யெகோவாவை ‘அறியும் இருதயம்’ உங்களுக்கு இருக்கிறதா?
“நான் கர்த்தர் [யெகோவா, NW] என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.”—எரே. 24:7.
1, 2. அத்திப்பழங்களைச் சிலர் ஏன் விரும்பி சாப்பிடுகிறார்கள்?
நன்கு கனிந்த அல்லது உலர்ந்த அத்திப்பழங்களைச் சாப்பிட பிடிக்குமா? நிறைய பேருக்கு பிடிக்கும். அதனால், உலகின் பல பகுதிகளில் அத்திமரங்கள் வளர்க்கப்படுகின்றன. பூர்வ யூதர்கள் அத்திப்பழங்களை ரொம்பவே விரும்பி சாப்பிட்டார்கள். (நாகூ. 3:12; லூக். 13:6-9) இதில் நார்ச்சத்து, ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள், தாதுப்பொருள்கள் உள்ளன. அதனால், இருதயத்துக்கு நல்லது என்று சிலர் சொல்கிறார்கள்.
2 ஒருமுறை யெகோவா இருதயத்தை அத்திப்பழத்தோடு சம்பந்தப்படுத்திப் பேசினார். அத்திப்பழங்களைச் சாப்பிடுவதால் வரும் நன்மைகளைப் பற்றி அவர் சொல்லவில்லை. மாறாக, அடையாள அர்த்தத்தில்தான் சொன்னார். எரேமியா தீர்க்கதரிசி மூலம் அவர் சொன்ன அந்த விஷயம் உங்களுடைய இருதயத்திற்கும் உங்கள் அன்புக்குரியவர்களின் இருதயத்திற்கும் பயனளிக்கும். அதைப் பற்றி இப்போது படிக்கையில், கிறிஸ்தவர்களாகிய நாம் அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாமென யோசித்துப்பாருங்கள்.
3. எரேமியா 24-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் அத்திப்பழங்கள் எதைக் குறிக்கின்றன?
3 எரேமியாவின் காலத்தில் அத்திப்பழங்களைப் பற்றி யெகோவா என்ன சொன்னார் என்பதை முதலில் பார்க்கலாம். கி.மு. 617-ல் யூத ஜனங்கள் யெகோவா வெறுத்த காரியங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை ஒரு தரிசனத்தின் மூலம் யெகோவா தெரியப்படுத்தினார். அதில் “மிகவும் நல்ல” அத்திப்பழங்களையும் “மிகவும் கெட்ட” அத்திப்பழங்களையும் உதாரணமாகக் குறிப்பிட்டார். (எரேமியா 24:1-3-ஐ வாசியுங்கள்.) நேபுகாத்நேச்சாரால், அவரது படை வீரர்களால், கொடுமைப்படுத்தப்பட்ட சிதேக்கியா ராஜாவும் அவரைப் போன்ற ஆட்களுமே கெட்ட அத்திப்பழங்கள். ஆனால், நல்ல அத்திப்பழங்களைப் போன்ற ஆட்களும் இருந்தார்கள். அவர்களில் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்த எசேக்கியேல், தானியேல், அவருடைய மூன்று நண்பர்கள், சீக்கிரத்தில் நாடுகடத்தப்படவிருந்த சில யூதர்கள் அடங்குவர். சில காலத்திற்குப் பிறகு, இவர்களில் சிலர் திரும்பி வந்து எருசலேமையும் ஆலயத்தையும் திரும்ப எடுப்பித்துக் கட்டுவார்கள் என சொல்லப்பட்டது. அது அப்படியே நடந்தது.—எரே. 24:8-10; 25:11, 12; 29:10.
4. நல்ல அத்திப்பழங்களைப் பற்றி கடவுள் சொன்னதிலிருந்து நாம் எப்படி உற்சாகத்தைப் பெறுகிறோம்?
4 நல்ல அத்திப்பழங்களைப் போல இருப்பவர்களைப் பற்றி யெகோவா சொன்னார்: “நான் கர்த்தர் [யெகோவா, NW] என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.” (எரே. 24:7) இந்தக் கட்டுரையின் முக்கிய வசனமே இதுதான். இதைப் படிக்கும்போது உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுக்கிறது, அல்லவா? ஒவ்வொருவருக்கும் தம்மை “அறியும் இருதயத்தை” கொடுக்க யெகோவா ஆவலாய் இருக்கிறார். இங்கு ‘இருதயம்’ என்பது ஒருவருடைய மனநிலையைக் குறிக்கிறது. அவரை அறியும் இருதயம் வேண்டுமென்று நீங்கள் நிச்சயம் ஆசைப்படுவீர்கள், அவருடைய மக்களில் ஒருவராக இருக்கவும் ஆசைப்படுவீர்கள். அதற்கு, கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதன்படி நடக்க வேண்டும்... மனந்திரும்பி, வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்... கடவுளுக்கு உங்களையே அர்ப்பணித்து, தகப்பனின் பெயரிலும் அவருடைய மகனின் பெயரிலும் அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். (மத். 28:19, 20; அப். 3:19) ஒருவேளை நீங்கள் இந்தப் படிகளையெல்லாம் ஏற்கெனவே எடுத்திருக்கலாம். அல்லது சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு இந்தப் படிகளை எடுக்க முயற்சி செய்துகொண்டிருக்கலாம்.
5. முக்கியமாக யாரைப் பற்றி எரேமியா எழுதினார்?
5 இவற்றில் சில படிகளை எடுத்திருந்தாலும் சரி எல்லாப் படிகளையும் எடுத்திருந்தாலும் சரி, நம் மனப்பான்மையையும் நடத்தையையும் குறித்து எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏன்? இருதயத்தைப் பற்றி எரேமியா எழுதிய மற்ற விஷயங்களைப் படிக்கும்போது இதைப் புரிந்துகொள்வோம். எரேமியா புத்தகத்தின் சில அதிகாரங்களில் யூதாவைச் சுற்றியிருந்த தேசங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மைதான். ஆனாலும், யூதா தேசத்தை ஆண்ட ஐந்து ராஜாக்களின் காலத்தில் அதன் நிலைமையைப் பற்றியே முக்கியமாக எரேமியா எழுதினார். (எரே. 1:15, 16) யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்திருந்த ஆண்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் மனதில் வைத்தே அவர் எழுதினார். அவர்களுடைய முன்னோர்கள் யெகோவாவுக்குச் சொந்தமான ஜனங்களாக இருக்க மனமார ஒப்புக்கொண்டார்கள். (யாத். 19:3-8) எரேமியாவின் காலத்தில் வாழ்ந்தவர்களும் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்திருந்ததை உறுதிப்படுத்தினார்கள்: “இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW].” (எரே. 3:22) ஆனால், அவர்களுடைய இருதயம் எப்படி இருந்தது?
அடையாளப்பூர்வ இருதயத்துக்கு அறுவை சிகிச்சை தேவையா?
6. இருதயத்தைப் பற்றிக் கடவுள் என்ன சொல்லியிருக்கிறார்?
6 ஒரு மருத்துவரால் இருதயம் எப்படி இருக்கிறது, எப்படி இயங்குகிறது என்றெல்லாம் நவீன கருவிகளைப் பயன்படுத்தி பார்க்க முடியும். ஆனால், யெகோவாவால் நம் அடையாளப்பூர்வ இருதயத்தைக்கூட பார்க்க முடியும். எரேமியாவின் காலத்தில் அதைத்தான் செய்தார். இந்த விஷயத்தில் யெகோவாவுக்கு நிகர் யெகோவாவே. ஏனென்றால் அவரே சொல்கிறார்: ‘எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? கர்த்தராகிய [யெகோவாவாகிய, NW] நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவராயிருக்கிறேன்.’ (எரே. 17:9, 10) ‘இருதயத்தை ஆராய்வது’ என்பது, 70 அல்லது 80 வருடங்களுக்குள் சுமார் முன்னூறு கோடி முறை துடிக்கிற சொல்லர்த்தமான இருதயத்தை மருத்துவ பரிசோதனை செய்வதைக் குறிப்பதில்லை. அடையாள அர்த்தமுள்ள இருதயத்தைப் பற்றியே யெகோவா சொல்கிறார். இந்த ‘இருதயம்’ ஒருவரின் உள்ளான உணர்ச்சிகள் அனைத்தையும் குறிக்கிறது. அதில் ஆசைகள், எண்ணங்கள், குணங்கள், மனப்பான்மை, இலக்குகள் எல்லாமே அடங்கும். அப்படிப்பட்ட இருதயம் உங்களுக்கும் இருக்கிறது. அதை யெகோவாவால் ஆராய முடியும், உங்களாலும் ஓரளவுக்கு ஆராய முடியும்.
7. தன் காலத்திலிருந்த அநேக யூதர்களின் இருதயத்தைப் பற்றி எரேமியா எப்படி விவரித்தார்?
7 இப்படி ஆராய்ந்து பார்ப்பதற்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘எரேமியாவின் காலத்தில் வாழ்ந்த அநேக யூதர்களின் இருதயம் எப்படி இருந்தது?’ அதற்கான பதிலைக் காண எரேமியா பயன்படுத்திய ஓர் அசாதாரண வார்த்தையைக் கவனியுங்கள்: “இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்கள்.” யூத ஆண்கள் செய்த நிஜ விருத்தசேதனத்தைப் பற்றி அவர் சொல்லவில்லை. மாறாக, ‘இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனம் செய்தும் விருத்தசேதனம் செய்யாததுபோல் இருந்த எல்லாரையும் . . . தண்டிப்பேன் . . . என்று யெகோவா சொல்கிறார்’ என எரேமியா சொன்னார். ஆம், விருத்தசேதனம் செய்திருந்த யூத ஆண்கள்கூட ‘இருதயத்திலே விருத்தசேதனம் செய்யாதவர்களாக’ இருந்தார்கள். (எரே. 9:25, 26, NW) இதற்கு என்ன அர்த்தம்?
8, 9. அநேக யூதர்கள் தங்கள் இருதயத்தை என்ன செய்ய வேண்டியிருந்தது?
8 யூதர்களுக்குக் கடவுள் கொடுத்த அறிவுரையிலிருந்து ‘இருதயத்திலே விருத்தசேதனம் செய்வதன்’ அர்த்தத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் சொன்னார்: “யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் . . . எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.” அவர்களுடைய பொல்லாத செயல்களின் பிறப்பிடம் எது? அவர்களுடைய இருதயமே. (மாற்கு 7:20-23-ஐ வாசியுங்கள்.) ஆம், யூதர்களின் பொல்லாத செயல்களுக்கு எது காரணம் என்பதை கடவுள் சரியாகவே கண்டறிந்தார். அவர்களுடைய இருதயத்தில் முரட்டுத்தனமும் கலகத்தனமும் குடிகொண்டிருந்தது. அவர்களுடைய உள்ளெண்ணங்களையும் யோசனைகளையும் கடவுள் அறவே வெறுத்தார். (எரேமியா 5:23, 24; 7:24-26-ஐ வாசியுங்கள்.) அதனால், “உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்” என்று யெகோவா சொன்னார்.—எரே. 4:4; 18:11, 12.
9 ஆம், மோசேயின் காலத்தில் இருந்தவர்கள் செய்ததைப் போலவே, எரேமியாவின் காலத்தில் இருந்த யூதர்களும், அடையாளப்பூர்வ இருதயத்தை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது, அதாவது, ‘இருதயத்தில் விருத்தசேதனம்’ செய்ய வேண்டியிருந்தது. (உபா. 10:16; 30:6) ‘இருதயத்தின் நுனித்தோலை’ யூதர்களால் எப்படி நீக்கிப்போட முடிந்தது? யெகோவாவின் கட்டளைகளுக்கு விரோதமான எண்ணத்தை, ஆசையை, உள்நோக்கத்தை விட்டுவிடுவதன் மூலம்.—அப். 7:51.
இன்று யெகோவாவை ‘அறியும் இருதயம்’
10. தாவீதைப் போல நாம் என்ன செய்ய வேண்டும்?
10 நம் அடையாள அர்த்தமுள்ள இருதயத்தைப் பற்றி புரியவைத்ததற்காக யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! ‘இன்று யெகோவாவின் சாட்சிகள் இதைத் தெரிந்துகொள்வது முக்கியமா?’ என்று சிலர் யோசிக்கலாம். இன்றுள்ள யெகோவாவின் ஊழியர்கள் அநேகர் அவருக்கு உண்மையோடு சேவை செய்கிறார்கள், சுத்தமான வாழ்க்கை வாழ்கிறார்கள். யூதர்களைப் போல அவர்கள் ஒன்றும் ‘கெட்ட அத்திப்பழங்களாக’ மாறுவது கிடையாது. இருந்தாலும், உண்மையுள்ள தாவீது யெகோவாவிடம் சொன்னதை யோசித்துப்பாருங்கள்: ‘தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும்.’—சங். 17:3; 139:23, 24.
11, 12. (அ) நாம் ஒவ்வொருவரும் நம் இருதயத்தை ஏன் ஆராய வேண்டும்? (ஆ) கடவுள் என்ன செய்யமாட்டார்?
11 நாம் ஒவ்வொருவரும் யெகோவாவை அறிந்துகொண்டு எப்போதும் அவருக்குப் பிரியமாக நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். யெகோவா ‘நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிறார்’ என்று எரேமியா சொன்னார். (எரே. 20:12) நீதிமானின் இருதயத்தையே யெகோவா சோதிக்கிறார் என்றால், நாமும் நம் இருதயத்தை நேர்மையாக சோதித்துப் பார்ப்பது எவ்வளவு முக்கியம்! (சங்கீதம் 11:5-ஐ வாசியுங்கள்.) அப்படிச் செய்யும்போது, நம் இருதயத்தை செயல்படவிடாமல் தடுக்கும் தவறான மனப்பான்மையோ உணர்ச்சியோ லட்சியமோ புதைந்து கிடப்பதை நாம் கவனிக்கலாம். “இருதயத்தின் நுனித்தோலை” போல் இருக்கும் இவற்றை நாம் நீக்கிப்போட வேண்டும். இதுவே, அடையாளப்பூர்வ இருதய அறுவை சிகிச்சை. நம் இருதயத்தில் இருக்கும் சில தவறான மனப்பான்மைகள் அல்லது உணர்ச்சிகள் யாவை? அதை நாம் எப்படி மாற்றிக்கொள்ளலாம்?—எரே. 4:4.
12 யெகோவா நம்மைக் கட்டாயப்படுத்தி மாற்றம் செய்ய வைக்கமாட்டார். ‘நல்ல அத்திப்பழங்களை’ போல் இருப்பவர்களுக்கு, தம்மை ‘அறியும் இருதயத்தைக் கொடுப்பதாக’ அவர் சொன்னார். ஆனால், அவர்களுடைய இருதயத்தைக் கட்டாயப்படுத்தி மாற்றப்போவதாகச் சொல்லவில்லை. கடவுளை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை அவர்களுக்கு இருக்க வேண்டியிருந்தது. நமக்கும் அதே ஆசை இருக்க வேண்டும், அல்லவா?
13, 14. ஒரு கிறிஸ்தவரின் இருதயம் எவ்விதத்தில் அவரை ஆபத்தில் கொண்டுபோய் விடலாம்?
13 “இருதயத்திலிருந்தே கெட்ட எண்ணம், கொலை, மணத்துணைக்குத் துரோகம், பாலியல் முறைகேடு, திருட்டு, பொய்சாட்சி, நிந்தனை ஆகிய எல்லாத் தீமைகளும் வெளிவருகின்றன” என்று இயேசு சொன்னார். (மத். 15:19) ஒரு சகோதரரின் இருதயம் அவரை மணத்துணைக்கு துரோகம் செய்யவோ பாலுறவு முறைகேட்டில் ஈடுபடவோ வைக்கலாம். அவர் மனந்திரும்பவே இல்லையென்றால் கடவுளுடைய ஆதரவை நிரந்தரமாக இழந்துவிடுவார். ஒருவர் இந்தத் தவறை செய்யவில்லை என்றாலும், அந்தத் தவறான ஆசையை இருதயத்தில் வளர்த்துவரலாம். (மத்தேயு 5:27, 28-ஐ வாசியுங்கள்.) இதுபோன்ற சமயத்தில் இருதயத்தை ஆராய்ந்து பார்ப்பது பேருதவியாக இருக்கும். அப்படிச் செய்யும்போது, எதிர்பாலர் ஒருவர்மீது தவறான ஆசையை ரகசியமாக வளர்த்திருப்பது தெரியவந்தால், உங்கள் இருதயத்தை மாற்றிக்கொள்வீர்களா?
14 ஒரு சகோதரர் “கொலை” செய்யாவிட்டாலும், சக கிறிஸ்தவர் ஒருவரை முற்றிலும் வெறுக்கும் அளவுக்கு பகையை தன் உள்ளத்தில் பேணி வளர்க்கலாம். (லேவி. 19:17) அவருடைய இருதயத்தைக் செயலிழக்கச் செய்யும் இதுபோன்ற உணர்வுகளை விட்டொழிக்க தீவிர முயற்சி செய்வாரா?—மத். 5:21, 22.
15, 16. (அ) ஒரு கிறிஸ்தவர் எப்படி ‘இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவராக’ ஆகிறார்? (ஆ) ‘இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்களை’ கடவுளுக்கு ஏன் பிடிக்காது?
15 நிறைய கிறிஸ்தவர்களுடைய இருதயத்தில் இப்படிப்பட்ட தவறான எண்ணங்களும் ஆசைகளும் இல்லை என்பது சந்தோஷப்பட வேண்டிய விஷயமே. ஆனாலும், இயேசு “கெட்ட எண்ணம்” பற்றி சொன்னார். நிறைய சந்தர்ப்பங்களில் நம்மைத் திசை திருப்பிவிடும் மனப்பான்மைதான் இந்தக் “கெட்ட எண்ணம்.” உதாரணமாக, குடும்பத்தாருக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பது மிகவும் முக்கியமென நாம் நினைக்கலாம். ஆம், சொந்தக்காரர்களிடம் “பந்தபாசம்” காட்டுவது முக்கியம்தான். ஏனென்றால், “கடைசி நாட்களில்” வாழும் உலக ஜனங்களைப் போல் “பந்தபாசம்” காட்டாதவர்களாக நாம் இருக்கக்கூடாது. (2 தீ. 3:1, 3) என்றாலும், அந்தப் பாசம் அளவுக்கு மீறிப்போக வாய்ப்பிருக்கிறது. “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்று பலர் சொல்கிறார்கள். அதனால், உறவினர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களுக்கு ஏதாவது நடந்துவிட்டால் தங்களுக்கே நடந்ததாக நினைப்பார்கள். தீனாளின் சகோதரர்கள் எவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டார்கள் என்று உங்களுக்குத் தெரியும். (ஆதி. 34:13, 25-30) அம்னோனை கொலை செய்ய அப்சலோமின் இருதயத்தை வழிநடத்தியது எது என்றும் உங்களுக்குத் தெரியும். (2 சா. 13:1-30) இதற்கெல்லாம் காரணம் ‘கெட்ட எண்ணமே.’
16 இன்று உண்மை கிறிஸ்தவர்கள் கொலை செய்ய மாட்டார்கள் என்பது நிஜம்தான். ஆனால், தன் உறவினரைக் காயப்படுத்திய ஒரு சக கிறிஸ்தவர்மீது பகையை வளர்த்துக்கொள்ளலாம் அல்லது காயப்படுத்தியதாக நினைத்து அவர்மீது பகையை வளர்த்துக்கொள்ளலாம். அவருடைய உபசரிப்பை மறுக்கலாம் அல்லது அவரை உபசரிக்காமல் இருக்கலாம். (எபி. 13:1, 2) பகையை வளர்த்துக்கொள்வதும் உபசரிக்காமல் இருப்பதும் அன்பு இல்லாததையே காட்டுகிறது. இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆம், இருதயத்தை ஆராய்கிறவர் இவர்களை “இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்கள்” என்றே சொல்வார். (எரே. 9:25, 26) “உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்” என்று யூதர்களிடம் யெகோவா சொன்னதை நினைத்துப் பாருங்கள்.—எரே. 4:4.
கடவுளை “அறியும் இருதயத்தை” பெறுவதும் காத்துக்கொள்வதும்
17. யெகோவாவுக்குப் பயப்படும்போது இருதயத்தில் மாற்றங்களைச் செய்வது ஏன் சுலபமாக இருக்கும்?
17 உங்கள் இருதயம் யெகோவாவின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது தெரியவந்தால், அதாவது, ‘விருத்தசேதனமில்லால்’ இருப்பது தெரியவந்தால் என்ன செய்யலாம்? அதற்குக் காரணம் ஒருவேளை மனித பயமாக இருக்கலாம்... பேர், புகழ் அடைய வேண்டும், டாம்பீகமாக வாழ வேண்டும் என்ற ஆசையாக இருக்கலாம்... பிடிவாத குணம் அல்லது சுதந்திர மனப்பான்மையாகக்கூட இருக்கலாம். நீங்கள் மட்டுமே இப்படி உணருவதில்லை. (எரே. 7:24; 11:8) எரேமியா தன் காலத்தில் இருந்த கீழ்ப்படியாத யூதர்களை “முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்” என்று சொன்னார். அதோடு “முன்மாரியையும் பின்மாரியையும் கொடுக்கிற . . . எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை” என்றும் சொன்னார். (எரே. 5:23, 24) யெகோவாவுக்குப் பயந்து அதாவது கீழ்ப்படிந்து அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கும்போது ‘இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுவோம்.’ ஆம், யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்யும்போது நம் இருதயத்தில் மாற்றங்களைச் செய்வது சுலபம்.
18. புதிய ஒப்பந்தத்திற்குள் இருப்பவர்களுக்கு யெகோவா என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார்?
18 தம்மை “அறியும் இருதயத்தை” யெகோவா நமக்குக் கொடுப்பதால் அவரோடு சேர்ந்து சேவை செய்யலாம். ஆம், புதிய ஒப்பந்தத்திற்குள் இருக்கும் பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த வாக்குறுதியைக் கொடுத்தார்: “நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் . . . இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் . . . நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.”—எரே. 31:31-34.a
19. உண்மை கிறிஸ்தவர்களுக்கு என்ன அருமையான பரிசு காத்திருக்கிறது?
19 புதிய ஒப்பந்தத்தின் நன்மையை பரலோகத்திலோ பூமியிலோ அனுபவிக்கும் எதிர்பார்ப்புடன் நீங்கள் இருக்கலாம். அதற்கு, நீங்கள் யெகோவாவை அறிந்துகொண்டு அவருடைய மக்களின் பாகமாக இருக்க வேண்டும். இந்த நன்மைகளை நாம் அடைய கிறிஸ்துவின் மீட்புபலியின் அடிப்படையில் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் பாவங்களைக் கடவுள் மன்னிக்கிறார் என்றால் நீங்களும் மற்றவர்களை மன்னிக்க வேண்டும், அல்லவா? அதுவும் மன்னிக்கவே முடியாது என நினைக்கும் சமயத்திலும்கூட மன்னிக்க வேண்டும். மற்றவர்கள்மீது நமக்கிருக்கும் கோபத்தையும் வெறுப்பையும் விட்டுவிட நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது யெகோவாவை சேவிக்க ஆசைப்படுகிறீர்கள் என்பதைக் காட்டுவீர்கள். அதோடு, அவரை இன்னும் நன்கு அறிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதையும் காட்டுவீர்கள். அப்போது, “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன்” என்று யெகோவா சொன்னது உங்கள் விஷயத்திலும் உண்மையாகும்.—எரே. 29:13, 14.
a புதிய ஒப்பந்தத்தைப் பற்றி காவற்கோபுரம் 2012 1/15 பக். 26-30-ல் விளக்கப்பட்டுள்ளது.