அதிகாரம் 97
திராட்சைத் தோட்டத்து கூலியாட்கள் பற்றிய உவமை
திராட்சைத் தோட்டத்தில் “பிந்தினவர்களாக” இருந்த வேலையாட்கள் “முந்தினவர்களாக” ஆகிறார்கள்
இப்போது பெரேயாவில் இயேசு கற்பித்துக்கொண்டிருக்கிறார். சற்று முன்புதான், “முந்தினவர்கள் பலர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் முந்தினவர்களாகவும் ஆவார்கள்” என்று சொல்லியிருந்தார். (மத்தேயு 19:30) இதை விளக்குவதற்காக, திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்கிற கூலியாட்களைப் பற்றிய ஒரு உவமையை இயேசு சொல்கிறார்.
“பரலோக அரசாங்கம் திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரர் ஒருவரைப் போல் இருக்கிறது; தன் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்வதற்குக் கூலியாட்களை அமர்த்த அவர் விடியற்காலையில் எழுந்துபோனார். ஒரு நாளுக்கு ஒரு தினாரியு கூலி கொடுப்பதாகச் சொல்லி, தன் திராட்சைத் தோட்டத்துக்குக் கூலியாட்களை அனுப்பினார். சுமார் மூன்றாம் மணிநேரத்தில் அவர் மறுபடியும் வெளியே போனபோது, சந்தையில் வேறு சிலர் வேலையில்லாமல் நிற்பதைப் பார்த்தார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள், உங்களுக்கு நியாயமான கூலி கொடுக்கிறேன்’ என்று சொன்னார். அதன்படியே அவர்கள் போனார்கள். பின்பு, மறுபடியும் சுமார் ஆறாம் மணிநேரத்திலும் ஒன்பதாம் மணிநேரத்திலும் அவர் வெளியே போய் இதேபோல் செய்தார். கடைசியாக, சுமார் 11-ஆம் மணிநேரத்தில் அவர் வெளியே போய், இன்னும் சிலர் நிற்பதைப் பார்த்தார். அவர்களிடம், ‘வேலை செய்யாமல் ஏன் நாள் முழுவதும் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘யாருமே எங்களுக்கு வேலை தரவில்லை’ என்று சொன்னார்கள். அப்போது அவர், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்று சொன்னார்.”—மத்தேயு 20:1-7.
“பரலோக அரசாங்கம்,” “திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரர்” ஆகிய வார்த்தைகளைக் கேட்டதும், யெகோவா தேவனைப் பற்றி அங்கிருக்கிற மக்கள் யோசித்திருக்கலாம். இஸ்ரவேல் தேசம் ஒரு திராட்சைத் தோட்டத்தைப் போல இருப்பதாகவும், யெகோவா தேவன்தான் அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரர் என்றும் வேதவசனங்கள் சொல்கின்றன. (சங்கீதம் 80:8, 9; ஏசாயா 5:3, 4) திருச்சட்டத்தின்கீழ் இருந்தவர்கள் அந்தத் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்கிற கூலியாட்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். இயேசு இப்போது கடந்தகாலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களைப் பற்றிப் பேசிக்கொண்டில்லை. தன்னுடைய காலத்தில் இருக்கிற ஒரு சூழ்நிலையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்.
கடவுளுக்குத் தொடர்ந்து சேவை செய்ய வேண்டிய பொறுப்பு பரிசேயர்களைப் போன்ற மதத் தலைவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் முழு நேரமும் வேலை செய்கிற ஆட்களைப் போல இருக்கிறார்கள். நாள் முழுவதும் வேலை செய்வதால் தங்களுக்கு முழு கூலி, அதாவது ஒரு தினாரியு, கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.
மற்ற யூதர்கள் தங்களைவிட குறைவாக கடவுளுக்குச் சேவை செய்வதாகக் குருமார்களும் மற்ற மதத் தலைவர்களும் நினைக்கிறார்கள். இந்த யூதர்கள், கடவுளுடைய திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்கிற பகுதி நேர கூலியாட்களைப் போல இருக்கிறார்கள். இயேசுவின் உவமையில், இவர்கள் ‘மூன்றாம் மணிநேரத்திலோ,’ (காலை 9 மணி) ஆறாம் மணிநேரத்திலோ, ஒன்பதாம் மணிநேரத்திலோ, பதினோராம் மணிநேரத்திலோ (மாலை 5 மணி) வேலைக்குச் சேர்ந்த ஆட்களைப் போல இருக்கிறார்கள்.
இயேசுவைப் பின்பற்றுகிற ஆண்களும் பெண்களும் ‘சபிக்கப்பட்டவர்களாக’ கருதப்படுகிறார்கள். (யோவான் 7:49) ஏனென்றால், அவர்களுடைய வாழ்க்கையின் முக்கால்வாசி காலத்தை, மீன்பிடிக்கிற வேலையிலோ மற்ற வேலையிலோ செலவழித்திருந்தார்கள். பிற்பாடு, “திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரர்,” கி.பி. 29-ஆம் வருஷத்தின் பிற்பகுதியில் இயேசுவை அவர்களிடம் அனுப்பினார். கிறிஸ்துவின் சீஷர்களாகி தனக்குச் சேவை செய்ய வரும்படி அவர்களைக் கூப்பிட்டார். அவர்கள் 11-ஆம் மணிநேரத்தில் வேலைக்கு சேர்ந்த ஆட்களைப் போல இருக்கிறார்கள். அவர்களைத்தான் “பிந்தினவர்கள்” என்று இயேசு குறிப்பிடுகிறார்.
அந்த நாளின் முடிவில் என்ன நடக்கிறது என்பதை இயேசு தன்னுடைய உவமையில் சொல்கிறார். “சாயங்காலம் ஆனபோது திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரர் தன்னிடம் வேலை பார்க்கிற மேற்பார்வையாளனிடம், ‘கூலியாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முந்தி வந்தவர்கள்வரை எல்லாருக்கும் கூலி கொடு’ என்று சொன்னார். அப்போது, 11-ஆம் மணிநேரத்தில் வேலைக்கு வந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தினாரியு கிடைத்தது. அதனால், முந்தி வந்தவர்கள் தங்களுக்கு அதிகமாகக் கிடைக்கும் என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்களுக்கும் ஒரு தினாரியுதான் கிடைத்தது. அதை வாங்கியபோது தோட்டத்துச் சொந்தக்காரருக்கு எதிராக முறுமுறுக்க ஆரம்பித்து, ‘பிந்தி வந்தவர்கள் ஒரு மணிநேரம்தான் வேலை செய்தார்கள்; ஆனால் நாங்கள் கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலை செய்தோம்; இருந்தாலும், அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரே கூலியைக் கொடுக்கிறீர்களே!’ என்றார்கள். அவரோ அவர்களில் ஒருவனிடம், ‘நான் உனக்கு எந்த அநியாயமும் செய்யவில்லை. ஒரு தினாரியுவுக்குத்தானே வேலை செய்ய நீ ஒத்துக்கொண்டாய்? உன்னுடைய கூலியை வாங்கிக்கொண்டு போ. உனக்குக் கொடுத்தது போலவே பிந்தி வந்தவர்களுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம். என் பணத்தை என் விருப்பப்படி கொடுக்க எனக்கு உரிமை இல்லையா? நான் பெருந்தன்மையோடு கொடுப்பதைப் பார்த்து நீ பொறாமைப்படுகிறாயா?’ என்று கேட்டார். இப்படி, பிந்தினவர்கள் முந்தினவர்களாகவும், முந்தினவர்கள் பிந்தினவர்களாகவும் ஆவார்கள்” என்று சொல்கிறார்.—மத்தேயு 20:8-16.
இயேசு தன்னுடைய உவமையில் கடைசியாகச் சொன்ன விஷயத்தைப் பற்றி அவருடைய சீஷர்கள் யோசித்திருக்கலாம். தங்களை “முந்தினவர்களாக” நினைத்துக்கொள்கிற யூத மதத் தலைவர்கள் எப்படி “பிந்தினவர்களாக” ஆவார்கள்? இயேசுவின் சீஷர்கள் எப்படி “முந்தினவர்களாக” ஆவார்கள்?
பரிசேயர்களும் மற்ற மதத் தலைவர்களும் இயேசுவின் சீஷர்களை “பிந்தினவர்களாக” கருதுகிறார்கள். ஆனால், அந்தச் சீஷர்கள்தான் “முந்தினவர்களாக” ஆவார்கள். அவர்கள் முழு கூலியைப் பெறுவார்கள். இயேசு இறந்ததும், இஸ்ரவேல் தேசம் ஒதுக்கித்தள்ளப்படும். அதற்குப் பிறகு, “கடவுளுடைய இஸ்ரவேலர்கள்” என்ற புதிய தேசத்தைக் கடவுள் தேர்ந்தெடுப்பார். (கலாத்தியர் 6:16; மத்தேயு 23:38) கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் கிடைக்கும் என்று யோவான் ஸ்நானகர் சொன்னபோது, இந்தப் புதிய தேசத்தைத்தான் அவர் குறிப்பிட்டார். “பிந்தினவர்களாக” கருதப்பட்டவர்கள்தான் முதலில் கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானத்தைப் பெறுவார்கள். அதோடு, “பூமியின் எல்லைகள் வரையிலும்” இயேசுவுக்குச் சாட்சிகளாக இருக்கிற பாக்கியத்தையும் பெறுவார்கள். (அப்போஸ்தலர் 1:5, 8; மத்தேயு 3:11) மிகப் பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது என்பதை இந்த உவமையின் மூலம் சீஷர்கள் புரிந்துகொள்கிறார்கள். அதனால், “பிந்தினவர்களாக” ஆகப்போகிற மதத் தலைவர்களின் கடும் எதிர்ப்பு தங்களுக்கு வரும் என்றும் அவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள்.