கணவர்களே—கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை ஏற்று பின்பற்றுங்கள்
‘ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறார்.’—1 கொரிந்தியர் 11:3.
1, 2. (அ) எதன் அடிப்படையில் ஒரு கணவருடைய வெற்றியை அளவிட வேண்டும்? (ஆ) கடவுளே திருமணத்தை ஆரம்பித்து வைத்தவர் என்பதை ஏற்றுக்கொள்வது ஏன் முக்கியமானது?
எதன் அடிப்படையில் ஒரு கணவருடைய வெற்றியை அளவிடுவீர்கள்? அவருடைய அறிவுத் திறமையை வைத்தா அல்லது உடல் திறனை வைத்தா? பணம் சம்பாதிக்கும் திறமையை வைத்தா? அல்லது தன்னுடைய மனைவி, மக்களை அவர் அன்பாகவும் பாசமாகவும் நடத்துவதை வைத்தா? கடைசியாகக் குறிப்பிட்டிருப்பதன் அடிப்படையில் அளவிடும்போது, அநேக கணவர்கள் குறைவுபடுகிறார்கள், அவர்கள் இந்த உலகத்தின் மனப்பான்மையும் மனிதத் தராதரங்களும் தங்கள்மீது செல்வாக்குச் செலுத்த இடங்கொடுக்கிறார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் திருமணத்தை ஆரம்பித்து வைத்தவரின் வழிநடத்துதலை ஏற்று பின்பற்றுகிறதில்லை. அவரே, ‘தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தவர்.’—ஆதியாகமம் 2:21-24.
2 கடவுளே திருமணத்தை ஆரம்பித்து வைத்தார் என்ற இந்த பைபிள் போதனையை இயேசு கிறிஸ்துவும் உறுதிப்படுத்தினார். அவர் தம் காலத்தில் இருந்த விமர்சகர்களிடம் இவ்வாறு கூறினார்: “ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், [திருமணத்தில்] தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.” (மத்தேயு 19:4-6) கடவுளே திருமணத்தை ஆரம்பித்து வைத்தவர் என்பதை ஏற்றுக்கொள்வதும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் உள்ள ஆலோசனையைப் பின்பற்றுவதுமே திருமணத்தில் வெற்றி காண்பதற்கான திறவுகோலாகும்.
கணவருடைய வெற்றிக்குத் திறவுகோல்
3, 4. (அ) திருமணத்தைப்பற்றி இயேசுவுக்கு மிகவும் ஆழமான அறிவிருப்பதற்குக் காரணம் என்ன? (ஆ) அடையாள அர்த்தத்தில் இயேசுவின் மனைவி யார், கணவர்கள் தங்கள் மனைவிகளை எவ்வாறு நடத்த வேண்டும்?
3 இயேசு சொன்னவற்றைப் படிப்பதும் அவர் செய்தவற்றைப் பின்பற்றுவதும் ஒரு கணவராக வெற்றியடைய உதவும். மணவாழ்வைப்பற்றி அவர் நன்கு அறிந்திருந்தார். ஏனெனில், ஆரம்பத்தில் ஆணும் பெண்ணும் படைக்கப்பட்டபோதும், அவர்கள் திருமணத்தில் இணைந்தபோதும் அவர் அங்கே இருந்தார். யெகோவா தேவன் அவரிடம் இவ்வாறு கூறினார்: ‘நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக.’ (ஆதியாகமம் 1:26) ஆம், தாம் படைத்த ஒருவரிடம் கடவுள் பேசிக்கொண்டிருந்தார்; வேறு எதையும் யாரையும் தாம் படைப்பதற்கு முன் ‘தம் அருகே கைதேர்ந்த வேலையாளாக இருந்த’ ஒருவரிடம் கடவுள் பேசிக்கொண்டிருந்தார். (நீதிமொழிகள் 8:22-30, NW) இவர் “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.” ‘தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறவர்,’ இப்பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பிருந்தே இருக்கிறவர்.—கொலோசெயர் 1:15; வெளிப்படுத்துதல் 3:14.
4 “தேவ ஆட்டுக்குட்டி” என்று இயேசு அழைக்கப்படுகிறார். அடையாள அர்த்தத்தில் அவர் கணவராகச் சித்தரிக்கப்படுகிறார். தேவதூதன் ஒரு முறை இவ்வாறு சொன்னார்: “நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன்.” (யோவான் 1:29; வெளிப்படுத்துதல் 21:9) அவருடைய மனைவியாகிய அந்த மணவாட்டி யார்? “ஆட்டுக்குட்டியானவருடைய மனைவி” என்பவள், கிறிஸ்துவுடன் பரலோக ராஜ்யத்தில் ஆட்சிசெய்யவிருக்கும் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட விசுவாசமுள்ள அவருடைய சீஷர்கள் அடங்கிய தொகுதியைக் குறிக்கிறாள். (வெளிப்படுத்துதல் 14:1, 3) எனவே, இயேசு பூமியிலிருந்தபோது தம்முடைய சீஷர்களை நடத்திய விதம் கணவர்கள் தங்களுடைய மனைவிகளை நடத்துவதற்கு முன்மாதிரியாய் அமைகிறது.
5. இயேசு யாருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்?
5 உண்மையில் இயேசு தம்மைப் பின்பற்றுகிற எல்லாருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார் என பைபிள் சொல்கிறது; அங்கு நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.” (1 பேதுரு 2:21) என்றாலும், விசேஷமாக அவர் ஆண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார். பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறார்; ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறார், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறார்.’ (1 கொரிந்தியர் 11:3) ஆணுக்குக் கிறிஸ்து தலைவராக இருப்பதால் கணவர்கள் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவது அவசியம். எனவே, மணவாழ்வில் வெற்றியையும் சந்தோஷத்தையும் காண்பதற்குத் தலைமைத்துவ நியமத்தைப் பின்பற்ற வேண்டும். இந்தச் சந்தோஷத்தைப் பெறுவதற்கு, அடையாள அர்த்தத்தில் தம்முடைய மனைவியான அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களிடம் இயேசு நடந்துகொண்டதைப்போலக் கணவர்கள் தங்களுடைய மனைவிகளிடம் நடந்துகொள்ள வேண்டும்
மணவாழ்வில் பிரச்சினைகளைச் சமாளிக்கும் விதம்
6. கணவர்கள் தங்கள் மனைவிகளோடு எவ்வாறு வாழ வேண்டும்?
6 பிரச்சினை மிகுந்த இன்றைய உலகில், விசேஷமாகக் கணவர்கள் பொறுமை, அன்பு, நீதியான நியமங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதிகாட்டுவது ஆகியவற்றில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவது அவசியமாயிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) இயேசு வைத்த முன்மாதிரியைக் குறித்து நாம் பைபிளில் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘புருஷர்களே, . . . விவேகத்தோடு அவர்களுடனே [உங்கள் மனைவிகளுடன்] வாழுங்கள்.’ (1 பேதுரு 3:7) ஆம், சோதனைகளை இயேசு எப்படி விவேகமாகக் கையாண்டாரோ அப்படியே கணவர்களும் மணவாழ்வில் பிரச்சினைகளை விவேகமாகக் கையாள வேண்டும். எந்த மனிதனைக் காட்டிலும் இயேசு பெரும் சோதனைகளைச் சந்தித்தார். ஆனால், தம்முடைய சோதனைகளுக்குச் சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் இந்தப் பொல்லாத உலகமுமே காரணம் என்பதை அவர் அறிந்திருந்தார். (யோவான் 14:30; எபேசியர் 6:12) சோதனைகளைப் பார்த்து இயேசு ஒருபோதும் ஆச்சரியப்படவில்லை. அதனால், தம்பதிகளும் ‘சரீரத்திலே உபத்திரவப்படும்போது’ ஆச்சரியப்பட வேண்டியதில்லை. திருமணம் செய்துகொள்கிறவர்கள் இதுபோன்ற உபத்திரவங்களை எதிர்பார்க்கலாம் என பைபிள் முன்னதாகவே எச்சரிக்கிறது.—1 கொரிந்தியர் 7:28.
7, 8. (அ) மனைவிகளுடன் விவேகத்தோடு வாழ்ந்திருப்பதில் என்ன உட்பட்டுள்ளது? (ஆ) மனைவிகள் கனத்தைப் பெறுவதற்கு ஏன் தகுதியானவர்கள்?
7 ‘மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்து விவேகத்தோடு’ அவர்களுடனே வாழுங்களென கணவர்களுக்கு பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 3:7) ஆண்கள் பொதுவாக தங்கள் மனைவிகளைக் கொடூரமாக நடத்துவார்கள் என்று பைபிள் முன்னுரைத்தது; ஆனால், கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுகிற ஒரு கணவர் தன் மனைவியை அவ்வாறு நடத்துவதற்குப் பதிலாக அவளுக்கு மரியாதை காட்டுவார். (ஆதியாகமம் 3:16) அவளை மதிப்புமிக்க பரிசாகக் கருதுவார், தன்னுடைய பலத்தைப் பயன்படுத்தி ஒருபோதும் அவளைத் துன்புறுத்த மாட்டார். மாறாக, அவளுடைய உணர்வுகளை மதித்து, எப்பொழுதும் மரியாதையோடும் கண்ணியத்தோடும் அவளை நடத்துவார்.
8 கணவர்கள் தங்களுடைய மனைவிகளை ஏன் கனப்படுத்த வேண்டும்? “உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, . . . உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால்” என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 3:7) யெகோவா, தம்மை வணங்குகிற ஓர் ஆணை பெண்ணைவிட உயர்வாகக் கருதுவதில்லை என்று கணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். கடவுளுடைய பார்வையில் மதிப்புள்ளவர்களாகக் கருதப்படுகிற பெண்கள், ஆண்களைப் போலவே நித்திய ஜீவன் என்கிற பரிசைப் பெறுவார்கள். இவர்களில் அநேகர், ‘ஆணென்றும் பெண்ணென்றுமில்லாத’ பரலோக வாழ்க்கையையும் அனுபவிக்கிறார்களே. (கலாத்தியர் 3:28) அதனால், ஒரு நபரின் உண்மைத்தன்மையே கடவுளுடைய பார்வையில் அவரை மதிப்புமிக்கவராக ஆக்குகிறது என்பதைக் கணவர்கள் நினைவில் வைக்க வேண்டும். ஒருவர் ஆணா பெண்ணா, கணவரா மனைவியா, அல்லது பிள்ளையா என்பதுகூட முக்கியமல்ல.—1 கொரிந்தியர் 4:2.
9. (அ) பேதுரு குறிப்பிட்டபடி, என்ன காரணத்திற்காக கணவர்கள் தங்களுடைய மனைவிகளுக்கு மரியாதை காட்ட வேண்டும்? (ஆ) இயேசு பெண்களுக்கு எப்படி மரியாதை காட்டினார்?
9 “உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு” என அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டது, ஒரு கணவன் தன் மனைவியை மரியாதையுடன் நடத்துவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அத்தகைய தடை எவ்வளவு ஆபத்தானதாக இருக்கும்! கடந்த காலத்தில் அலட்சியமாக இருந்த தேவ ஊழியக்காரர்கள் சிலருக்குச் சம்பவித்ததைப்போல ஒரு கணவரின் ஜெபங்கள் தடைபடுவதற்கும்கூட அது வழிநடத்தலாம். (புலம்பல் 3:43, 44) திருமணமான கிறிஸ்தவ ஆண்களும் திருமணத்திற்குத் திட்டமிடுகிற ஆண்களும், பெண்களை இயேசு கண்ணியமாக நடத்திய விதத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்வது ஞானமான செயலாகும். அவரோடு சேர்ந்து ஊழியத்திற்குச் சென்ற கூட்டத்தாரில் பெண்களும் இருக்க அனுமதித்தார், அவர்களைக் கனிவோடும் மரியாதையோடும் நடத்தினார். ஒரு சமயம், மிகவும் வியப்பூட்டும் ஓர் உண்மையை அவர் முதன்முதலாக பெண்களுக்குத் தெரிவித்தார், அதை ஆண்களுக்குத் தெரிவிக்கும்படியும் அவர்களிடம் கூறினார்.—மத்தேயு 28:1, 8-10; லூக்கா 8:1-3.
விசேஷமாக கணவர்களுக்கு முன்மாதிரி
10, 11. (அ) கணவர்கள் விசேஷமாக இயேசுவின் முன்மாதிரியைப் பார்த்துக் கற்றுக்கொள்வது ஏன் அவசியம்? (ஆ) கணவர்கள் தங்கள் மனைவிகளிடம் எவ்வாறு அன்புகூர வேண்டும்?
10 முன்னே குறிப்பிட்டதுபோல, கணவன் மனைவிக்கு இடையே உள்ள பந்தத்தை, அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்கள் அடங்கிய சபையான ‘மணவாட்டிக்கும்’ கிறிஸ்துவுக்கும் இடையே உள்ள பந்தத்திற்கு பைபிள் ஒப்பிடுகிறது. “கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்” என்று அது சொல்கிறது. (எபேசியர் 5:23) இந்த வார்த்தைகள், இயேசு தம்முடைய சீஷர்களை முன்நின்று நடத்தியதை ஆராய்ந்து பார்க்கும்படி கணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். இப்படிச் செய்யும்போதுதான் கணவர்கள் இயேசுவின் முன்மாதிரியை நல்ல விதமாகப் பின்பற்ற முடியும், இயேசு தம்முடைய சபைக்குச் செய்ததுபோல, வழிநடத்துதலுடன் அன்பையும் பாதுகாப்பையும் தங்கள் மனைவிகளுக்குக் கொடுக்கவும் முடியும்.
11 ‘புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்’ என்று கிறிஸ்தவர்களை பைபிள் ஊக்குவிக்கிறது. (எபேசியர் 5:25, 27) எபேசியர் புத்தகத்தில் இதற்கு முந்தின அதிகாரத்தில் “சபை,” ‘கிறிஸ்துவின் சரீரம்’ என அழைக்கப்படுகிறது. இந்த அடையாள அர்த்தமுள்ள சரீரத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருமே இருக்கிறார்கள், அனைவருமே அந்தச் சரீரம் நல்லபடியாகச் செயல்படுவதற்கு உதவுகிறார்கள். கிறிஸ்துவே “சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்.”—எபேசியர் 4:12; கொலோசெயர் 1:18; 1 கொரிந்தியர் 12:12, 13, 27.
12. இயேசு தம்முடைய அடையாள அர்த்தமுள்ள சரீரத்திடம் எவ்வாறு அன்பு காட்டினார்?
12 இயேசு தம்முடைய அடையாள அர்த்தமுள்ள சரீரமான ‘சபையிடம்’ அன்பு காட்டினார், விசேஷமாக அதனுடைய அங்கத்தினர்களாக ஆகவிருந்தவர்களின் தேவைகளுக்குக் கனிவோடு கவனம் செலுத்துவதன்மூலம் அன்பு காட்டினார். உதாரணமாக, தம்முடைய சீஷர்கள் சோர்வாக இருந்தபோது, “ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள்” என்று இயேசு அழைத்தார். (மாற்கு 6:31) இயேசுவினுடைய மரணத்திற்குச் சில மணிநேரத்திற்கு முன்பு அவர் நடந்துகொண்ட விதத்தை அவருடைய அப்போஸ்தலர்களில் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “இயேசு . . . தம்முடையவர்களிடத்தில் [அதாவது, அடையாள அர்த்தமுள்ள தமது சரீரத்தின் பாகமாய் இருந்தவர்களிடத்தில்] அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்.” (யோவான் 13:1) கணவர்கள் தங்களுடைய மனைவிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டிய விதத்திற்கு இயேசு எவ்வளவு அருமையான முன்மாதிரி வைத்திருக்கிறார்!
13. கணவர்கள் தங்களுடைய மனைவிகளிடம் எவ்வாறு அன்புகூர வேண்டுமென்று அறிவுரை கூறப்படுகிறது?
13 கணவர்களுக்கு இயேசு வைத்திருக்கிற முன்மாதிரியைப்பற்றி தொடர்ந்து குறிப்பிடுபவராக அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.” பவுல் மேலும் இவ்வாறு கூறினார்: “உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்.”—எபேசியர் 5:28, 29, 33.
14. ஒரு கணவர் தன்னுடைய அபூரண உடலை எவ்வாறு நடத்துகிறார், இது தன்னுடைய மனைவியை அவர் எப்படி நடத்த வேண்டுமெனக் காட்டுகிறது?
14 பவுலின் வார்த்தைகளைச் சற்று யோசித்துப்பாருங்கள். நிதான புத்தியுள்ள ஒருவர் வேண்டுமென்றே தன்னைக் காயப்படுத்திக் கொள்வாரா? ஒருவர் தன்னுடைய கால் விரலை எதிலாவது இடித்துக்கொண்டு தடுமாறினால் அதற்காக அதை அடிப்பாரா? நிச்சயமாக மாட்டார்! ஒரு கணவர் தன் நண்பர்களுக்கு முன்னால் தன்னையே கேவலப்படுத்திக்கொள்வாரா அல்லது தன் குறைபாடுகளைப் பற்றியே வீண்பேச்சு பேசுவாரா? மாட்டார்! அப்புறம் ஏன் அவர் தன்னுடைய மனைவி ஒரு தவறு செய்யும்போது சொல்லால் புண்படுத்தவோ அடிக்கவோ வேண்டும்? கணவர்கள் தங்கள் சொந்த நலனை மட்டுமல்ல மனைவிகளின் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும்.—1 கொரிந்தியர் 10:24; 13:5.
15. (அ) தம்முடைய சீஷர்கள் மாம்ச பலவீனத்தை வெளிப்படுத்தியபோது இயேசு என்ன செய்தார்? (ஆ) அவருடைய முன்மாதிரியிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
15 தம்முடைய மரணத்திற்கு முன்பு சீஷர்கள் மாம்ச பலவீனத்தை வெளிப்படுத்தியபோது இயேசு எவ்வாறு அவர்களிடம் கரிசனை காட்டினார் என்பதைக் கவனியுங்கள். ஜெபிக்கும்படி அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டபோதும்கூட, கெத்செமனே தோட்டத்தில் அவர்கள் மூன்று முறை தூங்கிப்போனார்கள். திடீரென, ஆயுதத்தோடு வந்த ஆட்கள் அவர்களைச் சுற்றிவளைத்துக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம் “யாரைத் தேடுகிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம்” என்றார்கள், அதற்கு அவர் “நான்தான்” என்றார். தாம் மரிப்பதற்கான “வேளை வந்தது” என அறிந்து “என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள்” என்றார். அடையாள அர்த்தமுள்ள மணவாட்டியின் பாகமான தம்முடைய சீஷர்களின் நலனில் அவர் எப்போதும் அக்கறை காட்டினார். அவர்கள் தப்பிப்போக வழி செய்தார். இயேசு தம்முடைய சீஷர்களை நடத்திய விதத்தைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் கணவர்கள் தங்களுடைய மனைவிகளை எப்படி நடத்த வேண்டும் என்பதில் பின்பற்ற வேண்டிய அநேக நியமங்களைக் காண முடியும்.—யோவான் 18:1-9; மாற்கு 14:34-37, 41.
இயேசுவின் அன்பு உணர்ச்சிப்பூர்வமானது மட்டுமல்ல
16. மார்த்தாளைப்பற்றி இயேசு எவ்வாறு உணர்ந்தார், என்றாலும் அவளை எப்படிச் சரிப்படுத்தினார்?
16 “இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்” என்று பைபிள் சொல்கிறது; இவர்கள் இயேசுவைத் தங்களுடைய வீட்டுக்கு அடிக்கடி விருந்துக்கு அழைத்தார்கள். (யோவான் 11:5) என்றாலும், இயேசுவின் ஆன்மீக போதனைகளைக் கேட்பதற்குப் பதிலாக மார்த்தாள் உணவு தயாரிப்பதிலேயே மும்முரமாய் ஈடுபட்டிருந்தபோது, இயேசு அவளுக்கு அறிவுரை கொடுக்கத் தவறவில்லை. “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே” என்று கூறினார். (லூக்கா 10:41, 42) இயேசு அவளிடம் மெய்யான அன்பு காட்டியதால் அவருடைய அறிவுரையை ஏற்றுக்கொள்வது மார்த்தாளுக்குச் சுலபமாக இருந்திருக்கும். அதேபோல, கணவர்களும் தங்களுடைய மனைவிகளை நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்திக் கனிவாகவும் அன்பாகவும் நடத்த வேண்டும். என்றாலும், சரிப்படுத்துதல் தேவைப்படுகிற சமயத்தில், இயேசுவைப் போல வெளிப்படையாகப் பேசுவது பொருத்தமாயிருக்கும்.
17, 18. (அ) இயேசுவை பேதுரு எவ்வாறு கடிந்துகொண்டார், பேதுருவுக்குச் சரிப்படுத்துதல் ஏன் தேவைப்பட்டது? (ஆ) கணவருக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?
17 இன்னொரு சந்தர்ப்பத்தில், தாம் எருசலேமில் துன்பப்பட வேண்டும் என்றும் அங்கே “மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்க வேண்டும்” என்றும் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு விளக்கினார். அப்பொழுது பேதுரு அவரைத் தனியே அழைத்துச் சென்று, “ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை” என்று கடிந்துகொள்ளத் தொடங்கினார். உணர்ச்சிவசப்பட்டதால் பேதுருவின் கருத்து தவறாக இருந்தது தெளிவாகத் தெரிகிறது. சரிப்படுத்துதல் தேவைப்பட்டது. எனவே இயேசு, “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” என்று பேதுருவிடம் கூறினார்.—மத்தேயு 16:21-23.
18 தாம் பலவித துன்பங்களைச் சகித்து, மரிக்க வேண்டுமென்ற கடவுளுடைய சித்தத்தை இயேசு அப்போதுதான் குறிப்பிட்டிருந்தார். (சங்கீதம் 16:10; ஏசாயா 53:12) அதனால் பேதுரு அவரைக் கடிந்துகொள்ள ஆரம்பித்தது தவறு. ஆம், சில சமயங்களில் நாமனைவருக்கும் தேவைப்படுவதுபோல பேதுருவுக்கும் உறுதியான சரிப்படுத்துதல் தேவைப்பட்டது. குடும்பத் தலைவராக இருப்பதால் மனைவி உட்பட தன்னுடைய குடும்பத்தாரைச் சரிப்படுத்துவதற்கு அதிகாரமும் பொறுப்பும் கணவருக்கு உண்டு. உறுதியான சரிப்படுத்துதல் தேவைப்பட்டாலும், அதைக் கரிசனையோடும் அன்போடும் கொடுக்க வேண்டும். காரியங்களைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க பேதுருவுக்கு இயேசு உதவியது போலவே, சில சமயங்களில் கணவர்களும் தங்கள் மனைவிகளுக்கு உதவ வேண்டியிருக்கலாம். உதாரணமாக, மனைவியுடைய ஆடை அலங்காரமோ நகையை அல்லது அழகு சாதனப்பொருள்களைப் பயன்படுத்துவதோ வேதவாக்கியங்களில் சொல்லப்பட்ட அடக்கமான முறையைவிட்டு விலகிச்செல்ல ஆரம்பிக்கையில் ஏன் சில சரிப்படுத்துதல்கள் தேவை என்பதை கணவர் அன்போடு குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.—1 பேதுரு 3:3-5.
கணவர்கள் பொறுமையாயிருப்பது நல்லது
19, 20. (அ) இயேசுவின் சீஷர்கள் மத்தியில் என்ன பிரச்சினை வளர்ந்தது, அதை இயேசு எப்படிக் கையாண்டார்? (ஆ) இயேசுவின் முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றி அடைந்தன?
19 கவனம் செலுத்த வேண்டிய ஒரு பிரச்சினை இருந்து, அதைச் சரிசெய்ய உள்ளப்பூர்வமாக முயற்சி எடுக்கையில் அதற்கு உடனடியாகப் பலன் கிடைக்குமென கணவர்கள் எதிர்பார்க்கக்கூடாது. தம்முடைய சீஷர்களின் மனப்பான்மையைச் சீர்பொருந்தச் செய்வதற்கு இயேசு தொடர்ந்து முயற்சி செய்தார். உதாரணமாக, அவர்களுக்குள் வளர்ந்த போட்டி மனப்பான்மை இயேசுவினுடைய ஊழியத்தின் முடிவுவரை மீண்டும் மீண்டும் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. அவர்களுக்குள் யார் பெரியவரென்று விவாதித்தார்கள். (மாற்கு 9:33-37; 10:35-45) இப்படி இரண்டாவது முறை அவர்கள் விவாதித்ததற்குப் பிறகு சீக்கிரத்திலேயே இயேசு தம்முடைய கடைசி பஸ்காவை அவர்களோடு கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்தார். அந்தச் சந்தர்ப்பத்தில், அற்பமான சேவையாகத் தோன்றிய, மற்றவர்களின் அழுக்கான பாதங்களைக் கழுவும் வழக்கமான சேவையைச் செய்ய அவர்களில் ஒருவர்கூட முன்வரவில்லை. இயேசு அதைச் செய்தார். அதன் பிறகு, “உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” என்று கூறினார்.—யோவான் 13:2-15.
20 இயேசுவைப்போல மனத்தாழ்மையைக் காண்பிக்கிற கணவர்கள் மனைவிகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், பொறுமை தேவைப்படுகிறது. பிறகு, பஸ்கா பண்டிகை நடந்த அந்த இரவில், சீஷர்கள் மீண்டும் தங்களுக்குள் யார் பெரியவரென்று விவாதித்தார்கள். (லூக்கா 22:24) மனப்பான்மையிலும் நடத்தையிலும் மாற்றங்கள் செய்ய பெரும்பாலும் காலம் எடுக்கிறது. அந்த மாற்றங்கள் மெல்ல மெல்ல ஏற்படுகின்றன. என்றாலும், பிற்பாடு சீஷர்கள் மத்தியில் நல்ல பலன்கள் விளைந்தது போலவே நம் மத்தியிலும் நல்ல பலன்கள் விளையும்போது எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும்!
21. இன்று பிரச்சினைகளை எதிர்ப்படுகையில் கணவர்கள் எதை நினைவுபடுத்திக்கொள்வதற்கும் செய்வதற்கும் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்?
21 எப்போதையும்விட இப்போது மணவாழ்க்கை பெரும் சவால்களைச் சந்திக்கிறது. தங்களுடைய திருமண உறுதிமொழிகளை அநேகர் முக்கியமானதாகக் கருதுகிறதில்லை. எனவே கணவர்களே, திருமணத்தின் ஆரம்பத்தைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். கடவுளே திருமணத்தை ஆரம்பித்து வைத்தார் என்பதையும் அது நம் அன்பான கடவுளான யெகோவாவின் மனதில்தான் உதித்தது, உருவெடுத்தது என்பதையும் நினைவில் வையுங்கள். அவர் தம்முடைய மகன் இயேசுவை நம்முடைய மீட்பராக, இரட்சகராக மட்டுமல்ல கணவர்கள் பின்பற்றத்தக்க மாதிரியாகவும் அளித்தார்.—மத்தேயு 20:28; யோவான் 3:29; 1 பேதுரு 2:21.
நீங்கள் எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• திருமணத்தின் ஆரம்பத்தை நாம் ஏற்றுக்கொள்வது ஏன் முக்கியம்?
• என்ன வழிகளில் கணவர்கள் தங்கள் மனைவிகளின்மீது அன்பு காட்ட உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்?
• இயேசு தம் சீஷர்களை நடத்திய விதத்திற்கான என்ன முன்மாதிரிகள், கணவர்கள் கிறிஸ்துவைப்போன்ற தலைமைத்துவத்தைக் கையாள வேண்டுமென காட்டுகின்றன?
[பக்கம் 14-ன் படம்]
பெண்களை இயேசு நடத்திய விதத்தைப்பற்றிய முன்மாதிரிகளைக் கணவர்கள் ஏன் கூர்ந்து கவனிக்க வேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
தம்முடைய சீஷர்கள் சோர்வாக இருந்தபோது, இயேசு அவர்களிடம் கரிசனை காட்டினார்
[பக்கம் 16-ன் படம்]
கனிவாகவும் நல்ல வார்த்தைகளாலும் கணவர்கள் மனைவிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்