கடவுளுடைய ராஜ்யம் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்தக்கூடும்
இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றியவர்களுக்கு இவ்விதமாக ஜெபிக்கும்படியாக கற்றுக்கொடுத்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக.” (மத்தேயு 6:10) இயேசுவை பின்பற்றுவதாக உரிமைபாராட்டுகிறவர்களால், அந்த வார்த்தைகள் எத்தனை அடிக்கடி கடவுளிடமாகச் சொல்லப்பட்டுள்ளன!
என்றபோதிலும், இயேசு கடவுளுடைய ராஜ்யத்துக்காக ஜெபிக்கும்படியாக தம்முடைய சீஷர்களுக்கு கற்பிப்பதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்தார். அவர் ராஜ்யத்தை அவருடைய பிரசங்க வேலையின் முக்கிய பொருளாக்கிக் கொண்டார். உண்மையில், கடவுளுடைய ராஜ்யம் “இயேசுவினுடைய போதனையின் மையப் பொருளாக பொதுவாக கருதப்படுகிறது” என்று என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது.
கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் ராஜ்யத்துக்காக ஜெபிக்கையில், அவர்கள் உண்மையில் எதற்காக ஜெபிக்கிறார்கள்? கடவுளுடைய ராஜ்யம் அவர்களுக்கும் உங்களுக்கும் எதை அர்த்தப்படுத்தக்கூடும்? இயேசு அதை எவ்விதமாக கருதினார்?
ராஜ்யத்தைப் பற்றிய இயேசுவின் கருத்து
இயேசு அடிக்கடி தம்மை “மனுஷகுமாரன்” என்றழைத்துக் கொண்டார். (மத்தேயு 10:23; 11:19; 16:28; 20:18, 28) இது தானியேல் தீர்க்கதரிசி “மனுஷகுமாரனைப்” பற்றி குறிப்பிட்டதை நமக்கு நினைப்பூட்டுகிறது. எதிர்காலத்தில் பரலோகத்தில் நடக்கவிருந்த ஒரு சம்பவத்தைக் குறித்து தானியேல் சொன்னார்: “இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்கு ஆளுகையும் (NW) மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது.”—தானியேல் 7:13, 14.
இயேசு தாம் ஆளுகையைப் பெற்றுக்கொள்ளப் போகும் சமயத்தைக் குறித்துப் பேசுகையில், தம்முடைய அப்போஸ்தலர்களிடம் சொன்னார்: “மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும் . . . பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள்.” இயேசு பின்வருமாறும்கூட சொன்னார்: “மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய் . . . வரும்போது, . . . சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து, . . . இவர்கள் [அநீதிமான்கள்] நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.”—மத்தேயு 19:28; 25:31, 32, 46.
சிங்காசனங்களையும், சகல ஜனங்களையும் பற்றிய இந்தத் தீர்க்கதரிசன குறிப்புகள், ராஜ்யம் என்பது இயேசுவும் அவரைப் பின்பற்றுகிறவர்களில் சிலரும் மனிதகுலத்தின் மீது அரசர்களாக இருக்கப்போகும் ஓர் அரசாங்கம் என்பதைக் காண்பிக்கிறது. அந்த அரசாங்கத்துக்கு அநீதிமான்களை மரணத்தில் அறுப்புண்டுபோகச் செய்வதற்கு அதிகாரமிருக்கும். என்றபோதிலும், ராஜ்ய ஆட்சியின் கீழ், நீதியுள்ள மனச்சாய்வுள்ளவர்கள் கடவுளுடைய ஈவாகிய நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வர்.
அப்படியென்றால், கடவுளுடைய ராஜ்யம் என்பது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பரலோக அரசாங்கம் என்பது தெளிவாக இருக்கிறது. ராஜ்யம் சர்ச் அல்ல, உலகப்பிரகாரமான ஒன்றாக அதை கருதுவதற்கு வேதவசனங்களில் ஆராதமில்லை. மேலும், கடவுள் கொடுக்கும் ஓர் அரசாங்கம், வெறுமென ஒரு நபரின் இருதயத்திற்குள்ளிருக்கும் ஏதோ ஒன்றாக இருக்க முடியாது. கடவுளுடைய ராஜ்யம் ஓர் அரசாங்கமாக இருப்பதன் காரணமாக, நாம் கிறிஸ்தவத்தை தழுவிக்கொள்ளும் போது அது நம்முடைய இருதயத்தில் ஏதோ ஒன்றாக ஆகிவிடுவதில்லை. ஆனால் ராஜ்யம் என்பது இருதயத்தை உட்படுத்தும் ஒரு நிலைமை என்பதாக சிலர் ஏன் நினைக்கிறார்கள்?
ராஜ்யம் நமக்குள்ளேயா?
லூக்கா 17:21 ஒரு சில பைபிள் மொழிபெயர்ப்பாளர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் முறையின் காரணமாக ஒரு சிலர் ராஜ்யம் நம்முடைய இருதயத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள். புதிய சர்வதேச மொழிபெயர்ப்பு-படி இயேசு அங்கே இவ்விதமாகச் சொன்னார்: “தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே.”
இதன் சம்பந்தமாக பைபிள் பொருள் விளக்க அகராதி இவ்விதமாகச் சொல்கிறது: “இயேசுவினுடைய ‘உள்ளுணர்வு’ அல்லது ‘உள்ளியல்பு’க்கு ஓர் உதாரணமாக இது அடிக்கடி மேற்கோள் காண்பிக்கப்பட்ட போதிலும், ‘உங்களுக்குள்’ என்ற பொருள் விளக்கம் முக்கியமாக பழைய மொழிபெயர்ப்புகளைச் சார்ந்திருக்கிறது, . . . ‘உங்களுக்குள்’ என்பது நவீன கருத்தில் ஒருமை என்பதாக பொருத்தமில்லாமல் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது; ‘உங்களுக்குள்’ . . . என்பது பன்மையாகும். (இயேசு பரிசேயர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்—வசனம் 20) . . . கடவுளுடைய ராஜ்யம் என்பது மனதின் உள்ளான ஒரு நிலை அல்லது தனிப்பட்டவரின் இரட்சிப்பு என்ற கோட்பாடு, இந்த வசனத்தின் சூழமைவுக்கும் முழு புதிய ஏற்பாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கும் முரணாகச் செல்கிறது.”
புதிய சர்வதேச மொழிபெயர்ப்பில், லூக்கா 17:21-ன் அடிக்குறிப்பு இயேசுவின் வார்த்தைகள் பின்வருமாறு மொழிபெயர்க்கப்படலாம் என்பதைக் காண்பிக்கிறது: “தேவனுடைய ராஜ்யம் உங்கள் மத்தியில் இருக்கிறது.” மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகள் இவ்விதமாக வாசிக்கிறது: “தேவனுடைய ராஜ்யம் உங்கள் மத்தியில் இருக்கிறது” அல்லது “உங்கள் நடுவில் இருக்கிறது.” (புதிய ஆங்கில பைபிள்; எருசலேம் பைபிள்; ரிவைஸ்ட் ஸ்டான்டர்டு வெர்ஷன்) பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பிரகாரம், இயேசு சொன்னார்: “தேவனுடைய ராஜ்யம் உங்கள் நடுவில் இருக்கிறது.” இயேசு ராஜ்யம் என்பது தாம் பேசிக்கொண்டிருந்த அந்தச் செருக்குள்ள பரிசேயர்களின் இருதயங்களில் இருந்ததாக அவர் அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த மேசியாவும் ராஜாவாக நியமனம் செய்யப்பட்டவருமாக இயேசு அவர்கள் மத்தியிலே இருந்தார். ஆனால் கடவுளுடைய ராஜ்யம் வருவதற்கு முன்பாக கொஞ்ச காலம் கடந்து போகும்.
அது எப்போது வரும்
இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களில் குறிப்பிட்ட ஓர் எண்ணிக்கையான ஆட்கள் பரலோக மேசியானிய ராஜ்யத்தில் அவருடைய உடன்-அரசர்களாக இருக்கும்படி தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இயேசுவைப் போலவே, அவர்கள் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக மரிக்கிறார்கள், பரலோகத்தில் ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். (1 பேதுரு 3:18) ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் மிகச் சிலராக, அவர்கள் மனிதகுலத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட 1,44,000 அரசர்களும் ஆசாரியர்களுமாக இருப்பார்கள். (வெளிப்படுத்துதல் 14:1-4; 20:6) இயேசுவின் உடன் அரசர்களில் அவருடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களும் அடங்குவர்.—லூக்கா 12:32.
ஒரு சமயம் தம்மை பின்பற்றியவர்களிடம் பேசுகையில், இயேசு இவ்விதமாக வாக்களித்தார்: “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை.” (மத்தேயு 16:28) அக்கறையூட்டுவதாய் இயேசுவின் வாக்கு ஒரு சில நாட்களுக்குப் பின் நிறைவேறியதை அடுத்த வசனம் காண்பிக்கிறது. இயேசு தம்முடைய சீஷர்களில் மூன்று பேரை அழைத்துக் கொண்டு ஒரு மலையின் மேல் சென்றார். அவர்களுக்கு முன்பாக அவர் அங்கே மறுரூபமானார். இவ்விதமாக ராஜ்ய மகிமையில் அவரை அவர்கள் தரிசித்தார்கள். (மத்தேயு 17:1-9) ஆனால் ராஜ்யம் அந்தச் சமயத்தில் ஸ்தாபிக்கப்படவில்லை. அது எப்போது நடந்தேறும்?
இயேசுவின் உவமைகளில் ஒன்று அவர் உடனடியாக மேசியானிய ராஜாவாக அமர்த்தப்படமாட்டார் என்பதை சுட்டிக்காட்டுகிறது. லூக்கா 19:11-15-ல் நாம் வாசிக்கிறோம்: “அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தப்படியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்: பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான். புறப்படும் போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப் பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்து ராத்தல் திரவியங்களைக் கொடுத்து: நான் திரும்பி வருமளவும் இதைக்கொண்டு வியாபாரம் பண்ணுங்கள் என்று சொன்னான். . . . அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வந்த போது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம் பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்து வரச்சொன்னான்.”
அந்நாட்களில், ஒரு மனிதன் இஸ்ரேலிலிருந்து ரோமுக்குப் பயணப்பட்டு, ராஜ்ய வல்லமையை பெற்றுக்கொள்ளும்வரை அந்த நகரத்தில் காத்திருந்து, ஒரு ராஜாவாக தன் தாயகம் திரும்ப நீண்ட நாட்கள் எடுக்கும். இயேசு, “பிரபுவாக” இருந்தார். அவர் ராஜாவாக தம்முடைய வல்லமையை பரலோகத்தில் தம்முடைய பிதாவினிடத்திலிருந்து பெற்றுக்கொள்வார், ஆனால் அவர் உடனடியாக மேசியானிய ராஜாவாக பதவியில் அமர்த்தப்படமாட்டார். அவரைப் பின்பற்றுகிறவர்கள், கணிசமான காலத்துக்கு அவர் ராஜாவாக திரும்பி வருவதற்கு முன்னால், ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்கும் வேலையை நிறைவேற்றுவதன் மூலம் வியாபாரம் பண்ணுவார்கள்.
ராஜ்யம் எவ்விதமாக வருகிறது
கடவுளை நேசிப்பவர்கள் அவருடைய ராஜ்யம் வரும்படியாக ஜெபிக்கையில் என்ன கேட்கிறார்கள்? மெய்யான சமாதானத்தையும் செழுமையையும் கொண்டுவருவதாக வாக்களித்து, அதை நிறைவேற்ற தவறியிருக்கும் மனிதனால் உண்டுபண்ணப்பட்ட அரசாங்க அமைப்புகளை அழிப்பதன் மூலம் முடிவான ஒரு நடவடிக்கையை பரலோக ராஜ்யம் எடுக்க வேண்டும் என்று அவர்கள் உண்மையில் கேட்டுக்கொள்கிறார்கள். இந்த நடவடிக்கையை சுட்டிக்காட்டுகிறவராய் தானியேல் தீர்க்கதரிசி இவ்விதமாக எழுதினார்: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) இது எப்போது சம்பவிக்கும்?
மனித விவகாரங்களில் அசாதாரணமான திடீர் சம்பவங்களைப் பார்க்கும் அந்தச் சந்ததிக்குள் அது சம்பவிக்கும் என்று இயேசு முன்னுரைத்தார். தம்முடைய “பிரசன்னத்தைக்” குறித்து இயேசு ஈடிணையில்லா யுத்தங்கள், பூமியதிர்ச்சிகள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள்—ஆம், மேலும் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தி உலகம் முழுவதிலும் பிரசங்கிக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகளை உட்படுத்தும் கூட்டு “அடையாளத்தைக்” கொடுத்தார்.—மத்தேயு, அதிகாரங்கள் 24, 25; மாற்கு, அதிகாரம் 13; லூக்கா, அதிகாரம் 21.
இயேசுவின் தீர்க்கதரிசனம் இப்பொழுது—நம்முடைய 20-ம் நூற்றாண்டில்—நடந்தேறி வரும் சம்பவங்களை உட்படுத்துகிறது. ஆகவே கடவுளுடைய ராஜ்யம் மனித குலத்துக்கு மகத்தான ஆசீர்வாதங்களைக் கொண்டு வருவதற்கு இன்னும் நீண்ட காலம் எடுக்காது. ராஜ்ய ஆட்சியின் நன்மைகளை அனுபவிக்கிறவர்களில் நீங்களும் இருக்கலாம். ஆனால் கடவுளுடைய ராஜ்யம் சரியாக உங்களுக்கும் உங்களுடைய அன்பானவர்களுக்கும் எதை அர்த்தப்படுத்தக்கூடும்?
ராஜ்ய ஆட்சியின் ஆசீர்வாதங்கள்
பூமி முழுவதிலும் மகிழ்ச்சி காணப்படும். ஒரு “புதிய வானத்தின்” கீழ்—பரலோக அரசாங்கம்—கீழ்ப்படிதலுள்ள ராஜ்ய குடிமக்களாகிய உலகளாவிய சமுதாயமாகிய “புதிய பூமி” இருக்கும். “தேவன்தாமே அவர்களோடே கூட இருப்பார்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்.” அப்போது மகிழ்ச்சியேயன்றி வேறு எதற்கும் எந்தக் காரணமுமிராது, ஏனென்றால், “துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.”—வெளிப்படுத்துதல் 21:1-4.
மரணமிராது. துக்கத்தை உண்டுபண்ணும் இந்தப் பயங்கரமான காரியம், நண்பர்களையும் அன்பானவர்களையும் இனி பறித்துக்கொள்ள முடியாது. “பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.” (1 கொரிந்தியர் 15:26) சவ அடக்கங்களுக்குப் பதிலாக, கடவுளுடைய ஞாபகத்திலிருப்பவர்களின் உயிர்த்தெழுதல்கள் நடைபெறும் போது என்னே சந்தோஷம் இருக்கும்!—யோவான் 5:28, 29.
வியாதிக்கும் பலவீனத்துக்கும் பதிலாக உற்சாகமளிக்கும் சுகஆரோக்கியம் இருக்கும். இனிமேலும் சரீர மற்றும் மன நோயினால் அலைக்கழிக்கப்படுகிறவர்களால் மருத்துவமனை படுக்கைகள் நிறைந்திருக்காது. தலைச்சிறந்த மருத்துவரான இயேசு கிறிஸ்து “ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு” தம்முடைய மீட்பின் பலியினுடைய மதிப்பை பிரயோகிப்பார். (வெளிப்படுத்துதல் 22:1, 2; மத்தேயு 20:28; 1 யோவான் 2:1, 2) பூமியின் மீது இருந்த போது அவர் செய்த குணப்படுத்தல்கள், ராஜ்யத்தின் மூலமாக அவர் செய்யப் போவதற்கு ஒரு மாதிரியாக மாத்திரமே இருந்தது.—ஏசாயா 33:24; மத்தேயு 14:14-ஐ ஒப்பிடவும்.
ஏராளமான உணவுப்பொருட்கள் இருக்கும். சங்கீதக்காரன் சொன்னது போலவே, “பூமியில் ஏராளமான தானியம் உண்டாயிருக்கும், மலைகளின் உச்சியில் நிறைந்து வழியும்.” (சங்கீதம் 72:16, NW) இதோடுகூட ஏசாயாவின் தீர்க்கதரிசனம் சொல்வதாவது: “இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தைச் சேனைகளின் யெகோவா ஆயத்தப்படுத்துவார்; அதிலே கொழும் பதார்த்தங்களும் பழந்திராட்சரசமும் நிறைந்திருக்கும்; கொழும் பதார்த்தங்கள் ஊன் மிகுந்தவை; பழந்திராட்சரசம் வடிகட்டப்பட்டது.” (ஏசாயா 25:6, NW) நிச்சயமாகவே ராஜ்ய ஆட்சியின் கீழ் பூமியின் குடிமக்களை பஞ்சம் தொல்லைப்படுத்தாது.
முழு பூமியும் பரதீஸாக்கப்படும். மனம் வருந்திய குற்றவாளிக்கு இயேசு கொடுத்த வாக்கு இவ்விதமாக நிறைவேற்றப்படும்: “நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்.” (லூக்கா 23:43) அக்கிரமத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டு, இன்பமான, பூங்கா போன்று மாற்றப்படும் கோளமாகிய பூமியில், இந்த பூமியில் நீங்களும்கூட நித்திய ஜீவனை அனுபவித்து மகிழலாம்.—யோவான் 17:3.
இந்த மகத்தான எதிர்பார்ப்புகள் கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதகுலத்துக்கு முன்பாகவும் வைக்கப்படுகின்றன. யெகோவாவின் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிள் ஆசீர்வாதமான இந்த உறுதிமொழிகளை தருகின்றது. கடவுளுடைய ராஜ்யம் இவை அனைத்தையும் உங்களுக்கு அர்த்தப்படுத்தக்கூடும். (w92 3/15)
[பக்கம் 7-ன் படம்]
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி இயேசு சொன்னதை நீங்கள் நம்புகிறீர்களா?