அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
இயேசு மேசியாவாகவும் அரசராகவும் வரவேற்கப்படுகிறார்!
எருசலேமுக்குள் பொ.ச. 33, நிசான் 9-ம் தேதி கூச்சலிட்டுக்கொண்டு பிரவேசித்துக்கொண்டிருந்த ஜனக்கூட்டத்தைப் பார்த்த அநேக யூதேயர்கள் ஆச்சரியமடைந்தார்கள். பஸ்காவுக்கு முன்பாக நகரத்துக்குள் மக்கள் திரண்டுவருவதைக் காண்பது அசாதாரணமான ஒன்றாக இல்லாவிட்டாலும், இந்தக் கூட்டத்தார் வித்தியாசமானவர்களாக இருந்தனர். அவர்கள் மத்தியில் இருந்த ஒரு முக்கியமான நபர் கழுதைக்குட்டியின்மேல் சவாரிசெய்து வந்தார். அந்த மனிதர் இயேசு கிறிஸ்துவாக இருந்தார்; மக்கள் அவருக்கு முன்பாக வஸ்திரங்களையும் மரக்கிளைகளையும் பரப்பி, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.” ஜனக்கூட்டத்தைப் பார்த்தபோது, ஏற்கெனவே எருசலேமில் இருந்த அநேகர் அந்தப் பவனியில் சேர்ந்துகொள்ள தூண்டப்பட்டார்கள்.—மத்தேயு 21:7-9; யோவான் 12:12, 13.
இப்பொழுது வரவேற்பளிக்கப்பட்டாலும், சோதனைகள் தமக்குக் காத்துக்கொண்டிருந்ததை இயேசு அறிந்திருந்தார். ஏன், இன்னும் ஐந்தே நாட்களில், இதே நகரத்தில் அவர் கொல்லப்படுவார்! ஆம், எருசலேம் பகைமை நிறைந்த பிராந்தியமாக இருந்ததை இயேசு அறிந்திருந்தார், அந்த எண்ணத்தை மனதில் கொண்டே அவர் கவனத்தைக் கவரும் வகையில் அந்த பட்டணத்துக்குள் தம்முடைய உட்பிரவேசத்தை நடத்திக்காட்டினார்.
பூர்வ தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது
பொ.ச.மு. 518-ல் சகரியா எருசலேமுக்குள் இயேசுவின் வெற்றிசிறக்கும் பிரவேசத்தைப்பற்றி முன்னுரைத்தார். அவர் எழுதினார்: “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். . . . அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.”—சகரியா 9:9, 10.
ஆகவே நிசான் 9-ல் எருசலேமுக்குள் இயேசுவின் இந்த உட்பிரவேசம் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இருந்தது. அது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்ச்சி அல்ல; அது கவனமாக முன்திட்டமிடப்பட்ட ஒன்றாக இருந்தது. இதற்கு முன்னால், எருசலேமுக்கு வெளியே, அதற்கு சமீபத்தில் இருக்கும்போது, இயேசு தம்முடைய சீஷர்களில் இருவருக்கு இவ்வாறு அறிவுரை கூறியிருந்தார்: “உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான்.” (மத்தேயு 21:1-3) ஆனால் இயேசு ஏன் எருசலேமுக்குள் ஒரு கழுதையின் மேல் ஏறிவந்தார், ஜனக்கூட்டத்தினுடைய பிரதிபலிப்பின் முக்கியத்துவம் என்னவாக இருந்தது?
ராஜரீகத்தைப் பற்றிய ஒரு செய்தி
கண்களால் பார்க்கும் ஒரு காட்சி காதால் கேட்கும் ஒரு வார்த்தையைவிட அநேகமாக அதிக வலிமையுள்ளதாக இருக்கிறது. இதன் காரணமாக, சில சமயங்களில் யெகோவா தம்முடைய தீர்க்கதரிசிகள் தங்களுடைய தீர்க்கதரிசன செய்தியை வலிமைமிக்கதாக்குவதற்காக நடித்துக்காட்டும்படி செய்தார். (1 இராஜாக்கள் 11:29-32; எரேமியா 27:1-6; எசேக்கியேல் 4:1-17) செய்தி அறிவிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட மிக உயர்ந்த இந்தக் காணக்கூடிய வழிமூலம் மிகவும் கடினமான இருதயமுள்ள ஒருவரின் மனதிலும்கூட அழியாத நினைவுகளை பதித்துவிட்டது. அதேவிதமாகவே, எருசலேம் நகரத்திற்குள் ஒரு கழுதையின்மேல் சவாரிசெய்து வருவதன் மூலம் வலிமையான ஒரு செய்தியை இயேசு நடித்துக்காட்டினார். எவ்விதமாக?
பைபிள் காலங்களில் கழுதை உயரிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, சாலொமோன் அரசனாக நியமிக்கப்படுவதற்கு ஆண் கழுதையின் ஒரு கலப்பின குட்டியாக இருந்த, அவருடைய தந்தையின் “கோவேறுகழுதையின்” மேல் ஏறிச்சென்றார். (1 இராஜாக்கள் 1:33-40) ஆகவே இயேசு எருசலேமுக்குள் ஒரு கழுதையின்மேல் ஏறிவருவது, அவர் தம்மை ஒரு அரசர் என காட்டுகிறார் என்பதை அர்த்தப்படுத்தும்.a ஜனக்கூட்டத்தின் செயல்கள் இந்தச் செய்தியை வலுப்படுத்தின. பெரும்பாலும் கலிலேயர்களாலான அந்தத் தொகுதியினர், தங்கள் வஸ்திரங்களை இயேசுவுக்கு முன்பாக விரித்தார்கள்—யெகூ ராஜாவான செய்தி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டபோது நடந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் ஒரு செயல். (2 இராஜாக்கள் 9:13) இயேசுவை ‘தாவீதின் குமாரன்’ என்பதாக அவர்கள் குறிப்பிட்டது, ஆளுகைச் செய்வதற்கு அவருக்கிருக்கும் சட்டப்பூர்வமான உரிமையை வலியுறுத்துவதாக இருந்தது. (லூக்கா 1:31-33) குருத்தோலைகளை அவர்கள் பயன்படுத்தியது அவருடைய ராஜரீக அதிகாரத்துக்கு அவர்கள் கீழ்ப்பட்டிருப்பதைத் தெளிவாக காண்பித்தது.—வெளிப்படுத்துதல் 7:9, 10-ஐ ஒப்பிடுக.
ஆகவே நிசான் 9-ம் தேதி எருசலேமுக்குள் வந்த அந்த பவனி, இயேசு கடவுளுடைய நியமிக்கப்பட்ட மேசியாவாகவும் அரசராகவும் இருந்தார் என்பதைத் தெளிவாக சித்தரித்துக்காட்டியது. நிச்சயமாகவே இயேசு இவ்விதமாக தம்மை வெளிப்படுத்தியதைக் குறித்து எல்லாரும் சந்தோஷமாயிருக்கவில்லை. குறிப்பாக பரிசேயர் இயேசுவுக்கு இத்தகைய ராஜரீக கனம் செலுத்தப்படுவது முற்றிலும் பொருத்தமற்றது என்பதாக நினைத்தார்கள். “போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும்,” என்பதாக கோபமான தொனியில் அவர்கள் வற்புறுத்தினார்கள். அதற்கு இயேசு, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று பதிலளிக்கிறார். (லூக்கா 19:39, 40) ஆம், கடவுளுடைய ராஜ்யமே இயேசு பிரசங்கித்த செய்தியின் முக்கிய தலைப்பாக இருந்தது. மக்கள் அதை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதை அவர் தைரியமாக அறிவிப்பார்.
நமக்குப் பாடம்
சகரியா தீர்க்கதரிசி முன்னறிவித்த விதத்தில் எருசலேமுக்குள் பிரவேசிப்பதற்கு இயேசுவுக்கு அதிக தைரியம் தேவையாக இருந்தது. அவ்விதமாகச் செய்கையில் அவர் தம்முடைய சத்துருக்களின் கோபத்துக்குள்ளாவார் என்பதை அறிந்திருந்தார். இயேசு பரலோகத்துக்கு ஏறிச்செல்வதற்கு முன்பாக, தம்மைப் பின்பற்றினோருக்கு, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படியும் ‘சகல ஜாதிகளையும் சீஷராக்கும்’படியும் கட்டளையிட்டார். (மத்தேயு 24:14; 28:19, 20) இந்த வேலையைச் செய்து முடிப்பதற்கும்கூட தைரியம் தேவையாக இருக்கிறது. எல்லாரும் செய்தியை மகிழ்ச்சியாக கேட்பது இல்லை. சிலர் அதை அலட்சியமாக கருதுகிறார்கள், மற்றவர்கள் அதை எதிர்க்கிறார்கள். சில அரசாங்கங்கள் பிரசங்க வேலையின்மீது கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றன அல்லது முழுவதுமாக தடைசெய்திருக்கின்றன.
இருந்தாலும், கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தின் நற்செய்தி, மக்கள் செவிகொடுத்து கேட்டாலும் சரி அல்லது அவ்விதமாக கேட்காவிட்டாலும் சரி, பிரசங்கிக்கப்பட்டே தீரவேண்டும் என்பதை யெகோவாவின் சாட்சிகள் உணர்ந்திருக்கிறார்கள். (எசேக்கியேல் 2:7) உயிரைக் காக்கும் இவ்வேலையை அவர்கள் தொடர்ந்து செய்துவருகையில், இயேசுவின் வாக்குறுதி அவர்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டுகிறது: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.”—மத்தேயு 28:20.
[அடிக்குறிப்புகள்]
a மாற்குவின் பதிவு “மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி” என்ற குறிப்பைச் சேர்த்துச் சொல்லுகிறது. (மாற்கு 11:2) தெளிவாகவே, ஒருபோதும் உபயோகப்படுத்தப்படாத ஒரு மிருகம் பரிசுத்த நோக்கங்களுக்கு விசேஷமாக ஏற்றதாயிருந்தது.—ஒப்பிடுக: எண்ணாகமம் 19:2; உபாகமம் 21:3; 1 சாமுவேல் 6:7.