா? நிச்சயமாக. அடையாளப்பூர்வமான நல்ல மீன்கள் உயிரோடு பிடிக்கப்பட்டு மெய்க்கிறிஸ்தவர்களின் சபைகளுக்குள் கூட்டிச் சேர்க்கப்படுகின்றன. இந்தக் கூடைகளைப் போன்ற சபைகள் அவைகளைப் பாதுகாப்பதற்கு உதவியிருக்கின்றன. தெய்வீக சேவைக்காக அவைகளை ஒதுக்கி வைத்திருக்கின்றன என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள் அல்லவா? எனினும், ‘இவைகள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் என்னுடைய தற்போதைய வாழ்க்கையும், என்னுடைய எதிர்காலமும் இதோடு எப்படி சம்பந்தப்பட்டிருக்கின்றன?’ என்று எவராவது யோசிக்கக்கூடும்.
19, 20. (எ) இந்த உவமையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது இன்று ஏன் முக்கியமானதாய் இருக்கிறது? (பி) என்ன முக்கியமான மீன்பிடிக்கும் வேலை 1919 முதல் நடந்துகொண்டிருக்கிறது?
19 இங்கு உவமையாகச் சொல்லப்பட்டிருந்ததின் நிறைவேற்றம் அப்போஸ்தலர்களின் காலத்துக்கும் 1914-க்கும் இடையே இருந்த நூற்றாண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாயில்லை. அந்தக் காலப்பகுதியின் போது, வலை கருவியானது, கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டிக் கொண்ட உண்மையானவர்களையும் பொய்யர்களையும் கூட்டிச் சேர்த்தது. ஆம், அது தகுதியற்ற மீன்களையும் நல்ல மீன்களையும் கூட்டிச் சேர்த்துக் கொண்டிருந்தது. கூடுதலாக, தேவதூதர்களால் செய்யப்பட்ட பிரிக்கும் வேலை 1919-ல் முடிவடையவில்லை. உண்மையிலேயே இல்லை. இந்த வலையைப் பற்றிய உவமையின் சில அம்சங்கள் நம்முடைய நாள் வரையாக பொருந்துகின்றன. நாம் அதில் உட்பட்டிருக்கிறோம். நம்முடைய சமீப எதிர்காலமும் உட்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைகள் நம்மை “உங்கள் கண்கள் காண்கிறதினாலும் உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்” என்று விவரிக்கும்படி நாம் விரும்பினால், அது எவ்வாறு ஏன் அப்படி இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமாயிருக்கிறது.—மத்தேயு 13:16.
20 அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோர் 1919-க்குப் பிறகு பிரசங்க வேலையில் அதிக சுறுசுறுப்பாக தேவதூதர்களோடு ஒத்துழைத்தார்கள் என்பதை நீங்கள் ஒருவேளை அறிந்திருப்பீர்கள். அடையாளப்பூர்வமான வலையை உபயோகித்து, நல்ல மீன்களை தகுதியற்ற மீன்களிலிருந்து பிரித்தெடுப்பதற்கு கடற்கரைக்கு மீன்களைத் தொடர்ந்து இழுத்து வந்திருக்கின்றனர். அடையாளப்பூர்வமான வலையின் மூலம் 1,44,000 பேரின் கடைசியானவர்கள் சேகரிக்கப்படுகையில் கடவுளுடைய ஆவியினால் அபிஷேகம்பண்ணப்படுவதற்காக நல்ல மீன்கள் பிடிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது என்று அந்தக் காலப்பகுதியிலிருந்த புள்ளி விவரங்கள் காண்பிக்கின்றன. (வெளிப்படுத்துதல் 7:1-4) ஆனால் மத்திப 1930-களுக்குள் கடவுளுடைய ஆவியினால் அபிஷேகம்பண்ணப்படுவதற்கு நல்ல மீன்கள் பிடிக்கப்படுவது அடிப்படையாக முடிவுக்கு வந்தது. வலையை எறிந்து விடுவது போல் அபிஷேகம்பண்ணப்பட்டவர்களின் சபை அப்போது வேலையின்றி வெறுமென சோம்பலாக உட்கார்ந்துகொண்டு தங்களுடைய பரலோக வெகுமதிக்காக காத்துக்கொண்டிருக்க வேண்டுமா? இல்லவே இல்லை!
மீன்பிடிக்கும் வேலையில் உங்களுடைய ஈடுபாடு
21. வேறு என்ன மீன்பிடிக்கும் வேலை நம்முடைய நாளில் நடைபெற்றிருக்கிறது? (லூக்கா 23:43)
21 இயேசுவின் வலையைப் பற்றிய உவமை நல்ல மீன்கள் பரலோக ராஜ்யத்தில் ஓர் இடத்தை பெற்றுக்கொள்ளும் பலனின் பேரில் கவனத்தை ஈர்த்தது. இருந்தபோதிலும், அந்த உவமையைத் தவிர, முந்தின கட்டுரையில் விளக்கிக் காட்டியபடி, அங்கே மற்றொரு அடையாளப்பூர்வமான மீன்பிடிக்கும் வேலை மிகப் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த மீன்பிடிக்கும் வேலை இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட அபிஷேகம்பண்ணப்பட்ட நல்ல மீன்களைப் பிடிப்பதற்காக அல்ல. ஆனால் அடையாளப்பூர்வமான மீன்களை உயிரோடே பிடித்து ஒரு பரதீஸிய பூமியில் வாழும் மகத்தான நம்பிக்கை கொடுக்கப்படுவதற்காக அந்த வேலை செய்யப்படுகிறது.—வெளிப்படுத்துதல் 7:9, 10; மத்தேயு 25:31-46-ஐ ஒத்துப் பாருங்கள்.
22. என்ன சந்தோஷமான விளைவை நாம் அனுபவிக்கலாம், இதற்கு எதிர்மாறான விளைவு என்ன?
22 அந்த நம்பிக்கையை நீங்கள் கொண்டிருந்தால், ஜீவனைக் காக்கும் மீன்பிடிக்கும் வேலையை யெகோவா இப்போது வரை அனுமதித்திருக்கிறார் என்பதைக் குறித்து நீங்கள் சந்தோஷப்படலாம். நீங்கள் ஒரு மகத்தான எதிர்பார்ப்பை பெற்றுக்கொள்ளும்படி இது செய்திருக்கிறது. எதிர்பார்ப்பு? ஆம், உபயோகிப்பதற்கு அது தான் பொருத்தமான வார்த்தையாக இருக்கிறது. ஏனென்றால் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மீன்பிடிக்கும் முயற்சியை வழிநடத்திக் கொண்டிருப்பவருக்கு நாம் தொடர்ந்து உண்மையுள்ளவர்களாக இருப்பதைப் பொறுத்து பலன் இருக்கப் போகிறது. (செப்பனியா 2:3) வலையில் பிடிபடும் எல்லா மீன்களும் ஒரு சாதகமான பலனை அனுபவிக்காது என்பதை அந்த உவமையிலிருந்து நினைவுபடுத்திப் பாருங்கள். தகுதியற்றவைகள் அல்லது பொல்லாதவைகள் நீதியானவைகளிலிருந்து பிரிக்கப்படும் என்று இயேசு சொன்னார். என்ன முடிவுக்கு? தகுதியற்ற அல்லது பொல்லாத மீன்களுக்கு ஏற்படப் போகும் வினைமையான விளைவை இயேசு மத்தேயு 13:50-ல் விவரித்தார். இவைகள் எரிகிற அக்கினியிலே போடப்படும். இது நித்திய அழிவை அர்த்தப்படுத்துகிறது.—வெளிப்படுத்துதல் 21:8.
23. எது மீன்பிடிக்கும் வேலையை இன்று அவ்வளவு முக்கியமானதாக ஆக்குகிறது?
23 அபிஷேகம்பண்ணப்பட்ட நல்ல மீன்களுக்கும், பூமியில் என்றென்றுமாக வாழப்போகும் அடையாளப்பூர்வமான மீன்களுக்கும் ஒரு மகிமையான எதிர்காலம் இருக்கிறது. ஆதலால் நல்ல காரணத்தோடு ஒரு வெற்றிகரமான மீன்பிடிக்கும் வேலை பூகோளம் முழுவதும் நடைபெறுமாறு தேவதூதர்கள் பார்த்துக்கொள்கின்றனர். அடையாளப்பூர்வமான மீன்கள் எப்பேர்ப்பட்ட பெரும் அளவில் பிடிக்கப்படுகின்றன! இயேசு கட்டளையிட்டு சொன்னபடி தங்கள் வலைகளை போட்டு சொல்லர்த்தமான மீன்களை அற்புதகரமாக பிடித்த போது அப்போஸ்தலர்கள் அனுபவித்தது போலவே அது ஒரு நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் அற்புதகரமாக இருக்கிறது.
24. ஆவிக்குரிய மீன்பிடிக்கும் வேலையை குறித்ததில் நாம் என்ன செய்ய விருப்பமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
24 உங்களால் முடிந்த அளவு சுறுசுறுப்பாக ஜீவனைக் காக்கும் இந்த ஆவிக்குரிய மீன்பிடிக்கும் வேலையில் நீங்கள் பங்கு கொள்கிறீர்களா? இந்நாள் வரையாக நம்முடைய தனிப்பட்ட பங்கு எந்த அளவு விரிவானதாக இருந்திருந்தாலும், இப்போது உலகமுழுவதும் முன்னேறிக்கொண்டேயிருக்கும் மகத்தான மீன்பிடிக்கும், ஜீவனைக் காக்கும் வேலையில் என்ன நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பதை காண்பதன் மூலம் நாம் பயனடையக்கூடும். அவ்விதமாகச் செய்வது நமக்கு முன்னால் இருக்கும் நாட்களில் இன்னுமதிக வைராக்கியத்தோடு மீன்பிடிப்பதற்காக வலையை விரிக்க நம்மைத் தூண்டிட வேண்டும்!—மத்தேயு 13:23-ஐ ஒப்பிடவும்; 1 தெசலோனிக்கேயர் 4:1.
இந்தக் குறிப்புகளை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?
◻ வலையைப் பற்றிய இயேசுவின் உவமையில் இரண்டு விதமான மீன்கள் எதை பிரதிநிதித்துவம் செய்கின்றன?
◻ என்ன கருத்தில் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் வலை போடும் வேலையில் உட்பட்டிருந்தனர்?
◻ நம்முடைய நாளில் நடைபெறும் மீன்பிடிக்கும் வேலை ஏன் அவ்வளவு முக்கியத்துவமுள்ளதாய் இருக்கிறது?
◻ வலையைப் பற்றிய உவமை என்ன விதமான சுய-பரிசோதனை செய்யும்படி நம் ஒவ்வொருவரையும் வழிநடத்த வேண்டும்?
[பக்கம் 18-ன் படம்]
பல நூற்றாண்டுகளாக கலிலேயக் கடலில் மீன்பிடிக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.