அதிகாரம் 63
கூடுதல் ஆலோசனைகளை இயேசு கொடுக்கிறார்
மத்தேயு 18:6-20 மாற்கு 9:38-50 லூக்கா 9:49, 50
மற்றவர்களைப் பாவம் செய்ய வைப்பது பற்றிய எச்சரிக்கை
ஒரு சகோதரர் பாவம் செய்தால் என்ன செய்ய வேண்டும்?
தன்னைப் பின்பற்றுகிறவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இயேசு சற்று முன்புதான் சொல்லி முடித்திருந்தார். அவர்கள் பிள்ளைகளைப் போலத் தாழ்மையாகவும், அந்தஸ்து பார்க்காமலும் இருக்க வேண்டும். ‘ஒரு சின்னப் பிள்ளையை எனக்காக ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்கள்’ என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 18:5.
அப்போஸ்தலர்கள் சமீபத்தில்தான் தங்களில் யார் உயர்ந்தவர் என்பதைப் பற்றி வாக்குவாதம் செய்திருந்தார்கள். அதனால், இயேசு அவர்களைத் திருத்தினார். இப்போது அப்போஸ்தலன் யோவான் இன்னொரு விஷயத்தை இயேசுவின் கவனத்துக்குக் கொண்டுவருகிறார். அவர் இயேசுவிடம், “ஒருவன் உங்களுடைய பெயரைச் சொல்லி பேய்களை விரட்டுவதைப் பார்த்தோம்; அவன் நம்மைப் பின்பற்றி வராததால், அவனைத் தடுக்க முயற்சி செய்தோம்” என்று சொல்கிறார்.—லூக்கா 9:49.
மற்றவர்களைக் குணமாக்கவும் பேய்களை விரட்டவும் அப்போஸ்தலர்களுக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது என்று யோவான் நினைக்கிறாரா? அப்படியானால், அந்த யூதனால் எப்படிப் பேய்களை விரட்ட முடிகிறது? அந்த யூதன் இயேசுவோடும் அவருடைய அப்போஸ்தலர்களோடும் இல்லாததால், அவன் இந்த மாதிரி அற்புதங்களைச் செய்யக் கூடாது என்று யோவான் நினைத்திருக்கலாம்.
ஆனால் இயேசு, “அவனைத் தடுக்காதீர்கள், ஏனென்றால் என் பெயரைச் சொல்லி அற்புதம் செய்கிற யாருமே அவ்வளவு சீக்கிரத்தில் என்னைப் பற்றி மோசமாகப் பேச மாட்டார்கள். நமக்கு விரோதமாக இல்லாதவன் நம் பக்கம் இருக்கிறான். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கிறிஸ்துவின் சீஷர்கள் என்பதால், உங்களுக்குக் குடிக்க ஒரு குவளை தண்ணீர் கொடுக்கிறவனும்கூட கண்டிப்பாகத் தன்னுடைய பலனைப் பெறுவான்” என்று சொல்கிறார். இதைக் கேட்டு யோவான் ஆச்சரியப்படுகிறார்.—மாற்கு 9:39-41.
அந்தச் சமயத்தில், இயேசுவை ஆதரிப்பதற்கு அந்த யூதன் அவரோடு பயணம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனென்றால், கிறிஸ்தவ சபை இன்னும் உருவாகவில்லை. அவன் இயேசுவோடு பயணம் செய்யாததால் அவன் இயேசுவை எதிர்ப்பவன் என்றோ, பொய் மதத்தைப் பரப்புகிறவன் என்றோ சொல்ல முடியாது. அவன் இயேசுவின் பெயரில் விசுவாசம் வைத்திருக்கிறான். இயேசு சொன்னதை வைத்து பார்க்கும்போது, அவனும் பலனைப் பெறுவான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அப்போஸ்தலர்கள் தங்கள் பேச்சாலோ செயலாலோ அவனைப் பாவம் செய்ய வைத்தால், அவர்கள் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இயேசு சொல்கிறார். “என்மேல் விசுவாசம் வைக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவரை யாராவது பாவம் செய்ய வைத்தால், மாவு அரைக்கும் ஒரு பெரிய கல்லை அவனுடைய கழுத்தில் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவனுக்கு நல்லது” என்று இயேசு சொல்கிறார். (மாற்கு 9:42) கை, கால், கண் போல நாம் முக்கியமாக நினைக்கும் ஏதோவொன்று நம்மைப் பாவம் செய்ய வைத்தால், அதை நாம் எறிந்துவிட வேண்டும் என்று இயேசு சொல்கிறார். அதை வைத்துக்கொண்டு கெஹென்னாவுக்குள் (இன்னோம் பள்ளத்தாக்குக்குள்) போவதைவிட, அதை எறிந்துவிட்டு கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போவதே நல்லது. எருசலேமுக்குப் பக்கத்தில், குப்பைகள் எரிக்கப்படுகிற இந்தப் பள்ளத்தாக்கை அப்போஸ்தலர்கள் பார்த்திருப்பார்கள். அதனால், கெஹென்னா என்பது நிரந்தர அழிவைக் குறிக்கிறது என்று அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
“இந்தச் சிறியவர்களில் ஒருவரைக்கூட கேவலமாக நினைக்காதபடி கவனமாக இருங்கள்; ஏனென்றால், அவர்களுடைய தேவதூதர்கள் என் பரலோகத் தகப்பனின் முகத்துக்கு முன்னால் எப்போதும் இருக்கிறார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றும்கூட இயேசு எச்சரிக்கிறார். இந்த ‘சிறியவர்களை’ அவருடைய தகப்பன் எப்படிக் கருதுகிறார்? 100 ஆடுகளை வைத்திருந்து, அவற்றில் ஒன்றைத் தொலைத்த ஒருவனைப் பற்றி இயேசு சொல்கிறார். அவன் மற்ற 99 ஆடுகளையும் விட்டுவிட்டு, காணாமல் போன ஒரு ஆட்டைத் தேடிக்கொண்டு போகிறான். அதைக் கண்டுபிடித்ததும், மற்ற 99 ஆடுகளைவிட இந்த ஒரு ஆட்டை நினைத்து ரொம்பச் சந்தோஷப்படுகிறான். அதுபோலவே, “இந்தச் சிறியவர்களில் ஒருவர்கூட அழிந்துபோவதை என் பரலோகத் தகப்பன் விரும்புவதில்லை” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 18:10, 14.
அதற்குப் பிறகு, “நீங்கள் சுவை இழக்காத உப்புபோல் இருங்கள். அப்படி இருந்தால், ஒருவருக்கொருவர் சமாதானமாக இருக்க முடியும்” என்று அப்போஸ்தலர்களிடம் இயேசு சொல்கிறார். (மாற்கு 9:50) தங்களில் யார் உயர்ந்தவர் என்று அவர்கள் வாக்குவாதம் செய்ததை மனதில் வைத்து இயேசு இப்படிச் சொல்லியிருக்கலாம். உப்பு சேர்க்கும்போது உணவில் சுவை கூடுகிறது. ஒருவர் உப்புபோல் இருந்தால், அவர் சொல்வதை மற்றவர்களால் சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியும்; சமாதானமாக இருக்கவும் முடியும். ஆனால், வாக்குவாதம் செய்தால் சமாதானம் பறிபோய்விடும்.—கொலோசெயர் 4:6.
சில சமயங்களில், சகோதரர்களுடன் பெரிய பிரச்சினைகள் வரலாம். அப்போது என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொல்கிறார். “உங்கள் சகோதரர் ஒரு பாவம் செய்துவிட்டால், அவரிடம் தனியாகப் போய் அவர் செய்த தவறை எடுத்துச் சொல்லுங்கள்; நீங்கள் சொல்வதை அவர் காதுகொடுத்துக் கேட்டால், நீங்கள் அவரை நல்ல வழிக்குக் கொண்டுவந்திருப்பீர்கள்” என்று சொல்கிறார். அவர் கேட்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? “ஒருவரையோ இருவரையோ உங்களோடு கூட்டிக்கொண்டு போய்ப் பேசுங்கள். ஏனென்றால், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலம் எல்லா விஷயங்களையும் உறுதிசெய்யும்” என்று சொல்கிறார். அப்போதும் பிரச்சினை தீரவில்லை என்றால், “சபைக்கு,” அதாவது சபையில் இருக்கிற மூப்பர்களுக்கு, தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் இந்த விஷயத்தில் முடிவு எடுப்பார்கள். அவர்கள் சொல்வதையும் அவர் கேட்கவில்லை என்றால் என்ன செய்வது? “அவர் உங்களுக்கு மற்ற தேசத்தாரைப் போலவும் வரி வசூலிப்பவரைப் போலவும் இருக்கட்டும்” என்று இயேசு சொல்கிறார். பொதுவாக, இப்படிப்பட்டவர்களுடன் யூதர்கள் பழக மாட்டார்கள்.—மத்தேயு 18:15-17.
சபை மூப்பர்கள் கடவுளுடைய வார்த்தை சொல்கிறபடி நடக்க வேண்டும். ஒருவர் தவறு செய்திருக்கிறார் என்றும், அவருக்குச் சிட்சை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தால், அந்த முடிவு “பரலோகத்தில் ஏற்கெனவே பூட்டப்பட்டிருக்கும்.” ஒருவர் நிரபராதி என்று முடிவு செய்தால், அந்த முடிவு “பரலோகத்தில் ஏற்கெனவே திறக்கப்பட்டிருக்கும்.” கிறிஸ்தவ சபை உருவான பிறகு, இயேசு சொன்ன இந்த ஆலோசனைகள் உதவியாக இருக்கும். இதுபோன்ற முக்கியமான தீர்மானங்களை எடுக்க “இரண்டு அல்லது மூன்று பேர் எங்கெல்லாம் என் பெயரில் ஒன்றுகூடுகிறார்களோ அங்கெல்லாம் நான் அவர்கள் நடுவில் இருப்பேன்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 18:18-20.