இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
விரும்பத்தக்க ஒரு மீமானிட அரசர்
இயேசு அற்புதமாக ஆயிரக்கணக்கானோருக்கு உணவளிக்கும்போது, ஜனங்கள் ஆச்சரியப்படுகிறார்கள். “மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி” என்று அவர்கள் சொல்கிறார்கள். இயேசு, மோசேயைக் காட்டிலும் பெரிய தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும் என்று மட்டுமல்ல, ஆனால் அவர் மிகவும் விரும்பத்தக்க ஓர் அரசராக இருக்கக்கூடும் என்ற முடிவுக்கும்கூட அவர்கள் வருகிறார்கள். ஆகவே அவரைப் பிடிக்கவும் அவரை ராஜாவாக்கவும் அவர்கள் திட்டம் போடுகிறார்கள்.
என்றபோதிலும், இயேசு, அவர்கள் திட்டத்தை அறிந்தவராக இருக்கிறார். ஆதலால் பலவந்தமாக அவர்களால் கொண்டுப்போகப்படுவதை தவிர்ப்பதற்காக அவர் வேகமாக விலகிச் சென்றுவிடுகிறார். அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, தம்முடைய சீஷர்களை தங்கள் படவில் ஏறி, கப்பர்நகூமுக்குத் திரும்பிப் போகும்படி துரிதப்படுத்தி அனுப்பிவிடுகிறார். பின்னர் ஜெபம் பண்ண ஒரு மலையின் மேல் ஏறிப்போகிறார். அந்த இரவு இயேசு அங்கே தனிமையிலிருக்கிறார்.
விடிவதற்கு சற்று முன்பாக இயேசு, உயரமான தன்னுடைய அனுகூலமான ஸ்தானத்திலிருந்து வெளியேப் பார்க்கையில் பெருங்காற்று அடித்துக் கடல் கொந்தளிப்பதைக் கவனிக்கிறார். அது பஸ்காவுக்குச் சமீபமாயிருந்தபடியினால் முழு நிலவு நெருங்கிக்கொண்டிருக்கிற ஒளியில், இயேசு, தம்முடைய சீஷர்கள் கஷ்டத்துடன் எதிர் அலைகளை மேற்கொண்டு படகை முன் செலுத்தக் காண்கிறார். அந்த மனிதர்கள் தங்கள் முழு பலத்தோடு படகைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதைக் காண்கையில், இயேசு மலையிலிருந்து இறங்கி, அலைகளைக் கடந்து நடந்து படகை நோக்கி வருகிறார். இயேசு அதனிடம் வந்து சேருகையில் படகு சுமார் ஆறு அல்லது ஏழு கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துவிட்டது. என்றபோதிலும் அவர் அவர்களைக் கடந்து போவது போல காணப்படுகிறார். அவரை அவர்கள் காண்கையில், “ஆவேசம்” என்று சத்தமிட்டு அலறுகிறார்கள்.
இயேசு ஆறுதலாக அவர்களிடம், “நான்தான், பயப்படாதிருங்கள்” என்று சொல்லுகிறார்.
ஆனால் பேதுரு, “ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும்” என்கிறான்.
“வா,” என்று இயேசு பதிலளிக்கிறார்.
அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்து செல்கிறான். ஆனால் காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பேதுரு பயந்து, அமிழ்ந்து போகையில், “ஆண்டவரே, என்னை இரட்சியும்” என்று கூப்பிடுகிறான்.
உடனே இயேசு கையை நீட்டி, அவனைப் பிடித்து, “அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்” என்கிறார்.
பேதுருவும் இயேசுவும் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்துவிடுகிறது, சீஷர்கள் ஆச்சரியமடைகிறார்கள். ஆனால் அவர்கள் ஆச்சரியமடையவேண்டுமா? ஒருசில மணிநேரங்களுக்கு முன்புதானே ஐந்து அப்பங்களையும் இரண்டு சிறிய மீன்களையும் கொண்டு ஆயிரக்கணக்கானோருக்கு உணவளித்து இயேசு நடப்பித்த அந்தப் பெரிய அற்புதத்தை போற்றுவதன் மூலம் “அப்பங்களைக்குறித்து அவர்கள் உணர்ந்திரு”ந்தார்களேயானால், அவர் தண்ணீர்கள் மேல் நடந்து காற்றை அமரப் பண்ணக்கூடும் என்பது அவர்களுக்கு அத்தனை ஆச்சரியமூட்டுவதாக தோன்றியிருக்க வேண்டியதில்லை. ஆனால், இப்பொழுது சீஷர்கள் இயேசுவை பணிந்து கொண்டு “மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன்” என்று சொல்லுகிறார்கள்.
பின்பு அவர்கள் விரைவில் கப்பர்நகூமுக்கு அருகே கெனேசரேத்து என்ற ஓர் அழகிய செழிப்பான சமவெளியை வந்தடைகிறார்கள். அங்கே அவர்கள் படகை நங்கூரமிட்டு நிறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் கரையேறும்போது, ஜனங்கள் இயேசுவை அடையாளங்கண்டு கொண்டு சுற்றுப்புறமெங்கும் சென்று பிணியாளிகளைக் கொண்டுவருகிறார்கள். இவர்கள் அவர்களுடைய படுக்கைகளில் கொண்டுவரப்பட்டு இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தை தொடும் பட்சத்தில் முழுவதுமாக சொஸ்தமாகிறார்கள்.
இதற்கிடையில் ஆயிரக்கணக்கானோருக்கு அற்புதமாக இயேசு உணவளித்ததைப் பார்த்த ஜனக்கூட்டத்தார், இயேசு அவ்விடம் விட்டு புறப்பட்டு போய்விட்டதைக் காண்கிறார்கள். ஆகவே திபேரியாவிலிருந்து சிறிய படகுகள் வந்தபோது, அவர்கள் இவற்றில் ஏறி இயேசுவைத் தேடிக்கொண்டு கப்பர்நகூமுக்குப் போகிறார்கள். அவர்கள் அவரைக் கண்டபோது: “ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர்?” என்று கேட்கிறார்கள். இயேசு அவர்களைக் கண்டிக்கிறார். இதை நாம் சீக்கிரத்தில் பார்க்கப்போகிறோம். யோவான் 6:14–25; மத்தேயு 14:22–36; மாற்கு 6:45–56.
▪ இயேசு ஆயிரக்கணக்கானோருக்கு அற்புதமாக உணவளித்த பின்பு ஜனங்கள் அவருக்கு என்ன செய்ய விரும்புகிறார்கள்?
▪ இயேசு, அவர் விலகிச் சென்று ஏறிய மலையிலிருந்து எதைப் பார்க்கிறார்? அப்போது அவர் என்ன செய்கிறார்?
▪ இந்தக் காரியங்களால் சீஷர்கள் ஏன் அத்தனை ஆச்சரியமடைந்திருக்கக்கூடாது?
▪ அவர்கள் கரை சேர்ந்தபின்பு, என்ன நடக்கிறது?
[பக்கம் 9-ன் முழு பக்கத்தின் படம்]