-
வாய்வழிச் சட்டம்—ஏன் எழுத்துருவானது?காவற்கோபுரம்—1999 | ஜனவரி 15
-
-
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பெருவாரியான யூதர்கள் ஏன் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை? கண்கண்ட சாட்சியின் பதில் இதோ: “அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம் பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.” (மத்தேயு 21:23) அவர்கள் பார்வையில், எல்லாம் வல்ல கடவுள் யூத தேசத்துக்கு டோராவை (சட்டம்) கொடுத்திருக்கிறார்; அது குறிப்பிட்ட மனிதருக்கு கடவுளிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுத் தந்தது. இயேசுவுக்கு அத்தகைய அதிகாரம் இருந்ததா?
இயேசு டோராவை உயர்வாய் மதித்தார். அது உண்மையில் யாருக்கு அதிகாரமளித்திருந்ததோ அவர்களையும் மதித்தார். (மத்தேயு 5:17-20; லூக்கா 5:14; 17:14) கடவுளுடைய சட்டத்தை மீறி நடந்த மனிதர்களை அவர் அடிக்கடி கண்டித்தார். (மத்தேயு 15:3-9; 23:2-28) அத்தகைய மனிதர்கள், வாய்வழிச் சட்டம் என அழைக்கப்பட்ட பாரம்பரியங்களைப் பின்பற்றினார்கள். ஆனால் இயேசுவோ அதன் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதனால், அநேகர் அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. தங்கள் மத்தியில் அதிகாரம் செலுத்தும் ஆட்களின் பாரம்பரியங்களை ஆதரிக்கும் ஒருவரே கடவுளால் அனுப்பப்பட்டவர் என அவர்கள் நம்பினர்.
-
-
வாய்வழிச் சட்டம்—ஏன் எழுத்துருவானது?காவற்கோபுரம்—1999 | ஜனவரி 15
-
-
“இந்த அதிகாரத்தை உமக்கு கொடுத்தவன் யார்?”
மோசேயின் நியாயப்பிரமாணம் மத சம்பந்தமான அதிகாரத்தையும் கற்பிக்கும் வேலையையும் ஆசாரியர்களான ஆரோனின் வம்சத்தாரிடமே முதலில் ஒப்படைத்தது. (லேவியராகமம் 10:8-11; உபாகமம் 24:8; 2 நாளாகமம் 26:16-20; மல்கியா 2:7) இருந்தாலும், நூற்றுக்கணக்கான வருடங்கள் செல்லச் செல்ல, சில ஆசாரியர்கள் உண்மையற்றவர்களாகவும் கறைபட்டவர்களாகவும் ஆனார்கள். (1 சாமுவேல் 2:12-17, 22-29; எரேமியா 5:31; மல்கியா 2:8, 9) கிரேக்க அதிகாரம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அநேக ஆசாரியர்கள் மத சம்பந்தமான விஷயங்களில் விட்டுக் கொடுத்தார்கள். பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில், ஆசாரியத்துவத்தை அவமதித்த பரிசேயர் என்ற புதிய தொகுதி யூத மதத்துக்குள்ளிருந்தே முளைத்தது. இத்தொகுதி, பாமரனும்கூட தன்னை ஆசாரியனைப்போல பரிசுத்தமுள்ளவனாகக் கருதத்தக்க பாரம்பரியங்களை ஏற்படுத்தியது. ஏராளமானோருக்கு இந்தப் பாரம்பரியங்கள் பிடித்துப்போனது. ஆனால் அவை நியாயப்பிரமாண சட்டத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவாறு கூட்டப்பட்ட சட்டங்களாக இருந்தன.—உபாகமம் 4:2; 12:32.
பரிசேயர் நியாயப்பிரமாணத்தின் புதிய அறிஞர்களாக ஆனார்கள். ஆசாரியர்கள் செய்யத் தவறியதாக தாங்கள் கருதிய வேலையை செய்யத் துவங்கினார்கள். மோசேயின் நியாயப்பிரமாணம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவில்லை. எனவே தங்கள் கருத்துக்களை ஆதரிப்பதாக தோன்றிய, ஊர்பேர் தெரியாத புத்தகங்களிலிருந்தும் மற்ற வழிமுறைகளிலிருந்தும் வேத வார்த்தைகளை விளக்குவதற்கு புதிய முறையை உருவாக்கினார்கள்.a இவ்வாறாக அவர்கள் இத்தகைய பாரம்பரியங்களின் முதன்மை பாதுகாவலர்களும் ஆதரவாளர்களுமாகி, இஸ்ரவேலில் அதிகாரம் செலுத்துவதற்கென புதிய அடித்தளத்தை இட்டார்கள். பொ.ச. முதல் நூற்றாண்டில் பரிசேய தொகுதி யூதேயாவை ஆட்டுவிக்கும் சக்தியாக ஆகிவிட்டிருந்தது.
பரிசேயர்கள் அநேக பாரம்பரியங்களை புகுத்துவதற்காக, நடப்பிலிருந்த வாய்மொழி பாரம்பரியங்களை தொகுத்தனர்; அவற்றுக்கு வேதப்பூர்வமான தாத்பரியங்களை தேடினபோதோ, தங்களுக்கு கூடுதலான அதிகாரம் தேவை என உணர்ந்தனர். இத்தகைய பாரம்பரியங்கள் எவ்வாறு தோன்றின என்பதற்கான புதிய “கதை” உருவானது. ரபீக்கள் இவ்வாறு போதிக்கத் துவங்கினர்: “மோசே டோராவை சீனாயில் பெற்றார்; அதை யோசுவாவிடம் ஒப்படைத்தார்; யோசுவா அதை மூப்பர்களிடம் அளித்தார்; மூப்பர்கள் தீர்க்கதரிசிகளிடம் கொடுத்தனர்; தீர்க்கதரிசிகள் பேரவையைச் சேர்ந்த மனிதர்களிடம் ஒப்படைத்தனர்.”—அவட் 1:1, தி மிஷ்னா.
“மோசே டோராவை பெற்றார்” என சொல்வதன்மூலம் எழுதப்பட்ட சட்டங்களை மட்டுமே ரபீக்கள் குறிப்பிடவில்லை. ஆனால் அவற்றில் வாய்வழி பாரம்பரியங்களையும் சேர்த்துக்கொண்டனர். மனிதனால் உருவாக்கப்பட்டு முன்னேற்றுவிக்கப்பட்ட இத்தகைய பாரம்பரியங்கள் சீனாயில் கடவுள் மோசேக்கு கொடுத்தவைதாம் என அவர்கள் உரிமைபாராட்டினர். இடைவெளியை நிரப்பும் வேலையை மனிதர் செய்யும்படி கடவுள் அனுமதிக்கவில்லை, ஆனால் எழுதப்பட்ட சட்டம் சொல்லத் தவறியதை வாய்வழியாக அவரே வரையறுத்துச் சொல்லிவிட்டார் என அவர்கள் நியாயம் கற்பித்தனர். மோசே, இத்தனை காலங்களாக ஆசாரியர்களுக்கு அல்ல, மற்ற தலைவர்களுக்கே இந்த வாய்வழிச் சட்டத்தை கடத்தினார் என்பதே அவர்களுடைய கருத்து. அதிகாரத்திற்கான இந்த “துண்டிக்க முடியாத” சங்கிலியின் இயற்கை சுதந்தரவாளிகளாக பரிசேயர் தங்களை மார்தட்டிக் கொண்டனர்.
-