‘அநீதியான உலகப்பொருளால் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்’
“அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.”—லூக்கா 16:9, 10.
1. எகிப்திலிருந்து தப்பிவந்த பின்பு, மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் யெகோவாவை எவ்விதமாகத் துதித்தார்கள்?
ஓர் அற்புதத்தினால் விடுவிக்கப்படுவது—விசுவாசத்தைப் பலப்படுத்தும் என்னே ஓர் அனுபவம்! எகிப்திலிருந்து இஸ்ரவேலரின் புறப்பாட்டுக்குக் காரணம் சர்வ வல்லமையுள்ள யெகோவாவைத் தவிர வேறு எவரும் இல்லை. மோசேயும் இஸ்ரவேலரும் பின்வருமாறு பாடியது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்.”—யாத்திராகமம் 15:1, 2; உபாகமம் 29:2.
2. எகிப்திலிருந்து புறப்படுகையில் யெகோவாவின் மக்கள் தங்களோடு எதை எடுத்துச்சென்றார்கள்?
2 இஸ்ரவேலருக்குப் புதிதாக கிடைத்த சுயாதீனம் எகிப்திலிருந்த நிலைமையிலிருந்து எத்தனை வேறுபட்டதாய் இருந்தது! இப்பொழுது அவர்கள் யெகோவாவைத் தடையின்றி வணங்கமுடியும். மேலும் அவர்கள் எகிப்திலிருந்து வெறுங்கையோடு புறப்பட்டு வரவில்லை. மோசே இவ்விதமாகச் சொல்கிறார்: “இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள். கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.” (யாத்திராகமம் 12:35, 36) ஆனால் எகிப்தின் இந்தச் செல்வங்களையெல்லாம் அவர்கள் எவ்விதமாக பயன்படுத்தினார்கள்? ‘யெகோவாவை உயர்த்துவதில்’ அது விளைவடைந்ததா? அவர்களுடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?—1 கொரிந்தியர் 10:11.
“யெகோவாவுக்குக் காணிக்கை”
3. இஸ்ரவேலர் பொய் வணக்கத்தில் பொன்னைப் பயன்படுத்தியது யெகோவாவிடமிருந்து என்ன பிரதிபலிப்பைத் தூண்டியது?
3 இஸ்ரவேலருக்குக் கடவுளுடைய கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு வருவதற்காக சீனாய் மலையின் மேல் மோசே 40 நாட்கள் தங்கியிருந்தபோது, கீழே காத்திருந்த மக்கள் பொறுமையிழந்தார்கள். தங்கள் பொன் காதணிகளைக் கழற்றி தங்களுக்கு வணங்குவதற்கென்று ஒரு சொரூபத்தை உண்டுபண்ணும்படி ஆரோனைக் கேட்டார்கள். ஆரோனும்கூட அவர்களுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினார், அடுத்த நாள் அதிகாலை அவர்கள் அங்கே பலிகளைச் செலுத்தினார்கள். தங்களுடைய பொன்னை இவ்விதமாக பயன்படுத்தியது அவர்களுடைய மீட்பருக்கு பிரியமுள்ளவர்களாக அவர்களை செய்ததா? நிச்சயமாகவே இல்லை! “என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு,” என்பதாக யெகோவா மோசேயிடம் சொன்னார். மோசே மன்றாடியதன் காரணமாகவே யெகோவா தேசத்தை அழிக்காமல் விட்டார், ஆனால் கலகத் தலைவர்களோ கடவுளிடமிருந்து வந்த ஒரு வாதையினால் அழிக்கப்பட்டார்கள்.—யாத்திராகமம் 32:1-6, 10-14, 30-35.
4. ‘யெகோவாவுக்குக் காணிக்கை,’ என்பது என்ன, யார் அதைச் செலுத்தினார்கள்?
4 பின்னால், தங்களுடைய செல்வங்களை நிச்சயமாகவே யெகோவாவைப் பிரியப்படுத்துகிற வழியில் பயன்படுத்துவதற்கு இஸ்ரவேலருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ‘யெகோவாவுக்குக் காணிக்கைச்’ சேர்க்க ஆரம்பித்தார்கள்.a பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், இளநீலநூலும், பல்வேறு சாயம் தோய்த்த நூலும், வெள்ளாட்டு மயிரும், தகசுத்தோலும், சீத்திம் மரமும் ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கும் அதனுள் வைக்கப்படும் பொருட்களுக்காகவும் பெற்றுக்கொள்ளப்பட்ட நன்கொடைகளில் இடம்பெற்றிருந்தன. பதிவு நன்கொடையாளர்களின் மனநிலையின் மேல் நம்முடைய கவனத்தைத் திருப்புகிறது. ‘விருப்பமுள்ள இருதயம் கொண்டவன் எவனும் யெகோவாவுக்குக் காணிக்கையாக அதைக் கொண்டுவரட்டும்.’ (யாத்திராகமம் 35:5-9, NW) இஸ்ரவேலர் மிகப் பெரிய அளவில் பிரதிபலித்தார்கள். ஆகவே, கல்விமான் ஒருவரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரம் “அழகும் கம்பீரமான தோற்றமுமுள்ள” நிர்மாணிப்பாக இருந்தது.
ஆலயத்துக்குக் காணிக்கைகள்
5, 6. ஆலயத்தின் சம்பந்தமாக, தாவீது எவ்விதமாக தன் செல்வத்தைப் பயன்படுத்தினார், மற்றவர்கள் எவ்விதமாக பிரதிபலித்தார்கள்?
5 இஸ்ரவேலினுடைய சாலொமோன் அரசன் யெகோவாவின் வணக்கத்துக்கு நிரந்தரமான ஒரு வீட்டைக் கட்டுவதைத் திட்டமிட்டு மேற்பார்வை செய்தபோதிலும், அவருடைய தகப்பனாகிய தாவீது இதற்கு மிக விரிவான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தார். தாவீது பெருமளவில் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம் மற்றும் விலையேறப்பெற்ற கற்களைச் சேகரித்திருந்தார். “என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன். அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும் . . . மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.” தாவீது மற்றவர்களையும்கூட தாராளமாக கொடுக்கும்படியாக உற்சாகப்படுத்தினார். பிரதிபலிப்பு அபரிமிதமாக இருந்தது: அதிகமான பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு மற்றும் விலையேறப்பெற்ற கற்களைக் கொடுத்தார்கள். ஜனங்கள் “உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்.”—1 நாளாகமம் 22:5; 29:1-9.
6 உற்சாகமான இந்தக் காணிக்கைகளினால், இஸ்ரவேலர் யெகோவாவின் வணக்கத்துக்கு ஆழ்ந்தப் போற்றுதலை வெளிப்படுத்தினார்கள். தாவீது மனத்தாழ்மையோடு இவ்விதமாக ஜெபித்தார்: “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம், என் ஜனங்கள் எம்மாத்திரம்?” ஏன்? “எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம். . . . இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்.”—1 நாளாகமம் 29:14, 17.
7. ஆமோஸின் நாட்களிலிருந்து என்ன எச்சரிக்கையான பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்?
7 என்றபோதிலும், இஸ்ரவேல் கோத்திரத்தார் யெகோவாவின் வணக்கத்துக்குத் தொடர்ந்து தங்களுடைய மனங்களிலும் இருதயங்களிலும் முதலிடத்தைக் கொடுக்க தவறிவிட்டனர். பொ.ச.மு. ஒன்பதாவது நூற்றாண்டுக்குள், பிளவுபட்டிருந்த இஸ்ரவேல் ஆவிக்குரிய அசட்டை மனப்பான்மையுடைய குற்றமுள்ளதாயிற்று. வடக்கே இருந்த இஸ்ரவேலின் பத்து கோத்திர ராஜ்யத்தைக் குறித்து யெகோவா ஆமோஸ் மூலமாக பின்வருமாறு அறிவித்தார்: ‘சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களுக்கும் சமாரியாவின் பர்வதத்தை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கும் ஐயோ!’ அவர்களைத் ‘தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத் தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று, பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடிக்கிறவர்களாக’ வருணிக்கிறார். பொருள்வளம் அவர்களுக்குப் பாதுகாப்பாயிருக்கவில்லை. கடவுள் எச்சரித்தார்: “அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள்; இப்படியே செல்வமாய்ச் சயனித்தவர்களின் விருந்து கொண்டாடல் நின்றுபோகும்.” பொ.ச.மு. 740-ல் அசீரியாவின் கைகளில் இஸ்ரவேல் துன்பமனுபவித்தது. (ஆமோஸ் 6:1, 4, 6, 7) காலப்போக்கில் யூதாவின் தெற்கு ராஜ்யமும் பொருளாசைக்குப் பலியானது.—எரேமியா 5:26-29.
கிறிஸ்தவ காலங்களில் செல்வங்களின் சரியான உபயோகம்
8. செல்வங்களைப் பயன்படுத்துவதைக் குறித்ததில், யோசேப்பும் மரியாளும் என்ன நல்ல முன்மாதிரியை வைக்கின்றனர்?
8 இதற்கு நேர்மாறாக, பிற்காலங்களில் ஒப்பிடுகையில் கடவுளுடைய ஊழியர்களின் ஏழ்மை நிலையானது, மெய் வணக்கத்துக்கு வைராக்கியத்தைக் காண்பிப்பதிலிருந்து அவர்களைத் தடைசெய்யவில்லை. உதாரணமாக மரியாளையும் யோசேப்பையும் எடுத்துக்கொள்ளுங்கள். அகஸ்துராயன் கட்டளைக்குக் கீழ்ப்படிதலாக, அவர்கள் தங்களுடைய குடும்பத்தின் சொந்த ஊரான பெத்லகேமுக்குப் பயணப்பட்டார்கள். (லூக்கா 2:4, 5) இயேசு அங்கே பிறந்தார். நாற்பது நாட்கள் கழித்து, யோசேப்பும் மரியாளும் நியமிக்கப்பட்டிருந்த சுத்திகரிப்பு பலியைச் செலுத்துவதற்காக அருகாமையில் இருந்த எருசலேம் ஆலயத்துக்குச் சென்றார்கள். ஏழ்மையான அவர்களுடைய நிலைமையைச் சுட்டிக்காட்டும் விதமாக, மரியாள் இரண்டு சிறிய பறவைகளைச் செலுத்தினாள். மரியாளோ யோசேப்போ யெகோவாவுக்கு பலிசெலுத்தாதிருப்பதற்கு தங்களுடைய வறுமையை நியாயமான ஒரு காரணமாக வலியுறுத்தவில்லை. மாறாக, கீழ்ப்படிதலோடு தங்களுடைய குறைந்த செல்வங்களைப் பயன்படுத்தினார்கள்.—லேவியராகமம் 12:8; லூக்கா 2:22-24.
9 பின்னால், பரிசேயரும் ஏரோதியரும் பின்வருமாறு சொல்லி இயேசுவைத் தந்திரமாய் சிக்கவைக்கும்படி முயற்சி செய்தனர்: “ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும்.” இயேசுவின் பதில் அவருடைய பகுத்துணர்வை வெளிப்படுத்தியது. அவரிடமாக அவர்கள் கொடுத்த நாணயத்தைக் குறிப்பிட்டு, இயேசு இவ்வாறு கேட்டார்: “இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது?” “இராயனுடையது,” என்று அவர்கள் பதிலளித்தார்கள். ஞானமாக அவர் பின்வருமாறு முடிக்கிறார்: “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்.” (மத்தேயு 22:17-21) நாணயத்தை வெளியிடும் அரசாங்கம் வரிகள் செலுத்தப்படவேண்டும் என்று எதிர்பார்த்ததை இயேசு அறிந்திருந்தார். ஆனால் ஒரு மெய்க் கிறிஸ்தவன் ‘தேவனுடையதை தேவனுக்குச் செலுத்தவும்’ நாடுவதை அவரைப் பின்பற்றுவோரும் விரோதிகளும் ஒன்றுபோல் உணருவதற்கு அவர் அங்கே உதவிசெய்தார். ஒருவருடைய பொருளாதார ஆஸ்திகளின் சரியான உபயோகத்தை இது உட்படுத்துகிறது.
9-11. (அ) மத்தேயு 22:21-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் நாம் எவ்விதமாக நம்முடைய பணத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதைக் குறித்ததில் என்ன போதனையைக் கொடுக்கின்றன? (ஆ) விதவையின் குறைந்த மதிப்புள்ள காணிக்கை ஏன் வீணில் கொடுக்கப்படவில்லை?
10 ஆலயத்தில் இயேசு பார்த்த ஒரு நிகழ்ச்சி இதை விளக்குகிறது. அப்போதுதானே அவர் ‘விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போட்ட’ பேராசைமிக்க வேதபாரகரைக் கண்டனம் செய்திருந்தார். “அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்,” என்பதாக லூக்கா அறிவிக்கிறார். “ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.” (லூக்கா 20:46, 47; 21:1-4) ஆலயம் விலையேறப்பெற்ற கற்களினால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்து சில ஆட்கள் குறிப்பிட்டார்கள். அதற்கு இயேசு இவ்வாறு பதிலளித்தார்: “நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும்.” (லூக்கா 21:5, 6) அந்த விதவையின் குறைந்த மதிப்புள்ள காணிக்கை வீணாயிருந்ததா? நிச்சயமாக இல்லை. அந்தச் சமயத்தில் யெகோவா நிலைநாட்டியிருந்த ஏற்பாட்டுக்கு அவள் ஆதரவு காட்டினாள்.
11 இயேசு தம்மை உண்மையாய்ப் பின்பற்றுவோரிடம் இவ்வாறு சொன்னார்: “எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது.” (லூக்கா 16:13) இதன் காரணமாக, நம்முடைய பண சம்பந்தமான செல்வங்களைப் பயன்படுத்துவதில் சரியான சமநிலையை நாம் எவ்விதமாக காட்டலாம்?
உண்மையுள்ள பண்டகசாலைக் காப்பாளர்கள்
12-14. (அ) கிறிஸ்தவர்கள் எந்தச் செல்வங்களின் பண்டகசாலைக் காப்பாளர்களாக இருக்கின்றனர்? (ஆ) யெகோவாவின் மக்கள் இன்று என்ன குறிப்பிடத்தக்க வழிகளில் தங்கள் பண்டகசாலைக் காப்பாளர் வேலையை உண்மையுடன் நிறைவேற்றுகிறார்கள்? (இ) இன்று கடவுளுடைய வேலையை ஆதரிப்பதற்கு பணம் எங்கிருந்து வருகிறது?
12 நாம் யெகோவாவுக்கு நம்முடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கும்போது, நாம் உண்மையில் நம்மிடமிருக்கும் அனைத்தும் நம்முடைய எல்லா செல்வங்களும் அவருக்கே உரியவை என்று சொல்லுகிறோம். அப்படியானால், நம்மிடமிருப்பதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? சபையில் கிறிஸ்தவ சேவையைக் குறித்து கலந்துபேசுகையில், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் முதல் தலைவரான சகோதரர் C. T. ரஸல் இவ்வாறு எழுதினார்: “ஒவ்வொருவரும், தன்னுடைய சொந்த நேரம், செல்வாக்கு, பணம் போன்றவற்றின் பண்டகசாலைக் காப்பாளராக கர்த்தரால் நியமிக்கப்பட்டவனாக தன்னைக் கருதவேண்டும், ஒவ்வொருவனும் இந்தத் திறமைகளைத் தன்னால் இயன்றவரை மிகச் சிறப்பாக எஜமானரின் மகிமைக்காகப் பயன்படுத்துவதற்கு நாடவேண்டும்.”—புது சிருஷ்டி, (ஆங்கிலம்) பக்கம் 345.
13 “[பண்டகசாலைக் காப்பாளன், NW] உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்,” என்று 1 கொரிந்தியர் 4:2 குறிப்பிடுகிறது. ஒரு சர்வதேச அமைப்பாக, யெகோவாவின் சாட்சிகள் அந்த வருணனைக்கு ஏற்ப செயல்படுகிறவர்களாய், தங்களுடைய அதிகமான நேரத்தை கிறிஸ்தவ ஊழியத்தில் பயன்படுத்தி தங்களுடைய போதனா திறமைகளைக் கவனமாக வளர்த்துக்கொள்கிறார்கள். மேலுமாக, பிரதேச கட்டட குழுக்களின் மேற்பார்வையின் கீழ் தொண்டர்களின் அணிகள் வணக்கத்துக்காகப் பயன்படுத்துவதற்கு, மிகச் சிறந்த மன்றங்களைக் கட்டுவதற்காக தங்களுடைய நேரம், பலம் மற்றும் செய்நுட்ப அறிவையும் மனமுவந்து அளிக்கிறார்கள். இவை அனைத்திலும் யெகோவா வெகுவாகப் பிரியப்படுகிறார்.
14 இந்த மிகப் பெரிய போதிக்கும் திட்டத்தையும் கட்டட வேலையையும் ஆதரிப்பதற்கு ஆகும் பணம் எங்கிருந்து வருகிறது? ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டின நாட்களில் இருந்தது போலவே, மனவிருப்பமுள்ள ஆட்களிடமிருந்தே வருகிறது. இதில் தனிப்பட்டவர்களாக நாம் ஒரு பங்கைக் கொண்டிருக்கிறோமா? நம்முடைய பண வளத்தைப் பயன்படுத்தும் முறையானது யெகோவாவின் சேவை நமக்குப் பிரதான முக்கியத்துவமுள்ளது என்பதைக் காட்டுகிறதா? பண விஷயங்களில் நாம் உண்மையுள்ள பண்டகசாலைக் காப்பாளர்களாக இருப்போமாக.
தாராள குணத்தின் ஒரு மாதிரி
15, 16. (அ) பவுலின் நாட்களிலிருந்த கிறிஸ்தவர்கள் தயாள குணத்தை எவ்வாறு காட்டினர்? (ஆ) நம்முடைய இப்போதைய கலந்தாலோசிப்பை நாம் எவ்வாறு கருதவேண்டும்?
15 அப்போஸ்தலன் பவுல் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமிருந்த கிறிஸ்தவர்களின் தாராள குணமுள்ள ஆவியைக் குறித்து எழுதினார். (ரோமர் 15:26) அவர்கள்தாமே துன்பத்திலிருந்த போதிலும், தங்கள் சகோதரர்களுக்கு உதவிசெய்ய முழுமனதுடன் நன்கொடை அளித்தார்கள். அதேவிதமாகவே மற்றவர்களின் குறைகளை நிறைவாக்க தங்களிடம் தேவைக்கு மேல் மிஞ்சி இருப்பதை நன்கொடையாக தாராளமாக கொடுக்கும்படி பவுல் கொரிந்திய கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். சரியாகவே எவரும் பவுலை பலாத்காரமாக பணம்பறிப்பதாக குற்றஞ்சாட்ட முடியாது. அவர் எழுதினார்: “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன், பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.”—2 கொரிந்தியர் 8:1-3, 14; 9:5-7, 13.
16 நம்முடைய சகோதரர்களும் அக்கறையுள்ள ஆட்களும் உலகளாவிய ராஜ்ய வேலைக்கு இன்று அளிக்கும் தாராளமான நன்கொடைகள் அவர்கள் இந்தச் சிலாக்கியத்தை எவ்வளவு உயர்வாக மதிக்கிறார்கள் என்பதற்குச் சான்றளிக்கின்றன. ஆனால் பவுல் கொரிந்தியர்களுக்கு நினைப்பூட்டியது போலவே, இந்தக் கலந்தாலோசிப்பை ஒரு நினைப்பூட்டுதலாகச் சிந்திப்பது நமக்கு நல்லது.
17. கொடுப்பதில் என்ன மாதிரியை பவுல் உற்சாகப்படுத்துகிறார், இது இன்று பொருத்தப்பட முடியுமா?
17 கொடுப்பதில் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் ஏற்பாட்டை பின்பற்றும்படியாக பவுல் சகோதரர்களைத் துரிதப்படுத்தினார். “உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்,” என்று சொன்னார். (1 கொரிந்தியர் 16:1, 2) அருகாமையிலுள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளைக்காரியாலயத்துக்கு நாம் சபையின் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நன்கொடை அளிக்கும் விஷயத்தில் அது நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கலாம். கிழக்கு ஆப்பிரிக்க பட்டணம் ஒன்றில் பிரசங்கிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு மிஷனரி தம்பதியினர் ஒரு பைபிள் படிப்பில் தங்களுடன் சேர்ந்துகொள்ளும்படியாக அக்கறையுள்ள ஆட்களை அழைத்தனர். இந்த முதல் கூட்டத்தின் முடிவில், மிஷனரிகள் “ராஜ்ய வேலைக்கு நன்கொடைகள்” என்பதாக குறிப்பிடப்பட்டிருந்த ஒரு பெட்டியில் ஒருசில நாணயங்களை விவேகமாகப் போட்டார்கள். ஆஜராயிருந்த மற்றவர்களும் அதே விதமாகச் செய்தனர். பின்னர், இந்தப் புதியவர்கள் ஒரு கிறிஸ்தவ சபையாக ஒழுங்குபடுத்தப்பட்ட பிறகு, வட்டாரக் கண்காணி விஜயம் செய்தார், அவர்கள் ஒழுங்காக நன்கொடைகளை அளிப்பதைக் குறிப்பிட்டு பேசினார்.—சங்கீதம் 50:10, 14, 23.
18. துயரத்தில் இருக்கும் நம்முடைய சகோதரர்களுக்கு நாம் எவ்விதமாக உதவலாம்?
18 இயற்கையின் பேரழிவுகளுக்கு உள்ளானோருக்கும் போரினால் பீடிக்கப்பட்ட இடங்களில் வாழ்பவர்களுக்கும் உதவிசெய்வதற்கு நம்முடைய செல்வங்களைப் பயன்படுத்துவதற்கும் நமக்கு சிலாக்கியம் இருக்கிறது. கிழக்கு ஐரோப்பாவில் பொருளாதார மற்றும் அரசியல் கிளர்ச்சி ஏற்பட்டபோது உலகின் அந்தப் பகுதிக்கு நிவாரண உதவிப்பொருட்கள் அனுப்பப்பட்டதைக் குறித்து வாசிப்பதில் நாம் எத்தனை கிளர்ச்சியடைந்தோம்! பொருட்கள் மற்றும் பண நன்கொடைகள் ஆகிய இரண்டுமே நம்முடைய சகோதரர்களின் தாராள குணத்தையும் வசதியற்ற கிறிஸ்தவர்களோடு நம்முடைய ஒருமைப்பாட்டையும் காண்பித்தன.b—2 கொரிந்தியர் 8:13, 14.
19. முழு நேர சேவையில் இருப்பவர்களுக்கு உதவிசெய்ய நடைமுறையான என்ன காரியங்களை நாம் செய்யலாம்?
19 பயனியர்களாக, பிரயாணக் கண்காணிகளாக மிஷனரிகளாக மற்றும் பெத்தேல் தொண்டர்களாக முழு நேர சேவையில் ஈடுபடும் நம்முடைய சகோதரர்களின் வேலையை நாம் உயர்வாக மதிக்கிறோம் அல்லவா? நம்முடைய சூழ்நிலைமைகள் அனுமதிப்பதைப் பொருத்து, நம்மால் ஏதாவது பொருளுதவியை நேரடியாக அவர்களுக்குச் செய்ய முடிவதாக இருக்கலாம். உதாரணமாக, வட்டாரக் கண்காணி உங்களுடைய சபையைச் சந்திக்கையில், நீங்கள் ஒருவேளை அவருக்கு இடவசதி, உணவு ஆகியவற்றை அளித்து அல்லது அவருடைய பிரயாண செலவுகளுக்கு உதவக்கூடியவர்களாக இருக்கலாம். தம்முடைய ஊழியர்கள் கவனித்துக்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புகிற நம்முடைய பரலோக தகப்பனால் இப்படிப்பட்ட தாராள குணம் கவனிக்கப்படாமல் போவதில்லை. (சங்கீதம் 37:25) ஒருசில வருடங்களுக்கு முன்பாக எளிமையான உணவை மாத்திரமே கொடுக்க முடிந்த ஒரு சகோதரர் பயணக் கண்காணியையும் அவருடைய மனைவியையும் தன் வீட்டுக்கு அழைத்தார். தம்பதியினர் மாலையில் வெளி ஊழியத்துக்காக கிளம்பியபோது, சகோதரர் தன்னுடைய விருந்தினரிடம் ஓர் உறையைக் கொடுத்தார். உள்ளே “ஒரு கோப்பை தேநீருக்கு அல்லது ஒரு காலன் பெட்ரோலுக்கு” என்று கையால் எழுதப்பட்ட ஒரு குறிப்போடு ஒரு வங்கி பண நோட்டு (ஒரு ஐ.மா. டாலருக்கு சமமான பணம்) இருந்தது. தாழ்மையான இந்த முறையில் என்னே நேர்த்தியான போற்றுதல் வெளிப்படுத்தப்பட்டது!
20. எந்தச் சிலாக்கியத்தையும் பொறுப்பையும் நாம் அசட்டைசெய்ய விரும்புவதில்லை?
20 ஆவிக்குரிய விதமாக, யெகோவாவின் மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்! புதிய பிரசுரங்கள், நேர்த்தியான போதனை மற்றும் நடைமுறையான புத்திமதியை நாம் பெற்றுக்கொள்ளும் நம்முடைய அசெம்பிளிகள் மற்றும் மாநாடுகளில் நாம் ஆவிக்குரிய விருந்தை அனுபவித்து களிக்கிறோம். நம்முடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக போற்றுதலினால் நிறைந்த இருதயங்களோடு, உலகம் முழுவதிலும் கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க பயன்படுத்துவதற்காக நிதி உதவிகளைச் செய்வதற்கு நமக்கிருக்கும் சிலாக்கியத்தையும் பொறுப்பையும் நாம் மறந்துவிடுவதில்லை.
‘அநீதியான உலகப்பொருளால் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்’
21, 22. ‘அநீதியான உலகப்பொருளுக்கு’ விரைவில் என்ன சம்பவிக்கும், இப்பொழுது எதைச் செய்யும்படியாக அது நம்மைத் தேவைப்படுத்துகிறது?
21 உண்மையிலேயே, யெகோவாவின் வணக்கம் நம்முடைய வாழ்க்கையில் அதிமுக்கியமானது என்பதை காண்பிப்பதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. இதைக் காண்பிப்பதில் குறிப்பாக முக்கியமான ஒரு வழி, இயேசுவின் பின்வரும் ஆலோசனைக்கு நாம் கவனம் செலுத்துவதை உட்படுத்துகிறது: “அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள். அது உங்களைக் கைவிடும்பொழுது, உங்களை அவர்கள் நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வார்கள்.”—லூக்கா 16:9, NW.
22 அநீதியான உலகப்பொருளின் தோல்வியைக் குறித்து இயேசு பேசினார் என்பதைக் கவனியுங்கள். ஆம், இந்த ஒழுங்கின் பணம் மதிப்பற்றதாகிவிடப் போகும் நாள் ஒன்று வரும். “தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்,” என்பதாக எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைத்தார். “கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது.” (எசேக்கியேல் 7:19) இது சம்பவிக்கும்வரையாக, நம்முடைய பொருள் ஆஸ்திகளை உபயோகிக்கும் முறையில் ஞானத்தையும் பகுத்துணர்வையும் அப்பியாசிக்க வேண்டும். அப்பொழுது இயேசுவின் எச்சரிப்பைக் கவனத்தில்கொள்ள தவறியதற்காக நாம் மனஸ்தாபத்தோடு பின்னோக்கிப் பார்க்கமாட்டோம்: “அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? . . . தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது.”—லூக்கா 16:11-13.
23. நாம் ஞானமாக எதை பயன்படுத்த வேண்டும், நம்முடைய வெகுமதி என்னவாக இருக்கும்?
23 அப்படியென்றால், யெகோவாவின் வணக்கத்தை நம்முடைய வாழ்க்கையில் முதலிடத்தில் வைத்து, நம்முடைய செல்வங்களை ஞானமாக பயன்படுத்தும்படியான இந்த நினைப்பூட்டுதல்களுக்கு நாம் அனைவரும் உண்மையுடன் கவனம் செலுத்துவோமாக. இவ்விதமாக பணம் கைவிடும்போது, பரலோக ராஜ்யத்திலோ அல்லது பரதீஸிய பூமியிலோ நித்திய வாழ்க்கையின் எதிர்பார்ப்போடு நம்மை “நித்தியமான வீடுகளிலே” ஏற்றுக்கொள்வதாக வாக்களிக்கும் யெகோவாவோடும் இயேசுவோடும் நம்முடைய நட்பைக் காத்துக்கொள்வோம்.—லூக்கா 16:9.
[அடிக்குறிப்புகள்]
a “காணிக்கை” என்பதாக மொழிபெயர்க்கப்படும் எபிரெய வார்த்தை சொல்லர்த்தமாகவே “உயர்ந்திரு; மேன்மைப்பட்டிரு; உயர்த்து,” என்பதாக பொருள்படும் ஒரு வினைச்சொல்லிலிருந்து வருகிறது.
b 1993-ல் உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி வெளியிட்ட யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் புத்தகம் (ஆங்கிலம்), பக்கங்கள் 307-15 பார்க்கவும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ ஆசரிப்புக் கூடாரம் கட்டுவதற்கு காணிக்கைகளைக் கொண்டு வரும்படியான யெகோவாவின் அழைப்புக்கு இஸ்ரவேலர் எவ்விதமாக பிரதிபலித்தார்கள்?
◻ விதவையின் காணிக்கை ஏன் வீணாய் இருக்கவில்லை?
◻ கிறிஸ்தவர்கள் தங்களுடைய செல்வங்களைப் பயன்படுத்தும் முறையில் என்ன பொறுப்பை உடையவர்களாக இருக்கின்றனர்?
◻ நம்முடைய பணத்தைப் பயன்படுத்தும் விஷயத்திற்காக மனஸ்தாபங்களை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
[பக்கம் 15-ன் படம்]
விதவையின் காணிக்கை, குறைந்த மதிப்புள்ளதாக இருந்தாலும் அது வீணாக இருக்கவில்லை
[பக்கம் 16, 17-ன் படம்]
நம்முடைய காணிக்கைகள் உலகளாவிய ராஜ்ய வேலையை ஆதரிக்கின்றன