“வானத்திலிருந்து ஓர் அடையாளம்”
பழம் செய்யுள் ஒன்று சொல்கிறது: “இரவில் செவ்வானம், கப்பலோட்டிகளுக்குக் குதூகலம்,/காலையில் செவ்வானம், கப்பலோட்டிகளுக்குக் குந்தகம்.”
இன்று, துணைக்கோள்கள், கணிப்பொறி பயன்படுத்தப்படும் வெப்பநிலை ஆய்வுகள், டாப்லர் ரேடார், மற்ற அறிவியல்பூர்வமான முறைகளும் வானிலையைக் கணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் முன்னறிவிப்புகள் இப்போதுதானே மேற்கோள் காட்டப்பட்டுள்ள செய்யுளோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறது.
இயேசு கிறிஸ்துவின் மத எதிரிகள், அவர்தான் மேசியா என்பதை நிரூபிப்பதற்கு வழக்கத்திற்கு மாறான அடையாளத்தை, “வானத்திலிருந்து ஓர் அடையாளத்தை” ஒரு சமயம் கேட்டனர். அவர் சொன்னார், “அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார்.”—மத்தேயு 16:1-4.
இயேசுவின் எதிரிகள் வானிலையை முன்னறிவிக்க முடிந்தது, ஆனால் ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உதாரணமாக, ‘யோனாவின் அடையாளத்தைப்’ பற்றி என்ன? பெரிய மீனின் வயிற்றில் சுமார் மூன்று நாட்களைக் கழித்தப்பிறகு, கடவுளுடைய தீர்க்கதரிசி யோனா நினிவேயில் பிரசங்கஞ்செய்தார், அதன்மூலம் அவர் அசீரியாவின் தலைநகருக்கு ஓர் அடையாளமாக ஆனார். கிறிஸ்து மூன்று நாட்களின் பகுதிகளைக் கல்லறையில் கழித்துவிட்டு, பின்பு உயிர்த்தெழுப்பப்பட்டபோது, இயேசுவின் சந்ததி ‘யோனாவின் அடையாளத்தைக்’ கண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியின் அத்தாட்சிகளை அவருடைய சீஷர்கள் அறிவித்தனர். இதனால், இயேசு அந்தச் சந்ததிக்கு ஓர் அடையாளமாக இருந்தார்.—மத்தேயு 12:39-41.
மற்றொரு சமயத்தில், ராஜ்ய வல்லமையில் எதிர்காலத்தில் அவர் ‘வந்திருப்பதற்கு,’ ‘அடையாளத்தை’ இயேசுவின் சீஷர்கள் கேட்டார்கள். இயேசு அதற்குப் பிரதியுத்தரமாக, இணையற்ற யுத்தங்கள், பெரிய பூமியதிர்ச்சிகள், பஞ்சம், கடவுளுடைய நிறுவப்பட்ட ராஜ்யத்தைப்பற்றிய பூமியளாவிய பிரசங்கவேலை ஆகியவற்றை உள்ளடக்கிய, பல அம்சங்களாலாகிய ஒரு கூட்டு அடையாளத்தைக் கொடுத்தார்.—மத்தேயு 24:3-14.
கண்களுக்குத் தெரியாத பரலோக ராஜாவாக, இயேசுவின் வந்திருத்தலின் அடையாளத்தை நீங்கள் உணரமுடிகிறதா? அதன் அம்சங்கள் இந்தச் சந்ததியில் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. (மத்தேயு 24:34) எதிர்காலத்தைப்பற்றி என்ன? பைபிள், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு சமீபத்திலிருக்கிறது என்று மட்டும் சொல்லாமல், சீக்கிரத்தில் மனிதகுலத்திற்கு தெளிவானதாக, பிரகாசமானதாகத் தோன்றப்போகும் கடவுளுடைய வாக்களிக்கப்பட்ட புதிய நாளைப்பற்றியும் சொல்கிறது.—2 பேதுரு 3:13.