இயேசுவைப் போல் மனத்தாழ்மையாக, கனிவாக இருங்கள்
“கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வரும்படி உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்.”—1 பே. 2:21.
1. யெகோவாவின் நண்பராக இருக்க வேண்டுமென்றால் நாம் ஏன் இயேசுவைப் போல் நடக்க வேண்டும்?
நமக்கு யாரையாவது ரொம்ப பிடித்திருந்தால் அவரைப் போலவே இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவோம். நீங்கள் யாரைப் போல் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? இந்த உலகத்தில் வாழ்ந்தவர்களிலேயே இயேசுதான் மிகச் சிறந்த மனிதர். ஏனென்றால், இயேசு அவருடைய அப்பா யெகோவாவை அப்படியே பின்பற்றினார். அதனால்தான், “என்னைப் பார்த்தவன் என் தகப்பனைப் பார்த்திருக்கிறான்” என்று சொன்னார். (யோவா. 14:9) அப்படியென்றால், இயேசுவைப் போல் இருக்க வேண்டும் என்றுதானே நீங்கள் ஆசைப்படுவீர்கள்! நாம் இயேசுவைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். இயேசுவைப் போல் நடக்கும்போது யெகோவாவின் நண்பராக ஆக முடியும். இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக உயர்ந்தவர் யெகோவாதான். அவருடைய நண்பராக இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்!
2, 3. (அ) பைபிளில் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி யெகோவா ஏன் பதிவு செய்திருக்கிறார், நாம் எப்படி இருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்? (ஆ) இந்த கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் நாம் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
2 இயேசுவின் வாழ்க்கையில் நடந்த எல்லா சம்பவங்களையும் யெகோவா பைபிளில் பதிவு செய்திருக்கிறார். ஏனென்றால், அவருடைய மகனைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும், அவரைப் போலவே நடக்க வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார். (1 பேதுரு 2:21-ஐ வாசியுங்கள்.) இயேசுவின் வாழ்க்கையை பைபிள், அடிச்சுவடுக்கு ஒப்பிடுகிறது. ஒருவர் நடந்துபோகும்போது பதியும் கால்தடம்தான் அடிச்சுவடு. நாம் இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்ற வேண்டுமென்றால் அவரைப் போலவே நடக்க வேண்டும். இயேசு பாவமே செய்யாதவர். அதனால், அவரை அப்படியே நூறு சதவீதம் பின்பற்றுவது கஷ்டம்தான். அப்படி பின்பற்ற வேண்டுமென்று யெகோவாவும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு இயேசுவைப் பின்பற்ற வேண்டுமென்றுதான் அவர் எதிர்பார்க்கிறார்.
3 இப்போது நாம் இயேசுவின் அருமையான குணங்களில் 4 குணங்களைப் பற்றி பார்க்கப் போகிறோம். இயேசு எப்படி மனத்தாழ்மையாக, கனிவாக நடந்துகொண்டார் என்று இந்தக் கட்டுரையில் படிப்போம். அடுத்த கட்டுரையில், அவர் எப்படி தைரியமாக, விவேகமாக நடந்துகொண்டார் என்று படிப்போம். ஒவ்வொரு குணத்தைப் பற்றி படிக்கும்போது 3 கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வோம். (1) அந்த குணத்தின் அர்த்தம் என்ன? (2) இயேசு அந்த குணத்தை எப்படி காட்டினார்? (3) இயேசுவைப் போலவே நாம் எப்படி அந்த குணத்தை காட்டலாம்?
இயேசு எப்படி மனத்தாழ்மையாக இருந்தார்?
4. மனத்தாழ்மையாக இருப்பதன் அர்த்தம் என்ன?
4 மனத்தாழ்மையாக இருப்பதன் அர்த்தம் என்ன? தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் மனத்தாழ்மையாக இருப்பார்கள் என்று பெருமை பிடித்த நிறையப் பேர் நினைக்கிறார்கள். மனத்தாழ்மையாக இருப்பது பலவீனம் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையை சொன்னால், மனத்தாழ்மையாக இருப்பதற்கு மனபலமும் தைரியமும் ரொம்பவே தேவை. மனத்தாழ்மையாக இருப்பவர்கள் பெருமையாகவோ திமிராகவோ நடந்துகொள்ள மாட்டார்கள். அதுமட்டுமல்ல, நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பது நாம் மனத்தாழ்மையாக இருக்கிறோமா இல்லையா என்பதை காட்டிவிடும். இதைப் பற்றி ஒரு பைபிள் டிக்ஷ்னரி இப்படி சொல்கிறது: “கடவுளுக்கு முன்னாடி நாம ஒன்னுமே இல்லனு புரிஞ்சுக்கிறதுதான் மனத்தாழ்மை.” அப்படியென்றால், கடவுள் நம்மைவிட ரொம்ப உயர்ந்தவர் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, மற்றவர்களும் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்று நினைக்க வேண்டும். (ரோ. 12:3; பிலி. 2:3) நாம் எல்லாருமே பாவம் செய்கிறவர்களாக இருப்பதால் மனத்தாழ்மையாக நடந்துகொள்வது கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும், இயேசுவைப் போலவே மனத்தாழ்மையாக நடக்கும்போது... யெகோவா எவ்வளவு உயர்ந்தவர் என்று யோசித்துப் பார்க்கும்போது... நம்மால் இந்த குணத்தை காட்ட முடியும்.
5, 6. (அ) தலைமை தூதரான மிகாவேல் யார்? (ஆ) மிகாவேல் எப்படி மனத்தாழ்மையாக நடந்துகொண்டார்?
5 கடவுளுடைய மகனாக இருக்கிற இயேசு, எப்போதுமே மனத்தாழ்மையாக நடந்துகொண்டார். பரலோகத்தில் சக்தியுள்ள ஒரு தேவதூதராக இருந்த சமயத்திலும் சரி பூமியில் ஒரு மனிதராக இருந்த சமயத்திலும் சரி, அவர் மனத்தாழ்மையாக நடந்துகொண்டார். இந்த குணத்தை அவர் எப்படி காட்டினார் என்று இப்போது பார்க்கலாம்.
6 இயேசு யோசித்த விதம்: இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி யூதா புத்தகத்தில் இருக்கிறது. (யூதா 9-ஐ வாசியுங்கள்.) மோசே இறந்ததற்குப் பிறகு அவருடைய உடலை யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்தில் யெகோவா புதைத்துவிட்டார். (உபா. 34:5, 6) மோசேயின் “உடலை” பற்றி தலைமை தூதரான மிகாவேலுக்கும் (அதாவது இயேசு கிறிஸ்துவுக்கும்) பிசாசுக்கும் ஒரு பயங்கர “விவாதம்” நடந்தது. ஒருவேளை, மோசேயின் உடலை வைத்து இஸ்ரவேலர்களைப் பொய் வணக்கத்தில் ஈடுபடுத்த பிசாசு நினைத்திருக்கலாம். அவன் என்ன செய்ய நினைத்திருந்தாலும் சரி, அதையெல்லாம் மிகாவேல் தடுத்து நிறுத்தினார். “விவாதம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை சட்ட ரீதியான விவாதத்தை விளக்குவதற்கும் பயன்படுத்துகிற வார்த்தை. ஒருவேளை, மோசேயின் உடலை எடுத்துக்கொள்கிற ‘“உரிமை பிசாசுக்கு” இல்லை என்று மிகாவேல் சொல்லியிருக்கலாம்’ என்று ஒரு புத்தகம் சொல்கிறது. மிகாவேல் தலைமை தூதராக இருந்தாலும் சாத்தானை அவர் நியாயந்தீர்க்கவில்லை. ஏனென்றால், அந்த அதிகாரம் மிகப்பெரிய நீதிபதியான யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று அவர் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார். இயேசு எந்தளவுக்கு மனத்தாழ்மையாக இருந்தார் என்பதற்கு இது ஒரு உதாரணம்!
7. பேசும் விதத்திலும் நடந்துகொள்ளும் விதத்திலும் இயேசு எப்படி மனத்தாழ்மையாக இருந்தார்?
7 இயேசு பூமியில் இருந்தபோது அவர் பேசிய விதத்தில் இருந்தும் நடந்துகொண்ட விதத்தில் இருந்தும் அவருக்கு எந்தளவு மனத்தாழ்மை இருந்தது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. இயேசு பேசிய விதம்: மற்றவர்கள் தம்மைப் புகழ வேண்டுமென்று அவர் ஒருநாளும் நினைக்கவில்லை. எல்லா புகழும் யெகோவாவுக்கே போய் சேர வேண்டுமென்று நினைத்தார். (மாற். 10: 17, 18; யோவா. 7:16) சீடர்களிடம் பேசியபோது அவர்களை மட்டம்தட்டியோ, தரக்குறைவாகவோ பேசவில்லை. எப்போதும் மரியாதையாக பேசினார். அவர்களிடம் இருந்த நல்ல குணங்களை மனதார பாராட்டினார். அவர்கள்மீது அவருக்கு நம்பிக்கை இருந்ததை காட்டினார். (லூக். 22:31, 32; யோவா. 1:47) இயேசு நடந்துகொண்ட விதம்: இயேசு ரொம்ப சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார். ஆடம்பரமாக வாழ வேண்டுமென்ற ஆசை அவருக்கு துளியும் இருந்ததில்லை. (மத். 8:20) மற்றவர்கள் செய்ய தயங்கிய வேலைகளைக்கூட இயேசு செய்தார். (யோவா. 13:3-15) பொதுவாக பெருமை பிடித்தவர்கள், யாருக்கும் கீழ்ப்படிந்து நடக்க மாட்டார்கள். ஆனால், இயேசு மனத்தாழ்மையாக இருந்ததால் எல்லா விஷயத்திலும் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து நடந்தார். அதற்காக தம்முடைய உயிரையே தியாகம் செய்தார்! (பிலிப்பியர் 2:5-8-ஐ வாசியுங்கள்.) இயேசு உண்மையிலேயே ‘மனத்தாழ்மையாக’ இருந்தார் என்று இது காட்டுகிறது இல்லையா?—மத். 11:29.
நாம் எப்படி மனத்தாழ்மையாக இருக்கலாம்?
8, 9. நாம் எப்படி மனத்தாழ்மையாக நடந்துகொள்ளலாம்?
8 நாம் எப்படி இயேசுவைப் போல் மனத்தாழ்மையாக நடந்துகொள்ளலாம்? நாம் யோசிக்கிற விதம்: நாம் மனத்தாழ்மையாக இருந்தால் நம் வரையறைகளைப் புரிந்து நடந்துகொள்வோம்; மற்றவர்களை நியாயந்தீர்க்க மாட்டோம். அதாவது, ‘ஒருவர் இப்படித்தான்’ என்று முத்திரை குத்த மாட்டோம். யாரையும் குறை சொல்லவோ சந்தேகப்படவோ மாட்டோம். (லூக். 6:37; யாக். 4:12) அதுமட்டுமல்ல, ‘மிஞ்சின நீதிமானைப்’ போலவும் நடந்துகொள்ள மாட்டோம். அதாவது, நம்மிடம் இருக்கிற திறமையோ பொறுப்போ மற்றவர்களிடம் இல்லையென்றால், அதற்காக அவர்களை தாழ்வாக நினைக்க மாட்டோம். (பிர. 7:16) மனத்தாழ்மையாக இருக்கிற மூப்பர்கள் மற்ற சகோதர சகோதரிகளைவிட அவர்கள்தான் ரொம்ப உயர்ந்தவர்கள் என்று நினைக்க மாட்டார்கள், மற்றவர்களை ‘மேலானவர்களாக பார்ப்பார்கள்.’—பிலி. 2:3; லூக். 9:48.
9 வால்டர் ஜெ. தார்ன் என்ற சகோதரர் 1894-லிருந்து பயணக் கண்காணியாக சேவை செய்துகொண்டிருந்தார். பல வருடங்களுக்குப் பின்பு நியு யார்க்கில் இருந்த நம் அமைப்பின் கோழிப் பண்ணையை கவனித்துக்கொள்ளும்படி அவரிடம் சொன்னார்கள். “நான் எவ்ளோ முக்கியமான வேலை எல்லாம் செஞ்சிட்டு இருக்கணும், அதை விட்டுட்டு இந்த வேலைய செய்றேனே” என்று அவர் யோசிக்கும்போது, “நீ ஒரு சாதாரண தூசி, உன்னை பத்தி பெருமையா நினைக்குறதுக்கு என்ன இருக்கு” என்று அவர் தன்னையே கேட்டுக்கொள்வாராம். (ஏசாயா 40:12-15-ஐ வாசியுங்கள்.) எவ்வளவு மனத்தாழ்மை அவருக்கு!
10. பேசும் விதத்திலும் நடந்துகொள்ளும் விதத்திலும் நாம் மனத்தாழ்மையாக இருக்கிறோம் என்பதை எப்படி காட்டலாம்?
10 நாம் பேசும் விதம்: மற்றவர்களிடம் நாம் பேசுகிற விதமே நாம் மனத்தாழ்மையாக இருக்கிறோமா இல்லையா என்று காட்டிவிடும். (லூக். 6:45) நாம் மனத்தாழ்மையாக இருந்தால், நமக்கு இருக்கிற பொறுப்புகளைப் பற்றியோ நாம் செய்த நல்ல விஷயங்களைப் பற்றியோ தம்பட்டம் அடிக்க மாட்டோம். (நீதி. 27:2) அதற்குப் பதிலாக நம் சகோதர சகோதரிகள் செய்கிற நல்ல விஷயத்திற்காக அவர்களை மனதாரப் பாராட்டுவோம். அவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பற்றியும் திறமைகளைப் பற்றியுமே அதிகமாகப் பேசுவோம். (நீதி. 15:23) நாம் நடந்துகொள்கிற விதம்: நாம் மனத்தாழ்மையாக இருந்தால் இந்த உலகத்தில் பேரும் புகழும் சம்பாதிக்க வேண்டுமென்று நினைக்க மாட்டோம். யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்வதற்காக எளிமையான வாழ்க்கை வாழ்வோம், சாதாரண வேலைகளை செய்வதற்குக்கூட தயங்க மாட்டோம். (1 தீ. 6:6, 8) எல்லாவற்றிற்கும் மேல் நாம் எப்போதும் கீழ்ப்படிதலை காட்டுவோம். அதாவது, சபையில் நம்மை ‘தலைமைதாங்கி நடத்துகிறவர்களுக்கும்,’ யெகோவா அவருடைய அமைப்பு மூலமாக கொடுக்கிற ஆலோசனைகளுக்கும் கீழ்ப்படிவோம்.—எபி. 13:17.
இயேசு எப்படி கனிவாக நடந்துகொண்டார்?
11. கனிவு என்றால் என்ன?
11 கனிவு என்றால் என்ன? கனிவு என்ற வார்த்தைக்கு மென்மையாக, அக்கறையாக நடந்துகொள்வது என்று அர்த்தம். நாம் ஒருவரிடம் அன்பு, பாசம், கரிசனை காட்டும்போது கனிவாக நடக்கிறோம் என்று சொல்லலாம். அதனால்தான் பைபிள் இந்த குணத்தை “கரிசனை,” “இரக்கம்,” ‘கனிவான பாசம்’ என்றெல்லாம் சொல்கிறது. (லூக். 1:78; 2 கொ. 1:3; பிலி. 1:8) கஷ்டத்தில் இருக்கிற ஒருவர்மீது வெறுமனே இரக்கப்படுவது மட்டும் கனிவு அல்ல; அவர் படுகிற கஷ்டத்தை பார்த்து ‘மனதுருகி, அவருக்கு உதவுவதுதான்’ உண்மையான கனிவு என்று ஒரு பைபிள் ஆராய்ச்சி புத்தகம் சொல்கிறது. நாம் செய்யும் உதவியால் அவர்கள் வாழ்க்கை நல்லபடியாக மாறும். கனிவு என்ற குணத்தை காட்டும்போது, மற்றவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படும்.
12. இயேசுவுக்கு மக்கள்மீது கரிசனையும் கனிவும் இருந்தது என்று எப்படி சொல்லலாம், அதனால் இயேசு என்ன செய்தார்?
12 இயேசு எப்படி கனிவாக நடந்துகொண்டார்? இயேசுவுக்கு கனிவான உணர்ச்சிகள் இருந்தது, அதை செயலில் காட்டினார். மற்றவர்கள் கஷ்டப்பட்டபோது இயேசு அவர்கள்மீது மனதுருகினார். மரியாளும் மற்றவர்களும் லாசரு இறந்ததை நினைத்து அழுதுகொண்டு இருந்ததைப் பார்த்தபோது இயேசுவும் அவர்களோடு சேர்ந்து அழுதார். (யோவான் 11:32-35-ஐ வாசியுங்கள்.) இதற்கு முன்பு ஒரு விதவையின் மகன் இறந்தபோது அவர்மீது இருந்த கரிசனையால் அவருடைய மகனை இயேசு உயிரோடு எழுப்பியிருந்தார். இப்போதும் அதே கரிசனையின் காரணமாக லாசருவை உயிரோடு எழுப்பினார். (லூக். 7:11-15; யோவா. 11:38-44) இதனால், லாசருவின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் வந்தது. ஒருவேளை, அவருக்கு பரலோகத்தில் வாழ்கிற நம்பிக்கை கிடைத்திருக்கலாம். ஒரு சமயம் இயேசுவைப் பார்க்க மக்கள் கூட்டமாக வந்தபோது அவர்கள்மீது அவர் ‘மனதுருகினார்.’ அதனால், அவர்களுக்கு “நிறைய விஷயங்களைக் கற்பிக்க ஆரம்பித்தார்.” (மாற். 6:34) இயேசு கற்றுக்கொடுத்த விஷயங்கள் அந்த மக்களுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது! மக்கள்மீது இயேசுவுக்கு கரிசனையும் கனிவும் இருந்ததால்தான் அவர்களுக்கு என்ன தேவை என்று பார்த்து உதவி செய்தார்.—மத். 15:32-38; 20:29-34; மாற். 1:40-42.
13. இயேசு எப்படி மற்றவர்களிடம் கனிவாக பேசினார்? (ஆரம்பப் படம்)
13 இயேசு கனிவாக பேசினார். இயேசு எல்லாரிடமும் கனிவாக பேசினார். முக்கியமாக, பல கஷ்டங்களை அனுபவித்தவர்களிடம் ரொம்ப கனிவாக பேசினார். ‘அவர் நெரிந்தநாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும்’ இருப்பார் என்று ஏசாயா புத்தகத்தில் இயேசுவைப் பற்றி சொல்லி இருக்கிற விஷயங்களை மத்தேயு குறிப்பிட்டார். (ஏசா. 42:3; மத். 12:20) அந்த வார்த்தைகளுடைய அர்த்தம் என்ன? இயேசு யாரையும் கொடுமைப்படுத்தவில்லை, மோசமாகவும் நடத்தவில்லை. எல்லாரிடமும் ரொம்ப ஆறுதலாக பேசினார், அவர்களை உற்சாகப்படுத்தினார். “இருதயம் நொறுங்குண்ட” மக்களிடம் நம்பிக்கையாக பேசினார், அருமையான எதிர்காலத்தைப் பற்றி அவர்களிடம் சொன்னார். (ஏசா. 61:1) “உழைத்துக் களைத்துப் போனவர்களே, பெருஞ்சுமை சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பேன்” என்று இயேசு சொன்னார். (மத். 11:28-30) யெகோவா, தம்மை வணங்குகிற ஒவ்வொருவர்மீதும் ரொம்ப அக்கறையாக இருக்கிறார் என்று இயேசு சீடர்களிடம் சொன்னார். உலகத்தின் பார்வையில், ‘சிறியவர்களாக’ இருக்கிறவர்களை, அதாவது ரொம்ப சாதாரணமாக, தாழ்வாக இருக்கிறவர்களை, யெகோவா மிகவும் உயர்வாக மதிக்கிறார், அவர்கள்மீதும் அக்கறையாக இருக்கிறார் என்று சொன்னார்.—மத். 18:12-14; லூக். 12:6, 7.
நாம் எப்படி கனிவாக நடந்துகொள்ளலாம்?
14. கனிவான உணர்ச்சிகளை நாம் எப்படி காட்டலாம்?
14 நாம் எப்படி இயேசுவைப் போல் கனிவாக நடந்துகொள்ளலாம்? கனிவான உணர்ச்சிகளைக் காட்டுங்கள். “கனிவான பாசத்தையும் கரிசனையையும்” காட்டுவது எல்லாருக்கும் இயல்பாகவே வந்துவிடாது. இருந்தாலும், இந்த உணர்ச்சிகளை காட்ட நாம் ரொம்ப முயற்சி செய்ய வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. இந்த உணர்ச்சிகளைக் காட்டினால்தான் நாம் ‘புதிய சுபாவத்தை அணிந்திருக்கிறோம்’ என்று சொல்ல முடியும். நம் ஒவ்வொருவரிடமும் யெகோவா இதைத்தான் எதிர்பார்க்கிறார். (கொலோசெயர் 3:9, 10, 12-ஐ வாசியுங்கள்.) நாம் கனிவான உணர்ச்சிகளை காட்ட வேண்டுமென்றால் நம்முடைய ‘இதயக் கதவை அகலத் திறக்க வேண்டும்.’ (2 கொ. 6:11-13) மற்றவர்கள் தங்களுடைய கவலைகளை, கஷ்டங்களை சொல்லும்போது நாம் காதுகொடுத்து கேட்க வேண்டும். (யாக். 1:19) உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் அவங்க இடத்துல இருந்தா எனக்கு எப்படி இருக்கும்? அந்த மாதிரி சமயத்துல மத்தவங்க எனக்கு என்ன செய்யணும்னு எதிர்பார்ப்பேன்?’—1 பே. 3:8.
15. துக்கத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறவர்களுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம்?
15 கனிவாக நடந்துகொள்ளுங்கள். மற்றவர்கள்மீது நமக்கு கனிவான பாசம் இருந்தது என்றால் அவர்களுக்கு உடனே உதவி செய்வோம். முக்கியமாக, துக்கத்தில் இருப்பவர்களுக்கும் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கும் நாம் ஓடிப்போய் உதவி செய்வோம். ‘அழுகிறவர்களோடு சேர்ந்து அழுங்கள்’ என்று ரோமர் 12:15 சொல்கிறது. பொதுவாக கஷ்டத்தில் இருக்கிற நிறையப் பேர், அவர்களுடைய பிரச்சினைக்கு மற்றவர்கள் தீர்வு சொல்ல வேண்டுமென்பதை விட அவர்களுடைய வேதனையை சொல்லும்போது நாம் காதுகொடுத்து கேட்க வேண்டுமென்றுதான் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள்மீது யாராவது அக்கறை காட்ட மாட்டார்களா என்று ஏங்குவார்கள். மகளை இழந்த சமயத்தில் மற்ற சகோதர சகோதரிகள் தனக்கு எப்படி ஆறுதலாக இருந்தார்கள் என்று ஒரு சகோதரி சொல்கிறார்: ‘நான் அழுதப்போ அவங்களும் என்னோட சேர்ந்து அழுதாங்க. அதுவே எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது.’ கஷ்டத்தில் இருக்கிற நம் சகோதர சகோதரிகளுக்கு வேறு என்ன வழிகளில் உதவி செய்யலாம்? கணவரை இழந்த ஒரு சகோதரிக்கு, அவர்கள் வீட்டில் ஏதாவது ரிப்பேர் வேலை இருந்தால் அதை செய்து கொடுக்கலாம். வயதான சகோதர சகோதரிகளை கூட்டங்களுக்கோ ஊழியத்திற்கோ அழைத்துக்கொண்டு போகலாம். அவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் அழைத்து செல்லலாம். மற்றவர்களுக்கு நாம் செய்கிற சின்ன சின்ன உதவிகள்கூட அவர்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். (1 யோ. 3:17, 18) கரிசனை காட்டுவதற்கு ஒரு முக்கியமான வழி, ஊழியத்தில் அதிக நேரம் செலவு செய்வதுதான். இப்படி நாம் செய்கிற உதவி அவர்கள் வாழ்க்கையையே மாற்றிவிடலாம்.
16. சோகமாக இருப்பவர்களிடம் நாம் எப்படி ஆறுதலாக பேசலாம்?
16 கனிவாக பேசுங்கள். நமக்கு கனிவும் கரிசனையும் இருந்தால் ‘சோகமாயிருக்கிறவர்களிடம் ஆறுதலாகப் பேசுவோம்.’ (1 தெ. 5:14) எப்படி ஆறுதலாகப் பேசலாம்? அவர்கள்மீது நமக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்று அவர்களிடம் சொல்லலாம். அவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களுக்காகவும் திறமைகளுக்காகவும் அவர்களை பாராட்டலாம். யெகோவா அவர்களை ரொம்ப நேசிப்பதால்தான் தம்முடைய மக்களில் ஒருவராக அவர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தலாம். (யோவா. 6:44) ‘நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களை’ யெகோவா ஒருநாளும் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையை கொடுக்கலாம். (சங். 34:18) சோகமாக இருப்பவர்களிடம் நாம் இப்படி கனிவாக பேசும்போது அவர்களுக்கு ரொம்ப தெம்பாகவும் ஆறுதலாகவும் இருக்கும்.—நீதி. 16:24.
17, 18. (அ) யெகோவாவின் ஆடுகளை மூப்பர்கள் எப்படி நடத்த வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதை பற்றி பார்க்கப் போகிறோம்?
17 மூப்பர்களே, யெகோவா உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்? அவருடைய ஆடுகளை நீங்கள் கனிவாக மென்மையாக நடத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். (அப். 20:28, 29) சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்துவதும், அவர்களிடம் ஆறுதலாகப் பேசுவதும், அவர்களுக்கு யெகோவாவைப் பற்றி சொல்லிக் கொடுப்பதும் உங்களுடைய கடமை. (ஏசா. 32:1, 2; 1 பே. 5:2-4) கனிவான பாசத்தை காட்டுகிற மூப்பர்கள், சகோதர சகோதரிகளை அதிகாரம் பண்ண மாட்டார்கள். அவர்களால் முடியாததை செய்ய சொல்லி அவர்களை கஷ்டப்படுத்த மாட்டார்கள். அவர்களுடைய மனதை வேதனைப்படுத்துகிற மாதிரி நடந்துகொள்ள மாட்டார்கள். சகோதர சகோதரிகளுக்கு யெகோவாமீது அன்பும் பாசமும் இருப்பதால் அவர்களால் முடிந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்கு செய்வார்கள் என்று மூப்பர்கள் நம்புவார்கள்.—மத். 22:37.
18 இயேசு மனத்தாழ்மையாக இருந்ததையும் கனிவாக நடந்துகொண்டதையும் பற்றி நன்றாக யோசித்துப் பார்க்கும்போது அவரைப் போலவே நடந்து கொள்ள வேண்டுமென்று நாமும் ஆசைப்படுவோம். அடுத்த கட்டுரையில், இயேசுவைப் போல் எப்படி தைரியமாகவும் விவேகமாகவும் இருக்கலாம் என்று பார்க்கலாம்.