அதிகாரம் பத்து
“எழுதப்பட்டிருக்கிறது”
1-3. நாசரேத்து மக்கள் எதை உணர்ந்துகொள்ள வேண்டுமென இயேசு விரும்புகிறார், அவர் என்ன அத்தாட்சியை அளிக்கிறார்?
ஊழியத்தில் இயேசு காலடி எடுத்து வைத்த சமயம் அது. கிறிஸ்து தம்முடைய சொந்த ஊரான நாசரேத்துக்குத் திரும்பி வந்திருக்கிறார். மக்கள் வெகு காலமாக எதிர்பார்த்திருந்த மேசியா தாம்தான் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள உதவுவதே அவருடைய குறிக்கோள். அதற்காக அவர் என்ன அத்தாட்சி அளிக்கிறார்?
2 அவர் ஏதாவது அற்புதம் செய்வார் என்றே அநேகர் எதிர்பார்க்கிறார்கள். இயேசு செய்த மகத்தான அற்புதங்களைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் எந்தவொரு அற்புதத்தையும் இயேசு செய்வதில்லை. மாறாக, அவருடைய வழக்கப்படி ஜெபக்கூடத்திற்குச் செல்கிறார். வாசிப்பதற்காக அவர் எழுந்து நின்றபோது ஏசாயாவின் சுருள் அவரிடம் கொடுக்கப்படுகிறது. அவர் தேடுகிற பகுதியைக் கண்டுபிடிக்க அந்த நீண்ட சுருளைக் கவனமாகப் பிரிக்கிறார். ஏசாயா 61:1-3-ல் நாம் இன்று காணும் பகுதியைச் சத்தமாக வாசிக்கிறார்.—லூக்கா 4:16-19.
3 அவர் வாசிக்கிற பகுதி அங்கு இருக்கிறவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பகுதி. அது மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனம். எல்லாரும் இயேசுவையே கண் இமைக்காமல் பார்க்கிறார்கள். அறையெங்கும் ஒரே நிசப்தம். “இப்போது நீங்கள் கேட்ட இந்த வேதவசனம் இன்று நிறைவேறிவிட்டது” என்று சொல்லி இயேசு விளக்க ஆரம்பிக்கிறார்—ஒருவேளை விலாவாரியாக விளக்கியிருக்கலாம். அவர் பேசுகிற மனங்கவரும் வார்த்தைகளைக் கேட்டு அங்கு இருப்பவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இருந்தாலும், பிரமிப்பூட்டும் ஏதாவதொரு அடையாளத்தை இயேசு செய்வார் என இன்னமும் அநேகர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இயேசு அவர்களுடைய விசுவாசமின்மையை அம்பலப்படுத்த தைரியமாக வேதவசனத்திலிருந்து ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்டுகிறார். உடனே நாசரேத்து மக்கள் அவரைத் தீர்த்துக்கட்ட பார்க்கிறார்கள்!—லூக்கா 4:20-30.
4. ஊழியத்தில் இயேசு நமக்கு என்ன முன்மாதிரி வைத்திருக்கிறார், இந்த அதிகாரத்தில் நாம் எதைப் பற்றி சிந்திப்போம்?
4 இயேசு தம்முடைய ஊழியக் காலம் முழுவதிலும் கடவுளுடைய வார்த்தையையே சார்ந்திருந்தார்; இந்த விஷயத்தில் நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். உண்மைதான், கடவுளுடைய சக்தி அவர்மீது இருந்ததென்பதை அவர் செய்த அற்புதங்கள் பலமாக நிரூபித்தன. இருந்தாலும், பரிசுத்த வேதாகமத்தைப் பயன்படுத்தி அதை நிரூபிக்கவே அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இந்த விஷயத்தில் அவருடைய முன்மாதிரியை நாம் இப்போது சிந்திக்கலாம். அதாவது, நம்முடைய எஜமானர் எப்படி கடவுளுடைய வார்த்தையிலிருந்து மேற்கோள் காட்டி பேசினார்... அதை ஆதரித்து பேசினார்... அதிலிருந்து விளக்கினார்... என்று சிந்திக்கலாம்.
கடவுளுடைய வார்த்தையிலிருந்து மேற்கோள் காட்டி...
5. மக்கள் எதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார், தாம் சொன்ன கூற்றுகள் உண்மை என்பதை எப்படிக் காட்டினார்?
5 தாம் சொல்லும் செய்தி யாருடையது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார். எனவேதான், “என் போதனை என்னுடையதல்ல, என்னை அனுப்பியவருடையது” என்றார். (யோவான் 7:16) மற்றொரு சமயம் இவ்வாறு சொன்னார்: ‘நான் எதையும் சொந்தமாகச் செய்வதில்லை, தகப்பன் எனக்குக் கற்றுக்கொடுத்தபடியே இந்த விஷயங்களைப் பேசுகிறேன்.’ (யோவான் 8:28) “நான் உங்களுக்குச் சொல்கிற விஷயங்களைச் சொந்தமாகச் சொல்லவில்லை. என்னோடு ஒன்றுபட்டிருக்கும் என் தகப்பன்தான் தன்னுடைய செயல்களை என் மூலம் செய்துவருகிறார்” என்றும் சொன்னார். (யோவான் 14:10) இந்தக் கூற்றுகள் உண்மை என்பதை நிரூபிக்க அவர் பயன்படுத்திய ஒரு வழி, கடவுளுடைய வார்த்தையிலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டியதாகும்.
6, 7. (அ) எபிரெய வேதாகமத்திலிருந்து இயேசு எந்தளவுக்கு மேற்கோள்காட்டி பேசினார், அது ஏன் ஆச்சரியத்திற்குரியது? (ஆ) வேத அறிஞர்களின் போதனைக்கும் இயேசுவின் போதனைக்கும் இடையே என்ன வித்தியாசம்?
6 இயேசுவின் வார்த்தைகளை நாம் கூர்ந்து ஆராய்ந்தால், எபிரெய வேதாகமத்தின் பாதிக்கும் அதிகமான புத்தகங்களிலிருந்து (அதாவது, அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களிலிருந்து) நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர் மேற்கோள் காட்டினார் என்பதைத் தெரிந்துகொள்வோம். இது உங்களுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றாமலிருக்கலாம். நீங்கள் ஒருவேளை இப்படி யோசிக்கலாம், ‘அவர்தான் மூன்றரை வருஷம் போதித்தாரே, அப்படியென்றால் எல்லா புத்தகத்திலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கலாமே?’ ஒருவேளை, அப்படி அவர் காட்டியும் இருந்திருக்கலாம். ஆனால், இயேசு சொன்ன... செய்த... காரியங்களில் கடுகளவுதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். (யோவான் 21:25) சொல்லப்போனால், பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் எல்லாவற்றையும் சத்தமாக வாசிக்க உங்களுக்குச் சில மணிநேரங்களே எடுக்கும். இப்போது, கடவுளைப் பற்றியும் அவருடைய அரசாங்கத்தைப் பற்றியும் நீங்கள் சில மணிநேரங்களே பேசுவதாக கற்பனை செய்து பாருங்கள்; அந்தக் கொஞ்ச நேரத்திற்குள் எபிரெய வேதாகமத்தில் பாதிக்கும் அதிகமான புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டுவது சாதாரண விஷயம் என்று நினைக்கிறீர்களா? அதுமட்டுமல்ல, இயேசு பெரும்பாலான சமயங்களில் சுருள்கள் எதுவும் இல்லாமலேயே பேசினார். பிரபலமான மலைப் பிரசங்கத்தைக் கொடுத்தபோது எபிரெய வேதாகமத்திலிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏராளமான மேற்கோள்களைக் காட்டினார்—எல்லாமே மனப்பாடமாக!
7 கடவுளுடைய வார்த்தையின் மீது இயேசுவுக்கு ஆழ்ந்த மரியாதை இருந்தது என்பதை அவர் காட்டிய மேற்கோள்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். “அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள்; ஏனென்றால், அவர் வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கடவுளிடமிருந்து அதிகாரம் பெற்றவராகக் கற்பித்தார்.” (மாற்கு 1:22) வேத அறிஞர்கள் கற்பித்தபோது மெத்தப்படித்த ரபீக்களுடைய கூற்றுகளையும் வாய்மொழி சட்டங்களையும் மேற்கோள் காட்டுவதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள். ஆனால், இயேசு ஒருமுறைகூட வாய்மொழி சட்டங்களையோ ரபீக்களின் கூற்றுகளையோ ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. மாறாக, கடவுளுடைய வார்த்தையையே ஆதாரமாகக் கொண்டு பேசினார். “எழுதப்பட்டிருக்கிறது” என்ற வார்த்தையை அவர் அடிக்கடி சொல்வதை நாம் கவனிக்கிறோம். தம்மைப் பின்பற்றினவர்களுக்குக் கற்பிக்கவும் அவர்களுடைய தவறான கருத்துகளைக் களைந்தெறியவும் அவர் இந்த வார்த்தையை அல்லது இதுபோன்ற வார்த்தைகளை அவ்வப்போது பயன்படுத்தினார்.
8, 9. (அ) வியாபாரிகளை இயேசு விரட்டியடித்தபோது கடவுளுடைய வார்த்தை தமக்கு அதிகாரம் அளித்திருப்பதை எப்படிக் காட்டினார்? (ஆ) ஆலயத்திலிருந்த மதத் தலைவர்கள் கடவுளுடைய வார்த்தையைத் துளியும் மதிக்காததை எப்படிக் காட்டினார்கள்?
8 எருசலேம் ஆலயத்தில் வியாபாரம் செய்தவர்களை இயேசு துரத்தியடித்தபோது, “‘என் வீடு ஜெப வீடு என்று அழைக்கப்படும்’ என எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் அதைக் கொள்ளைக்காரர்களின் குகையாக்குகிறீர்கள்” என்று சொன்னார். (மத்தேயு 21:12, 13; ஏசாயா 56:7; எரேமியா 7:11) அதற்கு முந்தின நாள் அவர் அநேக அற்புதங்களைச் செய்தார். அதைக் கண்டு வியந்துபோன சிறு பிள்ளைகள் அவரைப் புகழ்ந்தார்கள். அப்போது மதத் தலைவர்கள், “இவர்கள் சொல்வதைக் கேட்கிறாயா” என்று கோபத்தோடு இயேசுவிடம் கேட்டார்கள். அதற்கு அவர், “கேட்கிறேன். ‘பிள்ளைகளின் வாயினாலும் குழந்தைகளின் வாயினாலும் உங்களுக்குப் புகழ் உண்டாகும்படி செய்தீர்கள்’ என்ற வார்த்தைகளை நீங்கள் வாசித்ததே இல்லையா?” என்று அவர்களிடமே கேட்டார். (மத்தேயு 21:16; சங்கீதம் 8:2) குழந்தைகள் இப்படிப் புகழ்வதை கடவுளுடைய வார்த்தை அங்கீகரிக்கிறது என்பதை அவர்கள் அறிய வேண்டுமென இயேசு விரும்பினார்.
9 பிற்பாடு அந்த மதத் தலைவர்கள் இயேசுவிடம் ஒன்றுகூடி வந்து, “எந்த அதிகாரத்தால் நீ இதையெல்லாம் செய்கிறாய்?” என்று ஆத்திரத்தோடு கேட்டார்கள். (மத்தேயு 21:23) தம்முடைய அதிகாரத்திற்கு யார் ஊற்றுமூலர் என்பதை இயேசு அநேக முறை தெரிவித்திருந்தார். அவர் புதுப்புது கருத்துகளையும் கோட்பாடுகளையும் உருவாக்கவில்லை. தம் தகப்பனுடைய வார்த்தையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பேசினார். அப்படியென்றால், அந்தக் குருக்களும் வேத அறிஞர்களும் யெகோவாவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் துளியும் மதிப்பு காட்டவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே, அவர்களுடைய பொல்லாத உள்நோக்கங்களை இயேசு அம்பலப்படுத்தியதில் ஒரு தவறுமில்லை.—மத்தேயு 21:23-46.
10. கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தும் விஷயத்தில் நாம் எவ்வாறு இயேசுவைப் பின்பற்றலாம், இயேசுவிடம் இல்லாத என்னென்ன உபகரணங்கள் நம்மிடம் இருக்கின்றன?
10 இயேசுவைப் போலவே இன்றுள்ள உண்மைக் கிறிஸ்தவர்களும் ஊழியத்தில் கடவுளுடைய வார்த்தையையே ஆதாரமாகக் கொண்டு பேசுகிறார்கள். பைபிளிலுள்ள செய்தியை சொல்வதில் ஆர்வம் காட்டுபவர்கள் என்ற பெயரை யெகோவாவின் சாட்சிகள் உலகெங்கும் பெற்றிருக்கிறார்கள். நம்முடைய பிரசுரங்களில் அடிக்கடி வேதவசனங்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன அல்லது குறிப்பிடப்படுகின்றன. நாமும் ஊழியத்தில் பைபிளிலிருந்தே வசனங்களைக் காட்டி பேச முயற்சி செய்கிறோம். (2 தீமோத்தேயு 3:16) பைபிளிலிருந்து வசனங்களை வாசிக்கும்போது அல்லது அதன் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டும்போது யாராவது காதுகொடுத்துக் கேட்டால் நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! இயேசுவைப் போல் நமக்கு அபார ஞாபகசக்தி இல்லை என்றாலும், அவரிடம் இல்லாத ஏராளமான உபகரணங்கள் நம்மிடம் இருக்கின்றன. பற்பல மொழிகளில் வெளியிடப்படும் முழு பைபிளும், எந்த வசனத்தையும் சட்டென கண்டுபிடிப்பதற்கு உதவியாக பல்வேறு புத்தகங்களும் நம் கைவசம் இருக்கின்றன. எனவே, நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பைபிளிலிருந்து மேற்கோள் காட்டவும் அதன்மீதே மக்களுடைய கவனத்தைத் திருப்பவும் நாம் தீர்மானமாய் இருப்போமாக!
கடவுளுடைய வார்த்தையை ஆதரித்து...
11. இயேசு ஏன் அவ்வப்போது கடவுளுடைய வார்த்தையை ஆதரித்துப் பேச வேண்டியிருந்தது?
11 கடவுளுடைய வார்த்தை அடிக்கடி தாக்குதலுக்கு இரையானதை இயேசு கண்டார். ஆனால், அதைக் குறித்து அவர் ஆச்சரியப்படவில்லை. தம் தகப்பனிடம் ஜெபம் செய்தபோது “உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்” என்று சொன்னார். (யோவான் 17:17) அதேசமயம், “உலகத்தை ஆளுகிற” சாத்தான், “பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான்” என்பதையும் இயேசு நன்கு அறிந்திருந்தார். (யோவான் 8:44; 14:30) சாத்தானின் சோதனைகளை எதிர்த்தபோது இயேசு மூன்று முறை வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டினார். சங்கீதத்திலிருந்து ஒரு வசனத்தை சாத்தான் மேற்கோள் காட்டி அதை வேண்டுமென்றே திரித்துக் கூறியபோது, கடவுளுடைய வார்த்தையை இயேசு ஆதரித்து அவனுக்குச் சரியான பதிலடி கொடுத்தார்.—மத்தேயு 4:6, 7.
12-14. (அ) மதத் தலைவர்கள் எப்படி மோசேயின் திருச்சட்டத்தை அவமதித்தார்கள்? (ஆ) இயேசு எப்படி கடவுளுடைய வார்த்தையை ஆதரித்துப் பேசினார்?
12 பரிசுத்த வேதாகமத்தை மக்கள் திரித்துக் கூறியபோது அல்லது அதற்குத் தவறாக அர்த்தம் சொன்னபோது இயேசு அதை எதிர்த்து வேதாகமத்தின் சார்பாகப் பேசினார். அன்றைய மதத் தலைவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் புரட்டிப் பேசினார்கள். மோசேயின் திருச்சட்டத்திலுள்ள நுணுக்கமான விஷயங்களைக் கடைப்பிடிப்பதில் மிகவும் கெடுபிடியாக நடந்துகொண்டார்கள். ஆனால், அந்தச் சட்டங்களுக்கு ஆதாரமாக இருந்த நியமங்களைப் பொருத்துவதில் கோட்டை விட்டுவிட்டார்கள். சுருக்கமாகச் சொன்னால், கடவுளை அவர்கள் உள்ளப்பூர்வமாக வழிபடவில்லை. ஆம், பக்திமான்களைப் போல் வேஷம் போட்டார்களே தவிர நியாயம், இரக்கம், விசுவாசம் போன்ற மிக முக்கியமான விஷயங்களைக் காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள். (மத்தேயு 23:23) ஆனால், இயேசு திருச்சட்டத்தை எப்படி ஆதரித்து பேசினார்?
13 மலைப்பிரசங்கத்தில் மோசேயின் திருச்சட்டத்தை இயேசு குறிப்பிட்டபோதெல்லாம், “. . . என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்” என அந்த மக்களிடம் சொன்னார். அதன் பிறகு, “ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறி, திருச்சட்டத்தை மேலோட்டமாகக் கடைப்பிடிப்பதைவிட அதில் பொதிந்திருந்த நியமத்தைக் கடைப்பிடிப்பது முக்கியம் என்பதை விளக்கினார். அப்படியானால், இயேசு திருச்சட்டத்திற்கு எதிராகப் பேசினாரா? இல்லவே இல்லை, அவர் அதை ஆதரித்துத்தான் பேசினார். உதாரணத்திற்கு, “கொலை செய்யக் கூடாது” என்ற சட்டத்தை அந்த மக்கள் நன்கு அறிந்திருந்தார்கள். ஆனால், ஒருவரைப் பகைப்பதே அந்தச் சட்டத்தின் நியமத்தை மீறுவதாகும் என இயேசு சொன்னார். அதேபோல், “மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது” என்ற சட்டத்தையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், மணத்துணையல்லாத ஒருவர்மீது மோகம் கொள்வதே அந்தச் சட்டத்தின் நியமத்தை மீறுவதாகும் என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 5:17, 18, 21, 22, 27-39.
14 “‘மற்றவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டும், ஆனால் எதிரியை வெறுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:43, 44) அப்படியானால், ‘எதிரியை வெறுக்க வேண்டும்’ என்ற கட்டளை கடவுளுடைய வார்த்தையிலா சொல்லப்பட்டிருந்தது? இல்லை. இது மதத் தலைவர்களே வகுத்த சட்டம். அவர்கள் கடவுளுடைய பரிபூரண சட்டத்தில் மனித கருத்துகளைப் புகுத்தி அதன் வலிமையைக் குறைத்தார்கள். ஆனால், தீய விளைவுகளை ஏற்படுத்தும் மனித பாரம்பரியங்களால் கடவுளுடைய வார்த்தை கறைபடாதபடி இயேசு அதை பாதுகாத்தார்.—மாற்கு 7:9-13.
15. திருச்சட்டத்தைக் கெடுபிடியானதாக, கொடூரமானதாக மதத் தலைவர்கள் சித்தரித்துக் காட்டியதை இயேசு எப்படித் தவறென நிரூபித்தார்?
15 திருச்சட்டத்தை மதத் தலைவர்கள் கெடுபிடியானதாக, கொடூரமானதாக சித்தரித்துக் காட்டியதன் மூலமும் அதைத் தாக்கினார்கள். வயல் வழியாக போய்க்கொண்டிருந்த இயேசுவின் சீஷர்கள் கதிர்களைப் பிடுங்கி சாப்பிட்டபோது, அவர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதாக பரிசேயர்கள் சிலர் குற்றம்சாட்டினார்கள். கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஓர் உதாரணத்தைக் கொண்டு இந்தத் தவறான கருத்தை இயேசு எதிர்த்தார். பரிசுத்த ஸ்தலத்தில் சேவை செய்கிறவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டிய படையல் ரொட்டிகளை தாவீதும் அவருடைய ஆட்களும் பசியாக இருந்தபோது சாப்பிட்டதைப் பற்றி வேதாகமத்திலுள்ள ஒரே பதிவைக் குறிப்பிட்டார். இவ்வாறு, யெகோவாவின் இரக்கத்தையும் கருணையையும் அந்த பரிசேயர்கள் உணரத் தவறினார்கள் என்பதை இயேசு அவர்களுக்கு எடுத்துக் காட்டினார்.—மாற்கு 2:23-27.
16. விவாகரத்து சம்பந்தமான மோசேயின் கட்டளையை மதத் தலைவர்கள் எப்படித் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றினார்கள், அவர்களுடைய தவறான கருத்தை இயேசு எப்படிச் சரிசெய்தார்?
16 கடவுளுடைய சட்டத்தின் வலிமையைக் குறைக்க மதத் தலைவர்கள் சில சாக்குப்போக்குகளைத் தேடினார்கள். உதாரணமாக, மனைவி “ஏதோவொரு கேவலமான காரியத்தை” செய்தால், ஒருவேளை குடும்பத்துக்குப் பெருத்த அவமானத்தைக் கொண்டுவரும் விதத்தில் ஏதாவது பெரிய தவறைச் செய்தால், அவளை விவாகரத்து செய்ய கணவனுக்குத் திருச்சட்டம் அனுமதி அளித்தது. (உபாகமம் 24:1) ஆனால், இயேசுவின் காலத்தில் இருந்த மதத் தலைவர்கள் அந்தச் சட்டத்தை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, தொட்டதற்கெல்லாம், ஏன், உணவை தீய்த்துவிட்டால்கூட ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்றார்கள்.a அவர்கள் மோசேயின் திருச்சட்டத்தை இஷ்டத்திற்கு திரித்துக் கூறியதை இயேசு சுட்டிக் காட்டினார். பின்பு, ஒருவனுக்கு ஒருத்தி என்று யெகோவா ஆரம்பத்தில் வகுத்த நியதியை அவர்களுக்கு நினைப்பூட்டினார். பாலியல் முறைகேட்டின் காரணமாக மட்டுமே விவாகரத்து செய்யலாம் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார்.—மத்தேயு 19:3-12.
17. கடவுளுடைய வார்த்தையை ஆதரித்துப் பேசுவதில் இன்று கிறிஸ்தவர்கள் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்?
17 இன்று கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் அவரைப் போலவே வேதவசனங்களுக்கு எதிராகச் சொல்லப்படும் கூற்றுகளை எதிர்த்து, அதற்கு ஆதரவாகப் பேச ஆவலாய் இருக்கிறார்கள். கடவுளுடைய வார்த்தையில் உள்ள ஒழுக்க நெறிகள் எல்லாம் பழமையானவை, நடைமுறைக்கு ஒத்துவராதவை என மதத் தலைவர்கள் முத்திரை குத்துகையில் அவர்கள் உண்மையில் பைபிளையே தாக்கிப் பேசுகிறார்கள். அதோடு, பொய் போதனைகளை பைபிள் கோட்பாடுகள் என மதங்கள் கற்பிக்கும்போதும் அவை பைபிளைத் தாக்குகின்றன. ஆனால், நாம் கடவுளுடைய சத்திய வார்த்தையின் சார்பாகப் பேசுவதை பாக்கியமாகக் கருதுகிறோம்; உதாரணத்திற்கு, கடவுள் திரித்துவத்தின் பாகமல்ல என கற்பிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். (உபாகமம் 4:39) அதேசமயத்தில், மிகுந்த சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் கற்பிக்கிறோம்.—1 பேதுரு 3:15.
கடவுளுடைய வார்த்தையை விளக்கி...
18, 19. கடவுளுடைய வார்த்தையை விளக்குவதில் இயேசு அபார திறமை பெற்றிருந்தார் என்பதை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன?
18 எபிரெய வேதாகமம் பதிவு செய்யப்பட்ட சமயத்தில் இயேசு பரலோகத்தில் இருந்தார். பூமிக்கு வந்து கடவுளுடைய வார்த்தையை மக்களுக்கு விளக்குவதில் அவர் எவ்வளவு ஆனந்தம் அடைந்திருப்பார்! உதாரணத்திற்கு, அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின் சீஷர்கள் இருவர் எம்மாவு கிராமத்திற்குப் போய்க்கொண்டிருந்தபோது இயேசு அவர்களைச் சந்தித்த அந்த மறக்க முடியாத நாளைக் கொஞ்சம் நினைவுபடுத்தி பாருங்கள். அவர்தான் இயேசு என்று தெரியாமலேயே அவரிடம் தங்களுடைய அன்புக்குரிய எஜமானர் இறந்தது தங்களுக்கு மிகுந்த வேதனையையும் குழப்பத்தையும் அளித்ததாகச் சொன்னார்கள். அப்போது அவர் என்ன செய்தார்? “மோசேயின் புத்தகங்கள்முதல் எல்லா தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்வரை வேதவசனங்களில் தன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கினார்.” அவர்கள் எப்படி உணர்ந்தார்கள்? “வழியில் அவர் நம்மோடு பேசி, வேதவசனங்களை முழுமையாக விளக்கிக் காட்டியபோது, நம் இதயம் கொழுந்துவிட்டு எரிந்தது, இல்லையா?” என்று பின்பு ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.—லூக்கா 24:15-32.
19 பிற்பாடு அதே நாளில் தம் அப்போஸ்தலர்களையும் மற்ற சீஷர்களையும் இயேசு சந்தித்தார். அப்போது அவர் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். “வேதவசனங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுடைய மனக்கண்களை முழுமையாகத் திறந்தார்.” (லூக்கா 24:45) இயேசு இதற்குமுன் பலமுறை தங்களுக்கும் மற்றவர்களுக்கும் வசனங்களை இப்படி விளக்கிக் காட்டியது இந்தச் சந்தோஷமான தருணத்தில் அவர்களுடைய மனதிற்கு நிச்சயம் வந்திருக்கும். அவர்களுக்கு நன்கு தெரிந்த வசனங்களையே எடுத்து அருமையாக விளக்கியபோது கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆழமான விஷயங்களை அவர்கள் புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தார்கள்.
20, 21. எரிகிற புதரிலிருந்து மோசேயிடம் யெகோவா பேசிய வார்த்தைகளை இயேசு எப்படி விளக்கினார்?
20 இயேசு ஒரு சமயம் சதுசேயர் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தார். இந்தச் சதுசேயர் யூத குருவர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மதப் பிரிவினர். அவர்கள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்களிடம் இயேசு, “இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவது சம்பந்தமாகக் கடவுள் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசித்ததில்லையா? ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’ என்று அவர் சொன்னார், இல்லையா? அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்” என்று சொன்னார். (மத்தேயு 22:31, 32) அவர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு வசனத்தை—சதுசேயர்களால் உயர்வாக மதிக்கப்பட்டவரான மோசே எழுதிய ஒரு வசனத்தை—இயேசு பயன்படுத்தினார். இயேசு கொடுத்த விளக்கம் எவ்வளவு வலிமை மிக்கது!
21 சுமார் கி.மு. 1514-ல், எரிகிற புதரிலிருந்து மோசேயிடம் யெகோவா பேசினார். (யாத்திராகமம் 3:2, 6) அந்தச் சமயத்தில், ஆபிரகாம் இறந்து 329 ஆண்டுகளும், ஈசாக்கு இறந்து 224 ஆண்டுகளும், யாக்கோபு இறந்து 197 ஆண்டுகளும் உருண்டோடியிருந்தன. என்றாலும், அவர்களுடைய கடவுளாக “இருக்கிறேன்” என்று யெகோவா சொன்னார். யெகோவா என்பவர் பாதாள உலகை ஆளும் தெய்வம் அல்ல என்பதை சதுசேயர்கள் அறிந்திருந்தார்கள். இயேசு சொன்னபடி, அவர் “உயிருள்ளவர்களின்” கடவுளாக இருக்கிறார். அப்படியானால், “கடவுளைப் பொறுத்தவரை, இவர்கள் எல்லாரும் உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள்” என்பதுதான் இயேசுவினுடைய குறிப்பு. என்னே ஒரு வாதம்! (லூக்கா 20:38) யெகோவாவுக்கு மரணம்வரை உண்மையாய் இருந்த ஊழியர்கள் அவருடைய எல்லையற்ற நினைவில், என்றும் அழியாத நினைவில், பாதுகாப்பாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் யெகோவா உயிர்த்தெழுப்புவது அவ்வளவு நிச்சயமாக இருப்பதால் அவர்கள் எல்லாரும் உயிருள்ளவர்களாகவே பேசப்படுகிறார்கள். (ரோமர் 4:16, 17) கடவுளுடைய வார்த்தைக்கு எவ்வளவு அருமையான ஒரு விளக்கம்! இயேசு பேசுவதைக் கேட்டு ‘மக்கள் மலைத்துப்போனதில்’ ஆச்சரியமே இல்லை!!—மத்தேயு 22:33.
22, 23. (அ) கடவுளுடைய வார்த்தையை விளக்குவதில் நாம் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்? (ஆ) அடுத்த அதிகாரத்தில் எதைக் குறித்து சிந்திப்போம்?
22 இயேசுவைப் போலவே கடவுளுடைய வார்த்தையை விளக்கிக் காட்டும் பாக்கியம் இன்று கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. அவரைப் போல் நமக்கு அபார அறிவாற்றல் இல்லைதான். என்றாலும், மக்களுக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு வசனத்தை எடுத்துக்காட்டி அவர்கள் அதுவரை கேள்விப்பட்டிராத பல அம்சங்களை விளக்கும் வாய்ப்பு நமக்கு அடிக்கடி கிடைக்கிறது. உதாரணமாக, “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக,” “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்பதைக் காலங்காலமாக அவர்கள் மனப்பாடமாக ஒப்பித்துக்கொண்டு இருக்கிறார்களே தவிர கடவுளுடைய பெயர் என்ன, அவருடைய ராஜ்யம் என்றால் என்ன என்பதைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. (மத்தேயு 6:9, 10, தமிழ் O.V.) இத்தகைய பைபிள் சத்தியங்களை தெளிவாகவும் எளிமையாகவும் விளக்க யாராவது நமக்கு வாய்ப்பு கொடுக்கும்போது நாம் எவ்வளவு சந்தோஷப்படுகிறோம்!
23 கடவுளுடைய வார்த்தையிலிருந்து மேற்கோள் காட்டி பேசுவது... அதை ஆதரித்துப் பேசுவது... விளக்கிக் காட்டுவது... ஆகியவை இயேசுவைப் போல் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு முக்கிய வழிகள். பைபிள் சத்தியங்களை மக்கள் மனதில் பதிய வைக்க இயேசு பயன்படுத்திய திறம்பட்ட முறைகள் சிலவற்றை அடுத்த அதிகாரத்தில் சிந்திப்போம்.
a “என்ன காரணத்துக்கு வேண்டுமானாலும் [விவாகரத்து] செய்யலாம், (அப்படிச் செய்ய பல காரணங்கள் இருப்பதாக ஆண்கள் சொல்லிக்கொள்கிறார்கள்)” என்று முதல் நூற்றாண்டு சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் பின்னர் கூறினார். இவரும் விவாகரத்தான பரிசேயர்.