யெகோவாவின் மகிழ்ச்சியுள்ள ஊழியர்கள்
“ஆன்மீக தேவையைக் குறித்து உணர்வுடையோர் மகிழ்ச்சியுள்ளவர்கள்.”—மத்தேயு 5:3, NW.
1. உண்மையான மகிழ்ச்சி எப்படிப்பட்டது, அது எதை வெளிப்படுத்துகிறது?
மகிழ்ச்சி என்பது யெகோவாவின் மக்களுடைய மதிப்புமிக்க ஒரு சொத்து. ஆகவேதான், “யெகோவாவை தெய்வமாக வணங்குகிற மக்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்” என சங்கீதக்காரன் தாவீது வியந்து கூறினார். (சங்கீதம் 144:15, NW) நிறைவுதரும் அனுபவத்தால் ஏற்படும் ஓர் உணர்வே மகிழ்ச்சி. ஆனாலும் இருதயத்தின் ஆழத்திலிருந்து பொங்கும் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம், நாம் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே. (நீதிமொழிகள் 10:22) இத்தகைய மகிழ்ச்சி, பரலோகத் தகப்பனோடு நாம் நெருங்கிய உறவு வைத்திருக்கிறோம் என்பதையும் அவருடைய சித்தத்தைச் செய்வதால் மனத்திருப்தியுடன் இருக்கிறோம் என்பதையும் வெளிப்படுத்துகிறது. (சங்கீதம் 112:1; 119:1, 2) நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்பதற்கு ஒன்பது காரணங்களை இயேசு குறிப்பிட்டிருப்பது ஆர்வத்திற்குரிய விஷயமாகும். அக்காரணங்களை இந்தக் கட்டுரையும் அடுத்த கட்டுரையும் விளக்கும்; அவற்றை ஆராய்வது, ‘நித்தியானந்த தேவனாகிய’ யெகோவாவுக்குச் சேவை செய்கையில் நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்க முடியும் என்பதை அறிந்துகொள்ள உதவும்.—1 தீமோத்தேயு 1:11.
ஆன்மீக தேவையைக் குறித்த உணர்வு
2. எந்தச் சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியைப் பற்றி இயேசு பேசினார், அவருடைய பேச்சின் ஆரம்ப வார்த்தைகள் என்ன?
2 பொ.ச. 31-ல் சரித்திரத்திலேயே மிகவும் பிரசித்திபெற்ற ஒரு பேச்சை இயேசு கொடுத்தார். கலிலேயக் கடலைப் பார்த்தவாறு அமைந்துள்ள ஒரு மலைப்பகுதியில் இயேசு இதைக் கொடுத்ததால் இது மலைப் பிரசங்கம் என அழைக்கப்படுகிறது. இதைப் பற்றி மத்தேயுவின் சுவிசேஷம் இவ்வாறு கூறுகிறது: ‘இயேசு திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்: ஆன்மீக தேவையைக் குறித்து உணர்வுடையோர் மகிழ்ச்சியுள்ளவர்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.’a இயேசு சொன்ன ஆரம்ப வார்த்தைகளின் நேர்பொருள் இதுதான்: “ஆவியில் ஏழ்மையானவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்,” அல்லது “ஆவிக்காக யாசிப்போர் மகிழ்ச்சியுள்ளவர்கள்.” (மத்தேயு 5:1-3, கிங்டம் இன்டர்லீனியர், NW அடிக்குறிப்பு) டுடேஸ் இங்லிஷ் வர்ஷன் இவ்வாறு கூறுகிறது: “ஆன்மீக ரீதியில் தரித்திரர் என்பதை உணர்வோர் மகிழ்ச்சியுள்ளவர்கள்.”
3. மனத்தாழ்மை எப்படி மகிழ்ச்சிக்குப் பங்களிக்கிறது?
3 ஆன்மீக தேவையை ஒருவர் உணருகிறார் என்றால் அவர் மிகுந்த மகிழ்ச்சியுள்ளவர் என மலைப் பிரசங்கத்தில் இயேசு குறிப்பிட்டார். தாங்கள் பாவிகள் என்பதை மனத்தாழ்மையுள்ள கிறிஸ்தவர்கள் நன்கு உணர்ந்திருப்பதால் கிறிஸ்துவுடைய மீட்கும் பலியின் அடிப்படையில் தங்களுடைய பாவங்களை மன்னிக்கும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்கிறார்கள். (1 யோவான் 1:9) இப்படிச் செய்வதால் அவர்களுக்கு மன சமாதானமும் உண்மையான மகிழ்ச்சியும் கிடைக்கிறது. ‘எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் மகிழ்ச்சியுள்ளவன்.’—சங்கீதம் 32:1; 119:165.
4. (அ) நம்முடைய மற்றும் பிறருடைய ஆன்மீக தேவையைக் குறித்து உணர்வுடன் இருப்பதை என்னென்ன வழிகளில் காட்டலாம்? (ஆ) ஆன்மீக தேவையைக் குறித்து உணர்வுடன் இருக்கையில் எது நம் மகிழ்ச்சியைக் கூட்டுகிறது?
4 பைபிளை தினமும் வாசிப்பதற்கும், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” மூலமாக ‘ஏற்ற வேளையில்’ வழங்கப்படும் ஆவிக்குரிய உணவிலிருந்து முழு நன்மையடைவதற்கும், கிறிஸ்தவ கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதற்கும் ஆன்மீக தேவையைக் குறித்த உணர்வு நம்மை உந்துவிக்கிறது. (மத்தேயு 24:45, NW; சங்கீதம் 1:1, 2; 119:111; எபிரெயர் 10:25) அக்கம்பக்கத்தார் மீது நமக்கு அன்பு இருந்தால் அவர்களுடைய ஆன்மீக தேவைகளை நாம் புரிந்துகொள்வோம்; அதோடு ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை ஆர்வத்துடன் பிரசங்கிப்பதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் தூண்டப்படுவோம். (மாற்கு 13:10; ரோமர் 1:14-16) பைபிள் சத்தியங்களைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. (அப்போஸ்தலர் 20:20, 35) ராஜ்யத்தைப் பற்றிய அருமையான நம்பிக்கையையும் அந்த ராஜ்யத்தில் கிடைக்கும் ஆசீர்வாதங்களையும் குறித்து தியானிக்கும்போது, நம் மகிழ்ச்சி இன்னும் அதிகரிக்கிறது. “சிறுமந்தை”யினருக்கு, அதாவது அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு, பரலோகத்தில் கிறிஸ்துவின் அரசாங்கத்தில் அழியாமையுள்ள வாழ்வைப் பெறுவதே அந்த ராஜ்ய நம்பிக்கை. (லூக்கா 12:32; 1 கொரிந்தியர் 15:50, 54) ‘வேறே ஆடுகளுக்கோ’ அந்த அரசாங்கத்தின் கீழ் பரதீஸ் பூமியில் நித்திய ஜீவனைப் பெறுவதே அந்த ராஜ்ய நம்பிக்கை.—யோவான் 10:16; சங்கீதம் 37:11; மத்தேயு 25:34, 46.
துயரப்படுகிறவர்கள் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி
5. (அ) ‘துயரப்படுகிறவர்கள்’ என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? (ஆ) அவ்வாறு துயரப்படுகிறவர்கள் எப்படி ஆறுதலடைகிறார்கள்?
5 மகிழ்ச்சியைப் பற்றி அடுத்ததாக இயேசு குறிப்பிட்ட வார்த்தைகள் முரண்படுவதைப் போல் தோன்றலாம். ‘துயரப்படுகிறவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்’ என அவர் சொன்னார். (மத்தேயு 5:4) ஒருவர் துயரப்படும்போது எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? இதைப் புரிந்துகொள்வதற்கு எவ்வகையான துயரத்தைப் பற்றி இயேசு பேசினார் என்பதைச் சிந்திப்பது அவசியம். நாம் பாவத்தில் அடிமைப்பட்டுக் கிடப்பதுதானே துயரத்திற்கு ஒரு காரணமாக இருக்க வேண்டுமென சீஷனாகிய யாக்கோபு விவரிக்கிறார். “பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” என அவர் எழுதினார். (யாக்கோபு 4:8-10) பாவத்தில் வீழ்ந்து கிடப்பதைக் குறித்து வருத்தப்படுகிறவர்கள் ஆறுதலடைகிறார்கள்; எப்படி? கிறிஸ்துவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைத்து, யெகோவாவின் சித்தத்தைச் செய்து, உண்மையிலேயே மனந்திரும்பும்போது தங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதை அறிந்து ஆறுதலடைகிறார்கள். (யோவான் 3:16; 2 கொரிந்தியர் 7:9, 10) இவ்வாறு, யெகோவாவுடன் ஓர் அருமையான உறவை அவர்கள் வைத்துக்கொள்ள முடிகிறது; அதுமட்டுமல்ல, என்றென்றும் வாழும் நம்பிக்கையையும் அனுபவித்து மகிழ முடிகிறது. இது அவர்களுக்கு உள்ளூர மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.—ரோமர் 4:7, 8.
6. சிலர் என்ன கருத்தில் துயரப்படுகிறார்கள், அவர்கள் எவ்வாறு ஆறுதல் அடைகிறார்கள்?
6 இந்தப் பூமியில் நடந்துகொண்டிருக்கும் அருவருப்பான காரியங்களை நினைத்து துயரப்படுகிறவர்களும் இயேசு சொன்ன ஆட்களில் அடங்குவர். ஏசாயா 61:1-3-ல் உள்ள தீர்க்கதரிசனத்தை தமக்குப் பொருத்தி இயேசு இவ்வாறு கூறினார்: “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், . . . துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும் . . . அவர் என்னை அனுப்பினார்.” பூமியில் இருக்கிற அபிஷேகம் பண்ணப்பட்டோருக்கும் அந்தப் பொறுப்பு உள்ளது; தங்கள் தோழர்களான ‘வேறே ஆடுகளுடன்’ சேர்ந்து அவர்கள் அந்தப் பொறுப்பை நிறைவேற்றி வருகிறார்கள். இவர்கள் எல்லாருமே ‘[கிறிஸ்தவ மண்டலத்தை சித்தரிக்கும் விசுவாசதுரோக எருசலேமுக்கு] உள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடுகிறார்கள்.’ (எசேக்கியேல் 9:4) இவ்வாறு பெருமூச்சுவிட்டு அழுகிறவர்களுக்கு ‘ராஜ்ய நற்செய்தி’ ஆறுதல் அளிக்கிறது. (மத்தேயு 24:14, NW) வெகு விரைவில், சாத்தானின் இந்தப் பொல்லாத உலகம் நீக்கப்பட்டு யெகோவாவின் நீதியுள்ள புதிய உலகம் ஸ்தாபிக்கப்படும் என்பதை அறிந்து அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
சாந்தகுணமுள்ளவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்
7. ‘சாந்தகுணம்’ என்ற வார்த்தை எதை அர்த்தப்படுத்துவதில்லை?
7 மலைப் பிரசங்கத்தில் இயேசு தொடர்ந்து இவ்வாறு கூறினார்: ‘சாந்தகுணமுள்ளவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.’ (மத்தேயு 5:5) சாந்தகுணம் பலவீனத்தைக் குறிப்பதாக சில சமயங்களில் கருதப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. ‘சாந்தகுணம்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தையின் கருத்தை விளக்குகையில், ஒரு பைபிள் கல்விமான் இவ்வாறு எழுதினார்: “[சாந்தகுணமுடைய] ஒருவரின் முக்கிய குணாம்சமே அவர் எப்போதும் தன்னடக்கமுள்ளவராய் இருப்பதுதான். இது மனோ திடமின்றி வளைந்து கொடுப்பதையோ, உணர்ச்சிவசப்பட்டு பாசம் காண்பிப்பதையோ, எதிலும் ஈடுபாடில்லாமல் ஒதுங்கி இருப்பதையோ அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அது ஒருவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற பலத்தை அர்த்தப்படுத்துகிறது.” “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்” என இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 11:29) என்றாலும், நீதியான நியமங்களை ஆதரிப்பதில் அவர் தைரியசாலியாக இருந்தார்.—மத்தேயு 21:12, 13; 23:13-33.
8. எந்த குணத்தோடு சாந்தகுணம் நெருங்கிய தொடர்புடையது, பிறரோடு நல்ல உறவு வைத்துக்கொள்வதற்கு இந்த சாந்தகுணம் நமக்கு ஏன் அவசியம்?
8 ஆக, சாந்தகுணத்திற்கும் தன்னடக்கத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. சொல்லப்போனால், ‘ஆவியின் கனியில்’ சாந்தத்திற்கு அடுத்ததாக தன்னடக்கத்தை அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (கலாத்தியர் 5:22, 23) இந்தச் சாந்தகுணம் பரிசுத்த ஆவியின் உதவியோடு வளர்க்கப்பட வேண்டிய ஒரு குணமாகும். இந்தக் கிறிஸ்தவ குணம், சபையாரிடமும் பிறரிடமும் சமாதானமாயிருக்க உதவுகிறது. பவுல் இவ்வாறு எழுதினார்: “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”—கொலோசெயர் 3:12, 13.
9. (அ) பிறரோடு நல்ல உறவு வைத்துக்கொள்வதற்கு மட்டுமே சாந்தகுணத்தை காட்டினால் போதாது, ஏன்? (ஆ) சாந்தகுணமுள்ளவர்கள் எவ்வாறு ‘பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள்’?
9 ஆனால், பிற மனிதரோடு நல்ல உறவு வைத்துக்கொள்வதற்கு மட்டுமே இந்தச் சாந்தகுணத்தைக் காட்டினால் போதாது. யெகோவாவின் பேரரசுரிமைக்கு மனப்பூர்வமாய் கீழ்ப்படிவதற்கும் சாந்தகுணத்தைக் காட்ட வேண்டும். இந்த விஷயத்தில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் இயேசு கிறிஸ்து; அவர் பூமியில் இருந்தபோது சாந்தகுணத்தைக் காட்டினார், பிதாவின் சித்தத்திற்கு தம்மை முற்றிலும் கீழ்ப்படுத்தினார். (யோவான் 5:19, 30) பார்க்கப்போனால், இயேசுவே முதலாவதாக இந்தப் பூமியை சுதந்தரித்துக்கொள்கிறார், ஏனென்றால் அதை ஆளுவதற்கு நியமிக்கப்பட்டிருப்பவர் அவர்தான். (சங்கீதம் 2:6-8; தானியேல் 7:13, 14) ‘பூமியிலே அரசாளுவதற்கு’ “மனுஷரிலிருந்து” தேர்ந்தெடுக்கப்பட்ட ‘உடன் சுதந்தரவாளிகளான’ 1,44,000 பேருடன் அந்தச் சொத்தை அவர் பகிர்ந்துகொள்கிறார். (ரோமர் 8:17; வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1, 3, 4; தானியேல் 7:27) கிறிஸ்துவும் அவருடைய சக ஆட்சியாளர்களும் செம்மறியாடுகளைப் போன்ற கோடிக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் ஆளுவார்கள். சங்கீத புத்தகத்தில் அவர்களைக் குறித்து சொல்லப்பட்ட பின்வரும் தீர்க்கதரிசனம் அப்போது நிறைவேறும்: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மன மகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11; மத்தேயு 25:33, 34, 46.
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்
10. ‘நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள்’ திருப்தியடைகிற ஒரு வழி என்ன?
10 கலிலேய மலைப்பகுதியில் இயேசு பேசியபோது மகிழ்ச்சியைப் பற்றி அடுத்ததாக கூறியது இதுதான்: ‘நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.’ (மத்தேயு 5:6) கிறிஸ்தவர்களுக்கு நீதியைக் குறித்த தராதரத்தை யெகோவா வகுத்துள்ளார். எனவே, நீதியின் பேரில் பசிதாகமுள்ளவர்கள் உண்மையில் கடவுளுடைய வழிநடத்துதலுக்காக பசிதாகத்துடன் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய பாவத்தையும் அபூரணத்தையும் பற்றி அதிக உணர்வுடையவர்களாய் இருக்கிறார்கள், யெகோவாவுக்கு முன் நல்ல நிலைநிற்கையை அடைய ஏங்குகிறார்கள். மனந்திரும்பி, கிறிஸ்துவின் மீட்கும் பலியின் அடிப்படையில் மன்னிப்பை நாடினால் அப்படிப்பட்ட நீதியுள்ள நிலைநிற்கையை அடைய முடியும் என்பதை பைபிளிலிருந்து கற்றுக்கொள்கையில் அவர்கள் எவ்வளவாய் மகிழ்ச்சியடைகிறார்கள்!—அப்போஸ்தலர் 2:38; 10:43; 13:38, 39; ரோமர் 5:19.
11, 12. (அ) அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் நீதிமான்களாக்கப்படுவது எப்படி? (ஆ) அபிஷேகம் பண்ணப்பட்டவர்களின் தோழர்களுடைய நீதிக்கான தாகம் எவ்வாறு திருப்தி செய்யப்படுகிறது?
11 அப்படிப்பட்டவர்கள் “திருப்தியடைவார்கள்” என்பதால்தான் அவர்களை மகிழ்ச்சியுள்ளவர்கள் என இயேசு சொன்னார். (மத்தேயு 5:6) கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ‘அரசாளுவதற்கு’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் ‘ஜீவனுக்கென்று நீதிமான்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.’ (ரோமர் 5:1, 9, 16-18) அவர்களைத் தமது ஆவிக்குரிய குமாரர்களாக யெகோவா தத்தெடுக்கிறார். அவர்கள் கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளிகளாக, அதாவது அவருடைய பரலோக அரசாங்கத்தின் ராஜாக்களும் ஆசாரியர்களுமாக ஆகிறார்கள்.—யோவான் 3:3; 1 பேதுரு 2:9.
12 அபிஷேகம் பண்ணப்பட்டவர்களின் தோழர்களோ ஜீவனுக்கென்று இன்னும் நீதிமான்களாக்கப்படவில்லை. இருந்தாலும், கிறிஸ்து சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைப்பதால் அவர்களை ஓரளவு நீதியுள்ளவர்களாக யெகோவா கருதுகிறார். (யாக்கோபு 2:22-25; வெளிப்படுத்துதல் 7:9, 10) அதாவது, தம்முடைய நண்பர்களாக, ‘மிகுந்த உபத்திரவத்தின்’போது விடுதலை பெறுவதற்குத் தகுதியுள்ள நீதிமான்களாக கருதுகிறார். (வெளிப்படுத்துதல் 7:14) ‘புதிய வானங்களின்’ கீழ் “நீதி வாசமாயிருக்கும்” புதிய பூமியின் பாகமாக ஆகும்போது நீதியின் மேல் அவர்களுக்கு இருக்கும் தாகம் இன்னுமதிகமாக திருப்தி செய்யப்படும்.—2 பேதுரு 3:13; சங்கீதம் 37:29.
இரக்கமுள்ளவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்
13, 14. நாம் இரக்கமுள்ளவர்கள் என்பதை நடைமுறையான என்னென்ன வழிகளில் காட்ட வேண்டும், அதனால் நமக்கு என்ன பயன் கிடைக்கிறது?
13 இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தில் தொடர்ந்து இவ்வாறு சொன்னார்: ‘இரக்கமுள்ளவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.’ (மத்தேயு 5:7) சட்ட ரீதியில் இரக்கம் என்பது, தவறு செய்த ஒருவருக்குச் சட்டம் அனுமதிக்கும் தண்டனையை ஒரு நீதிபதி சற்றுக் குறைத்து வழங்குவதன் மூலம் கருணை காட்டுவதைக் குறிக்கிறது. ஆனால் “இரக்கம்” என்று பைபிளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மூல வார்த்தைகள், துன்பத்தில் இருப்போரை விடுவிப்பதற்கு உதவும் கருணையைப் பெரும்பாலும் குறிக்கின்றன. ஆகவே, இரக்கமுள்ளவர்கள் பரிவு எனும் குணத்தை வெளிக்காட்டுகிறார்கள். நல்ல சமாரியனைப் பற்றிய இயேசுவின் உவமை துன்பத்திலிருந்த ஒருவருக்கு ‘இரக்கம் காட்டுவதில்’ சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய ஒரு நபரை சித்தரித்துக் காட்டுகிறது.—லூக்கா 10:29-37.
14 இரக்கமுள்ளவர்களாய் இருப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியை ருசித்துப் பார்க்க தேவையில் இருப்போருக்கு நல்ல காரியங்களைச் செய்வது அவசியம். (கலாத்தியர் 6:10) மக்களைப் பார்த்து இயேசு பரிதவித்தார். “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.” (மாற்கு 6:34) மனிதரின் ஆன்மீக தேவையே மற்ற எல்லாத் தேவைகளைக் காட்டிலும் மிக முக்கியமானது என்பதை இயேசு அறிந்திருந்தார். பிறருக்கு முக்கியமாக தேவைப்படும் ஒன்றை கொடுப்பதன் மூலம், அதாவது “ராஜ்யத்தின் நற்செய்தியை” பகிர்ந்துகொள்வதன் மூலம் நாமும்கூட பரிவும் இரக்கமும் உள்ளவர்கள் என்பதைக் காட்டலாம். (மத்தேயு 24:14, NW) முதியோர், விதவைகள், அநாதைகள் ஆகிய சக கிறிஸ்தவர்களுக்கு நாம் நடைமுறையான உதவியையும் அளிக்கலாம், ‘திடனற்றவர்களைத் தேற்றலாம்.’ (1 தெசலோனிக்கேயர் 5:14; நீதிமொழிகள் 12:25; யாக்கோபு 1:27) இது நமக்கு மகிழ்ச்சியை அளிப்பது மட்டுமல்லாமல், யெகோவாவின் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும் வழிசெய்கிறது.—அப்போஸ்தலர் 20:35; யாக்கோபு 2:13.
இருதயத்தில் சுத்தமுள்ளவர்களும் சமாதானம் பண்ணுகிறவர்களும்
15. நாம் சுத்த இருதயமுள்ளவர்களாயும் சமாதானம் பண்ணுகிறவர்களாயும் இருப்பது எப்படி?
15 மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் ஆறாவது, ஏழாவது காரணங்களை இயேசு இவ்வாறு குறிப்பிட்டார்: ‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். சமாதானம் பண்ணுகிறவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.’ (மத்தேயு 5:8, 9) சுத்த இருதயம் என்பது ஒழுக்க ரீதியில் தூய்மையாக இருப்பதோடு, ஆன்மீக ரீதியில் மாசற்றதாகவும் யெகோவாவுக்குப் பக்தி செலுத்துவதில் ஒருமுகப்படுத்தப்பட்டதாகவும் இருக்கிறது. (1 நாளாகமம் 28:9; சங்கீதம் 86:11) சமாதானம் பண்ணுகிறவர்கள் சக கிறிஸ்தவர்களோடும் தங்களால் முடிந்தவரை அக்கம்பக்கத்தாரோடும் சமாதானமாக வாழ்கிறார்கள். (ரோமர் 12:17-21) அவர்கள் ‘சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடருகிறார்கள்.’—1 பேதுரு 3:11.
16, 17. (அ) அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் ஏன் ‘தேவனுடைய புத்திரர்’ என அழைக்கப்படுகிறார்கள், அவர்கள் எவ்வாறு ‘தேவனைத் தரிசிக்கிறார்கள்’? (ஆ) ‘வேறே ஆடுகள்’ எவ்வாறு ‘தேவனைத் தரிசிக்கிறார்கள்’? (இ) ‘வேறே ஆடுகள்’ எவ்வாறு முழுமையான கருத்தில் ‘தேவனுடைய புத்திரராவார்கள்,’ எப்பொழுது?
16 சமாதானம் பண்ணுகிறவர்களும் சுத்த இருதயமுள்ளவர்களும் ‘தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்’ என்றும் “தேவனைத் தரிசிப்பார்கள்” என்றும் உறுதியளிக்கப்படுகிறார்கள். ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் பூமியில் இருக்கையிலேயே யெகோவாவால் தத்தெடுக்கப்பட்ட ‘புத்திரராக’ இருக்கிறார்கள். (ரோமர் 8:14-17) அவர்கள் பரலோகத்தில் கிறிஸ்துவுடன் இருப்பதற்கு உயிர்த்தெழுப்பப்படும்போது யெகோவாவின் பிரசன்னத்தில் சேவை செய்வார்கள், அவரை உண்மையில் தரிசிக்கவும் செய்வார்கள்.—1 யோவான் 3:1, 2; வெளிப்படுத்துதல் 4:9-11.
17 சமாதானம் பண்ணுகிற ‘வேறே ஆடுகளோ’ நல்ல மேய்ப்பரான இயேசு கிறிஸ்துவின் கீழ் யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள்; இந்த மேய்ப்பர் அவர்களுடைய ‘நித்திய பிதாவாக’ ஆகிறார். (யோவான் 10:14, 16; ஏசாயா 9:6) கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சிக்குப் பிறகு கடைசி பரீட்சையில் வெற்றிபெறுவோர் யெகோவாவின் பூமிக்குரிய புத்திரராக தத்தெடுக்கப்படுவார்கள்; அதோடு, ‘தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.’ (ரோமர் 8:20; வெளிப்படுத்துதல் 20:7, 9) இதை எதிர்பார்த்திருக்கும் வேளையில், அவர்கள் யெகோவாவை தங்களுடைய பிதா என அழைக்கிறார்கள்; ஏனெனில் தங்களுக்கு உயிர் கொடுத்தவர் அவரே என்பதை உணர்ந்து அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். (ஏசாயா 64:8) பூர்வ காலத்தில் வாழ்ந்த யோபுவையும் மோசேயையும் போல, விசுவாசக் கண்களால் ‘தேவனை அவர்கள் தரிசிக்க’ முடியும். (யோபு 42:5; எபிரெயர் 11:27) தங்களுடைய ‘மனக்கண்களாலும்’ திருத்தமான அறிவாலும் யெகோவாவின் அருமையான பண்புகளை அவர்கள் நன்கு உணர்ந்து, அவருடைய சித்தத்தைச் செய்வதன் மூலம் அவரைப் பின்பற்ற முயலுகிறார்கள்.—எபேசியர் 1:18, 19; ரோமர் 1:19, 20; 3 யோவான் 11.
18. மகிழ்ச்சிக்கு காரணமாக இயேசு குறிப்பிட்ட ஏழு விஷயங்களின்படி, இன்று உண்மையான மகிழ்ச்சியைக் காண்பவர்கள் யார்?
18 ன்மீக தேவையைக் குறித்து உணர்வுடையோர், துயரப்படுவோர், சாந்தகுணமுள்ளோர், நீதியின் மேல் பசிதாகமுள்ளோர், இரக்கமுள்ளோர், இருதயத்தில் சுத்தமுள்ளோர், சமாதானம் பண்ணுவோர் ஆகிய எல்லாரும் யெகோவாவுக்குச் சேவை செய்வதில் உண்மையான மகிழ்ச்சி காண்பார்கள் என்பதை நாம் பார்த்தோம். என்றாலும் அப்படிப்பட்டவர்கள் எப்போதும் எதிர்ப்பையும், ஏன் துன்புறுத்தலையும்கூட சந்தித்திருக்கிறார்கள். இது அவர்களுடைய மகிழ்ச்சியைக் குலைத்துப் போடுகிறதா? இதற்கான பதிலை அடுத்த கட்டுரையில் காணலாம்.
[அடிக்குறிப்பு]
a புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளும் த ஜெருசலேம் பைபிள், டுடேஸ் இங்லிஷ் வர்ஷன் போன்ற பிற பைபிள்களும் “பாக்கியவான்கள்” என்ற வார்த்தைக்கு பதிலாக “மகிழ்ச்சியுள்ளவர்கள்” என்ற மிகத் திருத்தமான வார்த்தையை பயன்படுத்துகின்றன. ஆகவே, இக்கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும், “பாக்கியவான்கள்” என்ற வார்த்தைக்குப் பதிலாக “மகிழ்ச்சியுள்ளவர்கள்” என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.
மறுபார்வைக்காக
• ஆன்மீக தேவையைக் குறித்து உணர்வுடையோர் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள்?
• துயரப்படுகிறவர்கள் எவ்வழிகளில் ஆறுதல் அடைகிறார்கள்?
• சாந்தகுணத்தை நாம் எப்படி காட்டுகிறோம்?
• நாம் ஏன் இரக்கமுள்ளவராயும், இருதயத்தில் சுத்தமுள்ளவராயும், சமாதானம் பண்ணுகிறவராயும் இருக்க வேண்டும்?
[பக்கம் 10-ன் படம்]
‘ஆன்மீக தேவையைக் குறித்து உணர்வுடையோர் மகிழ்ச்சியுள்ளவர்கள்’
[பக்கம் 10-ன் படம்]
‘நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்’
[பக்கம் 10-ன் படங்கள்]
‘இரக்கமுள்ளவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்’