இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
கூடுதலான திருத்தும் புத்திமதி
இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் கப்பர்நகூம் வீட்டில் இன்னும் இருக்கையில், அவர்களில் யார் பெரியவன் என்ற அப்போஸ்தலர்களின் தர்க்கத்தைத் தவிர வேறு ஏதோவொன்று கலந்தாலோசிக்கப்படுகிறது. இந்தச் சம்பவமும்கூட இயேசு தனிப்பட்ட விதமாய் அங்கில்லாத போது அவர்கள் கப்பர்நகூமுக்கு திரும்பி வருகையில் நடந்திருக்கலாம். அப்போஸ்தலனாகிய யோவான் அறிக்கை செய்கிறான்: “நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால் அவனைத் தடுத்தோம்.”
அப்போஸ்தலர்கள் ஒரு தனிப்பட்ட, சிறப்புப் பட்டம் உடைய சுகப்படுத்துகிறவர்களின் தொகுதி என்பதாக யோவான் நோக்குவது தெளிவாக இருக்கிறது. ஆகையால் அந்த மனிதன் அவர்களுடைய தொகுதியின் பாகமாக இல்லாததனால் அவன் தவறாக பலத்த செய்கைகளை செய்கிறான் என்று அவன் எண்ணுகிறான்.
என்றபோதிலும், இயேசு அறிவுரை கூறுகிறார்: “அவனைத் தடுக்க வேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக் குறித்துத் தீங்கு சொல்ல மாட்டான். நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற் போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
இந்த மனிதன் இயேசுவின் பக்கமாக இருப்பதற்கு அவரை சரீரப்பிரகாரமாய் தொடர்ந்து வரவேண்டியது தேவையாயில்லை. கிறிஸ்தவ சபை இன்னும் ஏற்படுத்தப்படாமல் இருக்கிறது, ஆகையால் அவர்களுடைய தொகுதியின் பாகமாக இல்லாமல் இருப்பது, அவன் ஒரு தனிப்பட்ட சபையைச் சேர்ந்தவன் என்று அர்த்தப்படுத்தவில்லை. அந்த மனிதனுக்கு இயேசுவின் நாமத்தில் உண்மையிலேயே விசுவாசம் இருந்தது, ஆகையால் பிசாசுகளைத் துரத்துவதில் வெற்றி காணமுடிந்தது. ஒரு வெகுமதியைப் பெறுவதற்கு தகுதியுள்ளதாக இயேசு சொன்ன காரியத்தோடு அவன் செய்துகொண்டிருந்த காரியம் சாதகமாக ஒப்பிடுவதாக இருந்தது. இதைச் செய்வதனால், அவன் தன் பலனை இழந்து போக மாட்டான் என்று இயேசு காண்பிக்கிறார்.
ஆனால் அந்த மனிதன் அப்போஸ்தலர்களின் வார்த்தைகளினாலும், செய்கைகளினாலும் இடறலடைந்தால் அப்பொழுது என்ன? இது அதிக வினைமையானதாக இருக்கும்! இயேசு குறிப்பிடுகிறார்: “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப் போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.”
அவரைப் பின்பற்றுபவர்கள், அவர்களை இடறலடையச் செய்யும் ஒரு கை, ஒரு கால் அல்லது ஒரு கண் போன்ற அருமையான எந்தக் காரியத்தையும் தங்கள் வாழ்க்கைகளிலிருந்து நீக்கிப் போட வேண்டும் என்று இயேசு சொல்கிறார். இந்த அருமையான காரியத்தைப் பிடித்துக்கொண்டு, நித்திய அழிவைக் குறிக்கும் கெஹன்னாவுக்குள் (எருசலேமுக்கு அருகில் எரிந்து கொண்டிருக்கும் குப்பை குவியல்) போடப்படுவதைவிட, அது இல்லாமலேயே கடவுளுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பது மேலானது.
இயேசு மேலும் எச்சரிக்கிறார்: “இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” அதற்குப் பின்பு அவர் இந்தச் சிறியவர்களின் மதிப்புமிக்கத் தன்மையை ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற் போனால் என்ற உதாரணத்தோடு விளக்குகிறார். அந்த 99 ஆடுகளை விட்டு விட்டு, காணாமற் போன ஓர் ஆட்டுக்காக தேடுவான், அதைக் கண்டுபிடித்தால் காணாமற்போகாத 99 ஆடுகளைக் குறித்துச் சந்தோஷப்படுகிறதைப் பார்க்கிலும், அதைக் குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான். “இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப் போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல,” என்று இயேசு முடிக்கிறார்.
அப்போஸ்தலர்கள் தங்களுக்குள்ளே பண்ணின தர்க்கத்தை ஒருவேளை மனதில் கொண்டவராய், இயேசு ஊக்கப்படுத்துகிறார்: “உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள்.” சுவையற்ற உணவுகள் உப்பினால் அதிக சுவையாக்கப்படுகின்றன. ஆக, அடையாளப்பூர்வமான உப்பு, ஒருவர் என்ன சொல்லுகிறோரோ அதை ஏற்றுக்கொள்வதற்கு சுலபமாக்குகிறது. அப்பேர்ப்பட்ட உப்பை உடையவர்களாக இருப்பது சமாதானத்தைப் பாதுகாக்க உதவும்.
ஆனால் மானிட அபூரணத்தின் காரணமாக, சில சமயங்களில் வினைமையான பிணக்கங்கள் ஏற்படும். அவைகளைக் கையாளுவதற்கு இயேசு வழிகாட்டிக் குறிப்புகளைக் கொடுக்கிறார். “உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவி கொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக் கொண்டாய்.” அவன் செவிகொடாமற் போனால் இயேசு ஆலோசனை கூறுகிறார், “இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.”
கடைசி முறையாக மட்டுமே “சபைக்கு” விஷயத்தை எடுத்துக் கொண்டு போகும்படியாக இயேசு சொல்கிறார். அதாவது, தீர்ப்புக்குரிய தீர்மானம் செய்வதற்கு சபையின் உத்தரவாதமுள்ள கண்காணிகளிடம் செல்லும்படியாக சொல்கிறார். அந்தப் பாவி அவர்களுடைய தீர்மானத்துக்கு ஒத்துப் போகவில்லையென்றால், “அவன் உனக்கு அஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப் போலவும் இருப்பானாக,” என்று இயேசு முடிக்கிறார்.
அப்பேர்ப்பட்ட ஒரு தீர்மானத்தை எடுக்கையில், கண்காணிகள் யெகோவாவின் வார்த்தையில் உள்ள போதனைகளைக் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் ஒரு நபரை குற்றவாளியாகவும், தண்டனைக்குத் தகுதியானவராகவும் கண்டால், “அவைகள் பரலோகத்தில் கட்டப்பட்டிருக்கும்.” “பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ” அதாவது, ஒருவரை குற்றமற்றவராகக் கண்டால், “அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.” இப்பேர்ப்பட்ட தீர்ப்புக்குரிய காரியங்களை ஆழ்ந்து ஆராய்கையில், இயேசு சொல்கிறார்: “இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்.” மத்தேயு 18:6–20; மாற்கு 9:38–50; லூக்கா 9:49, 50.
◆ இயேசுவின் நாட்களில் அவரோடுகூட செல்வது ஏன் தேவையாயில்லை?
◆ ஒரு சிறியவரை இடறலடையச் செய்யும் விஷயம் எவ்வளவு வினைமையானது? அப்பேர்ப்பட்ட சிறியவர்களின் முக்கியத்துவத்தை இயேசு எவ்வாறு விளக்குகிறார்?
◆ அவர்களுக்குள் உப்புள்ளவர்களாயிருக்க வேண்டும் என்று இயேசு அப்போஸ்தலர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கத் தூண்டியது ஒருவேளை என்னவாயிருக்கும்?
◆ ‘கட்டப்பட்டிருப்பது,’ ‘கட்டவிழ்க்கப்படுவது’ என்பவற்றிற்கு என்ன உட்கருத்து இருக்கிறது (w88 2/15)